ஞாயிறு, ஜூன் 03, 2007

தலைக்கவசம்

சில வருடங்களுக்கு முன் ஹைதராபாத் நகரிலிருந்த போது கட்டாய helmet சட்டம் அங்கு அமலுக்கு வந்தது. Helmet அணிந்து முன் பின் பழக்கமில்லாததால் ஒரே வெறுப்பாக இருந்தது. helmet அணிய விருப்பமில்லாமல் சில மாதங்கள் எனது இரு சக்கர வாகனத்தைப் பயன்படுத்தாமலேயே வைத்திருந்தேன். பிறகு கட்டாயத்தின் பேரில் helmetஐ வாங்கி பயன்படுத்தவும் ஆரம்பித்தேன். அவ்வளவு சுகமாக இருக்கவில்லை. இருந்தாலும், வாகன வசதி வேண்டி அதைப் பொறுத்துக் கொள்ள வேண்டியதாயிற்று. அந்தச் சட்டத்தின் காரணகர்த்தாவாகக் கருதப்பட்டவர் அப்போது ஹைதராபாத்தின் போக்குவரத்துத் துணைக் கமிஷனராக இருந்த திருமதி. தேஜ்தீப் கௌர் மேனன்.

அவர் இந்த அமலாக்கத்தைச் செயல்படுத்திய விதம் புதுமையானது. Helmet இல்லாமல் பிடிபடும் ஓட்டுனர்களை பிடித்துக் கொண்டு போய் ஒரு வகுப்பில் உட்கார வைத்து, அவருக்கு helmet அணிவதனால் என்ன பயன் என்று சுமார் ஒரு மணி நேரத்திற்கு விரிவுரை வழங்கப்படும். அந்த விரிவுரையைக் கேட்ட பின்னரே, பிடிபட்டவர் விடுவிக்கப்படுவார், ஆனால் அவருக்கு வேறெந்த அபராதமோ, தண்டனையோ விதிக்கப்பட மாட்டாது. இது ஒரு பரவலான jokeஆக அனைவராலும் பேசப்பட்டது. இந்த வகுப்பில் உட்காருவதற்கு பயந்தே அனைவரும் அவசர அவசரமாக helmet வாங்கி அணியத் தொடங்கினார்கள். Helmet எதிர்ப்புப் போராட்டங்களும் நடந்தன - எப்படியென்றால், பேருந்தில் செல்வதற்குக் கூட helmet அணிந்து கொண்டு இச்சட்டத்தை நக்கலடிப்பது போன்ற உத்திகளைக் கொண்டு. இது பற்றி ஈ-டிவி, மா-டிவியிலெல்லாம் பரபரப்பாக செய்திகள் வெளியாயின. பொதுமக்கள் பேட்டி எடுக்கப்பட்டார்கள். helmet அணிந்தால் தலை வலிக்கிறது, கழுத்து வலிக்கிறது என்றெல்லாம் சிறுபிள்ளைத்தனமாகப் புலம்பினார்கள். "ஓ, அப்படியா? உலகெங்கும் helmet அணிகிறார்களே, அவர்களுக்கு வராத தலைவலி, கழுத்து வலியெல்லாம் இவர்களுக்கு வந்து விட்டதா?" என்று தொலைகாட்சித் திரையில் தோன்றி பதிலடி கொடுத்தார் மேற்கூறிய துணை கமிஷனர். கடமையைச் செய்யும் காவலதிகாரிகள் தூக்கியடிக்கப் படுவதைப் போல், இப்போது அவர் எந்தத் துறையில் தூக்கியடிக்கப்பட்டுள்ளார் என்றுத் தெரியவில்லை. ஆனாலும், அவரது சிறப்பான பணிக்காக ஒரு சர்வதேச விருது கிடைத்த செய்தியை இங்கு காணலாம்.

வேண்டா வெறுப்புடன் அணிய ஆரம்பித்திருந்தாலும், பழக்கமாகிவிட்ட காரணத்தால் தொடர்ந்து helmetஐப் பயன்படுத்துகிறேன். பெங்களூருக்கு மாற்றல் ஆகி வந்த போது இங்கும் helmet கட்டாயமாக்கப்பட்டது. ஏற்கனவே பயன்படுத்திக் கொண்டிருந்ததால் பிரச்சனையில்லை. ஆனால் வேறொரு மாற்றம் நிகழ்ந்தது. முன்பு scooter ஓட்டிக் கொண்டிருந்ததிலிருந்து இப்போது bikeஇற்கு மாறியிருக்கிறேன். இந்த அனுபவம் புதிதென்பதால் கொஞ்சம் பழக்கமாவதில் பிரச்சனை இருந்தது. ஒரு முறை கடும் மழையில் இரவு 3 மணிக்கு அலுவலகத்திலிருந்து திரும்பிக் கொண்டிருக்கையில், எதிரே வந்த கார் கொஞ்சம் zig-zagஆக என்னை நோக்கி வர, அதனால் கலக்கமடைந்து நான் முன் பிரேக்கை அழுத்த, வண்டி சறுக்கிக் கொண்டு விழுந்தது. விழுந்த அந்த கணத்தில் எனது தலை நேராக சாலையில் போய் மோதியது. அன்று helmet அணிந்திருக்காவிட்டால் விளைவுகளை எண்ணிப் பார்ப்பதற்கே அச்சமாக உள்ளது. வேறெந்தச் சேதமுமின்றி எனது பயணத்தைத் தொடர்ந்தேன். அதே போல் மழை நேரத்தில் முன் பிரேக்கை அழுத்தி மேலும் இரு முறை சறுக்கி விழுந்திருக்கிறேன். கடைசி முறை ஏற்பட்ட அனுபவத்தை விரிவாக இவ்விடுகையில் விளக்கியுள்ளேன் :)

இப்போது தமிழகத்தில் கட்டாயத் தலைக்கவச நிபந்தனை அறிவிக்கப்பட்டு பின்னர் வாபஸ் பெறப்பட்டு விட்டதாக அறிகிறேன். அது பற்றி வலைப்பதிவுகளில் பல விதமான கருத்துகள் :) ஒரு இரு சக்கர மோட்டார் வாகனத்தில் பயணம் செய்ய helmet அவசியமே என்று எனக்குப் படுகிறது (அதன் வேகம், அதிகரிக்கும் விபத்துகள் / உயிரிழப்புகள், போன்ற காரணங்களால்). இந்த அடிப்படை ஒழுங்கை உறுதி செய்வதற்குக் கூட ஒருவர் பொது நல வழக்கு தொடுக்க வேண்டியிருக்கிறதே என்று நினைத்தால் விரக்தியாக உள்ளது. இப்போது அரசும் பின்வாங்கிக் கொண்டுள்ளது.

வாங்கிய helmetஐ என்ன செய்வது என்று குழம்பிப் போயிருப்பவர்களுக்கு ஒரு யோசனை: அதை நீங்கள் அணிந்து கொண்டு பாதுகாப்பாகவே பயணம் செய்யலாம். இந்த யோசனை உங்களுக்கே தோன்றியிருக்க வாய்ப்பிருக்கிறது. இருந்தாலும்..........