சனி, அக்டோபர் 22, 2005

உறையும் பனியில் உறைவிடமின்றி....

இவ்வாண்டின் தொடக்கத்திலேற்பட்ட சுனாமி பேரழிவில் தொடங்கி, மும்பை பெருமழை, அமெரிக்க கத்ரீனா / ரீட்டா கடும்புயல்கள் என்று வரிசையாக உலகின் ஏழை, எளிய மக்களைப் பதம் பார்த்து வந்த இயற்கையானது, இப்போது காஷ்மீர் நிலநடுக்கத்தின் வாயிலாகத் தன் கைவரிசையைக் காட்டியிருக்கிறது. மற்ற சம்பவங்களைப் போலல்லாது, இந்த முறை பாதிக்கப்பட்ட இடங்கள் எளிதில் சென்றடைய முடியாதவை. மலைப்பகுதிகளாகவும், அதிக வசதிகளற்ற பின்தங்கிய பகுதிகளாகவும் உள்ள இவ்விடங்களுக்கு உதவிப்பொருட்களையும் சேவகர்களையும் அனுப்பி நிவாரணப் பணிகளை மேற்கொள்ளுவது மாபெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. கடினமான நிலப்பரப்பின் காரணத்தால், மற்ற நிவாரணப் பணிகளை விட இங்கு ஆகும் செலவு அதிகமாகும்.

சாலைகள் பலவும் அழிக்கப்பட்டு விட்ட நிலையில், ஆகாய மார்க்கமாகவே உதவிகளைக் கொண்டு செல்ல வேண்டியக் கட்டாயம். அதற்குத் தேவைப்படும் ஹெலிகாப்டர்களின் எண்ணிக்கையில் பற்றாக்குறை. மேலும் இவற்றின் பயணத்திற்குத் தடையாக அவ்வப்போது பொழியும் அடைமழை. இதற்கு மத்தியில் இந்திய - பாக்கிஸ்தானிய சர்ச்சைகள், அரசியல்கள் என்ற சிக்கலான வரலாற்றுப் பின்னணியும் நிவாரணப்பணிகளுக்குச் சாதகமில்லாத நிலையை ஏற்படுத்தும் அவலம். இவ்வாறு, பல பிரச்சினைகளையும் தாண்டி, அவசர உதவிகளை விரைவில் முன்னெடுத்துச் சென்று, அவற்றை எதிர்பார்த்துக் காத்திருக்கும் சுமார் அரை கோடி பாதிக்கப்பட்ட மக்களின் துயரத்தைத் துடைக்க வேண்டிய பொறுப்பு, இன்று உலகக் குடிமக்களின் முன் வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அவர்களோ ஒவ்வொரு பேரழிவுக்குப் பிறகும் உதவி செய்து உதவி செய்து, இறுதியில் சோர்ந்து விட்டதன் அறிகுறிகளையே வெளிப்படுத்துகின்றனர். நிவாரணப் பணிகளுக்காக முன்னூறு மில்லியன் டாலர்களுக்கும் மேலாக நிதியுதவி தேவை என்று உலக நாடுகளுக்கு ஐ.நா. சபை விண்ணப்பித்துள்ள நிலையில், இதுவரை உதவித்தொகையாக எண்பத்தியாறு மில்லியன் டலர்களே உத்தரவாதம் செய்யப்பட்டுள்ளனவாம். (தகவல்: BBC Website) சுனாமி நிவாரணத்திற்கு தேவைக்கும் அதிகமாக நிதியுதவி புரிந்த உலக மக்கள், இன்று தயங்குவது அவர்களது சோர்வைத்தான் காட்டுகிறது.

தேவைப்படும் உதவிகள் உரிய நேரத்தில் சென்றடையாவிட்டால் அதன் பின் விளைவுகள் ஏராளம். சில நாட்களில் இமாலயப் பகுதிகளில் கடுங்குளிர் நிலை கொள்ளும். இந்நிலையில் நிலநடுக்கத்தால் வீடுகளை இழந்த 3 மில்லியன் மக்களுக்கு தற்காலிகமான கூடாரங்களையாவது வழங்காவிட்டால், கடுங்குளிரால் மேலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழக்க நேரிடுமென்று ஐ.நா.சபை எச்சரிக்கிறது. ஆனால் தற்போதைய நிலவரப்படி, ஐநூறு மக்களுக்கு ஒரு கூடாரம் என்ற விகிதத்தில்தான் இவ்வுதவி பாதிக்கப்பட்டவர்களைச் சென்றடைந்திருக்கிறது. உடனடியாக இக்கூடாரங்களின் விநியோகத்தைத் துரிதப்படுத்தவில்லையென்றால், மேற்கூறிய எச்சரிக்கை உண்மையாகிவிடும் அபாயமுள்ளது. இதற்கடுத்தபடியாக, உண்ண உணவு, மருத்துவ வசதிகள் என்று பலவகையான தேவைகள். (தகவல்: BBC)

சோர்வடைந்திருக்கும் நல்லுள்ளங்கள் மீண்டும் விழிப்படைந்து, தம் மனிதநேயத்தை விரைவில் வெளிப்படுத்துவார்களென நம்புவோம்.

4 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

Avasiyam naam ovvaruvarum iyartkaicheetratthaal Pathikkap pattulla makklukku nammaal mudintha uthavilai cheyya vaendum!

Voice on Wings சொன்னது…

ஹமீத், உங்கள் கருத்திற்கு நன்றி. உதவி வழங்க விரும்புவோர் கீழ்க்கண்ட அமைப்புகளைத் தொடர்பு கொள்ளலாம்:

---------------------------------
HOW TO DONATE

Unicef
www.unicef.org.uk

UNHCR
www.unhcr.ch

Disasters Emergency Committee (UK)
www.dec.org.uk

World Food Programme
www.wfp.org

Kashmir International Relief Fund
www.kirf.org

Red Cross/ Red Crescent
www.icrc.org
-----------------------------

inomeno, thanks for your welcome :)

பெயரில்லா சொன்னது…

/உறையும் பனியில் உறைவிடமின்றி/

எவ்வளவு வேதனையான பிரச்னையாக இருந்தாலும் இப்படிச் சில்லறைத்தனமான வார்த்தை விளையாட்டுகளில் இறங்கித் திருப்தியடையாமல் இருக்க முடியாது போலும்.

Voice on Wings சொன்னது…

அனானிமஸ், உங்கள் கருத்தை வெளியிட்டதற்கு நன்றி. சில்லரைத்தனமான வாரத்தை விளையாட்டென்றாலும் உண்மை நிலையைப் பிரதிபலிப்பதாக இருப்பதை மறுக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.