சனி, டிசம்பர் 10, 2005

"கருத்துச் சுதந்திரம்னா என்னங்க?"

"அதுவா, எனக்குப் பிடிச்ச கருத்த சொல்றத்துக்கு உனக்கு சுதந்திரமிருக்குன்னு அர்த்தம்." முகமூடியின் templateஇல் உள்ள இவ்வரிகளை படித்து சிரித்து விட்டு நகர்ந்திருக்கிறேன். ஆனால் இன்றுதான் புரிந்தது இவ்வரிகளில் உள்ள உண்மை.

ஒரு வலைப்பதிவில் வெளியான கருத்தும் அதற்கு எதிர்வினையாக வந்த பின்னூட்டமும், என்னை சிந்திக்க வைத்தன. அப்பதிவின் சாரம் - சென்னைக்கு வந்த Bill Gates, கருணாநிதியைச் சந்தித்தது எவ்வாறு, ஏன், என்பதே. அதாவது, எந்த அரசுப் பொறுப்பிலும் இல்லாத ஒரு நபரை இந்தியாவின் பிரதிநிதியாகவோ அல்லது தமிழகத்தின் பிரதிநிதியாகவோ முன் நிறுத்தி, வருகை தரும் ஒரு உலக வர்த்தக முதலாளியைச் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது ஏன், எந்த அடிப்படையில் என்பதே கேள்வி. அதற்கு வந்த ஒரு பின்னூட்டம், "பதிவு நன்று, கருணாநிதியைத் தாக்குவதைத் தவிர்க்கவும்". சொல்லாமல் சொல்லப்பட்ட செய்தி - "கருணாநிதி என்ற நபர் விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட ஒரு மாமனிதர்"

வினோதமான இப்பின்னூட்டத்திற்கு எதிர்வினையாக நான் இவ்வாறு மறுமொழிந்தேன்: "நம் தமிழ்ச் சமூகத்தில் கருத்துச் சுதந்திரம் என்பது எந்த அளவில் உள்ளது என்று காண்பித்ததற்கு நன்றி. Bill Gates கருணாநிதியை எந்த அடிப்படையில் சந்தித்தார்? தயாநிதி மாறனின் தாத்தா என்ற வகையிலா? முன்பு Enronஇன் தலைவியும், ஒரு மாநில முதலமைச்சரைக் காக்க வைத்து விட்டு, அந்நேரத்தில் எந்த ஒரு பொறுப்பிலும் இல்லாத பால் தாக்கரேயைச் சந்தித்தார். அப்போது அது குறித்து ஊடகங்களில் கேள்வியெழுந்ததைப் போலவே இப்போது கருணாநிதி பற்றியும் கேட்கப்படுகிறது. இதை ஏன் 'தவிர்க்க' வேண்டுமென்கிறீர்கள்? விளக்கினால் விளங்கிக் கொள்வேன்" சில மணி நேரங்களுக்குப் பிறகு என் மறுமொழிக்கு ஏதேனும் எதிர்வினைகள் வந்துள்ளனவா என்று பார்த்தால், அந்தப் பதிவே தென்படவில்லை. எதற்கு வம்பு என்று அப்பதிவரே அகற்றி விட்டார் போலும்.

அதற்கு பதிலாக வேறொரு வலைப்பதிவில் ஒரு பதிவு வெளியிடப்பட்டிருந்தது. கருத்துச் சுதந்திரம் வேண்டும் என்ற நினைப்பையே நையாண்டி செய்யும் வகையில், நகைச்சுவை இரத்தினமாக ஜொலித்தது அப்பதிவு. "எதைத் தின்னால் பித்தம் தெளியும் என்று இருப்பவர்களுக்கெல்லாம் கருத்துச் சுதந்திரம் ஒரு கேடா" என்று அடிமனதைத் தொட்டது. "பித்தர்கள் எல்லோரும் அவர்களுடைய கருத்துச் சுதந்திரம் காலாவதியாகிப் போகுமுன் அதனைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்" என்று அன்புக் கட்டளையிட்டது. அவ்வாறு காலாவதியாகிப் போனால் அதைக் கொண்டாடும் நபர்கள் யாராயிருப்பார்கள் என்றும் ஊகிக்க முடிந்தது அப்பதிவிலிருந்து. நகைச்சுவைப் பதிவுகளை நகைச்சுவை உணர்வோடு இரசிப்பது நம் கடமையென்பதால், அதனையும் இரசித்து மகிழ்ந்தோம்.

மற்றபடி, என் கருத்துச் சுதந்திரமும் விரைவிலேயே காலாவதியாகிவிடும் அபாயமுள்ளதால், மேற்கொண்டு கருத்து கூற முற்படாமல், ஒரு ஜோடி ஜால்ராக்களை வாங்கி வைத்துக் கொண்டு, அவற்றை நன்கு ஒலிப்பதற்குப் பயிற்சி செய்து கொண்டிருப்பது சாலச் சிறந்தது என்ற முடிவுக்கு வந்திருக்கிறேன். பிற்காலத்தில் கை கொடுக்கலாம், பாருங்கள்?

6 கருத்துகள்:

குழலி / Kuzhali சொன்னது…

அப்பாவி : கருத்து சுதந்திரம்னா என்னங்க?

அண்ணாசாமி : அதுவா நமக்கு பிடிச்சவங்க என்ன சொன்னாலும் கருத்து சுதந்திரம் பிடிக்காதவங்க என்ன சொன்னாலும் பாசிசம்

அப்பாவி : அப்போ உங்களுக்கு அவங்களை பிடிக்குமா?

அண்ணாசாமி : எனக்கு பிடிக்காதவங்களுக்கு அவங்களை பிடிக்கலை

அப்பாவி : அடடே, அப்போ கருத்து சுதந்திரம்னா உங்களுக்கு பிடிக்காதவங்களுக்கு பிடிக்காதவர்கள் என்ன சொன்னாலும் அது கருத்து சுதந்திரம் பலே பலே


கருத்து சுதந்திரம் பற்றி இப்படியும் ஒரு டெம்ப்ளேட்ல இருக்கே பார்த்திங்களா?

Voice on Wings சொன்னது…

வாங்க, குழலி. நட்சத்திர வாரமெல்லாம் பலமாக போய்க் கொண்டிருப்பதாகத் தெரிகிறது?

நீங்கள் குறிப்பிட்ட templateஐயும் பார்த்திருக்கிறேன். ஆனால் இங்கு குறிப்பிட்டுள்ள நிகழ்வுகளுக்கும் அதற்கும் அவ்வளவாக தொடர்பு கிடையாது என்றே நினைக்கிறேன். ஏனென்றால், இங்கு குறிப்பிடப்பட்டவர்கள் யாரையும் எனக்குத் தெரியாது என்பதால் பிடித்தவர்கள் / பிடிக்காதவர்கள் என்ற கேள்விக்கே இடமில்லை.

குசும்பன் சொன்னது…

//ஒரு ஜோடி ஜால்ராக்களை வாங்கி வைத்துக் கொண்டு, அவற்றை நன்கு ஒலிப்பதற்குப் பயிற்சி செய்து கொண்டிருப்பது சாலச் சிறந்தது என்ற முடிவுக்கு வந்திருக்கிறேன். பிற்காலத்தில் கை கொடுக்கலாம், பாருங்கள்?
//

SUPER :-)

நிலா சொன்னது…

சரியாகச் சொல்லி இருக்கிறீர்கள். தான் உணர்வதுதான் சரி, தான் நம்புவது மட்டுமே உண்மை என்கிற குறுகிய மனப்பான்மைக்கு இன்னொரு முக்கிய காரணம் அறியாமைதான். அறிவுதான் மனசை விசாலப்படுத்துகிறது என்பது என் எண்ணம். (பட்டங்களும் விருதுகளும் பெற்றுவிட்டால் மட்டும் அறிவாளிகள் என்பதில்லை.). அப்படி விசாலமானாலொழிய ஒரு கருத்தை பல்வேறு கோணங்களில் பார்க்கிற பக்குவம் நமக்கு வரப்போவதில்லை.

நமக்கு சகிப்புத் தன்மை குறைவு என்பதை நாம் உணராததுதான் பிரச்சனை. உணர்ந்தால்தானே மாறமுடியும். (அடுத்த கொடும்பாவி எனக்குத்தான் என்று நினைக்கிறேன்). Exposure plays an important role in awareness.

இது தொடர்பாக நான் முன்பு எழுதிய இந்தப் பதிவை முடிந்தால் பாருங்கள்:

http://nilaraj.blogspot.com/2005/06/blog-post_03.html

பெயரில்லா சொன்னது…

கருணாநிதி விமரிசனத்திற்க்கு அப்பாற்பட்டவர் - ஆனால் அவர் எல்லாரையும் கண்டமேனிக்கு விமரிசிப்பார்.

கருணாநிதியை பெயர் சொல்லி எழுதக்கூடாது - ஆனால் அவர் மானங்கனியாக எதிராளிகளை எழுதுவார்.

கருணாநிதியை நக்கலடிக்கக்கூடாது - ஆனால் அவர் எல்லாரையும் நக்கலடிப்பார்.

கருணாநிதியை மறந்தும் கூட 'ஊதி' பெரிதாக்குவார் என்று சொல்லிவிடக்கூடாது - ஆனால் அவர் சம்பந்தம் சம்பந்தமேயில்லாத மேட்டருக்கு கூட ஜாதிகளை இழுத்துவிடுவார்

கருணாநிதி குறித்து யாரும் சும்மா கூட பேசக் கூடாது - ஆனால் அவர் ஆப் தி ரெக்கார்டாக நிருபர்களிடம் ரொம்பவே பேசுவார்.

கருணாநிதிக்கு....அடப்போங்கப்பா.. அந்த ஆளைப் பத்தி எல்லாருக்கும் தான் நல்லா தெரியுமே! வயசான காலத்திலே அப்படிதான் பெனாத்துவாரு. கண்டுக்காம விடுங்க!

Voice on Wings சொன்னது…

Kusumban, :-)

நிலா, உங்கள் பதிவை படித்தேன். emotional maturity பற்றி நீங்கள் கூறியிருப்பது முக்கியமாகப் படுகிறது.

அனானிமஸ், நான் குறிப்பிட்ட உதாரணத்தில் கருணாநிதி இடம்பெற்று விட்டது சந்தர்ப்பவசமான ஒரு நிகழ்வு. அவருக்கு பதிலாக வேறொரு செல்வாக்குள்ள பிரமுகரின் பெயர் அடிபட்டிருந்தாலும் இதே வகையான எதிர்வினைகளைக் காண வாய்ப்புள்ளது. அல்லது வேறு சர்ச்சைக்குரிய கருத்தைக் கூறினாலும் அதைத் தவிர்க்குமாறு மரியாதையுடன் கூடிய எச்சரிக்கைகள் வரலாம். மாற்றுக் கருத்துக்கான சகிப்புத்தன்மை நம்மிடையே குறைவாக உள்ளதையே இது காட்டுகிறது.