செவ்வாய், டிசம்பர் 13, 2005

நலன் பேணும் அரசு - Welfare State

நாட்டிலுள்ள அனைவருக்கும் எவ்வித பேதமுமின்றி, உயர்தரக் கல்வி, பரவலாகக் கிடைக்ககூடிய மருத்துவ வசதி, அடிப்படை வேலை வாய்ப்புகள், வேலையற்றவர்கள் / வறியவர்களுக்கு உதவித்தொகை, சட்ட ஒழுங்கை உறுதி செய்யக் கூடிய நம்பகமான காவல் துறை, ஆண் - பெண் சமநிலை/உரிமைகள்/வாய்ப்புகள்........... இவையனைத்தையும் இலவசமாக (அதாவது மக்களின் வரிப்பணத்தை மட்டும் கொண்டு) அரசே உறுதி செய்யுமானால் எவ்வாறிருக்கும்? இது ஏதோ இடதுசாரிக் கருத்தியலைப் போலுள்ளதே என்று எண்ணுபவர்களுக்கு - இது மேற்கத்திய (வலதுசாரி) உலகில், பல நாடுகளில் நடைமுறையிலுள்ள ஒரு அரசு முறைதான். நம் நாட்டில் ஒரு அரசியல் கட்சி இத்தகைய வாக்குறுதிகளை அளிக்குமானால், அது ஜனரஞ்சக உத்திகளை (populist measures) கடைபிடித்து ஆட்சியைப் பிடிக்க முயலுவதாக அனைத்துத் தரப்பிலிருந்தும் குற்றம் சாட்டப்படும். இவை கஜானாவை காலி செய்யும் நடவடிக்கைகள் என்ற பொதுவான கருத்து நிலவுகிறது. மேலும், இது போன்ற நடவடிக்கைகளால் நாட்டின் / பொருளாதாரத்தின் வர்த்தகப் போட்டித்தன்மை (business competitiveness) பாதிப்படைந்து விடும் என்ற அச்சமும் நிபுணர்களால் நீரூற்றி வளர்த்து விடப்பட்டிருக்கின்றது. அதற்குத் தோதாக fiscal deficit, fiscal discipline எனறெல்லாம் வார்த்தை ஜாலங்களோடு விளையாடுவதற்கென்றே தயார் நிலையில் ஒரு நிபுணர் கூட்டம் காத்திருக்கிறது.

நிற்க! ஒரு நலன் பேணும் அரசு ஒரு அரை நுற்றாண்டுக்கும் மேலாக ஆட்சி கொண்டிருக்கும் ஒரு நாட்டின் சாதனைகள் இவை:
  • உலக நாடுகளிலேயே, வர்த்தப் போட்டித்தன்மையில் முதலிடம்
  • உலகின் தலை சிறந்த அடிப்படைக் கல்வியமைப்பு (Basic education system), அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படுகிறது. இங்கு ஆசிரியர் பதவி என்பது மிக மதிப்பிற்குரிய, பலத்த போட்டிகளைக் கடந்து அடையக்கூடிய ஒன்று என்பதால், முதல்தர கல்வியாளர்கள் நிரம்பிய கல்வியமைப்பு உறுதி செய்யப் பட்டிருக்கிறதாம்.
  • உலகிலேயே மிக அதிகமான சுதந்திர நிலையை அடைந்த பெண்கள். அந்நாட்டின் குடியரசுத் தலைவரும் ஒரு பெண். (இதிலென்ன சிறப்பு என்றெண்ணுபவர்களுக்கு - மேலை நாடுகளில் நம் நாடுகளைப் போல் பெருந்தலைவர்களின் மனைவிகளும், மகள்களும், தோழிகளும் ஆட்சிப் பீடத்தை அடைந்து விட முடியாது. தகுதி அடிப்படையிலேயே தேர்தல்களுக்கு நியமனம் பெற முடியும்)
  • உலகிலேயே சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பில் முதலிடம்
  • உலகிலேயே மிகக் குறைந்த அளவில் ஊழல்கள்
  • உலகிலேயே அதிகமான செல்பேசிகளின் அடர்த்தி (cellphone density)
  • இணைய இணைப்புகளின் எண்ணிக்கையில் உலகின் முன்னணியில் இருக்கும் நாடுகளில் ஒன்று.
  • ஜனத்தொகை விகிதப்படி உலகிலேயே அதிகமான ஒலிம்பிக் பதக்கங்கள் (1 மில்லியன் மக்களுக்கு 106 ஒலிம்பிக் பதக்கங்கள். அமெரிக்கா - 8.3 பதக்கங்கள், இந்தியா - 0)
  • Formula 1 போட்டிகளில் முன்னணி இடத்திலுள்ள பல வீரர்களின் தாயகம்
  • ஜனத்தொகை விகிதப்படி உலகிலேயே அதிகமான இசைக் கலைஞர்களைப் பயிற்றுவித்த நாடு
  • மக்கள் நூலகங்களுக்குச் செல்வதில் உலகில் முதலிடம் (தேவநேயப் பாவணர் நூலகம் ஆனந்த் தியேட்டர் அருகிலுள்ளது என்றெல்லாம் வழிகாட்ட வேண்டிய நிலையில் இல்லை)
  • உயர் தொழில் நுட்பத்தில் (hitech) உலகில் முன்னணி நாடுகளில் ஒன்று. Nokiaவின் பிறப்பிடம். Linuxஐத் தோற்றுவித்த Linus Trovaldsஇன் தாயகம்.
  • ஐரோப்பாவிலேயே இரண்டாவது பாதுகாப்பான நகரத்தைத் தலைநகராகக் கொண்டது
  • செய்தித்தாள்களுக்கு அதிகமான வாசகர் வட்டம் (ஜனத்தொகையில் 70%. அமெரிக்கா 50%)
  • தலைசிறந்த மருத்துவ வசதிகள், அனைவராலும் எளிதில் பெறக்கூடியவை, இலவசமாக.
  • உலகிலேயே விஞ்ஞான ஆய்வுக்காக (GDP சதவிகிதப்படி) அதிகமான முதலீடு i.e. #1 in investments for R&D as a % of GDP
தகவல் உதவி:

நம் நாட்டுச் சூழலில் ஏன் நலத் திட்டங்கள் கடுமையான எதிர்ப்பையும் கண்டனத்தையும் பெறுகின்றன? எனக்கு உடனடியாக நினைவுக்கு வரும் ஒரு நலத் திட்டம் நமது சத்துணவுத் திட்டமாகும். அதன் பலன்களும் விளைவுகளும் எவ்வளவு தூரம் ஆராயப்பட்டிருக்கின்றன என்றுத் தெரியவில்லை. இருந்தும் நமது கல்வி நிலை மேம்பாடடைந்ததில் அதற்கும் ஒரு முக்கிய பங்குண்டு என்றே தோன்றுகிறது. தற்போது மத்திய அரசு அறிமுகப்படுத்தும் வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்திற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அரசுத் துறைகளில் பரவலாக நிலவும் ஊழலைக் காரணம் காட்டி இந்த எதிர்ப்புகள் முன்வைக்கப்பட்டாலும், எனக்கென்னவோ நமது அடிமனதில் வேறூன்றிய நலத் திட்ட எதிர்ப்பு நிலைப்பாடுதான் இதற்குக் காரணமென்று தோன்றுகிறது. ஒரு நலன் பேணும் அரசு வெற்றியடைவதற்கு பொதுமக்களின் அதிகப்படியான பங்களிப்பு தேவை. ஒரு சமத்துவ, நலமான சமுதாயத்தை உருவாக்க, நாம் நம் வருமானத்தில் 45% வரை வரியாகச் செலுத்த வேண்டி வரலாம். நாம் தயாரா அதற்கு?

சனி, டிசம்பர் 10, 2005

"கருத்துச் சுதந்திரம்னா என்னங்க?"

"அதுவா, எனக்குப் பிடிச்ச கருத்த சொல்றத்துக்கு உனக்கு சுதந்திரமிருக்குன்னு அர்த்தம்." முகமூடியின் templateஇல் உள்ள இவ்வரிகளை படித்து சிரித்து விட்டு நகர்ந்திருக்கிறேன். ஆனால் இன்றுதான் புரிந்தது இவ்வரிகளில் உள்ள உண்மை.

ஒரு வலைப்பதிவில் வெளியான கருத்தும் அதற்கு எதிர்வினையாக வந்த பின்னூட்டமும், என்னை சிந்திக்க வைத்தன. அப்பதிவின் சாரம் - சென்னைக்கு வந்த Bill Gates, கருணாநிதியைச் சந்தித்தது எவ்வாறு, ஏன், என்பதே. அதாவது, எந்த அரசுப் பொறுப்பிலும் இல்லாத ஒரு நபரை இந்தியாவின் பிரதிநிதியாகவோ அல்லது தமிழகத்தின் பிரதிநிதியாகவோ முன் நிறுத்தி, வருகை தரும் ஒரு உலக வர்த்தக முதலாளியைச் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது ஏன், எந்த அடிப்படையில் என்பதே கேள்வி. அதற்கு வந்த ஒரு பின்னூட்டம், "பதிவு நன்று, கருணாநிதியைத் தாக்குவதைத் தவிர்க்கவும்". சொல்லாமல் சொல்லப்பட்ட செய்தி - "கருணாநிதி என்ற நபர் விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட ஒரு மாமனிதர்"

வினோதமான இப்பின்னூட்டத்திற்கு எதிர்வினையாக நான் இவ்வாறு மறுமொழிந்தேன்: "நம் தமிழ்ச் சமூகத்தில் கருத்துச் சுதந்திரம் என்பது எந்த அளவில் உள்ளது என்று காண்பித்ததற்கு நன்றி. Bill Gates கருணாநிதியை எந்த அடிப்படையில் சந்தித்தார்? தயாநிதி மாறனின் தாத்தா என்ற வகையிலா? முன்பு Enronஇன் தலைவியும், ஒரு மாநில முதலமைச்சரைக் காக்க வைத்து விட்டு, அந்நேரத்தில் எந்த ஒரு பொறுப்பிலும் இல்லாத பால் தாக்கரேயைச் சந்தித்தார். அப்போது அது குறித்து ஊடகங்களில் கேள்வியெழுந்ததைப் போலவே இப்போது கருணாநிதி பற்றியும் கேட்கப்படுகிறது. இதை ஏன் 'தவிர்க்க' வேண்டுமென்கிறீர்கள்? விளக்கினால் விளங்கிக் கொள்வேன்" சில மணி நேரங்களுக்குப் பிறகு என் மறுமொழிக்கு ஏதேனும் எதிர்வினைகள் வந்துள்ளனவா என்று பார்த்தால், அந்தப் பதிவே தென்படவில்லை. எதற்கு வம்பு என்று அப்பதிவரே அகற்றி விட்டார் போலும்.

அதற்கு பதிலாக வேறொரு வலைப்பதிவில் ஒரு பதிவு வெளியிடப்பட்டிருந்தது. கருத்துச் சுதந்திரம் வேண்டும் என்ற நினைப்பையே நையாண்டி செய்யும் வகையில், நகைச்சுவை இரத்தினமாக ஜொலித்தது அப்பதிவு. "எதைத் தின்னால் பித்தம் தெளியும் என்று இருப்பவர்களுக்கெல்லாம் கருத்துச் சுதந்திரம் ஒரு கேடா" என்று அடிமனதைத் தொட்டது. "பித்தர்கள் எல்லோரும் அவர்களுடைய கருத்துச் சுதந்திரம் காலாவதியாகிப் போகுமுன் அதனைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்" என்று அன்புக் கட்டளையிட்டது. அவ்வாறு காலாவதியாகிப் போனால் அதைக் கொண்டாடும் நபர்கள் யாராயிருப்பார்கள் என்றும் ஊகிக்க முடிந்தது அப்பதிவிலிருந்து. நகைச்சுவைப் பதிவுகளை நகைச்சுவை உணர்வோடு இரசிப்பது நம் கடமையென்பதால், அதனையும் இரசித்து மகிழ்ந்தோம்.

மற்றபடி, என் கருத்துச் சுதந்திரமும் விரைவிலேயே காலாவதியாகிவிடும் அபாயமுள்ளதால், மேற்கொண்டு கருத்து கூற முற்படாமல், ஒரு ஜோடி ஜால்ராக்களை வாங்கி வைத்துக் கொண்டு, அவற்றை நன்கு ஒலிப்பதற்குப் பயிற்சி செய்து கொண்டிருப்பது சாலச் சிறந்தது என்ற முடிவுக்கு வந்திருக்கிறேன். பிற்காலத்தில் கை கொடுக்கலாம், பாருங்கள்?

வெள்ளி, டிசம்பர் 02, 2005

மரம், செடி, கொடி, இன்ன பிற.......

எனது இளம்பருவத்தில் சென்னையின் ஒரு புறநகர்ப் பகுதியில் எங்களுக்கு வீடு ஒதுக்கப்பட்டு, ஆசையுடன் அதில் குடிபுகுந்தோம். வீட்டைச் சுற்றியிருந்த நிலம்தான் எங்களது தோட்டக்கலைக்கு ஒரு சோதனைக்களமாகத் திகழ்ந்தது. குடிபுகுந்த சில நாட்களிலேயே, ஒரு நாற்று மையத்திலிருந்து வந்த ஒரு விற்பனையாளர் தனது விற்பனைப் பேச்சால் எங்களைக் கவர, அவரிடம் பணத்தைத் தண்ணீராக செலவழித்து (இது இங்கு வழக்கமான அர்த்தத்தில் கூறப்பட்டுள்ளது. சென்னையில் 'தண்ணீராக செலவு செய்வது' என்றால் 'சிக்கனமாக' என்று புரிந்து கொள்ள வாய்ப்பிருப்பதால் இதைத் தெளிவுபடுத்துகிறேன்) பல நாற்றுகளை வாங்கி நட்டோம். 'ஒரப்பாக்கம்' (அசல் பெயர் - ஊரப்பாக்கம்) என்ற இடத்திலிருந்து வந்த இந்த நாற்றுகளில் பல, நல்ல தரமானவையாக இருந்தன. ஆதலால் எங்கள் வாழ்வில் ஒரப்பாக்கத்துக்காரர் ஒரு நீங்கா இடத்தைப் பெற்றிருந்தார். அவ்வப்போது அவரை நினைவு கூர்வதும், அவரது நாற்றுகள் பற்றிய பேச்சும் நடந்த வண்ணம் இருந்தது.

இருந்த குறைவான இடத்தில் நான்கு தென்னங்கன்றுகளை நட்டார். நான்கும் ஆகாயத்தை எட்டின. அவற்றில் இரண்டு காய்த்தன, ஒன்று இன்றும் காய்த்துக் கொண்டிருக்கிறது. காய்க்காத இரண்டிற்கான அறிவியல் காரணத்தை, என் தாயார் அவருக்கு மட்டுமே புரியும் வகையில் விளக்குவார், நமக்குத்தான் பொறுமையிருக்காது கேட்பதற்கு. காய்த்தவற்றில் ஒன்றை கட்டட வேலைக்காக சாய்க்க வேண்டியிருந்தது. மிஞ்சிய ஒன்றில் இருக்கும் காய்களை என் தாயார் ஆள் வைத்து இறக்குவதெல்லாம் கிடையாது. அவற்றின் பளுவால் மரத்திலிருந்து பிய்த்துக் கொண்டு தானாகவே விழும் காய்களை பணிப்பெண் திரட்டிக் கொண்டு வருவார். அவற்றை வீட்டின் ஒரு மூலையில் குவித்து வைத்திருப்பார்கள். ஒவ்வொரு முறை சென்னைக்குச் செல்லும் போதும் அவற்றின் நார் உரிப்பது, தேங்காயை உடைத்து, அதிலிருந்து பத்தைகளைச் சுரண்டியெடுப்பது போன்ற வேலைகள் எனக்கு நிச்சயம் அளிக்கப்படும். அதன் பிறகு கிடைக்கும் சட்டினியின் சுவையை மனதில் கொண்டு, இவ்வேலைகளைப் பொருட்படுத்துவதில்லை.

ஒரப்பாக்கத்துக்காரர் நட்ட மற்றொரு கன்று கொய்யா. ஹைதராபாத் கொய்யா என்று கூறி எங்களிடம் விற்றிருந்தார். ஏதோ விற்பனைத் தந்திரம் என்று நாங்களும் அதன் 'ஹைதராபாத்' அடைமொழிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கவில்லை. நன்றாகவே வளர்ந்து காய்த்தது இம்மரம். எங்கள் மாடிப்பகுதியிலிருந்து அதன் காய்/கனிகள் கைக்கெட்டும் அருகாமையிலிருந்தன. சிறு வயதில் எனக்குப் பிடித்த பொழுது போக்கு - ஒரு கதைப் புத்தகத்தை எடுத்துக் கொண்டு, இக்கொய்யா மரத்திலிருந்து ஒரு நாலைந்து காய்/கனிகளைக் கொய்து கொண்டு, படுக்கைத் தலையணையில் சாய்ந்து கொண்டு, சாப்பிட்டுக்கொண்டே படிப்பதுதான். அணில்கள்தான் எங்களுக்குப் போட்டியாக, நாங்கள் பார்ப்பதற்கு முன்பே இக்கனிகளை முடித்துக் கொண்டிருந்தன. இதற்குத் தீர்வாக, காய்கள் கனிவதற்கு முன்பு அவற்றை ஒரு பிளாஸ்டிக் உறையால் சுற்றி மூடும் தந்திரத்தைக் கற்றோம். இதனால் (எங்கள் கைக்கெட்டிய) கனிகள் அணில்களிடமிருந்து தப்பின. இது போன்ற பல உத்திகளை தொலைக்காட்சியில் 'வயலும் வாழ்வும்' நிகழ்ச்சி, மற்றும் நாற்று மையங்களில் கிடைத்த ஆலோசனைகள் ஆகியவற்றிலிருந்து பெற்றோம். வேலையில் சேர்ந்து ஹைதராபாத் வந்ததும்தான் தெரிந்தது, இங்கு கிடைக்கும் கொய்யாவின் சுவை எங்கள் வீட்டுக் கொய்யாக்களைப் போலவே இருந்தது. இந்தக் கொய்யா மரமும் பின்னாளில் கட்டட வேலைக்காக வெட்டப்பட்டது. இதை ஒவ்வொரு paraவிலும் கூறினால் சோகம்தான் மிஞ்சுமென்பதால், இனி இதைக் குறிப்பிடாமல் விட்டு விடுகிறேன்.

நன்கு காய்த்த இன்னொரு மரம் நெல்லி. இதுவும் ஒரப்பாக்கத்துக்காரரின் பங்களிப்புதான். சிறிய காய்களைக் கொண்ட வகையைச் சார்ந்தது இம்மரம். கொத்து கொத்தாகக் காய்த்திருக்கும். மரத்தைப் பிடித்து உலக்கினாலேயே பொலபொலவென்று உதிரும். ஆனால் இவ்வாறு உதிரும் காய்கள் பக்கத்து வீட்டில்தான் சென்று விழுமென்பதால் நாங்கள் அவ்வாறு உலுக்குவதில்லை. வேறு வழிகளில் கவனமாகப் பறித்துத்தான் அவற்றை உண்போம். அதிகமான புளிப்பில்லாமல், ஒரு நல்ல ருசியைக் கொண்டிருந்தன இக்காய்கள். அவற்றிலுள்ள கொட்டையைத் துப்புவதற்கு சோம்பல் பட்டு, அவற்றை அப்படியே கடித்து விழுங்கி விடுவேன். இவற்றைத் தவிர, மா, மாதுளை, எலுமிச்சை, சப்போட்டா ஆகியவற்றையும் நட்டார், ஆனால் அவை நன்றாக வரவில்லை. விரைவில் அவற்றை அகற்றி விட்டோம். அவர் வைத்த இரு மலர்ச்செடிகள் மனோரஞ்சிதம் மற்றும் மகிழம். முன்னது ஒரு புதரைப் போல் வளர்ந்து, அட்டகாசமான மணத்தைக் கொண்ட பூக்களை பூத்தது. பச்சை வண்ணம் கொண்ட இப்பூக்களின் மணம் ஊரையே தூக்கும் தன்மையைக் கொண்டிருந்தது. ஆனால், மகிழமோ ஒரு christmas treeயைப் போல் நெட்டையாக வளர்ந்து ஒரு பூவும் பூக்கவில்லை. நாயைக் கட்டிப்போடுவதற்கு மட்டுமே இம்மரம் உபயோகப்பட்டது.

இதுவரை நாங்கள் எடுத்த strategic அதாவது தொலைநோக்குப் பார்வையுடன் செய்த முயற்சிகளைப் பற்றிக் கூறினேன். இப்போது tactical அதாவது குறுகிய காலப் பலன்களுக்காக எடுத்த முயற்சிகளைப் பற்றிப் பார்ப்போம். மலர்ச்செடிகள் பலவற்றை நட்டு, குட்டு பட்டு, விட்டகன்றோம். ரோஜாச் செடிகள்தான் மிகுந்த ஏமாற்றத்தை அளித்தன. என்னவெல்லாமோ செய்து பார்த்தோம் அவற்றை வளர்த்து பூக்க வைப்பதற்கு. ஒவ்வொரு முறையும் தோல்வியைத் தழுவினோம். மல்லிக்கொடி பரவாயில்லாமல் வளர்ந்து, பூக்கவும் செய்தது. எனக்கு மிகவும் பிடித்த மலர் மல்லிதான். அதன் மணம் ஆளைக் கிறங்க அடிக்கும். மல்லிப்பூ பெரிய அழகென்று கூற இயலாது. ஆனால் அதன் குணமான மணம் ஏற்படுத்தும் பாதிப்பு, வேறொரு அழகான மலர் ஏற்படுத்தும் பாதிப்பை விடப் பல மடங்கு அதிகமே. (இத்தத்துவம் மனிதர்களுக்கும் பொருந்தலாம் என்று சந்தில் சிந்து பாடிவிடுகிறேன்) இன்னொரு வகை மலர் உண்டு. கொடியில் பூக்கும், காலையில் பார்த்தால் உதிர்ந்து, தரையில் குப்புற விழுந்திருக்கும். வெள்ளை நிற இதழ்களும், சிவப்பு நிறக் காம்புப் பகுதியும் கொண்ட இப்பூக்கள் தரையில் உதிர்ந்திருக்கும் காட்சி, அதன் வண்ணங்கள் எல்லாவற்றையும் சேர்த்து நோக்கினால், ஏதோ இயற்கையே கோலமிட்டது போல் தோன்றும். இப்பூவின் பெயர் அந்திமந்தாரை என்று நினைக்கிறேன். இக்கொடியும் சில காலம் வாழ்ந்து மறைந்தது. கனகாம்பரம், செம்பருத்தி, டிசம்பர் பூ, செண்பகம் போன்ற மரபு வழி வந்த வகைகளோடு, exora, dahlia, julia(?) போன்ற இறக்குமதி வகைப் பூக்களையும் வளர்த்துப் பார்த்தோம். சென்னை மற்றும் சுற்றுப் பகுதிகளிலுள்ள அனைத்து தோட்டக்கலை மற்றும் நாற்று விற்கும் மையங்களுக்கும் பயணம் செய்து, அங்கிருந்து செடி வகைகளையும், விதைகளையும் தருவித்து நட்டோம் / விதைத்தோம். தரையில் நிலைக்காத இனங்களை பூந்தொட்டிகளில் வளர்த்துப் பார்த்தோம். இவற்றிலெல்லாம் எனக்குப் பிடிக்காத வகை ornamental எனப்படும் தோற்ற அழகிற்காக வைக்கப்படும் செடிகள்தான். குரோட்டன்ஸ், வண்ண வண்ண இலைகளைக் கொண்ட செடிகள், சப்பாத்திக் கள்ளிகள் (cactii) போன்றவை. இவற்றோடு ஏதோ ஒரு செயற்கைத்தனம் ஒட்டிக்கொண்டிருப்பதைப் போல் உணர்ந்திருக்கிறேன்.

வீட்டின் முன்னே மலர்ச்செடிகளென்றால், பின்புறம் காய்கறிச் செடிகள். பாத்திகள் வெட்டி, அவற்றின் ஒரமாக, கத்திரி, வெண்டை, தக்காளி போன்ற வகைகளைப் பயிர் செய்தோம். கத்திரி அதிகமாகக் காய்த்தது (பறித்து bucketகளில் சேகரிக்கும் அளவிற்கு). மற்ற இரண்டும் பெயருக்குக் காய்த்துவிட்டு, அழிந்து போயின. இச்செடிகளை அகற்றி விட்டு, பூசணியை வைத்தோம். இது ராட்சதக் கொடியாக பின்புறம் முழுவதும் படர்ந்தது, ஆனால் காய்க்கவில்லை. புடலங்கொடிகள் வைத்தோம், ஒரளவுக்குக் காய்த்தது. அதன் காய்கள் பிஞ்சுகளாக இருந்தபோது அவற்றிலிருந்து ஒரு சணல் கயிற்றில் கல்லைக் கட்டித் தொங்க விடுவோம், அதன் இழுப்பில், காய்கள் நீளமாக வளருமென்று எங்கோ கிடைத்த செய்தியை நம்பி. வாழைக்கன்று வைத்து, வாழையடி வாழையாக அது விரிவடைந்தது. அவற்றின் கனிகள் ஏனோ பிடிக்கவில்லை. அதற்கும் முற்றுப்புள்ளி. அதே போல், பப்பாளியும் வைரஸ் கிருமியைப் போல் எங்கள் வீட்டில் இனப்பெருக்கம் செய்து கொண்டு, நூற்றுக்கணக்கான கனிகளை அளித்தது. ஒரு கோடை விடுமுறையில், எனது பெற்றோர்கள் எங்களை ஊருக்கு அனுப்பி விட்டு, உணவுக்கு பதிலாக பப்பாளிகளை மட்டுமே உண்டு உயிர் வாழ்ந்தார்களாம். நல்ல சுவைதான் அக்கனிகள்.

இன்னொரு மகத்தான தோல்வி, வீட்டின் முன் புல்வெளி போட எடுத்துக் கொண்ட முயற்சிகள். இருந்த சிறிய இடத்தில் ஒரு லில்லி குளம் போல் அமைத்து அதனைச் சுற்றி புல் வளர்ப்பது என்று முடிவு செய்தோம். அருகம்புல், கோரைப்புல், கொரியப்புல் (Korean grass) என்று பலவகைகளில் முயன்றோம். சென்னை வெயிலின் சீற்றம் ஒரு புறமென்றால், வீட்டில் ஏதாவது மராமத்து செய்ய வருபவர்களின் மிதிபாடுகள் மறுபுறம் என்று, இப்புல்வெளி ஒரு நிறைவேறாத கனவாகவே இருந்தது. லில்லியும் ஏமாற்றி விட, அதற்கு பதிலாக, தொட்டியில் மீன்கள் வளர்க்கத் தொடங்கினோம். வெள்ளை, கறுப்பு, சிவப்பு, மஞ்சள் என்று நிறத்திற்கு ஒரு ஜோடி வாங்கி, தொட்டியில் விட்டோம். நாளடைவில் தொட்டியில் நூற்றுக்கணக்கான மீன் குட்டிகள், வெள்ளை, கறுப்பு, சிவப்பு, மஞ்சள் மற்றும் இடைப்பட்ட நிறங்களிலும்!!!! மீன்களுக்கு நிறவெறி கிடையாது போலும். ஒரு முறை ஒரு பெரிய மீன் வகையைச் சேர்ந்த மீனை விட்டோம். தொட்டியிலிருந்து எகிறிக் கொண்டே இருந்தது. கவனித்த வரையில் அதைப் பொறுக்கி, மீண்டும் தொட்டியில் விட்டுக் கொண்டிருந்தோம். ஆனால் நாங்கள் கவனிக்காத நேரத்தில் "நம்மால இந்த குண்டு சட்டியிலல்லாம் குதிர ஓட்ட முடியாதுபா" என்று இவ்வுலகை விட்டே எகிறி விட்டது அம்மீன்.

இடையில் நாங்கள் சென்னையிலிருந்து இடம்பெயர நேர்ந்ததால் மேற்கொண்டு தோட்டப்பணிகளைக் கைவிடலாயிற்று. மற்றும் தண்ணீர் தட்டுப்பாடு, முன்பு குறிப்பிட்ட கட்டட வேலைகள், வீட்டை விரிவாக்கியது என்ற பல காரணங்களால், மிகக் குறைந்த அளவிலேயே இன்று தோட்டப்பணி தொடருகின்றது, அதுவும் பூந்தொட்டிகளில். (தாயாருக்கு) வேறு துறைகளில் ஆர்வம் பெருகியதும் ஒரு காரணமாயிருக்கலாம். தண்ணீர் தட்டுப்பாட்டை எதிர்கொள்ள ஒரு tanker லாரி அளவுக்கு கொள்ளளவுள்ள ஒரு பாதாள நீர்த்தொட்டி (sump) ஒன்றை அமைத்திருப்பதால் அதற்கு அதிக அளவில் இடம் தேவைப்பட்டது. மிஞ்சிய இடங்களிலும் சிமெண்ட் தரைப் பூச்சு செய்து, மண் பரப்பு என்பதே இன்று மறைந்து விட்டது. காலை செய்தித்தாளைப் படித்துக் கொண்டிருக்கும்போது, வெளியே தோட்டத்திலிருந்து வேறு வகையான செய்திகள் (குறிப்பிட்ட செடி துளிர் விட்டதையோ, அல்லது மொட்டு விட்டதையோ அல்லது அதன் மொட்டு திறந்து பூத்திருப்பதையோ பற்றிய செய்திகள்) ஒலிபரப்பான அந்த நாட்கள் இனி திரும்பப் பெற முடியாதவையென்றுதான் தோன்றுகிறது.

திங்கள், நவம்பர் 21, 2005

செய்வன திருந்தச் செய்

பண்பாட்டுப் புண்ணாக்குகளையெல்லாம் ஓரங்கட்டிவிட்டு, உடனடியாக இந்தச் செய்தி நம் கோடிக்கணக்கான மக்களைச் சென்றடைய வேண்டிய அவசர நிலையில் இன்று நாம் இருக்கிறோம். செய்தி இதுதான் - "பாதுகாப்பாகவே உடலுறவு கொள்ளுங்கள்; சுத்தமான (போதை மருந்து) ஊசிகளையே பயன்படுத்துங்கள்".

இது, எல்லா 'முரசு'களிலும், 'தந்தி'களிலும், Todayகளிலும், Timesகளிலும், 'மலர்'களிலும் (last but not the least, வலைப்பதிவுகளிலும்) தண்டோரா போட்டு அறிவிக்கப்பட வேண்டிய செய்தி. நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள், இசைக் கலைஞர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், ஓவியர்கள், விளையாட்டு வீரர்கள், ஆளும் கட்சித் தலைவர்கள், எதிர் கட்சித் தலைவர்கள், சாதிக் கட்சித் தலைவர்கள், மதக் கட்சித் தலைவர்கள், கோவில் குருமார்கள், பாதிரியார்கள், மௌல்விகள், பிக்குகள், பேராசிரியர்கள், கல்லூரி முதல்வர்கள், மாணவர் சங்கத் தலைவர்கள், வானொலி / தொலைக்காட்சித் தொகுப்பாளர்கள், வர்த்தக முதலாளிகள், தொழிற்சங்கத் தலைவர்கள் என்று தம்மால் பல்லாயிரக் கணக்கான மக்களை வழிநடத்தக்கூடிய நிலையிலிருப்பவர்கள் அனைவரும் இச்செய்தியை விரைவாக அவர்களது audienceசுக்கு எடுத்துச் செல்லக் கடமைப் பட்டிருக்கிறார்கள். இச்செய்தி உடனடியாக கல்லூரிகள் / பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகள், உழைப்பாளர்கள், அலுவலகப் பணியாளர்கள், ரசிகர்கள், வாசகர்கள், தொண்டர்கள், வழிபாட்டாளர்கள், காவல்ப்படையினர், ராணுவத்தினர், வாடிக்கையாளர்கள், சேவகர்கள், பாலியல் தொழிலாளர்கள், குடும்பப் பெண்கள் என்ற அனைத்துப் பிரிவினருக்கும் தெரிவிக்கப்பட வேண்டிய ஒன்று. செம்மொழி, செம்மையல்லாத மொழி, சைகை என்று அனைத்து வகையான தொடர்பாடல் முறைகளாலும் சாதனங்களாலும் இச்செய்தி அனைவருக்கும் போர்க்கால அடிப்படையில் வலியுறுத்தப்பட வேண்டும். இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என்றால், முதியோர்களையும் குழந்தைகளையும் தவிர்த்து மற்ற நடுவயதினர் அனைவரும் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனைகளில் இறந்து கொண்டோ இறந்து விட்டோ இருக்கும் ஒரு ஆப்பிரிக்க நாட்டின் நிலைமைக்கு நாமும் நாளடைவில் தள்ளப்படுவோம், என்பதுதான் இன்றைய அச்சுறுத்தும் யதார்த்தம்.

ஒருபுறம் பாதுகாப்பற்ற உடலுறவையே கடைபிடிக்கும் லாரி ஓட்டுனர்களாலும் பாலியல் தொழிலாளர்களாலும் எய்ட்ஸ் வெகு வேகமாகப் பரவுவது ஒரு கவலை கொள்ள வைக்கும் செய்தி என்றால், மறுபுறம் போதைப் பழக்கமுடையவர்கள், தங்கள் விலையுயர்ந்தப் பழக்கத்திற்குத் தீனி போடுவதற்காக உடலை விற்று, இந்த இரு செயல்களிலும் எச்சரிக்கையைக் கடைபிடிக்காமல் இரு வகைகளிலும் நோயைப் பரப்புவது அதைவிடத் துயரமான செய்தி. இப்படிப் பல்வேறான காரணங்களால், அதிர்ச்சியளிக்கும் வேகத்தில் இன்று பலரும் எய்ட்ஸ¤க்கு மாறிக்கொண்டிருக்கிறார்கள் ("அப்ப நீங்க?" என்ற கேட்கக் கூடாத கேள்வியை விட்டு விடுவோம்)

விரக்தியடையச் செய்யும் இச்செய்தியை உள்வாங்கியதன் அறிகுறியாக........ குறைந்தது......... பண்பாட்டுச் சுவர்களுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டு முகத்தில் அறையும் உண்மைகளை ஏற்க மறுக்கும் நாடகத்தனத்தையாவது தவிர்ப்போம்.

சனி, நவம்பர் 19, 2005

கிராமிய மணம்

தற்போது வெளிவரும் திரையிசைப் பாடல்கள் பெரும்பாலும் மேற்கத்திய அல்லது நகர்ப்புறத்துப் பாணியைச் சார்ந்தவைகளாக இருக்கின்றன. இவ்வகைப் பாடல்கள் கவனத்தைக் கவர்ந்தாலும் நிலைத்து நிற்பதில்லை. பாடலில் ஒரு கிராமிய மணம் வீசினால்தான், அது மேலும் சிறப்படைந்து அமரத்துவம் பெறுகிறது. இசையமைப்பாளருக்கும் அவரது திறமையின் மற்றொரு பரிமாணத்தை வெளிப்படுத்தும் ஒரு மேடையாகத் திகழ்கிறது கிராமிய இசை.

நான் மிகவும் விரும்பும், ரஹ்மானின் இசையில் வெளிவந்த சில கிராமியப் பாடல்களின் ஒலிப் பட்டியலைத்(playlist) தொகுத்துள்ளேன். அதே போல் இளையாராஜாவுக்கும் முயன்றிருக்கிறேன். அவர் தனது நீண்ட அனுபவத்தில் அளித்த நூற்றுக்கணக்கான படங்களிலிருந்து முடிந்த வரை நல்ல கிராமிய வாசம் கொண்ட பாடல்களைத் தொகுப்பதென்பது தீவிரமானதொரு முயற்சியாகத்தான் இருந்தது. இது பல இளம் பருவத்து நினைவுகளைக் கிளறி விட்ட ஒரு அனுபவமாகவும் இருந்தது என்பது சொல்லத் தேவையில்லாத ஒரு கொசுறுச் செய்தி.

மேற்கூறிய ஒலிப்பட்டியல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். (யாம் பெற்ற இன்பம்......... etc etc) இதனைப் பெற, கீழ்க்கண்ட செய்முறையைப் பின்பற்றுங்கள்:
  1. முதலில் இந்தக் கோப்பை உங்கள் கணினியில் இறக்கிக் கொண்டு unzip செய்து கொள்ளுங்கள். arr_folk.mia, il_folk.mia என்று இரு கோப்புகள் கிடைக்கும்.
  2. பிறகு, http://www.musicindiaonline.com தளத்திற்குச் சென்று உங்களுக்கு ஒரு பயனர் கணக்கு ஏற்படுத்திக் கொண்டு, login செய்யுங்கள்.
  3. அங்கு User Panel பெட்டியில் View Albums என்ற சுட்டியைச் சொடுக்குங்கள். அதைத் தொடர்ந்து வரும் Your Albums என்ற திரையிலுள்ள Import என்ற பொத்தானை அழுத்துங்கள். ஒரு உரையாடல் பெட்டி திறந்து இறக்குமதி செய்ய வேண்டிய கோப்பின் விவரத்தைக் கேட்கும். Browse பொத்தானை அழுத்தி, நீங்கள் முதலில் இறக்கிக் கொண்ட .mia கோப்புகளைக் குறிப்பிட்டு, ஒலிப்பட்டியல்களை இறக்குமதி செய்யுங்கள்.
  4. இறக்குமதிக்குப் பிறகு, Your Albums திரையில், ஒலிப்பட்டியல்களின் பெயருடன் சுட்டிகள் தென்படும். அவற்றில் உங்களுக்கு வேண்டியதைச் சொடுக்கினால், ஒரு ஒலிப்பான் (media player) திரை தோன்றி, பட்டியலிலுள்ள பாடல்கள் ஒன்றன் பின் ஒன்றாக உங்கள் கணினியில் இசைக்கப்படும். இதில் shuffleஐத் தேர்ந்தெடுத்தால், பாடல்களின் வரிசை (sequence) கலைந்து random முறையில் பாடல்கள் இசைக்கப்படும்.
ஒரு சில மணி நேர இன்பத்திற்கு நான் உத்தரவாதமளிக்கிறேன். பல அருமையான பாடல்கள் இத்தளத்தில் இல்லாத காரணத்தால் இப்பட்டியல்களிலிருந்து விட்டுப் போயின. (உ-ம், திருடா திருடா, கருத்தம்மா, கிழக்குச் சீமையிலே, மகுடி, முள்ளும் மலரும், தனிக்காட்டு ராஜா, ஆகிய படங்களில் இடம் பெற்ற சில கிராமியப் பாடல்கள்)

இறக்குமதி செய்து கொண்ட ஒலிப்பட்டியல்களை விரும்பும்போதெல்லாம் கேட்கலாம். மேற்கூறிய செய்முறை பிடிபட்டவுடன் நீங்களும் உங்கள் விருப்பப் பாடல்களைத் தொகுத்து, இதைப்போலவே அனைவருக்கும் வழங்கலாம். இதை ஒரு மீம் போலவும்்லவும் செய்யலாம், பலருக்கும் ஆர்வமிருந்தால். (ஒரே லாம்....லாம்.......லாம்தான் :) ) ரசனையை பற்றிய சுய தம்பட்டம், குறிப்பிட்ட இசையமைப்பாளர் / பாடகர் / இசைவகை / காலகட்டம் ஆகியவற்றின் மேன்மையைப் பறைசாற்றுதல், அலுவலக நேரத்தை உருப்படியாக செலவழித்தல்......... என்று இதனால் பல பயன்கள் உள்ளன ;)

திங்கள், நவம்பர் 14, 2005

Valentin

அன்பு / காதல் அகியவற்றைக் கொண்டாடும் காதலர் தினத்தை இவ்வுலகுக்குத் தந்த ·பாதர் வேலன்டைனின் பெயரைக் கொண்ட ஒரு சிறுவனின் கதையிது. ஆனால் அவனது பெயருக்குப் பொருத்தமில்லாத வகையில், அவனுக்கு அன்பு மறுக்கப் படுகிறது, அதுவும் அவனது பெற்றோர்களிடமிருந்து. வெறுப்பைக் கக்கும் தந்தை, அதற்கு பயந்து அவர்களை விட்டு ஓடிய தாய், நிராதரவாக்கப்பட்ட சிறுவன், அவனுக்கு அன்பு செலுத்த ஒரு வயதானப் பாட்டி மட்டும்.......... என்று ஒரு துயரமான சூழ்நிலையை நம் முன் வைக்கிறது இப்படம் - Valentin (2002). அர்ஜென்டினா நாட்டில் தயாரிக்கப்பட்ட ஸ்பானாஷ் மொழிப் படம்.

துயரமே கொடுமையான ஒன்று. அதிலும் ஒரு எட்டு வயதுச் சிறுவனுக்கு ஏற்படும் துயரம் நம்மை நெகிழ வைப்பது நிச்சயம். பெற்றோர்கள் பிரிந்த நிலையில், தான் தொலைத்தத் தாயன்பை தனது தந்தையின் காதலியிடம் எதிர்பார்க்கிறான் சிறுவன். அதுவும் தற்காலிகமாகி விடுகிறது, அவளும் அவன் தந்தையைப் பிரிவதால். தந்தையிடம் கிடைக்காத நட்பை அவர்களது அடுத்த வீட்டில் வசிக்கும் Rufo என்ற இளைஞனிடம் தேடுகிறான். பியானோ வாசிக்கத் தெரிந்த அவனிடம் தனக்கும் அதனைக் கற்றுத் தருமாறு வேண்டுகிறான். Rufo சிறுவனது விரல்களின் எண்ணிக்கையைச் சரிபார்க்கிறான். :) பிறகு சிறுவனது பற்களையும் சோதித்துப் பார்த்துவிட்டு (அவற்றுக்கும் பியானோ வாசிப்பிற்கும் அதிகத் தொடர்பிருப்பதாகக் கூறி), அவ்வேண்டுகோளுக்குச் சம்மதிக்கிறான்.

Rufoவுக்கு அவனது காதலி அவனை விட்டு ஓடிய பிரச்சினை. ("என்னை விட்டு வேறு ஒருவனுடன் ஓடியிருந்தாலும் சமாதானமாகியிருப்பேன். ஆனால் அவளோ, என்னிடமிருந்து விலக வேண்டுமென்பதற்காகவே என்னை விட்டு ஓடினாள்.") Valentinனுக்கோ அவனது தாய் அவனை விட்டு அகன்ற பிரச்சினை. இருவரும் whisky அருந்திவிட்டு "ஆண்கள் அளவுக்குப் பெண்கள் romantic கிடையாது" (100% உண்மை) என்று பேசிக்கொண்டு, தங்கள் நட்பை உறுதி செய்து கொள்கின்றனர். இவ்வாறாக, பாட்டியின் மரணம், தந்தையிடமிருந்து பிரிவு போன்ற சூழ்நிலைகளையெல்லாம் கடந்து படம் இனிதே முடிவடைகிறது.

அறுபதுகளைச் சார்ந்த கதை. சிறுவனுக்கு ஒரு விண்வெளி வீரனாக வேண்டுமென்பது இலட்சியம். நிலவில் கால் பதிக்க வேண்டுமென்பதும்தான். அமெரிக்க Neil Armstrong முந்திக் கொள்கிறார். "பரவாயில்லை, நான் ஒரு எழுத்தாளனாகிவிட்டேன். அதுவும் இந்த ஒரு சிறிய கதையைத்தான் எழுதியிருக்கிறேன்" என்றக் குறிப்புடன் படம் முடிகிறது. Hallmark channelஇல்தான் பார்த்தேன், ஆங்கில மொழிபெயர்ப்புடன். தவற விட்டவர்களுக்கு - இம்மாதத்தில் மறுபடியும் நான்கைந்து முறைகள் இப்படம் காட்டப்படவிருக்கிறது, 19th (12.30 & 23.05 IST), 22nd (18.30 & 00.00 IST) & 23rd (07.00 IST) ஆகிய தினங்களில்் (இது இந்தியாவில். மற்ற நாடுகளைப் பற்றித் தெரியவில்லை. ஆசிய நாடுகளுக்கெல்லாம் பொது ஒளிபரப்பேயென்று நினைக்கிறேன்).

ஞாயிறு, நவம்பர் 06, 2005

கண்ணில் படாத எண்ணைப் பீப்பாய்கள்

"என் வாழ்நாளிலேயே நான் இதுவரை ஒரு எண்ணைப் பீப்பாயைக் கூட கண்ணாலும் பார்த்ததில்லை. அதை விட முக்கியமான வேலைகள் எனக்கு இருந்திருக்கின்றன. அதுசரி, நீ பார்த்திருக்கிறாயா எண்ணைப் பீப்பாய்களை?"

"நானும் பார்த்ததில்லைதான், ஆனால் என் பேரில்தான் ஊழல்க் குற்றச்சாட்டுகள் எதுவும் வரவில்லையே?"

மேற்கண்ட நகைச்சுவையான உரையாடல் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் நட்வர் சிங்கிற்கும் NDTV நிருபர் பர்க்கா தத்திற்கும் இடையே நடந்தது, அண்மையில் ஒளிபரப்பானப் பேட்டியில். தன் மீது சுமத்தப்பட்டிருக்கும் அபாண்டமான குற்றச்சாட்டால் கொதிப்படைந்து போயிருப்பதாக இப்பேட்டியில் நட்வர் சிங் கூறினார். அவரும், அவரது கட்சியான காங்கிரஸ¤ம், ஈராக்கிலிருந்து தலா நான்கு மில்லியன் எண்ணைப் பீப்பாய்களை சதாம் ஹ¤சேன் அரசுக்கு லஞ்சம் கொடுத்து வாங்கியதாக ஐ.நா. சபையின் விசாரணை அறிக்கை குற்றம் சாட்டியுள்ளது. அதற்கான எதிர்வினைதான் மேலேயுள்ளது.

இந்த அறிக்கையைப் பற்றி தேடிய வரையில் கிடைத்த விவரங்கள்:
  • இந்த விசாரணை ஐ.நா.சபையால் நியமிக்கப்பட்ட ஒரு சுய அதிகாரக் குழுவால் நடத்தப்பட்டது. இதன் தலைவர் திரு.பால் வோல்கர் ஆவார். <In bold letters>இவர் அமெரிக்க Federal Reserveவின் முன்னாள் தலைவராவார்.</In bold letters> :)
  • ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட பெரும்பாலான அமைப்புகள் அமெரிக்காவின் ஈராக் படையெடுப்பை எதிர்த்த சக்திகள் / நாடுகளைச் சார்ந்தவை. ஈராக் போருக்கும் அமெரிக்காவின் ஆக்கிரமிப்பிற்கும் வலுவானதொரு எதிர்ப்புக் குரல் கொடுத்து வந்த புள்ளிகள், நாடுகள் ஆகியன, அதிகமான அளவில் குறிப்பிடப்பட்டுள்ளன.
  • இதை வைத்து, போரெதிர்ப்பு இயக்கமே சத்தாம் ஹ¤சேனின் பொருளுதவியால், ஆதரவால்தான் தோன்றியது மற்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது, என்பது போன்ற கருத்துருவாக்கங்கள் இணையத்தில் அவசர கதியில் நடைபெறுகின்றன.
  • இந்த அறிக்கையில் என் கவனத்தைக் கவர்ந்த வரிகள்: 'The committee emphasizes that the identification of a particular company's contract as having been the subject of an illicit payment does not mean that such company - as opposed to an agent or secondary purchaser with an interest in the transaction - made, authorized or knew about an illicit payment.' அதாவது, இந்தப் பட்டியலில் ஒரு நிறுவனத்தின் பெயர் உள்ளது என்பதாலேயே அது ஊழல் செய்தது என்றோ, ஊழலை அங்கீகரித்தது என்றோ, ஊழலைப் பற்றித் தெரிந்து வைத்திருந்தது என்றோ பொருள் கொள்ள முடியாது. இது போன்ற ஒரு disclaimerஐ நான் பார்த்ததில்லை. இவர்களெல்லாம் குற்றம் புரிந்தவர்கள் என்று பட்டியலிட்டு விட்டு, ஆனால் உறுதியாகக் கூறுவதற்கில்லை என்பது போலத்தான் இருக்கிறது.
  • இந்த அறிக்கை முன்வைக்கும் பிரதானக் கருத்து இவ்வரிகளில்: "......Iraq preferred to sell its oil to companies and individuals percieved as 'friendly' to Iraq, and in particular, if they were permanent members of the Security Council in a position to potentially ease the restrictions of sanctions." அதாவது, ஈராக் தனக்கு வேண்டப்பட்டவர்களாகக் கருதியவர்களுக்கே தனது எண்ணையை விற்க முன்வந்தது. இதன்படி, ருஷ்யாவும், ·பிரான்ஸ¤ம் இதில் பெரும் பங்கைப் பெற்றனர் என்கிறது அறிக்கை. இங்கு எனக்கு லாஜிக் புரியவில்லை. இந்த நாடுகளும் இதர நிறுவனங்களும் லஞ்சம் கொடுத்து அதிக விலையில் எண்ணையை வாங்கியிருக்கின்றனர், சலுகை விலையில் அல்ல. அப்படியிருக்க, இந்த எண்ணைப் பரிமாற்றத்திற்கு நன்றிக் கடனாகத்தான் இந்நாடுகள் ஈராக்கிற்கு உலக அரங்கில் ஆதரவு தெரிவித்தன என்று எவ்வாறு முடிவு கட்ட முடியும்? திரையரங்கில் blackஇல் டிக்கட் விற்பவனிடம் நமக்கு என்ன நன்றியுணர்வு இருக்க முடியும்? ஒருவேளை, ஈராக்கில் லஞ்சம் கொடுத்து வாங்கிய எண்ணையை வேறெங்காவது கொள்ளை லாபத்திற்கு விற்க முடிந்திருந்தால், இக்குற்றச்சாட்டில் உண்மையிருக்கக்கூடும். ஆனால், அவ்வாறிருந்ததா என்பதற்கு எந்த ஆதாரமுமில்லை. உலகச் சந்தையில் எண்ணையின் விலையை வைத்துத்தான் ஈராக்கின் எண்ணையின் விற்பனை விலையை நிர்ணயித்தது ஐ.நா. சபை.
இவற்றையெல்லாம் வைத்துப் பார்த்தால், இது ஏதோ அமெரிக்காவுக்குச் சாதகமான, அரசியல் உள்நோக்கங்களோடு வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையாகவே தென்படுகிறது. அமெரிக்காவின் ஈராக் மீதானப் படையெடுப்பை நியாயப்படுத்தும் சக்திகளின் கரங்களை வலுப்படுத்துவதும் ஒரு குறிக்கோளாக இருக்கலாம்.

இதில் நமது நட்டுவனார் சிங் மாட்டிக் கொண்டிருப்பதுதான் முரண்பாடுகளின் முத்தாய்ப்பு. பதவியில் இல்லாதக் காலத்தில் இவரும் இவரது காங்கிரஸ¤ம் எதற்காக எட்டு மில்லியன் எண்ணைப் பீப்பாய்களை பினாமி பேரில் வாங்கினார்கள், அதுவும் 1 மில்லியன் டாலர்கள் வரை லஞ்சம் கொடுத்து, என்றக் கேள்விக்கான விடை நமக்குத் தெரியாமலே போய்விடக்கூடும். பதவியில் இல்லாத நட்வர் சிங், ஆட்சிப் பொறுப்பில் இல்லாதக் காங்கிரஸ், இவர்களால் சத்தாமிற்கு என்ன ஆதாயம் என்று என் சிற்றறிவுக்கு எட்டவில்லை. ஒன்றை இங்குக் கூற வேண்டும். இந்த அறிக்கை இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டவர்களைப் பட்டியலிடுகிறது. ஆனால் இந்த அறிக்கையைப் பற்றி கூகிளில் தேடினால் நம் நட்டுவனார் சிங்கின் பெயர்தான் அதிகமாகத் தென்படுகிறது (இந்திய செய்தித் தளங்கள், வலைப்பதிவுகள், ஆகியவற்றிலிருந்து). "கிடைச்சாண்டா ஒருத்தன், போடுவோம்டா தர்ம அடி" என்ற நமக்கே உரித்தான மனப்பான்மைக்கு ஈடு இணையே கிடையாதென்றுதான் தோன்றுகிறது. பாவம், எட்டு மில்லியன் பீப்பாய்களில் ஒன்றையாவது அவர் கண்ணில் காட்டியிருக்கலாம்.

சனி, அக்டோபர் 29, 2005

ஒண்ணுக்கு அடிக்கும் போட்டி

அன்றாடங்காய்ச்சித் தமிழர்களே, தங்கள் காலரை (அப்படியொன்று இருந்தால்) தூக்கிவிட்டுக் கொள்ளுங்கள்! உங்கள் மொழி இப்போது செம்மொழி!!! அது மட்டுமல்ல, நம்மிடையே உள்ள நிதி படைத்தவர்களின் கருணையால் (மற்றும் தலையீட்டால்), இத்தகுதி வேறெந்த மொழிக்கும் கிடைக்கா வண்ணம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி......... எதுவும் நம் தமிழின் அருகில் கூட வரத் தகுதியற்று நிற்கின்றன. நாம் அடிக்கும் சிறுநீர் எவ்வளவு தூரம் பாய்கின்றது பார்த்தீர்களா?

யாருக்கு வேண்டும் காவிரி நீரும், குடிநீரும்? யாருக்கு வேண்டும் வேலை வாய்ப்புகள்? யாருக்கு வேண்டும் மழையில், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படாத, பாதுகாப்பான குடியிருப்புகள்? மறந்து விடுங்கள் உங்கள் பட்டினிகளை! மறந்து விடுங்கள் உங்கள் அவலங்களை! அதற்கு பதிலாக உங்கள் செம்மொழியான தமிழை நினைத்துப் பாருங்கள்! இரண்டாயிரம் ஆண்டுகளாக இவ்வுலகில் பேசப்பட்டு வருகிறதாம். இதுவொன்றே போதாதா, நீங்கள் உயிர் வாழ? தமிழனென்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா!!!

திங்கள், அக்டோபர் 24, 2005

ஒரு மலையாளப் படம்

தூக்கம் வராத ஒரு இரவு நேரத்தில் தொலைக்காட்சிப் பெட்டியின் முன்னமர்ந்து channel surfing செய்து கொண்டிருந்த போது, தூர்தர்ஷனில் ஆங்கில sub-titlesசுடன் ஓடிக்கொண்டிருந்த ஒரு மலையாளப் படம் கவனத்தைக் கவர்ந்தது. கதையின் பிரதானப் பாத்திரமாக 'ஷஹீனா' என்றப் பெயர் கொண்ட ஒரு கிராமத்துப் பெண். இவ்வேடத்தைத் தாங்கி நடித்தவர் புகழ் பெற்ற நடிகை மீரா ஜாஸ்மின். (ஆய்த எழுத்து / யுவா படத்தில் மாதவனின் மனைவி பாத்திரத்தில் வீணடிக்கப் பட்டவர்.) ஷஹீனா பள்ளியின் இறுதியாண்டுகளில் பயிலும் ஒரு மாணவி. தந்தையை இழந்த, தாயின் வளர்ப்பில் வாழும், படிப்பார்வம் நிறைந்தப் பெண். ஆண்களைக் கண்டால் அவளுக்கொரு பயம். அவளது பள்ளியாசிரியர் மட்டும் இதற்கு விதிவிலக்கு.

அவள் ஆனந்தமாகத் தனது தோழிகளுடன், அக்கிராமத்தின் வயல் பகுதிகளைக் கடந்து பள்ளிக்குச் சென்று திரும்பும் நேரத்தில், ஒரு பெண்களின் கூட்டம் அவர்களைக் கடந்து செல்கிறது. ஒவ்வொரு பெண்ணின் கையிலும் ஒரு குழந்தை. ஒவ்வொருத்தியின் முகத்திலும் துயரம். வரிசையாக, ஒருவர் பின் ஒருவராக, இச்சிறுமிகளைக் கடந்து செல்கிறது அக்கூட்டம். அவர்கள் யார், எங்கு செல்கின்றனர் என்றக் கேள்விகளுக்கெல்லாம் விடையின்றி, ஏதோ அவல நிலையிலிருப்பவர்கள் என்ற அறிகுறிகளை மட்டும் வழங்கி விட்டு, மேற்கொண்டு பயணிக்கிறது கதை.

மணமாகி மனைவி, மகள் மற்றும் தாயுடன் வாழும் ஒரு ஆணின் வீட்டிற்கு நம்மை அழைத்துச் செல்கிறது படம். அவன் தான் மறுமணம் செய்து கொள்ளப் போவதாக மனைவியிடம் அறிவிக்கிறான். இறந்து விடுவதாக அச்சுறுத்தும் மனைவியை சமாதானப் படுத்தி, தனக்கு துபாயில் வேலை கிடைக்க ஆகும் செலவில் ஒரு இருபத்தி ஐயாயிரம் ரூபாய்கள் குறைவதாகவும், அதனை அடைவதற்கே இம்மறுமணம் என்றும் காரணம் கூறிகிறான். பிறகு ஒரு மணத் தரகரின் உதவியுடன், ஷஹீனாவின் குடும்பத்தை நாடி, அவளை மணம் புரிகிறான். கனவுகளனைத்தும் சிதைக்கப்பட்டு ஒரு கைதியைப் போல் அவனுடன் அவனது வீட்டிற்குச் செல்கிறாள் ஷஹீனா. அவனது மனைவியும் தாயும் மகளும் அவளிடம் அன்பு செலுத்துகின்றனர். ஆனால், அவனோ, ஒரு மிருகத்தைப் போல் அவளை அணுகுகிறான். ஏற்கனவே ஆண்களின் மீதுள்ள அச்சத்தால், அவனை எதிர்த்துப் போராடி, கடித்து, பிறாண்டி என்று ஒவ்வொரு முறையும் அவனை விலக்குகிறாள் ஷஹீனா. இதையெல்லாம் கையாலாகாதத்தனத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறாள் அவனது முதல் மனைவி. சோபன அறையின் கதவை அவளது முகத்திற்கெதிராகவே அறைந்து மூடுகிறான் அவள் கணவன். அங்கு அவனுக்கேற்படும் காயங்களுக்கு, பிற்பாடு மருந்துகள் தடவுகிறாள் இம்முதல் மனைவி. இவற்றையெல்லாம் நையாண்டி செய்யும் அவனது தாய் அவனிடம் கூறவது, "நீ கொடுத்து வைத்தவன். உனது ஒரு மனைவி உனக்கு ஏற்படுத்தியக் காயங்களுக்கு உனது இன்னொரு மனைவி மருந்து போடுகிறாள். பெரும்பாலோருக்கு இந்த யோகம் கிடைக்காது."

ஷஹீனாவின் பிடிவாத குணத்தைப் போக்க, அவளுக்குப் பேயோட்டல்கள் நடத்தப்படுகின்றன. இச்சடங்கில் சுவாசித்தப் புகையினால் அவளுக்குக் காய்ச்சலேற்படுகிறது. அவளுக்கு அளிக்கப்படும் மருந்துடன் தூக்க மருந்தைக் கலக்க ஆணையிடுகிறான் கணவன். இதற்கு மறுத்துக் கூறியும், கட்டாயத்தால் வேறு வழியின்றி, அவனது கட்டளையை நிறைவேற்றுகிறாள் முதல் மனைவி. அதன் பிறகு மயக்க நிலையில் அவனால் வன்புணரப்படுகிறாள் ஷஹீனா. (சட்டப்படி மணமுடித்ததால், அவன் செய்தது வன்புணர்ச்சியல்ல, மென்புணர்ச்சியே என்று வாதிடக்கூடிய சமூகம் நம்முடையது) மயக்கம் தெளிந்தபின், என்ன நேர்ந்தது என்று உணரும் பக்குவமும் அவளுக்கு இருக்கவில்லை. கட்டிப்போடப்பட்டு, செயலற்ற நிலையில் தான் கொடுமைப்படுத்தப் பட்டதைப் போன்றவொரு உணர்வு / கெட்ட கனவு மட்டுமே மிஞ்சியிருந்தது அவளுக்கு. காரியம் முடிந்த நிலையில், அவளை வைத்துக் கொண்டு தன்னால் சமாளிக்க முடியாது, ஆகவே, அவளை விவாகரத்து செய்யப்போவதாக அறிவிக்கிறான் கணவன்.

ஷஹீனாவை அவளது தாய் வீட்டில் சேர்ப்பித்துவிட்டு, ஊர் பெரியவர்களின் ஒத்துழைப்புடன் அவளை விவாகரத்து செய்கிறான். பிடிவாதம் கொண்டு, தன்னைத் தொடுவதற்கும் அவள் அனுமதிக்கவில்லை என்று அவர்களுக்குக் காரணம் கூறுகிறான். அவளைத் தனது நாலாம் தாரமாக ஆக்கிக்கொள்ளும் நோக்கத்தில், ஊர் பெரியவரும் ஆர்வத்துடன் இதற்கு சம்மதிக்கிறார். மயக்க நிலையிலிருந்ததால் அவளும் தான் வன்புணரப்பட்டதை உணர்ந்திருக்காத நிலையில், கணவனுடன் படுக்கவில்லை என்றே தன் தாயிடம் கூறுகிறாள். விவாகரத்தானதில் மகிழ்ச்சியடைந்து, மீண்டும் பள்ளிக்குத் திரும்புகிறாள் ஷஹீனா. ஆங்கிலப் பாடம் மட்டும் கடினமாகவுள்ளது என்று ஆசிரியரிடம் கூற, அவர் அவளது வீட்டிற்கு வந்து சிறப்புப் பாடமெடுக்கிறார். அதனையும் கோணப் பார்வையுடன் பார்க்கிறது சமூகம். கடினமாக உழைத்து, இறுதித் தேர்வுக்குத் தயார் செய்து கொண்டு, கடைசியில் தேர்வறையில் மயக்கமடைகிறாள். மருத்துவமனையில் அவள் கர்ப்பமான செய்தி வெளிபடுகிறது. செய்தியைக் கேட்டு மண்டையைப் போடுகிறார் அவளது தாய்.

அனாதையான பெண்ணை ஊர் தூற்றுகிறது. அவளது ஆசிரியருடன் ஏற்பட்டத் தொடர்புதான் கர்ப்பத்திற்குக் காரணமென்கிறது. மதநூல்களிலிருந்து மேற்கோள் காட்டி, இத்தகையப் பெண்ணை என்ன செய்யவேண்டுமென்ற தீர்ப்புகள் கூறப்படுகின்றன. இதே வேறு நாடாகயிருந்திருந்தால் கல்லால் அடித்தே கொன்றிருப்பார்கள், ஆனால் நாம்தான் முற்போக்காளர்களாயிற்றே, ஆகவே இத்துடன் நிறுத்திக்கொண்டோமென்று தம் முதுகில் தாமே தட்டிவிட்டுக் கொள்கின்றனர் ஊர் மக்கள். கைக்குழந்தையுடன் மருத்துவமனையிலிருந்து வெளிவருகிறாள் ஷஹீனா.

அடுத்தக் காட்சியில், முன்பு பார்த்த அதே பெண்கள் கூட்டம். ஒருவர் பின் ஒருவராக, வயல் வரப்புகளின் மீது, கைக்குழந்தையுடனும் சோகமான முகத்துடனும், தரை பார்த்து நடக்கின்றனர் அப்பெண்கள். அவர்களில் ஒருத்தியாக, ஷஹீனாவும். எல்லோரும் ஒரு ஆற்றங்கறைக்குச் சென்று, குழந்தைகளைக் கறையில் இறக்கிவிட்டு, தண்ணீருக்குச் சென்று தம் பணிகளில் ஈடுபடுகின்றனர். காமெரா குழந்தைகள் பக்கம் வருகிறது. பத்து பதினைந்து குழந்தைகள், ஒரு பெரிய துணியின் மீது கிடத்தப் பட்ட நிலையில். அவை அழத் துவங்குகின்றன. சில நிமிடங்களுக்கு அவற்றின் ஒருமித்த ஓலக்குரல்கள் காட்டப்படுகின்றன. அவை ஒவ்வொன்றின் உருவாக்கமும் ஒரு சோகக்கதையாக, நமக்கு இதுவரை காண்பிக்கப்பட்ட ஒன்றைப் போலவே. காட்சி அகன்று மலையாள எழுத்துக்கள் 'சுபம்' என்றோ, 'மங்களம்' என்றோ, 'நன்றி' என்றோ, தெரிவிக்கின்றன.

கனத்த மனதை லேசாக்கிக் கொள்ள, ஒரு தமிழ் சானலுக்கு மாற்றி, அங்கு ஓடிக்கொண்டிருந்த வடிவேலுவின் தரக்குறைவான நகைச்சுவைக் காட்சியொன்றை சிறிது நேரம் பார்த்து விட்டு, இறுதியில் தூங்கிப்போனேன்.

பி.கு: படத்தின் பெயர் என்னவென்று தெரியவில்லை.

சனி, அக்டோபர் 22, 2005

உறையும் பனியில் உறைவிடமின்றி....

இவ்வாண்டின் தொடக்கத்திலேற்பட்ட சுனாமி பேரழிவில் தொடங்கி, மும்பை பெருமழை, அமெரிக்க கத்ரீனா / ரீட்டா கடும்புயல்கள் என்று வரிசையாக உலகின் ஏழை, எளிய மக்களைப் பதம் பார்த்து வந்த இயற்கையானது, இப்போது காஷ்மீர் நிலநடுக்கத்தின் வாயிலாகத் தன் கைவரிசையைக் காட்டியிருக்கிறது. மற்ற சம்பவங்களைப் போலல்லாது, இந்த முறை பாதிக்கப்பட்ட இடங்கள் எளிதில் சென்றடைய முடியாதவை. மலைப்பகுதிகளாகவும், அதிக வசதிகளற்ற பின்தங்கிய பகுதிகளாகவும் உள்ள இவ்விடங்களுக்கு உதவிப்பொருட்களையும் சேவகர்களையும் அனுப்பி நிவாரணப் பணிகளை மேற்கொள்ளுவது மாபெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. கடினமான நிலப்பரப்பின் காரணத்தால், மற்ற நிவாரணப் பணிகளை விட இங்கு ஆகும் செலவு அதிகமாகும்.

சாலைகள் பலவும் அழிக்கப்பட்டு விட்ட நிலையில், ஆகாய மார்க்கமாகவே உதவிகளைக் கொண்டு செல்ல வேண்டியக் கட்டாயம். அதற்குத் தேவைப்படும் ஹெலிகாப்டர்களின் எண்ணிக்கையில் பற்றாக்குறை. மேலும் இவற்றின் பயணத்திற்குத் தடையாக அவ்வப்போது பொழியும் அடைமழை. இதற்கு மத்தியில் இந்திய - பாக்கிஸ்தானிய சர்ச்சைகள், அரசியல்கள் என்ற சிக்கலான வரலாற்றுப் பின்னணியும் நிவாரணப்பணிகளுக்குச் சாதகமில்லாத நிலையை ஏற்படுத்தும் அவலம். இவ்வாறு, பல பிரச்சினைகளையும் தாண்டி, அவசர உதவிகளை விரைவில் முன்னெடுத்துச் சென்று, அவற்றை எதிர்பார்த்துக் காத்திருக்கும் சுமார் அரை கோடி பாதிக்கப்பட்ட மக்களின் துயரத்தைத் துடைக்க வேண்டிய பொறுப்பு, இன்று உலகக் குடிமக்களின் முன் வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அவர்களோ ஒவ்வொரு பேரழிவுக்குப் பிறகும் உதவி செய்து உதவி செய்து, இறுதியில் சோர்ந்து விட்டதன் அறிகுறிகளையே வெளிப்படுத்துகின்றனர். நிவாரணப் பணிகளுக்காக முன்னூறு மில்லியன் டாலர்களுக்கும் மேலாக நிதியுதவி தேவை என்று உலக நாடுகளுக்கு ஐ.நா. சபை விண்ணப்பித்துள்ள நிலையில், இதுவரை உதவித்தொகையாக எண்பத்தியாறு மில்லியன் டலர்களே உத்தரவாதம் செய்யப்பட்டுள்ளனவாம். (தகவல்: BBC Website) சுனாமி நிவாரணத்திற்கு தேவைக்கும் அதிகமாக நிதியுதவி புரிந்த உலக மக்கள், இன்று தயங்குவது அவர்களது சோர்வைத்தான் காட்டுகிறது.

தேவைப்படும் உதவிகள் உரிய நேரத்தில் சென்றடையாவிட்டால் அதன் பின் விளைவுகள் ஏராளம். சில நாட்களில் இமாலயப் பகுதிகளில் கடுங்குளிர் நிலை கொள்ளும். இந்நிலையில் நிலநடுக்கத்தால் வீடுகளை இழந்த 3 மில்லியன் மக்களுக்கு தற்காலிகமான கூடாரங்களையாவது வழங்காவிட்டால், கடுங்குளிரால் மேலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழக்க நேரிடுமென்று ஐ.நா.சபை எச்சரிக்கிறது. ஆனால் தற்போதைய நிலவரப்படி, ஐநூறு மக்களுக்கு ஒரு கூடாரம் என்ற விகிதத்தில்தான் இவ்வுதவி பாதிக்கப்பட்டவர்களைச் சென்றடைந்திருக்கிறது. உடனடியாக இக்கூடாரங்களின் விநியோகத்தைத் துரிதப்படுத்தவில்லையென்றால், மேற்கூறிய எச்சரிக்கை உண்மையாகிவிடும் அபாயமுள்ளது. இதற்கடுத்தபடியாக, உண்ண உணவு, மருத்துவ வசதிகள் என்று பலவகையான தேவைகள். (தகவல்: BBC)

சோர்வடைந்திருக்கும் நல்லுள்ளங்கள் மீண்டும் விழிப்படைந்து, தம் மனிதநேயத்தை விரைவில் வெளிப்படுத்துவார்களென நம்புவோம்.

புதன், அக்டோபர் 19, 2005

தணிக்கைகளற்ற ஓர் திரட்டி அமைப்பு

சமீபத்தில் தமிழ்மணம் திரட்டியில் சில மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, சில வலைப்பதிவுகள் தமிழ்மணத்திலிருந்து பல்வேறு காரணங்களுக்காக நீக்கம் செய்யப்படுகின்றன என்றுத் தெரிய வருகிறது. தமிழ்மண நிர்வாகிகளின் இம்முடிவுடன் நான் உடன்படாவிட்டாலும், இதனை அவர்களது் சொந்த முடிவாகக் கருதி மதிக்கிறேன். எனினும், தமிழிணையத்தில் கருத்துச் சுதந்திரம், பன்மைத்தன்மை ஆகியவற்றின் வருங்காலம் குறித்த கவலைகளையும் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. இந்தப் பின்னணியில் எனக்குத் தோன்றும் யோசனையை இங்கு முன்வைக்கிறேன்.

Technorati என்ற இணையச் சேவையை இங்கு பலரும் அறிந்திருக்கலாம். அது வலைப்பதிவுகளுக்கான #1 தேடும் தளமாகும். இச்சேவை அளிக்கும் ஒரு வசதி, பதிவுகளின் வகைச்சொல்லை (category or tag) வைத்துத் தேடல்கள் நிகழ்த்தக்கூடிய வசதியாகும். இதனைச் சாதகமாக்கிக் கொண்டு, ஒரு தடைகளற்ற வலைப்பதிவுத் திரட்டும் அமைப்பை உருவாக்குவதே என் திட்டம். இதன்படி,
  • இதில் சேர விரும்பும் ஒவ்வொரு பதிவரும் ஒரு பொதுவான வகைச்சொல்லைக் கொண்டு அவரது ஒவ்வொரு பதிவையும் வகைப்படுத்த வேண்டும். உ-ம், 'தமிழ்ப்பதிவுகள்' என்பது நான் முன்மொழியும் வகைச்சொல். ஒவ்வொரு பதிவும் இவ்வகைச்சொல்லைக் குறிப்பிட்டே வெளியிடப்பட வேண்டும். இதனைச் செய்வது சுலபம்:
<a href="http://technorati.com/tag/தமிழ்ப்பதிவுகள்" rel="tag">தமிழ்ப்பதிவுகள்</a>

என்ற html நிரலித் துண்டை பதிவின் இறுதியில் சேர்த்துக் கொண்டால் போதும். (In 'Edit html' mode)
  • பதிவை வெளியிட்ட பின்னர், Technoratiயின் இந்த வலைப்பக்கத்திற்குச் சென்று உங்கள் வலைப்பதிவின் URLஐ உள்ளிட வேண்டும். அதன் பிறகு அதிகப்படியாக ஒரு மணி நேரத்திற்குள் உங்கள் பதிவு அவர்களது பட்டியலில் சேர்த்துக் கொள்ளப்படுமாம்.
  • மேற்கண்டவாறு வகைப்படுத்தப்பட்ட பதிவுகளின் பட்டியலைக்காண http://www.technorati.com/tag/தமிழ்ப்பதிவுகள் என்றச் சுட்டியை உபயோகியுங்கள். தற்போது அங்கு எனது சோதனைப் பதிவுகள் சிலவற்றைக் காணலாம். இப்பட்டியலின் RSSஇன் சுட்டியும் இப்பக்கத்தில் காணலாம்.
தமிழ்மணத்திலிருந்து நீக்கப்பட்ட / நீங்கிக்கொண்ட, மற்றும் தம் கருத்துக்களுக்குத் தொடர்ந்து ஒரு வாசகர் வட்டத்தை விரும்பும் பதிவர்களுக்கும் அவர்களது விசுவாசிகளுக்கும் இது பயனுள்ளதாகயிருக்குமென்று நம்புகிறேன். யாருடையக் கட்டுப்பாட்டிலும் இல்லாததால், இது தனிமனித விருப்பு வெறுப்புகளுக்கப்பாற்பட்ட ஓர் அமைப்பாக இருக்கக்கூடுமென்று எதிர்பார்க்கிறேன்.


(This is how the 'tagging' appears in the post)

ஞாயிறு, அக்டோபர் 16, 2005

சுக்குமி ளகுதி இப்பிலி

உலக வர்த்தக சபையின் நிர்பந்தப்படி நம் அரசு TRIPS என்னும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதைப் பலர் அறிந்திருக்கலாம். இதன்படி, விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளுக்கானக் காப்புரிமை முன்பை விட இறுக்கமாகப் பாதுகாக்கப்பட்டு, அதனை அத்துமீறும் நபர்கள் / நிறுவனங்கள் மீது சட்டம் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகமாகியுள்ளது. இதனால், விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தும் மேலை / பன்னாட்டு / பெரிய நிறுவனங்கள், அவற்றால் தனித்துவம் பெற்று, அவற்றின் ஏகபோக விற்பனை உரிமையையும் அடைந்து விடுகின்றன. இத்தகுதியை அடைந்த பின், அவற்றின் பொருட்களை அதிக விலை கொடுத்தும் வாங்க வேண்டியக் கட்டாயத்திற்குத் தள்ளப்படுகின்றனர் பொதுமக்கள். விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளைப் பயன்படுத்தும் ஏகபோக உரிமையை, அதை நிகழ்த்தியவர்களுக்கே அளிப்பதால், அவற்றைச் சாதிப்பதற்குத் தேவையான ஆய்வு முயற்சிகள் ஊக்குவிக்கப்படுகின்றன என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. இருந்தும், அத்தியாவசிய / உயிர் காக்கும் மருந்துகள் தயாரிப்பிலும் இத்தகைய கொள்கைகள் பின்பற்றப்படும் பொழுது, அதனைக் கேள்விக்குட்படுத்த வேண்டியிருக்கிறது.

எய்ட்ஸ் போன்ற உயிர் கொல்லி நோய்களிலிருந்து காப்பாற்றும் மருந்துகளைச் சட்டப்படி தருவிக்க வேண்டுமென்றால் Pfizer, Merck போன்ற பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்து அதிக விலை கொடுத்தே வாங்க வேண்டியிருக்கிறது. எய்ட்ஸ் அபாயம் பரவியிருக்கும் மூன்றாம் உலக நாடுகளைச் சேர்ந்த பெரும்பாலோருக்கு அவற்றை வாங்கிக் கட்டுப்படியாகாது. நல்ல வேளையாக இந்தியாவின் Cipla போன்ற நிறுவனங்கள் இம்மருந்துகளை நகல் செய்து, generics என்ற வகையில் குறைந்த விலையில் தயாரித்து வருகின்றன. நாம் TRIPSஆல் தடுக்கி விழுவதற்கு முன் இது சாத்தியமாயிற்று. இத்தகைய நகல் மருந்துகளால் உலகின் வறுமை மிக்க நாடுகள் அடைந்து வரும் நன்மை பலருக்கும் தெரிந்ததே. Jeffrey Sachs என்னும் புகழ் பெற்றப் பொருளாதார வல்லுனர் மற்றும் ஐ.நா. சபை ஆலோசகர், அவரது The End of Poverty என்னும் நூலில், ஆப்பிரிக்க நாடுகளின் எயட்ஸுக்கு எதிரானப் போராட்டத்தில் Ciplaவின் மருந்துகள் ஆற்றும் பங்கைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். அவரது கூற்றுப்படி, ஆப்பிரிக்காவின் லட்சக்கணக்கான எய்ட்ஸ் நோயாளிகளில், சில ஆயிரம் பேர்களே Ciplaவின் குறைந்த விலை மருந்துகளையும் வாங்கும் வசதி படைத்தவர்களாம். நாளொன்றுக்கு ஒரு டாலர் செலவாகும் நகல் மருந்துகளுக்கு பதிலாக, அவர்கள் சட்டப்படி அசல் மருந்துகள் வாங்க வேண்டுமென்றால், குறைந்தது இருபது டாலர்களாவது செலவளிக்க வேண்டுமாம். அவ்வாறு கட்டாயமாக்கப்பட்டால், இப்போது தேறும் சில ஆயிரம் நோயாளிகளுக்கும் மருத்துவம் எனபது எட்டாக் கனியாகிவிடும் என்பதில் சந்தேகமில்லை. இதனைக் கருத்தில் கொண்டே, உலகச் சுகாதாரச் சபையும் இத்தகைய நகல் மருந்துகளின் பயன்பாட்டை அங்கீகரித்துள்ளது.

இந்நிலையில்தான் நம் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, இவ்வருடம் மார்ச் மாதத்தில், (பன்னாட்டு நிறுவனங்களுக்கு விலை போய்) அதன் TRIPS வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்துவதாக உறுதியளித்துள்ளது. இதன்படி, 1995ஆம் ஆண்டிற்குப் பிறகு பதிவு செய்யப்பட்ட விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளின் காப்புரிமை, நம் சட்டத்தால் கராராகப் பாதுகாக்கப்படுமாம். இப்போது வெகு வேகமாகப் பரவிக் கொண்டிருக்கும் bird flu (பறவைக் காய்ச்சல்?) நோயைக் குணப்படுத்த சுவிஸ் நிறுவனமான Roche தயாரிக்கும் Tamiflu என்ற மருந்தின் தேவை வெகுவாக அதிகரித்துள்ளது. 1995ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் அதன் காப்புரிமை இந்தியாவில் பதிவு செய்யப்பட்டதாம், ஆகவே காப்புரிமை மீறல்களுக்கு எதிராக வழக்கு தொடரலாமென்ற நம்பிக்கையிலிருக்கிறதாம் அந்நிறுவனம். அண்மையில் Cipla இம்மருந்தையும் நகலெடுத்திருகிறது, காப்புரிமை இல்லாத நாடுகளில் அதனை விற்கத் தயார் என்றும் அறிவித்துள்ளது. ஆனால், bird flu இந்தியாவையும் தாக்கும் பட்சத்தில், இம்மருந்தை இங்கு விற்க அனுமதியிருக்குமா என்பதுதான் கேள்விக்குறியாகியுள்ளது. Rocheயின் மருந்தின் விலை ஒரு dosageஇற்கு அறுபது டாலர்களாம் (சுமார் ரூ.3000). நிச்சயமாக Ciplaவின் நகலின் விலை அதில் ஒரு சிறியப் பாகமாகத்தான் இருக்கும். நம் ஏழை மக்களின் வசதிக்கேற்ற மனிதாபிமான விலையைத்தான் நிர்ணயிப்போம் என்று அதன் தலைவர் யூசுஃப் ஹமீத் அறிவித்துள்ளார். ஆனால், இந்நகல்களின் விற்பனையில் TRIPSஐக் காரணங்காட்டி நம் சட்டம் குறுக்கிடுமானால், அதைப் போன்ற வெட்கக்கேடு வேறில்லை. அவ்வாறானால், நம்மைப் போன்ற எளியக் குடிமக்கள், மருத்துவம் போன்ற ஆடம்பரங்களை ஓரங்கட்டிவிட்டு, நமக்குத் தெரிந்த 'சுக்குமி ளகுதி இப்பிலி' வகையறாக்களைக் கையாள வேண்டியதுதான்.

செவ்வாய், செப்டம்பர் 27, 2005

வீடடுப் பெண்களும் வீதிப் பெண்களும்

நம்மிடையே பாலியல் விவகாரங்கள் பற்றியத் திறந்த மனப்பான்மையும் பார்வைகளும் வேண்டுமென்று எழுப்பப்பட்டக் கோரிக்கை தற்போது பெரும் விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது. பண்பாட்டுப் பொய்ப் பிரச்சாரங்களால் மூளைச்சலவை செய்யப்பட்ட அறிவுக் கொழுந்துகள் எழுப்பும் கண்டனங்களும் கேள்விகளும் நேர்ச் சிந்தனை கொண்டவர்களைத் திக்குமுக்காடச் செய்கின்றன. இதனைப் படித்து யாரும் மனம் மாறப்போவதில்லையென்றாலும், அந்த வாய்ப்பையாவது அளிப்போமேயென்ற நல்லெண்ணத்தில் இதைப் பதிகிறேன்.

பாலியல் உறவுகள் பற்றி நம் மரபு, பண்பாடு, மதபோதனைகள் என்ன சொல்கின்றன? சில மூலங்கள் (sources) பலதார மணத்தை அங்கீகரிக்கின்றன, இன்னும் சில இதை எதிர்க்கின்றன. சில, விவாகரத்திற்கும் கருத்தடுப்பிற்கும் தடை விதிக்கின்றன. சில, திருமணம் என்ற பந்தத்திற்குள்தான் ஆணும் பெண்ணும் உறவாடலாம் என்றொருக் கட்டுப்பாட்டை விதித்து, ஆனால் கருத்தரிக்க இயலவில்லையென்றால் யாராவது ரிஷியின் உதவியுடனோ அல்லது இளவட்டத்தின் உதவியுடனோ கருத்தரிக்கலாமென்று அங்கீகாரம் வழங்குகின்றன. திருமணமாகாதக் கோவலனும், மாதவியும் உடன்வாழ்ந்து மணிமேகலையைப் பெற்றெடுத்தப் பழம் பண்பாடுதான் நம் தமிழ்ப் பண்பாடு. இவ்வாறு, ஒரு முரண்பாட்டு மூட்டைதான் மிஞ்சுகிறது நம் மரபையும் பண்பாட்டையும் ஆராய்ந்தால். இதை அடிப்படையாக வைத்துக் கொண்டு ஒழுக்கம், சுத்தம், களங்கம், மாசு என்றுப் பிதற்றிக் கொண்டிருக்கின்றன நம் அறிவுக் கொழுந்துகள்.

பாலியல் சுதந்திரம், பொறுப்புணர்வு ஆகியவை குறித்த புரிதல்கள் இன்று அத்தியாவசியமாகின்றன, எய்ட்ஸ் என்றக் கண்ணோட்டத்தில் மட்டுமல்லாமல் சமூக நலன் என்ற வகையிலும். குடும்பம், திருமணம் போன்ற ஏற்பாடுகளின் வருங்காலமும் இன்று கேள்விக்குறியாகிக் கொண்டு வருகிறது. தனிமனித உரிமைகள், அவற்றை உறுதிப்படுத்துவது என்றக் கோணங்களில் நோக்கினால் திருமண வாழ்க்கை இவைகளில் அதிக மதிப்பெண்கள் பெறுமா என்பது சந்தேகமே. மேலும், நம் பண்பாடுகள் வழிமொழிந்த படி, திருமணம் என்பது free sexஆ, licence to sexஆ? என்றக் கேள்வியும் தோன்றுகிறது. Isn't marriage an overkill, if all you want is just sex? (இதைத் தமிழ்ப்படுத்த முடியவில்லை :) ) திருமணத்தை விட எளிமையானத் தீர்வு இருக்கக் கூடுமல்லவா இதற்கு? இத்துடன் இன்று ஓரினச்சேர்க்கை என்றப் பரிமாணமும் சேர்ந்து கொண்டுள்ளது, ஆண் - பெண் திருமண உறவு என்ற ஏற்பாட்டைக் கேள்விக்கிடமாக்கும் வகையில். இவைகளைக் குறித்த மனம் திறந்த விவாதங்கள் இன்றைய நிலையில் தேவைப்படுகின்றன. பாலியல் உறவு என்பதே திருமணம் என்ற அமைப்பிற்குள்தான் நடைபெற வேண்டுமென்றக் கற்காலச் சிந்தனை நலிவடைந்து வருகிறது உலகின் பெரும்பாலானப் பகுதிகளில் (நம் பகுதியிலல்ல - நாம்தான் கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தைச் சேர்ந்தவர்களாயிற்றே)

இந்நிலையில், இக்கருத்தை நேர்மையான முறையில் ஒருவர் முன்வைக்க, அவருடன் உடன்பட்டவர்களும் அவருக்கு ஆதரவு தெரிவிக்க, நம் அறிவுக் கொழுந்துகள் எழுப்பினரே ஒருக் கேள்வியை. அதன் சாரம், "வீதிப் பெண்களுக்குப் பரிந்துரைக்கும் நியாயத்தை உம் வீட்டுப் பெண்களுக்கும் பரிந்துரைப்பீர்களா?" முட்டாள்த்தனமான இந்தக் கேள்வியை பெரும்பாலோர் சட்டை செய்யாததால் ஏற்பட்டத் துணிச்சலில், இக்கேள்வி பலரால் பலமுறை திரும்பத் திரும்பக் கேட்கப் பட்டு வருகிறது. இதற்கு விடையளிப்பதற்கு பதிலாக, இக்கேள்வியின் அடிப்படைக் காரணிகளை ஆராய்வது பொருத்தமானச் செயல்.

தனிமனிதச் சுதந்திரம் என்றால் அது அனைவருக்கும் பொருந்தக்கூடியதே என்பதே பொதுவானப் புரிதல். ஆண்களுக்கு மட்டும் என்றோ, பெண்களுக்கு மட்டும் என்றோ, மேலும் பாகுபடுத்தி உங்கள் வீட்டுப் பெண், எங்கள் வீட்டுப் பெண் என்றெல்லாம் தேர்ந்தெடுத்து வழங்கப் படுவதல்ல இவ்வுரிமை. இவ்வாறிருக்க, இத்தகைய பாகுபாடுகளை நினைவுப் படுத்தி ஏனிந்தக் கேள்விகள்? வீட்டுப் பெண்ணுக்கும் வீதிப்பெண்ணுக்கும் என்ன வேறுபாடு கண்டீர்கள்? வீட்டுப் பையன்களைப் பற்றியும் ஏன் கவலையுடன் விசாரிக்கவில்லை? நான் கேட்கிறேன், உங்கள் மகனோ, தமையனோ (தந்தையோ) திருமணமற்றப் பாலியலுறவு கொண்டால் அதில் உங்களுக்கு முழுச் சம்மதம்தானா? ஆமென்றால், பெண்களுக்கு மட்டும்தான் பண்பாட்டு வேலிகளா? வீட்டுப்பெண்ணைத் தங்கக் கூண்டுக்குள் அடைத்து விட்டு, வீதிப் பெண்ணைச் சூறையாடும் மனோபாவத்தைத்தானே உங்களை அறியாமலே வெளிப்படுத்துகிறீர்கள், உங்கள் 'புத்திசாலித்தனமானக்' கேள்வியால்? உங்கள் கேள்விக்கு விடையளிக்க வேண்டுமென்றால் நாங்களும் உங்களைப் போலவே சிந்திப்பவர்களாக இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாத நிலையில், எங்கள் ஆற்றாமையை மட்டும் தெரிவித்துக் கொள்கிறோம். மன்னித்துப் பொறுத்தருளுங்கள், நன்றி.

புதன், செப்டம்பர் 14, 2005

ஹமாஸ¤க்கு நன்றி!

தொலைக்காட்சியில் சானல் மேய்ந்து கொண்டிருக்கும் போது மாட்டியது இச்செய்தி. கடந்த சில வாரங்களாக இஸ்ரேல் - பாலஸ்தீனச் சூழ்நிலையை கவனித்து வருபவர்களுக்கு இஸ்ரேலின் அண்மைய காஸா வெளியேற்றம் பற்றித் தெரிந்திருக்கலாம். அரசியல் உள்நோக்கங்கள் எல்லாவற்றையும் கடந்து, இது பாராட்டப்பட வேண்டிய செயல். கடந்த 38 வருடங்களாகத் தனது ஆக்கிரமிப்பில் இருந்த காஸா பகுதியை ஒரு வழியாகக் காலி செய்து, பாலஸ்தீனர்களிடமே ஒப்படைத்தது இஸ்ரேல். இதற்கு யூத மதவெறியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆக்கிரமிப்புகளில் ஈடுபட்டு காஸாவுக்குள் அநியாயமாகக் குடிபுகுந்தவர்களும் இவர்களே. இவர்களைக் கட்டாயப்படுத்தி, காலி செய்ய வைத்தது இஸ்ரேலிய அரசு.

ஆனால் வெளியேற்றத்திற்கு முன்நிபந்தனையாக, இஸ்ரேல் காஸாவின் எகிப்துடனான எல்லையைத் தொடர்ந்து பாதுகாக்கும் என்றுக் கூறப்பட்டு வந்தது. இஸ்ரேல் அதனைக் கைவிட்டிருக்கும் போலத் தெரிகிறது. எல்லைப் பாதுகாப்பு பாலஸ்தீன அரசிடமே விடப்பட்டிருப்பதாக செய்திகள் கூறுகின்றன. இதனைச் சாதகமாகப் பயன்படுத்தி, ஹமாஸ் தீவிரவாத இயக்கத்தினர் எல்லைச் சுவரை குண்டுகள் கொண்டு தகர்த்திருக்கின்றனர். இவ்வாறு திறந்து விடப்பட்ட எல்லையைக் கடந்து, ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்களும் எகிப்தியர்களும், 38 வருடங்களுக்குப் பிறகு ஓருவரை ஒருவர் சந்தித்துக் கொள்கின்றனராம். மலிவு விலையில் ஆடுகள் வாங்க என்றொரு கூட்டம், மறந்து போன உறவுகளைப் புதுப்பித்துக் கொள்ள என்றொருக் கூட்டம், சும்மா வேடிக்கை பார்க்க என்று மற்றொருக் கூட்டம், இப்படி கிளம்பிய மக்கள் அலையை அடக்குவதற்கு அரும்பாடு பட்டுக்கொண்டிருக்கின்றனர் எகிப்திய மற்றும் பாலஸ்தீன அதிகாரிகள்.

நாளடைவில் நிலைமை 'கட்டுக்குள்' வரலாம். எல்லைச் சுவர் மீண்டும் ('அந்த' ஒப்பந்தம், 'இந்த' ஒப்பந்தம் என்று காரணங்காட்டி) புதுப்பிக்கப்படலாம், படாமலும் போகலாம் (பெர்லின் சுவரின் வீழ்ச்சியை நினைவில் கொள்க). ஆனால் இன்று அம்மக்களுக்கு சுவாசிக்கக் கிடைத்தது, முப்பத்தியெட்டு வருடங்களாக மறுக்கப்பட்டு வந்த ஓர் சுதந்திரக் காற்று. தடுப்புச்சுவர் இல்லாமல், தடையேதுமில்லாமல், மறுபக்கம் சென்று வர ஓர் அரிய வாய்ப்பு. இது பற்றிய செய்தித்துண்டுதான் நான் சானல் மேய்ந்த போது காணக்கிடைத்தது. இதோ செய்திக் குறிப்பு மற்றும் காட்சி. இக்காட்சியில், எல்லையைக் கடந்து வந்த இளைஞர் ஒருவரை அழைத்து கருத்து கேட்கிறார் நிருபர். அவரைக் கொஞ்சம் காத்திருக்குமாறு கூறிவிட்டு, பிறகு மண்டியிட்டு தரையை முத்தமிடுகிறார் இளைஞர். விடாது பின்பற்றும் நிருபருக்கு பதிலளிக்க முயன்று ஆனால் முடியாமல், பொங்கி வரும் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முயன்று அதிலும் தோற்றுப்போய், தன்னால் பேச முடியவில்லை என்று நிருபரிடமிருந்து தன்னை விடுவித்துக் கொள்கிறார் அந்த இளைஞர்.

அதிகாரம் படைத்த மூடர்களால் இவ்வுலகம் எவ்வளவு சிக்கல் மிகுந்ததாக ஆகி விட்டது!

வியாழன், செப்டம்பர் 08, 2005

எரிபொருள் விலையுயர்வு - மாற்று யோசனைகள்

தனது எரிபொருள் தேவையில் எழுபது சதவிகிதத்தை இந்தியா இறக்குமதிகளைக் கொண்டே சமாளிக்கிறது. உலகச் சந்தைகளில் அதன் விலை ஏறிக்கொண்டே போவதால், அரசுக்கும் அதன் விலையை ஏற்ற வேண்டியக் கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. இதனை எதிர்த்து சிலக் கூட்டணிக் கட்சிகளும் பல எதிரணிக் கட்சிகளும் போர்க்கொடியை உயர்த்தியுள்ளன. முன்பிருந்த administered pricing mechanism (APM) என்ற முறையை நீக்கி, உலகச்சந்தையின் ஏற்ற இறக்கங்களைப் பொறுத்து உள்நாட்டு எரிபொருள் விலையும் அமையும் வகையில் சீர்திருத்தத்தைக் கொண்டு வந்தது முந்தய அரசைச் சேர்ந்த, தற்போது எதிர்ப்பைத் தெரிவிக்கும், தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளே. அரசியலில் இதுவொன்றும் பெரிய விஷயமல்ல என்று வைத்துக்கொள்வோம். ஆனால் நாம் உணர வேண்டியது, முந்தய அரசின் நடவடிக்கை சரியானதே என்பதைத்தான் (அவர்களே இப்போது அதை எதிர்க்கும் முரண்பாட்டையும் தாண்டி). ஏனென்றால், அரசு தன் வரிப்பணத்தையோ, இலாபங்களையோ குறைத்துக் கொண்டால்தான் விலையேற்றத்தைத் தடுக்க முடியும். அவ்வாறு செய்தால் நிதி ஒதுக்கப்பட்ட எத்தனையோத் திட்டங்களுக்குப் பற்றாக்குறையேற்பட்டு, அவை நிறைவேற்றப்படாமல் போகும் சாத்தியமுள்ளது. மேலும் மேல்தட்டு வர்க்கத்தினரின் சொகுசு வாழ்க்கைமுறையை (குளிர்சாதனக் கார்கள், டீசல் ஜெனரேட்டர்கள் etc) அரசே மானியம் வழங்கி ஆதரித்தது போலாகும். மக்களின் வரிப்பணத்தை இதைவிட மேலான வகைகளில் செலவிடலாமல்லவா?

எரிபொருளின் விலையைக் கட்டுப்படுத்த முடியாது போலுள்ளது. ஆகவே, இதனை எதிர்கொள்ள மாற்று எரிபொருட்களைத் தோற்றுவிக்க வேண்டும், அல்லது தேவைகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும். மாற்று எரிபொருட்கள் என்றுப் பார்த்தால் மின்சாரக் கார்கள், ஸ்கூட்டர்கள் என்றொருப் பக்கம் கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கம் விவசாய விளைப்பொருட்களிலிருந்துத் தயாரிக்கப்படும் ethanol போன்றவை பெட்ரோலுக்கு பதிலாகப் பயன்படுத்தக் கூடிய வகையில் முன்வைக்கப்பட்டு வருகிறன (இதன் சாத்தியக்கூற்றைக் குறித்து எனக்குச் சந்தேகமாகத்தான் உள்ளது). மாற்று எரிபொருட்கள் பாராட்டப்பட வேண்டியவையென்றாலும் பரவலானதொரு தீர்வை அளிக்கக்கூடுமா என்பது சந்தேகமே. எரிபொருள் சிக்கனம் / தேவைகளைக் குறைப்பது என்பதே நீடித்த தீர்வை அளிக்குமென்றுத் தோன்றுகிறது. தேவைகளைக் குறைப்பதென்றால் பயணத்தை அல்லது போக்குவரத்தைக் குறைப்பதன்று. அதே செயல்பாடுகளை, குறைந்தளவு எரிபொருள் செலவில் நிறைவேற்றுவது என்று பொருள் கொள்ளலாம். இன்றைய எரிபொருள் தேவையை ஆராய்ந்தால், பெரும்பாலும் அது சரக்கு வாகனங்களுக்கும், மக்கள் பயணிக்கும் கார், மோட்டர் சைக்கிள், பேருந்து போன்ற வாகனங்களுக்கும் தேவைப்படுகிறது.

மக்கள் போக்குவரத்தை எடுத்துக் கொண்டால், பேருந்தைத் தவிர மற்ற வகையான வாகனங்கள் செலவிடும் எரிபொருளின் அளவு நியாயப்படுத்த முடியாததே என்றுக் கூறலாம். ஒருவரோ அல்லது இருவரோ அலுவலகம் சென்று திரும்புவதற்குள் எரிபொருள் சில லிட்டர்கள் செலவாகி விடுகிறது. இந்தச் செலவு அவர்களால் எளிதில் எதிர்கொள்ளக் கூடியதாக இருக்கலாம். ஆனால், விஷயம் அத்துடன் நின்று விடுவதில்லை. அவர்களது ஆடம்பரத்திற்காக அரசு அகலமானச் சாலைகள் போடவேண்டும், போக்குவரத்தைச் சமாளிக்க வேண்டும், விபத்துக்கள் நேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும், நேர்ந்தால் அவசர மருத்துவ உதவி போன்ற வசதிகளைத் தயார்ப் படுத்த வேண்டும், பெருமதிப்புள்ள அந்நியச் செலாவணியைச் செலவழித்து (நாட்டின் வர்த்தகச் சமன்பாட்டைக் குலைக்கும் வகையில்), வெளிநாடுகளிலிருந்து எரிபொருளைத் தருவிக்க வேண்டும், பிறகு இவ்வாகனங்கள் உமிழும் நச்சுப் புகையால் ஏற்படும் பின்விளைவுகளை இச்சமூகமே ஒட்டுமொத்தமாக எதிர்கொள்ள வேண்டும். ஆக, சில லிட்டர்களுக்கானப் பணத்தை வீசியெறிந்துவிட்டுச் சென்று விடுவதால் தம் கடமை / பொறுப்பு முடிந்துவிட்டது என்று எவரும் தம்மைத் தாமே ஏமாற்றிக்கொள்ள முடியாது.

இதற்கு நேரெதிராக, வெகுஜனப் போக்குவரத்து வாகனங்களான பேருந்துகள், புறநகர் இரயில்கள் ஆகியவை குறைந்த எரிபொருள் செலவில் வெகு அதிகமான எண்ணிக்கையில் மக்களை ஏற்றிக் கொண்டு செல்வதைக் காணலாம். இவற்றை வலுப்படுத்துவதில்தான் இருக்கிறது அரசின் திறமை, பொறுப்பு ஆகியவை. இவற்றின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி நம்பத் தகுந்தச் சேவைகளாக இவற்றை உருமாற்ற அரசு ஆவன செய்ய வேண்டும். பேருந்துச் சேவையில் தனியார்மயமாக்கம் அல்லது போட்டியிடும் தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி, போன்ற நடவடிக்கைகள் பலனளிக்கக்கூடும். அது போலவே, இரயில்களும் அதிகரிக்கப்பட்டால் (மற்றும் தற்போது இல்லாத நகரங்களில் அது நிறுவப்பட்டால்) அதன் குறைவானப் பயண நேரம் காரணமாக அது சிறந்தவொரு போக்குவரத்துச் சாதனமாக உருவெடுக்க வாய்ப்புள்ளது. எல்லா இடங்களையும் இரயில் சேவையைக் கொண்டு இணைப்பது இயலாததே. ஆகவே, last mile இணைப்பிற்கு (பேருந்து போன்ற) சாலைப் போக்குவரத்து வசதி வழங்கப்பட வேண்டும். இவையிரண்டின் கூட்டுக் கலவை, ஒரு நம்பகமான, விரைவான மற்றும் சுகமானப் பயண அனுபவத்தை மக்களுக்கு அளிக்கும் வாய்ப்பிருக்கிறது.

மேற்கூறிய மாற்று ஏற்பாடுகளைச் செய்த பின்னர், மக்கள் தம் சொந்த வாகனங்களை விட வெகுஜன வாகனங்களையே நாடும் சூழ்நிலை உருவாகலாம். அதனை உறுதிப்படுத்தும் வகையில், மற்றும் மக்கள் சொந்த வாகனங்களை பயன்படுத்துவதற்கு ஊக்குவிப்பு கிடைக்காத வகையில், அவற்றின் மீது அதிகப்படியான வரிகளை விதிக்க வேண்டும். கடுமையான நடவடிக்கையாகத் தோன்றினாலும், இது சிங்கை போன்ற இடங்களில் நடைமுறையில் உள்ளச் சட்டமே என்று அறிகிறேன். பலரும் தம் சொந்த வாகனத்தைத் துறந்துவிட்டு, வெகுஜனப் போக்குவரத்தைப் பயன்படுத்தத் தொடங்கினால், அதனாலுண்டாகும் பலன்கள் பலப்பல - எரிபொருள் சேமிப்பு, சாலைகளில் நெரிசல் குறைவு, மாசுக் கட்டுப்பாட்டில் முன்னேற்றம், வாகனம் ஓட்டும் பரபரப்பில்லாமல் மக்கள் நிம்மதியாகத் தம் பயணங்களை மேற்கொள்வதால் கிடைக்கும் உடல்நலம் மற்றும் மனஅமைதி, என்று நீளமாகப் பட்டியலிடலாம்.

இன்னொரு நடவடிக்கை, மக்கள் மத்தியில் மிதிவண்டிகளின் பயன்பாட்டை ஆதரிப்பது, அவற்றைக் கொண்டு மக்கள் அருகாமையிலிருக்கும் இடங்களுக்குப் பயணிக்க ஊக்குவிப்பது. இவற்றின் மீதுள்ள விற்பனை வரிகளை விலக்கலாம். வெகு இலகுவாக ஓட்டக்கூடிய அதி நவீன (geared) மிதிவண்டிகளைத் தயாரிக்க, அல்லது இறக்குமதி செய்ய உதவலாம். நான் அண்மையில் கேள்விப்பட்ட (மற்றும் இணையத்தில் மேய்ந்த) ஓரு அருமையானச் சாதனம் - கனக்குறைவான, மடக்கக் கூடிய மிதிவண்டிகள். சுமார் 10 கிலோ எடையுள்ள இவற்றை மடக்கி, கையோடு எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லக்கூடுமாம். இரயில் / பேருந்து நிலையம் வரை இந்த மிதிவண்டியில் சென்று, பின்னர் அதனை மடக்கிக் கையிலெடுத்துக் கொண்டு இரயிலிலோ பேருந்திலோ பயணத்தைத் தொடரலாம். மறுமுனை வந்ததும் மடக்கிய மிதிவண்டியை விரித்துக் கொண்டு அதனை மிதித்தே போகுமிடத்தைச் சென்றடையலாம். இத்தகைய மாற்று வசதிகள் இருக்கும்போது, சொந்தக் காரில் சென்று எரிபொருளை விரையம் செய்வது அநியாயமாகப் படுகிறது. மிதிவண்டிகளை ஓட்டுவதால் கிடைக்கும் உடற்பயிற்சியைக் குறித்து இங்கு விளக்கத் தேவையில்லையென்று எண்ணுகிறேன்.

இப்போது சரக்குப் போக்குவரத்தில் எரிபொருள் சிக்கனத்தைப் பற்றிப் பார்ப்போம். அதிகம் கூறுவதற்கில்லை, ஆனாலும் என்னைக் கவர்ந்த ஒரு திட்டம் இதோ. லாரிகள் சாலைகளில் ஓடாமல் ஜம்மென்று இரயில்களின் மீதேறி சவாரி செய்வதேனோ? அங்குதான் புதுமையே. நெடுஞ்சாலைகளில் ஓடி, டீசலை விரையம் செய்து, புகையைக் கக்கி, காற்றை மாசு படுத்தி, மெதுவானப் பயணத்தால் சரக்குச் சொந்தக்காரர்களின் நேரத்தையும் வீணாக்கி....... என்று பழைய முறையில் சரக்கைச் சேர்ப்பித்த காலம் மாறிக் கொண்டு வருகிறது. கொங்க்கன் இரயில்வே அறிமுகப்படுத்திய இத்திட்டத்தின் கீழ், லாரிகள் இரயில்களிலேறிக் கொண்டு, வெகு விரைவில் மறுமுனைக்குக் கொண்டுச் செல்லப் படுகின்றன. அங்கு சென்றதும் அவை இறங்கிக் கொண்டு, தாம் செல்ல வேண்டிய முகவரிக்கு, சாலை வழியாகச் சென்று விடுகின்றன. நம் நாட்டில் இத்தகைய திட்டத்தைத் தீட்டுபவர்களும் இருக்கிறார்கள். அதேபோல், golden quadrilateral போன்ற அறிவுஜீவித்தனமானத் திட்டங்களைத் தீட்டுபவர்களும் இருக்கிறார்கள், என்ன செய்வது?

திங்கள், செப்டம்பர் 05, 2005

சமன்படாத உலகம்

சென்றப் பதிவில் திரு.Thomas Friedmanஇன் சமன்படும் உலகம் பற்றிய எனது மேலோட்டப் பார்வையை வழங்கியிருந்தேன். இன்று, அவரது நூலைத் தொடர்ந்துப் படித்து முடித்ததன் விளைவாக, ஒரு கருத்தியலை முழுமையாகப் புரிந்து கொண்டதோடல்லாமல், அதற்கு என் மனதில் எழுந்த எதிர்வினைகளையும் தொகுத்து வழங்குகிறேன். உலகம் சமன்படுவதைப் போற்றிப் பாடிய பின், இச்சமன்படுதலில் பங்குபெற முடியாத அல்லது விரும்பாத மக்கள், மற்றும் அதன் பரவலுக்குப் பாதகமானச் சூழல்களைக் குறித்தும் நூலாசிரியர் விவரிக்கிறார். என்னால் ஏற்றுக்கொள்ள இயலாதப் பலக் கருத்துக்களின் தெளிப்பாக அமைந்தன இவ்விவரிப்புகள். ஆகவே இப்பதிவைக் கொஞ்சம் காட்டமாகவே எழுத வேண்டியுள்ளது.

முதலில் இந்தியா, சீனா, ஆப்பிரிக்கா போன்றப் பகுதிகளில் வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழும் மக்கள். Too sick என்று ஆசிரியரால் அழைக்கப் படும் இவர்களை, முன்னேற்றமும் சமன்படும் உலகமும் அண்டுவதில்லை. இவர்களின் பிரச்சினைகளாக நோய், பசி, தீண்டாமை, வாய்ப்பின்மை என்றெல்லாம் பட்டியலிட்டு விட்டு, இதற்குப் பரிகாரமாக Bill Gates Foundationஇன் நன்கொடை / மேம்பாட்டு முயற்சிகள், இதர NGOக்கள் கிராமப்புறங்களில் மேற்கொள்ளும் தருமப் பணிகள் போன்றவற்றை முன் வைக்கிறார். அதாவது, சமன்பட்ட உலகில் பெருவெற்றியடைந்தோர், பின்னர் மனமிறங்கி, பின்தங்கிய சமூகங்களுக்குப் போடும் பிச்சையால் உண்டாகும் வாய்ப்புக்களைப் பயன்படுத்தி, சமன்படாத உலகிலுள்ளோர் தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டுமாம். அதன் பிறகு இவர்களும் சமன்பட்ட உலகில் பங்கு பெற்றுப் போட்டியிடக் முடியுமாம். இப்படித் தலையைச் சுற்றி மூக்கைத் தொடும் தீர்வுக்கு பதிலாக, எனக்குத் தோன்றும் நேரடியானத் தீர்வானது, மக்களால் ஆட்சியில் அமர்த்தப்படும் அரசுகள் பல்நாட்டு நிறுவனங்களுக்கும் முதலாளித்துவ முதலைகளுக்கும் அடிவருடிகளாகச் செயல்படாமல், பின்தங்கியவர்களின் பிரதிநிதிகளாகச் செயல்பட்டு அவர்களுக்குரிய நியாயமான (கல்வி, மருத்துவ வசதிகள், விளைநில விநியோகம், போன்ற) வாய்ப்புக்களைப் பெற்றுத் தருமானால், அதுவே பலரை வறுமைக் கோட்டிற்கு மேல் கொண்டு வர வழி வகுக்கலாமல்லவா? இதற்குத் தேவையான accountability, transparency ஆகியவை அரசுகளிடம் உள்ளதா, இல்லையென்றால் அதனைச் சரிபடுத்துவது எப்படி, என்ற வகையிலல்லவா ஆராயவேண்டும்? மேலும் அரசுகள் தாமாகவே இத்திசையில் எடுத்து வைக்கும் ஒன்றிரண்டு சிறு அடிகளையும் welfare policy / dole out என்றெல்லாம் இழிவு படுத்துபவர்களும் இந்நூலாசிரியரைப் போன்றவர்கள்தானே? "The world would be entirely flat only if all these people are brought into it" என்ற முத்தை உதித்திருக்கும் ஆசிரியர், welfare stateஐ ஆதரிக்காததேன்? Bill Gatesஐயும், NGOக்களையும் விட welfare stateகளால் அதிகம் சாதிக்க முடியுமென்பதை அறியாதவரா அவர்? அல்லது welfare stateகளால் முதலாளித்துவத்திற்கு இடைஞ்சல்கள் அதிகம் என்பதனாலா? இதுவே முரண்பாடு #1.

அடுத்ததாக, சமன்படாத உலகில் வாழ்பவர்கள் என்று ஆசிரியரால் அடையாளங் காணப்படுபவர்கள் too disempowered என்று விவரிக்கப்படும் அதிகாரமற்ற வர்க்கத்தினர் - கிராமப்புறங்களில் விவசாயக் கூலி வேலை மற்றும் இதரக் கீழ்மட்ட வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்கள். வறுமைக் கோட்டிற்கு மேல், ஆனால் கணிமைக் கோட்டிற்குக் (digital divide) கீழ் என்றத் திரிசங்கு உலகில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். உலகின் மிகப் பெரிய மக்கட்தொகையைக் கொண்ட குழுவும் இதுதான். இவர்களிடம் சமன்பட்ட உலகில் பங்குபெறுவதற்கான வாய்ப்புகள், வசதிகள், ஆற்றல்கள் ஆகியன இல்லாததால் இவர்கள் மிக அதிக அளவில் பின்தங்கி விடும் சாத்தியமுள்ளது. இதற்கும் நம் ஆசிரியர் வழங்குவது NGO மருந்தே. நல்ல வேடிக்கை. மேற்கூறிய அதிகாரமற்ற வர்க்கத்தை வலுப்படுத்தும் வகையில் செயல்பட்டு வரும் வெனிசுயேலா அரசாங்கம் போன்ற உதாரணங்கள் குறிப்பிடப்படாததும் ஏற்றுக்கொள்ள முடியாததே.

மூன்றாவது வகையினர் too frustrated எனப்படும் அல் கயீதா வகைத் தீவிரவாதிகள். அவர்களுக்கு மேற்கத்திய நாடுகள் என்றாலே Britney Spearsஇம், Jennifer Lopezஉம்தான் கண்ணில் படுகிறார்களாம். அவர்களின் பார்வையில் மேற்கத்தியர்கள் அளவற்ற சுதந்திரம் படைத்தப் பாழடைந்த சமூகமாக, சாத்தானின் வழித்தோன்றல்களாகத் தெரிகின்றனராம். நல்ல சப்பைக்கட்டு. இஸ்ரேல் என்ற ஒரு சக்தி குறித்தும் பாலஸ்தீனர்கள் என்ற சமூகத்தைக் குறித்தும் ஆசிரியர் வசதியாக மறந்து விடுகிறார். நூற்றாண்டுக்கும் மேலாக மேற்கத்திய சக்திகள் மத்தியக் கிழக்கில் மேற்கொண்டுள்ளத் தேவையில்லாத் தலையீட்டின் விளைவே அல் கயீதா என்று யாராவது அவரிடம் சென்று உரக்கக் கூறவேண்டும். ஈராக் போர் அமெரிக்காவால் நியாயமற்ற அநாகரீக முறையில் மேற்கொள்ளப் பட்டது என்ற உண்மை அவரால் குறிப்பிடப்படவுமில்லை. அதிகப்பிரசங்கித்தனமாக மற்றவர்களின் மனநிலை குறித்து ஆராய்ச்சிகள் வேறு. அவரது அமெரிக்க அயோக்கியத்தனம் வெட்டவெளிச்சமாகத் தென்படுவதென்னமோ உண்மை - மனநிலை பற்றிப் பேச்சு வந்ததால் கூறுகிறேன்.

நான்காவதாக அவர் குறிப்பிடுவது, too many Toyotasஆம். "எங்கள மாதிரியே நீங்களும் காரோட்ட ஆரம்பிச்சிட்டா எல்லாரும் பெட்ரோலுக்கு எங்க போறதாம்?" என்ற நியாயமானக் கேள்வியை முன்வைக்கிறார். ஆகவே, மூன்றாம் உலகப் பொதுமக்களே, உங்கள் காரோட்டல்களைக் கொஞ்சம் அடக்கி வாசியுங்கள். அவரது உயர்ந்த நோக்கத்தைப் புரிந்து கொள்ளாமல் குதர்க்கம் செய்யும் என்னைப் பார்த்து எனக்கே அவமானமாகவுள்ளது. அவர் சுற்றுப்புறச் சூழல் என்றக் கோணத்தில்தான் அவ்வாறு கூறுகிறார் என்பதைத் தெளிவுப் படுத்தி விடுகிறேன். இப்பொழுதும் உலகில் மிகுதியாக மாசடைந்த இருபது நகரங்களில் பதினைந்து சீனாவில்தான் உள்ளனவாம். இவ்வாறு அமெரிக்கர்களுக்கு இணையாக சீனர்களும் இன்னும் சில வருடங்களில் இந்தியர்களும் ருஷ்யர்களும் சேர்ந்து கொண்டு இவ்வுலகின் காற்று மண்டலத்தை மாசுப் படுத்தினால், நாம் நம் வருங்காலச் சந்ததியினருக்கு விட்டுச் செல்லும் உலகம் விரும்பத்தக்க ஒன்றாக இருக்காது என்றுதான் நம் மதிப்பிற்குரிய அமெரிக்கரான திரு.Friedman கூறிகிறார். உதைக்கும் ஒரு சிறுத் தகவல் என்னவென்றால், திருவாளர்.ஜார்ஜ் புஷ் பதவியேற்றவுடன் முதலில் ஆற்றியத் திருக்காரியங்களில் ஒன்று, Kyoto protocolஇன் கீழ் அமெரிக்காவின் முந்தய அரசு அளித்த சுற்றுப்புற மாசுக் கட்டுப்பாடு குறித்த உத்தரவாதங்களைத் திரும்பப் பெற்றுக் கொண்டதே. இத்தகவல் பற்றிய ஒரு சிறுக் குறிப்பிடல் கூட இல்லாமல் இந்நூலில் இருட்டடிக்கப் பட்டதுதான் வருத்தமான செய்தி. எங்களுக்கு அறிவுரை கூற உங்களுக்கு 'ஹக்கு லேதண்டீ' என்பதுதான் இதற்கெல்லாம் சரியான எதிர்வினை.

இன்னொரு வேடிக்கையானக் கருத்தை இங்குக் குறிப்பிட்டே ஆகவேண்டும். ஆசிரியருக்குப் போரென்றால் பிடிக்காதாம் (எனக்கும்தான்). போர் நிகழ்வுகள் இவ்வுலகம் சமன்படுதலுக்குத் தடையாகவுள்ளதாம், ஒப்புக்கொள்கிறேன். இதற்குத் தீர்வென்னவென்றால் அமெரிக்க விரைவுணவு நிறுவனமான McDonald's எல்லா நாடுகளிலும் கடை திறக்க வேண்டுமாம். ஏனென்றால், McDonald's கடை திறந்த நாடுகள் ஒன்றோடொன்றுப் போரிட்டதாகச் சரித்திரமே இல்லையாம். இந்த புருடாவை எப்படி வகைப் படுத்துவது என்றுக் குழம்பிப் போயிருக்கிறேன். ஓரு வேளை தொடர்ந்து McDonald'sஇல் உண்டதால் திராணியற்றுப் போய்விடுவதால் மக்கள் போரிட முனைவதில்லையோ என்னவோ. வேடிக்கையான இக்கருத்தை கடுமையானத் தொனியில் இவ்வாறு மாற்றிக் கூறுகிறார்: எந்தவொரு நாடு உலக வர்த்தகச் சங்கிலியில் (global supply chain) பெருவாரியாகப் பங்கு பெறுகிறதோ, அது போரெடுப்புகளில் ஈடுபடுவதைவிட உற்பத்தியைப் பெருக்குவதிலேயே அதிக கவனம் செலுத்துமாம். ஏனென்றால், அரும்பாடுபட்டு உலக வர்த்தகத்தில் தற்போதைய நிலையை அடைந்த அந்த நாடு, அந்த முயற்சிகளனைத்தும் வீண்போகும் வகையில் ஒரு போரைத் தொடுத்து, அதன் விளைவாக வர்த்தகத்தில் பின்தங்கிவிடும் சூழ்நிலையை ஒருபோதும் விரும்பாதாம். If only things were this simple in reality. இக்கருத்தின் அடிப்படையில் சீனாவுக்கும் தைவானுக்கும் போர் மூளாது என்று நம்பிக்கையுடன் கூறுகிறார். ஏனென்றால் அவையிரண்டும் உலக வர்த்தகத்தில் பெருமளவில் ஈடுபட்டுள்ளனவாம். இந்தியாவுக்கும் பாக்கிஸ்தானுக்கும் அதே வகையில் போர் மூளும் சாத்தியம் குறைவாம். பாக்கிஸ்தானுக்கு உலக அரங்கில் அதிக ஈடுபாடு இல்லையெனினும், சில வருடங்களுக்கு முன், போர் மூளும் ஆபத்து இருந்த போது, இந்தியாவின் Wipro, Infosys போன்ற நிறுவனங்களுடன் வர்த்தகம் செய்து வந்த அமெரிக்கப் பல்நாட்டு நிறுவனங்கள், போர் மூண்டால் வேறு இடம் பார்ப்பதாகப் பூச்சாண்டிக் காட்டினார்களாம். அதற்குப் பயந்து, Wipro, Infosys ஆகிய நிறுவனங்களின் வற்புறுத்தலின் பேரில் இந்தியா, தன் போரெடுக்கும் முடிவைக் கைவிட்டதாம். (applause, applause) எல்லாம் சரிங்க, ஆனா நீங்க யுகோஸ்லாவியா மேலயும், ஆப்கானிஸ்தான் மேலயும், ஈராக் மேலயும் போர் தொடுக்கறீங்களே, உங்க நாட்டுல McDonald's கிடையாதுங்களா? இல்ல உலக வர்த்தகத்துல நீங்க ஈடுபடல்லியா? இல்ல இதெல்லாம் மத்த நாட்டுக்காரங்களுக்குத்தானா?

இத்தகைய குறைபாடுகளையும், பற்றாக்குறைகளையும் தாண்டி இப்புத்தகம் படிக்க வேண்டியவொன்று என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. (ஆனால் படிக்கும் போது உங்கள் பகுத்தறியும் ஆன்டென்னாக்களைத் தூக்கி விட்டுக் கொள்ளவும்) இன்றைய மற்றும் வருங்கால வாழ்வியல்களைக் குறித்துப் பலக் கேள்விகள், பல விடைகள், அவற்றில் சில ஏற்றுக் கொள்ள முடியாத வகை, சில கருத்து கூற முடியாத வகை, இன்னும் சில மறுக்க முடியாத வகை, என்று இந்த வாசிப்பனுபவம் பயனுள்ளதாகயிருந்தது. ஒரு inclusive வருங்காலத்தை உருவாக்குவதற்கு என்னென்ன சக்திகள், முயற்சிகள் வலுப்பெற வேண்டியுள்ளன, எந்தெந்த சக்திகள் வீழ்த்தப்பட வேண்டியுள்ளன என்பதில் தெளிவு கிடைத்தால், அந்த இலக்கை நோக்கி அர்த்தமுள்ள வகையில் பயணிக்க வாய்ப்புள்ளது.

வெள்ளி, செப்டம்பர் 02, 2005

சமன்படும் உலகம்

அறிந்தப் பலத் தகவல்களை அண்மையில் ஒரு புத்தக வடிவில் விலாவாரியாகப் படிக்க நேரிட்டது. தெரிந்த விஷயங்களேயென்றாலும், ஆர்வக் கோளாறால் உற்சாகத்தோடு படித்த கையோடு, அதனைப் பற்றிய விமர்சனத்தையும் இங்கு வைக்கிறேன். Thomas Friedman என்னும் அமெரிக்கப் பத்திரிகையாளர் எழுதிய The World is Flat என்றப் புத்தகமே அது. அதன் வாயிலாக ஆசிரியர் இவ்வுலக மக்களுக்குக் கூறிக்கொள்ள விரும்புவது - உலகம் சமன்பட்டுக் கொண்டிருக்கிறது - என்ற மாபெரும் உண்மையையே. புத்தகத்தின் தலைப்பு (மற்றும் அட்டைப்படம்) 'உலகம் உருண்டையானது' என்ற அறிவியல் உண்மைக்கு மாற்றுக் கருத்துத் தெரிவிப்பதைப் போலத் தோன்றினாலும், அவரது நோக்கம் அதுவல்ல. உலகில் ஏற்றத் தாழ்வுகள் மறைந்து சமன்பாடு ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றது என்னும் கருத்தையே இத்தலைப்பு குறிக்கிறது. இந்த முடிவுக்கு ஆசிரியர் எவ்வாறு வந்தார் என்பதை இப்புத்தகம் முழுவதிலும் விளக்குகிறார்.
முதலில் பல உதாரணங்களை முன்வைக்கிறார். உலகப் பொருளாதாரத்தில் நம் தகவல் நுட்ப நிபுணர்களின் பங்களிப்பு, அமெரிக்காவிலிருந்து சீனாவுக்கும் ஏனைய வளரும் நாடுகளுக்கும் இடம்மாறியத் தொழிற்சாலைகள், உற்பத்தியும் சேவைகளும் பல மடங்கு அதிகரிக்கப்படுவதனால் ஏற்படும் சிக்கனம் (economy of scale), என்றெல்லாம் அடுக்கிக் கொண்டே போய், கடைசியில் அவர் கூறுவது, மிகக் குறைந்த விலையில் எங்கு / எவ்வாறு உற்பத்தி அல்லது சேவை வழங்குதல் சாத்தியமாகுமோ, அங்கே / அவ்வாறே அது மேற்கொள்ளப்படும் என்பதே. ஆதலால் உலகின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் செல்வம் பரவ வாய்ப்பிருக்கிறது, அவை சில கட்டாயங்களை / தேவைகளை நிறைவேற்றினால், என்பதே அவரது கண்டுபிடிப்பு அல்லது நம்பிக்கை என்றுக் கூறலாம்.

இது காலகாலமாக உலக வர்த்தக நிறுவனம் (WTO) மற்றும் உலக வங்கியைச் சார்ந்த நிபுணர்களால் உலகமயமாக்கத்திற்கு ஆதரவாகக் கூறப்பட்டு வரும் வாதமேயென்றாலும், இந்த நூலாசிரியரின் கூற்றில் ஒரு அடிப்படை வேறுபாடுள்ளது. அவரது கூற்றுப்படி, இத்தகைய சமன்படுத்தல் கடந்த சில ஆண்டுகளில் நடைபெற்ற சில முக்கியமான நிகழ்ச்சிகளின் விளைவே. அவர் பட்டியலிடும் பல காரணிகள் தகவல் நுட்ப வளர்ச்சிக்குத் தொடர்புடையவை. உ-ம், இணையத்தின் வளர்ச்சி, வேறுபட்ட தகவலமைப்புகளின் கூட்டுறவு, தானியங்கும் வர்த்தகச் செயல்முறைகள் (workflow automation), தொடர்பாடல் நுட்பத்தில் வளர்ச்சி, கணிமை மலிவடைந்ததால் பரவலாக்கப்பட்ட அதன் பயன்பாடு, ஆகியன. இவற்றுடன் அவர் சேர்த்துக் கொள்ளும் இதர உலக நிகழ்வுகள், இடதுசாரி அரசுகளின் வீழ்ச்சி, சீனா WTOவில் இணைந்தது மற்றும் தனி மனிதனின் எழுச்சி (உரிமைகள், ஆற்றல்கள், வாய்ப்புகள், கருவிகள்) ஆகியவை. இவையனைத்தும் சேர்ந்து, இவ்வுலகம் வெகு வேகமாகச் சமன்படுவதற்குக் காரணமாயின என்பதே ஆசிரியரின் வாதம். இக்காரணங்களால், உலகச் சமூகங்கள் தடைகளின்றி, மற்ற சமூகங்களோடு வர்த்தகத்தில் போட்டியிடும் மற்றும் கூட்டுறவாடும் சக்தியைப் பெற்றன, அல்லது பெறக்கூடும் என்று இந்நூலாசிரியர் கருதுகிறார். அதி நுணுக்கமான, சிறப்பாற்றல்கள் தேவைப்படும் செயல்களைத் தவிர, மற்ற எல்லா வேலைகளும் செயல்பாடுகளும், மிகக் குறைந்த ஊதியங்கள் நடைமுறையிலுள்ள நாடுகள் / சமூகங்களை நோக்கியே நகரும் என்றக் கசப்பான உண்மையை அமெரிக்கர்களுக்கும் மற்றவர்களுக்கும் இனிப்புத் தடவி வழங்குகிறார். அவர் சந்தித்துப் பேசிய Sony Corp.இன் தலைவர் Nobuyuki Ideiஇன் கூற்றுப்படி, தற்போது வர்த்தக - நுட்பவுலகில் நிகழ்ந்து கொண்டிருக்கும் மாற்றமானது, முன்பொரு காலத்தில் ஒரு விண்கல் அதிவேகத்துடன் இவ்வுலகின் மீது விழுந்து எல்லா dinosaurகளையும் முற்றிலும் அழித்த நிகழ்வுக்கொப்பானதாகும். முன்னெச்சரிக்கையோடு செயல்படாத நபர்கள் / சமூகங்களுக்கு, முன்பு dinosaurகளுக்கேற்பட்ட நிலைதான் காத்திருக்கிறது என்ற எச்சரிக்கை சொல்லாமல் சொல்லப்படுவதை கவனிக்க.

இத்தகைய வேலையிழப்புகளையும் தாண்டி, எவ்வாறு இச்சமன்படுதல் எல்லா சமூகங்களுக்கும் பயனளிப்பதாக இருக்குமென்று விளக்கு விளக்கென்று விளக்குகிறார். இத்தகைய விளக்கங்களில் எனக்கு ஏற்புடையதாகப்பட்டது, வேலையிழப்புகள் நேரும் அதே நேரத்தில் புதிய (முன்பு நடைமுறையில் இருந்திராத) வேலைகளும் துறைகளும் உருவாகலாம், இவை மனிதத்தின் அதிகரித்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு இன்றியமையாதவைகளாகவும் உருவெடுக்கலாம், என்பதே. உ-ம், சில வருடங்களுக்கு முன்பு எவரும் அறிந்திராத, இணையத்தைச் சார்ந்த எவ்வளவு வேலைவாய்ப்புகள் அண்மைக் காலங்களில் உருவாகியுள்ளன?

இச்சமன்படும் உலகை எதிர்நோக்கும் கட்டாயத்திலுள்ள அமெரிக்காவின் கல்வியமைப்பு எந்தளவுக்குத் தயார் நிலையிலில்லை என்பதையும் விரிவாக எடுத்துக் கூறுகிறார். இதனை உடனடியாகத் திருத்தவில்லையெனில் இன்னும் 10 - 15 ஆண்டுகளில் அமெரிக்கா நுட்ப வளர்ச்சியில் பின்தங்கி விடுமென்று எச்சரிக்கை விடுக்கிறார். இதனைப் படிக்கும்போது நாமும் ஏறத்தாழ அதே நிலையில் இருப்பதை உணரலாம். ஆக, இது அமெரிக்காவுக்கு மட்டும் விடப்பட்ட எச்சரிக்கையன்று. நம்மைப் போன்ற அசட்டையாக இருப்பவர்களுக்கும் சேர்த்தே விடுக்கப்பட்ட எச்சரிக்கையே. நுட்ப வளர்ச்சிக்கு அடிப்படைத் தேவையான விஞ்ஞான மற்றும் கணிதத் துறைகளில் மேதமை, ஆய்வுத் திறன் மற்றும் வசதிகள், ஆய்வறிக்கை வெளியீடுகள், அறிவுடைமை (intellectual property) வளர்ப்பு ஆகியவற்றில் நாம் இன்னும் காத துரம் பயணிக்க வேண்டியுள்ளது. இப்புத்தகத்திலுள்ள, சீனாவின் கல்வித்துறையின் சாதனைகளைப் பற்றிய விவரிப்பு, நம் கல்வியாளர்களுக்கும் திட்டங்கள் தீட்டுபவர்களுக்கும் வயிற்றில் புளியைக் கரைப்பது நிச்சயம்.

மேலும் சில அத்தியாயங்களைப் படிக்க வேண்டியுள்ளது. புதியக் கருத்துக்கள் ஏதேனும் தென்பட்டால் இன்னொருப் பதிவாக இடுகிறேன். எளிய, படிக்கத் தூண்டும் நடை. அத்தியாவசியமானத் தகவல்கள். மாற்றுக் கருத்துக்கள் இருந்தாலும், இது வர்த்தக மற்றும் நுட்பத் துறையிலுள்ளவர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூலாகும் என்றுக் கருதுகிறேன். வருங்காலச் சந்ததியினரின் வாழ்வுமுறையை வடிவமைக்கும் பெற்றோர்களுக்கும், இந்நூல் சில உண்மைகளை உணர்த்தக் கூடும்.

ஞாயிறு, ஆகஸ்ட் 14, 2005

காணப்படாத ஒற்றுக்களும், இதர மொழி வன்முறைகளும்

எனக்குப் பயனளித்தத் தகவலொன்றை இங்குப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். வலைப்பதிவுகளிலும் மடற்குழுக்களிலும் 'காதல் கவிதை', 'தமிழ் பாட்டு', 'பங்கு சந்தை', 'தேச துரோகி'......... என்றெல்லாம் எழுதிவிட்டுப் போய்விடுகிறோம். நானும் இதற்கு விதிவிலக்கல்ல. இணையத் தமிழுக்கு ஏற்பட்டிருக்கும் இத்தகைய நெருக்கடி நிலையை எப்படி எதிர்கொள்வது?

எனக்குத் தோன்றியவொரு யோசனை - back to basics. கூகிளியதில் இந்த வலைத்தளம் மாட்டியது. பன்னிரண்டே பக்கங்கள்தான். அதிக நேரம் பிடிக்காது. மொத்தத்தையும் படித்து முடியுங்கள். வெகு நாட்களாக இருந்து வந்த அனைத்துச் சந்தேகங்களையும் தீர்த்துக் கொள்ளுங்கள். முடிந்தால், உங்களுக்குத் தெரிந்த மற்ற இணைய எழுத்தாள / வலைப்பதிவ நண்பர்களுக்கும் இதனைப் பரிந்துரை செய்யுங்கள்.

மற்றது, அறிந்தோ அறியாமலோ எழுத்தில் புகுந்துவிடும் எழுத்துப் பிழைகள். 'அன்னியர்' பதிவுகளில் பல நாட்களாக வலம் வந்து கொண்டிருந்தார். நானும் 'பொருமை'யோடு சில இடங்களில் சுட்டிக்காட்டினேன். இருந்தும் 'ஆவரை' (இது, தமாஷானவொரு அ-ஆ பிழை) வீழ்த்த முடியவில்லை. வேறு சிலப் பிழைகளும் அடிக்கடித் தென்படுகின்றன, இப்போதைக்கு 'நியாபக'த்திற்கு வர மறுக்கிறது. இந்தப் 'பிண்ணனி'யில், நான் முன்வைக்க விரும்பும் யோசனை அல்லது வேண்டுகோள் - ஒரு நல்லத் தமிழ்-ஆங்கில அகராதி ஒன்றை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் அதிகம் பயன்படுத்தாதச் சொற்களை உபயோகிப்பதற்கு முன் ஒருமுறை அவற்றை அகராதியில் தேடிக் கண்டுபிடித்து அவற்றின் எழுத்துக்களையும் பொருட்களையும் சரிபாருங்கள். இப்படிச் செய்வதால் சில சமயம் பொருந்தாதச் சொற்களைப் பயன்படுத்தும் அபாயமும் தவிர்க்கப்படும். சொற்களைப் பற்றிய நம் புரிதலில் தவறிருந்தால், இந்தச் செயலினால் அது திருத்தம் பெறக்கூடும். இன்னொரு உத்தி - நீங்கள் உள்ளிட்ட சொல்லை, கூகிளில் வெட்டியொட்டுங்கள். 'என்னைப் பொருத்த வரை' என்று எழுதிவிட்டு, சந்தேகமாக இருந்தால் அதனை அப்படியே கூகிளுங்கள். பிழையிருந்தால் உங்கள் தேடலில் எதுவும் மாட்டாது, இல்லை உங்கள் பழையப் பதிவுகளே மாட்டலாம். (எனக்கு நேர்ந்ததைப் போல்). அதன் பிறகு 'பொறுத்த வரை' / 'பொருத்த வறை' என்றெல்லாம் மாற்றிப் பார்க்கலாம், சரியான விடை வரும் வரை :-)

இலக்கண விதிகளையும் சொல்வடிவங்களையும் ஐயமின்றி அறிந்த பின் அவற்றைக் கவனமாகக் கடைபிடிப்பது அடுத்த படி. பதிவுகளை / எழுத்துக்களை வெளியிடும் முன் ஒருமுறைக்கு இருமுறைகள் சரிபார்த்த பின்பே அதனை வெளியிடுங்கள். ஆங்கிலத்திலுள்ள spelling and grammar check போன்றத் தானியங்கு வசதிகள் நமக்கில்லாததால், நம் மானுட முயற்சியைக் கொண்டே பிழைகளைக் களைய வேண்டியிருக்கிறது. கவனத்துடன், தரமான, பிழையில்லாத வகையில் எழுத்துக்களை வெளியிடுவதும் தமிழுக்கு நாமளிக்கும் சிறப்பு, என்பது என் தாழ்மையானக் கருத்து.

இனியாவது 'காதல் கவிதை'களையும், 'பங்கு சந்தை'களையும் தவிர்ப்போம். மொழி வன்முறைகளிலிருந்துத் தமிழைக் காப்போம்.

வியாழன், ஆகஸ்ட் 11, 2005

திருயாசகம்

தமிழர்களின் அதீதத் தமிழ்ப் பற்றோ, இல்லை வேறென்னவோ தெரியாது. ஆனால் கொஞ்சம் நாட்களாகப் பல திக்குகளிலிருந்தும் புகட்டப்பட்டு வரும் அறிவுரை - இளையராஜாவின் திருவாசக சிம்ஃபனியைத் தரவிறக்கிக் கேட்க வேண்டாம், காசு கொடுத்து வாங்கிய பின்னரே கேளுங்கள் என்றுத் தமிழ் சமூகத்தை நோக்கி அவரவர் பிறப்பிக்கும் அன்புக் கட்டளைகள். காரணமென்னவென்றால் இது இளையராஜா தமிழுக்குத் தந்த வரப்பிரசாதம், தியாகம் மற்றும் பல சாமானியத் தமிழர்களின் நன்கொடைகளைக் கொண்டு உருவாக்கப்பட்டது இத்யாதி, இத்யாதி....... அனைத்து வகை இசைக் குறுந்தகடுகளுக்காகவும் பெருமளவு செலவழித்தவன் என்ற போதிலும், திரும்பத் திரும்பக் கேட்க நேரிட்ட இத்தகைய கருத்து/வேண்டுகோள்/அறிவுரை எரிச்சலையே ஊட்டியது.

இளையராஜா தன் பொன்னான நேரத்தை ஒதுக்கி இந்தப் படைப்பை உருவாக்கியிருக்கிறார் என்பது பாராட்ட வேண்டியச் செயலாக இருந்தாலும், அது அவரது சொந்தத் தேர்வு, அவ்வளவே. இசையைத் தரவிறக்கிக் கேட்பதென்பது பல காரணங்களுக்காக நடைமுறையிலுள்ள வழக்கமே. John Coltraneஇன் Jazz இசையிலிருந்து, ஜானகியின் 'பொன்மேனி, உருகுதே' வரை அனைத்து வகையான பாடல்களையும் ஒலிக்கோப்புகளாக வழங்கும் வலைத்தளங்கள், வலைப்பதிவுகள் இணையத்தில் ஏராளம். திருவாசகம் மட்டும் இதற்கு விதிவிலக்கு / நடைமுறை உண்மைகளுக்கு அப்பாற்பட்டது என்றக் கருத்து ஏற்கும்படியாக இல்லை. என்னதான் உயரிய நோக்கத்தோடு செயல்படுத்தப்பட்டத் திட்டம் என்ற சப்பைக்கட்டுக்களை முன்வைத்தாலும், இதே அளவு உயரிய நோக்கத்தோடு வெளிவந்த 'வந்தே மாதரம்' தொகுப்பிற்கு இத்தகைய மரியாதைகள் அளிக்கப்பட்டனவா என்று யோசிக்க வேண்டும். இளையராஜாவுக்கு மட்டும் ஏதேனும் கொம்புகள் முளைத்திருக்கின்றனவா?

பாடல்களைத் தரவிறக்குவது நேர்மையற்ற செயல் என்று வாதிடலாம். திருட்டுக்கு ஒப்பானது என்றுக் கூக்குரலிடலாம். முற்றிலும் உண்மை. நீதிமன்றங்களும் அவ்வாறே தீர்ப்பளித்துள்ளன. ஆனாலும் இந்த விவாதம் இன்றும் முற்று பெறாதவொன்றாகவே திகழ்கிறது. பல இசைஞர்கள் தரவிறக்கங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அவர்களது வலைத்தளங்களில் சிலப் பாடல்களையாவது தரவிறக்க வழங்குகின்றனர். தங்கள் புகழ் பரவ மேற்கொள்ளும் உத்தியாகவே இதைச் செய்கின்றனர். இசை ஆர்வலர்களோ, ஒரு குறுந்தகட்டை வாங்குவதற்கு முன் பாடல்களை sample செய்து பார்க்க mp3க்களை நாடுகின்றனர். ஒரு முழுத் தொகுப்பையும் தரவிறக்கத் தேவைப்படும் நேரம், இணைப்பு வசதி, hard disk இட வசதி ஆகியவற்றிற்கு பதிலாக அதன் குறுந்தகட்டை வாங்கிவிட்டுப் போவது அவர்களுக்கு சிக்கனமானது.

மேலும், பொதுவாகப் புழக்கத்திலுள்ள mp3 ஒலிவடிவம் ஒரு கீழ்த்தரமானவொன்றே (i.e. lossy format). ஒரு வானொலியில் பாடலைக் கேட்பதற்கு நிகரானதே, இந்த mp3 வடிவில் அந்தப் பாடலைக் கேட்பது. 5.1 channel ஓலியமைப்பில் ஒரு mp3 கோப்பை இயக்கினால், இரு channelகளில் மட்டுமே இசை ஓலிக்கும், மற்ற நான்கிலும் மௌனம்தான். ஏன், வெறும் stereo மட்டுமே உள்ள ஒலியமைப்பிலும், ஒரு பாடலை mp3யாகக் கேட்பதற்கும் அதே பாடலை குறுந்தகட்டிலோ, ஒலிநாடாவிலோ கேட்பதற்குமுள்ள வேறுபாட்டை வெகுவாக உணரலாம். mp3 வடிவில் ஒரு பாடலின் அளவு பன்னிரண்டு மடங்கு சுருக்கப் படுகிறது. இதனால் பாடலின் பல அத்தியாவசிய அம்சங்கள் களையப்பட்டு எலும்பும் தோலுமே மிஞ்சுகிறது. ஒரு தீவிர இசையார்வலரை mp3 வடிவம் ஒரு நாளும் திருப்திப் படுத்தாது. இதனையும் மீறி mp3 கோப்புகள் நாடப்படுகின்றன என்றால் அது தற்காலிக உபயோகத்திற்கோ அல்லது விநியோகத்திலில்லாத அரியப் பாடல்களைக் கேட்பதற்கோதான். பணவசதி அதிகமில்லாத, ஆனால் இசையார்வம் மேலோங்கியிருக்கும் மாணவ சமூகத்தில் வேண்டுமானால் mp3யின் புழக்கம் கொஞ்சம் அதிகமிருக்க வாய்ப்புள்ளது. இதனை நேர்மையின்மை என்ற கண்ணோட்டத்திலல்லாது பெருந்தன்மையோடு நோக்கினால் தீர்வுகள் பிறக்கலாம். உ-ம், மென்பொருள் நிறுவனங்களைப் போல், இசை நிறுவனங்களும் மாணவர்களுக்குச் சலுகை விலையில் குறுந்தகடுகளை வழங்குவது (like academic editions of software), போன்ற உத்திகள் மாணவர்களிடையே பொறுப்புணர்வை அதிகரிக்கலாம்.

மேற்கூறிய வாதங்களனைத்தும் தேவையற்றவையே. ஏனென்றால், 'திருவாசக வேண்டுகோள்' விடுப்பவர்களில் பெரும்பாலோர் மற்ற பாடல்களின் mp3க்களைத் தயக்கமின்றிக் கையாள்பவர்கள்தான். திருவாசக சிம்ஃபனிக்கு மாத்திரமே அவர்களது 'காப்புரிமை மரியாதை' என்னும் சிறப்பிடம், மற்றும் ஊருக்கு உபதேசம் ஆகியன. இந்த வேற்றுமைப் படுத்தல்தான் என்னை எரிச்சலூட்டுகிற அம்சம். இவ்வாறு சிறப்பிடம் பெற்ற திருவாசகம் எவ்வாறு விநியோகிக்கப் படுகிறது என்றுப் பார்ப்போம். (சென்னையில்) குறுந்தகடு - ரு.150/-, ஒலிநாடா - ரு.50/-. தயாரிப்புச் செலவு ஒன்றேயென்றாலும் இரண்டுக்குமிடையில் ஏன் ரு.100/- வித்தியாசம்? இது எவ்வகையான நேர்மை? வியாபாரத்திற்கு வந்துவிட்ட ஒரு பொருளின் வெற்றியை தரம், கவர்ச்சித்தன்மை, விநியோகத் திறன் போன்ற வர்த்தகக் காரணிகள் முடிவு செய்யட்டும். உணர்வுகளைத் தூண்டும் வேண்டுகோள்கள் வர்த்தகத்தில் தேவையற்றவையே.

ஆகவே, நீங்கள் இதுவரை கேட்ட அறிவுரைகளுக்கு மாற்றாக நான் கூற விரும்புவது: உங்களுக்குத் திருவாசக சிம்ஃபனி இசைப் பிடித்திருந்து, உங்கள் நண்பர்கள் / உறவினர்களுடன் அதைப் பகிர்ந்து கொள்ள விரும்பினால், winamp போன்ற மென்பொருள் கொண்டு, உங்களுக்குப் பிடித்த பாடலை rip செய்து, வேண்டியவர்களுக்கு மின்னஞ்சலோ, ftpயோ செய்யுங்கள். அது அவர்களுக்கும் மிகவும் பிடித்திருந்தால், அவர்களும் கடைக்குச் சென்று குறுந்தகடோ அல்லது ஒலிநாடாவோ வாங்கிக் கேட்டு மகிழ்வார்கள். நம்மைப் பிசினாளிகளாகக் கருதி விடுக்கப் படும் வேண்டுகோள்களுக்கு நாம் செவிசாய்க்கத் தேவையில்லை.

வெள்ளி, ஆகஸ்ட் 05, 2005

Holy Recitals in G Minor

இதைப் போன்ற ஏதாவது ஆங்கிலப் பெயராகவே வைத்திருக்கலாம். குறுந்தகட்டை வாங்கி அதன் உரையை ஆராய்ந்தால், கண்ணில் தென்பட்டதெல்லாம் ஆங்கிலம்தான். Poovaar Senni Mannan, Pollaa Vinayen, Pooerukonum Purantharanum, Umbarkatkarasaey, Muthu Natramam, Puttril Vazh Aravum Anjen........ இவையெல்லாம் பாடல்களின் பெயர்களாம். (சென்னை வடபழனியில் 'டாடா கன்ஸல்டன்ஸி சர்வீஸஸ்' என்று அழகாகத் தமிழில் எழுதப்பட்ட அர்த்தமற்றப் பெயர்ப்பலகைதான் நினைவுக்கு வருகிறது) கண்களில் விளக்கெண்ணையை விட்டுக் கொண்டு தேடியதில் 'ஆனந்த விகடன்' logoவும் போனால் போகிறதென்று தமிழில் 'திருவாசகம்' என்று ஒரே ஒரு இடத்தில் மட்டும் போட்டிருக்கிறார்கள். இவையிரண்டைத் தவிர மற்றவையெல்லாமே ஆங்கிலத்தில்தான். தமிழர்களைச் சென்றடைய சரியான வியாபார உத்திதான் போலும். இது ஒரு பெரிய விஷயமா என்றுத் தோன்றலாம். திருவாசகம் ஒரு தமிழிலக்கியம் மற்றும் தமிழ் மரபைச் சார்ந்தவொன்று. அதனைக் கையாளுகையில் அது இயற்றப்பட்ட மொழியை / பின்னணியைச் சிறப்பிக்காமல் இப்படி ஒரேயடியாக உதாசீனப் படுத்தியது உறுத்துகிறது.

பாடல்கள் / இசையமைப்பு - 'சுமார்' ரகம். 'ஆகா, ஓகோ' ரகம் எது என்றுக் கேட்டால் இதே இளையராஜா இசையமைத்த 'பாரதி' படப்பாடல்கள் என்றுக் கூறலாம். "கேளடா, மானிடவா, எம்மில் கீழோர் மேலோர் இல்லை" என்றுக் கேட்கும்போது ஏற்படுவது புல்லரிப்பு. திருவாசகத்தில் "என் சாமிதான் பெரிய சாமி" என்று ஆர்கெஸ்டிரா பிரம்மாண்டங்களுக்கு மத்தியில் கேட்டாலும் ஏற்படுவது நகைப்பு மற்றும் "சாருக்கு எந்த நூற்றாண்டு?" என்று எழும் பரிதாபம் தோய்ந்த கேள்வியே. இசையில் புதுமையென்றுக் கூறும்படி எதுவும் புலப்படவில்லை. தமிழில் கோரஸ் (chorus) நன்றாகவுள்ளது. Muthu Natramam பாடலில் இது மேலோங்கியிருக்கிறது. மற்றபடி தமிழ்த் திரையிசை மெட்டுக்கள் ஆங்காங்கே எட்டிப் பார்ப்பது போலொரு உணர்வு. உ-ம், அலைகள் ஓய்வதில்லை படத்தில் வரும் 'காதல் ஓவியம்' பாடலில் "தேன்சிந்தும் பூஞ்சோலை நம் இராஜ்ஜியம்" என்ற வரிக்கான மெட்டு, 'லவ் பேர்ட்ஸ்' படத்தில் 'மலர்களே' பாடலில் "உருகியதே எனதுள்ளம், பெருகியதே ஒரு வெள்ளம்" என்ற வரிகளுக்கான மெட்டு (பின்னது ரஹ்மானின் இசையல்லவா?). பழைய சோறு ருசிதான், ஆனால் ஐந்து நட்சத்திர உணவகத்தில் அதைப் பரிமாறினால் ஏமாற்றம் ஏற்படுவது இயற்கைதானே? இளையராஜாவின் குரல் எனக்குப் பிடித்தவொன்றாதலால், அது எனக்கு ஓரு குறையாகத் தென்படவில்லை. ஆனால் இளையராஜாவும் அவரது மகள் பவதாரிணியும் பாடிய ஒரு பாடலில், ஒரு பகுதி நேரப் பாடகருக்கும் ஒரு முழு நேரப் பாடகருக்குமுள்ள வித்தியாசம், அவர்களது குரல் வளத்திலுள்ள வேற்றுமை, ஆகியவை வெளிப்பட்டது. ஐரோப்பிய ஒலிக்கருவிகள் நன்று. ஐரோப்பியக் கூச்சல்களைத் தவிர்த்திருக்கலாம். சற்றும் பொருந்தவில்லை.

இத்திட்டத்தின் இணையத்தளத்தில் கண்டது: One of the main objectives of this project is to bring to the attention of the youth, such masterpieces from India's rich yet forgotten spiritual traditions. அதாவது, இளைஞர்கள் மத்தியில் திருவாசகம் போன்றப் படைப்புகளை அறிமுகப் படுத்த வேண்டும், இந்தியாவின் வளமையான ஆனால் மறக்கப்பட்டு வரும் ஆன்மீக மரபுகளின்பால் அவர்களது ஆர்வத்தைப் பெருக்க வேண்டுமென்பதே இத்திட்டத்தின் நோக்கமாம். எவ்வளவு தூரம் வெற்றி என்றுத் தெரியவில்லை. இந்த நோக்கத்தின் தேவையும் விளங்கவில்லை. "என்னவோய் சொல்லுதீக" என்றுப் பாடல்களைக் கேட்க முனைந்தால் ஒரு வார்த்தையும் கேட்கவில்லை. இசைஞானியின் மீது கவிஞர் வைரமுத்து வைத்தக் குற்றச்சாட்டின் உண்மையை உணர முடிந்தது. கவித்துவத்தை அரியணையில் அமர்த்தி, இசையை அதற்குச் சாமரம் வீசச் செய்வதற்கு பதிலாக, ஓலிகளின் அராஜகமே மேலோங்கி, போனால் போகிறதென்று வரிகளுக்கு ஓரத்தில் கொஞ்சம் இடம் விட்டது போலிருந்தது. திருவாசக வரிகளுக்கேற்பட்ட இத்தகைய நிலை, மேற்கூறிய நோக்கத்தைத் தோற்கடிப்பதாகக் கருத வாய்ப்பிருக்கிறது. நல்ல வேளையாகப் பாட்டுப் புத்தகம் கொடுத்திருந்தார்கள். எத்தனை இளைஞர்கள் பொறுமையுடன் அதனைப் பிரித்துப் படிப்பார்களோ?

திங்கள், ஜூலை 18, 2005

முன்னேறிய ஆட்டுவிப்புகள்

இசை பலவகை. அவற்றில் ஒவ்வொருவருக்குள்ள இசைவுகளும் வேறுபடும். ஒருவருக்கு இசையாக இன்பம் தருவது மற்றவருக்கு ஓசையாகத் தோன்றி எரிச்சலூட்டலாம். இதற்குப் பெரும்பாலும் அறிமுகமின்மையே காரணம். நமக்கு நன்குப் பரிச்சயமான எதுவும் நமக்கு ஏற்புடையதே. எனது இந்த முயற்சியின் நோக்கம், நல்லிசையைக் கேட்டு அஞ்சி விலகிய பற்பலருக்கு, அதனைப் பரிச்சயம் செய்து, அதன் நுணுக்கங்களை அவர்களும் விரும்பிப் பாராட்டச் செய்வதே.

அறுபதுகளிலிருந்து இன்று வரை, பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் கற்பனையை ஆட்கொண்ட ஒரு சக்தி உண்டென்றால் அது rock n roll எனப்படும் இசை வகையே. நாளடைவில் அது rock என்றே சுருக்கமாக அழைக்கப் பட்டது. Rock - ஒரு தாயின் தாலாட்டைப் போல (hands that rock the cradle), மற்றும் நிலைகுலையச் செய்யுமோர் பேரலையைப் போல (waves that rock a boat), நம்மை ஆட்டுவிக்க வல்லது. அதனைப் போன்றவொரு விரும்பத் தக்க மற்றும் விரும்பத் தகாதவொரு(?) ஆட்டுவிப்பு வேறில்லையென்றே கூறலாம். அதன் ஆட்டுவிப்புகளினால் ஆட்கொள்ளப்பட்டவர்கள் மீண்டதாக சரித்திரமில்லாததால் அதனை விரும்பத்தகாதது என்றும் குறிப்பிடுகிறேன். Beatles, Rolling Stones போன்றவர்கள் கிளப்பிய தீப்பொறி Jimi Hendrixஇன் வருகையால் ஜுவாலையிட்டு எரிந்தது. இதுவே கோடானுகோடி மக்களின் இசையார்வத்திற்கும் வித்திட்டது. பல்லாயிரக் கணக்கான இசைக்குழுக்கள் தோன்றுவதற்கும் காரணமாயிற்று. 1969இல் Woodstock என்னுமிடத்தில் பற்பல இசைக்குழுக்களும் நான்கு இலட்சம் இரசிகர்களும் கலந்து கொண்டு, மூன்று நாட்களாக நடைபெற்ற இசை நிகழ்ச்சி, அத்தலைமுறையின் முக்கியமானதொரு நிகழ்வாகும். இவ்வுலகின் போரெதிர்ப்பு, சுதந்திரத்துவம் (liberalism?), அன்பு, அமைதி ஆகிய கருத்தியல்களுக்கு ஒரு மேடையாக இந்நிகழ்ச்சி வரலாற்று முக்கியத்துவமடைந்தது. Woodstock - Three Days of Peace & Music எனும் விவரணப்படம் இந்நிகழ்ச்சியை அழகாகக் கைப்பற்றியுள்ளது. (இதன் இலக்க / ஒளிக் குறுந்தகடுகள் இந்திய மாநகரங்களில் கிடைக்கின்றன)

காலப்போக்கில் ஆட்டுவிப்புகள் பலத் துணைப்பிரிவுகளாகப் பிரிந்தது தனிச் செய்தி. Classic, Alternative, Grunge, Metal என்றெல்லாம் உங்கள் காதில் விழுந்திருக்கலாம். இவற்றில் எனக்கு இசைவுள்ள வகைதான் progressive rock (முன்னேறிய ஆட்டுவிப்புகள் :) ) முந்தய கால ஆட்டுவிப்புகளில் தென்பட்ட அப்பாவித்தனம், வெகுளித்தனம், எளிமையான இசையமைப்பு மற்றும் பாடல் வரிகள் ஆகியவற்றிலிருந்து விலகி, வளர்ச்சியடைந்து, அதி உன்னத இசை வகைகளான Jazz மற்றும் மேற்கத்திய மரபிசை (Western Classical) ஆகியவற்றை நோக்கிப் பயணித்து, ஒரு முதிர்ச்சியான கலைவடிவமாக முன்னேற்றமடைந்ததால் இது progressive என்ற இத்தகைய சிறப்புப் பெயருடன் விளங்குகிறது. இதன் குணாதிசயங்கள் என்று பார்த்தால், இசையில் மேதமை வெளிப்படக்கூடிய இசையமைப்பு மற்றும் வாசிப்புகள், ஆழமான சமூக உணர்வுள்ள பாடல் வரிகள், பொதுவாக வழக்கிலில்லாத தாள கதிகள் (odd time signatures), மாற்றங்கள் நிறைந்த அனுமானிக்கவியலாதத் திருப்பங்களைக் கொண்ட படைப்புகள், மற்றும் 2-3 நிமிடங்களில் முடிந்து விடும் சிற்றின்பங்களாக இல்லாமல் 'இசையென்பது ஒரு ஆழ்ந்தப் பயணம்' என்ற கருத்துடன் மூன்றிலிருந்து முப்பது நிமிடங்கள் வரை நீடிக்கும் பாடல்கள், அரியக் கருவிகளால் ஏற்படுத்தக்கூடிய வித்தியாசமான ஒலிகளின் பயன்பாடு (உ-ம், பாரம்பரியக் கருவிகளான புல்லாங்குழல், வயலின், மற்றும் புதியக் கண்டுபிடிப்புகளான stick, mellotron, ஆகியவை), என்று மேலோட்டமாகக் கூறலாம். சுருக்கமாகக் கூறவேண்டுமென்றால் இது வெறும் உணர்வுகளுக்கு மட்டும் தீனிபோடாது, ஒரு சிந்திக்கும் மனதுடன் உறவாடும் ஒரு இசை.

மேதமையைப் பற்றி குறிப்பிட்டேன். இசையில் முற்றிலும் தேர்ச்சி பெற்ற இசைஞர்களால் உருவான இசைவடிவமாதலால் ஒவ்வொருவரின் திறமையும் வெளிப்படும் வகையில் பாடல்கள் இசையமைக்கப் பட்டிருக்கும். உலகின் மிகச் சிறந்த இசை வல்லுனர்கள் என்று அறியப்படுகிறவர்களில் பலர், progressive rock வகையைப் பின்பற்றுபவர்களே. இவ்வாறு திறமையை மூலதனமாகக் கொண்டு உருவாக்கப் படுவதால் இவற்றில் ஆர்பாட்டங்கள் குறைவே. கூச்சல்கள், வன்முறையைத் தூண்டும் பாடல் வரிகள், தனிமனித வழிபாடுகள் ஆகியவற்றை இங்கு காண்பதரிது. கலைஞர் - இரசிகர் இவர்கள் இருவரும் உறவாடுவது இசை நுணுக்கங்கள் என்ற தளத்தில்தான். ஆகவே, இவ்வகை இசையை அனுபவிக்கக் கொஞ்சமாவது அடிப்படை இசையறிவு தேவைப்படலாம். ஆர்வம், பொறுமை ஆகியவை இருந்தாலே, கேட்கக் கேட்கப் பரிச்சயம் அடைந்து விடலாம். தாளகதிகளைப் பின்பற்ற முயற்சித்தால், முதலில் பிடிபடாவிட்டாலும், கொஞ்சம் முயற்சிக்குப் பின், அதில் லயிக்குமளவுக்கு முன்னேற்றமடையலாம். நமக்குப் பழக்கப் பட்டுப் போன predictable tunes and beats ஆகியவற்றுக்கிடையில், இதன் unpredictabilityயே நம் ஆர்வத்தைத் தூண்ட வல்லது.

இப்போது, இத்துறையின் வித்தகர்களைப் பற்றிப் பார்ப்போம். எனது முதன்மையான தேர்வு: Kansas (இந்த சுட்டியில் அவர்களது பாடல்களில் சிலவற்றின் கோப்புக்களைத் தரவிறக்கிக் கொள்ளலாம்) எப்போது கேட்டாலும் உற்சாகம் பீறிட்டுக் கொண்டு வரும் அளவுக்கு இவர்களது பாடல்கள் அருமையனவை. அடுத்து Dream Theater. இக்குழுவின் John Petrucciயின் guitar வாசிப்பு அபாரம். Pink Floyd, Jethro Tull என்றெல்லாம் கேள்விப் பட்டிருப்பீர்கள். அவர்களின் இசையும் இவ்வகையே. Queensryche - இதன் பாடகர் Geoff Tate எனக்கு மிகவும் பிடித்த பாடகர்களிலொருவர். அவரது குரலில் ஒரு காந்தத்தன்மையை உணரலாம். Rush - உலகின் மிகச்சிறந்த drummer எனக் கருதப்படும் Neil Peart இக்குழுவின் ஒரு அங்கத்தினராவார். Mahavishnu Orchestra - தலைசிறந்த guitar வல்லுனர் John McLaughlin எழுபதுகளில் தோற்றுவித்த jazz-rock குழு. சிறந்த drummer மற்றும் keyboard கலைஞர்களைக் கொண்டது. பாடல்களின் மெட்டுக்கள் அவ்வப்போது நம் இந்திய இராகங்களை உரசிச் செல்வதை உணரலாம். Genesis - இத்துறையின் மூதாதயர்கள். இழுத்து உட்கார வைக்கும் இசை மற்றும் கருத்து மிக்கப் பாடல் வரிகள். Yes - இவர்களும் இத்துறையின் ஆரம்ப கால வித்தகர்களே. அருமையான குரல்வளம், guitar, keyboard ஆகியவை இவர்களின் கவர்ச்சியம்சங்கள்.

இவ்வகை இசையை கீழ்க்கண்ட இணைய வானொலி(?)த் தளங்களில் Winamp மென்பொருளைக் கொண்டு கேட்கலாம்:
இசை வெள்ளத்தில் மூழ்கி, நன்றாக ஆட்டுவிக்கப் படுங்கள்!

சனி, ஜூலை 09, 2005

ஹை, ஹைதராபாத்!

வேலை, படிப்பு மற்றும் வேறு பல காரணங்களுக்காக ஹைதராபாதுக்கு வந்து தங்க வேண்டிய கட்டாயம், வலைப்பதிவர் மணிகண்டன் போல் மற்றவர்களுக்கும் நேரலாமென்பதால், பதிமூன்று வருடங்களாக இங்கு வசிக்கும் அனுபவத்தில் பயனுள்ளவற்றை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.மணியின் பதிவிலிருந்து அவருக்கு மொழியும் உணவும் பிரச்சினையாக உள்ளதென்றுத் தெரிய வருகிறது.

நீங்கள் சாப்பாட்டு இராமராக இருப்பின், சொர்க்கத்துக்கே வந்துவிட்டதாக உணர்ந்து கொள்ளுங்கள். இங்குள்ள உணவு வகைகளையும் தேர்வுகளையும் போல் வேறெங்கும் வராது. ஆந்திர சாப்பாடு மற்றும் சிற்றுண்டி வகைகள், இஸ்லாமிய பிரியாணி உணவகங்கள், (இனிப்பான சாம்பார் உள்ளிட்ட) கர்நாடகா ருசியுடன் வழங்கும் சைவ (உடுப்பி) உணவகங்கள், இது போதாதென்று கேரள, குஜராத்திய, இராஜஸ்தானிய, பஞ்சாபிய, இத்தாலிய, கிரேக்க, சீன, மலேய, மெக்ஸிக்க வகைகளுக்கென்று தனித்தனி உணவகங்கள், மற்றும் மேற்கத்திய விரைவுணவு மையங்கள் வேறு (இவை இல்லாமலா?). ஒன்றே ஒன்றுதான் இங்கு கிடையாது. ஆம், தமிழக உணவகங்கள். இருந்த 'அன்னலட்சுமி'யையும் மூடிவிட்டார்கள் என்றுத் தெரிகிறது. இருந்தாலென்ன? மற்ற உணவுகள் இருப்பதால் இது ஒரு பெரிய இழப்பாகத் தெரியாது. குறிப்பாக ஆந்திர சாப்பாடு....... அணுவணுவாக இரசிக்கப்பட வேண்டியது. குச்சுப்புடி, அபிருசி, Southern Spice, பாவார்ச்சி ஆகிய உணவகங்களில் இதன் மகிமையை உணரலாம். அடுத்து 'ஹைதராபாதி பிரியாணி' என்று உலகப் புகழ் வாய்ந்த பிரியாணி. அசைவராக இருந்தால் இன்னும் வசதி. கோழி மற்றும் ஆட்டு பிரியாணி, ஹலீம், கோடி புலுசு (கோழிக் குழம்பு), சேப்ப புலுசு (மீன் குழம்பு) என்று ஒரு பிடி பிடித்து விடலாம். சைவராக இருந்தாலோ, அவர்களின் பருப்பு சாதத்திலும், கட்டித் தயிரிலும், ஊறுகாய்களிலுமே மோட்சமடைந்து விடலாம். 'காரம்' என்ற உணர்வு 'ருசி' என்ற உணர்வாக மாறுவதற்கு வெகு நாட்கள் பிடிக்காது. அதன் பிறகு ஜாலிதான்.

இப்போது மொழி. தெலுங்கு கற்க வேண்டுமா, இந்தி கற்க வேண்டுமா என்ற கேள்விகள் எழுப்பப் பட்டன. அதிர்ஷ்டவசமாக, இங்கு பல மொழிகள் புழக்கத்திலுள்ளன. வரலாற்று ரீதியாக நோக்கினால், ஹைதராபாத் நிஜாமின் இராஜ்ஜியத்திற்குத் தலைநகராக விளங்கியது. இந்த இராஜ்ஜியத்தில் தெலிங்கானா, இப்போது கர்நாடகத்தைச் சேர்ந்த சில மாவட்டங்கள், மற்றும் இப்போது மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த சில மாவட்டங்கள் ஆகியவை அடக்கம். ஆக, உருது, தெலுங்கு, கன்னடம், மராட்டி ஆகிய மொழிகள் பேசும் மக்கள் காலகாலமாக இங்கு வாழ்ந்து வந்துள்ளனர். மேலும் நிஜாம் அரசில் பதவியேற்ற நூற்றுக்கணக்கான தமிழர் குடும்பங்களும் உண்டு. நூறாண்டுகளாக இங்கேயே வாழ்ந்ததால் அவர்கள் பேசும் தமிழும் தெலுங்கைப் போல் ஒலிக்கும். இவ்வாறு பல மொழிகள் புழங்குவதால், பொதுவாகவே மொழி குறித்த விவாதங்களும், சர்ச்சைகளும் அறவே இல்லையென்றே கூறலாம். ஆந்திரத் தலைநகரென்றாலும் இங்கு தெலுங்குக்கே முன்னிடமளிக்க வேண்டுமென்றெல்லாம் எவரும் (நல்ல வேளையாக) சிந்திப்பதில்லை. ஏனென்றால், தெலுங்கரல்லாத பெருவாரியான மக்களுக்கு இது உறைவிடமாகும், அவர்களை வெளியாட்களாக நோக்கும் முயற்சிகள் எனக்குத் தெரிந்து நடைபெற்றதில்லை. உ-ம், உருது பேசும் இஸ்லாமியர்கள், கன்னடியர்கள், மராட்டியர்கள், தமிழர்கள் மற்றும் வடக்கிலிருந்து குடியேறிய வணிகர்கள், ஆகிய அனைவருக்கும் ஹைதராபாத் சொந்தம். இந்நகரை 400 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கிய குதுப் ஷாஹி மன்னரும் இத்தகைய தீர்க்க தரிசனத்தையே கொண்டிருந்ததாக வரலாற்றுத் தகவல்கள் கூறுகின்றன.

இப்படி மொழி அரசியலில்லாத சூழலில், மக்கள் விரும்பி ஆங்கிலத்தைக் கற்றார்கள். சாமானிய மக்களும் இலக்கணப் பிழையின்றி ஆங்கிலம் பேசுவதை இங்குக் காணலாம். உருதுவையொத்த மொழியாதலால் ஹிந்தியையும் சரளமாகப் பேசுவார்கள். (இவையிரண்டுக்குமுள்ள வேறுபாடு என்னவென்று எனக்கு இன்னும் விளங்கவில்லை. ஒரு காதல் கவிதையைப் போல் ஒலித்தால் அது உருது, இல்லையேல் ஹிந்தி என்றளவில் புரிந்து கொண்டிருக்கிறேன்.) இங்குள்ள இஸ்லாமியர்களில் பலர் அரபியும் தெரிந்தவர்களாம். ஆகவே, எம்மொழிக்காரரும் இங்கு தழைக்கலாம். தெலுங்கில்லையேல் ஹந்தி, ஹிந்தியில்லையேல் ஆங்கிலம், அதுவுமில்லையேல் உங்களிடம் உடைந்தத் தமிழிலும் சிலர் பேச முயற்சித்து உதவுவார்கள். பதிமூன்று வருடங்களுக்குப் பிறகு இன்னும் எனக்குத் தெலுங்கு, ஹிந்தி இவையிரண்டும் சரியாகப் பேச வராது. இது எனக்குப் பெருமையான செய்தியல்ல. ஆனால் என் மொழி அறியாமையைக் காரணங்காட்டாது, என் உழைப்பையும் வசிப்பையும் ஏற்றுக் கொண்ட ஹைதராபாதுக்கு இது நிச்சயமாக ஒரு பெருமையான செய்தியே.

மணி குறிப்பிடாத இதர தகவல்கள் - சீதோஷண நிலை: பெரும்பாலும் இதமானதே, மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் மட்டும் வெய்யில் வாட்டிவிடும். வெய்யிலானாலும் வியர்க்காது. குளிர் காலத்தில் பெங்களூரை விட அதிகமாகக் குளிரெடுக்கும். கம்பளங்களோடு தயார் நிலையில் இருங்கள். மழை வழக்கமாக திடீரென ஆரம்பித்து திடீரென நின்று விடும். மழையில் மாட்டிக் கொண்டால் ஒவ்வொரு துளியும் உங்களை நோகும்படி அடிக்கும். ஆகவே எங்காவது ஒதுங்குவதே மேல்.

போக்குவரத்து - கச்சா முச்சா. Rules are meant to be broken என்ற சிந்தனையே பலருக்கும், போக்குவரத்து விதிகளைப் பொறுத்தவரை. எத்திசையிலிருந்து வேண்டுமானாலும், எத்தகைய வாகனம் வேண்டுமானாலும் உங்களை நோக்கி வரலாமென்ற உண்மையை எப்போதும் மனதில் கொள்க. இப்போது தலைக்கவசத்தைக் கட்டாயமாக்கி விட்டார்கள். இதனைக் கடைபிடிக்காதவருக்கு அபராதமெதுவும் கிடையாது. அழைத்துக் கொண்டு போய், 'தலைக்கவசத்தால் என்ன பலன்' என்பதை விளக்கும், (சுமார் ஒரு மணி நேரம் நீடிக்கும்) ஒரு பாடத்தை அமர்ந்து பார்க்க வைப்பார்கள். இந்தப் பாடத்துக்கு பயந்தே எல்லாரும் தலைக்கவசம் வாங்கியணியத் தொடங்கிவிட்டனர். பேருந்துகள் - அவ்வளவாகப் பயன்படுத்தியதில்லை. மின்சார இரயில் சேவை பெரும்பாலான இடங்களை இணைப்பதில்லை, ஆகவே, பயனில்லை. ஆட்டோக்கள் வசதிதான், நேர்மையான ஓட்டுனர்களும் கூட. 7-seaters என்று ஒரு வகையான வாகனம் உண்டு, அதில் எவ்வளவு நபர்கள் வேண்டுமானாலும் ஏறலாம். அவைகளுக்குக் குறிப்பிட்ட நிறுத்தமெல்லாம் கிடையாது. எங்கு வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் இவற்றைக் கையசைத்து, நிறுத்தி, ஏறிக்கொள்ளலாம். இவற்றால் போக்குவரத்துக்கேற்படும் அபாயம் மற்றும் நெரிசல்களைக் கருதி, இவற்றை சிறிது காலம் தடை செய்திருந்தார்கள். ஆனால் பொதுமக்களின் கோரிக்கையை முன்னிட்டு மீண்டும் இவற்றை அனுமதித்துள்ளார்கள்.

பொழுதுபோக்கு - வாய்ப்புகள் கொஞ்சம் குறைவுதான். சென்னையில் கடற்கரைகள் போல் இங்கு ஏரிக்கரைகள் - அவ்விடங்களில் புல்வெளிகளமைத்து மாலையில் அமரும் வண்ணம் செய்திருக்கிறார்கள். தென்னிந்தியாவிலுள்ள ஒரே IMAX திரையரங்கு என்ற புகழ் பெற்ற Prasad Multiplex மற்றும் ஒரு வனப் பிரதேசத்தை சீரமைத்து நடை, ஓட்டம் ஆகிய உடற்பயிற்சிகளுக்கு ஏற்றவாறு அமைக்கப் பட்ட KBR Park ஆகியவை மற்ற பொழுதுபோக்கு அம்சங்கள். இசை, நாடகம், நாட்டியம் ஆகிய நிகழ்ச்சிகள் எனக்குத் தெரிந்து குறைவே. Remix, bhangra என்று அவ்வப்போது நடக்கும் கூத்துகள் மட்டுமே உண்டு. குறை வைக்காமல் ஆங்காங்கே bars, pubs, wine shops ஆகியவற்றை நிறுவியுள்ளனர். இந்தியாவிலேயே beer அதிகம் பருகும் மாநிலம் ஆந்திரமே. சினிமா என்றெடுத்துக் கொண்டால் தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழித் திரைப் படங்களே காட்டப் படுகின்றன. தமிழ் கிடையாது. ஆனால் பெரும்பாலான தமிழ்ப்படங்கள் தெலுங்கில் ஒலிப்பதியப் பட்டு வெளியிடப் படுகின்றன, சிம்புவின் படங்களுட்பட.

வர்த்தகம்/வேலைவாய்ப்புகள் - தகவல் தொழில்நுட்பம், BPO ஆகியவை பெருவளர்ச்சியடைந்து கொண்டிருக்கின்றன. இத்துறைகளில், ஒரு காலத்தில் பெங்களூருக்குப் போட்டியென அறியப்பட்ட நகரம். இப்போது, புனே, சென்னை, மும்பாய், தில்லி ஆகியவையும் இதனுடன் போட்டியிட்டு இதனைப் பின்னுக்குத் தள்ளி விட்டதாக அறிகிறேன். (பெங்களூரின் முதன்மை நிலையே ஆட்டங்கண்டு கொண்டிருப்பதாகக் கேள்வி.) எனினும், இந்திய மென்பொருள் வல்லுனர்களில் நான்கிலொருவர் ஆந்திர மாநிலத்தவர் என்ற பெருமையுண்டு. இதைத் தவிர pharma எனப்படும் மருந்துகள் உற்பத்தியிலும் முன்னணியிலிருக்கிறது ஹைதராபாத். உயிரியல் தொழில்நுட்பம்(bio-technology) கொஞ்ச நாட்களாகப் பேசப்பட்டது. இன்றைய நிலை குறித்துத் தெரியவில்லை. பல விஞ்ஞான ஆய்வுக்கூடங்கள் இங்குண்டு, பெரும்பாலானவை மத்திய அரசால் நிறுவப்பட்டவை. DNA Fingerprinting என்ற மரபணுவியல் நுட்பத்தைத் தோற்றுவித்தது இங்குள்ள CCMB என்னும் ஆய்வுக்கூடமே. இந்நாளில் குற்றவியல் விசாரணைகளில் (criminal investigations) பேருதவியாக இருக்கிறது இந்நுட்பம். மேலும் இந்தியாவின் எரிகணைகளை (missiles) உருவாக்குவதும் இங்குள்ள மத்தியத் தற்காப்பு அமைச்சகத்தின் DRDO ஆய்வுக் கூடங்களே.

கல்வி வாய்ப்புகள் - Indian School of Business எனப்படும் நிர்வாகவியல் கல்லூரி, வெகு அண்மையில் தொடங்கப்பட்டு, இந்தியாவிலேயே முதன்மையான இடத்தை நோக்கி வளர்ந்து கொண்டிருக்கிறது. மேற்கிலுள்ள Kellog, Wharton ஆகிய கல்விக்கூடங்களுடன் இதற்குள்ள தொடர்பு மற்றும் கூட்டுறவே இதன் தனித்துவமாகும். University of Hyderabad எனப்படும் இங்குள்ள பல்கலைக் கழகம், இந்தியாவிலேயே முதன்மையான ஐந்து பல்கலைக் கழகங்களுக்குள் ஒன்றாகும். வரலாற்றுப் புகழ் பெற்ற ஒஸ்மானியா பல்கலைக் கழகமும் இங்குண்டு. ஆனால் அதன் தரம் சரிவடைந்து கொண்டே போய், 'ஒஸ்மானியா மாணவர்கள் இதற்கு முயற்சிக்க வேண்டாம்' என்ற குறிப்புடன் வேலைவாய்ப்பு விளம்பரங்கள் வெளிவரும் அளவுக்கு நிலைமை மோசமாயிற்று. இப்போது கொஞ்சம் பரவாயில்லை என்று அறிகிறேன். தனியார் கலைக்கல்லூரிகள் படு மோசம். ஜன நெரிசலுள்ள பகுதிகளில் சிறிய கட்டிடங்களில் அவை நடத்தப் படும் விதமே கொதிப்படையச் செய்யும். பல பள்ளிகளுக்கும் அதே நிலைதான். மைதானம், நூலகம் போன்ற வசதிகளில்லாது இலாப நோக்கோடு நடத்தப் படும் இக்கல்வி நிலையங்களைக் குறித்து என்ன சொல்வது? ஒரு புறம் இவையென்றால், மறுபுறத்தில் செல்வந்தர்களின் பிள்ளைகள் படிக்க வசதியான ஐந்து நட்சத்திரப் பள்ளிகள். குளிர் சாதன வீடுகளிலிருந்து, குளிர் சாதனப் பேருந்துகளால் வரவழைத்து, குளிர் சாதன அறைகளில் பாடங்கள் புகட்டி, இடையிடையே pizza, coke போன்றவற்றை ஊட்டி, பிறப்பிலிருந்தே பிள்ளைகளை மேற்கத்திய, மேலாதிக்க உணர்வுகளோடு தயாரிக்கும் பள்ளிகள் இங்கு ஏராளம். இதற்கு அவை விதிக்கும் கட்டணம் ஆகாயத்தைத் தொடக்கூடும். கேட்டால் தரமான கல்வியை பிள்ளைகளுக்கு வழங்குவதாக சப்பைக்கட்டுகள் வேறு. கடினமாக உழைத்து முன்னேறிய நடுத்தர வர்க்கத்தினரும், தங்கள் வருமானத்தையெல்லாம் கொட்டி, பல்வேறு காரணங்களுக்காக ('பிள்ளைகளுக்கு மேல் வர்க்கத்தினரோடு தொடர்பேற்படும்' போன்ற வலுவில்லாத காரணங்களுமிதில் அடக்கம்) தம் பிள்ளைகளை இப்பள்ளிகளில் சேர்ப்பது வருத்தமான செய்தி. இவற்றைத் தவிர, தொழிற்கல்லூரிகளின் நுழைவுத் தேர்வுகளுக்குத் தயார் செய்கிறோம் பேர்வழியென்று காளான்கள் போல் முளைத்துள்ள பயிற்சி நிலையங்கள் வேறு. ஹாஸ்டல் வசதியுடன் இயங்கும் இந்நிலையங்களில், மாணவ மாணவிகளை, பாட நேரம் உட்பட ஒரு நாளில் 14-15 மணி நேரம் வரை படிக்குமாறு நிர்பந்தித்து, அவர்களை சக்கையைப் பிழிவது போல் பிழிந்தெடுத்து விடுவார்களாம். இத்தகைய சுமையைத் தாங்காமல் சில மாணவ மாணவியர் தற்கொலையும் செய்து கொண்டுள்ளனராம். பெற்றோர்களின் நிறைவேறாத கனவுகளுக்குப் பிள்ளைகள்தான் பலிகடாக்கள் போலும்.

சுற்றுப்புறச் சூழல் - ஓரளவுக்கு பசுமையான நகரமென்றே கூறலாம். ஆங்காங்கே பூங்காக்கள், சாலையோரங்களில் மரங்கள் என்று நகரின் பசுமைத்தன்மையை உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். நகர எல்லைகளுக்குள் காற்றை மாசு படுத்தும் தொழிற்ச்சாலைகள் அதிகம் கிடையாது. எனக்கு நினைவுக்கு வருவது சார்மினார் சிகரட் தொழிற்ச்சாலை - அதன் அக்கம்பக்கங்களில் சென்றாலே புகையிலையின் வாசம் வீசும். ஆனால் நகரின் பிரதானமான ஹ¤சேன் சாகர் ஏரியில் தொழிற்ச்சாலைகளின் கழிவு நீர் கலப்பதால், தண்ணிர் அதிகமில்லாத காலங்களில் கொஞ்சம் துர்வாசம் வீசும். இது போதாதென்று, ஒவ்வொரு வருடமும் விநாயக சதுர்த்தி முடிந்தபின், பெரியப் பெரிய விநாயகர் உருவங்களை இந்த ஏரியில் கொண்டு வந்து கரைப்பதால் ஏற்படும் மாசு வேறு. இதனைத் தடை செய்ய வேண்டுமென்று சில சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர்கள் கோருகின்றனர். ஆனால் முடிகின்ற காரியமா அது? நகரைச் சுற்றி இரண்டு மூன்று வனவிலங்குச் சரணாலயங்கள் உள்ளனவாம். பல மான் வகைகளைக் கொண்டுள்ளனவாம், சென்று பார்த்ததில்லை. நான் முன்பு குறிப்பிட்ட KBR பூங்கா 400 ஏக்கர் பரப்பளவுள்ள அருமையானதொரு வனப்பகுதி. யோகமிருந்தால் மயில்கள், பாம்புகள், ஆமைகள் ஆகியவை உங்கள் பாதையில் குறுக்கிடலாம். நான் வசிக்குமிடத்திலிருந்து நடைப்பயணமாக 10-15 நிமிடத்தில் அங்கு சென்று விடலாம். என்னைப் பொருத்தவரை, ஹைதராபாதின் சிறந்த இடம் அதுவே. இயற்கைச் சூழல், தூயக் காற்று, மலர்களின் வாசம், நடை / ஓட்டத்தால் கிடைக்கும் உடற்ப்பயிற்சி (ஒரு சுற்று சுற்றினால் 6கி.மீ தூரமாகும். முடிந்தால் அதற்கு மேலும் சுற்றலாம்), அங்கு வரும் மற்ற உடல்நல ஆர்வலர்களிடம் தென்படும் உத்வேகம், இவையனைத்தும் எத்தகைய மனக்கசப்பையும் அகற்ற வல்லவை.

ஹைதராபாதுக்கு மாற்றாலாகி வருபவர்களுக்கு மேலுள்ள தகவல்கள் பயனுள்ளதாக இருக்குமென்று நம்புகிறேன். எனக்கு மிகவும் பிடித்த ஊரிது :)

சனி, ஜூலை 02, 2005

சேதுசமுத்திரம் - பலன்கள் குறித்து நிபுணர்கள் ஐயம்

சேதுசமுத்திரத் திட்டம் நிறைவடைந்த பின் தமிழகத்தில் பாலும் தேனும் ஓடப்போகிறது என்று எண்ணிக் கொண்டிருப்பவர்களுக்கு:

நிலைமையைத் தெளிவு படுத்தும் NDTV செய்திக்குறிப்பு


சுருக்கமாகக் கூறவேண்டுமென்றால்:
  • மேற்கிலிருந்து வரும், 30000 டன்கள் வரை கொள்ளளவுள்ள கப்பல்கள், இந்தக் கால்வாயை உபயோகித்தால், அவை பயணத்தில் 24 மணி நேரம் வரை குறைக்கலாம் என்று திட்டத் தலைவர் திரு.என்.கே.இரகுபதி கூறுகிறார்.
  • ஆனால் இத்துறை நிபுணர்களோ வேறு விதமாகக் கருத்து தெரிவிக்கின்றனர். உதாரணத்துக்கு,
    • கப்பல்கள் முன்னை விட மிகப் பெரிதாகிவிட்டதால் அவைகளில் பலவற்றால் இக்கால்வாயை உபயோகிக்க இயலாது. ஆகவே, அவைகள் எப்படியும் இலங்கையைச் சுற்றியே வரவேண்டும். எடைவாரியாகப் பார்த்தால், 60இலிருந்து 70 சதவிகிதம் வரையிலான கப்பல்ப் போக்குவரத்து, இக்கால்வாயைப் பயன்படுத்த முடியாமல் இலங்கையைச் சுற்றியே வரவேண்டும் என்று ஓய்வு பெற்ற சென்னைத் துறைமுகத்தின் துணைத்தலைவர் திரு.இராமகிருஷ்ணன் கூறுகிறார்.
    • மேலும், சிக்கனமான வேகத்தில்(economic speed) பயணித்தாலேயே கப்பல்களால் எரிபொருள் சிக்கனத்தைப் பெற முடியும். இக்கால்வாயில் அது சாத்தியமாகாத காரணத்தால் எரிபொருள் செலவில் கப்பல்களுக்கு மிகுந்த மாற்றமெதுவுமிருக்காது என்று முன்னாள் உலக வங்கி ஆலோசகர் திரு.கே.ஆர்.ஏ.நரசய்யா கூறுகிறார்.
அதிகார வட்டாரங்களிலும், இத்திட்டம் குறித்து பலத்த ஐயம் நிலவுகிறது. திட்ட அதிகாரிகள் முன்வைக்கும் இலக்கங்கள் எதுவும் நம்பும்படியாக இல்லை என்ற எண்ணமே மேலோங்கியிருக்கிறது. இவ்வளவு கேள்விகளிருந்தும், தி.மு.க. இதை முன்னெடுத்துச் செல்வதிலேயே குறியாக இருக்கிறது.