செவ்வாய், ஜனவரி 29, 2008

அட்சய பாத்திரம் ஏற்படுத்திய எண்ணங்கள்

'அட்சய பாத்ரா' என்ற தொண்டு நிறுவனத்தை அறிமுகம் செய்து இம்சை என்ற பதிவர் ஒரு இடுகையை வெளியிட்டிருக்கிறார், கண்டிப்பாகப் படியுங்கள். அவர்களின் தளத்தைப் பார்வையிட்டுக் கொண்டே வந்ததில் எனது பிரமிப்பைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அவர்களது சேவையால் பள்ளிகளில் drop-out rate எனப்படும் 'மாணவர்கள் பள்ளியிலிருந்து நின்று விடும் விகிதம்' குறைந்துள்ளது என்று கணக்கெடுத்து வெளியிட்டுள்ளார்கள். சிறு துளி பெரு வெள்ளம் என்பது போல், எந்தவொரு சிறிய நல்லிணக்க முயற்சியும் பாராட்டப்பட வேண்டியதே. அதனால் எவ்வளவு சிறியவொரு மாற்றத்தை ஏற்படுத்த முடிந்தாலும் அதுவும் பலரது வாழ்வில் ஒளியேற்றக்கூடிய சாத்தியமுள்ளது என்ற வகையில் இந்த முயற்சிக்கு எனது முழு ஆதரவு.

ஆனாலும், ஒரு சில உறுத்தல்கள் இருப்பதையும் மறுக்க முடியாது. முதலில் இதன் பின்னணியில் இருப்பவர்கள் குறித்து ஆராய்ந்தேன். இன்ஃபோஸிஸ் நிறுவனத்தினர் என்ற தகவல் கிடைத்தது. பாராட்டப்பட வேண்டியதுதான். என்றாலும் நிறுவனங்கள் social responsibility என்ற பெயரில் செய்யும் கேலிக்கூத்துகளை சற்று எச்சரிக்கை உணர்வுடனேயே அணுகி வந்திருக்கிறேன். நர்மதைத் திட்ட எதிர்ப்புக் குழு, போபால் விஷவாயுவால் பாதிக்கப்பட்டவர்கள் நலனுக்காகப் போராடும் குழுக்கள், போன்ற மக்கள் இயக்கங்கள் அளிக்கும் நம்பகத்தன்மையை இந்த நிறுவன ஆதரவு தொண்டுக் குழுக்கள் ஏனோ அளிப்பதில்லை. (ஏன் என்பது பிறகு)

தளத்தின் மற்ற பக்கங்களையும் புரட்டிக் கொண்டு வந்த போது ஒரு செய்தி அடிக்கடி repeat ஆவது போல் இருந்தது. அதாவது, அவர்கள் குழந்தைகளுக்காகத் தயாரிக்கும் உணவு யாருடைய கையும் படாமல் சுத்தமாகத் தயாரிக்கப்படுகிறது என்ற செய்தி. சத்துணவுக் கூடங்களில் பல்லி விழுந்த உணவெல்லாம் பரிமாறப்படலாம் என்ற நிலையோடு ஒப்பிடுகையில் இது ஆறுதலான ஒரு நிலைதான். ஆனாலும் மீண்டும் மீண்டும் உணர்த்தப்படும் 'யார் கையும் படாமல் தயாரிக்கப் பட்டது' என்ற செய்தி அவர்களது மனநிலையை வெளிப்படுத்துகிறதோ என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது. யாருடைய வீட்டிலும் யாரும் கையுரைகளை அணிந்து கொண்டு உணவு தயாரிப்பதில்லை. கைப்பட தயாரித்த உணவைத்தான் நாம் அனைவரும் விரும்பி உண்டு கொண்டிருக்கிறோம்.அவர்களது சமையலறைகளில் பாதுகாப்பு கருதி எடுக்கும் கையுரை அணிதல் போன்ற நடவடிக்கைகளைக் குறை கூறவில்லை. ஆனால் அதை அடிக்கொரு முறை கூறிக்கொள்ளும் நோக்கம் என்ன என்பதுதான் யோசிக்க வைக்கிறது. "எங்கள் ஊழியர்கள் எத்தகையவர்களாக இருந்தாலும் அவர்கள் கை பட்டு அசுத்தமாகாத உணவுதான் எங்களால் விநியோகிக்கப் படுகிறது" என்ற மேட்டுக்குடிச் சிந்தனைதான் இப்படி பக்கத்திற்குப் பக்கம் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறதோ என்றொரு ஐயம். வலைத்தளத்தைப் படித்து ஆதரவளிக்க முன்வரக்கூடிய இதர மேட்டுக்குடியினருக்கும் இது தேவையான செய்தியாக இருக்கக் கூடும் என்பதே இங்கிருக்கும் அவல நிலை.

அதே போல் repeat ஆகும் இன்னொரு செய்தி - இத்திட்டத்தால் பலனடைந்த குழந்தைகளின் குடும்பச் சூழல் பற்றிய தகவல்களில் "தந்தை குடிகாரன்" என்ற செய்தி (விமர்சனத் தொனியில்). "குழந்தைக்கு உணவளிக்க வக்கில்லாமல் தண்ணியடிக்கும் தந்தை" என்ற மேட்டுக்குடிப் பார்வைதான் இது. எனது வீட்டுக்கெதிரே ஒரு வீட்டை உடைத்துக் கொண்டிருந்தார்கள். ஒரு வீட்டின் கூறைப்பகுதிதான் (concrete roof) வலிமையானது என்பது தெரிந்திருக்கலாம். அதை ஒரு ஐந்து பேர் ஒரு பெரிய சுத்தியல் போன்ற கருவியைக் கொண்டு தகர்த்துக் கொண்டிருந்தார்கள். இந்த வேலையைச் செய்யகூடிய மக்களை எந்த வேலையும் செய்ய வைக்கலாம் என்பதே எனக்கு ஏற்பட்ட உணர்வு (ஆங்கிலத்தில் தெளிவாகக் கூறுகிறேன் - if somebody could be motivated to do this work, they can be motivated to do anything else) . முகமது யூனுஸ் போன்றவர்களோடு நான் வேறுபடுவது இங்குதான். தன்னை முன்னேற்றிக் கொள்ளும் உத்வேகமில்லாதவர்கள் என்று ஆண்களை ஒட்டு மொத்தமாக ஒதுக்கி வைத்து விட்டவர்கள் அவர்களே. Sorry for digressing - நான் கூற வருவது, வாழ்க்கை கடினமானது. அந்த சுத்தியல் கூலியாட்கள் இரவு தூங்குவதற்காக செய்ய வேண்டியதைச் செய்தால்தான் அவர்களால் தூங்க முடியும் என்பது நம்மைப் போன்ற மேட்டுக்குடிகளுக்குப் புரியவே புரியாது.

இப்போது million dollar macro-economic கேள்வி. இலவச மதிய உணவுதான் தீர்வா என்ற கேள்வி. தமிழகத்தில் புரட்சித் தலைவர் கொண்டு வந்த திட்டம். அரசின் குற்ற உணர்வால் உந்தப்பட்டு எடுத்த முடிவு. மனிதர்களின் வாழ்வு முறைகளை, வாழ்வாதாரங்களை திரும்பிப் பெற முடியாத வண்ணம் (irreversible) மாற்றியமைத்து அவர்களை வீடின்றி, நிலமின்றி, அகதிகளாக அலைய விட்ட அரசு, அவர்களது ஏழ்மைக்குக் காரணமான அரசு, மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்து அவர்களுக்கு சோத்துப் பிச்சை போட்டது. தொடர்ந்து வந்த தனியார்மயமாக்கம், மேலும் லட்சக்கணக்கானோரை நிலமற்றவர்களாக்கி, அவர்களை வறுமைக்கோட்டுக்கு கீழே தள்ளியது. அந்த தனியார்கள் இப்போது social responsibility என்று பகல் வேஷம் போட்டுக் கொண்டு, குற்ற உணர்வால் உந்தப்பட்டு சோத்துப் பிச்சை போடுகிறார்களோ என்று யோசிக்க வைக்கிறது.

காலை மிதித்து சாரி சொல்லாமல் செல்பவர்கள் இருக்கிறார்கள். அவர்களை விட காலை மிதித்து சாரி சொல்பவர்கள் உயர்ந்தவர்களே. இவர்கள் இருவரையும் விட உயர்ந்தவர்கள், யார் காலையும் மிதிக்காமல் கவனமாக செல்பவர்கள்ன்னு சொல்லித்தான் தெரிய வேண்டியதில்லைன்னு நினைக்கறேன்.

புதன், ஜனவரி 23, 2008

எப்படி வேண்ணா இருக்கலாம்

அண்மையில் சில பதிவுலக மூத்தவர்கள் வெளியிட்டிருக்கிற சில கருத்துகளால் வாயடைச்சி போயிருக்கேன். அந்த வியப்பை பதிவு செஞ்சிடலாமுன்னு.........

ஓஷோவையும் பெரியாரையும் ஒப்பிட்டு சுகுணா திவாகர் ஒரு இடுகை வெளியிட்டிருக்காரு. அதுல மு.சுந்தரமூர்த்தி பின்வரும் கருத்து தெரிவிச்சிருக்காரு:

//இருவரும் பாலுறவு இன்பத்தின் தேவையை வலியுறுத்தும் அதேவேளையில் கருவுறுதலை நிராகரிக்கின்றனர்.//

It should be quite opposit. Sexual pleasure is an incentive to engage in reproductive activity. All animals, except humans, engage in sexual activities for reproductive purpose and do not care for sexual pleasure at other times. Only humans turned this natural activity upside down--do it for pleasure even when not needed much like other human habits such eating more than we need to. And calls like this to have sex but shun the responsibility of bearing children sounds revolutionary but it is irrational. It tries to take women's liberation too far.
கொஞ்சம் சிரமம் பாக்காம அவரது கருத்தை மொழி பெயர்த்தோம்ன்னா:
உண்மையில் அதற்கு நேர்மாறாக இருக்க வேண்டும். இனவிருத்தியை ஊக்குவிப்பதற்கே உடலுறவு இன்பமயமானதாக உள்ளது. மனித இனத்தைத் தவிர மற்ற உயிரினங்கள் அனைத்தும் உடலுறவை இனவிருத்திக்காகவே மேற்கொள்கின்றன. அதிலுள்ள இன்பத்தை ஒரு பொருட்டாகவே எண்ணுவதில்லை. ஆனால் மனிதர்கள் மட்டும், (இனவிருத்தி என்கிற) தேவை இல்லாத போதும் இன்பத்திற்காக உடலுறவில் ஈடுபடுகிறார்கள், அவர்களது (தேவைக்கதிகமாக உண்பது போன்ற) மற்ற தேவையற்ற பழக்கங்களைப் போலவே. உடலுறவை ஆதரிக்கும் ஆனால் மகப்பேற்றை எதிர்க்கும் இத்தகைய அறைகூவல்கள் புரட்சிகரமானவையாகத் தோன்றலாம், ஆனால் அவை பகுத்தறிவு அடிப்படையில் எழுபவை அல்ல. இவை பெண் விடுதலையை வரம்புக்கு மீறி எடுத்துச் செல்பவை.
இந்தக் கருத்திலுள்ள அனுமானங்கள், போதிக்கப்படும் நெறிகள், ஒரு தனிநபர் முடிவுக்குள் மூக்கை நுழைக்கும் அத்துமீறல்............... இப்படி எதில் ஆரம்பிச்சி சொல்றது? உடலுறவு இன்பமா இருக்கு, சாப்பாடு இன்பமா இருக்கு, இசை இன்பமா இருக்கு, ஒரு மலரின் மணம் இன்பமா இருக்கு......... இவை அனைத்துக்கும் எதாவது காரண காரியம் இருந்துதான் இப்படி இன்பமா இருக்கா? அந்த காரணத்துக்கு கர்த்தா யாரு? 'இயற்கை அன்னை'ன்னு எதாவது கற்பிதமா? இன விருத்தி ஏற்படாம உடலுறவு கொண்டா யாருடைய உணர்வுகள் / நம்பிக்கைகள் புண்படுத்தப்படுது? நான் கூடலைக் கொண்டாடுவதால் உங்கள் தட்டிலிருக்கும் உணவு பறிக்கப்படுதா? மேலே கூறியிருக்கிற (போதும் நிறுத்திக்கோன்னு சொல்ற) கருத்துக்கும் மத அடிப்படைவாதத்திற்கும் என்ன வேறுபாடு? பெண் விடுதலைக்குன்னு எதாவது வரம்பு இருக்கா? யாருடைய விடுதலைக்கும் எதுவும் வரம்பு இருக்கா? அந்த வரம்பை விதிக்கும் யோக்கியவான் யாரு? அவருக்கு என்ன தகுதி?

இதைப்போலவே, நான் வாயடைச்சி போன இன்னொரு கருத்து, காசி 'ப்ளாக் பற்றிய தொலைக்காட்சி நிகழ்ச்சி' என்ற இடுகையில் பின்னூட்டத்தில் தெரிவிச்ச பின்வரும் கருத்து:
ஆங்கில வலைப்பதிவுகளில் புனைவுகள் எழுதுபவர் பத்தில் ஒன்றுகூட இல்லை, ஆனால் தமிழனை கற்பனையிலேயே மூழ்கடிக்க போட்டிபோட்டுக்கொண்டு பத்திரிகைகளோடு இப்போது வலைப்பதிவுகளும் வரிந்துகட்டுகின்றன. இது சரியான அறிகுறியல்ல (இதை இங்கே சொல்வது பலருக்கும் பிடிக்காது என்று தெரிந்தாலும் இதுதான் உண்மை). காத்திரமான வாழ்வியல் சிந்தனைகள், அன்றாட வாழ்க்கைக்குப் பயனுள்ள தகவல்கள் அதிகம் எழுதப்படாததும், எழுதப்படுபவை கவனம் பெறாததும் இதனாலேயே. என்று எழுத்தாளனாகும் ஆசையை விட்டொழிக்கிறாரோ அன்றே ஒரு வலைப்பதிவர் தன் முழு வீச்சையும் வெளிப்படுத்த முடியும். மாறாக பத்தியாளனாக (columnist) ஆசை வையுங்கள் என வேண்டுகோளை முன்வைக்கிறேன்.
போதனைகள்........ போதனைகள்................. :) ஆங்கில வலைப்பதிவுகள் ஏதோ உயர்வான இடத்திலிருப்பவை என்பது போன்ற அனுமானங்கள். எது நல்ல 'அறிகுறி', எது அல்ல என்று அறிந்து தெளிந்த தொனி. என்ன மாதிரியான வெளியீடுகள் வெளி வரலாம்கிறத தீர்மானிக்கும் அதிகாரம் அதைப் படைப்பவரைத் தவிர வேறு யாருக்கும் கிடையாது. கோலம், சமையல் குறிப்பிலிருந்து, கடித் துணுக்குகள் வரை எதை வேண்டுமானாலும் ஒருவர் தனது பதிவில் வெளியிடலாம். போணியாகும் சரக்கு எதுவானாலும் அதைக் கடைப்பரப்பலாம். கதை கவிதைகளுக்கு ஒரு பெரிய வாசகர் வட்டம் இருக்கு நான் பார்த்த வரை. (நானும் அந்த வட்டத்துக்குள்ள இருக்கேன்.) அது நல்ல அறிகுறியா இல்லையா என்பது பற்றியெல்லாம் கவலைப்படாம அத்தகைய வெளியீடுகள் மேலும் மேலும் தொடரணும்.

இறுதியா சொல்லிக்க விரும்பறது............ எப்படி வேணா இருங்க.

ஞாயிறு, ஜனவரி 20, 2008

ஜல்லி கட்டு கதை

(குறிப்பு - தலைப்பில் வல்லெழுத்து மிகுதல் வேண்டுமென்றே தவற விடப்பட்டுள்ளது. காணாமல் போன 'க்' கை வேண்டிய இடத்தில் நிரப்பிக் கொள்ளவும்)

ஜல்லிக்கட்டுங்கற 'வீர' விளையாட்டு சங்க காலங்களிலிருந்தே நடைபெற்று வருதுன்னு ஒரு குமிழை ஊதி ஊதி பெருசாக்கிக்கிட்டே போகிற இன்றைய நிலையில், அந்தக் குமிழை ஒரு சின்னக் குத்தூசி கொண்டு லேசா குத்தியிருக்காங்க இந்தப் பக்கத்தில்.

ஒரு மிரண்டு ஒடும் வாயில்லா ஜீவனை கூட்டத்தோடு கூட்டமா விரட்டிப் பிடித்துத்தான் நம்ம தொன்மையான தமிழ் மரபைக் கட்டிக்காக்கணும்ங்கிற பரிதாபமான நிலையில் நம்ம தமிழ் மரபும் இல்லைன்னுதான் நினைக்கறேன். புலிகளைக் கொல்வது வீரமா ஒரு காலத்தில் பார்க்கப்பட்டு வந்தது. இப்பொ project tigerன்னு வந்து அவை அரசாலும் சட்டத்தாலும் பாதுக்காக்கப்படற நிலை இன்னைக்கி நிலவுது. அது மட்டுமில்லாம, SPCA, Blue Cross அப்படீன்னெல்லாம் நாகரீகத்தின் அறிகுறிகள் நம்ம இருண்ட பிரதேசங்களிலயும் தலைதூக்க ஆரம்பிச்சிருக்கு. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, நாம எப்படி நடத்தப் படணும்ன்னு எதிர்பார்க்கிறோமோ அதே மாதிரி நம்மைச் சார்ந்து வாழும் ஜீவன்களையும் நடத்துவோம். (மனுஷர் உங்களுக்கு எப்படிச் செய்யவேண்டுமென்று விரும்புகிறீர்களோ, அப்படியே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள். - லூக்கா 6:31)

அடுத்த வருசமாவது இந்த கோரப் பழக்கம் தடை செய்யப்படும்கிற நம்பிக்கையில்........

சனி, ஜனவரி 19, 2008

முற்போக்கு வாங்கல்லையோ, முற்போக்கு

திருமணத்திற்குத் தாலியோ, சேர்ந்து வாழ்வதற்குத் திருமணமோ தேவையில்லைன்னுதான் நினைக்கறேன். திருமணம் என்பதே பொருளாதாரம் சம்மந்தப்பட்டதுதான். இருவருக்குமே பொருளாதாரக் கட்டாயங்கள் இல்லாத போது (அப்படி அமைவது பலருக்கு சாத்தியமாகாமல் போகலாம்), திருமணம் என்ற ஏற்பாடும் தேவையற்றதுதான்.

புகுந்த வீடு பொறந்த வீடு வகையறாக்களைப் பற்றி கருத்து கூற விரும்பல்ல. (ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழும் வீட்டில் மற்றவர்களுக்கு வேலையில்லை என்பது எனது கருத்து)

தாலி கட்டுதல் பெண்ணடிமைத்தனம்தான். வேறு மதங்களில் இருவருக்கும் மோதிரம் அணிவிக்கும் பழக்கமுள்ளது. அது ஒரு சமத்துவ நிலையாகப் படுகிறது. இங்கு மனைவிக்கு மட்டும் தாலி என்னும் போது, அது ஒரு பக்க சாய்வு நிலையாகத் தெரிகிறது.

திருமணத்திற்குப் பிறகு வேற்று மனிதர்களுடன் காதல் கொள்ளலாமான்னா, அது கூடாதுன்னுதான் தோணுது. Free love பற்றி எனக்கு அவ்வளவு பரிச்சியம் கிடையாது. 'இருவருக்கும் சம்மதமென்றால் இருவரும் வேற்று மனிதர்களைக் காதலிக்கலாம்' அப்படின்னுல்லாம் சொல்ற அளவுக்கு எனக்கு இன்னும் முதிர்ச்சி ஏற்படல்ல.

fantasyகளை ஒருவருக்கொருவர் தெரியப்படுத்துவதா வேண்டாமா என்று பொதுப்படையாக கூற முடியாது. வாழ்க்கைத் துணையின் மனநிலையைப் பொறுத்து அதை அவரவர்கள் முடிவு செய்வது நல்லது.

*********

இவையெல்லாம் திருமணத்திற்கு தாலி தேவையா? அப்படீன்னு ஒருத்தர் வெளியிட்டிருக்கிற இடுகைக்கு நான் அளித்த பின்னூட்டம். பொது நலன் கருதி அதை இங்க மீள் பதிவு செஞ்சிருக்கேன் :)

வெள்ளி, ஜனவரி 11, 2008

ஒரு லட்ச ரூபாய் கார்க் கனவுகள்

வியாழன், ஜனவரி 03, 2008

போதும் புது வருடம்

ஒரு சக வலைப்பதிவர் ஒருத்தங்க தப்பித் தவறி தன்னோட புது வருட வாழ்த்துச் செய்தியை ஒரு நீளமான மின்னஞ்சல் பட்டியலுக்கு அனுப்பிட்டாங்க. அதுக்குப்புறம் தவறை உணர்ந்து மன்னிப்பும் கேட்டுக்கிட்டாங்க. அதோட "reply to all' பண்ண வேண்டாம்ன்னு வேண்டுகோள் வேற வச்சிட்டாங்க. ஆனா, வேண்டுகோளுக்கெல்லாம் செவி சாய்க்கிற ரகமா நாம? அடுத்த புத்தாண்டு வரைக்கும் இந்த வாழ்த்துச் செய்திகள் வந்துக்கிட்டே இருக்கும் போல இருக்கு.

அந்தப் பட்டியல்ல தமிழ் தெரியாதவங்க பலரோட மின்னஞ்சல் இருக்கு. அதோட, பலரின் அலுவலக மின்னஞ்சல்கள் வேற அதில இடம் பெற்றிருக்கு. முக்கியமான அலுவலக மடல்களை எதிர்பாத்துக்கிட்டு இருக்கும்போது நம்ம பதிவுலகத்தோட விளையாட்டுத்தனமான வாழ்த்துச் செய்திகள் வந்துக்கிட்டே இருந்துதுன்னா (அதுவும் புரியாத மொழியில), அது ஏற்படுத்தக் கூடிய எரிச்சலை என்னால உணர முடியுது. மேலும் மேலும் நம்ம பதிவுலக நட்புக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தறோம்ன்னாவது நாம உணரணும்.

புது வருடம் போதும். அடுத்த வேலையை கவனிப்போம். அதெல்லாம் முடியாது, நான் வாழ்த்தித்தான் ஆவேங்கறீங்களா? அப்பொன்னா ஆளை வுடுங்க, நான் இந்த விளையாட்டுக்கு வரல்ல.