சனி, பிப்ரவரி 17, 2007

கணினிகளுக்கான கவிதைகள்

நான் ஒரு கவிஞன். கவிதை எழுதுவது எனக்குப் பிடித்தமானவொரு பொழுதுபோக்கு. மனதில் இருக்கும் ஒரு கருத்தை கவிதையாக வடித்து முடித்து விட்டால் ஒரு பாரம் இறங்கியதைப் போன்ற ஒரு நிம்மதியைப் பெறுவேன். என் கவிதைகள் இலக்கணச் சுத்தமானவை. ஒரு காற்புள்ளி அறைப்புள்ளியைக் கூட தவற விடாது சேர்த்து விட்டால்தான் என் மனம் நிறைவடையும் (என் வாசகர்களின் மனங்களும்).

என் வாசகர்களை நான் அவ்வளவாக விரும்புவதில்லை. மிகக் கறாரான பேர்வழிகள். ஆனால், பெரும் அறிவாளிகள். எத்தகைய சிக்கலானக் கருத்தை முன்வைத்தாலும், நொடிப்பொழுதில் அதை உள்வாங்கிக் கொள்வதில் தீரர்கள். மேலும், பலமொழிப் புலமையுடையவர்களென்பதால் அவர்களுக்கு எம்மொழியும் சம்மதமே. எனவே, அவர்களுக்காக நான் பல மொழிகளில் கவிதையெழுதுவதுண்டு. ஆனால் எல்லா வாசகர்களையும் ஒரே மாதிரி எடை போட்டு விடக்கூடாது. ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்தன்மையுண்டு. அந்தத் தனித்தன்மையை மதிக்காவிட்டால் என் கவிதை அவர்களிடம் செல்லுபடியாகாது. ஆகவே, ஒவ்வொரு வகையினருக்கும் தனித்தனியாகக் கவிதையெழுதுவேன். அவர்களனைவரும் நிறைவடைந்தாலே எனக்கு மகிழ்ச்சி.

கவிதையெழுதுவதற்கு நேரம் காலம் கிடையாதென்பார்கள். அது எனக்கும் பொருந்தும். எனது முழு நேரத்தொழிலுக்கு மத்தியில் கள்ளத்தனமாகக் கவிதையெழுதுவது, கிளர்ச்சி ஏற்படுத்தக்கூடிய ஒரு அனுபவம் - ஒரு கள்ளக் காதலியுடன் சரசமாடுவதைப் போல். அதேபோல் நடுநிசியில் தூக்கம் கெட்டுக் கவிதை எழுதுவதும் ஒரு சுகமான அனுபவம்தான். கண்கள் தூக்கத்தில் தானாக மூடிக்கொள்ள, மனமோ அகலமாய் விழித்துக் கொண்டு, கவிதை வரிகளை விரல் நுனிகளுக்குச் செலுத்திக் கொண்டிருக்கும் அந்தப் போராட்ட நிலையை உணர்ந்தாலன்றி விவரிக்க இயலாது. பேசாமல் கவிதை எழுதுவதையே முழு நேரப்பணியாகக் கொண்டிருக்கலாம். ஆனால் அப்போது கவிதை மீது இவ்வளவு நாட்டம் வந்திருக்குமா என்பது சந்தேகமே. 'வயிற்றுப் பிழைப்புக்கு வேறு தொழிலிருக்க, மனநிறைவுக்காகக் கவிதை' என்பதே சிறந்த ஏற்பாடாகும்.

சில சமயம் இந்தக் கவிதை எழுதுவதால் சலிப்பேற்படுவதுமுண்டு. சொல்ல விரும்பும் கருத்தை சரியான வகையில் சொல்வதற்குள் தாவு தீர்ந்து விடும். என்னதான் முயன்று பார்த்தாலும் சரியான சொற்பிரயோகங்கள் தட்டுப்படாமல் திணற வைத்துவிடும். அவ்வப்போது முழு நிறைவில்லாவிட்டாலும் கவிதையை ஒப்பேற்றி விடுவதுண்டு. அழகியலை மட்டும் பார்த்துக் கொண்டிருக்காமல், கவிதையின் இறுதி இலக்கிற்கு முன்னுரிமை அளித்து இவ்வாறு இத்துயரத்தை முடித்துக் கொள்வதுண்டு. ஒரு கவிதை அதன் முடிவை அடைந்தே தீர வேண்டும் என்று நாமே ஒரு எதிர்பார்ப்பை உருவாக்கிக் கொண்டு விடுவதால் ஏற்படும் நிலைமை இது. ஒரு முடிவுறாதத் தொடராகக் கவிதை நீண்டு கொண்டே போகுமானால், வாழ்வின் அத்துனை ரகசியங்களையும் அது வெளிக் கொணர்ந்து விடுமோ என்னவோ. ஆனால் அதற்கெல்லாம் மனிதப் பிறப்புகளான நமக்குப் பொறுமையிருப்பதில்லை.

நான் எழுதும் கவிதைகள் பெரும்பாலான மானிடர்களுக்குப் பிடிப்பதில்லை. பெரும்பாலும், அவை monitorகளுக்கு மட்டுமே. :) நான் அண்மையில் எழுதிய சில கவிதைகளின் தொகுப்பை இங்கே காணலாம்.