அறிந்தப் பலத் தகவல்களை அண்மையில் ஒரு புத்தக வடிவில் விலாவாரியாகப் படிக்க நேரிட்டது. தெரிந்த விஷயங்களேயென்றாலும், ஆர்வக் கோளாறால் உற்சாகத்தோடு படித்த கையோடு, அதனைப் பற்றிய விமர்சனத்தையும் இங்கு வைக்கிறேன். Thomas Friedman என்னும் அமெரிக்கப் பத்திரிகையாளர் எழுதிய The World is Flat என்றப் புத்தகமே அது. அதன் வாயிலாக ஆசிரியர் இவ்வுலக மக்களுக்குக் கூறிக்கொள்ள விரும்புவது - உலகம் சமன்பட்டுக் கொண்டிருக்கிறது - என்ற மாபெரும் உண்மையையே. புத்தகத்தின் தலைப்பு (மற்றும் அட்டைப்படம்) 'உலகம் உருண்டையானது' என்ற அறிவியல் உண்மைக்கு மாற்றுக் கருத்துத் தெரிவிப்பதைப் போலத் தோன்றினாலும், அவரது நோக்கம் அதுவல்ல. உலகில் ஏற்றத் தாழ்வுகள் மறைந்து சமன்பாடு ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றது என்னும் கருத்தையே இத்தலைப்பு குறிக்கிறது. இந்த முடிவுக்கு ஆசிரியர் எவ்வாறு வந்தார் என்பதை இப்புத்தகம் முழுவதிலும் விளக்குகிறார்.
முதலில் பல உதாரணங்களை முன்வைக்கிறார். உலகப் பொருளாதாரத்தில் நம் தகவல் நுட்ப நிபுணர்களின் பங்களிப்பு, அமெரிக்காவிலிருந்து சீனாவுக்கும் ஏனைய வளரும் நாடுகளுக்கும் இடம்மாறியத் தொழிற்சாலைகள், உற்பத்தியும் சேவைகளும் பல மடங்கு அதிகரிக்கப்படுவதனால் ஏற்படும் சிக்கனம் (economy of scale), என்றெல்லாம் அடுக்கிக் கொண்டே போய், கடைசியில் அவர் கூறுவது, மிகக் குறைந்த விலையில் எங்கு / எவ்வாறு உற்பத்தி அல்லது சேவை வழங்குதல் சாத்தியமாகுமோ, அங்கே / அவ்வாறே அது மேற்கொள்ளப்படும் என்பதே. ஆதலால் உலகின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் செல்வம் பரவ வாய்ப்பிருக்கிறது, அவை சில கட்டாயங்களை / தேவைகளை நிறைவேற்றினால், என்பதே அவரது கண்டுபிடிப்பு அல்லது நம்பிக்கை என்றுக் கூறலாம்.
இது காலகாலமாக உலக வர்த்தக நிறுவனம் (WTO) மற்றும் உலக வங்கியைச் சார்ந்த நிபுணர்களால் உலகமயமாக்கத்திற்கு ஆதரவாகக் கூறப்பட்டு வரும் வாதமேயென்றாலும், இந்த நூலாசிரியரின் கூற்றில் ஒரு அடிப்படை வேறுபாடுள்ளது. அவரது கூற்றுப்படி, இத்தகைய சமன்படுத்தல் கடந்த சில ஆண்டுகளில் நடைபெற்ற சில முக்கியமான நிகழ்ச்சிகளின் விளைவே. அவர் பட்டியலிடும் பல காரணிகள் தகவல் நுட்ப வளர்ச்சிக்குத் தொடர்புடையவை. உ-ம், இணையத்தின் வளர்ச்சி, வேறுபட்ட தகவலமைப்புகளின் கூட்டுறவு, தானியங்கும் வர்த்தகச் செயல்முறைகள் (workflow automation), தொடர்பாடல் நுட்பத்தில் வளர்ச்சி, கணிமை மலிவடைந்ததால் பரவலாக்கப்பட்ட அதன் பயன்பாடு, ஆகியன. இவற்றுடன் அவர் சேர்த்துக் கொள்ளும் இதர உலக நிகழ்வுகள், இடதுசாரி அரசுகளின் வீழ்ச்சி, சீனா WTOவில் இணைந்தது மற்றும் தனி மனிதனின் எழுச்சி (உரிமைகள், ஆற்றல்கள், வாய்ப்புகள், கருவிகள்) ஆகியவை. இவையனைத்தும் சேர்ந்து, இவ்வுலகம் வெகு வேகமாகச் சமன்படுவதற்குக் காரணமாயின என்பதே ஆசிரியரின் வாதம். இக்காரணங்களால், உலகச் சமூகங்கள் தடைகளின்றி, மற்ற சமூகங்களோடு வர்த்தகத்தில் போட்டியிடும் மற்றும் கூட்டுறவாடும் சக்தியைப் பெற்றன, அல்லது பெறக்கூடும் என்று இந்நூலாசிரியர் கருதுகிறார். அதி நுணுக்கமான, சிறப்பாற்றல்கள் தேவைப்படும் செயல்களைத் தவிர, மற்ற எல்லா வேலைகளும் செயல்பாடுகளும், மிகக் குறைந்த ஊதியங்கள் நடைமுறையிலுள்ள நாடுகள் / சமூகங்களை நோக்கியே நகரும் என்றக் கசப்பான உண்மையை அமெரிக்கர்களுக்கும் மற்றவர்களுக்கும் இனிப்புத் தடவி வழங்குகிறார். அவர் சந்தித்துப் பேசிய Sony Corp.இன் தலைவர் Nobuyuki Ideiஇன் கூற்றுப்படி, தற்போது வர்த்தக - நுட்பவுலகில் நிகழ்ந்து கொண்டிருக்கும் மாற்றமானது, முன்பொரு காலத்தில் ஒரு விண்கல் அதிவேகத்துடன் இவ்வுலகின் மீது விழுந்து எல்லா dinosaurகளையும் முற்றிலும் அழித்த நிகழ்வுக்கொப்பானதாகும். முன்னெச்சரிக்கையோடு செயல்படாத நபர்கள் / சமூகங்களுக்கு, முன்பு dinosaurகளுக்கேற்பட்ட நிலைதான் காத்திருக்கிறது என்ற எச்சரிக்கை சொல்லாமல் சொல்லப்படுவதை கவனிக்க.
இத்தகைய வேலையிழப்புகளையும் தாண்டி, எவ்வாறு இச்சமன்படுதல் எல்லா சமூகங்களுக்கும் பயனளிப்பதாக இருக்குமென்று விளக்கு விளக்கென்று விளக்குகிறார். இத்தகைய விளக்கங்களில் எனக்கு ஏற்புடையதாகப்பட்டது, வேலையிழப்புகள் நேரும் அதே நேரத்தில் புதிய (முன்பு நடைமுறையில் இருந்திராத) வேலைகளும் துறைகளும் உருவாகலாம், இவை மனிதத்தின் அதிகரித்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு இன்றியமையாதவைகளாகவும் உருவெடுக்கலாம், என்பதே. உ-ம், சில வருடங்களுக்கு முன்பு எவரும் அறிந்திராத, இணையத்தைச் சார்ந்த எவ்வளவு வேலைவாய்ப்புகள் அண்மைக் காலங்களில் உருவாகியுள்ளன?
இச்சமன்படும் உலகை எதிர்நோக்கும் கட்டாயத்திலுள்ள அமெரிக்காவின் கல்வியமைப்பு எந்தளவுக்குத் தயார் நிலையிலில்லை என்பதையும் விரிவாக எடுத்துக் கூறுகிறார். இதனை உடனடியாகத் திருத்தவில்லையெனில் இன்னும் 10 - 15 ஆண்டுகளில் அமெரிக்கா நுட்ப வளர்ச்சியில் பின்தங்கி விடுமென்று எச்சரிக்கை விடுக்கிறார். இதனைப் படிக்கும்போது நாமும் ஏறத்தாழ அதே நிலையில் இருப்பதை உணரலாம். ஆக, இது அமெரிக்காவுக்கு மட்டும் விடப்பட்ட எச்சரிக்கையன்று. நம்மைப் போன்ற அசட்டையாக இருப்பவர்களுக்கும் சேர்த்தே விடுக்கப்பட்ட எச்சரிக்கையே. நுட்ப வளர்ச்சிக்கு அடிப்படைத் தேவையான விஞ்ஞான மற்றும் கணிதத் துறைகளில் மேதமை, ஆய்வுத் திறன் மற்றும் வசதிகள், ஆய்வறிக்கை வெளியீடுகள், அறிவுடைமை (intellectual property) வளர்ப்பு ஆகியவற்றில் நாம் இன்னும் காத துரம் பயணிக்க வேண்டியுள்ளது. இப்புத்தகத்திலுள்ள, சீனாவின் கல்வித்துறையின் சாதனைகளைப் பற்றிய விவரிப்பு, நம் கல்வியாளர்களுக்கும் திட்டங்கள் தீட்டுபவர்களுக்கும் வயிற்றில் புளியைக் கரைப்பது நிச்சயம்.
மேலும் சில அத்தியாயங்களைப் படிக்க வேண்டியுள்ளது. புதியக் கருத்துக்கள் ஏதேனும் தென்பட்டால் இன்னொருப் பதிவாக இடுகிறேன். எளிய, படிக்கத் தூண்டும் நடை. அத்தியாவசியமானத் தகவல்கள். மாற்றுக் கருத்துக்கள் இருந்தாலும், இது வர்த்தக மற்றும் நுட்பத் துறையிலுள்ளவர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூலாகும் என்றுக் கருதுகிறேன். வருங்காலச் சந்ததியினரின் வாழ்வுமுறையை வடிவமைக்கும் பெற்றோர்களுக்கும், இந்நூல் சில உண்மைகளை உணர்த்தக் கூடும்.
3 கருத்துகள்:
VOW, புத்தகத்தைப் பற்றி கேள்விப்பட்டேன். அறிமுகத்திற்கு நன்றி!
படிக்க குறித்துக் கொள்கிறேன். //வேலையிழப்புகள் நேரும் அதே நேரத்தில் புதிய (முன்பு நடைமுறையில் இருந்திராத) வேலைகளும் துறைகளும் உருவாகலாம், இவை மனிதத்தின் அதிகரித்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு இன்றியமையாதவைகளாகவும் உருவெடுக்கலாம், என்பதே. உ-ம், சில வருடங்களுக்கு முன்பு எவரும் அறிந்திராத, இணையத்தைச் சார்ந்த எவ்வளவு வேலைவாய்ப்புகள் அண்மைக் காலங்களில் உருவாகியுள்ளன?
//என்பது மனிதர்கள் தம் உயிர்வாழ்தலுக்காக (survival) செய்கிற தவிர்க்கவியலா செயல் என்றே தோன்றுகிறது.
இந்த அமைப்பில் Thomas Friedman போல நம்பிக்கை கொள்ள முடியவில்லை.
// உலகின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் செல்வம் பரவ வாய்ப்பிருக்கிறது, அவை சில கட்டாயங்களை / தேவைகளை நிறைவேற்றினால், என்பதே அவரது கண்டுபிடிப்பு அல்லது நம்பிக்கை என்றுக் கூறலாம்.//
இந்த அமைப்பில், செல்வங்கள் குறிப்பிட்ட வீதத்தினரிடம் தங்குவதுதான் இயல்பு. :(
சுதர்சன், பொடிச்சி, வருகை தந்தமைக்கு நன்றி. இதன் தொடர்ச்சியாக என் அடுத்தப் பதிவையும் இட்டிருக்கிறேன்.
இந்த அமைப்பால் அடையக் கூடிய நலன்கள் குறித்து எனக்கும் முழுமையான நம்பிக்கைகள் கிடையாதென்றாலும், இது நம் வாழ்க்கையில் அதிகமானத் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது எனபதில் சந்தேகமில்லை. உலகமும் விரைவாக இதனை நோக்கிச் சென்று கொண்டிருப்பதால், நம் உயிர்ப் பிழைப்புக்காவது இவ்வமைப்பு குறித்தப் புரிதலில் தெளிவு இருக்க வேண்டியது அவசியமென்றுக் கருதுகிறேன்.
கருத்துரையிடுக