புதன், டிசம்பர் 16, 2009

ஷோபியானும் இந்திய ஏகாதிபத்தியமும் அதற்கு ஒத்தூதும் இந்திய ஊடகங்களும்

காஷ்மீரின் ஷோபியான் மாவட்டத்தில் நிலோஃபர், அஸியா என்ற இரு பெண்களின் மர்மமான மரணம் குறித்து பெரிய சர்ச்சை நிகழ்ந்து வந்தது. அது குறித்த விரிவான தகவல்கள் இங்கே. அந்த இரு பெண்களும் இந்திய ராணுவப் படையினரால் வன்புணரப்பட்டு கொலை செய்யப்பட்டதாக அம்மக்களிடையே வலுவான சந்தேகமும் அதை உறுதிப்படுத்தும் வகையிலான சாட்சியங்களும் கிடைத்திருக்கும் நிலையில், இந்த விசாரணை CBIயிடம் ஒப்படைக்கப்பட்டு அண்மையில் அதன் அறிக்கையும் வெளிவந்துள்ளது.

சடலங்களின் மீது காணப்பட்ட கழுத்தை நெரித்துக் கொன்றதற்கான தடையங்கள், வன்புணரப்பட்டதற்கான அறிகுறிகள் (semen traces ஆகியன) ஆகிய அனைத்தையும் ஒதுக்கித் தள்ளி விட்டு, அந்த இரு பெண்களும் மரணமடைந்தது வெள்ள நீரில் மூழ்கியதினால்தான் என்று முழுப் பூசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் வகையிலான ஒரு அறிக்கையை CBI வெளியிட்டுள்ளது. அந்தப் பெண்களின் சடலங்கள் ஒரு ஒடையிலிருந்து மீட்டெடுக்கப்பட்டது ஒரு வசதியான காரணமாக அமைந்து விட்டது, இத்தகைய கண்துடைப்பு அறிக்கையை வெளியிடுவதற்கு. எதிர்பார்த்த வண்ணமே, இத்தகைய கண்துடைப்பு முயற்சி / உண்மைக் குற்றவாளிகளை மூடி மறைக்கும் மோசடியை எதிர்த்து கலவரம் வெடித்துள்ளது காஷ்மீர் பள்ளத்தாக்கில். அதற்கு இந்திய ஊடகங்களின் எதிர்வினையும் எதிர்பார்த்த விதமாகவே அமைந்தது.

இந்த காட்சியைப் பாருங்கள். Denial or Mistrust? என்று பெரிதாக தலைப்பிட்டுக் கொண்டு, காஷ்மீர் மக்களின் இந்தக் கொந்தளிப்புக்கான காரணமே தங்களுக்கு விளங்கவில்லையே என்று பாசாங்கு செய்து கொண்டு, கூசாமல் புளுகிக் கொண்டிருக்கின்றனர். எட்டு மாதக் குழப்பத்திற்கு முற்றுப் புள்ளி வைப்பது போல் இருக்கிறதாம் CBIயின் அறிக்கை. அதை அப்படியே ஏற்றுக் கொள்ளாமல் அதை வைத்து அரசியல் செய்து கொண்டிருக்கின்றனர் பிரிவினைவாதிகள் என்று வெட்கமில்லாமல் CBIயின் கேடு கெட்ட செயலுக்கு சான்றிதழ் வழங்கிக் கொண்டிருக்கின்றன நமது ஊடகங்கள். இன்னொரு தொலைக்காட்சியான Times Now சானலோ, இன்று தீவிரவாதிகள் படுகொலை செய்த ஒரு பெண்ணைப் பற்றி ஒளிபரப்பி, "இதையும் கண்டிப்பார்களா பிரிவினைவாதிகள்? அவர்களின் நேர்மை இதோ சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது" என்று சிறுபிள்ளைத்தனமான கூச்சலில் ஈடுபட்டுள்ளது. கயர்லாஞ்சி அட்டூழியத்திற்கும், 26/11 பயங்கரத்திற்கும் ஒரே அளவுகோல் கொண்டுதான் உங்கள் சானலில் எதிர்ப்பு தெரிவித்தீர்களா? என்று கேட்க வேண்டும் போலிருந்தது.

மேலே உள்ள NDTV நிகழ்ச்சியில் உண்மை பேசிய ஒரே ஒருவர், ஒரு பெண்ணுரிமை அமைப்பைச் சார்ந்த ஒரு பெண்தான். இறந்து போன இரு பெண்களையும் வெள்ளம் வந்து அடித்துக் கொண்டு போனதாகச் சொல்லப்படும் அந்த ஓடையில் எப்போதும் கணுக்காலளவுக்குதான் தண்ணீர் ஓடுமாம். அத்தகைய ஓடையில் மூழ்கிச் சாவது எவ்வாறு என்ற நியாயமான கேள்வியை எழுப்பினார் அந்தப் பெண். அதை உர்றென்று கேட்டுக் கொண்டிருந்த பிரேம் ஷங்கர் ஜா என்ற நாட்டுப்பற்றுச் செய்தியாளர் (Outlookஐச் சேர்ந்தவர்?), "ஆமாம், ஆனால் திடுதிப்பென்று வெள்ளம் வருவதற்கான வாய்ப்புள்ளது. பனிமலைகள் உருகுவதால் அவ்வாறு ஏற்படக்கூடும்" என்று காதில் பூச்சுற்றும் வேலையில் இறங்கினார்.

ஜனநாயகத்தின் தூண்கள் என்று விவரிக்கப்படும் ஊடங்களின் உண்மை முகம், இந்தியாவைப் பொறுத்த வரை, இதுதான். அநீதிக்குத் துணைபோவது, உண்மைகளை மூடி மறைப்பது, நியாயமாக எழும் சந்தேகங்களை / எதிர்ப்புகளை சிறுமைப்படுத்துவது...... தூ! என்று காறி உமிழ வேண்டும் போலுள்ளது.

திங்கள், அக்டோபர் 19, 2009

ப. சிதம்பரம்

கொடுக்கப்படும் மனுக்கள் எல்லாமே இறுதியில் போய் சேருமிடம் குப்பைத் தொட்டிதான் என்ற நியதியிலிருந்து சற்றும் மாறாமல், இப்போதும் இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட நம் பாராளுமன்ற உறுப்பினர்களின் அறிக்கைகள் இறுதியில் நம் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திடம்தான் சமர்ப்பிக்கப் பட்டுள்ளது. அதைப் பெற்றுக் கொண்டு அவர் தெரிவித்தது - "ஏற்கனவே இலங்கைக்கு ரூ.500 கோடி பொருளுதவி உறுதியளிக்கப்பட்டுள்ளது. வேண்டுமானால் மேலும் 500 கோடியை அனுப்புவது குறித்து ஆலோசிக்கலாம்" என்பதே. தமிழர் பகுதிகளில் சிங்களர்களைக் குடியமர்த்துவது பொருளாதாரக் காரணங்களால் சற்று தொய்வடைந்திருந்ததாம். இந்தக் கூடுதல் உதவி கொண்டு அந்தப் பணி துரிதப் படுத்தப் படுமென நம்புவோம்.

ஒருவர் காலடி எடுத்து வைக்கும் இடமெல்லாம் உருப்படாமல் போவதற்கு சிறந்த உதாரணம் இந்த ப.சிதம்பரம். இந்தியப் பொருளாதாரத்தை சீர்குலைத்ததில் பெரும் பங்கு, என்ரான் ஊழலில் பெரும் பங்கு... என்று பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. ஒரு இந்தியனாக உணர்வதையே நிறுத்தியிருந்த காலக்கட்டத்தில் இவரை இந்திய நாட்டின் உள்துறை அமைச்சராக நியமித்த போது ஒரு குரூர சந்தோஷமே ஏற்பட்டது. நினைத்த வண்ணமே நிகழ்வுகளும் நடந்தேறிக் கொண்டிருப்பதைக் காண்கையில் கூடுதல் மகிழ்ச்சியே. எப்படியோ, இரும்பு மனிதர் பட்டேல் ஒருங்கிணைத்த இந்த நாடு, சில பிளாஸ்டிக் மனிதர்களால் சிதறுண்டு போவது குறித்து அதிகம் கவலைப்படும் நிலையில் இப்போது இல்லை.

ஆனால், கொடூரமான வகையில் நமது சக மனிதர்கள் ஒடுக்கப்படுவதைக் குறித்து எந்தவொரு சலனமுமில்லாமல், அதை இடக்கையால் புறந்தள்ளுவதை ஒத்த எதிர்வினையை ஆற்றக் கூடிய மனிதர்களே நம் பிரதிநிதிகள் என்று அறியும்போது, (இது ஆணாதிக்கப் பார்வையே என்றாலும்) ஒரு ஆண்மையற்றவனாகவே உணர்கிறேன்.

வியாழன், செப்டம்பர் 24, 2009

பாக்யதா பளேகாரா - ஒரு இளமையைத் தேடும் முயற்சி

இப்போது தமிழ்த் திரைப்படங்களில் வர்ற பாடல்களையெல்லாம் கேக்க முடியவில்லை. உதாரணங்கள் எதுவும் தேவையில்லைன்னு நினைக்கறேன். இந்த 'நாக்கு மூக்கு' ரகப் பாடல்களையெல்லாம் நம்மளால எவ்வளவு காலத்துக்கு தாக்கப்பிடிக்க முடியும்ன்னு நம்ம இசையமைப்பாளர்கள் கணித்து வச்சிருக்காங்கங்கிற தகவல் தெரிஞ்சா நல்லா இருக்கும். (அதுக்குப் பிறகு தமிழ்ல பாட்டு கேக்க ஆரம்பிக்கலாம்). நல்ல வேளையா இரவு பதினொண்ணு மணிக்கு சன் மியூசிக் தொலைக்காட்சியில் 'நினைத்தாலே இனிக்கும்'ன்னு ஒரு நிகழ்ச்சி வருது (அதே பெயரில் அண்மையில் வந்திருக்கும் திரைப்படத்தைப் பற்றிச் சொல்லவில்லை - அதிலுள்ள பாடல்கள் ஜவுளிக் கடை விளம்பரப்பாடல்கள் ரகம்), இந்த நிகழ்ச்சியில் நம்ம காலத்து (அதாவது 70, 80களில் வந்த) பாடல்களையெல்லாம் போடறாங்க. அவற்றையெல்லாம் கேக்கும்போதுதான் ஒரு உன்னதமான கலை வடிவத்திற்கு ஏற்பட்டுள்ள அவல நிலையை நினைச்சி கவலையா இருக்கு.

அண்மையில் சானல் மாத்திக்கிட்டு இருக்கும்போது ஒரு கன்னட இசை சானல் கவனத்தை ஈர்த்தது. தொலைக்காட்சி மற்றும் சுவரொட்டிகளில் அடிக்கடி பார்த்திருக்கும் ஒரு கதாநாயகரும் (பெயர் சிவராஜ்குமார் என்று பிறகு தெரிந்து கொண்டேன்) கதாநாயகி நவ்யா நாயரும் ஒரு டூயட்டுக்கு ஆடிக்கிட்டு இருந்தாங்க. இசை என்னோட கல்லூரி நாட்களில் தமிழில் வெளிவந்தத் திரையிசையை ஒத்திருந்தது. திடிரென ஆண்குரலில் இளையராஜா! பாடலும் அட்டகாசமான இளையராஜாவின் படைப்பு போல இருந்தது. உடனே கூகிளாண்டவரை துணைக்கழைத்தேன். அப்புறம்தான் தெரிந்தது, அந்தப் பாட்டு, அது இடம்பெற்ற படம் (பெயர்: பாக்யதா பளேகாரா, பொருள்: ராசியான வளையல்காரர்?), எல்லாமே இளையராஜாவின் இசையில் வெளிவந்ததுன்னு. முதலில் நான் தொலைக்காட்சியில் கேட்ட பாடலை (செந்துள்ளி, செந்துள்ளி) தரவிறக்கம் செய்தேன். பல இணையத் தளங்களில் இந்தப் படத்தின் எல்லாப் பாடல்களையும் சிலாகித்து எழுதியிருந்ததைப் பார்த்ததால் மொத்த ஆல்பத்தையும் தரவிறக்கி சேமித்துக் கொண்டேன். (ஒரு தரவிறக்கும் தளம், பிற தளங்களும் உள்ளன)

எனக்குப் பிடித்துப் போன பாடல்கள் சிலவற்றைக் குறித்து சில வரிகள்:

1. பளேகாரா, பளேகாரா - ஒரு ராமராஜன் படப் பாடலைப் போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. ஆனால் கொஞ்சம் variations, tempo changes என்று நவீனப்படுத்தப்பட்டுள்ளது. கொஞ்சும் குரலில் ஷ்ரேயா கோஷல், அபஸ்வரமாக குனால் கஞ்சாவாலா.

2. செந்துள்ளி செந்துள்ளி - என்னை தொலைக்காட்சியில் ஈர்த்த பாடல் இதுதான். அழகான நவ்யா நாயர்(videoவில்), கிரங்கடிக்கும் இளையராஜாவின் rustic குரல். தொண்ணூறுகளில் வந்த 'ஆனந்தக் குயிலின் பாட்டு' என்ற 'காதலுக்கு மரியாதை' படப் பாடலை நினைவுப்படுத்துகிறது.

3. கல்லு கல்லெனுதா - அட்டகாசமான கன்னட folk பாடல், இவ்வளவு அழகான மொழியா என்று வியக்க வைக்கும் பாடல். இளையராஜாவுக்கு folk இசை பிறந்த வீட்டைப் போன்றது என்பதால் அசத்தி விடுகிறார்.

4. மது மகளு செலுவே - இதை போன்ற ஒரு பழைய இளையராஜாவின் தமிழ்ப் பாடலைக் கேட்டது போல் உள்ளது. உதித் நாரயணனின் கொடுமையான குரலிலிருந்து பாடலைக் காப்பாற்றுவது சித்ராவின் தேன் போன்ற குரலும் பின்னணி கோரஸ் பாடகிகளும். இசை, குறிப்பிடத் தேவையன்றி உயர்தரம்.

5. நன்னன்னே நோடுவனு ('என்னையே பாத்த்துக்கிட்டு இரு'ங்கிறாங்களா? ஆச, தோச :) ) - இதுவும் (மௌனராகம் வகையாறா) பழைய பாடல்களை நினைவுப்படுத்தும் ஒரு அற்புதமான டூயட் பாடல். இளையராஜாவும், ஷ்ரேயா கோஷலும் பாடியிருக்கிறார்கள்.

6. பாக்யதா பளேகாரா - இன்னொரு அழகான டுயட் பாடல், புது பாடகர்களால் பாடப்பட்டது.

மொத்தத்தில், தூங்க வைக்கக் கூடிய இனிமையான பாடல்கள் ராஜாவிடமிருந்து. தமிழகத்தில் பாயவேண்டிய காவிரி, கன்னட நாட்டை நோக்கிச் சென்று விட்டது, நம்மை நாக்கு மூக்கர்களின் தயவில் விட்டுவிட்டு.

திங்கள், ஜூன் 01, 2009

GMail பயனர்களுக்கான OpenID

தமிழ்மணம் பரிந்துரை நிரல் இப்போது OpenIDயைக் கேட்கிறது. பிளாக்கர்.காம் / வேர்ட்பிரஸ்.காம் பதிவு வைத்திருப்பவர்கள் தங்களது பதிவின் முகவரியையே OpenIDஆகப் பயன்படுத்தலாம் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். ஆனால் பதிவர் அல்லாதவர்கள் எந்த OpenID முகவரியைத் தருவது என்று (நான் உட்பட) பலரும் குழம்பிப் போயிருக்கிறோம்.

Yahoo mail பயனர்கள் பிரச்சனையின்றி http://username@yahoo.com என்ற முகவரியை வழங்கி தங்களது அடையாளத்தை உறுதி செய்து கொள்ளலாமென்று தெரிய வருகிறது. ஆனால் Gmail அத்தகைய வசதியைத் தராமல் கொஞ்சம் சிக்கலான வகையில் OpenID ஆதரவைத் தருகிறது. தமிழ்மணம் போன்ற ஒரு தளத்தில் நமது Gmail முகவரி மூலமாக OpenID சோதனையைத் தாண்டுவது எப்படி? அதற்கான செய்முறை கீழே வழங்கப்பட்டுள்ளது:
  • OpenID பயன்படுத்துவதற்கு முன்பு http://openid-provider.appspot.com/ என்ற தளத்திற்குச் சென்று 'login' சுட்டியைச் சொடுக்குங்கள். Google தளத்திற்கு redirect செய்யப்படுவீர். அங்கு, பயனர் விவரம் மற்றும் கடவுச் சொல்லை அளித்து login செய்யுங்கள்.(Google தளத்திற்கே சென்று login செய்வதால் இது முற்றிலும் பாதுகாப்பானது. Phishing போன்ற கவலைகளுக்கிடமில்லை)
  • மீண்டும் http://openid-provider.appspot.com/ பக்கத்திற்கே redirect செய்யப்படுவீர். ஆனால் இப்போது அப்பக்கத்தில் உங்களுக்கான OpenID முகவரி தரப்பட்டிருப்பதைக் காணலாம். (அது http://openid-provider.appspot.com/gmail-username என்ற உருவில் இருக்கும்)
  • இந்த முகவரியையே தமிழ்மணம் மற்றும் (OpenIDயைக் கோரும்) இதர தளங்களிலும் வழங்கி உங்கள் அடையாளத்தை உறுதி செய்து கொள்ளலாம்.

வெள்ளி, மே 29, 2009

சில தகவல்கள்

ஐ.நா. சபையின் மனித உரிமைகள் குழு இலங்கையில் நிலவும் மனித உரிமை நிலவரம் பற்றி விவாதிக்க ஒரு சிறப்புக் கூட்டம் (special session) ஒன்றைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றியது பற்றி தெரிந்திருக்கலாம். சில நாட்கள் முன்பு தமிழ் சசியின் வேண்டுகோளின் படி எல்லா உறுப்பினர் நாடுகளின் பிரதிநிதிகளுக்கும் மின்னஞ்சல் அனுப்பியதால், அந்த நிகழ்வில் என்னதான் நடந்ததுன்னு தெரிஞ்சிக்க ஆர்வமா இருந்தேன்.

அப்போது நடந்த உரையாற்றல்கள் எல்லாவற்றையும் கீழ்க்கண்ட சுட்டிகளில் காணலாம்:
இந்தத் தீர்மானத்தின் மீதான வோட்டெடுப்பு நிலவரம்:
ஆதரித்தவர்கள்(29): அங்கோலா, அசர்பைஜான், பஹ்ரைன், வங்காள தேசம், பொலிவியா, பிரேசில், பூர்கினா ஃபாஸோ, கேமரூன், சீனா, கியூபா, ஜிபூதீ, எகிப்து, கானா, இந்தியா, இந்தோனேசியா, ஜோர்தான், மடகாஸ்கர், மலேசியா, நிகராகுவா, நைஜிரியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், கதார், ருஷ்யா, சவுதி அரேபியா, சினிகல், தென் ஆப்பிரிக்கா, உருகுவே, மற்றும் ஜாம்பியா.

எதிர்த்தவர்கள்(12): பாஸ்னியா / ஹெஸகோவினா, கனடா, சிலி, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, மெக்சிகோ, நெதர்லந்து, சுலோவகியா, சுலோவனியா, சுவிட்சர்லந்து, மற்றும் இங்கிலாந்து.

நடுநிலை வகித்தவர்கள் (6): அர்ஜன்டினா, கேபான், ஜப்பான், மோரிஷியஸ், கொரியா மற்றும் உக்ரேன்.

இந்த முன்னெடுப்பு பத்தி அதிக நம்பிக்கை வைக்கா விட்டாலும், சில தகவல்கள் கூடுதல் கவனத்தைப் பெற்றது. அவற்றை எந்தவொரு வரிசைப்படுத்தும் இல்லாம பட்டியலிடுவதுதான் இந்தப் பதிவின் நோக்கம்.

  • முதலில் இந்தியா எடுத்த நிலைப்பாடு பற்றி (இந்த நாட்டுல வந்து பிறந்து தொலைச்ச பாவத்துக்காக, அதை முதலில் கவனிக்கத் தோன்றியது). நடைபெற்ற இனவழிப்பில் இந்தியா இலங்கைக்கு எந்த உதவியும் செய்யலன்னு பல முறை பல அதிகாரத் தரப்பிலிருந்தும் சொல்லப்பட்டு வந்தாலும் அதிலுள்ள நேர்மையின்மை வெளிப்படையாவே தென்பட்டுக்கிட்டு இருந்தது. இலங்கை தரப்பிலிருந்தே பல முறை 'எங்கப்பன் குதிருக்குள்ள இல்ல'ங்கிற மாதிரியான அறிக்கைகள் மூலமா இந்த உதவிகள் பற்றி வெட்ட வெளிச்சமாயிட்டு இருந்தது. மேற்கூறிய சிறப்புக் கூட்டத்தில் இரு வோட்டெடுப்புகள் நடைபெற்றதாம். அந்த இரு வோட்டெடுப்புகளிலும் இந்தியா இலங்கைக்கு ஆதரவா வோட்டளிச்சிருக்கு. நம்மைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் ஈனத் தலைவர்கள் இதுக்கு என்ன பதில் சொல்லப்போறாங்கன்னு இனிமேதான் பாக்கணும். அது மட்டுமில்லாம, மேற்கூறிய நிகழ்வில் இந்தியாவின் பிரதிநிதியான கோபிநாதன் அச்சங்குளங்கரை என்பவர் (மலையாளியா? மலையாளிகளே, எங்க மேல உங்களுக்கு அப்படி என்ன பாசம்? கடைசி வரை இருந்து கழுத்தறுக்கறீங்களே? :) ) தெரிவித்த கருத்துகளையும் கவனிக்க வேண்டியிருக்கு. அவர் கூறியது:
    "இந்த சிறப்புக் கூட்டம் கூட்டியதற்கான நோக்கமே சந்தேகத்திற்குரியதா இருக்கு. இப்போதுதான் இலங்கை மிகவும் கடினமா போராடி இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வந்திருக்கு. சர்வதேச சமூகம் அதற்கு துணையா இருந்து சமரசம், போரின் காயங்களை ஆற்றுவது போன்ற வகையில் பங்களிப்பதுதான் இப்போதைய தேவை. அதை விடுத்து, இலங்கையையே குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவது அரசியல் நோக்கங்களைக் கொண்டதாகும்"
    அப்படீன்னு நம்ம பிரதிநிதி உலக அரங்கில் போய் சொல்லிக்கிறாரு. :) (இங்க ஒரு 'ஜெய் ஹிந்த்' போட்டுக்கிறேன்) மேலும் அவர் சொன்னது,
    "non-state actors (அதாவது விடுதலைப் புலிகள்) செய்த மனித உரிமை மீறல்கள் குறித்தும் கேள்வி எழுப்பப் பட வேண்டும், அதற்கு சர்வதேச சமூகம் சற்றும் தயங்கக் கூடாது."

    (அப்படீன்னா state actors செய்த உரிமை மீறல்கள் பற்றி கேள்வியே கேக்கக் கூடாதுன்றாரா, சேட்டன்?)
  • சில நாட்களுக்கு முன்பு "நேபாளத்தில் நடந்த யுகப் புரட்சி", "நேபாளத்தில் நடந்த அதிசயம்" அப்படீன்னெல்லாம் சுய மைதூனப் பதிவுகள் வந்த வண்ணம் இருந்தன. அத்தகைய நேபாள நாட்டின் பிரதிநிதி தினேஷ் பட்டரை என்பவர் சந்தி சிரிக்கும் வகையில் கூறிய கருத்துகள் பின்வருமாறு:
    "விடுதலைப் புலிகளின் தீவிரவாதத்தின் தோல்வியை நேபாளம் வரவேற்கிறது. இது இலங்கையின் பன்முகத்தன்மை, ஒற்றுமை, நாணயம், போன்றவற்றுக்குக் கிடைத்த வெற்றியாகும். இலங்கை அதன் ஜனநாயகப் பாதையின் மீது வைத்திருக்கும் தணியாத நம்பிக்கையையும் உறுதியையும், மக்களின் அடிப்படை உரிமைகளை மதிக்கும் போக்கையும் நேபாளம் பாராட்டுகிறது."

  • வங்காள தேசம்: சில பல ஆண்டுகளுக்கு முன்பு ஏறத்தாழ இன்றைய ஈழத்தின் நிலையிலிருந்து அவலங்களைச் சந்தித்து, பிறகு பிரிவினை ஏற்பட்டு விடுதலையான ஒரு நாடு. அதன் வோட்டும் இலங்கையை ஆதரித்துத்தான். நெல்சன் மண்டேலா புகழ் தென் ஆப்பிரிகா - மிக மோசமான இன ஒடுக்குமுறையிலிருந்து ஒரு பத்து - இருபது ஆண்டுகளுக்கு முன்புதான் விடுதலை அடைந்த ஒரு நாடு. அதன் வோட்டும் இலங்கைக்கு ஆதரவாகவே அமைந்தது.

  • சீனா, ருஷ்யா, கியூபா, பாக்கிஸ்தான், இந்தோனேஷியா, மலேஷியா, எகிப்து, சவுதி போன்ற சர்வாதிகார நாடுகள் எப்படி ஒட்டளித்திருக்கும் என்று அனுமானித்திருந்ததால், அவற்றின் முடிவுகள் அவ்வளவாக வியப்பைத் தரவில்லை.

  • பின்காலனியாக்கம், மறுகாலனியாக்கம் என்றெல்லாம் பிதற்றும் அறிவுஜீவித்தன அரைவேக்காட்டுக் கருத்துரைகளைக் கடந்து நோக்கினால், ஒன்று தெளிவாகிறது. மனித உரிமைகளுக்காக சிறிதளவேனும் குரல் கொடுக்க முன்வரக் கூடிய நாடுகள் அனைத்தும் மேற்கத்திய நாடுகளே.

  • பொது மக்கள் மனித கேடயங்களா பயன்படுத்தப்பட்டாங்கன்னு எல்லாருமே சாமியாடி இருக்காங்க. அது பற்றிய விவாதங்களுக்குள்ள போக விரும்பல. ஆனா அதிகார அமைப்பில் இருந்திக்கிட்டு இப்படிப்பட்ட குற்றச்சாட்டை வைக்கும் இந்த நபர்கள் ஒரு கேடயமும் இல்லாமதான் உலவிக்கிட்டு இருக்காங்களா? z-security, y-securityன்னு தனது அதிகாரத்துக்கு உட்பட்ட எல்லா பாதுகாப்பு ஏற்பாட்டையும் செய்துக்கிட்டுதான் பாத்ரூம் கூட போகும் இத்தகைய நபர்கள், இத்தகைய குற்றச்சாட்டுகளை வைப்பதுதான் வேடிக்கை. ஒரு ஷூ கூட அவங்க மேல வந்து விழுந்து விடக்கூடாது, அல்லது ஒரு கறுப்புக் கொடி கூட அவர்களுக்கு முன்பு காண்பிக்கப் பட்டுவிடக் கூடாது என்றெல்லாம் முன்னேற்பாடு செய்து கொள்கிற அதிகார வர்க்கத்துக்கு இந்த குற்றச்சாட்டை வைக்க ஒரு தகுதியும் கிடையாது.

  • இந்த நிகழ்வுகளிலேயே உண்மையான அக்கறையோட பேசியவர்கள் தொண்டு நிறுவனங்களைச் சார்ந்தவர்கள்தான்னு தெரிய வருது. அம்னெஸ்டி (இதை அழகா தமிழ்ப்படுத்தி எங்கயோ படிச்சிருக்கேன், நினைவுக்கு வரல்ல), Human Rights Watch போன்ற அரசு சாரா (அல்லது நம் சேட்டனின் மொழியில் சொல்லணும்ன்னா, non-state actors) அமைப்புகளிலிருந்து பேசியவர்கள்தான் கொஞ்சமாவது உண்மையை பேசியிருக்காங்க போலயிருக்கு. அப்படீன்னா அரசு என்ற ஒழுங்குப்படுத்தப்பட்ட அமைப்பே மக்களின் உரிமையைப் பறிக்கும் / நசுக்கும் ஒரு இயக்கம்தானான்னு யோசிக்க வைக்குது. அரசுகளே இல்லாத ஒரு வருங்காலம் ஏற்படுமானால் அப்போதுதான் மனித உரிமைகள் கிடைப்பதற்கான சாத்தியங்கள் ஏற்படலாம்.

  • இது போன்ற நாடுகள் அங்கத்தினர்களா இருக்கும் வரை மனித உரிமைகள் எல்லாம் கானல் நீர்தான் என்பது இன்று ஈழத்தவர்களுக்கு மட்டுமில்லாம மனித சமுதாயத்திற்கே கிடைத்திருக்கும் ஒரு படிப்பினை ஆகும்.

ஞாயிறு, ஏப்ரல் 26, 2009

ஆபத்தான ஜெயா ஆதரவுப் போக்கு

ஜெயலலிதா தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு தெரிவிச்சி நிறைய பதிவுகள் வந்துக்கிட்டு இருக்கு. இரண்டு தினங்களுக்கு முன்புதான் அவரோட நேர்காணல் ஒன்றை ஒரு ஆங்கிலத் தொலைக்காட்சியில் (CNN-IBNன்னு நினைவு) பார்த்தேன். "இலங்கைத் தமிழர்கள் வேறு, புலிகள் வேறு", "பிரபாகரன் தீவிரவாதி கிடையாதுன்னு சொன்னதால கருணாநிதி மீது தேசியப் பாதுகாப்புச் சட்டம் பாய்ஞ்சிருக்கணும் / ஆட்சி கலைக்கப் பட்டிருக்கணும்", "அதைக் கேட்டுக் கொண்டு சோனியா காந்தி ஏன் அமைதி காத்துக்கிட்டு இருக்காங்க? அவங்க காங்கிரஸ் தலைவி கிடையாதா? ராஜீவ் காந்தியின் விதவை கிடையாதா?"ன்னெல்லாம் பேசியது எல்லார் மனதிலும் பசுமையா இருந்திக்கிட்டு இருக்கும்போதே அடுத்த நாள் அந்தர் பல்டி அடித்து தமிழ் ஈழக் கோரிக்கையை வைக்கறாங்க. அவங்க இதுக்கு முன்னாடி பேசிய "ஈழத் தமிழர்கள்ன்னு யாரும் கிடையாது, இலங்கைத் தமிழர்கள்ன்னுதான் இருக்காங்கன்னு" கண்டுபிடித்துத் தெரிவித்த கருத்துகளெல்லாம் கூட யாரும் மறந்திருக்க முடியாது. இது போன்ற குறுகிய காலத்திற்குள் தெரிவித்த எதிர்மறையான கருத்துகளே நிறைய இருக்கும்போது, அவரது ஆட்சிக்காலத்தில் ஈழத்தவர்களுக்கு கிடைத்த அவமதிப்பு (காண்க இன்றைய கானா பிரபாவின் பதிவு) போன்ற நிகழ்வுகளை எல்லாம் நாம் மறந்தாலும் ஈழத் தமிழர்கள் மறக்கமாட்டாங்க.

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்ன்னு ஒருத்தர் இலங்கைக்குப் போய் விடியோ பிடிச்சிக்கிட்டு வந்தாராம். அதைப் பாத்து இவங்க மனம் மாறினாங்களாம். தமிழகத் தமிழர்கள் இந்தப் பூச்சுற்றலுக்கெல்லாம் காதைக் காட்டிக்கிட்டு இருந்தாலும் ஆச்சரியமில்லை. (அதுதான் நடந்துக்கிட்டும் இருக்கு). ஈழம்ங்கிற தனி நாடு கோரிக்கையை இவங்க ஆதரிக்கறாங்களா, அப்படீன்னா அந்த கோரிக்கையை முன்வைத்துப் போராடும் விடுதலைப் புலிகளுக்கு இவங்க ஆதரவு தெரிவிக்கறாங்களான்னு விவரமா தெரியல. ஆங்கிலத் தொலைக்காட்சிகளில் இவங்க 'separate state' கோருவதா செய்தி வருது. அப்படீன்னா தமிழர்களுக்குன்னு ஒரு தனி மாநிலத்துக்குத்தான் இவங்க ஆதரவளிக்கறாங்களான்னு யோசிக்கத் தோணுது. (இவங்க வரும் நாட்களில் அப்படி ஒரு அந்தர் பல்டி அடிக்கவும் சாத்தியமிருக்கு) விடுதலைப் புலிகளை ஆதரிக்காம தனி ஈழத்துக்கு ஆதரவுங்கிற நிலைப்பாடு எடுக்கறவங்க எனக்கு ஆபத்தானவங்களாவே படறாங்க. மதில் மேல் பூனை போன்றவங்கதான் இவங்கல்லாம்.

தமிழக / புதுவைத் தொகுதிகள் நாற்பதும் இவங்க கையில் சிக்கும் நிலையில், அதைப் பயன்படுத்தி மத்தியில் ஆளும் கூட்டணியில் இடம் பிடிச்சிட்டு, பழையபடி (ஈழ விவகாரத்தைப் பொறுத்த வரை) முருங்க மரம் ஏறக்கூடியவங்களாதான் இவங்க எனக்கு தெரியறாங்க. தேசிய அளவில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெறும் போலத் தெரியுது. அப்போது தமிழகத்தில் அதிமுக கூட்டணி அதிக இடங்களைப் கைப்பற்றும் பட்சத்தில், அது பாஜகவின் இயல்பான கூட்டணிக் கட்சியா (கருத்தியல் / பாசிசம் போன்ற ஒற்றுமைகளின் அடிப்படையில்) அமைந்து விடும் வாய்ப்பிருக்கு. ஆக, அதிமுக கூட்டணிக்குக் கிடைக்கும் ஒவ்வொரு வெற்றியும் இந்துத்வாவுக்குக் கிடைக்கும் வெற்றியே. (மற்றும் ஈழப் போராட்டத்துக்குக் கிடைக்கும் தோல்வியே)

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருக்கும் அது சாதகமான நிலைமையாகவே இருக்கும்ன்னு எனக்குத் தோணுது.

வெள்ளி, பிப்ரவரி 20, 2009

போர்

கடைநிலைக் காவல் வீரருக்கும்
கடைநிலை வழக்கறிஞருக்கும்,
அதிகாரக் கைக்கூலியின்
சூழ்ச்சியின் பேரில்.

புலம்புகிறான் கைக்கூலி
தேசிய ஊடகங்களில், தன்
தேசியச் சார்பு நிலைப்பாட்டுக்குத்
தான் தரும் விலையென
(சொல்லாமல் விட்டது - அவனது
மாநில எதிர்ப்பு நிலைப்பாடு குறித்து)

ஊடகமும் ஆமோதிக்கிறது,
முட்டை எறிவைக்
கல்லெறிவெனத்
திரித்துக் கூறி.
எம் எழுச்சியை
உலகமே தூற்றட்டுமென.

கடைநிலைச் சமூகம்
குருதி தெறிக்கப் போர் புரிய,
இக்காட்டுமிராண்டித்தனத்தை
இவ்வுலகமே தூற்ற,
கள்ளச் சிரிப்புச் சிரிக்கிறது
பார்ப்பனியம்.
தன் சூழ்ச்சிக்கு
ஈடு இணையே
கிடையாதென...