பண்பாட்டுப் புண்ணாக்குகளையெல்லாம் ஓரங்கட்டிவிட்டு, உடனடியாக இந்தச் செய்தி நம் கோடிக்கணக்கான மக்களைச் சென்றடைய வேண்டிய அவசர நிலையில் இன்று நாம் இருக்கிறோம். செய்தி இதுதான் - "பாதுகாப்பாகவே உடலுறவு கொள்ளுங்கள்; சுத்தமான (போதை மருந்து) ஊசிகளையே பயன்படுத்துங்கள்".
இது, எல்லா 'முரசு'களிலும், 'தந்தி'களிலும், Todayகளிலும், Timesகளிலும், 'மலர்'களிலும் (last but not the least, வலைப்பதிவுகளிலும்) தண்டோரா போட்டு அறிவிக்கப்பட வேண்டிய செய்தி. நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள், இசைக் கலைஞர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், ஓவியர்கள், விளையாட்டு வீரர்கள், ஆளும் கட்சித் தலைவர்கள், எதிர் கட்சித் தலைவர்கள், சாதிக் கட்சித் தலைவர்கள், மதக் கட்சித் தலைவர்கள், கோவில் குருமார்கள், பாதிரியார்கள், மௌல்விகள், பிக்குகள், பேராசிரியர்கள், கல்லூரி முதல்வர்கள், மாணவர் சங்கத் தலைவர்கள், வானொலி / தொலைக்காட்சித் தொகுப்பாளர்கள், வர்த்தக முதலாளிகள், தொழிற்சங்கத் தலைவர்கள் என்று தம்மால் பல்லாயிரக் கணக்கான மக்களை வழிநடத்தக்கூடிய நிலையிலிருப்பவர்கள் அனைவரும் இச்செய்தியை விரைவாக அவர்களது audienceசுக்கு எடுத்துச் செல்லக் கடமைப் பட்டிருக்கிறார்கள். இச்செய்தி உடனடியாக கல்லூரிகள் / பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகள், உழைப்பாளர்கள், அலுவலகப் பணியாளர்கள், ரசிகர்கள், வாசகர்கள், தொண்டர்கள், வழிபாட்டாளர்கள், காவல்ப்படையினர், ராணுவத்தினர், வாடிக்கையாளர்கள், சேவகர்கள், பாலியல் தொழிலாளர்கள், குடும்பப் பெண்கள் என்ற அனைத்துப் பிரிவினருக்கும் தெரிவிக்கப்பட வேண்டிய ஒன்று. செம்மொழி, செம்மையல்லாத மொழி, சைகை என்று அனைத்து வகையான தொடர்பாடல் முறைகளாலும் சாதனங்களாலும் இச்செய்தி அனைவருக்கும் போர்க்கால அடிப்படையில் வலியுறுத்தப்பட வேண்டும். இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என்றால், முதியோர்களையும் குழந்தைகளையும் தவிர்த்து மற்ற நடுவயதினர் அனைவரும் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனைகளில் இறந்து கொண்டோ இறந்து விட்டோ இருக்கும் ஒரு ஆப்பிரிக்க நாட்டின் நிலைமைக்கு நாமும் நாளடைவில் தள்ளப்படுவோம், என்பதுதான் இன்றைய அச்சுறுத்தும் யதார்த்தம்.
ஒருபுறம் பாதுகாப்பற்ற உடலுறவையே கடைபிடிக்கும் லாரி ஓட்டுனர்களாலும் பாலியல் தொழிலாளர்களாலும் எய்ட்ஸ் வெகு வேகமாகப் பரவுவது ஒரு கவலை கொள்ள வைக்கும் செய்தி என்றால், மறுபுறம் போதைப் பழக்கமுடையவர்கள், தங்கள் விலையுயர்ந்தப் பழக்கத்திற்குத் தீனி போடுவதற்காக உடலை விற்று, இந்த இரு செயல்களிலும் எச்சரிக்கையைக் கடைபிடிக்காமல் இரு வகைகளிலும் நோயைப் பரப்புவது அதைவிடத் துயரமான செய்தி. இப்படிப் பல்வேறான காரணங்களால், அதிர்ச்சியளிக்கும் வேகத்தில் இன்று பலரும் எய்ட்ஸ¤க்கு மாறிக்கொண்டிருக்கிறார்கள் ("அப்ப நீங்க?" என்ற கேட்கக் கூடாத கேள்வியை விட்டு விடுவோம்)
விரக்தியடையச் செய்யும் இச்செய்தியை உள்வாங்கியதன் அறிகுறியாக........ குறைந்தது......... பண்பாட்டுச் சுவர்களுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டு முகத்தில் அறையும் உண்மைகளை ஏற்க மறுக்கும் நாடகத்தனத்தையாவது தவிர்ப்போம்.
தமிழ்ப்பதிவுகள்
3 கருத்துகள்:
உங்க வலைப்பதிவைப்பற்றி இன்று தினமலரில் வெளியாகி இருக்கிறது நண்பரே..
தினமலர் அறிவியல் ஆயிரம் பகுதியில் டாட்காம் என்கிற தலைப்பின் கீழ் உள்ளது.
பாராட்டுக்கள்
நானும் கவனித்தேன், ரசிகவ். உங்கள் வருகைக்கும் தகவலுக்கும் பாராட்டுக்கும் நன்றி :)
//பண்பாட்டுச் சுவர்களுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டு முகத்தில் அறையும் உண்மைகளை ஏற்க மறுக்கும் நாடகத்தனத்தையாவது தவிர்ப்போம்.
//
VOW,
மிகச் சரியாகச் சொன்னீர்கள் !
கருத்துரையிடுக