சனி, மே 28, 2005

மாணிக்கம் Mark் ஆனக் கதை

மாணிக்கம், மணிபாரதி என்று பகற் பொழுதில் பெயருடையவர்கள் இருட்டியபின் Markஆகவோ Michaelஆகவோ மாறும் அதிசயத்தைக் கண்டதுண்டா? Jekyll் & Hyde நாவலில் வருவது போல் இவர்கள் விசேஷ திரவமெதையும் பருகுவதில்லை. பொறுப்புடன் தத்தம் அலுவலகங்களுக்குச் செல்கின்றனர், அவ்வளவே. இங்குதான் நடைபெறும் அவர்களது பெயர் மாற்றம். ஏனென்றால் இவர்கள் வேலை செய்வது Call் centers் எனப்படும் அழைப்பு மையங்களில். இவர்களது வேலை அமெரிக்காவிலிருக்கும் வாடிக்கையாளர்களைத் திருப்தி படுத்துவது - அவர்களது பிரச்சனைகளுக்குத் தீர்வளிப்பது, அல்லது அவர்கள் எழுப்பும் வினாக்களுக்கு சரியான விடையளிப்பது, அல்லது அவர்களை அழைத்து அவர்கள் செலுத்த வேண்டிய பணம் ஏதாவது இருப்பின், அது குறித்து நினைவுபடுத்துவது. இதற்கு இவர்களுக்குக் கிடைக்கும் சம்பளம் மற்ற (அறிவுபூர்வமான?) வேலைகளில் கிடைப்பதைவிட அதிகமாதலால், பலரும் விரும்பி ஏற்றுக் கொள்ளும் வேலைவாய்ப்புக்களே இவை.

சாதகமாகத் தோன்றும் இச்சூழலில் பாதகமான சில விஷயங்களுமுண்டு. முதலாவதாக, இவர்களது பணிநேரம் - அமெரிக்கப் பகற் பொழுதுக்கேற்றவாறு, (இந்திய நேரப்படி) இரவு நேரங்களிலேயே இவர்கள் பணி செய்தாக வேண்டும். மருத்துவமனைகள், காவல் நிலையங்கள் போன்ற அத்தியாவசிய சேவைகள் பலவற்றிலும் மாற்றுநேரங்கள் கடைபிடிக்கப் பட்டாலும், இப்படி ஆயிரக்கணக்கான பணியாளர்கள் (அதிலும் பெண்கள்) ஒவ்வொரு நாளும் இரவுநேரப் பணி செய்துகொண்டிருப்பது நாம் இதுவரை கண்டிராத ஒன்று. இதனால் ஏற்படும் உடல் மற்றும் மனப் பாதிப்புகள் நாளடைவில்தான் வெட்டவெளிச்சமாகும். தூக்கமின்மை, மகப்பேற்றில் சிக்கல்கள், மனத் தளர்வு, இல்லற வாழ்வில் குழப்பங்கள் என்று இதுவரை கிடைத்த அறிகுறிகள் எதுவும் நம்பிக்கையூட்டுவதாக இல்லை. இதனோடு வேலைப்பளூ அதிகரிப்பு, கண்காணிப்பு என்று சில நிறுவனங்களின் சுரண்டல் மனப்பான்மை வேறு. 'மூச்சா' போக விடாமல் தொலைபேசி அழைப்புகள் வந்த வண்ணமிருக்குமென்று ரெடிஃப் வலைதளத்தில் ஒரு பணியாளர் புலம்பியிருந்தார்.

பிறகு நம் பாணியில் ஆங்கிலம் பேசினால் அமெரிக்கர்களுக்குப் புரியாதாம். ஆகவே, accent neutralization என்றொருக் கூத்து வேறு. எனக்குத் தோன்றும் கேள்வி: பிரிட்டிஷ்ஷாரோ அல்லது ஆஸ்திரேலியர்களோ அல்லது கனேடியர்களோ பேசும் ஆங்கிலமும் அமெரிக்கர்களுக்கு வித்தியாசமான ஒரு மொழிதான். அமெரிக்காவிலேயே வடக்கு, தெற்கு, கறுப்பு, வெள்ளை என்று பேச்சின் லயம் பேசுபவரைப் பொறுத்து மாறுபடுகின்றது. இவ்வாறிருக்க, நாம் ஏன் நம் பேச்சை அவர்களுக்கேற்றவாறு மாற்றிக்கொண்டு அவர்களை மகிழ்விக்க இப்படிப் பாடுபட வேண்டும்? அமெரிக்காவுக்கு சேவைகள் வழங்கும் மேற்கூறிய நாடுகள் இவ்வாறுதான் செய்கின்றனவா? அல்லது நமக்குத்தான் அளவுக்கு மீறிய தாழ்வு மனப்பான்மையா? அமெரிக்கர்களை 'உறுத்திவிடக்கூடாது' என்ற அக்கறை நமக்கிருப்பதைப் போல், அவர்களுக்கெதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. அப்படியேதேனும் இருந்திருந்தால் இப்படிக் குர்ஆனை flush out செய்திருக்க மாட்டார்கள். Guess i'm digressing.....

இவையனைத்தையும் விட என்னைக் கொதிப்படையச் செய்த விஷயம் இந்தப் பெயர் மாற்றல்தான். நம் பெயர்கள் என்னவாயிருந்தால் அவர்களுக்கென்ன வந்தது? அவர்களுக்குத் தேவை, நம் சேவை. அவதியுற்ற நேரத்தில் நம் உதவி. எழுந்த சந்தேகங்களுக்கு நம் விடைகள். இவையனைத்தும் அடிமட்ட விலையில். அவற்றை அளிப்பவர் ராமபத்ரனாக இருந்தாலென்ன, மாடசாமியாக இருந்தாலென்ன? ஆனால், இல்லை......... நம் அடிமை மனப்பான்மையானது அதிலும் புகுந்து அமெரிக்கனுக்கு எவ்வாறு மேலும் மேலும் வளைந்து வளைந்து கொடுப்பது என்று ஆய்வு நடத்தியதன் விளைவே ராமலிங்கம் Robertஆகவும், ஜெயலட்சுமி Jenniferராகவும் உருமாறிய நிலை. சுயமரியாதை என்னும் உன்னதமான ஒரு குணத்தை சில டாலர்களுக்காகக் காற்றில் பறக்க விட்ட எனது தாயகம் இந்தியா வாழ்க! ஒளிமயமான உன் எதிர்காலத்தை ஆவலுடன் எதிர்நோக்கியிருக்கும் கோடிக்கணக்கான இந்தியர்களின் American Dream நனவாக, முன்கூட்டியே நான் தெரிவிக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுகளும்.

சனி, மே 14, 2005

காஜி

இது தனித் தமிழா என்று தெரியாது. ஆனால் விடலைப் பருவத்தில் விளையாட்டு மைதானங்களில் இது ஒரு இன்றியமையாத சொல்லாகும். விரிவாக சொல்ல வேண்டுமென்றால், மட்டையைப் பிடித்துக் கொண்டு, எல்லார் கவனமும் தன் மீதிருக்க, அதிவேகமாக வீசப்படும் பந்தை, அதைவிட வேகமாக, எத்திசையில் வேண்டுமானாலும் திருப்பியடித்து, எல்லாரையும் பரபரப்புடன் ஓட வைத்து, தானும் பரபரப்புடன் அங்குமிங்கும் ஓடி ஓட்டங்களை குவித்து, கூச்சல் கும்மாளங்களுக்கொரு காரணியாகி, ஒரு உன்னதமான இன்பத்தில் திளைத்திருக்கும் வாய்ப்பே 'காஜி' எனப்படுவது (to be pronounced 'gaaji' as per சென்னை செந்தமிழ் standards).

இது எளிதில் கிடைக்கக் கூடிய ஒரு வாய்ப்பன்று. முதலில் மைதானத்தின் விளிம்புகளில், வேகும் வெய்யிலில், கால் கடுக்க, மணிக் கணக்காக நின்று கிடக்க வேண்டும். அந்தப் பக்கம் வருகின்ற பந்தை சரியாக தடுத்து, சரியான திசையில் திருப்பி வீசியெறிய வேண்டும். 'தேவி'னாலோ, 'தடவி'னாலோ, விளிம்பிலேயே கிடக்க வேண்டியதுதான். அங்கிருந்து கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறினால், மைதானத்தின் நடுப்பகுதிகளுக்கு உயர்வு பெறும் சாத்தியங்கள் உண்டு. ஆனால், பதவி உயர்வுடன் பொறுப்புகளும் அதிகரிக்கும். உதாரணம், அப்போது காஜி அடித்துக் கொண்டிருப்பவர் மட்டையால் பந்தை அடிக்க, அது காற்றிலிருக்கும் போதே அதைத் தாவிப் பிடித்து, அவரிடமிருந்து காஜியை பறிமுதல் செய்வது, போன்ற சாகசங்களை நிகழ்த்த வேண்டும். அவ்வாறெல்லாம் செய்தபின், முற்றிலும் தகுதியானவரே என்று சந்தேகத்துக்கிடமின்றி நிருபணமானபின், உங்களுக்கும் காஜி அடிக்கும் வாய்ப்பு கிடைக்கும். முதல் சில முறைகளில் காஜி வந்த வேகத்திலேயே பறிக்கப்பட்டு விடும், கவனமாக ஆடாவிட்டால். காஜி பறிபோவதைப் போல் ஒரு கொடுமை வேறெதுவும் இருக்க முடியாது.

இவ்விடத்தில் காஜியைக் குறித்த மைதான தர்மங்களைப் பற்றி குறிப்பிட்டே ஆகவேண்டும். "காஜி அடித்தால் காஜி கொடு" என்பது எழுதப் படாத ஒரு தர்மமாகும். "காஜி கொடுப்பவரில்லையேல் காஜி அடிப்பவரில்லை" என்ற கசப்பான உண்மையை கணக்கில் கொண்டே இந்த தர்மம் கடைபிடிக்கப் பட்டு வருகிறது. இதன்படி, முதலில் காஜி அடித்த அணியினர், பிறகு எதிரணியினருக்கு காஜி கொடுக்கத் தவறக் கூடாது. நேரமாகிவிட்டது, இருட்டிவிட்டது போன்ற சப்பைக் கட்டுகளைக் காரணம் காட்டி காஜி கொடுக்காது நழுவினால், 'ஓசி காஜி' அடித்ததாகத் தூற்றப்படுவார்கள், "காஜி அஷ்டு ஓட்றாங்கடா" என்று அநியாயம் செய்தவர்களாகக் கண்டுகொள்ளப் படுவார்கள். ஆகவே, இருந்து காஜி கொடுத்து விட்டே, வீட்டுக்குச் செல்லவேண்டும், வீட்டில் தாமதமாக வந்ததற்கு வாங்கிக் கட்டிக் கொள்ளும் அபாயமிருந்தாலும்.

இன்னொரு சட்டம் 'last man காஜி' என்பது. இது (என்னைப் போன்ற) கத்துக்குட்டிகள் இடம்பெறும் அணிகளில் மிகவும் அத்தியாவசியமான ஒன்று. ஒரு அணியின் கடைசி இரு ஆட்டக்காரர்களில் ஒருவர் ஆட்டமிழந்தாலும் மற்றவர் தொடர்ந்து காஜி அடிக்கலாம் என்ற சலுகையே இது. கத்துக்குட்டி ஒருவரால் மற்றவரின் காஜி பறிபோகாமல் இருக்க வழி செய்யவே இந்த ஏற்பாடு. இரு அணியினரும் ஆட்டத்தைத் தொடங்கு முன்னரே 'last man் காஜி' உண்டா இல்லையா என ஒரு ஒப்பந்தத்துக்கு வந்து விடுவார்கள், பிறகு பிரச்சனைகள் வரவேண்டாமேயென்று.

ஓவர்களின் (over) கடைசி பந்தில் 1, 3 என்று ஒற்றைப் படை எண்களாக ஓட்டங்களை எடுத்து, அடுத்த ஓவரையும் தானே சந்திக்கும் வாய்ப்பைத் தக்க வைத்துக் கொள்வது 'ஓவர் காஜி' எனப்படும். தொடர்ந்து 'ஓவர் காஜி' அடித்து சக ஆட்டக்காரரின் வெறுப்பை சம்பாதித்துக் கொள்ளும் பேர்வழிகளும் உண்டு. காஜிதான் நட்பை விடவும் மேலாயிற்றே!

திங்கள், மே 09, 2005

தமிழ்க் கணிமைக்காக ஒரு Firefox Extension

எந்த அளவுக்கு பயன்படும் என்று போகப் போகதான் தெரியும், எனினும் நான் முயன்று தயாரித்த ஒரு Firefox Extension இதோ. (zip file உருவில் உள்ளது. Unzip செய்து உள்ளிருக்கும் .xpi fileஐ Firefoxஇன் "Open file" கட்டளை கொண்டு திறந்தால், extension நிறுவப்பட்டு விடும்.) இதன் செயல்பாடு பின்வருமாறு:

நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் ஒரு தமிழ் வலைபக்கத்திலிருந்து ஏதாவது ஒரு கலைச்சொல்லைத் தேர்வு / தெரிவு செய்து வலது-சொடுக்கல்(right-click) செய்தால், கிடைக்கப் பெறும் 'மெனு'வில் 'Tamil Wikipedia Search' என்றொரு வசதியிருப்பதைக் காணலாம். அதனை இயக்கினால், நீங்கள் தேர்வு செய்த சொல்லுக்கான தமிழ் விக்கிப்பீடியா பக்கம் இன்னொரு Tabஇல் திறக்கும். அதற்கு முன்பு, கீழே காட்டப் பட்டுள்ளதைப்போல் ஒரு உரையாடல் பெட்டி திறந்து, உங்கள் தேர்வை ஒரு முழுமையான, ஒருமையான சொல்லாக மாற்றியமைக்கக் கோரும்.்



உ-ம், 'சிலப்பதிகாரத்தில்', 'சிலப்பதிகார' போன்றவைகளை 'சிலப்பதிகாரம்' என்று மாற்ற வேண்டும். 'காடுகள்', 'மலைகள்' ஆகியவற்றை ஒருமைக்கு மாற்ற வேண்டும். அவ்வாறு செய்தால் உங்கள் தேடல் வெற்றி பெறும் வாய்ப்புகள் அதிகம். இ-கலப்பை இருந்தால் இத்தகைய மாற்றங்களை எளிதில் செய்யலாம்.

மேற்கூறிய உரையாடல் பெட்டி கொண்டு இன்னொரு தந்திரமும் செய்யலாம். தேர்வு செய்த சொல்லுக்கு முன் 'en:' என உள்ளிடப் பட்டால்்டால், உங்கள் தேர்வுச் சொல் ஆங்கில விக்கிபீடியாவில் தேடப்படும். எனவே, நீங்கள் இதே extensionஐக் கொண்டு ஆங்கில வலை பக்கங்களிலும் விக்கிபீடியா தேடல்களை நிகழ்த்தலாம். Isn't it cool?

இன்றைய நிலையில் பெருவாரியான பக்கங்கள் தமிழ் விக்கிபீடியாவில் காலியாக உள்ளன. பலரும் இந்த செயல்பாட்டைக் கொண்டு தேடலில் ஈடுபட்டால் அதுவே பக்கங்களை நிரப்ப ஒரு ஊந்துதலாக இருக்கலாமென நம்புகிறேன். வலைப்பதிவர்களும் மற்ற இணைய படைப்பாளிகளும் ஆழ்ந்த கருத்தாக்கங்களை உருவாக்கும் பட்சத்தில், அவர்கள் பயன்படுத்திய அரிய சொற்களுக்கான ் விளக்கம் விக்கிபீடியா தளத்தில் இருக்கிறதா என இந்த வலது-சொடுக்கல் முறை கொண்டு ஒரு முறை சோதித்து, இல்லையென்றால் அதனை சேர்ப்பார்களேயானால் அது தமிழ் சமூகத்துக்கு ஆற்றும் தொண்டே ஆகும். இவ்வாறு சிறு துளிகள் பெரு வெள்ளமாகும்போது, நம் கிராமங்களிலும் , சிறு நகரங்களிலும் தமிழ்வழிக் கல்வி பயிலும் மாணவ மாணவியருக்கு ஒரு அறிவுப் பொக்கிஷத்தை உருவாக்கியவர்களாவோம்.

பயன்பாட்டில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் தயங்காமல் கேளுங்கள், என்னாலான உதவியை செய்கிறேன். இதனை மொஜில்லாவுக்கும் (update.mozilla.org) சமர்பித்திருக்கிறேன். பரிசோதித்துப் பார்த்து, பிறகு சேர்த்துக் கொள்வார்களென நம்புகிறேன்.

வெள்ளி, மே 06, 2005

மாமனிதர் ராமர் பிள்ளை

முதற்கண் எனது மறுப்புரையை(disclaimer?) வாசித்து விடுகிறேன். தமிழ்மணத்தில் பல மாமனிதர்களை சிலாகித்து வந்துகொண்டிருக்கும் பதிவுகளால் ஊந்தப் பட்டு இதனை எழுதுகிறேன். அதனால் மேற்கூறிய மாமனிதர்கள் அனைவரும் ஒரே வகையைச் சேர்ந்தவர்கள் என்று பொருள் படும்படி என் பதிவு தோன்றுமானால் அதற்கு நான் பொறுப்பல்ல. மற்றபடி, இதே ரீதியில் இன்னும் நூற்றுக்கணக்கான பதிவுகள் எழுதப்படலாம் என்று நான் கருதுவதால், எனது இந்தப் பதிவு அவைகளுக்கு ஒரு template / சட்டகமாகப் பயன்படுமானால் மிகவும் மகிழ்ச்சியடைவேன். இப்பொழுது பதிவிற்குச் செல்வோம்.

ஏட்டுச் சுரக்காய் கறிக்குதவாதென்று பள்ளிப் படிப்பைத் துக்கியெறிந்த ஒருவரின் கண்டுபிடிப்பு, உலகெங்குமுள்ள பல மேதைகளை கலங்கடித்தது ஒரு மாபெரும் செய்தி. அத்தகைய சாதனையைப் படைத்தவர்தான் ராஜபாளையம் அருகிலுள்ள ஒரு கிராமத்திலிருந்து வந்த திரு.ராமர் பிள்ளை அவர்கள். மூலிகைகளை தண்ணிரில் சமைத்து அவற்றை எரிய வைத்த பெருமை அவரையே சேரும். உலகப் புகழ் வாய்ந்த அறிஞர்களும் விஞ்ஞானிகளும் அதனைக் கண்டு செய்வதறியாது பரிதவித்த நிலையை எழுத்துக்களால் விளக்க முடியாது. Wesley Bruce என்ற மேற்கத்திய விஞ்ஞானி திரு. பிள்ளை அவர்களை இவ்வாறு போற்றியிருக்கிறார். ரத்னா சௌத்திரி என்ற IIT விஞ்ஞானியோ "காற்றிலிருக்கும் carbon dioxideஐ இந்த மூலிகைச் சமையல் உறிஞ்சுகிறது போலும்" என்று தமக்கு தோன்றிய விளக்கத்தை அளித்து கௌரவித்தார். மத்திய அரசின் விஞ்ஞான மற்றும் நுட்பவியல் துறையின் செயலர் திரு.ராமமூர்த்தி அவர்கள், "நாம் ஒரு மிகப் பெரிய கண்டுபிடிப்பின் மீது உட்காந்து கொண்டிருகிறோம் என்பதில் சந்தேகமேயில்லை" என்று அறுதியிட்டுக் கூறினார். IIT - சென்னையிலுள்ள பொறியாளர்கள் சோதித்துப் பார்த்து, பெட்ரொலை விட திரு. பிள்ளை அவர்களின் எரிபொருளே சிறப்பாக உள்ளது என்று சான்றிதழ்கள் அளித்தனர். தமிழக அரசும் ஆந்திர அரசும் போட்டி போட்டுக் கொண்டு அவரை சிறப்பித்தன. நாடெங்கிலும் அவருக்கு விழா எடுத்துப் போற்றினார்கள்.

அவர் கடை பிடித்த செய்முறையைப் பார்ப்போம். சமையல் குறிப்பு பாணியில் கொடுத்தால் பொருத்தமாக இருக்குமென நினைக்கிறேன். ஒரு சட்டியில் நீர் நிரப்பிக் கொள்ளவும். பிறகு, உங்களுக்குத் தோன்றிய மூலிகைகளையும் சருகுகளையும் அதில் போட்டு வேக வைக்கவும். ஒரு கொதி வந்தவுடன் இறக்கி வைத்துவிட்டு அதில் உப்பு, கொஞ்சம் மிளகு, வாசனைக்கு கறிவேப்பிலை, போனால் போகிறதென்று கொஞ்சம் citric acid், வெளியுலகறியாத (சிதம்பர ரகசியமாயிற்றே?) சில ரசாயனப் தூள்கள் ஆகியவை சேர்த்து உடனிருக்கும் stirrerஆல் நன்றாகக் கலக்கவும். இதற்கு முன் stirrerரில் நீங்கள் செய்ய வேண்டியவை: அது hollowஆக, குழாய் போல் இருப்பது மிக முக்கியம். இந்த stirrerரின் கீழ்பாகத்தை மெழுகினால் அடைத்து மூடவும். பிறகு hollow்ஆனஆனஆனஆனஆ ஆன stirrerரை benzene, toluene போன்ற எரிபொருட்களால் நிறப்புங்கள். stirrerரின் இத்தகைய நிலை உங்களுக்கு மட்டுமே தெரிந்திருப்பது அவசியம். ஆகவே, அது உலோகத்தால் ஆனதாக இருக்கவேண்டும். ஏனென்றால் உள்ளே இருப்பது வெளியில் தெரியக் கூடாது. கொதிநீரின் சூட்டில் stirrerரை விட்டு கலக்கும்போது அடிபாகத்திலுள்ள மெழுகு உருகி, benzene, toluene ஆகியவை உங்கள் மூலிகைச் சமையலில் சென்று கலக்கும். ஆக்கப் பொறுத்த பின் சிறிது நேரம் ஆறப் பொறுத்தால் benzene, toluene ஆகியவை தண்ணிரின் மேல் மிதக்கும், தண்ணிருடன் கலக்காத தன்மையுடையதால். அவற்றை நிதானமாக தண்ணிரிலிருந்து பிரித்தெடுத்து விடுங்கள். பிறகு, அதனை மூலிகை எரிபொருள் என்று அறிவித்து IIT பொறியாளர்களை விட்டு சோதனையிடச் செய்யுங்கள். அவர்களும் உங்கள் எரிபொருளே பெட்ரொலை விட நன்றாக இருக்கிறது என்று சான்றிதழ் வழங்குவார்கள். இவ்வாறாக, எளிய முறையில் திரு. பிள்ளை அவர்கள் எரிபொருள் தயாரித்து அதனை 1 லிட்டர் 1 ரூபாய் என்ற அடிமட்ட விலைக்கும் விற்க முன்வந்தார். அவரது தாரள குணத்தைப் பாரட்டும் கண்ணியம் கூட நமக்கில்லை.

போகப் போக அவரை ஏமாற்றுக்காரர் என்று விஞ்ஞானிகளும் செய்தி நிறுவனங்களும் சொல்லடிகளாலேயே அழித்து விட்டார்கள். போதாக்குறைக்கு CBI வேறு அவரை கைது செய்து சிறையிலடைத்தது. தமிழகத்தில் பிறந்து மாமனிதராக இருந்துவிட்டாலேயே தொந்தரவுகள்தான் போலும். ஏன் தான் மாமனிதர்களை மாமனிதர்களாகவே விட்டு வைப்பதில்லையோ இந்த கேடு கெட்ட ஜனங்கள்.

புதன், மே 04, 2005

நம்பகக் கணிமை

இன்றைய உலகில் பாதுகாப்பு என்பதற்கு பல பரிமாணங்கள் உண்டு. உடல், பொருள், ஆவி (?) ஆகியவற்றைப் போல இன்று தகவலும் பாதுகாக்கப் பட வேண்டிய ஒரு சொத்தே ஆகும். கணிமை, இணையம் போன்ற நுட்பவியல்கள் ஏற்படுத்திய மாற்றங்களால் முக்கியத்துவம் வாய்ந்த தகவல்களுக்கு எந்நேரமும் ஆபத்துதான். ரகசியங்கள் அம்பலமாகலாம். அல்லது வைரஸ் செயலிகளால் கணினிகள் செயலிழந்து பேரிழப்புகள் ஏற்படலாம். இணையத் தீவிரவாதிகளின் தாக்குதல்களால் உங்கள் கணினியமைப்புகளும் இணையத்தளங்களும் நிலைகுலைந்து போகலாம். உங்கள் அறிவுப் பொக்கிஷங்கள் / சொந்த விஷயங்கள் தகாத நபர்களைச் சென்றடையலாம். இவ்வாறாக, உங்கள் தகவலுக்கு ஆபத்துக்கள் ஏற்படாமல் உறுதி செய்யப் பிறந்த நுட்பமே 'நம்பகக் கணிமை' ஆகும்............ என்று டை கட்டிய ஆசாமிகள் செமினார்களிலும் பட்டறைகளிலும் வந்து போதிப்பார்கள், மூளைச் சலவை செய்வார்கள். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், take it with a pinch of salt.

TCPA(Trusted Computing Platform Alliance) என்ற குழுமத்தை 1999இல் முன்னணி கணினி நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து நிறுவின. Compaq, HP, IBM, Intel, Microsoft ஆகியவை இதில் அடக்கம். இன்றோ அதில் 200க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் சேர்ந்து கொண்டுள்ளனர். இவர்கள் எல்லோரும் சேர்ந்து எவ்வாறு கணினியின் நம்பகத்தன்மையை உறுதி செய்கிறார்கள்? அது பற்றியே இந்தப் பதிவு. இது வெங்கட் ஒருமுறை தொட்டு விட்ட சமாச்சாரம் என்று Google தேடுபொறியின் வாயிலாக அறிகிறேன். இனி அவர் விட்ட இடத்திலிருந்து.............

கணினியுலகில் 'அடையாளம்' (அதாவது, பயனர் பெயர், கடவு சொல், போன்றவை) என்பது மிகவும் குறிப்பிடத் தக்கவொன்று. பல கருவிகளையும், செயலிகளையும் சேவைகளையும் இயக்குவதற்கு உங்கள் அடையாளம் மிகவும் தேவைப்படுகிறது. அது ஒருவகையான சாவியைப் போல. மூடப்பட்டிருக்கும் கதவுகளுக்கு திறவுகோலாகப் பயன் படுகிறது. அதே நேரத்தில் இரட்டை முனைக் கத்தியைப் போல் உங்கள் அடையாளமே உங்களைக் கண்காணிக்கவும் உபயோகப்படுத்தப் படலாம், படுகிறது. எந்தெந்த கதவுகளைத் திறந்தீர்கள், எங்கெல்லாம் உலா வந்தீர்கள், என்னவெல்லாம் செய்தீர்கள் எனப் பட்டியலிட்டுக் கூறவும் உங்கள் அடையாளம் தோதாக இருக்கிறது. இவ்வாறான துஷ்பிரயோகங்களால் உங்கள் அந்தரங்கம் மீறப்படுவது சாத்தியமே.

நம்பகக் கணிமையினர் செய்யப் போவது, எல்லாக் கணினிகளிலும் ஒரு மின் அடையாள அட்டையைப் பொருத்துவதே. இது ஏதோ சாமானியமான ஒன்றல்ல. 2048 bits கொண்ட தனித்துவமான எண்களால் ஆன இரட்டைச் சாவி ஆகும். (128 bitsஏ உடைக்க முடியாத ஒன்றெனக் கருதப் படும் நிலையில், 2048 bitsசைப் பற்றி எண்ணிப் பாருங்கள். வாழ்நாள் முழுதும் செலவழித்தாலும் உடைக்க முடியாது என்றே தோன்றுகிறது). கணினியிலுள்ள மின் தகடுகளில் பதிக்கப்பட்டு உங்கள் எல்லா செயல்களிலும், வணிக மற்றும் ஏனைய பரிமாற்றங்களிலும் அடையாள முத்திரையைப் பதிக்க வல்லவை. நீங்கள் இணையத்தில் அனுப்பும் தகவல்களை ஒரு முனையில் உருமாற்றம் செய்து பூட்டி, மறுமுனையில் பெறுனரால் திறக்கச் செய்பவை. இது நல்லதுதானே என்ற கேள்வி எழலாம். நல்லதே. ஆனால் இந்த நல்ல உபகரணம் எவ்வாறு பெரியண்ணன்களால் தீமை விளைவிக்கக் கூடிய ஒரு கருவியாகப் பயன்படும் வாய்ப்புள்ளது என்று பார்ப்போம்.

நம்பகக் கணிமை ஒரு சமூகமாக வளர்ந்து பலவகையான வன்/மென் பொருட்களும் 'நம்பகத்தன்மை' அடையும் தருவாயில், அவ்வாறு சார்பு நிலை பெறாத வன்/மென் பொருட்களை ஏனைய 'நம்பகமான' இயங்கு தளம் அல்லது வன்/மென் பொருட்கள் கொண்டு செயலிழக்கச் செய்யலாம். ஆக, விலையுயர்ந்த பொருட்களை கட்டாயமாக வாங்கிப் பயன் படுத்த வேண்டிய நிர்பந்ததுக்கு பயனர்கள் அனைவரும் ஆளாக வேண்டி வரும். மலிவு விலை மாற்றுக்களைத் தயாரிக்கும் சிறு வணிகங்களுக்கும், மென்பொருள் நிறுவனங்களுக்கும் மூடுவிழாதான். உ-ம், OpenOffice கொண்டு தயாரிக்கப் பட்ட ஒரு ஆவணம், 'நம்பகமானதல்ல' என்று வேறொரு 'நம்பகமான' கணினியால் / மென்பொருளால் நிராகரிக்கப்படும் ஆபத்தும் இருக்கிறது. அல்லது OpenOfficeஐயே நிறுவமுடியாமல் தடுக்கும் ஆற்றலையும் உரிமையையும் இந்த அடையாள ராஜ்ஜியம் அடையலாம். ஆக, கணிமையென்றாலேயே ஏதோ சில பெரிய பல்நாட்டு நிறுவனங்கள் தயாரித்த பொருடகள்தான் என்று ஆகும் நிலை வெகுதுரமில்லை.

மேலும் சில சாத்தியங்கள்: நம்பகத்தன்மை பெற்ற Media Playerகள் உங்கள் கணினியிலுள்ள ஒலி / ஒளிக் கோப்புகளை இயக்காதிருக்கலாம் அல்லது அவற்றை அடையாளமின்றி அழித்தும் விடலாம், அவை திருட்டுக் கோப்புக்கள் என்று (நேர்வழியில் நீங்கள் குறுந்தகடுகள் வாங்கி அவற்றிலிருந்து கணினியில் சேமித்திருந்தாலும், அல்லது காப்புரிமை இல்லாத படைப்புகளாக அவை இருந்தாலும் கூட). அல்லது நீங்கள் வாங்கும் ஒலி / ஒளிக் குறுந்தகடுகள், அடையாளமுள்ள உங்கள் கணினியில் மட்டுமே வேலை செய்யும். இரவல் கொடுக்கவோ, அல்லது நகல் எடுக்கவோ அனுமதியாது. அல்லது உங்கள் கணினியிலும் கூட சில முறைகள் மட்டுமே வேலை செய்யும். அதற்கு மேல் வேண்டுமென்றால் அதைத் தயாரித்த நிறுவனத்திற்கு அடிக்கடி காணிக்கை செலுத்த வேண்டுமென நிர்பந்திக்கலாம். உங்கள் இயங்கு தளத்தை ஒரு முறை வாங்கிய நிலை போய், மாதா மாதம் Microsoftடுக்கு சந்தா செலுத்த வேண்டிய நிலையும் ஏற்படலாம். இவ்வாறான வணிக தந்திரங்களை இந்த அடையாள நுட்பம் சாத்தியமாக்கலாம் (பயனர்களுக்கொரு நற்ச்செய்தி :) ). இதை விட ஆபத்தான விஷயங்களெல்லாம் கூட சாத்தியமே.

ரகசியங்கள் ரகசியங்களாகவே நிலைத்திருக்கும் சாத்தியமிருப்பதால் மோசடிகள் வெட்டவெளிச்சமாகாது போகும் நிலை உள்ளது. ஊழல்கள், சமூகவிரோத, சட்டவிரோத நடவடிக்கைகளைக் குறித்த ஆவணங்கள் ஆகியவை அம்பலமாகி பொதுமக்களின் பார்வைக்கு வரும் வாய்ப்பே இல்லாது, கேடுகெட்ட அரசுகளுக்கும் வணிக முதலைகளுக்கும் ஒரு இரும்புக் கவசம் வழங்கும் நுட்பமே இந்த நம்பகக் கணிமை. Bofors, Enron போன்ற சீர்கேடுகள் பாதுகாக்கப்பட்டு தலைவிரித்தாடும் ஒரு ஒளிமயமான எதிர்காலம்தான் போலும்.

நீங்கள் ஒரு சமூக விரோதியென்று உங்களை / உங்கள் எழுத்துகளை இணையத்தின் மூலை முடுக்குகளிலிருந்தும் அரவே அழித்துவிடும் ஆற்றலை உலக அரசுகளுக்குத் தங்கத் தாம்பாளத்தில் வழங்கும் கருவியே இந்த நம்பக(மில்லாத)க் கணிமை. இத்தகைய தணிக்கைவேலன்களால் உலகக் குடிமக்களுக்கு, அவர்களின் பேச்சுரிமைகளுக்குப் பேராபத்து நிகழ வாய்ப்பிருக்கிறதென்றே தோன்றுகிறது. மேலும் அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதால் அது எதிரியெனப் பாவிக்கும் அத்துனை நாடுகளின் கணினிகளையும் ஒரு பொத்தானைக் கொண்டு செயலிழக்கச் செய்யும் ஆற்றலையும் அது பெற வாய்ப்பிருக்கிறது. ஈராக்குடன் போர் மூண்ட போது அதன் ரேடியோ அலை வரிசைகளையும், மின்சார வசதிகளையும் தடை செய்தது நினைவிருக்கலாம். அதனைவிட பயங்கரமான விளைவுகளை உண்டாக்கக் கூடியதே, ஒரு நாட்டின் கணினிகளை ஒட்டுமொத்தமாக்ச் செயலிழக்கச் செய்வதென்பது.

பெரியண்ணனுக்குத் துணை போகும் இத்தகைய நுட்பங்களை அரவே ஒழித்துக்கட்ட பல நலன் விரும்பிக் குழுக்கள் போராடுகின்றன. அவற்றுக்கு எம் ஆதரவுகள்!