செவ்வாய், டிசம்பர் 13, 2005

நலன் பேணும் அரசு - Welfare State

நாட்டிலுள்ள அனைவருக்கும் எவ்வித பேதமுமின்றி, உயர்தரக் கல்வி, பரவலாகக் கிடைக்ககூடிய மருத்துவ வசதி, அடிப்படை வேலை வாய்ப்புகள், வேலையற்றவர்கள் / வறியவர்களுக்கு உதவித்தொகை, சட்ட ஒழுங்கை உறுதி செய்யக் கூடிய நம்பகமான காவல் துறை, ஆண் - பெண் சமநிலை/உரிமைகள்/வாய்ப்புகள்........... இவையனைத்தையும் இலவசமாக (அதாவது மக்களின் வரிப்பணத்தை மட்டும் கொண்டு) அரசே உறுதி செய்யுமானால் எவ்வாறிருக்கும்? இது ஏதோ இடதுசாரிக் கருத்தியலைப் போலுள்ளதே என்று எண்ணுபவர்களுக்கு - இது மேற்கத்திய (வலதுசாரி) உலகில், பல நாடுகளில் நடைமுறையிலுள்ள ஒரு அரசு முறைதான். நம் நாட்டில் ஒரு அரசியல் கட்சி இத்தகைய வாக்குறுதிகளை அளிக்குமானால், அது ஜனரஞ்சக உத்திகளை (populist measures) கடைபிடித்து ஆட்சியைப் பிடிக்க முயலுவதாக அனைத்துத் தரப்பிலிருந்தும் குற்றம் சாட்டப்படும். இவை கஜானாவை காலி செய்யும் நடவடிக்கைகள் என்ற பொதுவான கருத்து நிலவுகிறது. மேலும், இது போன்ற நடவடிக்கைகளால் நாட்டின் / பொருளாதாரத்தின் வர்த்தகப் போட்டித்தன்மை (business competitiveness) பாதிப்படைந்து விடும் என்ற அச்சமும் நிபுணர்களால் நீரூற்றி வளர்த்து விடப்பட்டிருக்கின்றது. அதற்குத் தோதாக fiscal deficit, fiscal discipline எனறெல்லாம் வார்த்தை ஜாலங்களோடு விளையாடுவதற்கென்றே தயார் நிலையில் ஒரு நிபுணர் கூட்டம் காத்திருக்கிறது.

நிற்க! ஒரு நலன் பேணும் அரசு ஒரு அரை நுற்றாண்டுக்கும் மேலாக ஆட்சி கொண்டிருக்கும் ஒரு நாட்டின் சாதனைகள் இவை:
 • உலக நாடுகளிலேயே, வர்த்தப் போட்டித்தன்மையில் முதலிடம்
 • உலகின் தலை சிறந்த அடிப்படைக் கல்வியமைப்பு (Basic education system), அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படுகிறது. இங்கு ஆசிரியர் பதவி என்பது மிக மதிப்பிற்குரிய, பலத்த போட்டிகளைக் கடந்து அடையக்கூடிய ஒன்று என்பதால், முதல்தர கல்வியாளர்கள் நிரம்பிய கல்வியமைப்பு உறுதி செய்யப் பட்டிருக்கிறதாம்.
 • உலகிலேயே மிக அதிகமான சுதந்திர நிலையை அடைந்த பெண்கள். அந்நாட்டின் குடியரசுத் தலைவரும் ஒரு பெண். (இதிலென்ன சிறப்பு என்றெண்ணுபவர்களுக்கு - மேலை நாடுகளில் நம் நாடுகளைப் போல் பெருந்தலைவர்களின் மனைவிகளும், மகள்களும், தோழிகளும் ஆட்சிப் பீடத்தை அடைந்து விட முடியாது. தகுதி அடிப்படையிலேயே தேர்தல்களுக்கு நியமனம் பெற முடியும்)
 • உலகிலேயே சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பில் முதலிடம்
 • உலகிலேயே மிகக் குறைந்த அளவில் ஊழல்கள்
 • உலகிலேயே அதிகமான செல்பேசிகளின் அடர்த்தி (cellphone density)
 • இணைய இணைப்புகளின் எண்ணிக்கையில் உலகின் முன்னணியில் இருக்கும் நாடுகளில் ஒன்று.
 • ஜனத்தொகை விகிதப்படி உலகிலேயே அதிகமான ஒலிம்பிக் பதக்கங்கள் (1 மில்லியன் மக்களுக்கு 106 ஒலிம்பிக் பதக்கங்கள். அமெரிக்கா - 8.3 பதக்கங்கள், இந்தியா - 0)
 • Formula 1 போட்டிகளில் முன்னணி இடத்திலுள்ள பல வீரர்களின் தாயகம்
 • ஜனத்தொகை விகிதப்படி உலகிலேயே அதிகமான இசைக் கலைஞர்களைப் பயிற்றுவித்த நாடு
 • மக்கள் நூலகங்களுக்குச் செல்வதில் உலகில் முதலிடம் (தேவநேயப் பாவணர் நூலகம் ஆனந்த் தியேட்டர் அருகிலுள்ளது என்றெல்லாம் வழிகாட்ட வேண்டிய நிலையில் இல்லை)
 • உயர் தொழில் நுட்பத்தில் (hitech) உலகில் முன்னணி நாடுகளில் ஒன்று. Nokiaவின் பிறப்பிடம். Linuxஐத் தோற்றுவித்த Linus Trovaldsஇன் தாயகம்.
 • ஐரோப்பாவிலேயே இரண்டாவது பாதுகாப்பான நகரத்தைத் தலைநகராகக் கொண்டது
 • செய்தித்தாள்களுக்கு அதிகமான வாசகர் வட்டம் (ஜனத்தொகையில் 70%. அமெரிக்கா 50%)
 • தலைசிறந்த மருத்துவ வசதிகள், அனைவராலும் எளிதில் பெறக்கூடியவை, இலவசமாக.
 • உலகிலேயே விஞ்ஞான ஆய்வுக்காக (GDP சதவிகிதப்படி) அதிகமான முதலீடு i.e. #1 in investments for R&D as a % of GDP
தகவல் உதவி:

நம் நாட்டுச் சூழலில் ஏன் நலத் திட்டங்கள் கடுமையான எதிர்ப்பையும் கண்டனத்தையும் பெறுகின்றன? எனக்கு உடனடியாக நினைவுக்கு வரும் ஒரு நலத் திட்டம் நமது சத்துணவுத் திட்டமாகும். அதன் பலன்களும் விளைவுகளும் எவ்வளவு தூரம் ஆராயப்பட்டிருக்கின்றன என்றுத் தெரியவில்லை. இருந்தும் நமது கல்வி நிலை மேம்பாடடைந்ததில் அதற்கும் ஒரு முக்கிய பங்குண்டு என்றே தோன்றுகிறது. தற்போது மத்திய அரசு அறிமுகப்படுத்தும் வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்திற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அரசுத் துறைகளில் பரவலாக நிலவும் ஊழலைக் காரணம் காட்டி இந்த எதிர்ப்புகள் முன்வைக்கப்பட்டாலும், எனக்கென்னவோ நமது அடிமனதில் வேறூன்றிய நலத் திட்ட எதிர்ப்பு நிலைப்பாடுதான் இதற்குக் காரணமென்று தோன்றுகிறது. ஒரு நலன் பேணும் அரசு வெற்றியடைவதற்கு பொதுமக்களின் அதிகப்படியான பங்களிப்பு தேவை. ஒரு சமத்துவ, நலமான சமுதாயத்தை உருவாக்க, நாம் நம் வருமானத்தில் 45% வரை வரியாகச் செலுத்த வேண்டி வரலாம். நாம் தயாரா அதற்கு?

6 கருத்துகள்:

Boston Bala சொன்னது…

---நாம் தயாரா அதற்கு---

நானும் (நீங்களும்) தயாராக இருப்போம். பங்குச்சந்தை தயாரா ;-)

Voice on Wings சொன்னது…

பாலா, நான் குறிப்பிட்ட Finnish உதாரணத்தில் பார்த்தது போல் இது வர்த்தகத்திற்குச் சாதகமாகத்தான் அமையும். அடிப்படைத் தேவைகள் நிறைவேறிய நிலையில் மக்களிடம் பொருட்களை வாங்கவும் முதலீடுகள் செய்யவும் பண வசதியிருக்கும் என்பதால், வர்த்தக நிறுவனங்களுக்குச் சாதகமான நிலைமையே. There may be a drop in demand for luxury products, which is not exactly a cause for concern for most of us :)

Unknown சொன்னது…

வாய்ஸ் ஆன் விங்ஸ்,
நான் தயார்தான்.

அது போல் அரசியல் வாதிகளும் தயாராகவே இருப்பார்கள். ஏனென்றால் ஏற்கனவே கட்டப்படும் வரிகளுக்கு அரசாங்கம் மக்களுக்கு கணக்குச் சொல்வதில்லை.எந்தப் பணம் எங்கே போகிறது என்பதே தெரியவில்லை. சும்மா உழைக்காதவனும் கட்டப்பஞ்சாயத்துப் பார்ட்டிகளும் அரசியல்வாதிகளும் இப்போதே கொழுத்து இருக்கின்றனர்.இது போல் அதிக வரி வசூலால் இன்னமும் கொழுக்க அவர்களுக்கு என்ன கசக்குமா?

எல்லா அரசியில் கட்சிகளும் மக்களுக்காகவே கட்சி நடத்துகிறார்கள். என்ன அவர்களின் கொள்கைகள்தான் யாருக்கும் புரிவதில்லை.

மக்களும் மாறவேண்டும் அரசியல்,அரசியல் வாதிகளின் நோக்கமும் மாற வேண்டும். அப்போது இது சாத்தியமே.

Finland பற்றி நல்ல தகவல்களைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி! எனக்கு இது புதிது.

Voice on Wings சொன்னது…

கல்வெட்டு, அனைத்து மக்களுக்கும் தரமான கல்வி உறுதி செய்யப் படும் என்ற நிலை வந்தாலே, அரசியல்வாதிகள் மக்கள் தலையில் மிளகாய் அரைப்பது கணிசமாகக் குறைந்து விடும் என்று தோன்றுகிறது. இன்னொன்று, ஆட்சியாளர்களுக்கு ஐந்து வருடங்கள் ஆட்சிப் பொறுப்பளிப்பதும் அதிப்படியாகத் தெரிகிறது. 2-3 ஆண்டுகளுக்கொரு முறை தேர்தல், செயல்படாத அரசுகளுக்கு கல்தா, என்ற நிலை வந்தாலும் கொள்ளையர்களின் கொட்டத்தைக் குறைக்கலாம். தேர்தல் செலவு அதிகரிக்கும். Small price to pay in the larger interests of the country.

Thangamani சொன்னது…

Thanks for the post and info.

Voice on Wings சொன்னது…

Thangamani, thanks for dropping by :)