வியாழன், டிசம்பர் 29, 2005

தேவை: வலைப்பதிவுகளில் ஒரு Edit Button

விக்கி பக்கங்களில் இருப்பது போல் வலைப்பதிவுகளிலும் Edit வசதியிருந்தால் எவ்வளவு நன்றாகயிருக்கும்? அதிகமாக எதுவும் செய்து விட மாட்டேன். பதிவை மாற்றி எழுதும் முயற்சிகளிலெல்லாம் இறங்க மாட்டேன். அவ்வப்போது (அதாவது, அடிக்கடி) தென்படும் குறைகளை நிவர்த்தி செய்வதைத் தவிர வேறெந்தத் தவறான நோக்கமும் எனக்கில்லை. ஏனென்றால், இன்று தமிழ்மணமும் வலைப்பதிவுகளும் வாசகர்களால் வெகுவாக வருகை தரப்படுகின்றன. பலவீனமான இதயமுள்ளவர்களும் இதில் அடங்கலாமென்பதால், அவர்களது நலனை முன்னிட்டே இந்த எண்ணம். மேலும், நெஞ்சைப் பிடித்துக் கொள்ள வைக்கும் நமது எழுத்தாற்றல்களால், ஆரோக்கியமானவர்களுக்கும் உடல்நலம் குன்றி விடும் வாய்ப்புகள் இருப்பதும், என் கவலைக்கு ஒரு காரணம்.

அளிப்பதற்கும் அழிப்பதற்குமுள்ள வேறுபாடு, களிப்பதற்கும் கழிப்பதற்குமுள்ள வேறுபாடு, போன்றவை மழுங்கி விடுகின்றன, அவ்வப்போது (அதாவது, அடிக்கடி - இதை ஒவ்வொரு முறையும் குறிப்பிடப்போவதில்லை, இனிமேல் நீங்களே மாற்றிப் புரிந்து கொள்ளுங்கள்). விளைவு - "விடுமுறையை நன்றாகக் களித்தேன், நேரத்தை நன்கு செலவளித்தேன்" போன்ற பிரயோகங்கள்.

கற்பு வேண்டாமென்று ஏகமனதாக முடிவு செய்து விட்டோம். சிலர், "அது இருக்கட்டுமே், இருபாலாருக்கும்் அதைப் பொதுவில் வைப்போமே?" என்றெல்லாம் கேட்டுப் பார்த்தனர். ஆனால், "முடியவே முடியாது" என்று அதைக் குழி தோண்டிப் புதைத்து விட்டு, இன்று வெற்றிப் பார்வை பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதில் எனக்கும் மகிழ்ச்சிதான். ஆனால் கற்பைத்தானே வேண்டாமென்றோம், 'கறுப்பு' இருந்துவிட்டுப் போகட்டுமே? 'எனக்குப் பிடிச்ச கலரு' அவ்வப்போது 'ருப்பாகி' விடுவது மற்றொரு சோகம்.

ஜனநாயகத்தைப் பற்றிய அதிருப்தியைத் தெரிவிக்கையில், அது ஜனனாயகமாகி விடுகிறது. உலகில் அநியாயம் நடப்பது சகஜம்தான். அதைக் கண்டு பொங்கியெழும் பதிவர்கள், அதை அனியாயமாக்கி விடுவதும் சகஜம்தான் போலிருக்கிறது.

சொற்களை ஒற்றெழுத்துக்களில் தொடங்கி எழுதக் கூடாதென்று ஒரு விதி இருப்பதாக நினைவு. அது தவறாமல் பின்பற்றப்பட வேண்டுமென்பது எனது ச்சின்ன ச்சின்ன ஆசைகளில் ஒன்று. இப்படிக் கூறுவதால் ப்ரச்சினை எதுவும் வராதில்லையா?

இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் ஒரு பதிவர், “தமிழில் spell checker இல்லாத காரணத்தால் நான் இப்படித்தான் எழுதுவேன்" என்ற தீர்மானத்துடன் தனது தமிழ்ப்பணியைச் செய்து வருகிறார். அவருக்கு விரைவில் ஒரு spell checker கிடைக்க நமது வாழ்த்துக்கள்.

நேற்று ஒரு அறிவிப்புப் பதிவைப் பார்த்தேன். அதாவது, அப்பதிவர் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறாரென்றும், விரைவில் அது அச்சில் வரப்போகிறதென்றும், அறிவித்திருந்தார். அது ஒரு சுயசரிதை என்றும் குறிப்பிட்டிருந்தார். ஆகா, சுயசரிதை எழுதும் அளவுக்குப் பெரிய மனிதரா நம் வலைப்பதிவுகளில், என்று மேற்கொண்டு படித்தால், அது ஏதோ நடிகரரொருவரின் வாழ்க்கை வரலாறாம் (அதாவது, சரிதை). பிழையைச் சுட்டிக்காட்டி பின்னூட்டமிடலாமென்றால், அதுவும் முடியாமல் ஏதோ தகராறு. நல்லவேளையாக அவரது மின்னஞ்சல் முகவரி இருந்தது, profileஇல். பிழையைத் திருத்தக் கோரி மின்னஞ்சலிட்டிருக்கிறேன். ஆவன செய்வாரென்று நம்புவோம்.

இதே உணர்வுகள் ஆங்கிலப் பதிவுகளைப் படிக்கும் போதும் ஏற்படுகின்றன. சில காலமாக, DesiPundit உபயத்தில், பரிந்துரைக்கப்பட்ட ஆங்கிலப் பதிவுகள் படிக்கக் கிடைக்கின்றன. அங்கும் நெஞ்சு வலி, இதயத் துடிப்பைக் நிறுத்தும் கணங்கள், ஆகியவை அவ்வப்போது ஏற்படுகின்றன. நிறுத்தக் குறியீடுகள் (punctuations) தேவையற்ற இடங்களில் இருப்பதும், தேவைப்படும் இடங்களில் இல்லாதிருப்பதும், பெரும்பாலும் வலைப்பதிவுகளில் ஒரு பொருட்டேயல்ல என்ற அளவுக்கு ஆகிவிட்டது.

பொதுவிடங்களிலும் இது போன்ற அறிவிப்புப் பலகைகள், பெயர்ப் பலகைகள், விளம்பரப் பலகைகள் போன்றவை இருப்பதைப் பற்றி யாருமே கண்டு கொள்வதில்லை என்று ஒரு புத்தகம் முழுவதிலும் புலம்பியிருக்கிறார் ஒரு அம்மணி. “Eats, shoots and leavesஎன்ற அப்புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்ததும், "அட, நம்மைப் போல் இன்னொருவர்", என்றப் பாச உணர்வு பொங்கிற்று. நல்ல நகைச்சுவையான நடை, முழுவதும் படிக்க வேண்டும். Two weeks notice என்று வெளிவந்த ஒரு படத்தின் பெயரைப் பற்றி மாய்ந்து மாய்ந்து புலம்பியிருக்கிறார், "இப்படியும் ஒரு அநியாயமுண்டா, இதைக் கேட்பாரே இல்லையா", என்றெல்லாம். (இலக்கணப்படி, Two weeks' notice என்று இருந்திருக்க வேண்டும்.) Apostrophe Protection Society என்ற ஒரு அமைப்பைப் பற்றி கேள்விப்பட்டு, அகமகிழுந்து போய் அவர்களைத் தொடர்பு கொண்டு, “எவ்வாறு பிழையான பெயர்ப்பலகை வைப்பவர்களைத் திருத்துகிறீர்கள்?” என்று வினவியிருக்கிறார். அதற்கு அவர்கள், மரியாதை கலந்த மடல் ஒன்றை அனுப்புவதாக தெரிவித்தனராம். “அடுத்த முறை பெயர்ப்பலகையை மாற்றும்போது தயவு செய்து இந்தத் திருத்தத்தை நினைவில் கொள்ளுங்கள்" என்று இருக்குமாம் அம்மடலில். அம்மணிக்கு இதெல்லாம் திருப்திகரமாகத் தெரியவில்லை. "நாம் ஏன் ஒரு தீவிரவாத அணியாகச் செயல்படக்கூடாது? பெயிண்ட் சகிதம் களத்திலிறங்கி, தவறான குறியீடுகளை நாமே திருத்தலாமே?” என்ற ரீதியில் சிந்திக்கத் தொடங்கினாராம். செயல்படுத்தினாரோ இல்லையோ, மேற்கூறிய புத்தகத்தை எழுதியிருக்கிறார், "பிழைகளைச் சகிப்பதில்லை" (zero tolerance approach) என்ற அணுகுமுறையை முன்நிறுத்தி.

நமக்குத் தீவிரவாதமெல்லாம் கைவராது. ஏதோ, விக்கியைப் போல், பிழைகள் தென்பட்டால், அவற்றைத் திருத்த முடிந்தால் நன்றாகயிருக்குமே என்ற எண்ணத்தைத்தான் இங்கு உரக்கச் சிந்திக்கிறேன். சக வாசகர்கள் எதிர்பாராத விதங்களில் தாக்குதலுக்குள்ளாகும் சாத்தியங்களைக் குறைக்கும் நல்லெண்ணம்தான், வேறொன்றுமில்லை.

ஞாயிறு, டிசம்பர் 25, 2005

Mozilla Thunderbird - ஒரு அறிமுகம்

இலவசமாகக் கிடைக்கக் கூடிய ஒரு மென்பொருள் கருவி. உங்கள் gmail (மற்றும் இதர POP access வசதியளிக்கும் மின்னஞ்சல் சேவைகளின்) வழங்கியிலிருந்து, தானியங்கு முறையில் உங்கள் மின்னஞ்சல்களை உங்கள் கணினியில் கொண்டு வந்து ஒப்படைக்கக் கூடியது. விரும்பும் RSS தொகுப்புகளைச் சேர்த்துக் கொண்டால், அவை புதுப்பிக்கப்படும் போதெல்லாம் புதுவரவுகளை இறக்கிக் கொண்டு, உங்கள் பார்வைக்கு தயார் நிலையில் வைக்கக் கூடியது. நீங்கள் எழுதும் மடல்களை சிறப்பான தோற்றத்துடன் htmlஇல் வடிவமைக்க உதவும் கருவி. தெரிந்தவர்கள் / சொந்தங்கள் / அதிகத் தொடர்புடையவர்களது மின்னஞ்சல், மண்ணஞ்சல், தொலைபேசி எண்கள் போன்றவற்றைப் பாதுகாப்பாகச் சேமித்து வைக்கும் ஒரு தகவல் தளம். செயல்படுத்த அதிகக் கணிமையாற்றலெல்லாம் தேவையில்லாமல், ஆதிகாலத்து pentium செயலியைக் கொண்ட கணினியில் கூட செயலாற்றக்கூடியது. வேறு சில மென்பொருட்களைப் போல் active உறுப்புகளுக்கு வசதி செய்து கொடுத்து, வைரஸ் வகையறாகளுக்குப் பின் கதவைத் திறந்து விடாத, பாதுகாப்பானதொரு தீர்வு. திறமூலத்தாலான ஆதாயங்களுமுண்டு.

இப்படிப் பல புகழாரங்களை சூட்டிக் கொண்டே போகலாம். ஆனால் அது மட்டுமல்ல என் நோக்கம். உலாவி(browser) என்பது வந்ததிலிருந்து நமது நேரமும் சக்தியும் கூடுதலாக விரையமாகிறதோ என்று ஒரு எண்ணம். தேவையற்ற விளம்பரங்கள், நம் அந்தரங்கத்திற்குள் ஊடுருவப் பார்க்கும் நிரலிகள் / கண்காணிப்பான்கள், மின்மினுக்கும் சொடுக்கத் தூண்டும் சுட்டிகள், அவற்றைச் சொடுக்கியதால் அவசியமே இல்லாமல் செலவாகிப்போன மணித்தியாலங்கள், இவையனைத்தையும் இறக்கிக் கொள்ளத் தேவைப்படும் இணைய இணைப்புகள், அவற்றுக்குத் தேவைப்படும் கட்டமைப்பு வசதிகள், என்று விரயப்பட்டியலை நீட்டிக்கொண்டே போகலாம். சில மணி நேரங்கள் இணையத்தில் மேய்ந்த பிறகு, அதனால் கிட்டிய ஆதாயம் என்ன என்று பார்த்தால், பூஜ்யம்தான் மிஞ்சுகிறது. ஒரு உவமையோடு விளக்க வேண்டுமென்றால், இணையத்தில் உலாவுவது, ஒரு முன்திட்டமில்லாமல் ஒரு வண்டியை எடுத்துக் கொண்டு மனம் போன போக்கில் இங்குமங்கும் அலைவதற்கு ஒப்பானது என்று கூறலாம். தோன்றிய இடத்தில் வண்டியை நிறுத்தி, அங்கிருப்பதை வாங்கி அல்லது வேடிக்கை பார்த்து விட்டு, போரடித்ததும் அங்கிருந்து நகர்ந்து, அடுத்த கண்ணைக் கவரும் இடம் வந்ததும், அங்கும் முந்தைய இடத்தில் செய்ததைப் போலவே நேரவிரயம் செய்து........... நிஜ வாழ்வில் இப்படிச் செய்யாத பொறுப்பானவர்கள்தான் நாம். இருந்தும் இணையத்தில் பெரும்பாலும் இதைத்தான் செய்கிறோம். தொலைக்காட்சிக்கு முன் அமர்ந்தாலும் அதே கதிதான்.

நேரம்தான் நமது ஒரே அரிய பொக்கிஷம் என்று கூறப்படுகிறது. பணமோ, வேறு உடமைகளோ இழந்தால் திரும்பப் பெற்றுக் கொள்ள முடியும். ஆனால் நேரம் என்பது செலவிட்டது செலவிட்டதுதான். அத்தகைய ஒரு அரிய சொத்தை நாம் கவனத்துடன் செலவிடுவதில்லை. Thunderbird போன்ற ஒரு மென்பொருளை வைத்துக் கொண்டு நம் நேரத்தைத் திறம்பட நிர்வாகிக்க முடியும் என்பதே எனது கருத்து. பொதுவாக நாம் இணையத்தில் சில குறிப்பிட்ட தளங்களுக்குத்தான் பலமுறை செல்கிறோம். இவற்றில் மின்னஞ்சல் தளங்களும் அடக்கம். அவற்றைத் தவிர செய்தித் தளங்கள், வலைப்பதிவுகள், திரட்டிகள்............ இவை ஒரு நாளில் பலமுறை புதுப்பிக்கப்படும் தன்மையுடையவை என்பதால், ஒவ்வொரு முறையும் ஏதேனும் புதிதாகக் கிடைக்கலாமென்ற நம்பிக்கையில் மறுபடி மறுபடி இத்தளங்களுக்குச் செல்கிறோம். ஒவ்வொரு முறையும் அவை காண்பிக்கும் வர்ண ஜாலங்கள், உங்களுக்குத் தெரியாமலேயே உங்களைக் கண்காணிக்கும் நிரல்கள், தேவையற்ற விளம்பரப் பட்டைகள், முன் வந்து விழும் அறிவிப்புகள் / எச்சரிக்கைகள் இவையனைத்தும் உங்கள் பொன்னான நேரத்தை விழுங்குகின்றன. இவற்றை இறக்குவதற்கும் இணைய ஆற்றல் (connection speed), நேரம் ஆகியவை செலவாகிறது. Thunderbird போன்றதொரு மென்பொருளைக் கொண்டு இத்தகைய விரயங்களைக் கட்டுப்படுத்தலாம். அதிகமாக உலாவும் தளங்களின் RSS தொகுப்புகளை அதனிடம் குறிப்பிட்டு விட்டால், அதுவே இத்தளங்களின் புதிய வார்ப்புகளைக் கொண்டு வந்து ஒப்படைத்து விடும். அதே போல் உங்கள் gmail விவரங்களை அதற்குத் தெரிவித்து விட்டால், உங்கள் மின்னஞ்சல்கள் சுடச்சுட உங்களுக்குப் பரிமாறப்பட்டு விடும். அடிக்கடி gmail வலைத்தளத்திற்குச் சென்று பார்க்க வேண்டியதில்லை.

வலைப்பதிவு இன்று அதிக நேரத்தை விழுங்கும் ஒரு அம்சமாகி விட்டது. ஒரு பதிவைப் படிப்பதற்கு ஐந்து நிமிடங்கள் ஆகின்றது என்று வைத்துக் கொண்டால், அதற்கு முன் அதன் டெம்ப்ளேட் அட்டகாசங்களுடன் நம் உலாவியில் வந்திறங்குவதற்கு இன்னுமோர் ஐந்து நிமிடங்கள் ஆகிறது. இவ்வாறு ஒரு நாளில் தமிழில் நூறு பதிவுகள், ஆங்கிலத்தில் நூறு பதிவுகள், மற்ற தொழில் / ஆர்வத்துறைகளைச் சார்ந்த பதிவுகள் என்று கூட்ட ஆரம்பித்தால், அதற்கு இருபத்தி நான்கு மணி நேரங்கள் காணாது. இவற்றை உலாவியில் படிப்பதற்கு பதிலாக, Thunderbirdஇல் இவற்றின் RSSஐப் பார்வையிட்டால், சில நொடிகளில் தெரிந்து விடும், ஒரு பதிவை மேற்கொண்டு படிக்க வேண்டுமா அல்லது நழுவ விட்டு விடலாமா என்று. இந்த அணுகுமுறையில் பல நல்ல பதிவுகளை குறுகிய நேரத்திலேயே படித்து விட முடியும். பதிவிடுவதற்காவது உலாவி தேவையல்லவா என்கிறீர்களா? Bloggerஇல் பதிவுகளை மின்னஞ்சலிலிருந்தே பதிப்பிக்கலாம், Mail-to-Blogger என்ற வசதி கொண்டு. (இப்பதிவு அவ்வகையிலேயே வலையேற்றப்பட்டது, Thunderbirdஇலிருந்து)

மின்னஞ்சல் கொண்டே பதிவுகளை வெளியிட்டு, மின்னஞ்சல்களைப் போலவே (RSS செயல்பாடும் மின்னஞ்சலை ஒத்ததுதானே?) அவற்றைப் படிக்கும் இச்செயல்முறை பழைய மடற்குழுக்களை நினைவு படுத்துகிறதல்லவா? நுட்பமும் fashionஐப் போலத்தானே? முன்பு வெகுவாகக் கடைபிடிக்கப் பட்ட செயல்பாடுகள், பழக்க வழக்கங்கள் நாளடைவில் பல மாற்றங்களைக் கடந்து, மீண்டும் நடைமுறைக்கு வருவது மனித இயல்புதானே? பல உதாரணங்கள் அளிக்கலாம் இத்தகைய குணத்திற்கு. (e.g. Mainframe => PC => Server-side computing => Peer-to-peer etc.) ஒரு மடற்குழுவாக மட்டும் இல்லாமல், ஒரு வலைத்தளமாகவும் பதிவாவது ஒரு முன்னேற்றம். மேலும் மடற்குழுக்களிலுள்ள சில விரும்பத்தகாத அம்சங்கள் இதில் தவிர்க்கப்படலாம். ( -ம், எதிர் கருத்துக்கள், விவாதங்கள் ஆகியவை எல்லோருக்கும் விநியோகிக்கப் படாமல், படைப்புகள் மட்டுமே RSS தொகுப்பாக விநியோகிக்கப்படுகிறது. விவாதங்கள் வலைப்பதிவுகளில் நடக்கலாம். நேரக்குறைவுள்ளவர்கள் மற்றும் விவாதங்களைத் தொடர விரும்பாதவர்கள் படைப்புகளை மட்டும் படித்து விட்டுச் செல்லலாம்).

இணையம் ஒரு பயனுள்ள வசதிதான். அதில் நமக்குப் பயனளிக்கும் அங்கங்கள் எவை என்று தெரிந்து செயல்பட்டால், அவைகளிலிருந்து Thunderbird மூலமாக அதிகமான பயனை அடையலாம், குறுகிய நேரச் செலவிலேயே. நம் தேவைக்கேற்றவாறு தகவல் நமக்குத் 'தள்ளப்படும்' இத்தகைய நுட்பத்தை push technology என்பார்கள். அதற்கு மாறாக, நாமே (உலாவியைக் கொண்டு) அத்தகவலின் மூலங்களுக்குச் சென்று அதை 'இழுக்க' வேண்டியிருந்தால் அது pull technology ஆகும். Push ஒரு தானியங்கும் நுட்பம். Pull, மனிதர் இயக்கும் நுட்பம். நமது பெரும்பாலான இணையச் செயல்பாடுகள் pushஆகவும், ஒரு சில மட்டுமே pullஆகவும் இருக்குமானால்.......... நமக்கு குடும்பத்துடன் செலவழிக்க அத்த்த்த்த்திக நேரம் கிடைக்கும். இதற்காக மட்டுமேனும் Thunderbird கவனிக்கப்பட வேண்டியது.

புதன், டிசம்பர் 21, 2005

தர்ம யுத்தம்

ஒரு நல்லவனைக் கொண்டு போய் ஒரு கயவனிடம் ஒப்படைத்து, அவனுக்குப் பயிற்சியளிக்க விட்டால் என்ன நடக்கும்? இன்னொரு கயவன் உருவாக்கப் படுவானல்லவா? Not always. சில சமயம் நல்லவன் நல்லவனாகவே இருந்து கொண்டு, தன்னைத் தவறாக வழிநடத்தும் கயவனை முற்றிலுமாக அழிப்பதும் நிகழலாம். அத்தகைய அபூர்வமான ஒரு சூழ்நிலையைப் படம் பிடித்துக் காட்டுவதே Training Day, Denzel Washingtonனுக்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை வாங்கித் தந்த படம்.

Denzel போதைப் பொருட்கள் தடுப்புத்துறையைச் சார்ந்த காவலதிகாரி. நீதியை, நியாயத்தை நிலைநாட்ட வேண்டிய நிலையில், தானே அவற்றை மீறுபவர். இருந்தும் சமுதாயத்திற்கு நல்லதே செய்கிறோமென்ற அசைக்க முடியாத நம்பிக்கை. ஓநாய்களை வீழ்த்த, தானும் ஒரு ஓநாயாக இருக்க வேண்டுமென்பது அவரது நியாயப்படுத்தல். (அவரது பயிற்சியில் ஓநாயைப் போல் ஊளையிடக் கற்றுக் கொடுப்பதும் ஒரு அங்கம்). தம்மிடம் பயிலும் அதிகாரியை துப்பாக்கி முனையில் மிரட்டுவது, தானும் போதைப்பொருளைப் புகைத்து, பயிற்சி பெறுபவரையும் (துப்பாக்கி முனையில்) புகைக்க வைப்பது, குடித்து விட்டு வாகனமோட்டுவது, தெருவில் பிடிபட்ட சிறு குற்றவாளியை சட்டப்படி தண்டிக்க வழி செய்யாமல், அவன் மீது வன்முறையைப் பிரயோகித்து, அவனிடமிருக்கும் சில்லரை பணத்தையும் அபகரித்துக் கொள்வது, போதைப்போருள் இருக்கிறதா என்று சோதனையிடச் சென்ற வீட்டில், ஒன்றுமில்லை என்று தெரிந்த பின் (வீட்டுக்காரர்களை வேறொரு அறையில் துப்பாக்கி முனனயில் உட்கார வைத்துவிட்டு) அவ்வீட்டிலிருந்த பணப்பெட்டியிலிருந்து பணத்தை திருடுவது, நான்கு மில்லியன் டாலர்கள் திருட்டுப்பணம் பிடிபட்ட இடத்தில், ஒரு மில்லியனை தனக்கும் தனது அதிகாரிகளுக்கும் பகிர்ந்தளித்து விட்டு, மூன்று மில்லியன் டாலர்களே கிடைத்ததாக அறிக்கை கொடுப்பது, அதற்கான சாட்சியை அழிப்பதற்காக அப்பணத்தை வைத்திருந்தவரை (முற்றிலுமாக அவர் corner செய்யப்பட்ட நிலையில்) கொலை செய்து, ஏதோ encounter நடந்து அதில் தற்காப்புக்காகச் செய்யப்பட்ட கொலையைப் போல் ஜோடனை செய்வது.............. இப்படி அவரது சாகசங்கள் பலவிதம். பிடிபட்ட திருட்டுச் சொத்தில் தனக்கும் பங்குண்டு என்ற அசைக்க முடியாத நம்பிக்கை, சமூக நலனுக்காக தான் செய்யும் அத்துமீறல்கள், சட்ட விரோதங்கள் ஆகிய எல்லாம் நியாயமானவையே என்ற வலுவான கருத்து, இப்படி ஒரு முரணான பாத்திரமே Denzelஉடையது.

இதற்கு நேரெதிர் குணமுடையவர்தான் அவரிடம் பயற்சி பெறுவதற்காக சேரும் Ethan Hawke. அவரது மேலதிகாரியின் போக்குடன் சற்றும் உடன்படாமல், அவரோடு போரிட்டு இறுதியில் வீழ்த்துகிறார். மிகத் திறமைசாலி. (குற்றங்களைக் கண்டு கொள்வதில்) கூர்மையானப் பார்வை , வேகம், விவேகம், அனைத்தும் கிடைக்கப்பெற்ற ஒரு அதிகாரி. அவரது திறமையே அவரது மேலதிகாரி Denzelஐ மிகவும் கவருகிறது. Ethan தனக்கு ஒரு பொக்கிஷமாகத் திகழ்வார் என்று நம்புகிறார் Denzel. தனது அத்துமீறல்களை மட்டும் கண்டு கொள்ளாமலிருந்தால் நன்றாயிருக்குமே என்ற ஒரு ஆதங்கம்தான் :)

Denzel இப்படியொரு negative roleஇல் இதுவரை பார்த்ததில்லை. The Preacher's Wife, Hurricane, John Q போன்ற படங்களால் என்னை மிகவும் கவர்ந்த நடிகரவர். முதல் முறை இப்படத்தைப் பார்த்தபோது ஏமாற்றமாக இருந்தது, Denzelஐ இப்படிச் செய்து விட்டார்களேயென்று. இரண்டாம் முறை தக்க முன்னேற்பாடுகளுடன் (Old Monk, Club Soda, Kurkure etc etc.) பார்க்க உட்கார்ந்ததால், அவரது நடிப்பை நன்கு ரசிக்க முடிந்தது :) யதார்த்தம் சமரசம் செய்யப் பட்டது போல் தெரியவில்லை. இது போன்ற நிகழ்வுகள் நடைமுறையில் நடக்கக்கூடியதாகத்தான் பட்டது. படம் முழுவதிலும் எங்கும் செயற்கைத்தனம் இருந்ததாகவே உணர முடியவில்லை. சன் டிவி பாணி தீர்ப்பிலிருந்து ("மொத்தத்தில்......” etc etc) உங்களுக்கு விடுதலையளிக்கிறேன். :)


ஞாயிறு, டிசம்பர் 18, 2005

உலகமயமா, மாயமா?

ஒரு நாட்டின் மகிமை, அதன் பின்தங்கியவர்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதை வைத்தே கணிக்கப் படுகிறது. ஆகவே, உலக வர்த்தகம் இந்நாட்டை மேம்படுத்துகிறதா என்று ஆராய்வதற்கு, இன்று நம் இலட்சோபலட்சம் இளைஞர்களுக்கு உலகமயமாக்கத்தால் கிடைக்கும் வேலை வாய்ப்புகள், வசதியான வாழ்க்கை ஆகியவற்றை மட்டும் கணக்கில் கொள்ளாமல் அதைக் கடந்து, நம்மில் எளியவர்களின் நிலை எத்தகைய மாற்றங்களைக் கண்டிருக்கிறது, வரப்போகும் மாற்றங்களால் அவர்கள் அடையக்கூடிய பாதிப்புகள் / ஆதாயங்கள் என்னென்ன என்பதைப் பற்றியும் யோசிக்கவேண்டும்.

இது பொருளாதாரத்தைப் பற்றிய ஒரு அலசல் என்பதால் பேரெட்டோ செயல்திறன் (Pareto Efficiency) விதியைப் பற்றிய அறிமுகமும் பயனுள்ளதாக இருக்குமென்று நினைக்கிறேன். சுருங்கக் கூறவேண்டுமென்றால், ஒரு மாற்றம் நிகழ்வதால் ஒருவருக்கு ஆதாயம், அதோடு வேறெவருக்கும் எவ்வகையான பாதிப்புமில்லை (முன்னிருந்த நிலைமையே தொடர்கிறது) என்றிருந்தால் அது பேரெட்டோ செயல்திறன் விதிக்கு ஏற்புடைய ஒரு மாற்றமாகும். அதாவது, கூட்டிக் கழித்துப் பார்க்கும்போது, ஒட்டுமொத்த சமுதாயமும் முன்னேறியதாகக் கொள்ளலாம். இந்த அளவுகோலை வைத்து உலகமயமாக்கத்தை அளந்தால் கிடைக்கும் விடையென்ன என்பதே நாம் ஆராய வேண்டியது.

அடிப்படைகளைத் தெளிவு படுத்திக் கொள்ளும் சாக்கில், இதையும் குறிப்பிட்டு விடுகிறேன். ஒரு வர்த்தக நிறுவனத்தின் அடிப்படை இலட்சியமென்ன என்று ஆராய்ந்தால், நமக்குப் பொதுவாகக் கிடைக்கக் கூடிய விடைகள் -அதன் இலாபம் (அதனால் அதன் பங்காளர்களுக்குக் கிடைக்கும் வருவாய்), அது அளிக்கக்கூடிய வேலைவாய்ப்புகள், அரசுக்குக் கிடைக்கக் கூடிய வரிப்பணம், அதன் சுற்றுப்புறத்திலுள்ள சிறு நிறுவனங்களுக்கு (அவற்றின் பொருட்களை வாங்கக்கூடிய வாய்ப்பிருப்பதால்) வருமானம், இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். மேற்கூறிய காரணங்களால், ஒரு பகுதியில் ஏற்படும் வர்த்தக முதலீடுகள், அப்பகுதியில் வாழும் மக்களாலும், அதன் அரசு நிர்வாகங்களாலும் வரவேற்கப்படுகின்றன. ஆனால், இவையனைத்தும் ஒரு வர்த்தக நிறுவனத்தால் ஏற்படும் பின்விளைவுகளேயன்றி, அதன் இலட்சியமல்ல. அதன் இலட்சியம் என்றுப் பார்த்தால், நிபுணர்களின் தத்துவ ரீதியானக் கூற்றுப்படி, அதன் வாடிக்கையாளர்களின் முன்னேற்றமே அதன் இலட்சியம். அவர்களது குறிப்பிட்ட தேவைகளைச் சிறப்பாகப் பூர்த்தி செய்வதே ஒரு நிறுவனத்தின் இலட்சியமாகும். ஆகவே, முதலீடுகளுக்கு (அந்நிய, உள்நாட்டு.... எதுவாகயிருப்பினும்) சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்குமுன், அவற்றின் இலட்சியங்களும், அவை நிகழும் பகுதிகளிலுள்ள சமுதாயங்களின் இலட்சியங்களும் ஒத்துப் போகின்றனவா என்று ஆராய்வது பலனைத் தரும். இந்நாட்டு மக்களை, வாடிக்கையாளர்கள் என்ற வகையில் முன்னேற்றாத எந்தவொரு நிறுவனமும் செய்யும் முதலீடுகள், இந்நாட்டின் ஒரு சிறிய பகுதியினருக்கே சாதகமாக முடியும் என்பது இதிலிருந்து தெரிய வருகிறது. அந்நிய முதலீட்டை விடுங்கள், நம் நாட்டு நிறுவனங்களான Infosys, TCS, Wipro போன்றவற்றால் இச்சமுதாயத்திற்கு பெரிதாக என்ன நேர்ந்து விட்டது? அவற்றின் மொத்தப் பங்களிப்பில் இந்திய வாடிக்கையாளர்களுக்கு அளித்த பங்களிப்பு / ஏற்படுத்திய முன்னேற்றம் எத்தனை சதவிகிதம்? இவற்றிற்குச் செலவிடப்பட்ட முதலீடுகள், உழைப்பு, வரவேற்பு மரியாதைகள், விதி / வரி விலக்குகள் ஆகியவை, வேறு திசைகளில், நம் நாட்டிற்கு நேரடியாகப் பலனளித்திருக்கக் கூடிய வேறு வகை நிறுவனங்களுக்கு (அவை அந்நிய நாட்டைச் சார்ந்தவையாக இருப்பினும்) கிடைத்திருக்குமானால் நாம் இன்னும் முன்னிலையில் இருந்திருப்போமோ என்னவோ. நம் policy makersஇன் குறைப்பார்வையே வெளிப்படுகிறது இதிலிருந்து.

மேலே உள்ள தத்துவங்களின் படி இன்று நிகழும் பல big ticket முதலீடுகளை ஆராய்ந்தால், அவை இந்நாட்டு மக்களுக்குப் பயன் படாது, பெரும்பாலும் வெளிநாடுகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கே சாதகமாக விளங்குவதைக் காணலாம். சில விதிவிலக்குகள் என்று கூற வேண்டுமென்றால், செல்பேசிகள் தயாரிப்பு, வாகனங்கள் தயாரிப்பு, புது வகையான வங்கி / நிதி / காப்புறுதி சேவைகள், தொலைபேசி / தொடர்பாடல் சேவைகள், மின்/மின்னணுச் சாதனங்கள் தயாரிப்பு, சுகாதாரப் பொருட்கள் தயாரிப்பு, மருந்து-மாத்திரைகள் தயாரிப்பு போன்றவற்றைக் குறிப்பிடலாம். கணினிச் செயலிகள் (microprocessors) தயாரிப்பைத் துவக்கப் போவதாக செய்திகள் வந்தாலும், அவற்றால் நமக்குக் குறைந்த விலைக் கணினிகள் கிடைக்கக் கூடுமென்ற சாத்தியக்கூறு இருக்கும் பட்சத்தில் அதனை வரவேற்கலாம். இல்லாவிட்டால் அவற்றை சீனாவே தயாரித்து விட்டுப் போகட்டும். ஒரு பன்னாட்டு நிறுவனத்தை நம் தயவில் கொழிக்கச் செய்வதற்கான கட்டாயம் நமக்கிருப்பதாக எனக்குத் தெரியவில்லை. எனது புரிதலில் பிழையிருக்கலாம் ;)

முதலீடுகளில் அத்தியாவசியமானவை (ஆகவே ஆதரிக்கப்பட வேண்டியவை) எவை, அவ்வளவாக நமக்கு முக்கியமில்லாதவை (இருந்தும் இன்று பரந்த வரவேற்பைப் பெற்றவை) எவை என்பதைப் பற்றிய எனது பார்வையை தெளிவு படுத்தியிருக்கிறேனென்று நம்புகிறேன். இதைக் கடந்து, அது அந்நிய முதலீடா, நம் நாட்டவரின் முதலீடா என்ற செய்தியெல்லாம் ஒரு தகவலுக்காகத்தான் பயன்படுமென்று நினைக்கிறேன். இதை விட, ஒரு முதலீட்டால் பல வறியவர்கள் காலகாலமாக வாழ்ந்துவந்த இடத்திலிருந்து இடம்பெயர நேர்கிறதா, அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப் படுகிறதா, அவர்களது சூழல் சரிசெய்ய முடியாத அளவிற்கு மாசடைகிறதா, அவர்களது இயற்கை வளங்களான குடிநீர், விளைநிலங்கள், மீன்வளங்கள் ஆகியவற்றை இழக்க நேரிடுகிறதா, என்பது போன்ற கேள்விகள் நேர்மையான முறையில் விடையளிக்கப்பட வேண்டியவை. இது போன்ற ஆபத்துக்கள் எதுவுமில்லை என்று உறுதியான பிறகே, ஒரு முதலீட்டுக்கு (அது நம் நாட்டுக்கு மிகவும் தேவையான ஒன்று என்ற முடிவுக்கு வந்த பிறகும்) அனுமதி வழங்கப்பட வேண்டும்.

அடுத்து ஏற்றுமதி, இறக்குமதி கொள்கைகளைப் பற்றி. உலகெங்கிலுமுள்ள சிறப்பம்சங்களை நாமும் எளிதில் பெற வழி செய்தல் வேண்டும். அது போலவே, நம்மிடமுள்ள சிறப்புகளும் எட்டுத் திக்குகளிலும் பாய்ந்து நமக்கு செல்வச் செழிப்புகளைப் பெற்றுத் தரவேண்டும். இந்த அடிப்படைக் கொள்கையில் நமக்கு எந்த பேதமுமில்லை. நம் தயாரிப்பில் வெளிவரும் பொருட்களுக்குப் போட்டியாக வெளியுலகிலிருந்து அவற்றை விடச் சிறப்பாகவோ, மலிவாவோ பொருட்கள் நம்மை வந்தடைந்தால் அதை இருவிதமாக எதிர்கொள்ளலாம். முதல் வகை - அப்பொருட்களைத் தடை செய்வது, அல்லது அவற்றின் மீது அதிகப்பட்ச வரிகளை விதித்து, அவற்றின் சிறப்பை / கவர்ச்சியை குறைப்பது, அதன் விளைவாக நம் மக்கள் நம் தயாரிப்புகளையே (அவை தரக்குறைவானவையாக இருந்தாலும்) தொடர்ந்து வாங்கச் செய்வது. இப்படிச் செய்வதனால் யாருக்கு ஆதாயம்? நம் தயாரிப்பாளர்களுக்கு, அவர்களைச் சார்ந்திருக்கும் உழைப்பாளர்களுக்கு, விநியோகஸ்தர்களுக்கு. ஆனால், இத்தகைய கொள்கையால் பொதுமக்களுக்கு பேரிழப்பே. இதனால் அவர்களது வாங்கும் சக்திக்கேற்ற தரமான பொருட்களை வாங்க விடாமல், அதிக விலை கொடுத்து தரக்குறைவான உள்நாட்டுச் சரக்கையே வாங்கும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள். இதனால், நம் தயாரிப்பாளர்களும் தரக்குறைவான பொருட்களை விற்பதற்கே ஊக்குவிக்கப்படுவார்கள். அவர்களது இலாபம் பாதுகாக்கப் படுவதொன்றே இதனால் கிடைக்கும் பலன். இப்படியில்லாமல், இறக்குமதி பொருட்களும் தடைகளின்றி நம்மை வந்தடையலாமென்ற நிலையிருந்தால், நம் தயாரிப்பாளர்களும் உலக அளவிலான போட்டியின் காரணமாக அவர்களின் தரத்தை உயர்த்துவது, விலையைக் குறைப்பது போன்றவற்றைச் செய்து, வாடிக்கையாளர்களின் தேவைகளை முதன்மைப்படுத்துவார்கள். .

நான் மேலே குறிபிட்டுள்ளது, அத்தயாரிப்பாளர்கள் கோடிகளில் உழலும் பெருமுதலாளிகளாக இருக்கும் பட்சத்தில். இதுவே, சிறுதொழில் முதலாளிகள், குடிசைத் தொழில் நடத்துவோர் ஆகியோரைப் பொறுத்தவரை, அவர்களால் உலக அளவிலான, பன்னாட்டு நிறுவனங்கள் போன்றவைகளுடன் போட்டியிட முடியுமா என்று ஆராய்ந்து, பிறகே அத்தகைய தொழில்களில் சர்வதேசப் போட்டிகளை அனுமதிக்கலாம். இல்லாவிட்டால் பலரது வயிற்றுப் பிழைப்பில் மண் விழுவது ஒன்றுதான் நிகழும். வறுமையொழிப்பில் ஒரு முக்கியமான உத்தியாக சிறுதொழில்கள் வளர்ச்சியை ஊக்குவிப்பது நடைபெற்று வருகிறது. அதற்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் அவற்றிற்கு வெளியுலகப் போட்டியை அனுமதித்தால், பலர் மீண்டும் வறுமை நிலைக்கே திரும்பி விடும் அவலமே நிகழும்.

விவசாயப் விளைபொருட்களுக்கும் இத்தர்க்கம் பொருந்தும். ஒரு விவசாயி மிகுந்த உளைச்சல்களுக்குப் பிறகு அறுவடை செய்யும் தானியங்களுக்கும், காய் கனிகளுக்கும் நியாய அடிப்படையில் விலைகளும், வாடிக்கையாளர்களும் கிடைக்குமாறு வழி செய்யப்படா விட்டால், நஞ்சுண்டு உயிரிழப்பதைத் தவிர அவருக்கு வேறு வழியில்லாமல் போகும். இங்கும் சிறுவிவசாயி / பெரும்பண்ணையார் என்ற பாகுபாட்டைக் கடைபிடித்து, அதன்படி விதிகளை இயற்ற வேண்டும். முற்றிலும் தேவைப்பட்டவர்களையே அரசின் உதவிகள் / பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆகியன சென்றடைய வேண்டும். (Tea estate முதலாளிகளையல்ல) விவசாயம் பற்றிய விவாதத்தில் வேறு சில அம்சங்களும் முக்கியத்துவம் பெறுகின்றன. 1.மேலை நாடுகளில் கடைபிடிக்கப்பட்டு வரும் அதிநவீன விவசாய முறைகள் 2.மேலை நாட்டு அரசுகள் அவர்களது விவசாயிகளுக்கு அளித்து வரும் அளவுக்கதிகமான மானியத் தொகைகள்.

இங்கு கல்வியறிவு கூட இல்லாத நம் விவசாயிகளால், மேலை நாடுகளில் முற்றிலும் விஞ்ஞான முறையில், இயந்திரமயமாக்கப்பட்ட விவசாய முறைகளைக் கடைபிடிக்கும் அவர்களது விவசாயிகளின் உற்பத்தித் திறனுடன் போட்டியிட முடியுமா என்ற கேள்விக்கு விடை, அதிலேயே பொதிந்துள்ளது. உயர்தர விதைகள், உரங்கள், ரசாயனப் பொருட்கள், பாசன முறைகள், இயந்திரங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி, பெருமளவினால் ஏற்படும் சிக்கனத்தையும் (economy of scale) சாதகமாக்கிக் கொண்டு, மிகக் குறைந்த வேலையாட்களையே வைத்துக் கொண்டு, ஒரு மேலை நாட்டு விவசாயியால் தன் விளைபொருட்களை மிக மலிவான விலைக்கு விற்க முடியும். இது போதாதென்று, அவர்களது அரசுகள் வேறு அவர்களுக்கு மானியத் தொகைகளை அளிக்கின்றனவாம். பல பில்லியன் டாலர்கள் மக்களின் வரிப்பணத்திலிருந்து இதற்கென ஒதுக்கப் படுகிறதாம், ஒவ்வொரு வருடமும். இதனால் ஏற்படும் விளைவு, அளவுக்கு அதிகமாக சாகுபடி செய்து, உபரி விளைச்சல்களை உலக மயம் என்ற பெயரில் வளரும் நாடுகளின் சந்தைகளில் மலிவு விலைக்கு கொட்டி (dumping), அந்நாட்டு விவசாயிகளால் அதை ஈடு செய்ய முடியாமல், அவர்களது வாழ்வாதாரம் சிதைக்கப் படுவதுதான் இன்றைக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல், வளரும் நாடுகளில் இறக்குமதியாகும் உணவுப் பொருட்களை தக்க முறையில் பரிசோதனைக்குட்படுத்தும் வசதிகளும் போதிய அளவில் இல்லாததன் காரணத்தால், வேறு வளர்ந்த நாடுகளில் (அளவுக்கதிகமான பூச்சி கொல்லிகளின் கலப்படம், போன்ற காரணங்களால்) நிராகரிக்கப்படக்கூடிய உணவுப்பொருட்களை, வளரும் நாடுகளின் தலையில் கட்டும் அபாயமும் இருப்பதாகத் தெரிகிறது.

ஆக, இன்று உலக வர்த்தகமானது பல குறைகளைக் கொண்டுள்ளது. சகல வசதிகளையும் பெற்ற, தம்மை நன்கு நிறுவிக்கொண்ட வர்த்தகர்களுக்குச் சாதகமாகத் திகழ்ந்து, அவர்கள் மேன்மேலும் செழிப்புறுவதற்கு வகை செய்யும் விதமாகவே உள்ளன இன்றைய வர்த்தக விதிமுறைகளும், அரசு நடவடிக்கைகளும். நம் நாட்டளவில் எடுத்துக் கொண்டாலும், கோடிக்கணக்கான எளியவர்களின் வாழ்க்கையை அழிக்கக் கூடிய ஒரு மாற்றமாகவே உலகமயமாக்கத்தைக் கருத முடியும். முதலில் கூறிய பேரெட்டோ செயல்திறன் விதிக்குக் கட்டுப்படாமல், மாறாக அதற்கு நேரெதிர் விளைவைத் தருவதே இந்த உலகமயமாக்கம். இன்றைய நிலையில் அதனை எதிர்ப்பதே எந்தவொரு மகத்துவமான நாட்டிற்கும் சரியானதொரு முடிவாக இருக்க முடியும்.

பி.கு: இன்றைய draft தீர்மானத்தைப் பற்றி இனிமேல்தான் தெரிந்து கொள்ள வேண்டும். 2013ஆம் ஆண்டிற்குள் எல்லா விவசாய மானியங்களையும் அகற்றுவதற்கு பரிந்துரை, என்றெல்லாம் செய்தி கண்ணில் பட்டது. ஏதோ, நல்லது நடந்தால் சரிதான்.

புதன், டிசம்பர் 14, 2005

டெக்னோராட்டி - சில தகவல்கள், யோசனைகள்

டெக்னோராட்டி தேடுபொறியை, சில உத்திகளைக் கையாண்டு, ஒரு வலைப்பதிவுத் திரட்டியைப் போல் பயன்படுத்துவதைப் பற்றி முன்பு ஒரு பதிவிட்டிருந்தேன். அதன்படி இன்று (என்னையும் சேர்த்து) சில வலைப்பதிவர்கள் இம்முறையைப் பின்பற்றி, அவர்களின் பதிவுகள் டெக்னோராட்டி தேடல்களில் கிடைக்கும் வண்ணம் அவற்றை இடுகின்றனர். மேலும் சிலர் இதனை முயற்சித்துவிட்டு, முடியாமல் கைவிட்டு விட்டனர் என்று நினைக்கிறேன். இச்செய்முறையில் பொதுவாக நேர்ந்து விடும் சில தவறுகள், அவற்றைத் தவிர்ப்பது, சில புதிய உத்திகள், மற்றும் டெக்னோராட்டி அறிமுகப்படுத்தியிருக்கும் புதிய வசதிகள் ஆகியவற்றைத் தெரியப்படுத்துவதே இப்பதிவின் நோக்கம்.

1.சின்னத்திரை - 'டெக்னோராட்டி மினி' என்றழைக்கப்படும் இவ்வசதியால், பதிவுகளின் பட்டியல் ஒரு சின்னத்திரையில் காண்பிக்கப்படும், கீழே உள்ளது போல்.

இத்திரை நிமிடத்திற்கொரு முறை தன்னை புதுப்பித்துக் கொள்ளும் ஆற்றலுடையது என்பதால், சென்ற நிமிடத்தில் டெக்னோராட்டியால் சேர்த்துக் கொள்ளப்பட்ட பதிவுகளும் தாமாகவே இந்த நிமிடத்தில் உங்கள் பார்வைக்குக் கிடைத்து விடும். இதனைச் செயல்படுத்த http://technorati.com/tag/தமிழ்ப்பதிவுகள் என்றப் பக்கத்திற்குச் சென்று, அதன் வலதுபுறத்திலிருக்கும் 'View in Mini' என்று குறிப்பிடப்பட்ட சுட்டியைச் சொடுக்க வேண்டும், அவ்வளவே. குட்டித்திரையை minimise செய்து நாள் முழுவதுமாக அவ்வப்போது பார்த்துக் கொண்டிருக்கலாம், புதிதாக பதிவுகள் வந்துள்ளனவா என்று (அலுவலக நேரங்களில் அவ்வப்போது வேலையும் செய்யுங்கள் :) )

2.பதிவில் வகைப்பெயர் (tag) சேர்க்கை: முன்பே கூறியது போல், பதிவுகளை tag செய்வது எளிது. கீழே கொடுக்கப்பட்ட html நிரலை, பதிவின் கடைசி வரியாக சேர்த்துக் கொள்ள வேண்டும். அதாவது பதிவை உள்ளிடும் எழுதிப் பெட்டியிலேயே கடைசியில் இதையும் வெட்டியொட்ட வேண்டும் (i.e. within the text editor):

<a href="http://technorati.com/tag/தமிழ்ப்பதிவுகள்" rel="tag">தமிழ்ப்பதிவுகள்</a>

htmlஐப் பார்த்துவிட்டு சிலர் templateஇலெல்லாம் கைவைக்க, விளைவு வேறு விதமாகப் போய்விட்ட அனுபவத்தையெல்லாம் அறிய நேரிட்டது :) Wordpress, Blogsome போன்ற சேவைகளைப் பயன்படுத்துவோர், html எல்லாம் தேவையின்றி, அவர்களது category வசதி கொண்டு (category = தமிழ்ப்பதிவுகள்), பதிவுகளை tag செய்யலாம்.

3. துணைப்பிரிவுகள்: தமிழில் எழுதப்படும் பதிவு என்பதைக் கடந்து, வேறெந்த அடிப்படையில் உங்கள் பதிவை விவரிக்க முடியும்? எந்தத் துறை அல்லது துணைப்பிரிவைச் சார்ந்த பதிவு என்ற தகவல் பயனளிக்குமல்லவா? ஆகவே, தமிழ்ப்பதிவுகள் என்ற main tagஉடன், அரசியல், ஆன்மீகம், வர்த்தகம், நகைச்சுவை, இலக்கியம், இசை, திரைப்படங்கள் (reviews), புத்தகங்கள் (reviews), நுட்பம், கவிதைகள், கதைகள், பயணங்கள்........ இப்படி ஏதாவது ஒன்றையும் (அல்லது ஒன்றுக்கு மேலும்) additional tagஆக வழங்கினால், குறிப்பிட்ட துறையில் ஆர்வமுள்ளவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். இதைச் செய்வதற்கும் அதே முறையைப் பின்பற்ற வேண்டியதுதான், அதாவது, tagஇற்கான html நிரலைச் சேர்ப்பது:

<a href="http://technorati.com/tag/[tag]" rel="tag">[tag]</a>

இதில், [tag] என்பதற்கு பதிலாக பதிவின் துணைப்பிரிவைக் குறிப்பிட வேண்டும். உ-ம்,

<a href="http://technorati.com/tag/இசை" rel="tag">இசை</a>
<a href="http://technorati.com/tag/அரசியல்" rel="tag">அரசியல்</a>
<a href="http://technorati.com/tag/வர்த்தகம்" rel="tag">வர்த்தகம்</a>
<a href="http://technorati.com/tag/திரைப்படங்கள்" rel="tag">திரைப்படங்கள்</a> etc, etc.

டெக்னோராட்டி அளிக்கும் related tags வசதியைக் கொண்டு, தமிழ் tags அனைத்திற்குமிடையே உறவுமுறைகளை வளர்க்க முடியுமா என்றும் ஆராயவேண்டும். அவ்வாறு செய்தால் ஒரு பட்டியலுக்கான பக்கத்தில் மற்ற பட்டியல்களுக்கான சுட்டிகள் கிடைக்கும், அவற்றுக்குத் தாவிக் கொள்வது எளிதாகும். இப்பதிவிலேயே (இறுதியில்) அந்த ஆராய்ச்சியைத் தொடங்கியிருக்கிறேன்.

4.வேற்று கிரக மொழியில் tags: 'தமிழ்ப்பதிவுகள்' என்ற அருமையான தமிழ்ச்சொல் இருக்க, சிலர் அவர்களது பதிவுகளுக்கு வேற்று கிரக மொழிகளிலிருந்தெல்லாம் சொற்களைப் பிடித்து வந்து tag செய்கின்றனர். நிஜமாகத்தான் கூறுகிறேன், நம்பிக்கையில்லை என்றால் இங்கு காண்க. இத்தகைய செயல்களில் ஈடுபடும் தமிழின எதிரிகளைச் சரியாக அடையாளம் கண்டு அவர்களுக்குத் தக்க பதிலளிக்குமாறு தமிழ் கூறும் நல்லுலகத்தை வேண்டிக் கொள்கிறேன். அத்துடன், நீங்களும் இவ்வாறு வேற்று கிரக மொழியில் tag செய்ய வேண்டாமென்றும் கேட்டுக் கொள்கிறேன். (சொல்லாமல் விடப்படும் செய்தி - இந்த வேற்று கிரகப் பட்டியலில் எனது சில பதிவுகளும் அடக்கம். இது எப்படி நடந்தது என்று தெரியவில்லை. நம் தமிழினத்தைப் பிரித்தாள முற்படும் வேற்று கிரகச் சதியாக இருக்கக் கூடுமென்பதைத் தவிர வேறெதையும் உறுதியாகக் கூறுவதற்கில்லை)

5.டெக்னோராட்டிக்கு சுட்டி: உங்கள் பதிவின் templateஇல் டெக்னோராட்டிக்கு சுட்டி கொடுக்க விரும்பினால் இவ்வாறு கொடுங்கள்:

<a href="http://technorati.com/tag/தமிழ்ப்பதிவுகள்">தமிழ்ப்பதிவுகள்</a>

(Note: rel="tag" என்ற குறிப்பு இதில் இல்லாததை கவனிக்கவும். அக்குறிப்பை பதிவிற்குள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். பதிவிற்கு வெளியே templateஇலெல்லாம் பயன்படுத்தினால் indexingஇல் - அதாவது பட்டியலில் சேர்த்துக் கொள்ளப்படுவதில் பிரச்சினை வருகிறது).

6.பறைசாற்றுதல்: சரியாக tagging எல்லாம் செய்து பதிவை வெளியிட்ட பின்னர், அதை டெக்னோராட்டியிடம் தெரிவிக்க வேண்டுமல்லவா? Ping எனப்படும் இந்நடவடிக்கை ஒவ்வொரு முறை புதுப் பதிவை வெளியிட்ட பிறகும் கண்டிப்பாக செய்ய வேண்டியது. ஆனால் ஒரு பதிவிற்கு ஒரு முறை ping செய்தால் போதும். அதற்கு மேல் செய்தால் டெக்னோராட்டி கோபித்துக் கொள்ளும். கல்லூரி நாட்களில் "உள்ளேன் ஐயா" என்று ஒரு முறைக்கு மேல் (அதாவது, வகுப்பில் இல்லாத மற்றவர்களின் சார்பாகவும்) குரல் கொடுத்தால் ஆசிரியருக்குக் கோபம் வருமல்லவா, அதே போலத்தான். பதிவிட்ட ஒவ்வொரு முறையும் ping செய்ய வேண்டுமா என்று வருந்தினால், அதற்குத் தீர்வு Wordpress போன்ற சேவைகள் அளிக்கும் auto-ping வசதி. இல்லாவிட்டால், டெக்னோராட்டியில் ஒரு பயனர் கணக்கு ஏற்படுத்திக் கொண்டு, உங்கள் வலைப்பதிவை அதற்கு அடையாளம் காட்டினால் (i,e, claim your blog), அது அவ்வப்போது உங்கள் வலைப்பதிவுக்கு வந்து "புது பதிவு க்கீதா?" என்று வேவு பார்த்து விட்டுப் போகும், இருந்தால் பட்டியலில் அதுவாகவே சேர்த்துக்கொள்ளும். ஆனால் இது நடைபெறுவதற்கு சில யுகங்களாகலாம் என்பதால், manual pingஏ சிறந்தது.

7.டெக்னோராட்டி vs. தமிழ்மணம்: இத்தகைய ஒப்பீட்டிற்கு அவசியமே இல்லை. ஏனென்றால் இவையிரண்டும் வெவ்வேறு பயன்களைத் தருபவை. தமிழ்மணம் என்பது நம் தமிழ் வலைப்பதிவு உலகின் சமூக நுழைவு வாயில். பல்வேறான நிகழ்வுகள், சண்டைகள் :), மீம்கள், நட்சத்திர வாரம் போன்ற சிறப்புப் பங்களிப்புகள், இன்னும் பல்வேறு மனித முயற்சிகளை (உ-ம், பிடித்த பதிவுகள் etc) ஒருங்கிணைக்கும் தளம். டெக்னோராட்டி ஒரு முற்றிலுமான நுட்ப சம்மந்தப்பட்ட, உணர்வுகளில்லாத (கொள்கைகளில்லாத) ஒரு இயந்திர வசதி. ஆகவே, ஒரு டெக்னோராட்டி நிரலை சேர்த்துக் கொள்வதால் ஒருவருடைய தமிழ்மண விசுவாசம் குறைந்து விடும்/விட்டது என்றெல்லாம் எண்ணத் தேவையில்லை. ஒரு sitemeter, clock போன்ற நிரல்களைச் சேர்ப்பது போலத்தான் இது. அதிகமான அளவில் பதிவர்கள் தங்கள் பதிவுகளை tag செய்வார்களென்றால், என்னைப் போன்ற வாசகர்களுக்கு Mini, sub-categories போன்ற அதி நவீன வசதிகளைப் பயன்படுத்துவதற்கு வாய்ப்பு கிட்டும். தமிழ் வலைப்பதிவு உலகம் இரண்டாயிரம் / மூன்றாயிரம் பதிவர்கள் என்ற எண்ணிக்கைகளைத் தொட்டு விடுமானால், அவற்றை வகை பிரிக்காமல் படிப்பதென்பது கடினமானதொரு முயற்சியாகி விடும். ஆதலினால், tag செய்வீர்.


(இந்த tag சிதறலைக் கண்டு இது ஏதோ சகலகலா வல்லவப் பதிவு என்று எண்ணிவிட வேண்டாம். tagகளிடையே உறவுகளை உருவாக்கும் முயற்சியிது)

செவ்வாய், டிசம்பர் 13, 2005

நலன் பேணும் அரசு - Welfare State

நாட்டிலுள்ள அனைவருக்கும் எவ்வித பேதமுமின்றி, உயர்தரக் கல்வி, பரவலாகக் கிடைக்ககூடிய மருத்துவ வசதி, அடிப்படை வேலை வாய்ப்புகள், வேலையற்றவர்கள் / வறியவர்களுக்கு உதவித்தொகை, சட்ட ஒழுங்கை உறுதி செய்யக் கூடிய நம்பகமான காவல் துறை, ஆண் - பெண் சமநிலை/உரிமைகள்/வாய்ப்புகள்........... இவையனைத்தையும் இலவசமாக (அதாவது மக்களின் வரிப்பணத்தை மட்டும் கொண்டு) அரசே உறுதி செய்யுமானால் எவ்வாறிருக்கும்? இது ஏதோ இடதுசாரிக் கருத்தியலைப் போலுள்ளதே என்று எண்ணுபவர்களுக்கு - இது மேற்கத்திய (வலதுசாரி) உலகில், பல நாடுகளில் நடைமுறையிலுள்ள ஒரு அரசு முறைதான். நம் நாட்டில் ஒரு அரசியல் கட்சி இத்தகைய வாக்குறுதிகளை அளிக்குமானால், அது ஜனரஞ்சக உத்திகளை (populist measures) கடைபிடித்து ஆட்சியைப் பிடிக்க முயலுவதாக அனைத்துத் தரப்பிலிருந்தும் குற்றம் சாட்டப்படும். இவை கஜானாவை காலி செய்யும் நடவடிக்கைகள் என்ற பொதுவான கருத்து நிலவுகிறது. மேலும், இது போன்ற நடவடிக்கைகளால் நாட்டின் / பொருளாதாரத்தின் வர்த்தகப் போட்டித்தன்மை (business competitiveness) பாதிப்படைந்து விடும் என்ற அச்சமும் நிபுணர்களால் நீரூற்றி வளர்த்து விடப்பட்டிருக்கின்றது. அதற்குத் தோதாக fiscal deficit, fiscal discipline எனறெல்லாம் வார்த்தை ஜாலங்களோடு விளையாடுவதற்கென்றே தயார் நிலையில் ஒரு நிபுணர் கூட்டம் காத்திருக்கிறது.

நிற்க! ஒரு நலன் பேணும் அரசு ஒரு அரை நுற்றாண்டுக்கும் மேலாக ஆட்சி கொண்டிருக்கும் ஒரு நாட்டின் சாதனைகள் இவை:
 • உலக நாடுகளிலேயே, வர்த்தப் போட்டித்தன்மையில் முதலிடம்
 • உலகின் தலை சிறந்த அடிப்படைக் கல்வியமைப்பு (Basic education system), அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படுகிறது. இங்கு ஆசிரியர் பதவி என்பது மிக மதிப்பிற்குரிய, பலத்த போட்டிகளைக் கடந்து அடையக்கூடிய ஒன்று என்பதால், முதல்தர கல்வியாளர்கள் நிரம்பிய கல்வியமைப்பு உறுதி செய்யப் பட்டிருக்கிறதாம்.
 • உலகிலேயே மிக அதிகமான சுதந்திர நிலையை அடைந்த பெண்கள். அந்நாட்டின் குடியரசுத் தலைவரும் ஒரு பெண். (இதிலென்ன சிறப்பு என்றெண்ணுபவர்களுக்கு - மேலை நாடுகளில் நம் நாடுகளைப் போல் பெருந்தலைவர்களின் மனைவிகளும், மகள்களும், தோழிகளும் ஆட்சிப் பீடத்தை அடைந்து விட முடியாது. தகுதி அடிப்படையிலேயே தேர்தல்களுக்கு நியமனம் பெற முடியும்)
 • உலகிலேயே சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பில் முதலிடம்
 • உலகிலேயே மிகக் குறைந்த அளவில் ஊழல்கள்
 • உலகிலேயே அதிகமான செல்பேசிகளின் அடர்த்தி (cellphone density)
 • இணைய இணைப்புகளின் எண்ணிக்கையில் உலகின் முன்னணியில் இருக்கும் நாடுகளில் ஒன்று.
 • ஜனத்தொகை விகிதப்படி உலகிலேயே அதிகமான ஒலிம்பிக் பதக்கங்கள் (1 மில்லியன் மக்களுக்கு 106 ஒலிம்பிக் பதக்கங்கள். அமெரிக்கா - 8.3 பதக்கங்கள், இந்தியா - 0)
 • Formula 1 போட்டிகளில் முன்னணி இடத்திலுள்ள பல வீரர்களின் தாயகம்
 • ஜனத்தொகை விகிதப்படி உலகிலேயே அதிகமான இசைக் கலைஞர்களைப் பயிற்றுவித்த நாடு
 • மக்கள் நூலகங்களுக்குச் செல்வதில் உலகில் முதலிடம் (தேவநேயப் பாவணர் நூலகம் ஆனந்த் தியேட்டர் அருகிலுள்ளது என்றெல்லாம் வழிகாட்ட வேண்டிய நிலையில் இல்லை)
 • உயர் தொழில் நுட்பத்தில் (hitech) உலகில் முன்னணி நாடுகளில் ஒன்று. Nokiaவின் பிறப்பிடம். Linuxஐத் தோற்றுவித்த Linus Trovaldsஇன் தாயகம்.
 • ஐரோப்பாவிலேயே இரண்டாவது பாதுகாப்பான நகரத்தைத் தலைநகராகக் கொண்டது
 • செய்தித்தாள்களுக்கு அதிகமான வாசகர் வட்டம் (ஜனத்தொகையில் 70%. அமெரிக்கா 50%)
 • தலைசிறந்த மருத்துவ வசதிகள், அனைவராலும் எளிதில் பெறக்கூடியவை, இலவசமாக.
 • உலகிலேயே விஞ்ஞான ஆய்வுக்காக (GDP சதவிகிதப்படி) அதிகமான முதலீடு i.e. #1 in investments for R&D as a % of GDP
தகவல் உதவி:

நம் நாட்டுச் சூழலில் ஏன் நலத் திட்டங்கள் கடுமையான எதிர்ப்பையும் கண்டனத்தையும் பெறுகின்றன? எனக்கு உடனடியாக நினைவுக்கு வரும் ஒரு நலத் திட்டம் நமது சத்துணவுத் திட்டமாகும். அதன் பலன்களும் விளைவுகளும் எவ்வளவு தூரம் ஆராயப்பட்டிருக்கின்றன என்றுத் தெரியவில்லை. இருந்தும் நமது கல்வி நிலை மேம்பாடடைந்ததில் அதற்கும் ஒரு முக்கிய பங்குண்டு என்றே தோன்றுகிறது. தற்போது மத்திய அரசு அறிமுகப்படுத்தும் வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்திற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அரசுத் துறைகளில் பரவலாக நிலவும் ஊழலைக் காரணம் காட்டி இந்த எதிர்ப்புகள் முன்வைக்கப்பட்டாலும், எனக்கென்னவோ நமது அடிமனதில் வேறூன்றிய நலத் திட்ட எதிர்ப்பு நிலைப்பாடுதான் இதற்குக் காரணமென்று தோன்றுகிறது. ஒரு நலன் பேணும் அரசு வெற்றியடைவதற்கு பொதுமக்களின் அதிகப்படியான பங்களிப்பு தேவை. ஒரு சமத்துவ, நலமான சமுதாயத்தை உருவாக்க, நாம் நம் வருமானத்தில் 45% வரை வரியாகச் செலுத்த வேண்டி வரலாம். நாம் தயாரா அதற்கு?

சனி, டிசம்பர் 10, 2005

"கருத்துச் சுதந்திரம்னா என்னங்க?"

"அதுவா, எனக்குப் பிடிச்ச கருத்த சொல்றத்துக்கு உனக்கு சுதந்திரமிருக்குன்னு அர்த்தம்." முகமூடியின் templateஇல் உள்ள இவ்வரிகளை படித்து சிரித்து விட்டு நகர்ந்திருக்கிறேன். ஆனால் இன்றுதான் புரிந்தது இவ்வரிகளில் உள்ள உண்மை.

ஒரு வலைப்பதிவில் வெளியான கருத்தும் அதற்கு எதிர்வினையாக வந்த பின்னூட்டமும், என்னை சிந்திக்க வைத்தன. அப்பதிவின் சாரம் - சென்னைக்கு வந்த Bill Gates, கருணாநிதியைச் சந்தித்தது எவ்வாறு, ஏன், என்பதே. அதாவது, எந்த அரசுப் பொறுப்பிலும் இல்லாத ஒரு நபரை இந்தியாவின் பிரதிநிதியாகவோ அல்லது தமிழகத்தின் பிரதிநிதியாகவோ முன் நிறுத்தி, வருகை தரும் ஒரு உலக வர்த்தக முதலாளியைச் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது ஏன், எந்த அடிப்படையில் என்பதே கேள்வி. அதற்கு வந்த ஒரு பின்னூட்டம், "பதிவு நன்று, கருணாநிதியைத் தாக்குவதைத் தவிர்க்கவும்". சொல்லாமல் சொல்லப்பட்ட செய்தி - "கருணாநிதி என்ற நபர் விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட ஒரு மாமனிதர்"

வினோதமான இப்பின்னூட்டத்திற்கு எதிர்வினையாக நான் இவ்வாறு மறுமொழிந்தேன்: "நம் தமிழ்ச் சமூகத்தில் கருத்துச் சுதந்திரம் என்பது எந்த அளவில் உள்ளது என்று காண்பித்ததற்கு நன்றி. Bill Gates கருணாநிதியை எந்த அடிப்படையில் சந்தித்தார்? தயாநிதி மாறனின் தாத்தா என்ற வகையிலா? முன்பு Enronஇன் தலைவியும், ஒரு மாநில முதலமைச்சரைக் காக்க வைத்து விட்டு, அந்நேரத்தில் எந்த ஒரு பொறுப்பிலும் இல்லாத பால் தாக்கரேயைச் சந்தித்தார். அப்போது அது குறித்து ஊடகங்களில் கேள்வியெழுந்ததைப் போலவே இப்போது கருணாநிதி பற்றியும் கேட்கப்படுகிறது. இதை ஏன் 'தவிர்க்க' வேண்டுமென்கிறீர்கள்? விளக்கினால் விளங்கிக் கொள்வேன்" சில மணி நேரங்களுக்குப் பிறகு என் மறுமொழிக்கு ஏதேனும் எதிர்வினைகள் வந்துள்ளனவா என்று பார்த்தால், அந்தப் பதிவே தென்படவில்லை. எதற்கு வம்பு என்று அப்பதிவரே அகற்றி விட்டார் போலும்.

அதற்கு பதிலாக வேறொரு வலைப்பதிவில் ஒரு பதிவு வெளியிடப்பட்டிருந்தது. கருத்துச் சுதந்திரம் வேண்டும் என்ற நினைப்பையே நையாண்டி செய்யும் வகையில், நகைச்சுவை இரத்தினமாக ஜொலித்தது அப்பதிவு. "எதைத் தின்னால் பித்தம் தெளியும் என்று இருப்பவர்களுக்கெல்லாம் கருத்துச் சுதந்திரம் ஒரு கேடா" என்று அடிமனதைத் தொட்டது. "பித்தர்கள் எல்லோரும் அவர்களுடைய கருத்துச் சுதந்திரம் காலாவதியாகிப் போகுமுன் அதனைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்" என்று அன்புக் கட்டளையிட்டது. அவ்வாறு காலாவதியாகிப் போனால் அதைக் கொண்டாடும் நபர்கள் யாராயிருப்பார்கள் என்றும் ஊகிக்க முடிந்தது அப்பதிவிலிருந்து. நகைச்சுவைப் பதிவுகளை நகைச்சுவை உணர்வோடு இரசிப்பது நம் கடமையென்பதால், அதனையும் இரசித்து மகிழ்ந்தோம்.

மற்றபடி, என் கருத்துச் சுதந்திரமும் விரைவிலேயே காலாவதியாகிவிடும் அபாயமுள்ளதால், மேற்கொண்டு கருத்து கூற முற்படாமல், ஒரு ஜோடி ஜால்ராக்களை வாங்கி வைத்துக் கொண்டு, அவற்றை நன்கு ஒலிப்பதற்குப் பயிற்சி செய்து கொண்டிருப்பது சாலச் சிறந்தது என்ற முடிவுக்கு வந்திருக்கிறேன். பிற்காலத்தில் கை கொடுக்கலாம், பாருங்கள்?

வெள்ளி, டிசம்பர் 02, 2005

மரம், செடி, கொடி, இன்ன பிற.......

எனது இளம்பருவத்தில் சென்னையின் ஒரு புறநகர்ப் பகுதியில் எங்களுக்கு வீடு ஒதுக்கப்பட்டு, ஆசையுடன் அதில் குடிபுகுந்தோம். வீட்டைச் சுற்றியிருந்த நிலம்தான் எங்களது தோட்டக்கலைக்கு ஒரு சோதனைக்களமாகத் திகழ்ந்தது. குடிபுகுந்த சில நாட்களிலேயே, ஒரு நாற்று மையத்திலிருந்து வந்த ஒரு விற்பனையாளர் தனது விற்பனைப் பேச்சால் எங்களைக் கவர, அவரிடம் பணத்தைத் தண்ணீராக செலவழித்து (இது இங்கு வழக்கமான அர்த்தத்தில் கூறப்பட்டுள்ளது. சென்னையில் 'தண்ணீராக செலவு செய்வது' என்றால் 'சிக்கனமாக' என்று புரிந்து கொள்ள வாய்ப்பிருப்பதால் இதைத் தெளிவுபடுத்துகிறேன்) பல நாற்றுகளை வாங்கி நட்டோம். 'ஒரப்பாக்கம்' (அசல் பெயர் - ஊரப்பாக்கம்) என்ற இடத்திலிருந்து வந்த இந்த நாற்றுகளில் பல, நல்ல தரமானவையாக இருந்தன. ஆதலால் எங்கள் வாழ்வில் ஒரப்பாக்கத்துக்காரர் ஒரு நீங்கா இடத்தைப் பெற்றிருந்தார். அவ்வப்போது அவரை நினைவு கூர்வதும், அவரது நாற்றுகள் பற்றிய பேச்சும் நடந்த வண்ணம் இருந்தது.

இருந்த குறைவான இடத்தில் நான்கு தென்னங்கன்றுகளை நட்டார். நான்கும் ஆகாயத்தை எட்டின. அவற்றில் இரண்டு காய்த்தன, ஒன்று இன்றும் காய்த்துக் கொண்டிருக்கிறது. காய்க்காத இரண்டிற்கான அறிவியல் காரணத்தை, என் தாயார் அவருக்கு மட்டுமே புரியும் வகையில் விளக்குவார், நமக்குத்தான் பொறுமையிருக்காது கேட்பதற்கு. காய்த்தவற்றில் ஒன்றை கட்டட வேலைக்காக சாய்க்க வேண்டியிருந்தது. மிஞ்சிய ஒன்றில் இருக்கும் காய்களை என் தாயார் ஆள் வைத்து இறக்குவதெல்லாம் கிடையாது. அவற்றின் பளுவால் மரத்திலிருந்து பிய்த்துக் கொண்டு தானாகவே விழும் காய்களை பணிப்பெண் திரட்டிக் கொண்டு வருவார். அவற்றை வீட்டின் ஒரு மூலையில் குவித்து வைத்திருப்பார்கள். ஒவ்வொரு முறை சென்னைக்குச் செல்லும் போதும் அவற்றின் நார் உரிப்பது, தேங்காயை உடைத்து, அதிலிருந்து பத்தைகளைச் சுரண்டியெடுப்பது போன்ற வேலைகள் எனக்கு நிச்சயம் அளிக்கப்படும். அதன் பிறகு கிடைக்கும் சட்டினியின் சுவையை மனதில் கொண்டு, இவ்வேலைகளைப் பொருட்படுத்துவதில்லை.

ஒரப்பாக்கத்துக்காரர் நட்ட மற்றொரு கன்று கொய்யா. ஹைதராபாத் கொய்யா என்று கூறி எங்களிடம் விற்றிருந்தார். ஏதோ விற்பனைத் தந்திரம் என்று நாங்களும் அதன் 'ஹைதராபாத்' அடைமொழிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கவில்லை. நன்றாகவே வளர்ந்து காய்த்தது இம்மரம். எங்கள் மாடிப்பகுதியிலிருந்து அதன் காய்/கனிகள் கைக்கெட்டும் அருகாமையிலிருந்தன. சிறு வயதில் எனக்குப் பிடித்த பொழுது போக்கு - ஒரு கதைப் புத்தகத்தை எடுத்துக் கொண்டு, இக்கொய்யா மரத்திலிருந்து ஒரு நாலைந்து காய்/கனிகளைக் கொய்து கொண்டு, படுக்கைத் தலையணையில் சாய்ந்து கொண்டு, சாப்பிட்டுக்கொண்டே படிப்பதுதான். அணில்கள்தான் எங்களுக்குப் போட்டியாக, நாங்கள் பார்ப்பதற்கு முன்பே இக்கனிகளை முடித்துக் கொண்டிருந்தன. இதற்குத் தீர்வாக, காய்கள் கனிவதற்கு முன்பு அவற்றை ஒரு பிளாஸ்டிக் உறையால் சுற்றி மூடும் தந்திரத்தைக் கற்றோம். இதனால் (எங்கள் கைக்கெட்டிய) கனிகள் அணில்களிடமிருந்து தப்பின. இது போன்ற பல உத்திகளை தொலைக்காட்சியில் 'வயலும் வாழ்வும்' நிகழ்ச்சி, மற்றும் நாற்று மையங்களில் கிடைத்த ஆலோசனைகள் ஆகியவற்றிலிருந்து பெற்றோம். வேலையில் சேர்ந்து ஹைதராபாத் வந்ததும்தான் தெரிந்தது, இங்கு கிடைக்கும் கொய்யாவின் சுவை எங்கள் வீட்டுக் கொய்யாக்களைப் போலவே இருந்தது. இந்தக் கொய்யா மரமும் பின்னாளில் கட்டட வேலைக்காக வெட்டப்பட்டது. இதை ஒவ்வொரு paraவிலும் கூறினால் சோகம்தான் மிஞ்சுமென்பதால், இனி இதைக் குறிப்பிடாமல் விட்டு விடுகிறேன்.

நன்கு காய்த்த இன்னொரு மரம் நெல்லி. இதுவும் ஒரப்பாக்கத்துக்காரரின் பங்களிப்புதான். சிறிய காய்களைக் கொண்ட வகையைச் சார்ந்தது இம்மரம். கொத்து கொத்தாகக் காய்த்திருக்கும். மரத்தைப் பிடித்து உலக்கினாலேயே பொலபொலவென்று உதிரும். ஆனால் இவ்வாறு உதிரும் காய்கள் பக்கத்து வீட்டில்தான் சென்று விழுமென்பதால் நாங்கள் அவ்வாறு உலுக்குவதில்லை. வேறு வழிகளில் கவனமாகப் பறித்துத்தான் அவற்றை உண்போம். அதிகமான புளிப்பில்லாமல், ஒரு நல்ல ருசியைக் கொண்டிருந்தன இக்காய்கள். அவற்றிலுள்ள கொட்டையைத் துப்புவதற்கு சோம்பல் பட்டு, அவற்றை அப்படியே கடித்து விழுங்கி விடுவேன். இவற்றைத் தவிர, மா, மாதுளை, எலுமிச்சை, சப்போட்டா ஆகியவற்றையும் நட்டார், ஆனால் அவை நன்றாக வரவில்லை. விரைவில் அவற்றை அகற்றி விட்டோம். அவர் வைத்த இரு மலர்ச்செடிகள் மனோரஞ்சிதம் மற்றும் மகிழம். முன்னது ஒரு புதரைப் போல் வளர்ந்து, அட்டகாசமான மணத்தைக் கொண்ட பூக்களை பூத்தது. பச்சை வண்ணம் கொண்ட இப்பூக்களின் மணம் ஊரையே தூக்கும் தன்மையைக் கொண்டிருந்தது. ஆனால், மகிழமோ ஒரு christmas treeயைப் போல் நெட்டையாக வளர்ந்து ஒரு பூவும் பூக்கவில்லை. நாயைக் கட்டிப்போடுவதற்கு மட்டுமே இம்மரம் உபயோகப்பட்டது.

இதுவரை நாங்கள் எடுத்த strategic அதாவது தொலைநோக்குப் பார்வையுடன் செய்த முயற்சிகளைப் பற்றிக் கூறினேன். இப்போது tactical அதாவது குறுகிய காலப் பலன்களுக்காக எடுத்த முயற்சிகளைப் பற்றிப் பார்ப்போம். மலர்ச்செடிகள் பலவற்றை நட்டு, குட்டு பட்டு, விட்டகன்றோம். ரோஜாச் செடிகள்தான் மிகுந்த ஏமாற்றத்தை அளித்தன. என்னவெல்லாமோ செய்து பார்த்தோம் அவற்றை வளர்த்து பூக்க வைப்பதற்கு. ஒவ்வொரு முறையும் தோல்வியைத் தழுவினோம். மல்லிக்கொடி பரவாயில்லாமல் வளர்ந்து, பூக்கவும் செய்தது. எனக்கு மிகவும் பிடித்த மலர் மல்லிதான். அதன் மணம் ஆளைக் கிறங்க அடிக்கும். மல்லிப்பூ பெரிய அழகென்று கூற இயலாது. ஆனால் அதன் குணமான மணம் ஏற்படுத்தும் பாதிப்பு, வேறொரு அழகான மலர் ஏற்படுத்தும் பாதிப்பை விடப் பல மடங்கு அதிகமே. (இத்தத்துவம் மனிதர்களுக்கும் பொருந்தலாம் என்று சந்தில் சிந்து பாடிவிடுகிறேன்) இன்னொரு வகை மலர் உண்டு. கொடியில் பூக்கும், காலையில் பார்த்தால் உதிர்ந்து, தரையில் குப்புற விழுந்திருக்கும். வெள்ளை நிற இதழ்களும், சிவப்பு நிறக் காம்புப் பகுதியும் கொண்ட இப்பூக்கள் தரையில் உதிர்ந்திருக்கும் காட்சி, அதன் வண்ணங்கள் எல்லாவற்றையும் சேர்த்து நோக்கினால், ஏதோ இயற்கையே கோலமிட்டது போல் தோன்றும். இப்பூவின் பெயர் அந்திமந்தாரை என்று நினைக்கிறேன். இக்கொடியும் சில காலம் வாழ்ந்து மறைந்தது. கனகாம்பரம், செம்பருத்தி, டிசம்பர் பூ, செண்பகம் போன்ற மரபு வழி வந்த வகைகளோடு, exora, dahlia, julia(?) போன்ற இறக்குமதி வகைப் பூக்களையும் வளர்த்துப் பார்த்தோம். சென்னை மற்றும் சுற்றுப் பகுதிகளிலுள்ள அனைத்து தோட்டக்கலை மற்றும் நாற்று விற்கும் மையங்களுக்கும் பயணம் செய்து, அங்கிருந்து செடி வகைகளையும், விதைகளையும் தருவித்து நட்டோம் / விதைத்தோம். தரையில் நிலைக்காத இனங்களை பூந்தொட்டிகளில் வளர்த்துப் பார்த்தோம். இவற்றிலெல்லாம் எனக்குப் பிடிக்காத வகை ornamental எனப்படும் தோற்ற அழகிற்காக வைக்கப்படும் செடிகள்தான். குரோட்டன்ஸ், வண்ண வண்ண இலைகளைக் கொண்ட செடிகள், சப்பாத்திக் கள்ளிகள் (cactii) போன்றவை. இவற்றோடு ஏதோ ஒரு செயற்கைத்தனம் ஒட்டிக்கொண்டிருப்பதைப் போல் உணர்ந்திருக்கிறேன்.

வீட்டின் முன்னே மலர்ச்செடிகளென்றால், பின்புறம் காய்கறிச் செடிகள். பாத்திகள் வெட்டி, அவற்றின் ஒரமாக, கத்திரி, வெண்டை, தக்காளி போன்ற வகைகளைப் பயிர் செய்தோம். கத்திரி அதிகமாகக் காய்த்தது (பறித்து bucketகளில் சேகரிக்கும் அளவிற்கு). மற்ற இரண்டும் பெயருக்குக் காய்த்துவிட்டு, அழிந்து போயின. இச்செடிகளை அகற்றி விட்டு, பூசணியை வைத்தோம். இது ராட்சதக் கொடியாக பின்புறம் முழுவதும் படர்ந்தது, ஆனால் காய்க்கவில்லை. புடலங்கொடிகள் வைத்தோம், ஒரளவுக்குக் காய்த்தது. அதன் காய்கள் பிஞ்சுகளாக இருந்தபோது அவற்றிலிருந்து ஒரு சணல் கயிற்றில் கல்லைக் கட்டித் தொங்க விடுவோம், அதன் இழுப்பில், காய்கள் நீளமாக வளருமென்று எங்கோ கிடைத்த செய்தியை நம்பி. வாழைக்கன்று வைத்து, வாழையடி வாழையாக அது விரிவடைந்தது. அவற்றின் கனிகள் ஏனோ பிடிக்கவில்லை. அதற்கும் முற்றுப்புள்ளி. அதே போல், பப்பாளியும் வைரஸ் கிருமியைப் போல் எங்கள் வீட்டில் இனப்பெருக்கம் செய்து கொண்டு, நூற்றுக்கணக்கான கனிகளை அளித்தது. ஒரு கோடை விடுமுறையில், எனது பெற்றோர்கள் எங்களை ஊருக்கு அனுப்பி விட்டு, உணவுக்கு பதிலாக பப்பாளிகளை மட்டுமே உண்டு உயிர் வாழ்ந்தார்களாம். நல்ல சுவைதான் அக்கனிகள்.

இன்னொரு மகத்தான தோல்வி, வீட்டின் முன் புல்வெளி போட எடுத்துக் கொண்ட முயற்சிகள். இருந்த சிறிய இடத்தில் ஒரு லில்லி குளம் போல் அமைத்து அதனைச் சுற்றி புல் வளர்ப்பது என்று முடிவு செய்தோம். அருகம்புல், கோரைப்புல், கொரியப்புல் (Korean grass) என்று பலவகைகளில் முயன்றோம். சென்னை வெயிலின் சீற்றம் ஒரு புறமென்றால், வீட்டில் ஏதாவது மராமத்து செய்ய வருபவர்களின் மிதிபாடுகள் மறுபுறம் என்று, இப்புல்வெளி ஒரு நிறைவேறாத கனவாகவே இருந்தது. லில்லியும் ஏமாற்றி விட, அதற்கு பதிலாக, தொட்டியில் மீன்கள் வளர்க்கத் தொடங்கினோம். வெள்ளை, கறுப்பு, சிவப்பு, மஞ்சள் என்று நிறத்திற்கு ஒரு ஜோடி வாங்கி, தொட்டியில் விட்டோம். நாளடைவில் தொட்டியில் நூற்றுக்கணக்கான மீன் குட்டிகள், வெள்ளை, கறுப்பு, சிவப்பு, மஞ்சள் மற்றும் இடைப்பட்ட நிறங்களிலும்!!!! மீன்களுக்கு நிறவெறி கிடையாது போலும். ஒரு முறை ஒரு பெரிய மீன் வகையைச் சேர்ந்த மீனை விட்டோம். தொட்டியிலிருந்து எகிறிக் கொண்டே இருந்தது. கவனித்த வரையில் அதைப் பொறுக்கி, மீண்டும் தொட்டியில் விட்டுக் கொண்டிருந்தோம். ஆனால் நாங்கள் கவனிக்காத நேரத்தில் "நம்மால இந்த குண்டு சட்டியிலல்லாம் குதிர ஓட்ட முடியாதுபா" என்று இவ்வுலகை விட்டே எகிறி விட்டது அம்மீன்.

இடையில் நாங்கள் சென்னையிலிருந்து இடம்பெயர நேர்ந்ததால் மேற்கொண்டு தோட்டப்பணிகளைக் கைவிடலாயிற்று. மற்றும் தண்ணீர் தட்டுப்பாடு, முன்பு குறிப்பிட்ட கட்டட வேலைகள், வீட்டை விரிவாக்கியது என்ற பல காரணங்களால், மிகக் குறைந்த அளவிலேயே இன்று தோட்டப்பணி தொடருகின்றது, அதுவும் பூந்தொட்டிகளில். (தாயாருக்கு) வேறு துறைகளில் ஆர்வம் பெருகியதும் ஒரு காரணமாயிருக்கலாம். தண்ணீர் தட்டுப்பாட்டை எதிர்கொள்ள ஒரு tanker லாரி அளவுக்கு கொள்ளளவுள்ள ஒரு பாதாள நீர்த்தொட்டி (sump) ஒன்றை அமைத்திருப்பதால் அதற்கு அதிக அளவில் இடம் தேவைப்பட்டது. மிஞ்சிய இடங்களிலும் சிமெண்ட் தரைப் பூச்சு செய்து, மண் பரப்பு என்பதே இன்று மறைந்து விட்டது. காலை செய்தித்தாளைப் படித்துக் கொண்டிருக்கும்போது, வெளியே தோட்டத்திலிருந்து வேறு வகையான செய்திகள் (குறிப்பிட்ட செடி துளிர் விட்டதையோ, அல்லது மொட்டு விட்டதையோ அல்லது அதன் மொட்டு திறந்து பூத்திருப்பதையோ பற்றிய செய்திகள்) ஒலிபரப்பான அந்த நாட்கள் இனி திரும்பப் பெற முடியாதவையென்றுதான் தோன்றுகிறது.