வெள்ளி, பிப்ரவரி 20, 2009

போர்

கடைநிலைக் காவல் வீரருக்கும்
கடைநிலை வழக்கறிஞருக்கும்,
அதிகாரக் கைக்கூலியின்
சூழ்ச்சியின் பேரில்.

புலம்புகிறான் கைக்கூலி
தேசிய ஊடகங்களில், தன்
தேசியச் சார்பு நிலைப்பாட்டுக்குத்
தான் தரும் விலையென
(சொல்லாமல் விட்டது - அவனது
மாநில எதிர்ப்பு நிலைப்பாடு குறித்து)

ஊடகமும் ஆமோதிக்கிறது,
முட்டை எறிவைக்
கல்லெறிவெனத்
திரித்துக் கூறி.
எம் எழுச்சியை
உலகமே தூற்றட்டுமென.

கடைநிலைச் சமூகம்
குருதி தெறிக்கப் போர் புரிய,
இக்காட்டுமிராண்டித்தனத்தை
இவ்வுலகமே தூற்ற,
கள்ளச் சிரிப்புச் சிரிக்கிறது
பார்ப்பனியம்.
தன் சூழ்ச்சிக்கு
ஈடு இணையே
கிடையாதென...

வெள்ளி, பிப்ரவரி 06, 2009

கலைஞரைக் கும்முவது சரியா?

இந்தக் கேள்விதான் இப்போ பதிவுகளில் சூடாக விவாதிக்கப்பட்டு வருது. சரின்னு ஒரு அணியும், தவறுன்னு ஒரு அணியும், சரி - ஆனா அதைச் செய்வதற்கும் ஒரு தகுதி இருக்கணும்ன்னு (அதாவது, அவரது கடந்த கால எல்லா சாதக / பாதகச் செயல்களையும் விமர்சனமில்லாம ஆதரிச்சவங்களுக்குத்தான் இப்போ அவரைக் கும்மறதுக்கு தகுதியோ உரிமையோ இருக்குன்னு) மூன்றாவதா ஒரு அணியும் கருத்து தெரிவிச்சிக்கிட்டு இருக்காங்க.

என்னைப் பொறுத்தவரை, கலைஞரையோ, ஜெயலலிதாவையோ, மன்மோகனையோ, சோனியாவையோ கும்முவதில் ஒரு பயனும் இல்லை. அவர்களை என் உணர்வுகளை மதிப்பவர்களா, என் மக்களுக்காக எதுவும் செய்யக்கூடியவர்களா கருதுவதை நிறுத்தியே பல காலமாகி விட்டது. இப்போதைய உடனடி சிந்தனை பெருந்துயரத்தில் இருக்கும் நம் உறவுகளான ஈழத்தவர்களை எப்படி காப்பாற்றுவது என்பதுதான். அதற்கு நம்மிடம் என்ன ஆயுதம் இருக்கு என்பதுதான் மற்ற எல்லா சிந்தனைகளையும் விட முன்னுரிமை பெறுவது. எந்தக் கட்சி சார்புகளும் இல்லாத ஒரு சாமானியனாக, என்னிடம் இருப்பது எனது வோட்டு என்ற ஒரே துருப்புச் சீட்டுதான். (முத்துக்குமாரைப் போல் உடல் என்ற துருப்புச் சீட்டையெல்லாம் வழங்கும் அளவுக்கு எனக்கு வீரம் கிடையாது என்பதை வெளிப்படையாகவே தெரிவித்துக் கொள்கிறேன்). பெரும்பாலனவர்களின் நிலையும் இதுதான்னு நம்பறேன்.

இந்த வோட்டு என்ற ஆயுதத்தை எப்படி மிகுந்த சக்தி வாய்ந்த விதத்தில் பயன்படுத்துவது? (How to use it in the most effective manner?) மற்ற சூழல்களில் சிறந்த ஆட்சியைத் தரக்கூடிய கட்சிக்கு வாக்களித்து அதைப் பயன்படுத்தலாம். ஆனால் இன்றைய சூழலிலோ அதைப் பயன்படுத்தாமல் இருப்பதுதான் அதன் மிகுந்த வீரியமான பயன்பாடாக அமையும். தொலைக்காட்சி விளம்பரத்தைப் பார்த்திருப்பீர்கள் - 'election ke din, aap vote nahi kare tho, aap so rahen hein'. (தேர்தல் தினத்தன்று நீங்கள் வோட்டளிக்கச் செல்லவில்லை என்றால் நீங்கள் தூங்கவதாகப் பொருள்) அந்தத் தூக்கம்தான் இப்போது ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமூகமும் செய்ய வேண்டியது. நம் துயரைக் கண்டும் காணாதது போல் இருக்கும் மத்திய அரசு, அதற்குத் துணை போகும் மாநிலக் கூட்டணிக் கட்சிகள்...... இவர்கள் அனைவரையும் எழுப்ப, நம் தூக்கத்தால்தான் முடியும்.

இந்த வோட்டு என்பது நம்மால் மிகக் குறைவாக மதிக்கப் படுகிறது என்று கருதுகிறேன். அண்மைய இடைத்தேர்தலில் ஒவ்வொரு வோட்டுக்கும் பல ஆயிரம் ரூபாய்கள் வழங்கப்பட்டதாக அறிகிறேன். அது போலவே, கடந்த சட்டமன்றத் தேர்தலிலும் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி போன்ற விலை மதிப்பு மிக்க பரிசுகளை வழங்கியே ஆட்சியைப் பிடித்திருக்கிறது தற்போதைய தமிழக அரசு. ஆகவே, ஒவ்வொரு வோட்டும் நிச்சயமாக பல ஆயிரம் ரூபாய்கள் (அல்லது அதை விட அதிக) மதிப்புடையது. இன்றைய சூழலிலோ அது நம் உயிருக்குச் சமானமானது; நம் இனத்தின் வருங்காலத்திற்குச் சமானமானது. அந்த வோட்டை ஒரு கட்சிக்கு ஆதரவாக வழங்குவதோ, தத்தமது கணவன் / மனைவியையே வேறொருவருக்கு விட்டுக் கொடுப்பதற்குச் சமானமானது. நிச்சயமாக அதைச் செய்ய நாம் விரும்ப மாட்டோம். இன உணர்வு என்றெல்லாம் கூறுவதை விட, சுயமரியாதை உள்ள எந்தத் தமிழனும், மனிதாபிமானம் உள்ள தமிழர் மற்றும் தமிழரல்லாத எந்தத் தமிழக / புதுவை வாக்காளரும், தமது வோட்டை தமது உயிருக்கும் மேலானதாகக் கருதி, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதை எந்தக் கட்சிக்கும் வழங்காதிருக்க வேண்டும்.

இதைப் பற்றி நான் எழுதிய முந்தைய பதிவு.

செவ்வாய், பிப்ரவரி 03, 2009

ஈழம்: இனி நாம் செய்யக் கூடியது

வருகிற நாட்கள் தமிழக மக்கள் இலங்கை நிலவரம் குறித்து தங்களது நிலைப்பாட்டை (அழுத்தமாக) வெளிப்படுத்தும் வகையில் அமையும்ன்னு நம்பறேன். நாளை ஒரு வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறப் போகுது. அது மாபெரும் வெற்றியடையணும்ங்கறது என்னோட ஆழ்ந்த விருப்பம். கொஞ்சம் கூட வெட்கம், தன்மானம் போன்ற எதுவுமில்லாத திமுகவும் போர்நிறுத்தம் கோரி (யாரு கிட்ட?) ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி பிப்ரவரி ஏழாம் தேதி ஒரு போராட்டத்தை அறிவிச்சிருக்கு. (தேசிய அளவில் கவனிப்பைப் பெறுவதற்காகவாவது திமுக போன்ற கட்சிகளின் பங்களிப்பு தேவைப்படுவது ஒரு வருத்தமான நிலை) மக்களாகிய நாம் உடனடியா செய்யக்கூடியது இது போன்ற போராட்டங்களுக்கு ஆதரவு தந்து அவற்றை வெற்றி பெறச் செய்வதுதான். அடுத்த கட்டமா என்ன செய்யலாம்ன்னு எனக்குத் தோன்றிய சில எண்ணங்களை இங்க பதிவு செய்கிறேன்.

தற்போதைய தமிழக விரோத காங்கிரசின் ஆட்சி இன்னும் சில மாதங்களில் முடிவுக்கு வருது. நாடாளுமன்றத் தேர்தல் மே மாதம் வாக்கில் நடக்கலாம்னு தெரிய வருது. (இன்னும் மூன்று மாதங்கள்தான்). நம் ஆறு / ஏழு கோடி தமிழர்களின் தயவால் ஆட்சியை கைப்பற்றும் முயற்சியில் இந்தத் தமிழக விரோத காங்கிரசும், இஸ்லாமிய விரோத பா.ஜ.க.வும் நம் முன் வந்து scavenging for votes நடவடிக்கையில் ஈடுபடப்போறாங்க. நாம் உறுதி செய்ய வேண்டியது, இவற்றில் மற்றும் இதிலிருந்து எந்தவொரு பிரதிநிதியும் இந்திய நாடாளுமன்றத்திற்கு அனுப்பப் படக்கூடாது. தமிழக விரோத காங்கிரசும், இஸ்லாமிய விரோத பாஜகவும் நம் தயவில்லாமலேயே மத்தியில் ஆட்சியை அமைத்துக் கொள்ளட்டும். நம்மை எவ்வகையிலும் பிரதிநிதித்துவப்படுத்தாத இந்தக் கட்சிகளுக்கு நாம் ஆதரவு தரவேண்டியதில்லை. இதன் நோக்கம் இந்தியா என்னும் அரசமைப்பால் நம் உணர்வுகள் மதிக்கப்படவில்லை என்பதை அழுத்தமாகப் பதிவு செய்வதுதான். இனிமேலும் இந்தியப் பாராளுமன்ற மக்களாட்சியில் நம்பிக்கை வைக்கத் தயாராயில்லை என்பதை அழுத்தமாகப் பதிவதுதான் இதனால் ஏற்படும் பலன்.

காஷ்மீர் தேர்தலில் 60% வாக்குப் பதிவு என்பதை வைத்து காஷ்மீர் மக்கள் இந்தியாவுக்கு ஆதரவளித்துள்ளனர் என்று நிறுவ முயலுகின்றன இந்திய ஊடகங்கள். அதே அடிப்படையில் இந்திய அரசுக்கு நம்மிடம் ஆதரவில்லை என்பதையும் நாம் வாக்குச்சாவடிகளுக்குச் செல்லாமல் பதிவு செய்வோம். (இதன் விளைவாக என்னென்ன மாறுதல்கள் தமிழக வரலாற்றில் ஏற்படக்கூடும் என்பது எவரது கணிப்புகளுக்கும் அப்பாற்பட்டது).

சற்றே ambitious ஆன மேற்கூறிய திட்டத்தைப் போலவே, மற்றொரு திட்டம். ஊடகப் புறக்கணிப்பு. நம்முடைய சந்தா / patronageஇன் அடிப்படையில் இயங்கிக் கொண்டு, ஆனால் நமக்கு எதிரான பரப்புரைகளை மேற்கொள்ளும் செய்தி / காட்சி ஊடகங்களைப் புறக்கணிப்பது. அமெரிக்கக் கறுப்பினப் போராட்டத்தில் Montgomery bus boycott என்ற நிகழ்வு குறிப்பிடத்தக்கது. அங்கு பேருந்துகளில் கடைப்பிடிக்கப்பட்ட இன ஒதுக்குமுறைக்கு எதிராக அதன் பயணிகள் ஒட்டுமொத்தமாக பேருந்துகளைப் புறக்கணித்தனராம். அதன் விளைவாக அங்கு பொருளாதார சீர்குலைவு ஏற்பட்டு, பிறகு அந்த ஒதுக்குமுறை சட்ட விரோதமானது என்று தீர்ப்பானது. Dangers of Tamil Chauvinism என்று பத்தி எழுதும் நாளிதழ்களை அவற்றின் சிங்கார சென்னைத் தலைமை அலுவலகத்திலேயே திவாலாகும் நிலையை நம்மால் ஏற்படுத்த முடியும். நம் பிரச்சனை குறித்து தேசியத் தொலைக்காட்சிகளை விடக் குறைவான coverage செய்யும் தமிழ் சீரியல் / மானாட்ட மயிலாட்டத் தொலைக்காட்சிகளை அனைவரும் புறக்கணித்தால், அவற்றின் TRP கணக்குகளெல்லாம் அடிவாங்கி அவற்றின் விளம்பர வருவாய்களை பாதிக்கும். அதன் பிறகாவது நம் பிரச்சனைகளை முன்நிறுத்துவார்கள் என்று தோன்றுகிறது. Let's vote with our (non) voting & (non) buying power.

தற்போது கொந்தளிப்பு நிலையிலிருக்கும் தமிழுணர்வாளர்கள், உயிர்த் தியாகம் போன்றவற்றில் ஈடுபடுவதை விடுத்து, தமது எதிர்ப்பை மேற்கூறிய உத்திகள் மற்றும் அதற்கான பரப்புரைகள், போன்றவற்றில் செலவிட வேண்டும் என்பதே எனது விருப்பம்.