சனி, அக்டோபர் 25, 2008

Eelam for Indians, Indians for Eelam

ஈழப் பிரச்சனை குறித்து தமிழிலேயே பெரும்பாலும் விவாதிச்சிக்கிட்டு இருக்கோம். அதனால தமிழரல்லாதவங்களுக்கு இதப் பத்தி போதிய அளவு தெரியாம போகும் வாய்ப்பிருக்கு. அதிலும் நம்ம பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் ஆட்சியே கவிழக் கூடிய ஒரு முடிவை எடுக்கப் போறாங்க. அதற்கான காரணங்கள், பின்புலம் என்பதையெல்லாம் வெளியுலகுக்கு எடுத்துச் சொல்ல நமக்கு மவுண்ட் ரோட் மஹா விஷ்ணுங்கதான் இருக்காங்க. அவர்கள் வெளியிடப் போகும் நச்சுக் கருத்துகளுக்கு ஒரு மாற்றுப் பார்வையாகவாவது நம் கருத்துகளைப் பதிவது அவசியமாகிறது.

இத்தகைய நோக்கங்களோட ஒரு ஆங்கிலப் பதிவு எழுதியிருக்கேன். அதை இங்கே காணலாம். இந்தப் பிரச்சனை குறித்து தெளிவு பெற விரும்பும் தமிழரல்லாத நட்பு வட்டங்களுக்கு (நீங்கள் விரும்பினால்) இதை சுட்டலாம். உங்களோட மதிப்பிற்குரிய கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன.

திங்கள், அக்டோபர் 20, 2008

அழையா விருந்தினனாக......... ஈழம் குறித்த தொடர்பதிவுகளில்

தோழர் தூயாவின் தொடர் பதிவு அழைப்பு கவனத்தைக் கவர்ந்தது. நான் பெரும்பாலும் தொடர்பதிவுகளில் பங்கு பெறுவதில்லை. ஆனால் இதில் அழைக்காமலே பங்கு பெற வேண்டும் போலிருந்தது. ஆகவே, இதோ ஆஜராயிட்டேன் :) இனி, கேள்வி - பதில்கள்:

1. ஈழம் பற்றி உங்களுக்கு எந்த அளவிற்கு தெரியும்? அனுபவங்கள்?

கொஞ்சம் அதிகமாவே தெரியும்ன்னு சொல்லலாம். '83 கலவரங்கள் நடந்த சமயத்தில் நான் சென்னையில் பள்ளி மாணவனா படிச்சிக்கிட்டு இருந்தேன். எங்கள் பள்ளியிலும் எனது வகுப்பிலும் சில இலங்கைத் தமிழர்கள் வந்து சேர்ந்தாங்க. அவர்களோடு சேர்ந்து விளையாடிய (ஊர் சுற்றிய :) ) அனுபவங்கள் உண்டு.

ஒரு முறை நண்பர்களா சேர்ந்து மகாபலிபுரம் வரை (சென்னையிலிருந்து சுமார் 50 கி.மீ. இருக்கும்), சைக்களிலேயே போனோம். எங்கள் கூட்டத்தில் ஒருவர் ஈழத்தவர். அவருக்கு வழி நெடுக (அவரது ஈழத்தமிழைக் கேட்டு) பொதுமக்கள் காட்டிய அன்பு மறக்க முடியாதது. ஒரு இடத்தில் தண்ணீருக்காக நிறுத்தினோம். அப்போது பொது ஜனம் ஒருவர் கையில் கொய்யாப் பழம் வைத்திருந்தார் (தான் உண்பதற்காக). என்னோட ஈழ நண்பரைப் பார்த்ததும் கையிலிந்த பழத்தை அவருக்கு வழங்கினார். ஆனா நண்பர் தான் மட்டும் எப்படி சாப்பிடறதுன்னு அதை மறுத்து விட்டார். இவ்வாறாக, மக்களுக்கு இயற்கையாவே ஈழத்தவர்கள் மீது ஒரு பாசம் அந்த சமயத்தில் இருந்தது என்பதை நேரில் கண்டிருக்கிறேன்.

பிறகு, கல்லூரி படித்த போது, இந்திய 'அமைதி' படைக்கும் புலிகளுக்கும் போர் மூண்டு பிரச்சனை திசை திரும்பியது. அப்போது, திலீபன் என்ற ஈழத்து இளைஞர் (உண்மையிலேயே) சாகும் வரை உண்ணா விரதம் இருந்தார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிச்சி சில மாணவர்கள் துண்டுப் பிரசுரம் விநியோகிச்சாங்க. அதே சமயத்தில் இந்திய ஆங்கில ஊடகங்களில் புலிகள் அப்பாவி மக்களை மனிதக் கேடயங்களா (human shields) பயன்படுத்தறாங்க, அதனால நம் படையினருக்குப் பின்னடைவுன்னு பரவலா செய்தி வந்துக்கிட்டு இருந்தது. ஆனா அவைகளில் வராத பல செய்திகள் (இந்தியப் படையின் வல்வெட்டித்துறை அராஜகங்கள்) குறித்து கடந்த சில வருடங்களா இணையம் / வலைப்பதிவுகள் மூலமா தெரிஞ்சிக்கிட்டு இருக்கேன்.

எப்படியோ, ராஜீவ் கொலை, அதைத் தொடர்ந்த man-hunt (or is it witch-hunt?) வரலாறு காணாத வகையில் 29 பேருக்கு தூக்கு தண்டனை (அதைக் குறைத்து ஆயுள் தண்டனை ஆனதுன்னு நினைக்கறேன்), என்று தொடர் சம்பவங்கள் நடந்து, அதன் பிறகு ஈழம் குறித்து அவ்வளவா கவனம் செலுத்தவில்லை.

நார்வேயின் அமைதி முயற்சிகள் பற்றி கேள்விப்பட்டப்போ, எங்கயோ இருக்கும் Norwayயால் முடிந்தது அருகில் இருக்கும் நம்மால் முடியாமலிருக்குமான்னு தோணியது. 'கன்னத்தில் முத்தமிட்டால்' ஒரு விதத்தில் கவனத்தை மீண்டும் கொண்டு வந்ததுன்னு சொல்லலாம் (ஆனா, நிறைய பேர் இதை மறுப்பாங்கன்னு தெரியும்).

2. தமிழீழத்திற்கு உங்கள் ஆதரவு எந்த அளவிற்கு உண்டு?

காஷ்மீர், திபெத், பாலஸ்தீனம், ஆகிய நாடுகளைப் போலவே தமிழ் ஈழமும் ஒரு சுதந்திர நாடாக மலரும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது. அதையே நானும் வரவேற்கிறேன்.

3. ஈழத்து செய்திகளை ஆர்வத்துடன் படிப்பீர்களா? எங்கு படிப்பீர்கள்?

உண்மையைச் சொல்லணும்னா, ஆர்வத்தோடல்லாம் படிப்பது கிடையாது. ஈழத்தமிழை பேச்சாகவும், எழுத்து நடையிலும் படிக்கப் பிடிக்கும்.

4. அண்மையில் தமிழ்நாட்டிலிருந்து ஈழத்தமிழர்களுக்காக ஒலிக்கும் குரல்களை பற்றிய உங்கள் கருத்து என்ன?

மிகவும் தாமதமாக ஒலிக்கும் குரல்கள். விவேக்கின் வசனமான 'லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்தது'ன்னு நம்புவோம். மத்திய அரசியலில் இதனால் ஒன்றும் சாதிக்க முடியாவிட்டாலும், மக்கள் மத்தியில் இவை மனமாற்றம் ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்.

5. ஈழத்தில் தினம் தினம் செத்துக் கொண்டிருக்கும் எம் உறவுகளுக்கு சொல்ல விரும்புவது?

உணர்வுரீதியா - நம்பிக்கையைத் தளர விடாதீங்கன்னு சொல்லலாம். கவனமா இருங்கன்னு சொல்லலாம். புலம்பெயர்ந்தவர்களுக்கு, தொடர்ந்து உங்கள் பரப்புரையைச் செய்யுங்கள்ன்னு சொல்லலாம். முடிந்தவரை அதை ஆங்கிலத்தில், பிற உலக மொழிகளில் செய்யுங்கன்னு சொல்லலாம். இதுக்கு மேல சொல்றதுக்கு எனக்கு வேற எதுவும் தோணவில்லை.

பி.கு. - தொடர் பதிவு என்பதால் இதை விருப்பமுள்ளவர்கள் தொடரலாம்.

புதன், அக்டோபர் 15, 2008

என்னக் கொடும, சரவணன்?

பொருளாதார மேதைகள் மன்மோகன் சிங்கும், ப. சிதம்பரமும் (துணைக்கு மாண்டேக் சிங் ஆலுவாலியாவும்) ஆட்சி புரிந்து கொண்டிருக்கும் இந்தப் பொன்னாளில், பங்குச் சந்தை, பொருளாதாரம் எல்லாம் சரிஞ்சி போச்சு. அதுக்கு அவங்கதான் காரணம்ன்னு சொல்ல வரல்ல. (அவங்க என்ன செய்வாங்க பாவம்?) ஆனா, அத சரி செய்யறேன் பேர்வழின்னு மக்களோட வரிப்பணம் ரூ.80,000 கோடி (ரொம்ப சின்ன தொகையா படுதுல்ல?) திருப்பி விடப்பட்டிருக்கு (கேட்டா infusing funds into the systemமாம்). என்னவோ liquidity crisisன்னு பேசிக்கறாங்க. இந்த மாதிரி விவகாரங்களில் ஒரு சாமானியனை விட மோசம்தான் என்னோட அறிவு. Google (என்ன மாதிரி moronகளுக்குல்லாம் அது ஒண்ணதானே இருக்கு?) பண்ணி பாத்தா, வாங்கின (அல்லது முதலீடு செய்து தயாரித்துள்ள) பொருள விக்கமுடியாம போறதுதான் liquidity crisisன்னு தெரிய வருது. ரொம்ப நல்லதுங்க. இதுக்கு ரூ.80,000 கோடி இல்ல, அதுக்கும் மேலயே தாராளமா infuse பண்ணலாம்.

என்ன, கொஞ்சம் யோசிச்சி பாத்தா liquidity crisisல்லாம் நமக்குப் புதுசான்னு கேக்கத் தோணுது. கடனை வாங்கி விவசாயம் செய்யறான். பிறகு அறுவடைக்கு அப்பறம் விளைச்சலுக்கு விலையா, போட்ட பணம் கூட திரும்பக் கிடைக்க மாட்டேங்குது. அப்போ யாரும் liquidity crisis பத்தி பேசலையே? ரூ.80,000 கோடி எல்லாம் திருப்பி விடப்படல்லையே பாதிக்கப்பட்டவங்களுக்கு? இதுல தமாசு என்னன்னா பங்குச் சந்தை சரிவால mutual fundகளும் சரிஞ்சிருச்சாம். (என்ன ஆஸ்ச்சர்யம்?) அதை சரிகட்டறதுக்காக ரூ.20,000 கோடி infuse செய்யப்பட்டிருக்கு. Mutual fund என்பதே பங்குச் சந்தை செயல்பாட்டைப் பொருத்ததுதான். தொலைக்காட்சியில் mutual fund விளம்பரத்தைப் பார்த்தா, அதில் வேக வேகமா ஒரு disclaimerஐ படிப்பாங்க. அது என்னன்னா, "Mutual fund investments are subject to market risks. Investors are requested to read the offer documents carefully before investing" என்பதுதான். ஆக, சேவை வழங்குனர்களுக்கு நன்றாகவே தெரிந்த ஒரு சாத்தியம், அவர்களும் அவர்களது முதலீட்டாளர்களுக்கு சரியாக எச்சரிக்கை செய்து தயார்படுத்திய ஒரு நிகழ்வு, உண்மையில் நிகழ்ந்துவிட்டது. இதுக்கு ஏன் அரசாங்கம் 20,000 கோடியை infuse செய்யணும்? அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு பணத்தை FDயில் போடாமல் risk எடுத்திருக்கும் முதலீட்டாளர்களுக்கு அரசு ஏன் மக்கள் வரிப்பணத்தில் பாதுகாப்பு வழங்க வேண்டும்?

இப்படி மக்கள் (அல்லது அவர்களில் ஒரு சிறு பகுதியின்) நலன் காக்கும் அரசின் நடவடிக்கையை வரவேற்காம நான் ஏன் கேள்வி கேக்கறேன்னு தோணலாம். நாடு முழுக்க விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட போதோ, இல்ல சுனாமி வந்தப்பவோ, இல்ல பீஹாரில் வெள்ளம் வந்து கோடிக்கணக்கான மக்கள் வீடுகளையும் உடைமைகளையும் இழந்த போதோ, எவ்வளவு ஆயிரம் கோடி liquidity infuse பண்ணப்பட்டதுன்னு தெரியல. ஆனா இப்பொ, IT துறையை ஒத்த டாம்பீகத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் நிதித் துறையின் நலன் காக்க, மாத சம்பளக் காரரகளிடமிருந்து திரட்டப்பட்ட வரிப்பணம் (தண்ணியாக) செலவாகிக் கொண்டிருக்கறது. அப்பொன்னா, மக்கள் நலன் என்பதெல்லாம் அதில் ஒரு சிறு பகுதியினருக்குதான் (நிதி, வர்த்தகத் துறையினர்களுக்குத்தான்) பொருந்துமா? என்னக் கொடும, சரவணன்?

ஞாயிறு, அக்டோபர் 12, 2008

Caravanserai

எண்பதுகளில் கல்லூரியில் படிச்சவங்க, அதுவும் மேற்கத்திய இசை பரிச்சயம் உள்ளவங்களுக்கு Carlos Santanaவை தெரியாம இருக்காது. அவரோட Black magic woman ரொம்ப பிரபலம். மற்ற பாடல்களும்தான். முஸ்தஃபா...... முஸ்தஃபா....... பாட்டு கேட்டிருப்பீங்க 'இசைப்புயல்' ஏ.ஆர். ரஹ்மானோட இசையில். அதோட மூலம் Santanaவின் Esperando என்ற பாடல்தான். அவரோட Oye como va, Open Invitation, Soul Sacrifice, Jingo போன்ற பாடல்களையும் நீங்க எங்கயாவது கேட்டிருக்கக் கூடும் (இசைப்புயல் / வெள்ளங்களின் திரைப்பாடல்களாவோ, அல்லது தொலைக்காட்சி விளம்பரங்களாவோ). Santanaவோட பெரும்பான்மையான பாடல்கள் இது போன்ற radio-friendly (அதாவது, 'வெகுசன ரசனைக்கேற்ற'ன்னு தமிழ்ல சொல்லலாம்) எனப்படும் வகையைச் சார்ந்தவை. அந்தக் காரணத்தினாலயே தீவிர இசை ரசிகர்கள் மத்தியில் இத்தகைய பாடல்கள் பெரு மதிப்பைப் பெறுவது கிடையாது. ஆனா இதுக்குல்லாம் விதிவிலக்கா ஒரு ஆல்பம் தந்திருக்காரு Santana. அவ்வளவா பிரபலமடையாத அந்த ஆல்பத்தின் பெயர்தான் Caravanserai. அதைப் பற்றிய அனுபவப் பகிர்வுதான் இந்த பதிவு.

ஒரு பாலைவனத்தில் caravan ஒன்றுடன் பயணம் செய்வது போன்ற உணர்வை ஏற்படுத்துவதுதான் இந்த இசைத் தொகுப்பின் நோக்கம். எதுக்கு பாலைவனத்தில் பயணம் செய்யணும்ன்னெல்லாம் கேக்க மாட்டீங்கன்னு நம்பறேன் :) ஒரு தனியறையில் வேண்டிய 'வசதிகள்' செய்து கொண்டு இத்தகைய பயணங்களை மேற்கொள்வது எல்லா வகையிலும் பயன் தரக்கூடும் :) ஒரு பாடல் தொகுப்பு என்ற உணர்வே ஏற்படாமல், முதலிலிருந்து இறுதி வரை ஒரே பாடலைக் கேட்பது போன்ற ஒரு உணர்வை வலுவாக ஏற்படுத்துகிறது இந்த இசைத்தட்டு. இது போல் இருப்பதை concept album என்பார்கள். ஒரு பொது கருத்துடன் எல்லா பாடல்களும் பொருந்தி வருவது போல் இருக்கும்.

இசை என்பது கருவிகளில் / குரலில் காட்டும் மேதமை என்பதைக் கடந்து, ஒரு அனுபவம், ஒரு உணர்வு, ஒரு ஆழ்மனப் பரிமாற்றம் (subconscious communication) என்ற தளங்களிலிருந்து அணுகினால் இந்த இசைத் தொகுப்பு ஒரு இணையற்ற விருந்தாக அமையக்கூடும். ஒரு மாதிரிக்காக ' பேரண்டத்திலுள்ள எல்லா அன்பும்' (All the love of the Universe) என்ற தலைப்பு கொண்ட இந்தப் பாடலை இங்கே இணைத்திருக்கிறேன்.



(பாடலின் climax கட்டம் கொஞ்சம் விடுபட்டுவிட்டது :) ஒட்டகங்களின் நாலு கால் பாய்ச்சலை முழுமையாக அனுபவிக்க முடியாததற்கு வருந்துகிறேன்)

குறிப்பட்டுச் சொல்லணும்னா, guitar, bass மற்றும் drumsஇன் இடைவிடாத உரையாடல்கள், மற்றும் மொத்தத்தில் அதன் காலத்தை வென்ற தன்மை (timelessness), ஆகியன இந்தத் தொகுப்பை மற்ற இசைத்தட்டுகளிலிருந்து வேறுபடுத்தும். Radio-friendly பாடல்களே பெரும்பாலும் பரிச்சயமானவர்கள் இந்த இசைத் தொகுப்பை அணுகும்போது ஒரு முழு விருந்துக்கு தயாராகச் செல்லுங்கள். மனரீதியாக என்ன எதிர்வினைகளை ஏற்படுத்தும் என்பதைச் சொல்ல முடியாததால், இதைத் தனிமையில் கேட்பது சிறந்தது.

பி.கு. - இது போன்ற நல்ல இசை பற்றிய பகிர்வுகளை இந்தத் தளத்தில் சேகரித்து வருகிறேன். விரும்பினால் அங்கேயும் வருகை தாருங்கள்.