வெள்ளி, மே 29, 2009

சில தகவல்கள்

ஐ.நா. சபையின் மனித உரிமைகள் குழு இலங்கையில் நிலவும் மனித உரிமை நிலவரம் பற்றி விவாதிக்க ஒரு சிறப்புக் கூட்டம் (special session) ஒன்றைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றியது பற்றி தெரிந்திருக்கலாம். சில நாட்கள் முன்பு தமிழ் சசியின் வேண்டுகோளின் படி எல்லா உறுப்பினர் நாடுகளின் பிரதிநிதிகளுக்கும் மின்னஞ்சல் அனுப்பியதால், அந்த நிகழ்வில் என்னதான் நடந்ததுன்னு தெரிஞ்சிக்க ஆர்வமா இருந்தேன்.

அப்போது நடந்த உரையாற்றல்கள் எல்லாவற்றையும் கீழ்க்கண்ட சுட்டிகளில் காணலாம்:
இந்தத் தீர்மானத்தின் மீதான வோட்டெடுப்பு நிலவரம்:
ஆதரித்தவர்கள்(29): அங்கோலா, அசர்பைஜான், பஹ்ரைன், வங்காள தேசம், பொலிவியா, பிரேசில், பூர்கினா ஃபாஸோ, கேமரூன், சீனா, கியூபா, ஜிபூதீ, எகிப்து, கானா, இந்தியா, இந்தோனேசியா, ஜோர்தான், மடகாஸ்கர், மலேசியா, நிகராகுவா, நைஜிரியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், கதார், ருஷ்யா, சவுதி அரேபியா, சினிகல், தென் ஆப்பிரிக்கா, உருகுவே, மற்றும் ஜாம்பியா.

எதிர்த்தவர்கள்(12): பாஸ்னியா / ஹெஸகோவினா, கனடா, சிலி, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, மெக்சிகோ, நெதர்லந்து, சுலோவகியா, சுலோவனியா, சுவிட்சர்லந்து, மற்றும் இங்கிலாந்து.

நடுநிலை வகித்தவர்கள் (6): அர்ஜன்டினா, கேபான், ஜப்பான், மோரிஷியஸ், கொரியா மற்றும் உக்ரேன்.

இந்த முன்னெடுப்பு பத்தி அதிக நம்பிக்கை வைக்கா விட்டாலும், சில தகவல்கள் கூடுதல் கவனத்தைப் பெற்றது. அவற்றை எந்தவொரு வரிசைப்படுத்தும் இல்லாம பட்டியலிடுவதுதான் இந்தப் பதிவின் நோக்கம்.

  • முதலில் இந்தியா எடுத்த நிலைப்பாடு பற்றி (இந்த நாட்டுல வந்து பிறந்து தொலைச்ச பாவத்துக்காக, அதை முதலில் கவனிக்கத் தோன்றியது). நடைபெற்ற இனவழிப்பில் இந்தியா இலங்கைக்கு எந்த உதவியும் செய்யலன்னு பல முறை பல அதிகாரத் தரப்பிலிருந்தும் சொல்லப்பட்டு வந்தாலும் அதிலுள்ள நேர்மையின்மை வெளிப்படையாவே தென்பட்டுக்கிட்டு இருந்தது. இலங்கை தரப்பிலிருந்தே பல முறை 'எங்கப்பன் குதிருக்குள்ள இல்ல'ங்கிற மாதிரியான அறிக்கைகள் மூலமா இந்த உதவிகள் பற்றி வெட்ட வெளிச்சமாயிட்டு இருந்தது. மேற்கூறிய சிறப்புக் கூட்டத்தில் இரு வோட்டெடுப்புகள் நடைபெற்றதாம். அந்த இரு வோட்டெடுப்புகளிலும் இந்தியா இலங்கைக்கு ஆதரவா வோட்டளிச்சிருக்கு. நம்மைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் ஈனத் தலைவர்கள் இதுக்கு என்ன பதில் சொல்லப்போறாங்கன்னு இனிமேதான் பாக்கணும். அது மட்டுமில்லாம, மேற்கூறிய நிகழ்வில் இந்தியாவின் பிரதிநிதியான கோபிநாதன் அச்சங்குளங்கரை என்பவர் (மலையாளியா? மலையாளிகளே, எங்க மேல உங்களுக்கு அப்படி என்ன பாசம்? கடைசி வரை இருந்து கழுத்தறுக்கறீங்களே? :) ) தெரிவித்த கருத்துகளையும் கவனிக்க வேண்டியிருக்கு. அவர் கூறியது:
    "இந்த சிறப்புக் கூட்டம் கூட்டியதற்கான நோக்கமே சந்தேகத்திற்குரியதா இருக்கு. இப்போதுதான் இலங்கை மிகவும் கடினமா போராடி இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வந்திருக்கு. சர்வதேச சமூகம் அதற்கு துணையா இருந்து சமரசம், போரின் காயங்களை ஆற்றுவது போன்ற வகையில் பங்களிப்பதுதான் இப்போதைய தேவை. அதை விடுத்து, இலங்கையையே குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவது அரசியல் நோக்கங்களைக் கொண்டதாகும்"
    அப்படீன்னு நம்ம பிரதிநிதி உலக அரங்கில் போய் சொல்லிக்கிறாரு. :) (இங்க ஒரு 'ஜெய் ஹிந்த்' போட்டுக்கிறேன்) மேலும் அவர் சொன்னது,
    "non-state actors (அதாவது விடுதலைப் புலிகள்) செய்த மனித உரிமை மீறல்கள் குறித்தும் கேள்வி எழுப்பப் பட வேண்டும், அதற்கு சர்வதேச சமூகம் சற்றும் தயங்கக் கூடாது."

    (அப்படீன்னா state actors செய்த உரிமை மீறல்கள் பற்றி கேள்வியே கேக்கக் கூடாதுன்றாரா, சேட்டன்?)
  • சில நாட்களுக்கு முன்பு "நேபாளத்தில் நடந்த யுகப் புரட்சி", "நேபாளத்தில் நடந்த அதிசயம்" அப்படீன்னெல்லாம் சுய மைதூனப் பதிவுகள் வந்த வண்ணம் இருந்தன. அத்தகைய நேபாள நாட்டின் பிரதிநிதி தினேஷ் பட்டரை என்பவர் சந்தி சிரிக்கும் வகையில் கூறிய கருத்துகள் பின்வருமாறு:
    "விடுதலைப் புலிகளின் தீவிரவாதத்தின் தோல்வியை நேபாளம் வரவேற்கிறது. இது இலங்கையின் பன்முகத்தன்மை, ஒற்றுமை, நாணயம், போன்றவற்றுக்குக் கிடைத்த வெற்றியாகும். இலங்கை அதன் ஜனநாயகப் பாதையின் மீது வைத்திருக்கும் தணியாத நம்பிக்கையையும் உறுதியையும், மக்களின் அடிப்படை உரிமைகளை மதிக்கும் போக்கையும் நேபாளம் பாராட்டுகிறது."

  • வங்காள தேசம்: சில பல ஆண்டுகளுக்கு முன்பு ஏறத்தாழ இன்றைய ஈழத்தின் நிலையிலிருந்து அவலங்களைச் சந்தித்து, பிறகு பிரிவினை ஏற்பட்டு விடுதலையான ஒரு நாடு. அதன் வோட்டும் இலங்கையை ஆதரித்துத்தான். நெல்சன் மண்டேலா புகழ் தென் ஆப்பிரிகா - மிக மோசமான இன ஒடுக்குமுறையிலிருந்து ஒரு பத்து - இருபது ஆண்டுகளுக்கு முன்புதான் விடுதலை அடைந்த ஒரு நாடு. அதன் வோட்டும் இலங்கைக்கு ஆதரவாகவே அமைந்தது.

  • சீனா, ருஷ்யா, கியூபா, பாக்கிஸ்தான், இந்தோனேஷியா, மலேஷியா, எகிப்து, சவுதி போன்ற சர்வாதிகார நாடுகள் எப்படி ஒட்டளித்திருக்கும் என்று அனுமானித்திருந்ததால், அவற்றின் முடிவுகள் அவ்வளவாக வியப்பைத் தரவில்லை.

  • பின்காலனியாக்கம், மறுகாலனியாக்கம் என்றெல்லாம் பிதற்றும் அறிவுஜீவித்தன அரைவேக்காட்டுக் கருத்துரைகளைக் கடந்து நோக்கினால், ஒன்று தெளிவாகிறது. மனித உரிமைகளுக்காக சிறிதளவேனும் குரல் கொடுக்க முன்வரக் கூடிய நாடுகள் அனைத்தும் மேற்கத்திய நாடுகளே.

  • பொது மக்கள் மனித கேடயங்களா பயன்படுத்தப்பட்டாங்கன்னு எல்லாருமே சாமியாடி இருக்காங்க. அது பற்றிய விவாதங்களுக்குள்ள போக விரும்பல. ஆனா அதிகார அமைப்பில் இருந்திக்கிட்டு இப்படிப்பட்ட குற்றச்சாட்டை வைக்கும் இந்த நபர்கள் ஒரு கேடயமும் இல்லாமதான் உலவிக்கிட்டு இருக்காங்களா? z-security, y-securityன்னு தனது அதிகாரத்துக்கு உட்பட்ட எல்லா பாதுகாப்பு ஏற்பாட்டையும் செய்துக்கிட்டுதான் பாத்ரூம் கூட போகும் இத்தகைய நபர்கள், இத்தகைய குற்றச்சாட்டுகளை வைப்பதுதான் வேடிக்கை. ஒரு ஷூ கூட அவங்க மேல வந்து விழுந்து விடக்கூடாது, அல்லது ஒரு கறுப்புக் கொடி கூட அவர்களுக்கு முன்பு காண்பிக்கப் பட்டுவிடக் கூடாது என்றெல்லாம் முன்னேற்பாடு செய்து கொள்கிற அதிகார வர்க்கத்துக்கு இந்த குற்றச்சாட்டை வைக்க ஒரு தகுதியும் கிடையாது.

  • இந்த நிகழ்வுகளிலேயே உண்மையான அக்கறையோட பேசியவர்கள் தொண்டு நிறுவனங்களைச் சார்ந்தவர்கள்தான்னு தெரிய வருது. அம்னெஸ்டி (இதை அழகா தமிழ்ப்படுத்தி எங்கயோ படிச்சிருக்கேன், நினைவுக்கு வரல்ல), Human Rights Watch போன்ற அரசு சாரா (அல்லது நம் சேட்டனின் மொழியில் சொல்லணும்ன்னா, non-state actors) அமைப்புகளிலிருந்து பேசியவர்கள்தான் கொஞ்சமாவது உண்மையை பேசியிருக்காங்க போலயிருக்கு. அப்படீன்னா அரசு என்ற ஒழுங்குப்படுத்தப்பட்ட அமைப்பே மக்களின் உரிமையைப் பறிக்கும் / நசுக்கும் ஒரு இயக்கம்தானான்னு யோசிக்க வைக்குது. அரசுகளே இல்லாத ஒரு வருங்காலம் ஏற்படுமானால் அப்போதுதான் மனித உரிமைகள் கிடைப்பதற்கான சாத்தியங்கள் ஏற்படலாம்.

  • இது போன்ற நாடுகள் அங்கத்தினர்களா இருக்கும் வரை மனித உரிமைகள் எல்லாம் கானல் நீர்தான் என்பது இன்று ஈழத்தவர்களுக்கு மட்டுமில்லாம மனித சமுதாயத்திற்கே கிடைத்திருக்கும் ஒரு படிப்பினை ஆகும்.