வெள்ளி, ஜூலை 18, 2008

'))'))')) said...

நிறைய Blogger பதிவுகளில் பின்னூட்டப் பகுதியைப் பார்த்தா தலைப்பில் காட்டப்பட்ட மாதிரிதான் பின்னூட்டாளரின் பெயர் தெரியுது. இது ஏன் இப்படின்னு கொஞ்சம் நோண்டிப் பார்த்தேன். Firebug நீட்சியைக் கொண்டு பரிசோதித்துப் பார்த்த போது பின்னூட்டியவருக்கான code கீழ்க்கண்டவாறு இருந்தது:

<script>document.write(to_unicode(
'<script>document.write(to_unicode(
'<script>document.write(to_unicode(
'<script>document.write(to_unicode('யாத்திரீகன்'))</script>

ஒரே நிரல் எப்படி பல முறைகள் recurse ஆகியிருக்கு பார்த்தீங்களா? அதற்கு பதிலா, இப்படி இருந்திருந்தா இந்தப் பிரச்சினை இருந்திருக்காது:

<script>document.write(to_unicode('யாத்திரீகன்'))</script>
[குறிப்பு: இது தவறாகும். கீழே 'பிற்சேர்க்கை' என்ற குறிப்பைக் காண்க]

அல்லது, இப்படி இருந்திருந்தாலும்:

யாத்திரீகன்

to_unicode() என்ற நிரல் எதற்காக புகுத்தப்பட்டிருக்குன்னு தெரியல. இடைப்பட்ட காலத்தில் (பிளாக்கர் பீட்டா காலத்தில்) தமிழ் எழுத்துகள் தெரியாம accented ஐரோப்பிய எழுத்துகளா தெரிஞ்சதை சரிபண்ண யாராவது (ஜெகத் / கோபி?) உருவாக்கியிருக்காங்களோ என்னவோ.

சரி, இந்தப் பிரச்சனை உங்க பதிவில் இருந்தா அதை எப்படி சரி பண்றதுன்னு ஒரு கேள்வி இருக்கலாம். அதற்கான (குத்துமதிப்பான) விடை:
1. பிளாக்கர் dashboard சென்று 'Layout' -> 'Edit HTML' பகுதிக்கு போங்க.

2. அங்க Download Full Template அப்படீன்னு ஒரு சுட்டி இருக்கும். சொடுக்குங்க.

3. தரவிறங்கிய templateஐ இரு பிரதிகள் எடுத்து வச்சிக்கோங்க. ஒன்றுக்கு original.xml என்றும் மற்றொன்றுக்கு modified.xml அப்படீன்னும் பெயர் குடுங்க.

4. இப்போ, modified.xmlஐ Notepadஇல் திறந்து, கீழ்க்கண்ட string இருக்கும் வரியைத் தேடிக் கண்டுபிடிங்க:
<a expr:href='data:comment.authorUrl' rel='nofollow'>

5. அந்த மொத்த வரியையும் (அதாவது <a expr:href='data:comment.authorUrl' rel='nofollow'> என்பதில் தொடங்கி </a> என்பது வரை இருக்கும் நிரல் பகுதியை) கீழ குடுத்துருக்கிற மாதிரி மாற்றி அமையுங்க (i.e. replace the entire line as given below):
<a expr:href='data:comment.authorUrl' rel='nofollow'><data:comment.author/></a>

இதைச் செய்த பிறகு, பலமுறை recurse ஆகும் <script>document.write(to_unicode.........</script> என்ற நிரல் முற்றிலுமாக நீக்கப்பட்டிருக்கும் . அதுதான், நமது குறிக்கோள்.

6. இந்த திருத்ததை சேமித்துக் கொண்டு, மீண்டும் 'Layout' -> 'Edit HTML' பகுதிக்கு போங்க. அங்க Upload a template from a file on your hard drive வசதியைப் பயன்படுத்தி, நீங்கள் மாற்றிய modified.xml கோப்பை வலையேற்றுங்க. இதைச் செய்யும்போது சில சமயம் "We're sorry, but we were unable to complete your request." என்பது போன்ற பிழைச் செய்திகள் வரலாம். அப்படீன்னா சரியான ராகு காலத்தில் இதைச் செய்யத் தொடங்கினீங்கன்னு அர்த்தம். ஒரு 1 - 2 மணி நேரம் கழித்து முயற்சி செய்து பாருங்க. வேலை செய்யலாம். (i.e. there's a problem at Blogger end, which might become ok after sometime).

7. திருத்திய templateஐ வலையேற்றிய பிறகு, பெரும்பாலும் இந்தப் பிரச்சனை சரியாகி இருக்கும். "உள்ளதும் போச்சுடா நொள்ளக் கண்ணா"ங்கிற மாதிரி புதுப் பிரச்சனைகள் எதாவது வந்ததுன்னா, எந்த மாற்றமும் செய்யாத original.xml கோப்பை வலையேற்றுங்க. பழைய பிரச்சனைகளோட இயங்கும் தளம் மீண்டும் கிடைக்கும்.

பிற்ச்சேர்க்கை:

நண்பர் சின்னப்பையனின் பதிவில் ' said...' என்றுதான் பின்னூட்டாளர்களின் பெயர் தோன்றுகிறது (அதாவது அவர்களின் பெயர் தோன்றுவதே இல்லை). பரிசோதனையில் தெரிய வந்தது, code கீழ்க்கண்டவாறு இருக்கிறது:
<script>
document.write(to_unicode('ச்சின்னப் பையன்'))
</script>

அதாவது no recursions. அப்படியும் கூட, to_unicode நிரல் இருப்பதாலேயே பின்னூட்டாளர்களின் பெயர் மறைந்து விடுகிறது. ஆகவே, அதை முற்றிலுமாக நீக்குவதுதான் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வாக அமையும்.

திங்கள், ஜூலை 14, 2008

16 வயதினிலே

மதன், ரதி. பருவத்தை எட்டிப்பார்க்கும் வயசு இருவருக்கும். தாய் தேவியின் பாதுகாப்பில் மதன். ரதியோ தந்தை சிவாவின் பொறுப்பில்.

சமூகம் உயர் கணினிகளின் உதவி கொண்டு இளவட்டங்களைக் கட்டிப்போட்டு வெகு காலங்களாகி விட்டது. அவர்கள் எங்கிருந்தாலும் என்ன செய்தாலும் பெற்றொர்களுக்கு முப்பரிமாண ஒளிபரப்பு சென்று கொண்டே இருந்தது, அவர்களது கைக்கணினிகள், உடற்கணினிகள், இப்படி எதில் வேண்டுமானாலும். அதன் மூலமாகவே தங்கள் மக்களை இடைவிடாது கண்டித்துக் கொண்டிருந்தார்கள் அவ்வப்போது, "அங்கே அவனோடு என்ன பேச்சு?", "என்ன அவளைப் பாத்து ரொம்பத்தான் இளிக்கிற? பல்லெல்லாம் கழண்டு விழுந்துடப் போவுது!" என்ற ரீதிகளில். பெற்றோர் தம் குழந்தைகள் எதிர் பாலாரிடம் நட்பாயிருப்பதை விட ஒரே பாலாரிடம் நட்பு பாராட்டுவதை இன்னமும் தீவிரமாக எதிர்த்தார்கள்.

இந்நிலையில் ரதியும் மதனும் தங்கள் விதியை நொந்து கொண்டு, தத்தமது அறைகளிலிருந்து மின் நட்புத் தளங்களை வலம் வந்து கொண்டிருந்தார்கள் (அதுவும் பெற்றோர்களின் மேற்பார்வையைத் தப்பவில்லை). இந்த மின் நட்புத் தளங்களில் இள வயதினர் வேறொரு மொழியை உருவாக்கி அதிலேயே பேசிக் கொண்டிருந்தார்கள், வெளி உலகைச் சேர்ந்தவர்களுக்கு அது அவ்வளவாக விளங்கவில்லை. இம்மொழிக்கு விளக்கவுரைகளும் வந்து கொண்டுதானிருந்தன. ஆனால் இளைஞர்களோ அதை அடிக்கடி மாற்றிக் கொண்டே இருந்தார்கள். ஆகவே விளக்கவுரைகளும் பயன்றறுப் போய், பெற்றோர்களுக்கு தங்கள் மக்களின் மொழி புரியாமலேயே இருந்து வந்தது.

ரதியும், மதனும் கிடைத்த இந்த இடைவெளியில் காதல் பரிமாறிக் கொண்டார்கள். அதற்கு முன் பரஸ்பரம் அறிமுகமாகிக் கொண்டார்கள். ரதி தனக்கு யூனிக்ஸ் (UNIX) பிடிக்குமென்றாள். மதன் வாயைப் பிளந்தான். தனது கணினியிலுள்ள விண்டோஸை கடந்து அவன் வேறெதையும் அறிந்ததில்லை. தனக்கு கவிதை நன்றாக வருமென்றும், குறிப்பாக பெண்ணை வர்ணித்து கவிதை எழுதுவது தனக்கு விருப்பமான பொழுதுபோக்கு என்றும் கூறினான். தன்னை வர்ணித்து ஒரு கவிதை கூறும்படி கேட்டாள். அதற்கு அவளுக்குக் கிடைத்த பதில், அதுவரை அவள் அறிந்திருந்த shell scripts அனைத்தையும் விஞ்சியது. காதல் வயப்பட்டார்கள்.

விரல் நுனிக்காதல் விரைவில் சலித்தது. கவிதைப் பரிமாற்றங்கள் விரகத்தை அதிகரிக்கவே செய்தன. அவசர நிலை விரைவில் எட்டப்பட்டது. இனியும் தாமதிக்காமல் செயலில் இறங்க வேண்டுமென்பதை இருவருமே உணர்ந்தார்கள். மின் நட்பு தளத்தின் 'சிறப்புச் சேவையை' நாடுவதென முடிவு செய்தார்கள். தங்கள் சேமிப்பைச் செலவிட்டு, அதற்குப் பதிவும் செய்து கொண்டார்கள். விரைவிலேயே இருவருக்கும் வந்து சேர்ந்தன, அதற்குத் தேவையான உபகரணங்கள், பாடப் புத்தகங்களோ என்று எண்ண வைக்கும் வெளித் தோற்றத்தோடு. கண்காணிப்புகளிலிருந்துத் தப்ப வேண்டுமல்லவா?

இனி தங்கள் நோக்கத்துக்கு இடையூறாக இருக்கப் போவது சிவாவும் தேவியும்தான் என்பதை உணர்ந்தார்கள். ரதிக்கு சிவாவைப் பற்றி அதிகம் கவலையில்லை. அவனது கணினியை ஏற்கனவே ஊடுருவி, அறிய வேண்டிய தகவல்களை அறிந்து கொண்டுவிட்டாள். ஆகவே, அவனது கண்காணிப்பான்களை ஏமாற்றுவது கடினமல்ல. ஏற்கனவே செய்து வருவதுதான். பிரச்சனை தேவியிடமிருந்துதான். ரதியைப் போலவே (அல்லது அவளை விடப் பன்மடங்கு) கணினியில் மேதமை படைத்தவள் தேவி. அவர்களது வீட்டையே ஒரு உயர்கணினியின் பாதுகாப்பில் வைத்திருந்தாள். வெறுத்துப் போய் அரற்றினான் மதன், 'ரதி, என்னை தேவியின் பிடியிலிருந்து காப்பாற்று' என்று. அவளுக்கே அதன் சாத்தியம் குறித்து சற்று சந்தேகம் இருந்த போதும், "கவலைப்படாதே, உன்னை எல்லா கட்டுக்காவலிலிருந்தும் மீட்கிறேன்" என்று ஆறுதல் கூறினாள்.

ரதியின் அறிவுறுத்தலின் பேரில் தனது கணினியில் அவள் அனுப்பிய நிரல்களை நிறுவினான். அது வடிவமைத்தபடி, தேவியின் கணினியிலும் சென்று நிறுவிக் கொண்டது. தனது மகனின் கணினி அறிவு பற்றி தெரிந்திருந்ததாலும், அவனது கணினியிலிருந்து ஊடுருவல் ஏற்படும் என்று அவள் சற்றும் எதிர்பார்த்திருக்காததாலும் இத்தகைய தாக்குதலிலிருந்து தேவி தன் கணினியைப் பாதுகாத்துக் கொள்ளவில்லை. இவ்வாறு ஊடுருவப்பட்ட இரு பெற்றோர்களின் கண்காணிப்பான்களுக்கும் போலியான ஒளிபரப்புகள் அனுப்பும் ஏற்பாடுகள் செய்யபட்டன. ஒரு பதினைந்து நிமிட நேரம் நீடிக்கும் வகையில் இந்த போலி ஒளிபரப்பு அமைக்கப்பட்டது. அதற்கு மேல் என்றால் ஊடுருவிய நிரலியின் அளவு அதிகமாகி, வேண்டாத சந்தேகங்களைக் கிளப்பி விடும் என்று அஞ்சினாள் ரதி. இந்த போலி ஒளிபரப்புகள், தங்கள் மக்கள் படித்துக் கொண்டோ அல்லது வேறு வழக்கமான வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டோ இருப்பது போன்ற தோற்றத்தை அந்த இரு பெற்றோர்களுக்கும் அளிக்கக் கூடியதாய் இருந்தன.

ஒரு பதினைந்து நிமிட ஏமாற்று நாடகத்தை ஏற்பாடு செய்த நிறைவில் மற்றும் மகிழ்ச்சியில், மதனும் ரதியும் அந்த 'சிறப்புச் சேவையை' பெறுவதற்கு ஆயத்தமானார்கள். விரைவஞ்சலில் (பாடப்புத்தக உறையில்) வந்த உணர்விகளையும் (sensors) உணர்விப்பிகளையும் ( ;) ) அணிந்து கொண்டு, மெய் நிகர் (virtual reality) அறைக்குள் இருவரும் பிரவேசம் செய்தார்கள், கலவியில் (அல்லது அதைப் போன்ற ஒரு அனுபவத்தில்) ஈடுபடுவதற்கு.

பிகு:

1. இது போட்டிக்குன்னு சொன்னா பொதுமாத்துதான் விழும். அதனால, இது சும்மா ஜாலிக்குதான்.
2.இதைப் படிச்சிட்டு "Keanu Reeves" நடிச்ச படம் எதாவது ஞாபகம் வந்தா அதுக்கு நான் பொறுப்பு கிடையாது. ஏன்னா அந்தப் படத்தை நான் பார்க்கவில்லை, அல்லது பாதி தூக்கத்தில் பார்த்தேன், இப்படி எதாவது ஒண்ணை வச்சிக்கோங்க.
3. நூட்ப ரீதியா நோண்டாதீங்க. படிச்சா அனுபவிக்கணும், ஆராயக்கூடாது.
4. நுண்ணரசியல் பார்ட்டிங்களுக்கு - மேலே (#3) சொன்னதுதான் உங்களுக்கும்.

சனி, ஜூலை 12, 2008

அண்மைய கொந்தளிப்புகள்

தங்களை 'அறிவுப் பூசாரிகள்' என்று அறிவித்துக் கொண்ட சிலர் அண்மைய சில தினங்களாக ரொம்பவே கொந்தளித்துப் போயிருக்கிறார்கள். அவர்களின் தரப்பிலும் ஓரளவுக்கு நியாயமில்லாமலில்லை. ஒரு வசதியை வெகு நாட்களாக அனுபவித்துவிட்டு அது இல்லாமல் போகும் தருணத்தில் ஏமாற்றம் ஏற்படுவது இயற்கையே. 'காமம்' உள்ளிட்ட பல பிரச்சனைக்குரிய சொற்கள் கொண்ட தலைப்புகளுக்கும், முதல் சில வரிகளுக்கும் 'தடா' விதித்துள்ளது தமிழ்மணம். இந்தச் சொற்களால் நிச்சயமாக எந்தப் பிரச்சனையும் கிடையாதுதான். இவற்றைக் காண நேர்வதால் கன்னியாகுமரியும் காஷ்மீரும் இடம் மாறி விடப்போவதில்லைதான். ஆனால், வணிகக் கட்டாயங்கள் உள்ள எந்தவொரு அமைப்பும் வெகுசனப் பார்வைக்கு ஒத்திசைந்தே தனது நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். ("ஒரு பேச்சிலராக உங்கள் படுக்கையறையில் நீங்கள் ஒட்டக்கூடிய கவர்ச்சி போஸ்டர்களை உங்கள் அலுவலக வரவேற்பறையில் ஒட்ட உங்கள் நிறுவனம் அனுமதிக்குமா?" என்பது போன்ற உவமைக் கேள்விகளைக் கேட்டுக் கொள்ளவும்).

இந்த episodeஇன் உச்சப்பட்ச காமெடி என்று நான் நினைப்பது, இந்த அறிவுப் பூசாரிகளின் சந்நதத்தைத்தான். செத்துப்போன மார்க்கீ த சாதே / நீட்ஷேயின் ஆவி உடலுக்குள் புகுந்து கொண்டு விட்டதோ என்ற சந்தேகம் ஏற்படும் வகையில் "moronகளே, கேளுங்கள்!" என்று Zarathushtraவைப் போல் அருள்வாக்கு கூறினார் ஒருவர். புரட்டிப் போடும் எழுத்துக்குச் சொந்தக்காரரோ மண்டியிட்டு தோழமையுடனும் (கோழைமையுடனும்) தமிழ்மணத்திற்கு மன்னிப்பு வாக்குமூலம் எழுதுகிறார். பாதிக்கப்பட்டவரோ, "அவங்க மட்டும் படுக்கையறையில பின்னியெடுக்கறாங்களே?" என்று தனது ஆதங்கத்தை வெளியிடுகிறார். இன்னொருவர் "கலாச்சாரக் காவலுக்கு எதிராக கணினி ரவுடி ஆவேன்" என்று சூளுரைக்கிறார். இந்த சூளுரையின் விளைவாக நமக்கெல்லாம் ஏற்படக்கூடிய பாதிப்பு என்ன என்பது குறித்து எந்தத் தகவலுமில்லை. அதை நினைத்து இன்னமும் நடுங்கிக் கொண்டிருக்கிறேன்........ இல்லை.

இப்படி தணிக்கைகள் நிறைந்த சூழலில் கலக எழுத்துக்கு இடமே கிடையாதா? என்றால் இருக்கிறது. எந்த ஒரு நிறுவன அமைப்பையும் சாராது ஒரு எதிர் அமைப்பை உருவாக்குவதுதான் இதற்கான தீர்வு. நான் முன்பே இது குறித்து எழுதியிருக்கிறேன். தேடல் என்ற இணையத்தின் மிக அடிப்படையான நுட்பத்தைப் பயன்படுத்தி, எந்தவொரு திரட்டியையும் சாராமல் பதிவர்களால் இயங்க முடியும். முன்பு எல்லாப் பதிவர்களுக்கும் பொதுவான தமிழ்ப்பதிவுகள் என்ற குறிச்சொல்லைப் பரிந்துரைத்தேன். இப்போது குறிப்பிட்ட வகையான எழுத்துகளுக்கு அதற்கேற்ற பெயரை யாரேனும் தேர்வு செய்து கொள்ளலாம். (உ-ம். 'காமம்', அல்லது 'கலகம்', இத்யாதி) அப்படித் தேர்வு செய்து கொண்டு, இத்தகைய தணிக்கைக்கப்பாற்பட்ட எழுத்துகளை அந்த பொதுவான குறிச்சொல்லைக் கொண்டு குறித்து, அதை வாசகர்கள் மத்தியிலும் பிரபலப்படுத்தினால், நாங்கள் திரட்டிகளில் படிக்க முடியாத அவ்வெழுத்துகளை தேடுபொறிகளின் வாயிலாகப் படித்துக் கொள்வோம். கலக எழுத்து என்றில்லை - சில தினங்களுக்கு முன்பு ஒரு பதிவர் சமையல் குறிப்புகளுக்கென்று ஒரு திரட்டியை உருவாக்குவதாகத் தெரிவித்திருந்தார். அவ்வளவு மெனக்கெடத் தேவையே இல்லை. எல்லா சமையல் பதிவர்களையும் 'சமையல் குறிப்பு' என்று குறிச்சொல் இடுமாறு கேட்டுக் கொண்டால், அதற்கான தேடல் பக்கம், செய்தியோடை, என்று எல்லாமே தயாராக உள்ளது.

தேடுபொறிகள் என்றால் technorati இருக்கிறது. அதைத் தவிர Icerocket, Google Blog search, reddit, delicious போன்ற சேவைகளும் இருக்கின்றன. நமது நண்பர் மாஹிர் உருவாக்கிய தமிழூற்றும் இருக்கிறது. பெரும்பாலும் இந்தத் தேடுபொறிகள் தாமாகவே crawl செய்து உங்கள் இடுகைகளை தங்கள் பட்டியலில் சேர்த்துக் கொள்கின்றன. அல்லது இவை எல்லாமே ping வசதியளிக்கின்றன. அவற்றைக் கொண்டு இத்தளங்களில் ping செய்து, உடனடியாக உங்கள் பதிவு தேடல்களில் கிடைக்குமாறும் செய்யலாம்.

நம் அறிவு ஜீவிகளுக்கு இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு நடந்த புரட்சிகளைப் பற்றியெல்லாம் நன்றாகத் தெரிந்துள்ளது. பாராட்டப்பட வேண்டிய விஷயம்தான். அதோடு, இன்றைய நிகழ்காலத்தில் நடக்கும் புரட்சிகளைப் பற்றியும் சிறிது தெரிந்து கொள்வார்களானால் நன்றாக இருக்கும். மேலும், கருத்துச் சுதந்திரத்திற்கு காவடி ஏந்தும் எல்லா அறிவு ஜீவிகளும் தங்கள் பதிவுகளில் தவறாது பின்னூட்ட மட்டுறுத்தலைச் செயல்படுத்தி இருக்கும் முரண்பாட்டைக் குறித்தும் குறிப்பிட விரும்புகிறேன்.

கண்டிப்பாக கலகம் செய்யுங்கள், ஆனால் அதை ஒப்பாரி வைக்காமல் செய்யுங்கள். அல்லது ஒப்பாரியும் ஒரு கலக வடிவமா?