சனி, அக்டோபர் 28, 2006

ஒரு மோசடி பற்றிய முன்னறிவிப்பு

முகேஷ் அம்பானி - நம் நாட்டிலேயே செல்வமும் செல்வாக்கும் அதிகமாக உடைய வணிகக் குடும்பத்தின் முதல் வாரிசு. மற்றும் சமீபத்திய பங்குச் சந்தை நிலவரப்படி இந்தியாவின் #1 செல்வந்தர் என்ற தகுதியை எட்டியவர். கடந்த இரு ஆண்டுகளாக அமைதி காத்து விட்டு, இப்போதுதான் வாய் திறந்துள்ளார், அதாவது பொது ஊடகங்களிடம். இந்த இரு ஆண்டுகளில் தன் குடும்பத்தினருக்கிடையே நடந்த இழுபறிச் சண்டையைத் தவிர வேறெதுவும் சொல்லிக்கொள்ளும் படியாக நடக்கவில்லை என்பது ஒரு காரணமாகயிருக்கலாம்.. இவ்வாறாக, இரு வருட அமைதியைக் கலைத்து, அவர் திருவாய் மலர்ந்தருளிய முதல் அறிக்கை, "I believe in India". இந்த உன்னதமான எண்ணத்தில் ஆட்சேபிக்கும்படியாக என்ன உள்ளது என்று தோன்றலாம். அவரது நம்பிக்கைக்கான அடிப்படைக் காரணங்களை ஆராய்ந்தால் புரியும், அது எவ்வளவு துல்லியமானது, மற்றும் நம்மைப் போன்ற பொதுஜனங்களுக்கு அது எவ்வளவு ஆபத்தானது என்று. அவர் இந்தியா மீது வைத்திருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கை, அதன் அரசமைப்பு வலியோருக்குச் சாதகமாகவும் வறியவர்களுக்குப் பாதகமாகவும் இயங்குவதை அடிப்படையாகக் கொண்டது. அரசின் இந்தப் போக்கில் இப்போதைக்கு எந்த மாற்றமும் வந்துவிடப்போவதில்லை என்பதனால்தான் அவரால் அடித்துக் கூற முடிகிறது, இந்தியா மீதான தனது நம்பிக்கை வீண் போகாது என்று. அவரது நம்பிக்கைக்கு வலு சேர்க்கும் விதமாக சில நிகழ்வுகள் இன்று நடந்து கொண்டிருக்கின்றன. அவருக்கும் அதில் பங்குண்டு.

நாடெங்கிலும் ஆயிரக்கணக்கான ஏக்கர்கள் பரப்பளவுள்ள நிலப்பகுதிகளை வர்த்தக வட்டாரங்களாக (Special Economic Zones or SEZs) மாற்றி, அவற்றில் பெருந்தொழிற்சாலைகளை நிறுவி, இந்தியாவை உற்பத்தித் துறையில் உலக அளவில் முன்னணிக்குக் கொண்டு செல்லும் உன்னதத் திட்டம் ஒன்று துரித கதியில் நடைமுறைக்கு வந்துகொண்டிருக்கிறது. இத்தகைய வட்டாரங்கள் நூற்றுக்கணக்கில் ஒப்புதல் வழங்கப்பட்டு, வேகவேகமாக உருவாகிக் கொண்டிருக்கின்றன. மற்ற இடங்களைப் போலல்லாது, இங்கு இயங்கும் நிறுவனங்களுக்கு வரிச் சலுகைகள், விதி விலக்குகள், என்று பல வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. தொழிலாளர் நலன் காக்கும் சட்டங்கள், சுற்றுச்சூழலைப் பேணுவதற்கான வரைமுறைகள், இவையெல்லாவற்றிலிருந்தும் விடுமுறைதான். கண்ணாடி மாளிகைகள், ஐந்து நட்சத்திர விடுதிகள், golf மைதானங்கள் போன்ற ஆடம்பர அம்சங்கள் பொருந்திய இவ்வட்டாரங்களில் ஏற்றுமதி செய்வதற்கான பொருட்களே தயாரிக்கப்படுமாம். நம்மைப் போன்ற சாமானியர்களெல்லாம் இவற்றின் உள்ளே புகுந்து விட முடியாது. ஒரு வெளிநாட்டிற்குச் செல்வதைப் போல், தகுந்த அனுமதிகள் இருந்தாலேயே எவரும் உள்ளே அனுமதிக்கப் படுவார்கள் (அவற்றின் பளபளப்பைப் பாதுகாக்க வேண்டுமல்லவா?). லட்சக் கணக்கில் வேலை வாய்ப்புகள், இது வரையில் கண்டிராத அளவிற்கு வர்த்தக வளர்ச்சி, என்று இத்திட்டத்தினால் உண்டாகக் கூடிய பலன்கள் பட்டியலிடப்படுகின்றன.

இத்திட்டம் செயல்படும் முறையைப் பார்ப்போம். யார் வேண்டுமானாலும் இத்தகைய வட்டாரங்களை உருவாக்கலாம். அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், அந்நிய நாட்டு நிறுவனங்கள் என்று முதலீடு செய்யும் சக்தி படைத்த எவரும் இந்த அமைப்புகளை அமைக்கலாம். அவர்களது வேலையை எளிதாக்குவதற்காக அரசும் தனது சேவைகளை ஆற்றும். எத்தகைய சேவைகள்? திட்டப் பகுதி நிலங்களிலுள்ள விவசாயிகளை உருட்டி மிரட்டி, அவர்களிடமிருந்து நிலத்தைப் பறிப்பது, அதை அவர்கள் எதிர்த்தால் தனது கூலிப்படையான காவல் துறையை அவர்கள் மீது ஏவி அவர்களை நிராதரவாக்குவது, போன்ற விலை மதிப்பற்ற சேவைகள். இத்தகைய பங்களிப்பு அரசிடமிருந்து உறுதியாகக் கிடைக்கும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையைக் கொண்டிருந்ததனால்தான் முகேஷ் அம்பானியால் இத்திட்டத்தில் ஒரு அமைப்பாளராக இறங்க முடிந்தது. மகாராஷ்டிரத்தில் ஒரு நிலப்பரப்பை தத்தெடுத்துக் கொண்டு அதை ஒரு வர்த்தக வட்டாரமாக மாற்றும் பொறுப்பை அவரது ரிலையன்ஸ் நிறுவனம் ஏற்றுக்கொண்டுள்ளது. அப்பகுதியில் வாழும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஊடகங்களுக்குக் கொடுக்கும் பேட்டிகளில், அவரையும் அவரது நிறுவனத்தையும் அச்சிட முடியாத மொழிகளில் விமர்சிக்கின்றனராம். அதைப்பற்றி அவருக்கு பெரிதாக கவலையிருக்காது என்றே தோன்றுகிறது. அவருக்குத்தான் இந்திய அரசின் மீது அசைக்க முடியாத நம்பிக்கையிருக்கிறதே?

ஊடகங்களின் பங்கையும் இங்கு குறிப்பிட வேண்டும். அரசு அதிகாரிகள் தங்கள் நிலத்தை தரிசு நிலம் (barren land) என்று மதிப்பிட்டதை எதிர்த்து சில விவரமறிந்த விவசாயிகள் Google Earth வரைபடங்களுடன் தங்கள் நிலங்கள் விளைநிலங்களே என்று நிருபித்தார்களாம். இந்த செய்தித்துண்டைப் பிடித்துக் கொண்டு ஊடகம் (CNBC TV-18) செய்த திரித்தலை கவனியுங்கள்: "விவசாயிகள் Google Earth போன்ற நுட்பங்களைப் பயன்படுத்தியது உலகம் 'தட்டை'யாகிக் கொண்டிருப்பதையே உறுதி செய்கிறது. (Thomas Friedmanஐ தினந்தோறும் வழிபடும் நிருபர் போலிருக்கிறது). இப்படியாக, உலகத்தைத் தட்டையாக்கி, ஏற்றத் தாழ்வுகளைச் சமன்படுத்துவதுதான் SEZ திட்டத்தின் நோக்கமும் ஆகும். ஆகவே, SEZ போற்றி, போற்றி". கூஜா தூக்குவது என்று முடிவு செய்தபின், அதில் புதுமைகளைப் புகுத்துகின்றன, நம் ஊடகங்கள்.

அவலங்களுக்கிடையே முளைக்கப்போகும் இந்த அரண்மனைகளால் நாட்டிற்கு எதாவது பலன் கிட்டுமா? அல்லது ஆதாயமெல்லாம் அரண்மனைவாசிகளுக்குத்தானா? சாமானியர்களைத் தீவிரவாதிகளாக்கி, அவர்கள் கையில் ஆயுதங்களை ஒப்படைக்கும் விதமாகச் செயல்படும் ஆட்சியாளர்கள் இருக்கையில், யாரை முதலில் தூக்கிலிடுவது? ஒரு #1 செல்வந்தர் இந்தியாவின் மீதுள்ள அசைக்க முடியாத நம்பிக்கையைப் பிரகடனப்படுத்தும் இன்றைய நிலையிலிருந்து, கடைநிலையிலுள்ள ஒவ்வொரு நபரும் அத்தகைய பிரகடனத்தைச் செய்யும் நிலை என்றாவது ஏற்படுமா? கோடானுகோடி மக்களின் துயர் துடைக்கும் பணியை விட, ஆங்காங்கே 'பள பள' பிரதேசங்களை உருவாக்கும் பணி மிக எளிதானது (மற்றும் சுயலாபங்களை ஈட்டக்கூடியது) என்ற முடிவுக்கு நம் ஆட்சியாளர்கள் என்றைக்கோ வந்து விட்ட நிலையில், எந்தவொரு நம்பிக்கைக்கும் இனி இடமுள்ளதா?

இது பற்றிய சில செய்திச் சுட்டிகள்:

1. Economist வலைத்தளத்திலிருந்து

2. BBC வலைத்தளத்தில் ஒரு பிரபல பொருளாதார வல்லுனரின் கருத்துரை

3. The South Asian மின்னிதழில் ஒரு கட்டுரை

4. பொருளாதார நிபுணர் ஜக்தீஷ் பக்வதியின் கருத்து

5. இடதுசாரிக் கட்சியின் சீதாராம் யெசூரியின் அறிக்கை (இடதுசாரிகள் ஆளும் மேற்கு வங்க மாநிலம் படு சுறுசுறுப்புடன் இத்தகைய SEZக்களை உருவாக்கி வருகிறது என்பது கொசுறுச் செய்தி)

6. "இப்படியே போனால் நானும் 'மாவோயிஸ்ட்' ஆகி விட வேண்டியதுதான்" - முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கின் பேட்டி