சனி, அக்டோபர் 29, 2005

ஒண்ணுக்கு அடிக்கும் போட்டி

அன்றாடங்காய்ச்சித் தமிழர்களே, தங்கள் காலரை (அப்படியொன்று இருந்தால்) தூக்கிவிட்டுக் கொள்ளுங்கள்! உங்கள் மொழி இப்போது செம்மொழி!!! அது மட்டுமல்ல, நம்மிடையே உள்ள நிதி படைத்தவர்களின் கருணையால் (மற்றும் தலையீட்டால்), இத்தகுதி வேறெந்த மொழிக்கும் கிடைக்கா வண்ணம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி......... எதுவும் நம் தமிழின் அருகில் கூட வரத் தகுதியற்று நிற்கின்றன. நாம் அடிக்கும் சிறுநீர் எவ்வளவு தூரம் பாய்கின்றது பார்த்தீர்களா?

யாருக்கு வேண்டும் காவிரி நீரும், குடிநீரும்? யாருக்கு வேண்டும் வேலை வாய்ப்புகள்? யாருக்கு வேண்டும் மழையில், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படாத, பாதுகாப்பான குடியிருப்புகள்? மறந்து விடுங்கள் உங்கள் பட்டினிகளை! மறந்து விடுங்கள் உங்கள் அவலங்களை! அதற்கு பதிலாக உங்கள் செம்மொழியான தமிழை நினைத்துப் பாருங்கள்! இரண்டாயிரம் ஆண்டுகளாக இவ்வுலகில் பேசப்பட்டு வருகிறதாம். இதுவொன்றே போதாதா, நீங்கள் உயிர் வாழ? தமிழனென்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா!!!

திங்கள், அக்டோபர் 24, 2005

ஒரு மலையாளப் படம்

தூக்கம் வராத ஒரு இரவு நேரத்தில் தொலைக்காட்சிப் பெட்டியின் முன்னமர்ந்து channel surfing செய்து கொண்டிருந்த போது, தூர்தர்ஷனில் ஆங்கில sub-titlesசுடன் ஓடிக்கொண்டிருந்த ஒரு மலையாளப் படம் கவனத்தைக் கவர்ந்தது. கதையின் பிரதானப் பாத்திரமாக 'ஷஹீனா' என்றப் பெயர் கொண்ட ஒரு கிராமத்துப் பெண். இவ்வேடத்தைத் தாங்கி நடித்தவர் புகழ் பெற்ற நடிகை மீரா ஜாஸ்மின். (ஆய்த எழுத்து / யுவா படத்தில் மாதவனின் மனைவி பாத்திரத்தில் வீணடிக்கப் பட்டவர்.) ஷஹீனா பள்ளியின் இறுதியாண்டுகளில் பயிலும் ஒரு மாணவி. தந்தையை இழந்த, தாயின் வளர்ப்பில் வாழும், படிப்பார்வம் நிறைந்தப் பெண். ஆண்களைக் கண்டால் அவளுக்கொரு பயம். அவளது பள்ளியாசிரியர் மட்டும் இதற்கு விதிவிலக்கு.

அவள் ஆனந்தமாகத் தனது தோழிகளுடன், அக்கிராமத்தின் வயல் பகுதிகளைக் கடந்து பள்ளிக்குச் சென்று திரும்பும் நேரத்தில், ஒரு பெண்களின் கூட்டம் அவர்களைக் கடந்து செல்கிறது. ஒவ்வொரு பெண்ணின் கையிலும் ஒரு குழந்தை. ஒவ்வொருத்தியின் முகத்திலும் துயரம். வரிசையாக, ஒருவர் பின் ஒருவராக, இச்சிறுமிகளைக் கடந்து செல்கிறது அக்கூட்டம். அவர்கள் யார், எங்கு செல்கின்றனர் என்றக் கேள்விகளுக்கெல்லாம் விடையின்றி, ஏதோ அவல நிலையிலிருப்பவர்கள் என்ற அறிகுறிகளை மட்டும் வழங்கி விட்டு, மேற்கொண்டு பயணிக்கிறது கதை.

மணமாகி மனைவி, மகள் மற்றும் தாயுடன் வாழும் ஒரு ஆணின் வீட்டிற்கு நம்மை அழைத்துச் செல்கிறது படம். அவன் தான் மறுமணம் செய்து கொள்ளப் போவதாக மனைவியிடம் அறிவிக்கிறான். இறந்து விடுவதாக அச்சுறுத்தும் மனைவியை சமாதானப் படுத்தி, தனக்கு துபாயில் வேலை கிடைக்க ஆகும் செலவில் ஒரு இருபத்தி ஐயாயிரம் ரூபாய்கள் குறைவதாகவும், அதனை அடைவதற்கே இம்மறுமணம் என்றும் காரணம் கூறிகிறான். பிறகு ஒரு மணத் தரகரின் உதவியுடன், ஷஹீனாவின் குடும்பத்தை நாடி, அவளை மணம் புரிகிறான். கனவுகளனைத்தும் சிதைக்கப்பட்டு ஒரு கைதியைப் போல் அவனுடன் அவனது வீட்டிற்குச் செல்கிறாள் ஷஹீனா. அவனது மனைவியும் தாயும் மகளும் அவளிடம் அன்பு செலுத்துகின்றனர். ஆனால், அவனோ, ஒரு மிருகத்தைப் போல் அவளை அணுகுகிறான். ஏற்கனவே ஆண்களின் மீதுள்ள அச்சத்தால், அவனை எதிர்த்துப் போராடி, கடித்து, பிறாண்டி என்று ஒவ்வொரு முறையும் அவனை விலக்குகிறாள் ஷஹீனா. இதையெல்லாம் கையாலாகாதத்தனத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறாள் அவனது முதல் மனைவி. சோபன அறையின் கதவை அவளது முகத்திற்கெதிராகவே அறைந்து மூடுகிறான் அவள் கணவன். அங்கு அவனுக்கேற்படும் காயங்களுக்கு, பிற்பாடு மருந்துகள் தடவுகிறாள் இம்முதல் மனைவி. இவற்றையெல்லாம் நையாண்டி செய்யும் அவனது தாய் அவனிடம் கூறவது, "நீ கொடுத்து வைத்தவன். உனது ஒரு மனைவி உனக்கு ஏற்படுத்தியக் காயங்களுக்கு உனது இன்னொரு மனைவி மருந்து போடுகிறாள். பெரும்பாலோருக்கு இந்த யோகம் கிடைக்காது."

ஷஹீனாவின் பிடிவாத குணத்தைப் போக்க, அவளுக்குப் பேயோட்டல்கள் நடத்தப்படுகின்றன. இச்சடங்கில் சுவாசித்தப் புகையினால் அவளுக்குக் காய்ச்சலேற்படுகிறது. அவளுக்கு அளிக்கப்படும் மருந்துடன் தூக்க மருந்தைக் கலக்க ஆணையிடுகிறான் கணவன். இதற்கு மறுத்துக் கூறியும், கட்டாயத்தால் வேறு வழியின்றி, அவனது கட்டளையை நிறைவேற்றுகிறாள் முதல் மனைவி. அதன் பிறகு மயக்க நிலையில் அவனால் வன்புணரப்படுகிறாள் ஷஹீனா. (சட்டப்படி மணமுடித்ததால், அவன் செய்தது வன்புணர்ச்சியல்ல, மென்புணர்ச்சியே என்று வாதிடக்கூடிய சமூகம் நம்முடையது) மயக்கம் தெளிந்தபின், என்ன நேர்ந்தது என்று உணரும் பக்குவமும் அவளுக்கு இருக்கவில்லை. கட்டிப்போடப்பட்டு, செயலற்ற நிலையில் தான் கொடுமைப்படுத்தப் பட்டதைப் போன்றவொரு உணர்வு / கெட்ட கனவு மட்டுமே மிஞ்சியிருந்தது அவளுக்கு. காரியம் முடிந்த நிலையில், அவளை வைத்துக் கொண்டு தன்னால் சமாளிக்க முடியாது, ஆகவே, அவளை விவாகரத்து செய்யப்போவதாக அறிவிக்கிறான் கணவன்.

ஷஹீனாவை அவளது தாய் வீட்டில் சேர்ப்பித்துவிட்டு, ஊர் பெரியவர்களின் ஒத்துழைப்புடன் அவளை விவாகரத்து செய்கிறான். பிடிவாதம் கொண்டு, தன்னைத் தொடுவதற்கும் அவள் அனுமதிக்கவில்லை என்று அவர்களுக்குக் காரணம் கூறுகிறான். அவளைத் தனது நாலாம் தாரமாக ஆக்கிக்கொள்ளும் நோக்கத்தில், ஊர் பெரியவரும் ஆர்வத்துடன் இதற்கு சம்மதிக்கிறார். மயக்க நிலையிலிருந்ததால் அவளும் தான் வன்புணரப்பட்டதை உணர்ந்திருக்காத நிலையில், கணவனுடன் படுக்கவில்லை என்றே தன் தாயிடம் கூறுகிறாள். விவாகரத்தானதில் மகிழ்ச்சியடைந்து, மீண்டும் பள்ளிக்குத் திரும்புகிறாள் ஷஹீனா. ஆங்கிலப் பாடம் மட்டும் கடினமாகவுள்ளது என்று ஆசிரியரிடம் கூற, அவர் அவளது வீட்டிற்கு வந்து சிறப்புப் பாடமெடுக்கிறார். அதனையும் கோணப் பார்வையுடன் பார்க்கிறது சமூகம். கடினமாக உழைத்து, இறுதித் தேர்வுக்குத் தயார் செய்து கொண்டு, கடைசியில் தேர்வறையில் மயக்கமடைகிறாள். மருத்துவமனையில் அவள் கர்ப்பமான செய்தி வெளிபடுகிறது. செய்தியைக் கேட்டு மண்டையைப் போடுகிறார் அவளது தாய்.

அனாதையான பெண்ணை ஊர் தூற்றுகிறது. அவளது ஆசிரியருடன் ஏற்பட்டத் தொடர்புதான் கர்ப்பத்திற்குக் காரணமென்கிறது. மதநூல்களிலிருந்து மேற்கோள் காட்டி, இத்தகையப் பெண்ணை என்ன செய்யவேண்டுமென்ற தீர்ப்புகள் கூறப்படுகின்றன. இதே வேறு நாடாகயிருந்திருந்தால் கல்லால் அடித்தே கொன்றிருப்பார்கள், ஆனால் நாம்தான் முற்போக்காளர்களாயிற்றே, ஆகவே இத்துடன் நிறுத்திக்கொண்டோமென்று தம் முதுகில் தாமே தட்டிவிட்டுக் கொள்கின்றனர் ஊர் மக்கள். கைக்குழந்தையுடன் மருத்துவமனையிலிருந்து வெளிவருகிறாள் ஷஹீனா.

அடுத்தக் காட்சியில், முன்பு பார்த்த அதே பெண்கள் கூட்டம். ஒருவர் பின் ஒருவராக, வயல் வரப்புகளின் மீது, கைக்குழந்தையுடனும் சோகமான முகத்துடனும், தரை பார்த்து நடக்கின்றனர் அப்பெண்கள். அவர்களில் ஒருத்தியாக, ஷஹீனாவும். எல்லோரும் ஒரு ஆற்றங்கறைக்குச் சென்று, குழந்தைகளைக் கறையில் இறக்கிவிட்டு, தண்ணீருக்குச் சென்று தம் பணிகளில் ஈடுபடுகின்றனர். காமெரா குழந்தைகள் பக்கம் வருகிறது. பத்து பதினைந்து குழந்தைகள், ஒரு பெரிய துணியின் மீது கிடத்தப் பட்ட நிலையில். அவை அழத் துவங்குகின்றன. சில நிமிடங்களுக்கு அவற்றின் ஒருமித்த ஓலக்குரல்கள் காட்டப்படுகின்றன. அவை ஒவ்வொன்றின் உருவாக்கமும் ஒரு சோகக்கதையாக, நமக்கு இதுவரை காண்பிக்கப்பட்ட ஒன்றைப் போலவே. காட்சி அகன்று மலையாள எழுத்துக்கள் 'சுபம்' என்றோ, 'மங்களம்' என்றோ, 'நன்றி' என்றோ, தெரிவிக்கின்றன.

கனத்த மனதை லேசாக்கிக் கொள்ள, ஒரு தமிழ் சானலுக்கு மாற்றி, அங்கு ஓடிக்கொண்டிருந்த வடிவேலுவின் தரக்குறைவான நகைச்சுவைக் காட்சியொன்றை சிறிது நேரம் பார்த்து விட்டு, இறுதியில் தூங்கிப்போனேன்.

பி.கு: படத்தின் பெயர் என்னவென்று தெரியவில்லை.

சனி, அக்டோபர் 22, 2005

உறையும் பனியில் உறைவிடமின்றி....

இவ்வாண்டின் தொடக்கத்திலேற்பட்ட சுனாமி பேரழிவில் தொடங்கி, மும்பை பெருமழை, அமெரிக்க கத்ரீனா / ரீட்டா கடும்புயல்கள் என்று வரிசையாக உலகின் ஏழை, எளிய மக்களைப் பதம் பார்த்து வந்த இயற்கையானது, இப்போது காஷ்மீர் நிலநடுக்கத்தின் வாயிலாகத் தன் கைவரிசையைக் காட்டியிருக்கிறது. மற்ற சம்பவங்களைப் போலல்லாது, இந்த முறை பாதிக்கப்பட்ட இடங்கள் எளிதில் சென்றடைய முடியாதவை. மலைப்பகுதிகளாகவும், அதிக வசதிகளற்ற பின்தங்கிய பகுதிகளாகவும் உள்ள இவ்விடங்களுக்கு உதவிப்பொருட்களையும் சேவகர்களையும் அனுப்பி நிவாரணப் பணிகளை மேற்கொள்ளுவது மாபெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. கடினமான நிலப்பரப்பின் காரணத்தால், மற்ற நிவாரணப் பணிகளை விட இங்கு ஆகும் செலவு அதிகமாகும்.

சாலைகள் பலவும் அழிக்கப்பட்டு விட்ட நிலையில், ஆகாய மார்க்கமாகவே உதவிகளைக் கொண்டு செல்ல வேண்டியக் கட்டாயம். அதற்குத் தேவைப்படும் ஹெலிகாப்டர்களின் எண்ணிக்கையில் பற்றாக்குறை. மேலும் இவற்றின் பயணத்திற்குத் தடையாக அவ்வப்போது பொழியும் அடைமழை. இதற்கு மத்தியில் இந்திய - பாக்கிஸ்தானிய சர்ச்சைகள், அரசியல்கள் என்ற சிக்கலான வரலாற்றுப் பின்னணியும் நிவாரணப்பணிகளுக்குச் சாதகமில்லாத நிலையை ஏற்படுத்தும் அவலம். இவ்வாறு, பல பிரச்சினைகளையும் தாண்டி, அவசர உதவிகளை விரைவில் முன்னெடுத்துச் சென்று, அவற்றை எதிர்பார்த்துக் காத்திருக்கும் சுமார் அரை கோடி பாதிக்கப்பட்ட மக்களின் துயரத்தைத் துடைக்க வேண்டிய பொறுப்பு, இன்று உலகக் குடிமக்களின் முன் வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அவர்களோ ஒவ்வொரு பேரழிவுக்குப் பிறகும் உதவி செய்து உதவி செய்து, இறுதியில் சோர்ந்து விட்டதன் அறிகுறிகளையே வெளிப்படுத்துகின்றனர். நிவாரணப் பணிகளுக்காக முன்னூறு மில்லியன் டாலர்களுக்கும் மேலாக நிதியுதவி தேவை என்று உலக நாடுகளுக்கு ஐ.நா. சபை விண்ணப்பித்துள்ள நிலையில், இதுவரை உதவித்தொகையாக எண்பத்தியாறு மில்லியன் டலர்களே உத்தரவாதம் செய்யப்பட்டுள்ளனவாம். (தகவல்: BBC Website) சுனாமி நிவாரணத்திற்கு தேவைக்கும் அதிகமாக நிதியுதவி புரிந்த உலக மக்கள், இன்று தயங்குவது அவர்களது சோர்வைத்தான் காட்டுகிறது.

தேவைப்படும் உதவிகள் உரிய நேரத்தில் சென்றடையாவிட்டால் அதன் பின் விளைவுகள் ஏராளம். சில நாட்களில் இமாலயப் பகுதிகளில் கடுங்குளிர் நிலை கொள்ளும். இந்நிலையில் நிலநடுக்கத்தால் வீடுகளை இழந்த 3 மில்லியன் மக்களுக்கு தற்காலிகமான கூடாரங்களையாவது வழங்காவிட்டால், கடுங்குளிரால் மேலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழக்க நேரிடுமென்று ஐ.நா.சபை எச்சரிக்கிறது. ஆனால் தற்போதைய நிலவரப்படி, ஐநூறு மக்களுக்கு ஒரு கூடாரம் என்ற விகிதத்தில்தான் இவ்வுதவி பாதிக்கப்பட்டவர்களைச் சென்றடைந்திருக்கிறது. உடனடியாக இக்கூடாரங்களின் விநியோகத்தைத் துரிதப்படுத்தவில்லையென்றால், மேற்கூறிய எச்சரிக்கை உண்மையாகிவிடும் அபாயமுள்ளது. இதற்கடுத்தபடியாக, உண்ண உணவு, மருத்துவ வசதிகள் என்று பலவகையான தேவைகள். (தகவல்: BBC)

சோர்வடைந்திருக்கும் நல்லுள்ளங்கள் மீண்டும் விழிப்படைந்து, தம் மனிதநேயத்தை விரைவில் வெளிப்படுத்துவார்களென நம்புவோம்.

புதன், அக்டோபர் 19, 2005

தணிக்கைகளற்ற ஓர் திரட்டி அமைப்பு

சமீபத்தில் தமிழ்மணம் திரட்டியில் சில மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, சில வலைப்பதிவுகள் தமிழ்மணத்திலிருந்து பல்வேறு காரணங்களுக்காக நீக்கம் செய்யப்படுகின்றன என்றுத் தெரிய வருகிறது. தமிழ்மண நிர்வாகிகளின் இம்முடிவுடன் நான் உடன்படாவிட்டாலும், இதனை அவர்களது் சொந்த முடிவாகக் கருதி மதிக்கிறேன். எனினும், தமிழிணையத்தில் கருத்துச் சுதந்திரம், பன்மைத்தன்மை ஆகியவற்றின் வருங்காலம் குறித்த கவலைகளையும் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. இந்தப் பின்னணியில் எனக்குத் தோன்றும் யோசனையை இங்கு முன்வைக்கிறேன்.

Technorati என்ற இணையச் சேவையை இங்கு பலரும் அறிந்திருக்கலாம். அது வலைப்பதிவுகளுக்கான #1 தேடும் தளமாகும். இச்சேவை அளிக்கும் ஒரு வசதி, பதிவுகளின் வகைச்சொல்லை (category or tag) வைத்துத் தேடல்கள் நிகழ்த்தக்கூடிய வசதியாகும். இதனைச் சாதகமாக்கிக் கொண்டு, ஒரு தடைகளற்ற வலைப்பதிவுத் திரட்டும் அமைப்பை உருவாக்குவதே என் திட்டம். இதன்படி,
  • இதில் சேர விரும்பும் ஒவ்வொரு பதிவரும் ஒரு பொதுவான வகைச்சொல்லைக் கொண்டு அவரது ஒவ்வொரு பதிவையும் வகைப்படுத்த வேண்டும். உ-ம், 'தமிழ்ப்பதிவுகள்' என்பது நான் முன்மொழியும் வகைச்சொல். ஒவ்வொரு பதிவும் இவ்வகைச்சொல்லைக் குறிப்பிட்டே வெளியிடப்பட வேண்டும். இதனைச் செய்வது சுலபம்:
<a href="http://technorati.com/tag/தமிழ்ப்பதிவுகள்" rel="tag">தமிழ்ப்பதிவுகள்</a>

என்ற html நிரலித் துண்டை பதிவின் இறுதியில் சேர்த்துக் கொண்டால் போதும். (In 'Edit html' mode)
  • பதிவை வெளியிட்ட பின்னர், Technoratiயின் இந்த வலைப்பக்கத்திற்குச் சென்று உங்கள் வலைப்பதிவின் URLஐ உள்ளிட வேண்டும். அதன் பிறகு அதிகப்படியாக ஒரு மணி நேரத்திற்குள் உங்கள் பதிவு அவர்களது பட்டியலில் சேர்த்துக் கொள்ளப்படுமாம்.
  • மேற்கண்டவாறு வகைப்படுத்தப்பட்ட பதிவுகளின் பட்டியலைக்காண http://www.technorati.com/tag/தமிழ்ப்பதிவுகள் என்றச் சுட்டியை உபயோகியுங்கள். தற்போது அங்கு எனது சோதனைப் பதிவுகள் சிலவற்றைக் காணலாம். இப்பட்டியலின் RSSஇன் சுட்டியும் இப்பக்கத்தில் காணலாம்.
தமிழ்மணத்திலிருந்து நீக்கப்பட்ட / நீங்கிக்கொண்ட, மற்றும் தம் கருத்துக்களுக்குத் தொடர்ந்து ஒரு வாசகர் வட்டத்தை விரும்பும் பதிவர்களுக்கும் அவர்களது விசுவாசிகளுக்கும் இது பயனுள்ளதாகயிருக்குமென்று நம்புகிறேன். யாருடையக் கட்டுப்பாட்டிலும் இல்லாததால், இது தனிமனித விருப்பு வெறுப்புகளுக்கப்பாற்பட்ட ஓர் அமைப்பாக இருக்கக்கூடுமென்று எதிர்பார்க்கிறேன்.


(This is how the 'tagging' appears in the post)

ஞாயிறு, அக்டோபர் 16, 2005

சுக்குமி ளகுதி இப்பிலி

உலக வர்த்தக சபையின் நிர்பந்தப்படி நம் அரசு TRIPS என்னும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதைப் பலர் அறிந்திருக்கலாம். இதன்படி, விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளுக்கானக் காப்புரிமை முன்பை விட இறுக்கமாகப் பாதுகாக்கப்பட்டு, அதனை அத்துமீறும் நபர்கள் / நிறுவனங்கள் மீது சட்டம் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகமாகியுள்ளது. இதனால், விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தும் மேலை / பன்னாட்டு / பெரிய நிறுவனங்கள், அவற்றால் தனித்துவம் பெற்று, அவற்றின் ஏகபோக விற்பனை உரிமையையும் அடைந்து விடுகின்றன. இத்தகுதியை அடைந்த பின், அவற்றின் பொருட்களை அதிக விலை கொடுத்தும் வாங்க வேண்டியக் கட்டாயத்திற்குத் தள்ளப்படுகின்றனர் பொதுமக்கள். விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளைப் பயன்படுத்தும் ஏகபோக உரிமையை, அதை நிகழ்த்தியவர்களுக்கே அளிப்பதால், அவற்றைச் சாதிப்பதற்குத் தேவையான ஆய்வு முயற்சிகள் ஊக்குவிக்கப்படுகின்றன என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. இருந்தும், அத்தியாவசிய / உயிர் காக்கும் மருந்துகள் தயாரிப்பிலும் இத்தகைய கொள்கைகள் பின்பற்றப்படும் பொழுது, அதனைக் கேள்விக்குட்படுத்த வேண்டியிருக்கிறது.

எய்ட்ஸ் போன்ற உயிர் கொல்லி நோய்களிலிருந்து காப்பாற்றும் மருந்துகளைச் சட்டப்படி தருவிக்க வேண்டுமென்றால் Pfizer, Merck போன்ற பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்து அதிக விலை கொடுத்தே வாங்க வேண்டியிருக்கிறது. எய்ட்ஸ் அபாயம் பரவியிருக்கும் மூன்றாம் உலக நாடுகளைச் சேர்ந்த பெரும்பாலோருக்கு அவற்றை வாங்கிக் கட்டுப்படியாகாது. நல்ல வேளையாக இந்தியாவின் Cipla போன்ற நிறுவனங்கள் இம்மருந்துகளை நகல் செய்து, generics என்ற வகையில் குறைந்த விலையில் தயாரித்து வருகின்றன. நாம் TRIPSஆல் தடுக்கி விழுவதற்கு முன் இது சாத்தியமாயிற்று. இத்தகைய நகல் மருந்துகளால் உலகின் வறுமை மிக்க நாடுகள் அடைந்து வரும் நன்மை பலருக்கும் தெரிந்ததே. Jeffrey Sachs என்னும் புகழ் பெற்றப் பொருளாதார வல்லுனர் மற்றும் ஐ.நா. சபை ஆலோசகர், அவரது The End of Poverty என்னும் நூலில், ஆப்பிரிக்க நாடுகளின் எயட்ஸுக்கு எதிரானப் போராட்டத்தில் Ciplaவின் மருந்துகள் ஆற்றும் பங்கைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். அவரது கூற்றுப்படி, ஆப்பிரிக்காவின் லட்சக்கணக்கான எய்ட்ஸ் நோயாளிகளில், சில ஆயிரம் பேர்களே Ciplaவின் குறைந்த விலை மருந்துகளையும் வாங்கும் வசதி படைத்தவர்களாம். நாளொன்றுக்கு ஒரு டாலர் செலவாகும் நகல் மருந்துகளுக்கு பதிலாக, அவர்கள் சட்டப்படி அசல் மருந்துகள் வாங்க வேண்டுமென்றால், குறைந்தது இருபது டாலர்களாவது செலவளிக்க வேண்டுமாம். அவ்வாறு கட்டாயமாக்கப்பட்டால், இப்போது தேறும் சில ஆயிரம் நோயாளிகளுக்கும் மருத்துவம் எனபது எட்டாக் கனியாகிவிடும் என்பதில் சந்தேகமில்லை. இதனைக் கருத்தில் கொண்டே, உலகச் சுகாதாரச் சபையும் இத்தகைய நகல் மருந்துகளின் பயன்பாட்டை அங்கீகரித்துள்ளது.

இந்நிலையில்தான் நம் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, இவ்வருடம் மார்ச் மாதத்தில், (பன்னாட்டு நிறுவனங்களுக்கு விலை போய்) அதன் TRIPS வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்துவதாக உறுதியளித்துள்ளது. இதன்படி, 1995ஆம் ஆண்டிற்குப் பிறகு பதிவு செய்யப்பட்ட விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளின் காப்புரிமை, நம் சட்டத்தால் கராராகப் பாதுகாக்கப்படுமாம். இப்போது வெகு வேகமாகப் பரவிக் கொண்டிருக்கும் bird flu (பறவைக் காய்ச்சல்?) நோயைக் குணப்படுத்த சுவிஸ் நிறுவனமான Roche தயாரிக்கும் Tamiflu என்ற மருந்தின் தேவை வெகுவாக அதிகரித்துள்ளது. 1995ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் அதன் காப்புரிமை இந்தியாவில் பதிவு செய்யப்பட்டதாம், ஆகவே காப்புரிமை மீறல்களுக்கு எதிராக வழக்கு தொடரலாமென்ற நம்பிக்கையிலிருக்கிறதாம் அந்நிறுவனம். அண்மையில் Cipla இம்மருந்தையும் நகலெடுத்திருகிறது, காப்புரிமை இல்லாத நாடுகளில் அதனை விற்கத் தயார் என்றும் அறிவித்துள்ளது. ஆனால், bird flu இந்தியாவையும் தாக்கும் பட்சத்தில், இம்மருந்தை இங்கு விற்க அனுமதியிருக்குமா என்பதுதான் கேள்விக்குறியாகியுள்ளது. Rocheயின் மருந்தின் விலை ஒரு dosageஇற்கு அறுபது டாலர்களாம் (சுமார் ரூ.3000). நிச்சயமாக Ciplaவின் நகலின் விலை அதில் ஒரு சிறியப் பாகமாகத்தான் இருக்கும். நம் ஏழை மக்களின் வசதிக்கேற்ற மனிதாபிமான விலையைத்தான் நிர்ணயிப்போம் என்று அதன் தலைவர் யூசுஃப் ஹமீத் அறிவித்துள்ளார். ஆனால், இந்நகல்களின் விற்பனையில் TRIPSஐக் காரணங்காட்டி நம் சட்டம் குறுக்கிடுமானால், அதைப் போன்ற வெட்கக்கேடு வேறில்லை. அவ்வாறானால், நம்மைப் போன்ற எளியக் குடிமக்கள், மருத்துவம் போன்ற ஆடம்பரங்களை ஓரங்கட்டிவிட்டு, நமக்குத் தெரிந்த 'சுக்குமி ளகுதி இப்பிலி' வகையறாக்களைக் கையாள வேண்டியதுதான்.