வியாழன், ஜூன் 30, 2005

சேது

இப்போது மேளதாளத்தோடு அரங்கேறிக் கொண்டிருக்கும் சேது சமுத்திரத் திட்டத்திற்கு எழுந்த எதிர்ப்புக் குரல்களை முன்னிறுத்துவதே இப்பதிவின் நோக்கம். கீழ்க்கண்ட சுட்டிகளில் இது குறித்த அரிய தகவல்களைப் படிக்கலாம் (மற்றும் கேட்கலாம்):
இத்திட்டத்திற்கு லோகோ (logo) வேறு தயாரித்து விட்டார்களாம். நான் கூடத்தான். இதோ:



திங்கள், ஜூன் 20, 2005

படித்த முட்டாள்களும் படிக்காத மேதைகளும்

தோழியொருவரை விமான நிலையத்தில் வழியனுப்பிவிட்டு, வீடு சேர்ந்து, ஒரு படத்தின் குறுந்தகட்டையும் பார்த்து முடித்து விட்டு, இணையத்தில் புகுந்தால், சிறிது நேரத்தில் வழியனுப்பியவரும் இணையத்தில் புகுவது தெரிந்தது. வணக்கம் கூறி அரட்டையை ஆரம்பித்தோம். பயணம் குறித்து விசாரித்தேன். எங்களூரிலிருந்து பெங்களூர் மார்க்கமாக ஒரு வளைகுடா நகருக்குச் செல்லுமந்த இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம், மிகவும் பழமையாக இருந்ததென்றும், சரியான காற்றோட்டமும் இல்லாதவொன்றாக அமைந்ததென்றும் வருத்தப் பட்டார். பரிமாறப்பட்ட சிற்றுண்டியின் பரிதாப நிலை காரணமாக அதையும் தொட இயலவில்லையென்றார். என்ன தைரியத்தில் இவர்கள் மற்றொரு விமான அமைப்பை (ஏர் டெக்கன்) விட இரு மடங்குக் கட்டணம் வசூலிக்கிறார்கள் என எண்ணத் தோன்றியது. இவையெல்லாவற்றையும் விட வருத்தமளிக்கக்கூடிய ஒன்றையும் அவர் குறிப்பிட்டார். இப்பதிவின் கரு அதுவே.

அவருடன் பயணித்தவர்கள் இரு வகையாம். முதல் வகை, மேற்படிப்பு படித்த, பெங்களூர் மற்றும் வளைகுடா நாடுகளில் மென்பொருள் / பொறியியல் துறைகளில் பணியாற்றுவோர், மற்றும் குடும்பத்தினர். இரண்டாம் வகை, (அதிகம்) படிக்காத, ஆங்கிலம் நன்றறியாத, எளிய தோற்றமும் உடமைகளும் கொண்ட, வளைகுடா நாடுகளில் தொழிலாளர்களாகப் பணியாற்றுவோர். ஒரு வசதிக்கு, இந்த இரு வகைகளை, 'படித்த முட்டாள்கள்' (ப.மு) என்றும் 'படிக்காத மேதைகள்' (ப.மே) என்றும் வைத்துக் கொள்வோம் - அடைமொழிக் காரணமறிய மேற்கொண்டுப் படியுங்கள்.

ப.மே. இனத்தவர்களை, ப.மு. இனத்தைச் சேர்ந்த விமானப் பணிப் பெண்களும் தரக் குறைவாக, மரியாதையின்றி நடத்தினார்களாம். வாடிக்கையாளர்களிடம் காட்டவேண்டிய அடிப்படை நட்புணர்வு, சேவை மனப்பான்மை போன்றவற்றுக்கெல்லாம் ப.மே. இனத்தவர்கள் அருகதையற்றவர்கள் போலும். ப.மே. பயணிகளுக்கு அருகில் அமரும்படி நேர்ந்த ப.மு. பயணிகளோ, தம் நிலையை நொந்து மனதுக்குள் பொருமிக் கொண்டிருந்தது அவர்கள் முகத்தில் எழுதி ஒட்டியிருந்ததாம். அத்தகையவொரு ப.மு. பெண்மணி, பொறுக்க முடியாமல் விமானப் பணிப்பெண்ணிடம் அவரை வேறு இருக்கைக்கு மாற்றித் தருமாறு வேண்டினாராம். என்னாயிற்று என்றதற்கு, ஒரு ப.மே. அருகில் அமர்ந்து தன்னால் பயணிக்க இயலாது என்று வெளிப்படையாகவே கூறினாராம். அதற்கு ப.மு. பணிப்பெண்ணும், எல்லா இருக்கைகளும் நிரம்பி விட்டதால் அவரால் உதவ இயலவில்லையென்றும், முடிந்திருந்தால் நிச்சயமாக அந்த வேண்டுகோளை நிறைவேற்றியிருப்பாரென்றும் விடையளித்தாராம். ஆங்கிலத்தில் நடைபெற்ற இந்த உரையாடலின் பொருளை தன் அறிவுக் கூர்மையால் உணர்ந்த ப.மே., மிகவும் அவமானமடைந்து, குறை கூறிய அந்தப் ப.மு. பயணியிடம் உடைந்த ஆங்கிலத்தில், தான் அவருக்கு எந்தத் தீங்கும் இழைக்கப் போவதில்லையென்றும், ஏதோ வயிற்றுப் பிழைப்புக்காக வெகு தூரம் சென்று பொருளீட்ட வேண்டியிருக்கிறதென்றும் கூறினாராம். அதன் பிறகு ப.மு. வாயை(யும் மற்றதுகளையும்) மூடிக்கொண்டு பயணம் செய்தாராம்.

மேலும் எனது தோழி கூறியது: ப.மே.க்கள் அதிகம் படித்திராவிட்டாலும், அவர்கள் நடத்தையில் கண்ணியமும், நாகரீகமும், பலமுறை வெளிநாடு சென்று வந்த அனுபவமும் தெரிந்ததாம். அவர்கள் நடத்தப் பட்ட விதத்தையும் மீறி, மற்றவர்களுக்கு சாமான்கள் இறக்கித் தருவது போன்ற ஒத்தாசைகளும் செய்தார்களாம். ஆனால் ப.மு.க்களோ, விமானம் நிறுத்ததிற்கு வருமுன்னரே முண்டியடித்துக் கொண்டு எழுந்து, தடாலடியாக சாமான்களையிறக்கி, மற்றவர்களுக்கும் இன்னல் விளைவித்துக் கொண்டிருந்தார்களாம்.

வேடிக்கை என்னவென்றால், நாட்டின் வளர்ச்சியைக் கணக்கிட ப.மு.க்களின் எண்ணிக்கையே கருத்தில் கொள்ளப்படுகிறது. எங்கேயோ தவறிருக்கிறது என்றுதான் தோன்றுகிறது.

வெள்ளி, ஜூன் 17, 2005

சேது சமுத்திரம் கால்வாய்

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலுள்ள Palk Straits வழியாக பெருங்கப்பல்களும் செல்வதற்கு வசதியாக, 82 மில்லியன் கியூபிக் மீட்டர் அளவு மணலை கடற்படுகையிலிருந்து குடைந்தெடுத்து, அகலமானதொரு கால்வாய் அமைக்கப் படப்போவதை அநேகமாக அனைவரும் அறிந்திருக்கலாம். சேது சமுத்திரம் எனப்படும் இத்திட்டம் தமிழர்களின் நூறு வருடத்திய கனவை நனவாக்குகிறதாம் (தகவல்: மத்திய அமைச்சர் ப.சி.). எனக்குத் தெரிந்து அப்படியெல்லாம் யாரும் கனவு கண்டதாகத் தெரியவில்லை. தமிழர்களின் கனவெல்லாம் குழாயில் தண்ணி, விலைவாசியில் கட்டுப்பாடு, படித்த பின் வேலை, பள்ளி / கல்லூரிகளில் பிள்ளைகளுக்கு இடம் போன்ற மிக எளிமையான கனவுகளே, என்றே இவ்வளவு நாட்களும் நினைத்திருந்தேன். ப.சி.யின் தகவல் என் ஞானக்கண்ணைத் திறந்தது ஒரு புறம், ஒரு மிகப்பெரிய கண் துடைப்பு அரங்கேறிக் கொண்டிருப்பது மறுபுறம், எனலாம்.

இத்திட்டத்தில் மேற்கொள்ளப்போகும் பிரம்மாண்ட அளவிலான மணற்குடைவால் கடல் நீர் கலங்கலேற் பட்டு மாசு படப்போவது நிச்சயம் (இல்லையன்று சாதிக்க 'நீரி' என்னும் National Environmental Engineering Research Instituteஉம் வக்காலத்து. தமிழக மாநில மாசுக் கட்டுப்பாட்டு நிறுவனத்தின் அனுமதியை இத்திட்டம் இன்னும் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது). இதனால் அந்த நீர்ப்பரப்பிலுள்ள கடல்வாழ் உயிரினங்கள் அழியப்போவதும் கண்கூடான உண்மை. நிச்சயமில்லாதது என்னவென்றால், இந்த நடவடிக்கைகளால் பாதிக்கப்படும், ஆறு தமிழக மாவட்டங்களிலுள்ள மூன்றரை இலட்சம் மீனவர்களின் பிழைப்பு மற்றும் வருங்காலம் ஆகியவையே. இத்திட்டம் தரும் பயன்கள்: கப்பல்கள் செல்ல ஒரு குறுக்கு வழி, பயணத்தில் 800 கி.மீ மற்றும் 30 மணி நேரம் குறைவாம். யாருடைய பயணமோ 30 மணிநேரம் குறையவேண்டுமென்று தமிழர்கள் ஏன் நூறு வருடங்களாகக் கனவு கண்டார்களாம்? ப.சி, you can fool some people some time, but not all the people all the time......... என்ற கூற்றுதான் நினைவுக்கு வருகிறது.

மறுபடி மறுபடி, முன்னேற்றம் என்ற பெயரில் விவசாயிகள், மீனவர்கள் போன்ற சமானியர்களின் பிழைப்பு காவு கொடுக்கப் படுவது இந்த பாழாய்ப்போன நாட்டில்தான். எப்படியும் சுனாமி அதிர்ச்சியிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு கொண்டிருக்கிறார்களல்லவா? கொடுப்போம் அவர்களுக்கு அடுத்த அடியை!

Ref:
1. NDTV site
2. Hindu news item

வெள்ளி, ஜூன் 10, 2005

விரிவான பதிவு

தமிழ்99 விசைப்பலகை குறித்து (அதனைப் பயன் படுத்தியே) நேற்று ஒரு பதிவிட்டேன். அதில் அவ்வளவாகப் பழகியிராத காரணத்தால் சுருக்கமாக அமைந்து விட்டது. இன்று கொஞ்சம் முன்னேற்றமிருப்பதால் விரிவாகவே எழுதுகிறேன். உலகின் மிகச் சுளுவான விசைப்பலகை இதுதானாம். 'தமிழர்கள் கொடுத்து வைத்தவர்கள்' என்று எண்ணுவதற்கு முன் அவசர அவசரமாக யதார்த்த நிலை நினைவுக்கு வருகிறது. அதாவது, தமிழிணையப் பயனர்கள் பெருவாரியாக உபயோகிப்பது 'romanized' எனப்படும் ஒலியியல் முறைத் தட்டச்சையே என்ற உண்மை நிலை. நாம் தோற்றுவித்த நுட்பம் குறித்து நமக்கே சந்தேகம். இல்லாவிட்டால், தோன்றி ஆறு வருடங்களாகியும் இப்படிக் கேட்பாரற்றுக் கிடக்குமா? சரி, இப்போது தமிழ்99னின் அருமை பெருமைகளைப் பார்ப்போம்:
  • 'shift' விசையிலிருந்து விடுதலை. எப்போதேனும் ஒரு முறை பயன் படுத்தும் கிரந்த எழுத்துக்களுக்கு மட்டுமே 'shift' விசை தேவைப் படுகிறது. (Romanizedஇலோ, நெடில் எழுத்துக்கள் எல்லாவற்றுக்கும் shift அழுத்தியாக வேண்டிய கட்டாயம்.) இதனால் நீங்கள் சேமிக்கும் சக்தியை வேறு எந்த வகையில் செலவிடலாமென நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்.
  • உயிரெழுத்துக்கள் ஒரு (இடது) பக்கமும் மெய்யெழுத்துக்கள் மறு(வலது) பக்கமும் உள்ளதால் (உயிர்மெய்யெழுத்துக்கள் அதிகம் உள்ளிடப்படும் சாத்தியமிருப்பதால்), இரு கைகளுக்கும் சமமான ஈடுபாடு. இதனால் பழகப் பழக, வெகு வேகமாக உள்ளிடும் சாத்தியமிருக்கிறது. (ergonomicsஐ தமிழில் எப்படிக் கூறலாம்?)
  • 'அகர' உயிர்மெய்யெழுத்துக்களான க, ங, ச, ஞ போன்றவற்றை ஒரு விசை அழுத்தத்திலேயே பெற்று விடலாம். ஏனென்றால், 'romanized'இல் க் + அ, க் + ஆ, க் + இ என்று தட்டும் முறையைப் போலல்லாது, க + ஆ, க + இ, க + ஈ என்று தட்ட வேண்டும். இதனால் கிடைக்கும் பயன், அதிகம் பயனிக்கும் எழுத்துக்களுக்குக் குறைந்தத் தட்டல்கள்.
  • சிகரம் வைத்தாற்போல் அமைந்த அம்சம், தானியங்கிப் புள்ளி வைப்பு ஆகும். மெய்யெழுத்துக்களுக்குப் புள்ளி வைக்க வேண்டுமென்பது அனைவரும் அறிந்ததே (என்று நினைக்கிறேன்). இந்த விசைப்பலகையில் பொதிந்த புத்திசாலித்தனத்தால் (intelligence) புள்ளி வைக்க வேண்டிய சூழ்நிலைகளில் தானாகவே புள்ளி வைக்கப் பட்டு விடும். உதாரணம்,
    • ஒரே எழுத்து இரு முறைகள் தட்டப் பட்டால். 'அ ம ம' என்ற உள்ளீட்டை 'அம்ம' என்று ஏற்றுக்கொண்டு விடும். அதே போல், 'ஆ த த' --> 'ஆத்த', 'ம ன ன' ---> 'மன்ன'.
    • மெல்லினத்தைத் தொடரும் வல்லினம். 'க ந த' ---> 'கந்த', 'எ ன ற' ---> 'என்ற', 'வ ண ட' ---> 'வண்ட', 'வ ங க' ---> 'வங்க'. இதில் அழகு என்னவென்றால், 'ந த', 'ன ற', 'ண ட', 'ங க' ஆகியன, அடுத்தடுத்துள்ள விசைகளாகும்.
இது எல்லா வகைகளிலும் சிந்தித்து, ஆய்ந்து பார்த்து உருவாக்கிய ஒரு விசைப்பலகை வடிவமைப்பாக எனக்குப் படுகிறது. இதில் பயிற்சி பெற ஒரு உதவித் திரை உருவாக்கியிருந்தேன். (காண்க: என் சென்றப் பதிவு). இதனை நன்றாகப் பயின்றால் தமிழில் வேகமாகவும், குறைந்த சிரமத்துடனும் உள்ளிடலாம்.

வியாழன், ஜூன் 09, 2005

சுருக்கமான பதிவு

இதனை தமிழ்99 தட்டச்சு முறையால் பதிகிறேன். இம்முறையைப் பற்றி இந்த வலைப்பக்கத்தில் காணலாம். அதிலிருந்து ஒரு வரி: "It's said that no language keyboard in the world is now as simple as this! To represent 26 characters of English, you need 26 lower case and 26 upper case keys. But to represent 247 Tamil letters, you need only 31 keys! How laudable!" இது குறித்து அனுராக்கும் சில நாட்களுக்கு முன் பதிவிட்டார்.

தமிழ்99 முறையின் எளிமையைக் கணக்கில் கொண்டு நானும் இம்முறைக்கு மாறுகிறேன். இந்த மாற்றத்தை எளிமையாக்க ஒரு உபகரணத்தை உருவாக்கியுள்ளேன். இதிலுள்ள தமிழ்99 வடிவமைப்பைப் பார்த்துக் கொண்டே உள்ளீடு செய்வது கொஞ்சம் சுலபமாகும். "எவ்வாறு பார்த்துக் கொண்டே உள்ளீடு செய்வது, வேறொரு windowவைத் திறந்தால் இது minimize ஆகிவிடாதா" என்கிறீர்களா? அதற்குத்தான் நான் வலை மேய்ந்து இந்த நிரலியைக் கண்டு பிடித்திருக்கிறேன். இதனை நிறுவிக் கொண்டு, ஓடவிட்டு (run the 'exe' file), எனது 'தமிழ்99 வடிவமைப்பு' உதவித் திரையைத் தேர்வு செய்து, CTRL+ALT+T என்ற கலவையை அழுத்தினால், அதன் பிறகு இந்த உதவித் திரை எப்போதும் மறைந்து போகாது தோற்றமளித்துக் கொண்டே(i.e. always on top) இருக்கும். அதனைப் பார்த்துக் கொண்டே நீங்கள் தமிழ்99 முறையில் Notepadஇலோ, வேறு கணி-சார் மற்றும் உலாவி-சார் எழுதிகளிலோ உள்ளீடு செய்யலாம். வேண்டாத பொழுது உதவித் திரையை minimizeசும் செய்து கொள்ளலாம்.