எனது இளம்பருவத்தில் சென்னையின் ஒரு புறநகர்ப் பகுதியில் எங்களுக்கு வீடு ஒதுக்கப்பட்டு, ஆசையுடன் அதில் குடிபுகுந்தோம். வீட்டைச் சுற்றியிருந்த நிலம்தான் எங்களது தோட்டக்கலைக்கு ஒரு சோதனைக்களமாகத் திகழ்ந்தது. குடிபுகுந்த சில நாட்களிலேயே, ஒரு நாற்று மையத்திலிருந்து வந்த ஒரு விற்பனையாளர் தனது விற்பனைப் பேச்சால் எங்களைக் கவர, அவரிடம் பணத்தைத் தண்ணீராக செலவழித்து (இது இங்கு வழக்கமான அர்த்தத்தில் கூறப்பட்டுள்ளது. சென்னையில் 'தண்ணீராக செலவு செய்வது' என்றால் 'சிக்கனமாக' என்று புரிந்து கொள்ள வாய்ப்பிருப்பதால் இதைத் தெளிவுபடுத்துகிறேன்) பல நாற்றுகளை வாங்கி நட்டோம். 'ஒரப்பாக்கம்' (அசல் பெயர் - ஊரப்பாக்கம்) என்ற இடத்திலிருந்து வந்த இந்த நாற்றுகளில் பல, நல்ல தரமானவையாக இருந்தன. ஆதலால் எங்கள் வாழ்வில் ஒரப்பாக்கத்துக்காரர் ஒரு நீங்கா இடத்தைப் பெற்றிருந்தார். அவ்வப்போது அவரை நினைவு கூர்வதும், அவரது நாற்றுகள் பற்றிய பேச்சும் நடந்த வண்ணம் இருந்தது.
இருந்த குறைவான இடத்தில் நான்கு தென்னங்கன்றுகளை நட்டார். நான்கும் ஆகாயத்தை எட்டின. அவற்றில் இரண்டு காய்த்தன, ஒன்று இன்றும் காய்த்துக் கொண்டிருக்கிறது. காய்க்காத இரண்டிற்கான அறிவியல் காரணத்தை, என் தாயார் அவருக்கு மட்டுமே புரியும் வகையில் விளக்குவார், நமக்குத்தான் பொறுமையிருக்காது கேட்பதற்கு. காய்த்தவற்றில் ஒன்றை கட்டட வேலைக்காக சாய்க்க வேண்டியிருந்தது. மிஞ்சிய ஒன்றில் இருக்கும் காய்களை என் தாயார் ஆள் வைத்து இறக்குவதெல்லாம் கிடையாது. அவற்றின் பளுவால் மரத்திலிருந்து பிய்த்துக் கொண்டு தானாகவே விழும் காய்களை பணிப்பெண் திரட்டிக் கொண்டு வருவார். அவற்றை வீட்டின் ஒரு மூலையில் குவித்து வைத்திருப்பார்கள். ஒவ்வொரு முறை சென்னைக்குச் செல்லும் போதும் அவற்றின் நார் உரிப்பது, தேங்காயை உடைத்து, அதிலிருந்து பத்தைகளைச் சுரண்டியெடுப்பது போன்ற வேலைகள் எனக்கு நிச்சயம் அளிக்கப்படும். அதன் பிறகு கிடைக்கும் சட்டினியின் சுவையை மனதில் கொண்டு, இவ்வேலைகளைப் பொருட்படுத்துவதில்லை.
ஒரப்பாக்கத்துக்காரர் நட்ட மற்றொரு கன்று கொய்யா. ஹைதராபாத் கொய்யா என்று கூறி எங்களிடம் விற்றிருந்தார். ஏதோ விற்பனைத் தந்திரம் என்று நாங்களும் அதன் 'ஹைதராபாத்' அடைமொழிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கவில்லை. நன்றாகவே வளர்ந்து காய்த்தது இம்மரம். எங்கள் மாடிப்பகுதியிலிருந்து அதன் காய்/கனிகள் கைக்கெட்டும் அருகாமையிலிருந்தன. சிறு வயதில் எனக்குப் பிடித்த பொழுது போக்கு - ஒரு கதைப் புத்தகத்தை எடுத்துக் கொண்டு, இக்கொய்யா மரத்திலிருந்து ஒரு நாலைந்து காய்/கனிகளைக் கொய்து கொண்டு, படுக்கைத் தலையணையில் சாய்ந்து கொண்டு, சாப்பிட்டுக்கொண்டே படிப்பதுதான். அணில்கள்தான் எங்களுக்குப் போட்டியாக, நாங்கள் பார்ப்பதற்கு முன்பே இக்கனிகளை முடித்துக் கொண்டிருந்தன. இதற்குத் தீர்வாக, காய்கள் கனிவதற்கு முன்பு அவற்றை ஒரு பிளாஸ்டிக் உறையால் சுற்றி மூடும் தந்திரத்தைக் கற்றோம். இதனால் (எங்கள் கைக்கெட்டிய) கனிகள் அணில்களிடமிருந்து தப்பின. இது போன்ற பல உத்திகளை தொலைக்காட்சியில் 'வயலும் வாழ்வும்' நிகழ்ச்சி, மற்றும் நாற்று மையங்களில் கிடைத்த ஆலோசனைகள் ஆகியவற்றிலிருந்து பெற்றோம். வேலையில் சேர்ந்து ஹைதராபாத் வந்ததும்தான் தெரிந்தது, இங்கு கிடைக்கும் கொய்யாவின் சுவை எங்கள் வீட்டுக் கொய்யாக்களைப் போலவே இருந்தது. இந்தக் கொய்யா மரமும் பின்னாளில் கட்டட வேலைக்காக வெட்டப்பட்டது. இதை ஒவ்வொரு paraவிலும் கூறினால் சோகம்தான் மிஞ்சுமென்பதால், இனி இதைக் குறிப்பிடாமல் விட்டு விடுகிறேன்.
நன்கு காய்த்த இன்னொரு மரம் நெல்லி. இதுவும் ஒரப்பாக்கத்துக்காரரின் பங்களிப்புதான். சிறிய காய்களைக் கொண்ட வகையைச் சார்ந்தது இம்மரம். கொத்து கொத்தாகக் காய்த்திருக்கும். மரத்தைப் பிடித்து உலக்கினாலேயே பொலபொலவென்று உதிரும். ஆனால் இவ்வாறு உதிரும் காய்கள் பக்கத்து வீட்டில்தான் சென்று விழுமென்பதால் நாங்கள் அவ்வாறு உலுக்குவதில்லை. வேறு வழிகளில் கவனமாகப் பறித்துத்தான் அவற்றை உண்போம். அதிகமான புளிப்பில்லாமல், ஒரு நல்ல ருசியைக் கொண்டிருந்தன இக்காய்கள். அவற்றிலுள்ள கொட்டையைத் துப்புவதற்கு சோம்பல் பட்டு, அவற்றை அப்படியே கடித்து விழுங்கி விடுவேன். இவற்றைத் தவிர, மா, மாதுளை, எலுமிச்சை, சப்போட்டா ஆகியவற்றையும் நட்டார், ஆனால் அவை நன்றாக வரவில்லை. விரைவில் அவற்றை அகற்றி விட்டோம். அவர் வைத்த இரு மலர்ச்செடிகள் மனோரஞ்சிதம் மற்றும் மகிழம். முன்னது ஒரு புதரைப் போல் வளர்ந்து, அட்டகாசமான மணத்தைக் கொண்ட பூக்களை பூத்தது. பச்சை வண்ணம் கொண்ட இப்பூக்களின் மணம் ஊரையே தூக்கும் தன்மையைக் கொண்டிருந்தது. ஆனால், மகிழமோ ஒரு christmas treeயைப் போல் நெட்டையாக வளர்ந்து ஒரு பூவும் பூக்கவில்லை. நாயைக் கட்டிப்போடுவதற்கு மட்டுமே இம்மரம் உபயோகப்பட்டது.
இதுவரை நாங்கள் எடுத்த strategic அதாவது தொலைநோக்குப் பார்வையுடன் செய்த முயற்சிகளைப் பற்றிக் கூறினேன். இப்போது tactical அதாவது குறுகிய காலப் பலன்களுக்காக எடுத்த முயற்சிகளைப் பற்றிப் பார்ப்போம். மலர்ச்செடிகள் பலவற்றை நட்டு, குட்டு பட்டு, விட்டகன்றோம். ரோஜாச் செடிகள்தான் மிகுந்த ஏமாற்றத்தை அளித்தன. என்னவெல்லாமோ செய்து பார்த்தோம் அவற்றை வளர்த்து பூக்க வைப்பதற்கு. ஒவ்வொரு முறையும் தோல்வியைத் தழுவினோம். மல்லிக்கொடி பரவாயில்லாமல் வளர்ந்து, பூக்கவும் செய்தது. எனக்கு மிகவும் பிடித்த மலர் மல்லிதான். அதன் மணம் ஆளைக் கிறங்க அடிக்கும். மல்லிப்பூ பெரிய அழகென்று கூற இயலாது. ஆனால் அதன் குணமான மணம் ஏற்படுத்தும் பாதிப்பு, வேறொரு அழகான மலர் ஏற்படுத்தும் பாதிப்பை விடப் பல மடங்கு அதிகமே. (இத்தத்துவம் மனிதர்களுக்கும் பொருந்தலாம் என்று சந்தில் சிந்து பாடிவிடுகிறேன்) இன்னொரு வகை மலர் உண்டு. கொடியில் பூக்கும், காலையில் பார்த்தால் உதிர்ந்து, தரையில் குப்புற விழுந்திருக்கும். வெள்ளை நிற இதழ்களும், சிவப்பு நிறக் காம்புப் பகுதியும் கொண்ட இப்பூக்கள் தரையில் உதிர்ந்திருக்கும் காட்சி, அதன் வண்ணங்கள் எல்லாவற்றையும் சேர்த்து நோக்கினால், ஏதோ இயற்கையே கோலமிட்டது போல் தோன்றும். இப்பூவின் பெயர் அந்திமந்தாரை என்று நினைக்கிறேன். இக்கொடியும் சில காலம் வாழ்ந்து மறைந்தது. கனகாம்பரம், செம்பருத்தி, டிசம்பர் பூ, செண்பகம் போன்ற மரபு வழி வந்த வகைகளோடு, exora, dahlia, julia(?) போன்ற இறக்குமதி வகைப் பூக்களையும் வளர்த்துப் பார்த்தோம். சென்னை மற்றும் சுற்றுப் பகுதிகளிலுள்ள அனைத்து தோட்டக்கலை மற்றும் நாற்று விற்கும் மையங்களுக்கும் பயணம் செய்து, அங்கிருந்து செடி வகைகளையும், விதைகளையும் தருவித்து நட்டோம் / விதைத்தோம். தரையில் நிலைக்காத இனங்களை பூந்தொட்டிகளில் வளர்த்துப் பார்த்தோம். இவற்றிலெல்லாம் எனக்குப் பிடிக்காத வகை ornamental எனப்படும் தோற்ற அழகிற்காக வைக்கப்படும் செடிகள்தான். குரோட்டன்ஸ், வண்ண வண்ண இலைகளைக் கொண்ட செடிகள், சப்பாத்திக் கள்ளிகள் (cactii) போன்றவை. இவற்றோடு ஏதோ ஒரு செயற்கைத்தனம் ஒட்டிக்கொண்டிருப்பதைப் போல் உணர்ந்திருக்கிறேன்.
வீட்டின் முன்னே மலர்ச்செடிகளென்றால், பின்புறம் காய்கறிச் செடிகள். பாத்திகள் வெட்டி, அவற்றின் ஒரமாக, கத்திரி, வெண்டை, தக்காளி போன்ற வகைகளைப் பயிர் செய்தோம். கத்திரி அதிகமாகக் காய்த்தது (பறித்து bucketகளில் சேகரிக்கும் அளவிற்கு). மற்ற இரண்டும் பெயருக்குக் காய்த்துவிட்டு, அழிந்து போயின. இச்செடிகளை அகற்றி விட்டு, பூசணியை வைத்தோம். இது ராட்சதக் கொடியாக பின்புறம் முழுவதும் படர்ந்தது, ஆனால் காய்க்கவில்லை. புடலங்கொடிகள் வைத்தோம், ஒரளவுக்குக் காய்த்தது. அதன் காய்கள் பிஞ்சுகளாக இருந்தபோது அவற்றிலிருந்து ஒரு சணல் கயிற்றில் கல்லைக் கட்டித் தொங்க விடுவோம், அதன் இழுப்பில், காய்கள் நீளமாக வளருமென்று எங்கோ கிடைத்த செய்தியை நம்பி. வாழைக்கன்று வைத்து, வாழையடி வாழையாக அது விரிவடைந்தது. அவற்றின் கனிகள் ஏனோ பிடிக்கவில்லை. அதற்கும் முற்றுப்புள்ளி. அதே போல், பப்பாளியும் வைரஸ் கிருமியைப் போல் எங்கள் வீட்டில் இனப்பெருக்கம் செய்து கொண்டு, நூற்றுக்கணக்கான கனிகளை அளித்தது. ஒரு கோடை விடுமுறையில், எனது பெற்றோர்கள் எங்களை ஊருக்கு அனுப்பி விட்டு, உணவுக்கு பதிலாக பப்பாளிகளை மட்டுமே உண்டு உயிர் வாழ்ந்தார்களாம். நல்ல சுவைதான் அக்கனிகள்.
இன்னொரு மகத்தான தோல்வி, வீட்டின் முன் புல்வெளி போட எடுத்துக் கொண்ட முயற்சிகள். இருந்த சிறிய இடத்தில் ஒரு லில்லி குளம் போல் அமைத்து அதனைச் சுற்றி புல் வளர்ப்பது என்று முடிவு செய்தோம். அருகம்புல், கோரைப்புல், கொரியப்புல் (Korean grass) என்று பலவகைகளில் முயன்றோம். சென்னை வெயிலின் சீற்றம் ஒரு புறமென்றால், வீட்டில் ஏதாவது மராமத்து செய்ய வருபவர்களின் மிதிபாடுகள் மறுபுறம் என்று, இப்புல்வெளி ஒரு நிறைவேறாத கனவாகவே இருந்தது. லில்லியும் ஏமாற்றி விட, அதற்கு பதிலாக, தொட்டியில் மீன்கள் வளர்க்கத் தொடங்கினோம். வெள்ளை, கறுப்பு, சிவப்பு, மஞ்சள் என்று நிறத்திற்கு ஒரு ஜோடி வாங்கி, தொட்டியில் விட்டோம். நாளடைவில் தொட்டியில் நூற்றுக்கணக்கான மீன் குட்டிகள், வெள்ளை, கறுப்பு, சிவப்பு, மஞ்சள் மற்றும் இடைப்பட்ட நிறங்களிலும்!!!! மீன்களுக்கு நிறவெறி கிடையாது போலும். ஒரு முறை ஒரு பெரிய மீன் வகையைச் சேர்ந்த மீனை விட்டோம். தொட்டியிலிருந்து எகிறிக் கொண்டே இருந்தது. கவனித்த வரையில் அதைப் பொறுக்கி, மீண்டும் தொட்டியில் விட்டுக் கொண்டிருந்தோம். ஆனால் நாங்கள் கவனிக்காத நேரத்தில் "நம்மால இந்த குண்டு சட்டியிலல்லாம் குதிர ஓட்ட முடியாதுபா" என்று இவ்வுலகை விட்டே எகிறி விட்டது அம்மீன்.
இடையில் நாங்கள் சென்னையிலிருந்து இடம்பெயர நேர்ந்ததால் மேற்கொண்டு தோட்டப்பணிகளைக் கைவிடலாயிற்று. மற்றும் தண்ணீர் தட்டுப்பாடு, முன்பு குறிப்பிட்ட கட்டட வேலைகள், வீட்டை விரிவாக்கியது என்ற பல காரணங்களால், மிகக் குறைந்த அளவிலேயே இன்று தோட்டப்பணி தொடருகின்றது, அதுவும் பூந்தொட்டிகளில். (தாயாருக்கு) வேறு துறைகளில் ஆர்வம் பெருகியதும் ஒரு காரணமாயிருக்கலாம். தண்ணீர் தட்டுப்பாட்டை எதிர்கொள்ள ஒரு tanker லாரி அளவுக்கு கொள்ளளவுள்ள ஒரு பாதாள நீர்த்தொட்டி (sump) ஒன்றை அமைத்திருப்பதால் அதற்கு அதிக அளவில் இடம் தேவைப்பட்டது. மிஞ்சிய இடங்களிலும் சிமெண்ட் தரைப் பூச்சு செய்து, மண் பரப்பு என்பதே இன்று மறைந்து விட்டது. காலை செய்தித்தாளைப் படித்துக் கொண்டிருக்கும்போது, வெளியே தோட்டத்திலிருந்து வேறு வகையான செய்திகள் (குறிப்பிட்ட செடி துளிர் விட்டதையோ, அல்லது மொட்டு விட்டதையோ அல்லது அதன் மொட்டு திறந்து பூத்திருப்பதையோ பற்றிய செய்திகள்) ஒலிபரப்பான அந்த நாட்கள் இனி திரும்பப் பெற முடியாதவையென்றுதான் தோன்றுகிறது.
தமிழ்ப்பதிவுகள்
2 கருத்துகள்:
உங்கள் அனுபவம் எனக்குமிருக்கிறது.வீட்டுத்தோட்டம் செய்து அதை அனுபவித்தவர்களுக்குத்தான் அது இல்லாதபோது அதன் இன்பம் புரியும்.நல்லதொரு பதிவு
தீவு, உங்களுக்கும் இக்கலையில் ஆர்வமிருப்பது கண்டு மகிழ்ச்சி. வருகை தந்தமைக்கு நன்றி.
கருத்துரையிடுக