ஞாயிறு, ஜூன் 29, 2008

இந்தோ - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் குறித்து

முதலில் சில பின்னணி விவரங்கள்:
 1. உலகெங்கிலும் மின்சக்தி / எரிபொருள்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரிச்சிக்கிட்டே போகுது. இந்தியாவும் இதுக்கு விதிவிலக்கு கிடையாது. ஒரு பில்லியனுக்கு அதிகமான ஜனத்தொகை, அதுவும் பெருகிக்கிட்டே போகும் நிலையில் அனைவருக்கும் மின்வசதி செய்து கொடுப்பது சுலபமானது கிடையாது.
 2. எண்ணை / நிலக்கரி வளங்கள் குறைஞ்சிக்கிட்டு வருது, ஒரு நாள் இவை மொத்தமா தீர்ந்து போய்விடக்கூடிய நிலையும் ஏற்படலாம். அவற்றின் விலையேற்றம், மற்றும் இந்த எரிபொருட்களால் உலகளாவிய சூடேற்றம் / வானிலை மாற்றங்கள் போன்ற பின்விளைவுகளும் ஏற்படுது. அவற்றுக்கு மாற்று எரிபொருட்கள்ன்னா சூரிய ஒளி, காற்று, அலைகள் போன்ற புதுப்பிக்கக்கூடிய வளங்கள் இருக்கு. ஆனாலும் அவையால் எண்ணை / நிலக்கரி போன்ற பரவலை அடைய முடியாது. ஆங்காங்கே முடிந்த அளவு தேவைகளை நிறைவேற்றலாம். முற்றும் முழுவதுமா அவற்றை நம்பி இருக்க முடியாது. ஆக, இந்த எண்ணை / நிலக்கரிக்கு ஒரு நம்பகமான மாற்றுன்னா அது அணுசக்தியாதான் இருக்க முடியும்.
 3. அணுசக்திங்கும் போது, அது அணு ஆயுதத் தயாரிப்புக்கும் திசை திருப்பப்படும் அபாயம் இருக்கிறது. இதைக் காரணமா வச்சிக்கிட்டு ஏராளமான அரசியல் முன்னெடுப்புகள் நடந்துக்கிட்டு இருக்கு, போர்கள் உட்பட.
 4. அணுசக்தியிலிருந்து மின்சாரம் தயாரிக்கிறது முற்றிலும் பாதுகாப்பானதான்னு கேட்டா "நிச்சயமா" அப்படீன்னு அடிச்சு சொல்றதுக்கு தயாரா இருக்காங்க அணுசக்தித் துறையைச் சார்ந்தவங்க. அவங்க சொல்வதன்படி, அணுமின் நிலையங்களிலிருந்து உருவாகும் கதிரியக்கக் கழிவுகளை அதல பாதாளத்தில் ஆயிரங்காலத்துக்கு புதைத்து வைக்கணும், எந்தக் குறுக்கீடும் இல்லாம. அப்படி பாதுகாத்தா அவை கதிரியக்கத்தன்மையை முற்றிலும் இழந்துவிடும், அவற்றால் ஏற்படக்கூடிய அபாயங்களும் அகன்று விடும். கேக்கறதுக்கு நல்லாத்தான் இருக்கு. இன்னும் பத்து வருஷத்துக்குள்ள என்னல்லாம் நடக்கும்ன்னே சொல்ல முடிய மாட்டேங்குது. ஆயிரமாண்டுகளுக்கு நாம புதைத்து வைக்கிற கழிவுகள் ஒரு பாதிப்புமில்லாம அப்படியே பத்திரமா இருக்கும்ன்னு எந்த அடிப்படையில் உறுதி செய்து கொள்வது?
 5. அணு ஆயுதங்கள் தேவையா? தேவையில்லைன்னுதான் தோணுது, பின்ன ஏன் இந்த நிலைமை? இப்படியெல்லாம் எடக்கு மடக்கா கேக்ககூடாதுங்கறீங்களா? அப்போ இதுக்கு விடைதான் என்ன? இதுவா? அப்படின்னா நம்மால் உடன்படக்கூடிய தீர்வுதானா இது?
 6. அணுசக்தி நமக்கு நிச்சயம் தேவை என்பதில் உறுதியா இருக்கோமா, அதோட அணு ஆயுதம் நமக்குத் தேவையில்லை என்பதிலும் உறுதியா இருக்கோமா? அப்படீன்னா இந்தோ - அமெரிக்க அணு ஒப்பந்தம் ஒரு சரியான முடிவுதான். இருந்தாலும், இந்த ஒப்பந்தம் இல்லாமலேயே நம்மால் அணுசக்தித் தன்னிறைவை அடைந்திருக்க முடியுமா என்ற கேள்வியும் வருது. அது முடியுமானால் நமக்கு ஒவ்வாத இந்த 123 ஒப்பந்தத்தையே கையெழுத்திட்டிருக்க வேண்டாமே?
 7. கிட்டத்தட்ட நாற்பது வருடங்களா மேற்கூறிய அணு ஆயுதத் தடை ஒப்பந்தத்தை ஏற்காம இருந்திருக்கோம், அது ஒருதலைபட்சமா இருக்கு என்ற அடிப்படையில். இப்போ திடீர்ன்னு ஏன் நம் கொள்கையில் மாற்றம்? இந்த மாற்றத்துக்கான கட்டாயம் எப்படி ஏற்பட்டது? சரி இந்தக் கொள்கை மாற்றம் தேவையானதுன்னு வச்சிக்கிட்டாலும், அதை வெளிப்படையா அறிவிக்கலாமே? அறிவித்து, நேரடியாக இந்த NPT தடை ஒப்பந்தத்திலேயே கையெழுத்திடலாமே? ஏன் 123 என்ற மறைமுகமான பின் வாசல் அணுகுமுறை? முட்டாள்களை அடிமுட்டாள்கள் ஆக்கும் முயற்சியா இது?
பின்வரும் பகுதியில், மேலே கேட்டிருக்கிற கேள்விகளை விரிவா விவாதிக்கலாம்.

நம்மோட மின்சக்தி உற்பத்தித் திறனை மிக அதிக அளவுக்கு அதிகரிக்கணும்ங்கிறதுல எந்த வித சந்தேகமும் இருக்க முடியாது. நம்மோட கிராமங்களுக்கெல்லாம் தடையற்ற மின்சக்தி கிடைக்கணும், அவையும் உலகப் பொருளாதாரச் சந்தையில் போட்டி போடும் அளவுக்கு அவற்றை முன்னேற்றணும். அதுக்கு அத்தியாவசியமானது போதிய அளவு கிடைக்கக்கூடிய மின்சாரம் என்பதில் சந்தேகமே கிடையாது. மேலும், எண்ணை நிலக்கரி வளம் குறைஞ்சிக்கிட்டும் அவற்றோட விலை உயர்ந்துக்கிட்டும் இருக்கும் நிலையில், மற்ற புதுப்பிக்கக்கூடிய வளங்களைய்ல்லாம் எவ்வளவு தூரம் பயன்படுத்த முடியும்ன்னு உறுதியா தெரியல. ஆகவே, அவற்றுக்கு சரியான மாற்றாக அணுசக்தி ஒன்றுதான் இருக்க முடியுமென்பதிலும் சந்தேகமில்லை. ஏறகனவே உலகின் மொத்த மின்சார உற்பத்தியில் ஆறில் ஒரு பங்கு அணுசக்தியிலிருந்துதான் வருது. இந்தியாவில் இந்த விழுக்காடு 3%தான். இதை 2050ஆம் ஆண்டுக்குள்ள 25%ஆ அதிகரிக்கணும்ங்கிற இலக்கு பற்றி பேசப்படுது. அதுக்குத் தடையா இருக்கக்கூடிய ஒரே காரணம், நம்மிடம் போதிய அளவுக்கு யுரேனியம் என்ற தாதுப் பொருள் இல்லாததுதான்.

அணுமின் உற்பத்தியில் ஒரு விரும்பத்தகாத அம்சமும் இருக்கு. அதுதான் கதிரியக்கக் கழிவுகள். அவற்றை அதல பாதாளத்தில் தனிமைப்படுத்தி ஆயிரம் ஆண்டுகளுக்கும் பாதுகாப்பா விட்டு வைத்தால்தான் அவை கதிரியக்கத்தன்மையை இழக்கும். இந்தக் கழிவுகள் எரிபொருட்களின் மிச்சம் மீதி மட்டுமில்லாம, அத்தகைய பொருட்களோட தொடர்பு ஏற்பட்ட சாதாரண மற்ற பொருள்களும் ஆகும். அதாவது ஒரு கையுறை அல்லது ஒரு வேற உபகரணங்கள் கொண்டு கதிரியக்கப் பொருட்களைக் கையாளும் பட்சத்தில் அந்த உபகரணங்களும் கதிரியக்கத்தன்மை அடையுது. ஆகவே, அவற்றையும் சேர்த்து ஆயிரங்காலத்துக்கு பாதுகாக்க வேண்டியதுதான். இல்லைன்னா அவற்றால் உலகத்து உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்புள்ளது. அமெரிக்க நெவாடா மாநிலத்தில் ஏற்படுத்தப்படவுள்ள இத்தகைய நிலவறை மற்றும் அதற்கு எழுந்துள்ள எதிர்ப்புகள் பற்றி இந்தப் பக்கத்தில் காணலாம். Seismic activity எனப்படும் நிலநடுக்கங்கள் எங்கெங்கே ஏற்படும், அதிலிருந்து முற்றிலும் பாதுகாப்பா இந்தப் பொருட்களை வைத்துக் கொள்ள முடியுமா என்பது போன்ற சந்தேகங்களெல்லாம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை. அதோட, செர்னோபில் போன்ற ஆபத்துகளையும் மறக்க முடியுமா?

இப்போது, அணு ஆயுதங்கள் பற்றிய சர்ச்சை குறித்து: அணு ஆயுதங்கள் தயரிக்கப்பட்டது வருத்தமானதே. ஒரு முறை பயன்படுத்தப்பட்டதுவும் அதை விட வருத்தமானதே. அவை இன்றைக்கும் கணிசமான அளவில் கிடங்குகளில் காத்திருப்பது மிக மிக வருத்தமானதே. அப்படியானால் நாற்பது வருடங்களாக செயல்பட்டு வந்த அணுஆயுதத் தடை ஒப்பந்தங்கள் (NPT, CTBT போன்றவை) சாதித்ததுதான் என்ன? இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடுகளின் வசம் 15000 அணு ஆயுதங்கள் உள்ளனவாம். (இந்தியா உட்பட) கையெழுத்திடாத நாடுகள் வசம் சில நூறு அணு ஆயுதங்கள் உள்ளனவாம். இதில் யாரால் அதிக ஆபத்து? இப்போ இந்த NPT ஒப்பந்தத்தைப் பற்றி: உலக நாடுகளை அணுஆயுதத் திறன் கொண்ட நாடுகள் அப்படீன்னும் அணு ஆயுதமற்ற நாடுகள் அப்படீன்னும் பிரிக்குது இந்த ஒப்பந்தம். ஆணு ஆயுதமுள்ள நாடுகள்ன்னு அமெரிக்கா, ருஷ்யா, இங்கிலாந்து, ஃபிரான்ஸ், மற்றும் சீனா ஆகிய நாடுகள் அடையாளப்படுத்தப்பட்டிருக்கு. மற்ற எல்லா நாடுகளும் இந்த ஒப்பந்தத்தின்படி அணு ஆயுதமற்ற நாடுகள்தான். இதில் ஆயுதமுள்ள நாடுகள் என்ன ஒப்புதல்களை அளிச்சிருக்குன்னா, தங்களுடைய அணு ஆயுதங்களையும் தொழில்நுட்ப ரகசியங்களையும் பிற நாடுகளுக்கு வழங்க மாட்டோம்ன்னுதான். தங்களுடைய அணு ஆயுதங்களைப் பயன்படுத்த மாட்டோம்ங்கிற உத்தரவாதத்தை இந்த நாடுகள் வழங்கவில்லை என்பதை கவனிக்கணும். இந்த நாடுகள் மற்ற நாடுகளின் மீது போடும் நிபந்தனையென்னன்னு பாத்தா, "இப்போது இருக்கும் அணு ஆயுதமற்ற நிலையிலயே அப்படியே தொடர்வோம்" என்ற வாக்குறுதியைத்தான் இந்த நாடுகள் மற்ற நாடுகளிடமிருந்து எதிர்பார்கின்றன. ஆதாவது, "அணு ஆயுத சோதனைகள், இன்ன பிற முயற்சிகளைச் செய்ய மாட்டோம்" அப்படீன்னு உத்தரவாதம் குடுக்கணுமாம் நாமல்லாம். ஆனா இந்த நாடுகளோ, ஒரு தீவிரவாதத் தாக்குதல் நடந்தாலும் "எங்களுடைய அணு ஆயுதங்களைப் பயன்படுத்தும் வாய்ப்புள்ளது"ன்னு அறிக்கை விடறாங்க. அதாவது, தடை அவங்களுக்கு கிடையாது, நமக்குத்தான்.

இந்த ஒருதலைபட்சமான தடை ஒப்பந்தத்தை சரியான காரணத்திற்காகவே நாம நாற்பது வருடங்களா எதிர்த்து வந்திருக்கோம். அதனால் நமக்கு ஏற்பட்ட தீண்டத் தகாத நிலையையும் பொறுத்துக்கிட்டே, அதில் உறுதியா இருந்தோம். எவ்வளவோ ஆட்சி மாற்றங்கள் நிகழ்ந்த போதும் அந்த நிலைப்பாட்டில் நாம மாறவில்லை. இப்போது திடீர் மாற்றத்துக்கான காரணமென்ன? இந்த 123 ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது, அணு ஆயுத சோதனைத் தடையை ஏற்றுக் கொண்டது போலத்தான். அதாவது, கிட்டதட்ட NPTயில் கையெழுத்திட்டது போலத்தான். அதை இன்று செய்ய வேண்டிய நிர்பந்தம் என்னன்னுதான் புரியவில்லை. அப்படியொரு நிர்பந்தம் இருந்தது உண்மைன்னா அதை மக்களிடம் சரியாக் கொண்டு போயிருக்கலாமே? வெளிப்படையாவே இன்னின்ன காரணங்களால் நமது அணு ஆயுதக் கொள்கையில் மாற்றமேற்பட்டிருக்குன்னு அறிவிச்சிருக்கலாமே? அப்படியில்லாம, கொள்கையில் எந்த மாற்றமுமில்லைன்னு பொய் சொல்லிகிட்டு திரியறது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போலத்தான்.

இந்த இறக்குமதி யுரேனியம் இல்லாத நிலையில், நம்மிடம் அபரிமிதமாக உள்ள தோரியம் என்ற மற்றொரு அணுசக்தி எரிபொருள் குறித்தும் சோதனைகள் நடந்துக்கிட்டு இருந்தது, இன்னமும் நடந்துக்கிட்டு இருக்கு. (உலகின் 25% தோரியம் வளம் நம்மிடம்தான் உள்ளது) இது மட்டும் வெற்றியடைஞ்சதுன்னா நம்முடைய எரிபொருள் கொண்டே தேவைப்படும் அணுமின்சாரத்தை தயரிக்கும் வாய்ப்புள்ளது. ஆனா, இந்த 123 ஒப்பந்தத்தினால் யுரேனியம் எளிதில் கிடைக்கக்கூடிய நிலையில், இத்தகைய சோதனை முயற்சிகள் பின்னுக்குத் தள்ளப்படும் அபாயமுள்ளது. நமது வெளியுறவுக் கொள்கையை சமரசம் செய்யாமலேயே, அணு மின்சாரத் தன்னிறைவு அடைவதற்கான ஒரு வாய்ப்பு தவறவிடப்பட்டுள்ளதுன்னுதான் சொல்ல முடியும். ஆட்சி கவிழ்ந்த பிறகாவது இது பற்றியெல்லாம் யோசிப்பாங்களான்னு பாக்கணும்.

(This post in English can be found here)

வியாழன், ஜூன் 19, 2008

வயதில் பெரியோர்களின் கவனத்திற்கு

உங்களுக்கே உங்களுக்காக ஒரு இணையத்தளம் உருவாக்கியிருக்கேன். ஆர்குட், facebook, myspace போன்ற சமூக உறவாடல் தளங்கள் (social networking sites) பற்றி கேள்விபட்டிருப்பீங்க. அவற்றில் பெரும்பாலும் இளைஞர்கள் / பால்ய வயதினரோட ஆதிக்கமே அதிகமா இருப்பதையும் உணர்ந்திருப்பீங்க. அவங்களோட கும்மி, கூத்து, வெட்டிப்பேச்சு, (சில) புரோஃபைல்களிலுள்ள அரை நிர்வாணப் புகைப்படங்கள், இப்படி பல காரணங்களால அந்தத் தளங்கள் உங்களோட ரசனைக்கும் முதிர்ச்சிக்கும் ஏற்றவாறு இல்லாம போயிருக்கலாம். அல்லது அத்தகைய தளங்களில் உறுப்பினராவதால் ஏற்படக்கூடிய பயன்கள் ( :) ) பற்றியும் உங்களுக்குத் தெளிவில்லாம இருந்திருக்கலாம்.

மேலும் இந்த web 2.0, சமூக ஊடகம் போன்ற வளர்ச்சிகளில் நம்ம பெரியவர்கள் எந்தளவுக்கு கலந்துக்கறாங்கன்னும் தெரியல. எனக்குத் தெரிஞ்சி பல பெரியவர்கள் வலைப்பதியறாங்க. ஆனா, அதையும் விட எவ்வளவு பேர் (உ-ம். இங்க தீவிரமா வலைப்பதியும் பல இளவட்டங்களின் பெற்றோர்கள் மற்றும் வயதான குடும்பத்தினர்) இந்த வலைச்சூழலை விட்டு ஒதுங்கியே இருக்காங்கன்னும் யோசிக்கணும். ஒரு வேளை இணையம் என்பதே, இளைஞர்கள் மட்டுமே புழங்கக்கூடிய, மற்றவர்களுக்குக் கலாச்சார அதிர்ச்சிகளை வழங்கும் ஒரு இடமா ஆயிட்டதான்னு யோசிக்கத் தோணுது. சரி, பில்டப்பை நிறுத்திட்டு விஷயத்துக்கு வர்றேன்.

வயதில் பெரியோர்களை முதன்மைப்படுத்தியும், அதே நேரத்தில் மற்றவர்களுக்கும் அவர்களுக்குரிய இடமளித்தும் இயங்கும் வகையில் ஒரு சமூக உறவாடல் தளத்தை உருவாக்கியிருக்கேன். அதை www.mello.in என்ற முகவரியில் காணலாம். (பெயர்க்காரணம் - 'mellow' என்ற, 'முதிர்ச்சி', 'மென்மை' போன்ற குணங்களைக் குறிக்கும் ஆங்கிலச் சொல்லின் திரிபு). இத்தகைய தளங்களின் பொதுவான அம்சங்களான புரோஃபைல் ஏற்படுத்திக் கொள்ளும் வசதி, மற்ற பயனர்களுடன் நட்புறவுகள் (relationships) ஏற்படுத்தும் வசதி, வலைப்பதிவு வசதி, குழுக்கள்(groups) ஏற்படுத்தும் வசதி, குழுக்களுக்குள் உரையாடும் வசதி (discussion forums), மின்னஞ்சல் முகவரி இல்லாமலேயே தனிச்செய்திகள் (private messages) பரிமாறிக்கொள்ளும் வசதி, போன்றவை இதிலும் இருக்கு. ஆனா அவை மட்டுமில்லாம சில சிறப்பு அம்சங்களையும் புகுத்தியிருக்கேன். அந்த சிறப்பு அம்சங்களாவன:
 • உறவுகளில் மூன்று வகையான தேர்வுகள் - நண்பர் (Friend), நெருங்கிய நண்பர் (Buddy), மற்றும் நலம் விரும்பி (Well-wisher) ஆகியவை
 • மேற்கண்ட உறவு முறை அடிப்படையில் தான் வெளியிடும் ஒரு படைப்பு / தகவலுக்கு பார்வையாளர்களைத் தேர்வு செய்யும் வசதி. அதாவது, எல்லா தகவல் / ஆக்கங்களையும் பொதுப்பார்வைக்கு வைக்கும் நிர்பந்தம் இல்லாமல், சில தகவல்கள் மற்றும் ஆக்கங்களை 'நண்பர்களுக்கு மட்டும்' அல்லது 'நெருங்கிய நண்பர்களுக்கு மட்டும்' அப்படீன்னு வரையறுக்கும் வசதி.
 • வேலை வாய்ப்புகள் பகுதி - ஓய்வு பெற்ற / பெறப்போகும் நிலையில் உள்ளவர்களுக்கான வேலை வாய்ப்புச் செய்திகள், மற்றும் அத்தகைய விளம்பரங்களுக்கு (CV கோப்புகள் இத்யாதிகளோடு) விண்ணப்பிக்கும் வசதி
 • உடல்நலம் சார்ந்த பகுதி - உடல்நலப் பதிவுகள் (Wellness updates - குடும்பத்தினர் / நெடுநாளைய நண்பர்களின் - அதாவது மேற்கூறிய 'நலன் விரும்பி' அப்படீன்னு குறிக்கப்பட்டவர்களின் பார்வைக்கு மட்டும் கிடைக்கக்கூடியவை), மருத்துவ / உடல்நலன் சார்ந்த துறையினருக்கு சிறப்புப் பயனர் கணக்குகள் (இந்த சிறப்புக் கணக்கை வேண்டும் மருத்துவத் துறையினர் மற்றும் இதர உடல்நலன் சார்ந்த நிபுணர்கள் அன்புடன் வரவேற்கப்படுகிறார்கள். தயவு செய்து வழக்கமான கணக்கை ஏற்படுத்திக் கொண்டு, என்னைத் தொடர்பு கொள்ளவும். உங்கள் கணக்கை மேம்படுத்தித் தருகிறேன்)
 • வோட்டுரிமை / பயனர் மதிப்பெண்கள் - நல்ல இடுகைகள், பின்னூட்டங்கள், மற்றும் பயனர்களை அடையாளம் காட்டி முதன்மைப்படுத்தும் வசதி
இப்படி சில தனித்துவங்கள் இருக்குன்னு சொல்லலாம். இவற்றை நான் சொல்றதை விட நீங்களே அனுபவித்து உணர்வது மேலும் சிறப்பா இருக்கும். இப்போதைக்கு நானும் என்னோட தசாவதாரங்களும்தான் அங்க உறவாடிக்கிட்டு இருக்கோம். உங்க நண்பர்கள் குழாமோட, குடும்பத்திலுள்ள பெரியவர்களோட வந்து இந்தத் தளத்தைச் சிறப்பிக்குமாறு எல்லா பதிவுலக நண்பர்களையும் கேட்டுக்கறேன். எம்மொழியும் சம்மதம் என்பதால் நீங்க எந்த மொழியில் வேண்டுமானாலும் உறவாடலாம், மற்றும் வேற்று மொழியினர் / வேற்று நாட்டவர்கள் உங்கள் நண்பர்களா இருந்தா, அவர்களையும் அன்போட அழைக்கலாம். இந்தப் பதிவை விட விரிவான அறிமுகம்(ஆங்கிலத்தில்) இங்க இருக்கு. அதற்கு மேலயும் சந்தேகங்களிருந்தா தயங்காமல் கேளுங்க.

தொழில்நுட்பக் குறிப்புகள் - இதை Drupal CMS கொண்டு உருவாக்கினேன். PHP, MySQL, Javascript, Jquery ஆகிய தொழில்நுட்பங்களின் கூட்டுக் கலவைதான் இந்தத் தளம்.

வெள்ளி, ஜூன் 13, 2008

ஒரு phishing எச்சரிக்கை

இன்னைக்கி எனக்கு ஒரு மின்மடல் வந்தது (அனுப்புனர் முகவரியில் செந்தில்ங்கிற பேர் இருந்தது). எதோ தளத்திலிருந்து எந்த கைப்பேசிக்கும் sms அனுப்பலாம்ன்னு. போய் பாத்தா Google தளம் மாதிரியே வடிவமைக்கப்பட்டிருக்கு. அப்பறம் உங்க google கணக்கையும் கடவுச்சொல்லையும் கேட்குது :) 'w3schools.in'ங்கிற domain name, whois பண்ணியதில் யாரோ சிவக்குமார்ன்னு ஒரு புண்ணியவான் பேர்ல register ஆகியிருக்கு. அவருக்கு இதுல சம்மந்தம் இருக்கான்னு தெரியல.

இதுதான் தள முகவரி. தப்பித் தவறி கூட உங்க கடவுச்சொல்லையெல்லாம் இந்த மாதிரி தளங்களில் குடுத்துடாதீங்க.

தமிழனை தமிழனே ஏமாற்றும் அவலம் என்னைக்குத்தான் நிக்குமோ?

திங்கள், ஜூன் 09, 2008

பணி அடிமைகள்

தொலைக்காட்சியில ஒரு விவாத நிகழ்ச்சி நடந்துக்கிட்டு இருந்தது. Workoholic எனப்படும் 'வேலையே கதி'ன்னு இருப்பவர்கள் தங்களை நியாயப்படுத்திக்கிட்டும், எதிர் தரப்பினர் (பெரும்பாலும் முதல் தரப்பினரின் குடும்பத்தினர்) இவங்கள குறை சொல்லிக்கிட்டும், விவாதம் செஞ்சிக்கிட்டு இருந்தாங்க. அதுல ஒரு கணவன் - மனைவி தம்பதி. கணவன் 'வேலையே கதி' என்று இருப்பவர்கள் தரப்பிலும், அவரது மனைவி எதிர் தரப்பிலும் கலந்துக்கிட்டாங்க. மனைவி கணவனைப் பற்றி முறையீடு செஞ்சிக்கிட்டு இருந்தாங்க, அவங்களுக்கு மணமாகி ஐந்து மாதங்கள்தான் ஆகியிருக்குன்னும், கணவர் வேலையிலிருந்து திரும்பறதுக்கு தினமும் இரவு இரண்டு மணி ஆயிடுதுன்னும் சொன்னாங்க மனைவி. கணவர் தன் பங்குக்கு தன்னுடைய தியாகங்கள் பற்றி பட்டியலிட்டுக்கிட்டு இருந்தார் - மணமாவதுக்கு முன்னாடி வார இறுதிகளில் கூட அலுவலகத்துக்கு வேலை செய்யப் போயிக்கிட்டு இருந்ததாவும், கல்யாணத்துக்குப் பிறகு மனைவிக்காக அதைத் தியாகம் செஞ்சிட்டு வீட்டிலேயே இருக்கிறதாவும் :) தன்னுடையது எப்போதும் சிந்திச்சிக்கிட்டே இருக்க வேண்டிய வேலைன்னும், அதனால வேலைக்கு கால நேரமெல்லாம் பாக்க முடியாதுன்னும் சொன்னார். அதிலிருந்து அவர் மென்பொருள் துறையினரா இருக்கணும்ன்னு ஊகிச்சேன் (அந்த விவரம் சொல்லப்பட்ட போது நான் சரியாக கவனிக்கல்ல, தவறா இருந்தா தெரிவியுங்க). நானும் அந்தத் துறையைச் சேர்ந்தவன்ங்கிற முறையில் அவரோட தகவல்களை ஒத்துக்கறேன். சில சமயம் சிக்கல்கள் விடுபடுவதற்கு நினைத்ததை விட அதிக நேரமாகி விடலாம். அந்த சமயங்களில் கொஞ்சம் கூடுதல் நேரம் செலவழிச்சி அவற்றின் தீர்வுகளை அடைய வேண்டிய கட்டாயங்கள் ஏற்படலாம். ஆகவே, அவர் சொன்னதில் பெரிய பிரச்சனையில்லை, மனைவிக்காக சனிக்கிழமைகளைத் 'தியாகம்' செய்கிறேன்னு கூறியதை தவிர்த்து.

ஆனா அதுக்கப்பறம் நடுவர் அவரைப் பார்த்து ஒரு கேள்வியைக் கேட்டார் - நீங்க எதுக்கு முன்னுரிமை குடுப்பீங்க மனைவிக்கா, வேலைக்கான்னு. நண்பர் ஒரு அரை நிமிடம்தான் யோசித்தார் (அல்லது அவ்வளவு நேரம் கூட எடுத்துக் கொள்ளவில்லை). வேலைக்குத்தான் முன்னுரிமைன்னு பதில் சொன்னார். ஒரு பெரிய பாறாங்கல் எதாவது இருந்தா அதை அந்தாள் தலையில் தூக்கிப் போடணும் போல இருந்தது, தொலைக்காட்சியில் இதைப் பார்த்துக்கிட்டு இருந்த எனக்கே. நேரில் கேட்டுக்கிட்டிருந்த அவரோட மனைவிக்கு எப்படி இருந்திருக்கும்ன்னு விவரிக்கத் தேவையில்லை. அதெப்பபடி இப்படி ஒரு பதிலை முகத்தில் அறைஞ்ச மாதிரி சொல்ல முடியுது? கூடவே இருக்கப்போற மனைவியின் உணர்வுகளைப் பற்றிக்கூட சிந்திக்கத் தெரியாத / விரும்பாத ஒருத்தன், வேற சிந்தனைகள் செஞ்சி வேலை செய்யறதுனால யாருக்கு என்ன லாபம்? இதே மனநிலையைத்தானே தன்னுடைய சகப் பணியாளர்கள், தன் கீழ் பணி செய்பவர்கள் ஆகியோரிடமும் வெளிப்படுத்துவான்? (விட்டால் மேலதிகாரி / வாடிக்கையாளர்களிடமும்). என்னதான் கம்பியூட்டரோட சிந்திச்சி கொலாவினாலும், இறுதியில் உங்கள் வெளியீடுகளெல்லாம் உணர்வுகளைக் கொண்ட மனிதர்களின் பயன்பாட்டுக்காகத்தானே? உணர்வுகளைப் பற்றிய புரிதல் / மரியாதை இல்லாம தன்னை workoholicன்னு சொல்லிக்கறவங்க, தங்கள் பதவிக்கே தகுதியற்றவங்கன்னு சொல்லத் தோணுது.

மேலும் பல அம்சங்களை கவனிச்சேன். இந்த workoholics என்பவர்களுக்கு தங்களைப் பற்றிய அதீத மதிப்பீடுகள் இருப்பதையும் கவனிக்க முடிந்தது. இந்த நாடே தங்களால்தான் முன்னேறுதுன்னு கூசாம சில பேர் சொன்னாங்க :) தங்களைப் போலில்லாதவங்கல்லாம் சோம்பேறிகள் என்ற எண்ணமும் அவர்களிடமிருப்பதைக் காண முடிந்தது. எதிர் தரப்பில் பேசிய ஒரு தொழிலதிபர் ஒரு அருமையான கருத்தை சொன்னார். வருங்காலம் என்பது கணிக்க முடியாத ஒன்று (future is a mystery), எனவே வருங்காலத்தில் கிடைக்கப்போகிற பலன்களுக்காக இன்றைய வாழ்க்கையைச் சிதைத்துக் கொள்வது மூடத்தனம்ன்னு. உடனே அதற்கு எதிர்வினையாக ஒரே கொந்தளிப்பு, 'வேலைப் பிரியர்கள்' என்று சொல்லிக் கொள்பவர்களிடமிருந்து. நாங்கல்லாம் ரொம்ப productive, நாங்க இப்படி இருக்கிறதுனாலதான் நீங்கல்லாம் வாழ்க்கையை நல்லா அனுபவிக்க முடியுதுன்னு. எனக்கு ஒரு சந்தேகம் - productiveஆ இருக்கிறவங்களுக்கு ஏன் தங்கள் வேலையைச் செய்ய அதிக நேரம் தேவைப்படுது? எனக்குத் தெரிந்த வரை, குறைந்த நேரத்தில் அதிக வேலைகளைச் செய்து முடிப்பதுதான் productivity. அதிக நேரத்தில் அதே வேலையையோ, அதற்கும் குறைவாகவோ செய்து முடிப்பதை inefficiency / செயல்திறன் குறைவுன்னுதான் சொல்ல முடியும்.

வேலைப்பரியராக ஒருவர் இருப்பதற்கு என்ன காரணம் இருக்க முடியும்ன்னு யோசிக்கணும். ஒரு மோசமான வேலைச் சூழலிலிருந்து ஒரு சுமாரான அல்லது நல்ல வேலைச் சூழலுக்கு மாறும்போது ஆகான்னு விசுவாசம் பொத்துக்கிட்டு வரும் :) அந்த விசுவாசத்தில் அதிக உழைப்பை வழங்குவோமா, மேலதிகாரியை குஷிப்படுத்துவோமான்னு கிடந்து அலைபாயும் மனசு. இது ஒரு காரணமா இருக்கலாம். மேலும் இதையே சாதகமாப் பயன்படுத்தி, தட்டிக் குடுத்து வேலை (தன்னோட வேலையையும் சேர்த்து) வாங்கற மேலதிகாரிகளும் காரணமா இருக்கலாம். Dangling carrots / ஆசைக் காட்டி மோசம் செய்யறதுன்னுல்லாம் இதுக்குப் பேர் உண்டு. அல்லது வேலைச் சூழலே ஒருவருக்கு வீட்டுச் சூழலை விட இதமானதாக இருக்கலாம். நேரத்துக்கு வீட்டுக்கு வந்தா அது என்னாச்சு, இது என்னாச்சுன்னு கேள்விகள் வரும். குழந்தைகள், வீட்டு வேலைகள்ன்னு பொறுப்புகள் அதிகமாகும். அலுவலகத்திலேயே இருந்துட்டா இதையெல்லாம் தட்டிக் கழிச்சிடலாம் :)

இது போன்ற போக்கை நிறுவனங்களும் ஆத,ரிப்பதால், ஒரு போட்டி மிகுந்த சூழல் ஏற்படுது, எல்லாரும் அதிக நேரம் வேலை செய்யறாங்க, அதனால நானும் அதிக நேரம் வேலை செஞ்சாகணும்ன்னு. நாளடைவில் பணியாளர்கள் மீதான நிறுவனங்களின் எதிர்பார்ப்புகளும் அதிகமாயிடுது, குடுக்கற ஊதியத்தில் அதிக அதிகரிப்பு இல்லாமலேயே. இப்படி தன்னைச் சுரண்டும் திட்டத்திற்கு தானே துணை போவதில்தான் போய் முடியுது. அது அவங்களை மட்டும் பாதிச்சுதுன்னா கூட வருத்தப்பட்டுட்டு அடுத்ததப் பாக்கப் போயிடலாம். ஆனா அவங்களை மட்டுமில்லாம அவங்க குடும்பங்களையும் பாதிக்கும்போதுதான் இது பற்றி தீவிரமா சிந்திக்கத் தோணுது, இதுக்கு என்ன தீர்வுன்னு. அரசின் தலையீடு பல விஷயங்களில் தேவைப் படுவதைத்தான் இந்த உதாரணங்களெல்லாம் நமக்கு உணர்த்துது.