தனது எரிபொருள் தேவையில் எழுபது சதவிகிதத்தை இந்தியா இறக்குமதிகளைக் கொண்டே சமாளிக்கிறது. உலகச் சந்தைகளில் அதன் விலை ஏறிக்கொண்டே போவதால், அரசுக்கும் அதன் விலையை ஏற்ற வேண்டியக் கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. இதனை எதிர்த்து சிலக் கூட்டணிக் கட்சிகளும் பல எதிரணிக் கட்சிகளும் போர்க்கொடியை உயர்த்தியுள்ளன. முன்பிருந்த administered pricing mechanism (APM) என்ற முறையை நீக்கி, உலகச்சந்தையின் ஏற்ற இறக்கங்களைப் பொறுத்து உள்நாட்டு எரிபொருள் விலையும் அமையும் வகையில் சீர்திருத்தத்தைக் கொண்டு வந்தது முந்தய அரசைச் சேர்ந்த, தற்போது எதிர்ப்பைத் தெரிவிக்கும், தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளே. அரசியலில் இதுவொன்றும் பெரிய விஷயமல்ல என்று வைத்துக்கொள்வோம். ஆனால் நாம் உணர வேண்டியது, முந்தய அரசின் நடவடிக்கை சரியானதே என்பதைத்தான் (அவர்களே இப்போது அதை எதிர்க்கும் முரண்பாட்டையும் தாண்டி). ஏனென்றால், அரசு தன் வரிப்பணத்தையோ, இலாபங்களையோ குறைத்துக் கொண்டால்தான் விலையேற்றத்தைத் தடுக்க முடியும். அவ்வாறு செய்தால் நிதி ஒதுக்கப்பட்ட எத்தனையோத் திட்டங்களுக்குப் பற்றாக்குறையேற்பட்டு, அவை நிறைவேற்றப்படாமல் போகும் சாத்தியமுள்ளது. மேலும் மேல்தட்டு வர்க்கத்தினரின் சொகுசு வாழ்க்கைமுறையை (குளிர்சாதனக் கார்கள், டீசல் ஜெனரேட்டர்கள் etc) அரசே மானியம் வழங்கி ஆதரித்தது போலாகும். மக்களின் வரிப்பணத்தை இதைவிட மேலான வகைகளில் செலவிடலாமல்லவா?
எரிபொருளின் விலையைக் கட்டுப்படுத்த முடியாது போலுள்ளது. ஆகவே, இதனை எதிர்கொள்ள மாற்று எரிபொருட்களைத் தோற்றுவிக்க வேண்டும், அல்லது தேவைகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும். மாற்று எரிபொருட்கள் என்றுப் பார்த்தால் மின்சாரக் கார்கள், ஸ்கூட்டர்கள் என்றொருப் பக்கம் கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கம் விவசாய விளைப்பொருட்களிலிருந்துத் தயாரிக்கப்படும் ethanol போன்றவை பெட்ரோலுக்கு பதிலாகப் பயன்படுத்தக் கூடிய வகையில் முன்வைக்கப்பட்டு வருகிறன (இதன் சாத்தியக்கூற்றைக் குறித்து எனக்குச் சந்தேகமாகத்தான் உள்ளது). மாற்று எரிபொருட்கள் பாராட்டப்பட வேண்டியவையென்றாலும் பரவலானதொரு தீர்வை அளிக்கக்கூடுமா என்பது சந்தேகமே. எரிபொருள் சிக்கனம் / தேவைகளைக் குறைப்பது என்பதே நீடித்த தீர்வை அளிக்குமென்றுத் தோன்றுகிறது. தேவைகளைக் குறைப்பதென்றால் பயணத்தை அல்லது போக்குவரத்தைக் குறைப்பதன்று. அதே செயல்பாடுகளை, குறைந்தளவு எரிபொருள் செலவில் நிறைவேற்றுவது என்று பொருள் கொள்ளலாம். இன்றைய எரிபொருள் தேவையை ஆராய்ந்தால், பெரும்பாலும் அது சரக்கு வாகனங்களுக்கும், மக்கள் பயணிக்கும் கார், மோட்டர் சைக்கிள், பேருந்து போன்ற வாகனங்களுக்கும் தேவைப்படுகிறது.
மக்கள் போக்குவரத்தை எடுத்துக் கொண்டால், பேருந்தைத் தவிர மற்ற வகையான வாகனங்கள் செலவிடும் எரிபொருளின் அளவு நியாயப்படுத்த முடியாததே என்றுக் கூறலாம். ஒருவரோ அல்லது இருவரோ அலுவலகம் சென்று திரும்புவதற்குள் எரிபொருள் சில லிட்டர்கள் செலவாகி விடுகிறது. இந்தச் செலவு அவர்களால் எளிதில் எதிர்கொள்ளக் கூடியதாக இருக்கலாம். ஆனால், விஷயம் அத்துடன் நின்று விடுவதில்லை. அவர்களது ஆடம்பரத்திற்காக அரசு அகலமானச் சாலைகள் போடவேண்டும், போக்குவரத்தைச் சமாளிக்க வேண்டும், விபத்துக்கள் நேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும், நேர்ந்தால் அவசர மருத்துவ உதவி போன்ற வசதிகளைத் தயார்ப் படுத்த வேண்டும், பெருமதிப்புள்ள அந்நியச் செலாவணியைச் செலவழித்து (நாட்டின் வர்த்தகச் சமன்பாட்டைக் குலைக்கும் வகையில்), வெளிநாடுகளிலிருந்து எரிபொருளைத் தருவிக்க வேண்டும், பிறகு இவ்வாகனங்கள் உமிழும் நச்சுப் புகையால் ஏற்படும் பின்விளைவுகளை இச்சமூகமே ஒட்டுமொத்தமாக எதிர்கொள்ள வேண்டும். ஆக, சில லிட்டர்களுக்கானப் பணத்தை வீசியெறிந்துவிட்டுச் சென்று விடுவதால் தம் கடமை / பொறுப்பு முடிந்துவிட்டது என்று எவரும் தம்மைத் தாமே ஏமாற்றிக்கொள்ள முடியாது.
இதற்கு நேரெதிராக, வெகுஜனப் போக்குவரத்து வாகனங்களான பேருந்துகள், புறநகர் இரயில்கள் ஆகியவை குறைந்த எரிபொருள் செலவில் வெகு அதிகமான எண்ணிக்கையில் மக்களை ஏற்றிக் கொண்டு செல்வதைக் காணலாம். இவற்றை வலுப்படுத்துவதில்தான் இருக்கிறது அரசின் திறமை, பொறுப்பு ஆகியவை. இவற்றின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி நம்பத் தகுந்தச் சேவைகளாக இவற்றை உருமாற்ற அரசு ஆவன செய்ய வேண்டும். பேருந்துச் சேவையில் தனியார்மயமாக்கம் அல்லது போட்டியிடும் தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி, போன்ற நடவடிக்கைகள் பலனளிக்கக்கூடும். அது போலவே, இரயில்களும் அதிகரிக்கப்பட்டால் (மற்றும் தற்போது இல்லாத நகரங்களில் அது நிறுவப்பட்டால்) அதன் குறைவானப் பயண நேரம் காரணமாக அது சிறந்தவொரு போக்குவரத்துச் சாதனமாக உருவெடுக்க வாய்ப்புள்ளது. எல்லா இடங்களையும் இரயில் சேவையைக் கொண்டு இணைப்பது இயலாததே. ஆகவே, last mile இணைப்பிற்கு (பேருந்து போன்ற) சாலைப் போக்குவரத்து வசதி வழங்கப்பட வேண்டும். இவையிரண்டின் கூட்டுக் கலவை, ஒரு நம்பகமான, விரைவான மற்றும் சுகமானப் பயண அனுபவத்தை மக்களுக்கு அளிக்கும் வாய்ப்பிருக்கிறது.
மேற்கூறிய மாற்று ஏற்பாடுகளைச் செய்த பின்னர், மக்கள் தம் சொந்த வாகனங்களை விட வெகுஜன வாகனங்களையே நாடும் சூழ்நிலை உருவாகலாம். அதனை உறுதிப்படுத்தும் வகையில், மற்றும் மக்கள் சொந்த வாகனங்களை பயன்படுத்துவதற்கு ஊக்குவிப்பு கிடைக்காத வகையில், அவற்றின் மீது அதிகப்படியான வரிகளை விதிக்க வேண்டும். கடுமையான நடவடிக்கையாகத் தோன்றினாலும், இது சிங்கை போன்ற இடங்களில் நடைமுறையில் உள்ளச் சட்டமே என்று அறிகிறேன். பலரும் தம் சொந்த வாகனத்தைத் துறந்துவிட்டு, வெகுஜனப் போக்குவரத்தைப் பயன்படுத்தத் தொடங்கினால், அதனாலுண்டாகும் பலன்கள் பலப்பல - எரிபொருள் சேமிப்பு, சாலைகளில் நெரிசல் குறைவு, மாசுக் கட்டுப்பாட்டில் முன்னேற்றம், வாகனம் ஓட்டும் பரபரப்பில்லாமல் மக்கள் நிம்மதியாகத் தம் பயணங்களை மேற்கொள்வதால் கிடைக்கும் உடல்நலம் மற்றும் மனஅமைதி, என்று நீளமாகப் பட்டியலிடலாம்.
இன்னொரு நடவடிக்கை, மக்கள் மத்தியில் மிதிவண்டிகளின் பயன்பாட்டை ஆதரிப்பது, அவற்றைக் கொண்டு மக்கள் அருகாமையிலிருக்கும் இடங்களுக்குப் பயணிக்க ஊக்குவிப்பது. இவற்றின் மீதுள்ள விற்பனை வரிகளை விலக்கலாம். வெகு இலகுவாக ஓட்டக்கூடிய அதி நவீன (geared) மிதிவண்டிகளைத் தயாரிக்க, அல்லது இறக்குமதி செய்ய உதவலாம். நான் அண்மையில் கேள்விப்பட்ட (மற்றும் இணையத்தில் மேய்ந்த) ஓரு அருமையானச் சாதனம் - கனக்குறைவான, மடக்கக் கூடிய மிதிவண்டிகள். சுமார் 10 கிலோ எடையுள்ள இவற்றை மடக்கி, கையோடு எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லக்கூடுமாம். இரயில் / பேருந்து நிலையம் வரை இந்த மிதிவண்டியில் சென்று, பின்னர் அதனை மடக்கிக் கையிலெடுத்துக் கொண்டு இரயிலிலோ பேருந்திலோ பயணத்தைத் தொடரலாம். மறுமுனை வந்ததும் மடக்கிய மிதிவண்டியை விரித்துக் கொண்டு அதனை மிதித்தே போகுமிடத்தைச் சென்றடையலாம். இத்தகைய மாற்று வசதிகள் இருக்கும்போது, சொந்தக் காரில் சென்று எரிபொருளை விரையம் செய்வது அநியாயமாகப் படுகிறது. மிதிவண்டிகளை ஓட்டுவதால் கிடைக்கும் உடற்பயிற்சியைக் குறித்து இங்கு விளக்கத் தேவையில்லையென்று எண்ணுகிறேன்.
இப்போது சரக்குப் போக்குவரத்தில் எரிபொருள் சிக்கனத்தைப் பற்றிப் பார்ப்போம். அதிகம் கூறுவதற்கில்லை, ஆனாலும் என்னைக் கவர்ந்த ஒரு திட்டம் இதோ. லாரிகள் சாலைகளில் ஓடாமல் ஜம்மென்று இரயில்களின் மீதேறி சவாரி செய்வதேனோ? அங்குதான் புதுமையே. நெடுஞ்சாலைகளில் ஓடி, டீசலை விரையம் செய்து, புகையைக் கக்கி, காற்றை மாசு படுத்தி, மெதுவானப் பயணத்தால் சரக்குச் சொந்தக்காரர்களின் நேரத்தையும் வீணாக்கி....... என்று பழைய முறையில் சரக்கைச் சேர்ப்பித்த காலம் மாறிக் கொண்டு வருகிறது. கொங்க்கன் இரயில்வே அறிமுகப்படுத்திய இத்திட்டத்தின் கீழ், லாரிகள் இரயில்களிலேறிக் கொண்டு, வெகு விரைவில் மறுமுனைக்குக் கொண்டுச் செல்லப் படுகின்றன. அங்கு சென்றதும் அவை இறங்கிக் கொண்டு, தாம் செல்ல வேண்டிய முகவரிக்கு, சாலை வழியாகச் சென்று விடுகின்றன. நம் நாட்டில் இத்தகைய திட்டத்தைத் தீட்டுபவர்களும் இருக்கிறார்கள். அதேபோல், golden quadrilateral போன்ற அறிவுஜீவித்தனமானத் திட்டங்களைத் தீட்டுபவர்களும் இருக்கிறார்கள், என்ன செய்வது?
12 கருத்துகள்:
அருமையான கட்டுரை.
ஏப்பா அங்கதான் மூலிகையிலயிருந்து பெற்றோல் எல்லாம் எடுக்கிறாங்கலாமே. அப்பிடி எதுவும் ட்ரை பண்ண வேண்டியதுதானே. ;-)
VOW, நல்ல அலசல்..
பொது பேருந்த்துகளில் நெரிசல் மற்றும் நேர விரயம் என்று பலர் ஸ்கூட்டார்களில்/காரில் அலுவலகம் செல்கிறார்கள். சிங்கையில் இவர்களைப் போல் உள்ளவர்களுக்காக executive buses விடுகிறார்கள். இது பொது போக்குவரத்து துறையை சேர்ந்த சேவை தான். ஆனால், seating மட்டும் தான். வசதியான, விரைவு சேவை. சற்று கட்டணம் அதிகம். இது போன்ற பஸ்கள் விடலாமே.
நல்ல கட்டுரை.
வெகுஜனப் போக்குவரத்தினைச் செம்மைப் படுத்தும் வேலைகளில் தீவிரமாக ஈடுபடும் வேளையில்,மாற்று எரிபொருட்களுக்கான தேடல்களையும், ஆராய்ச்சிகளையும் ஒதுக்கிவிடக் கூடாது என்பது என்கட்சி.
இப்போது
காட்டாமணக்குப்
(Jatropha curcas) பயிர்மூலம் bio-diesel பரிசோதனை நல்ல முன்னேற்றம் அடைந்துவருவது தெரிந்ததே. இந்தப்பயிருக்குத் தண்ணீரும் அவ்வளவு தேவையில்லையாம். எரிபொருள் தேவைகளைப் பூர்த்தி உள்நாட்டிலேயே பூர்த்தி செய்துகொள்ளும் நேரத்தில், மழை பொய்த்தலால் விஷமுண்டு இறக்கும் எமது எளிய விவசாயிகளும் லாபம் ஈட்ட நல்லதொரு வழி இது. மேலும், இந்த எரிபொருள் பயன்பாட்டினால் வெளிப்படும் Carbon di-oxide இனால் சுற்றுச்சூழலுக்கும் கேடில்லை.
ஆஹா! நல்லாதான் கனவு காணுகின்றீர்!! என்ன செய்ய? (மிகச்சிறந்த அறிவியலாலரை குடியரசுத்தலைவராகவும், பொருளாதாரமேதையை பிரதமாராகவும் பெற்றிருந்தும்) நம் நாட்டின் அரசியல் அப்படி....
1200 டி.எம்.சி. தண்ணீர் கர்நாடகா கடலில் வீணாகச் சென்று கலக்கிறதாம். அதிலிருந்து 600 டி.எம்.சி. தண்ணீரை மட்டும் காவிரிக்கு திருப்பிவிட்டால், தமிழக விவசாயத்திற்கு மட்டுமின்றி, சென்னைக்கு கூட தண்ணீர் தட்டுப்பாடு வராது. அதற்கு அரசு நயா பைசா செலவு செய்ய வேண்டாம் என்றெல்லாம் ஒரு பொறியாளர் மிக அருமையான திட்டம் தீட்டினாராம். அந்த திட்டத்தை விளக்கி நீர்வளத்துறை அமைச்சருக்கும், பெட்ரோலியத்துறை அமைச்சார் மணி சங்கர் அய்யருக்கும் கடிதமெல்லாம் அனுப்பினாராம். இதுவரை பலனில்லை. இதுகுறித்து ஒரு கட்டுரை 24.07.05 குமுதம் ரிப்போர்ட்டரில் வந்தது.
கல்வெட்டு, நன்றி.
கோபு, நாங்கள் மூலிகைகளிலிருந்து பெட்ரோல் தயாரிக்க முடியாதென்பதை மிகுந்த வலிகளுக்கிடையில் உணர்ந்தவர்கள். மேலதிக விபரங்களை இங்கே காணலாம். :)
ரம்யா, நிச்சயமாக நீங்கள் கூறுவதைப் போன்ற அதிக வசதிகளைக் கொண்ட பேருந்துகள் / இரயில்கள் ஆகியவையே நானும் பரிந்துறைப்பது. வெகுஜனப் போக்குவரத்துச் சேவைகள் சொந்த வாகனத்தை விட எவ்வகையிலும் சளைத்தவையல்ல என்றிருந்தால்தான் மக்கள் மனமுவந்து தம் சொந்த வாகனங்களைத் துறப்பார்கள்.
கண்ணன், காட்டாமணக்குப் பயிர் பற்றிய தகவலுக்கு நன்றி. சில வட்டாரங்களில் இத்தகைய தீர்வுகளைப் பற்றிய சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வருவதால், நானும் இவற்றைப் பற்றிய குழப்பத்திலேயே உள்ளேன்.
அழகப்பன், கனவு காணுங்கன்னு நம்ம குடியரசு தலைவரே சொல்லிட்டாரே, அப்பறமென்ன? :) குமுதத்தில் வந்த செய்தியைப் பற்றி நானும் கேள்விப்பட்டேன். எதாவது செய்வார்களென்று நம்புவோம்.
நல்ல பதிவுகளைத்தான் போடுவேன் என்று பிடிவாதமாக இருக்கும் உங்களுக்கு என் இனிய நல்வாழ்த்துக்கள்.
உங்கள் வாழ்த்துக்களுக்கும் ஊக்குவிப்புக்கும் நன்றி, ராம்கி :)
நல்ல பதிவு. அலசல். எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்கும் வழிகளைத் தீவிரமாய் யோசிக்க வேண்டும். பெங்களூரில் வர இருக்கிற ரயில்திட்டத்தை வைத்து நடக்கிற அரசியல் போன்றவை தான் கவலை தருகின்றன. ஆனாலும் golden quadrilateral திட்டம் நல்லது தானே. அது பற்றி ஏன் குறையாகக் கூறுகிறீர்கள். குறைந்தபட்சம் சரக்குவண்டிகளின் போக்குவரத்திற்கு அது பயனுள்ளதாய் இருக்குமே.
singaporele ooku vikkarangalam. indhiale enna avanavan velinaatule iruka madhiri
oththa carle ore aala ottitu poraan. indhialedhan podhu jana pokuvarathu nalla
payan paduthu. officeku van ellam chennaiyile vandhu vegu naalaachu.
cycle enna maatu vandi kuda innum vechirukom.
thamiznaatu gramathu pakkam kaatradi aalaigal kankolla kaatchiyaga iruku. inayatha vuttutu
oorukulle suththi paakavum.
sila oorle solar panel kattayama vekka sollraanga.
செல்வராஜ், நன்றி. பெங்களூர், ஹைதராபாத், மற்றும் சென்னையிலும் கூட இரயில் சேவை வெகுவாகப் வலுப்படுத்த வேண்டியுள்ளது. இதில் தாமதமேற்பட்டால் இந்நகர்களில் கார்களின் மற்றும் scooter / bikeகளின் எண்ணிக்கை (அதன் கூடவே எரிபொருள் பயன்பாடும்) இன்னும் பலமடங்கு பெருகிவிடும்.
Golden Quadrilateral(GQ) நல்லதொருத் திட்டமென்றுப் பரவலாக அறியப் படுகிறது. சரக்குப் போக்குவரத்தைக் காரணங்காட்டி முன்வைக்கப் பட்டாலும், அதன் நிறைவை ஆவலுடன் எதிர்பார்ப்பவர்கள் உலகின் automobile நிறுவனங்களே. உண்மையாகவே சரக்குப் போக்குவரத்தைச் செம்மைப்படுத்துவது நோக்கமென்றால் கவனம் நம்மிடம் ஏற்கனவே பரவலாக நிறுவப்பட்டுள்ள ரயில்வே அமைப்பின் மீதே இருந்திருக்கவேண்டும். ரயில்கள் லாரிகளை விட வெகு வேகமாகச் செல்லக்கூடியவை என்பது அனைவரும் அறிந்ததே. நாட்டின் எல்லா இடங்களையும் இணைக்கும் அதன் பரப்பும் இணையற்றதே. தற்போது சீர்கெட்டிருக்கும் ரயில்வேயின் சரக்குப் பிரிவை கொஞ்சம் சீர்திருத்தம் செய்தாலே, GQவை விட அதிகப் பலன் கிடைக்கக்கூடும். கொஞ்சம் கணிமைப்படுத்தல், கொஞ்சம் நிர்வாகத்தை முடுக்கி விடல், கொஞ்சம் தனியார்ப்படுத்தல் போன்றவற்றை மேற்கொண்டு, அதை செம்மையானதொரு வசதியாக மாற்றியிருக்க முடியும். Konkan Railway நமக்கு இதைத்தான் காட்டுகிறது. ஆனால் சரக்குப் போக்குவரத்தில் மேம்பாடு, பொருளாதார முன்னேற்றத்திற்கான அத்தியாவசியமானத் தேவை என்றெல்லாம் சப்பைக்கட்டு கட்டித் தொடங்கப்பட்ட இந்த GQ திட்டத்தால், ஒரு ஆடம்பரக் கலாச்சாரத்திற்கு அடிக்கல் நாட்டப்படுவதைத்தான் காணமுடிகிறது . திட்டம் முடிவடைந்தபின் பெட்ரோல் / டீஸல் வாகனங்களின் விற்பனை ஆகாயத்தைத் தொடக்கூடுமென்று எதிர்பார்க்கப் படுகிறது. உலகின் automobile பெருந்தலைகள் அனைவரும் அவசர அவசரமாக நம் நாட்டில் ஆலைகளை நிறுவுவதைக் கவனித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். மக்கள் தொலைதூரப் பயணங்களுக்கும் கார்களை உபயோகிக்கத் தொடங்கி விட்டார்கள். பெங்களூர் - சென்னை, பெங்களூர் - மைசூர், மும்பாய் - புனே, தில்லி - ஜெய்ப்பூர் ஆகிய மார்க்கங்களில் ஏற்கனவே இதை உணரலாம். இத்திட்டம் எரிபொருளுக்கு ஒரு அசுரப்பசியை உருவாக்கப் போவது நிச்சயம். அப்பசிக்குத் தீனி போடும் திறமை நமக்குள்ளதா என்பதுதான் கேள்வியே. மேலும் இத்திட்டம் நம் கிராமப்புறங்களில் ஏற்படுத்தக்கூடிய சுற்றுப்புறச் சூழல் ரீதியான மாற்றங்கள் குறித்தும் யோசிக்க வேண்டும்.
அனானிமஸ், சிங்கப்பூர்ல hook விக்கறாங்களா? :) நீங்கள் கூறுவதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால் நிலைமை மாறிக்கொண்டு வருவதை நீங்களும் உணர்கிறீர்கள் என்று நம்புகிறேன். Solar panel, காற்றாடி ஆலைகள் ஆகியவற்றை வரவேற்கிறேன். அவை உற்பத்தி செய்யும் மின்சாரத்தைக் கொண்டு கார்களும், ஸ்கூட்டர்களும் ஓடுமானால், மேலும் மகிழ்ச்சியடைவேன். ஊர் சுற்றிப் பார்ப்பது எனக்குப் பிடித்தமானவொன்றே. அதற்காகவே ஒரு மிதிவண்டியை வைத்துக் கொண்டிருக்கிறேன். நிதானமாக ஊரைச் சுற்றிப் பார்க்க முடிகிறது. இருப்பினும், உங்கள் அறிவுரைக்கு நன்றி :)
கருத்துரையிடுக