திங்கள், அக்டோபர் 19, 2009

ப. சிதம்பரம்

கொடுக்கப்படும் மனுக்கள் எல்லாமே இறுதியில் போய் சேருமிடம் குப்பைத் தொட்டிதான் என்ற நியதியிலிருந்து சற்றும் மாறாமல், இப்போதும் இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட நம் பாராளுமன்ற உறுப்பினர்களின் அறிக்கைகள் இறுதியில் நம் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திடம்தான் சமர்ப்பிக்கப் பட்டுள்ளது. அதைப் பெற்றுக் கொண்டு அவர் தெரிவித்தது - "ஏற்கனவே இலங்கைக்கு ரூ.500 கோடி பொருளுதவி உறுதியளிக்கப்பட்டுள்ளது. வேண்டுமானால் மேலும் 500 கோடியை அனுப்புவது குறித்து ஆலோசிக்கலாம்" என்பதே. தமிழர் பகுதிகளில் சிங்களர்களைக் குடியமர்த்துவது பொருளாதாரக் காரணங்களால் சற்று தொய்வடைந்திருந்ததாம். இந்தக் கூடுதல் உதவி கொண்டு அந்தப் பணி துரிதப் படுத்தப் படுமென நம்புவோம்.

ஒருவர் காலடி எடுத்து வைக்கும் இடமெல்லாம் உருப்படாமல் போவதற்கு சிறந்த உதாரணம் இந்த ப.சிதம்பரம். இந்தியப் பொருளாதாரத்தை சீர்குலைத்ததில் பெரும் பங்கு, என்ரான் ஊழலில் பெரும் பங்கு... என்று பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. ஒரு இந்தியனாக உணர்வதையே நிறுத்தியிருந்த காலக்கட்டத்தில் இவரை இந்திய நாட்டின் உள்துறை அமைச்சராக நியமித்த போது ஒரு குரூர சந்தோஷமே ஏற்பட்டது. நினைத்த வண்ணமே நிகழ்வுகளும் நடந்தேறிக் கொண்டிருப்பதைக் காண்கையில் கூடுதல் மகிழ்ச்சியே. எப்படியோ, இரும்பு மனிதர் பட்டேல் ஒருங்கிணைத்த இந்த நாடு, சில பிளாஸ்டிக் மனிதர்களால் சிதறுண்டு போவது குறித்து அதிகம் கவலைப்படும் நிலையில் இப்போது இல்லை.

ஆனால், கொடூரமான வகையில் நமது சக மனிதர்கள் ஒடுக்கப்படுவதைக் குறித்து எந்தவொரு சலனமுமில்லாமல், அதை இடக்கையால் புறந்தள்ளுவதை ஒத்த எதிர்வினையை ஆற்றக் கூடிய மனிதர்களே நம் பிரதிநிதிகள் என்று அறியும்போது, (இது ஆணாதிக்கப் பார்வையே என்றாலும்) ஒரு ஆண்மையற்றவனாகவே உணர்கிறேன்.