எனக்குப் பயனளித்தத் தகவலொன்றை இங்குப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். வலைப்பதிவுகளிலும் மடற்குழுக்களிலும் 'காதல் கவிதை', 'தமிழ் பாட்டு', 'பங்கு சந்தை', 'தேச துரோகி'......... என்றெல்லாம் எழுதிவிட்டுப் போய்விடுகிறோம். நானும் இதற்கு விதிவிலக்கல்ல. இணையத் தமிழுக்கு ஏற்பட்டிருக்கும் இத்தகைய நெருக்கடி நிலையை எப்படி எதிர்கொள்வது?
எனக்குத் தோன்றியவொரு யோசனை - back to basics. கூகிளியதில் இந்த வலைத்தளம் மாட்டியது. பன்னிரண்டே பக்கங்கள்தான். அதிக நேரம் பிடிக்காது. மொத்தத்தையும் படித்து முடியுங்கள். வெகு நாட்களாக இருந்து வந்த அனைத்துச் சந்தேகங்களையும் தீர்த்துக் கொள்ளுங்கள். முடிந்தால், உங்களுக்குத் தெரிந்த மற்ற இணைய எழுத்தாள / வலைப்பதிவ நண்பர்களுக்கும் இதனைப் பரிந்துரை செய்யுங்கள்.
மற்றது, அறிந்தோ அறியாமலோ எழுத்தில் புகுந்துவிடும் எழுத்துப் பிழைகள். 'அன்னியர்' பதிவுகளில் பல நாட்களாக வலம் வந்து கொண்டிருந்தார். நானும் 'பொருமை'யோடு சில இடங்களில் சுட்டிக்காட்டினேன். இருந்தும் 'ஆவரை' (இது, தமாஷானவொரு அ-ஆ பிழை) வீழ்த்த முடியவில்லை. வேறு சிலப் பிழைகளும் அடிக்கடித் தென்படுகின்றன, இப்போதைக்கு 'நியாபக'த்திற்கு வர மறுக்கிறது. இந்தப் 'பிண்ணனி'யில், நான் முன்வைக்க விரும்பும் யோசனை அல்லது வேண்டுகோள் - ஒரு நல்லத் தமிழ்-ஆங்கில அகராதி ஒன்றை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் அதிகம் பயன்படுத்தாதச் சொற்களை உபயோகிப்பதற்கு முன் ஒருமுறை அவற்றை அகராதியில் தேடிக் கண்டுபிடித்து அவற்றின் எழுத்துக்களையும் பொருட்களையும் சரிபாருங்கள். இப்படிச் செய்வதால் சில சமயம் பொருந்தாதச் சொற்களைப் பயன்படுத்தும் அபாயமும் தவிர்க்கப்படும். சொற்களைப் பற்றிய நம் புரிதலில் தவறிருந்தால், இந்தச் செயலினால் அது திருத்தம் பெறக்கூடும். இன்னொரு உத்தி - நீங்கள் உள்ளிட்ட சொல்லை, கூகிளில் வெட்டியொட்டுங்கள். 'என்னைப் பொருத்த வரை' என்று எழுதிவிட்டு, சந்தேகமாக இருந்தால் அதனை அப்படியே கூகிளுங்கள். பிழையிருந்தால் உங்கள் தேடலில் எதுவும் மாட்டாது, இல்லை உங்கள் பழையப் பதிவுகளே மாட்டலாம். (எனக்கு நேர்ந்ததைப் போல்). அதன் பிறகு 'பொறுத்த வரை' / 'பொருத்த வறை' என்றெல்லாம் மாற்றிப் பார்க்கலாம், சரியான விடை வரும் வரை :-)
இலக்கண விதிகளையும் சொல்வடிவங்களையும் ஐயமின்றி அறிந்த பின் அவற்றைக் கவனமாகக் கடைபிடிப்பது அடுத்த படி. பதிவுகளை / எழுத்துக்களை வெளியிடும் முன் ஒருமுறைக்கு இருமுறைகள் சரிபார்த்த பின்பே அதனை வெளியிடுங்கள். ஆங்கிலத்திலுள்ள spelling and grammar check போன்றத் தானியங்கு வசதிகள் நமக்கில்லாததால், நம் மானுட முயற்சியைக் கொண்டே பிழைகளைக் களைய வேண்டியிருக்கிறது. கவனத்துடன், தரமான, பிழையில்லாத வகையில் எழுத்துக்களை வெளியிடுவதும் தமிழுக்கு நாமளிக்கும் சிறப்பு, என்பது என் தாழ்மையானக் கருத்து.
இனியாவது 'காதல் கவிதை'களையும், 'பங்கு சந்தை'களையும் தவிர்ப்போம். மொழி வன்முறைகளிலிருந்துத் தமிழைக் காப்போம்.
3 கருத்துகள்:
அறிந்து கொள்வது எளிதாகத்தான் இருக்கும். பயன்படுத்தும் சமயத்தில்தான் காலை வாறுகிறது. புதுச்சேரி வலைத்தள அறிமுகத்திற்கு நன்றி.
பாலா, உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி. நீங்கள் கூறுவதில் உண்மையிருக்கிறது. எனவேதான் எழுதும் போது அதிக அளவில் கவனம் செலுத்தவேண்டுமென்கிறேன். ஒரு மென்பொருள் எழுதுபவர் பிழைகளின்றி அதிகவனத்துடன் எழுதுவதில்லையா? அது போலத்தான்.
ஓரு மென்பொருளில் எவ்வாறு பிழைகளை அனுமதிக்க முடியாதோ, அவ்வாறே அனைவரும் தம் எழுத்துக்களிலாவதுப் பிழைகளைச் சகித்துக் கொள்ளாத நிலையேற்பட்டால், இணையத்தில் இடப்படும் தமிழெழுத்துக்களின் ஒட்டுமொத்தமானத் தரமும் உயரக்கூடுமென்பது என் தாழ்மையானக் கருத்து.
விஓடபிள்யூ..நன்றி..விஓடபிள்யூ என்று நான் தேடிப் பார்த்தேன். எதுவும் தமிழில் கிடைக்கவில்லை.சரி பரவாயில்லை தவறாகவே இருக்கட்டும் என்று போட்டுவிட்டேன்.
கலக்குகிறீர்கள்..பொறுப்புடன் தான் செயல்படுவது என்று கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறீர்கள்.. வெற்றி பெற வாழ்த்துக்கள்.. கனவு மெய்ப்பட வேண்டும்.
கருத்துரையிடுக