வியாழன், செப்டம்பர் 24, 2009

பாக்யதா பளேகாரா - ஒரு இளமையைத் தேடும் முயற்சி

இப்போது தமிழ்த் திரைப்படங்களில் வர்ற பாடல்களையெல்லாம் கேக்க முடியவில்லை. உதாரணங்கள் எதுவும் தேவையில்லைன்னு நினைக்கறேன். இந்த 'நாக்கு மூக்கு' ரகப் பாடல்களையெல்லாம் நம்மளால எவ்வளவு காலத்துக்கு தாக்கப்பிடிக்க முடியும்ன்னு நம்ம இசையமைப்பாளர்கள் கணித்து வச்சிருக்காங்கங்கிற தகவல் தெரிஞ்சா நல்லா இருக்கும். (அதுக்குப் பிறகு தமிழ்ல பாட்டு கேக்க ஆரம்பிக்கலாம்). நல்ல வேளையா இரவு பதினொண்ணு மணிக்கு சன் மியூசிக் தொலைக்காட்சியில் 'நினைத்தாலே இனிக்கும்'ன்னு ஒரு நிகழ்ச்சி வருது (அதே பெயரில் அண்மையில் வந்திருக்கும் திரைப்படத்தைப் பற்றிச் சொல்லவில்லை - அதிலுள்ள பாடல்கள் ஜவுளிக் கடை விளம்பரப்பாடல்கள் ரகம்), இந்த நிகழ்ச்சியில் நம்ம காலத்து (அதாவது 70, 80களில் வந்த) பாடல்களையெல்லாம் போடறாங்க. அவற்றையெல்லாம் கேக்கும்போதுதான் ஒரு உன்னதமான கலை வடிவத்திற்கு ஏற்பட்டுள்ள அவல நிலையை நினைச்சி கவலையா இருக்கு.

அண்மையில் சானல் மாத்திக்கிட்டு இருக்கும்போது ஒரு கன்னட இசை சானல் கவனத்தை ஈர்த்தது. தொலைக்காட்சி மற்றும் சுவரொட்டிகளில் அடிக்கடி பார்த்திருக்கும் ஒரு கதாநாயகரும் (பெயர் சிவராஜ்குமார் என்று பிறகு தெரிந்து கொண்டேன்) கதாநாயகி நவ்யா நாயரும் ஒரு டூயட்டுக்கு ஆடிக்கிட்டு இருந்தாங்க. இசை என்னோட கல்லூரி நாட்களில் தமிழில் வெளிவந்தத் திரையிசையை ஒத்திருந்தது. திடிரென ஆண்குரலில் இளையராஜா! பாடலும் அட்டகாசமான இளையராஜாவின் படைப்பு போல இருந்தது. உடனே கூகிளாண்டவரை துணைக்கழைத்தேன். அப்புறம்தான் தெரிந்தது, அந்தப் பாட்டு, அது இடம்பெற்ற படம் (பெயர்: பாக்யதா பளேகாரா, பொருள்: ராசியான வளையல்காரர்?), எல்லாமே இளையராஜாவின் இசையில் வெளிவந்ததுன்னு. முதலில் நான் தொலைக்காட்சியில் கேட்ட பாடலை (செந்துள்ளி, செந்துள்ளி) தரவிறக்கம் செய்தேன். பல இணையத் தளங்களில் இந்தப் படத்தின் எல்லாப் பாடல்களையும் சிலாகித்து எழுதியிருந்ததைப் பார்த்ததால் மொத்த ஆல்பத்தையும் தரவிறக்கி சேமித்துக் கொண்டேன். (ஒரு தரவிறக்கும் தளம், பிற தளங்களும் உள்ளன)

எனக்குப் பிடித்துப் போன பாடல்கள் சிலவற்றைக் குறித்து சில வரிகள்:

1. பளேகாரா, பளேகாரா - ஒரு ராமராஜன் படப் பாடலைப் போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. ஆனால் கொஞ்சம் variations, tempo changes என்று நவீனப்படுத்தப்பட்டுள்ளது. கொஞ்சும் குரலில் ஷ்ரேயா கோஷல், அபஸ்வரமாக குனால் கஞ்சாவாலா.

2. செந்துள்ளி செந்துள்ளி - என்னை தொலைக்காட்சியில் ஈர்த்த பாடல் இதுதான். அழகான நவ்யா நாயர்(videoவில்), கிரங்கடிக்கும் இளையராஜாவின் rustic குரல். தொண்ணூறுகளில் வந்த 'ஆனந்தக் குயிலின் பாட்டு' என்ற 'காதலுக்கு மரியாதை' படப் பாடலை நினைவுப்படுத்துகிறது.

3. கல்லு கல்லெனுதா - அட்டகாசமான கன்னட folk பாடல், இவ்வளவு அழகான மொழியா என்று வியக்க வைக்கும் பாடல். இளையராஜாவுக்கு folk இசை பிறந்த வீட்டைப் போன்றது என்பதால் அசத்தி விடுகிறார்.

4. மது மகளு செலுவே - இதை போன்ற ஒரு பழைய இளையராஜாவின் தமிழ்ப் பாடலைக் கேட்டது போல் உள்ளது. உதித் நாரயணனின் கொடுமையான குரலிலிருந்து பாடலைக் காப்பாற்றுவது சித்ராவின் தேன் போன்ற குரலும் பின்னணி கோரஸ் பாடகிகளும். இசை, குறிப்பிடத் தேவையன்றி உயர்தரம்.

5. நன்னன்னே நோடுவனு ('என்னையே பாத்த்துக்கிட்டு இரு'ங்கிறாங்களா? ஆச, தோச :) ) - இதுவும் (மௌனராகம் வகையாறா) பழைய பாடல்களை நினைவுப்படுத்தும் ஒரு அற்புதமான டூயட் பாடல். இளையராஜாவும், ஷ்ரேயா கோஷலும் பாடியிருக்கிறார்கள்.

6. பாக்யதா பளேகாரா - இன்னொரு அழகான டுயட் பாடல், புது பாடகர்களால் பாடப்பட்டது.

மொத்தத்தில், தூங்க வைக்கக் கூடிய இனிமையான பாடல்கள் ராஜாவிடமிருந்து. தமிழகத்தில் பாயவேண்டிய காவிரி, கன்னட நாட்டை நோக்கிச் சென்று விட்டது, நம்மை நாக்கு மூக்கர்களின் தயவில் விட்டுவிட்டு.