வேலை, படிப்பு மற்றும் வேறு பல காரணங்களுக்காக ஹைதராபாதுக்கு வந்து தங்க வேண்டிய கட்டாயம், வலைப்பதிவர் மணிகண்டன் போல் மற்றவர்களுக்கும் நேரலாமென்பதால், பதிமூன்று வருடங்களாக இங்கு வசிக்கும் அனுபவத்தில் பயனுள்ளவற்றை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.மணியின் பதிவிலிருந்து அவருக்கு மொழியும் உணவும் பிரச்சினையாக உள்ளதென்றுத் தெரிய வருகிறது.
நீங்கள் சாப்பாட்டு இராமராக இருப்பின், சொர்க்கத்துக்கே வந்துவிட்டதாக உணர்ந்து கொள்ளுங்கள். இங்குள்ள உணவு வகைகளையும் தேர்வுகளையும் போல் வேறெங்கும் வராது. ஆந்திர சாப்பாடு மற்றும் சிற்றுண்டி வகைகள், இஸ்லாமிய பிரியாணி உணவகங்கள், (இனிப்பான சாம்பார் உள்ளிட்ட) கர்நாடகா ருசியுடன் வழங்கும் சைவ (உடுப்பி) உணவகங்கள், இது போதாதென்று கேரள, குஜராத்திய, இராஜஸ்தானிய, பஞ்சாபிய, இத்தாலிய, கிரேக்க, சீன, மலேய, மெக்ஸிக்க வகைகளுக்கென்று தனித்தனி உணவகங்கள், மற்றும் மேற்கத்திய விரைவுணவு மையங்கள் வேறு (இவை இல்லாமலா?). ஒன்றே ஒன்றுதான் இங்கு கிடையாது. ஆம், தமிழக உணவகங்கள். இருந்த 'அன்னலட்சுமி'யையும் மூடிவிட்டார்கள் என்றுத் தெரிகிறது. இருந்தாலென்ன? மற்ற உணவுகள் இருப்பதால் இது ஒரு பெரிய இழப்பாகத் தெரியாது. குறிப்பாக ஆந்திர சாப்பாடு....... அணுவணுவாக இரசிக்கப்பட வேண்டியது. குச்சுப்புடி, அபிருசி, Southern Spice, பாவார்ச்சி ஆகிய உணவகங்களில் இதன் மகிமையை உணரலாம். அடுத்து 'ஹைதராபாதி பிரியாணி' என்று உலகப் புகழ் வாய்ந்த பிரியாணி. அசைவராக இருந்தால் இன்னும் வசதி. கோழி மற்றும் ஆட்டு பிரியாணி, ஹலீம், கோடி புலுசு (கோழிக் குழம்பு), சேப்ப புலுசு (மீன் குழம்பு) என்று ஒரு பிடி பிடித்து விடலாம். சைவராக இருந்தாலோ, அவர்களின் பருப்பு சாதத்திலும், கட்டித் தயிரிலும், ஊறுகாய்களிலுமே மோட்சமடைந்து விடலாம். 'காரம்' என்ற உணர்வு 'ருசி' என்ற உணர்வாக மாறுவதற்கு வெகு நாட்கள் பிடிக்காது. அதன் பிறகு ஜாலிதான்.
இப்போது மொழி. தெலுங்கு கற்க வேண்டுமா, இந்தி கற்க வேண்டுமா என்ற கேள்விகள் எழுப்பப் பட்டன. அதிர்ஷ்டவசமாக, இங்கு பல மொழிகள் புழக்கத்திலுள்ளன. வரலாற்று ரீதியாக நோக்கினால், ஹைதராபாத் நிஜாமின் இராஜ்ஜியத்திற்குத் தலைநகராக விளங்கியது. இந்த இராஜ்ஜியத்தில் தெலிங்கானா, இப்போது கர்நாடகத்தைச் சேர்ந்த சில மாவட்டங்கள், மற்றும் இப்போது மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த சில மாவட்டங்கள் ஆகியவை அடக்கம். ஆக, உருது, தெலுங்கு, கன்னடம், மராட்டி ஆகிய மொழிகள் பேசும் மக்கள் காலகாலமாக இங்கு வாழ்ந்து வந்துள்ளனர். மேலும் நிஜாம் அரசில் பதவியேற்ற நூற்றுக்கணக்கான தமிழர் குடும்பங்களும் உண்டு. நூறாண்டுகளாக இங்கேயே வாழ்ந்ததால் அவர்கள் பேசும் தமிழும் தெலுங்கைப் போல் ஒலிக்கும். இவ்வாறு பல மொழிகள் புழங்குவதால், பொதுவாகவே மொழி குறித்த விவாதங்களும், சர்ச்சைகளும் அறவே இல்லையென்றே கூறலாம். ஆந்திரத் தலைநகரென்றாலும் இங்கு தெலுங்குக்கே முன்னிடமளிக்க வேண்டுமென்றெல்லாம் எவரும் (நல்ல வேளையாக) சிந்திப்பதில்லை. ஏனென்றால், தெலுங்கரல்லாத பெருவாரியான மக்களுக்கு இது உறைவிடமாகும், அவர்களை வெளியாட்களாக நோக்கும் முயற்சிகள் எனக்குத் தெரிந்து நடைபெற்றதில்லை. உ-ம், உருது பேசும் இஸ்லாமியர்கள், கன்னடியர்கள், மராட்டியர்கள், தமிழர்கள் மற்றும் வடக்கிலிருந்து குடியேறிய வணிகர்கள், ஆகிய அனைவருக்கும் ஹைதராபாத் சொந்தம். இந்நகரை 400 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கிய குதுப் ஷாஹி மன்னரும் இத்தகைய தீர்க்க தரிசனத்தையே கொண்டிருந்ததாக வரலாற்றுத் தகவல்கள் கூறுகின்றன.
இப்படி மொழி அரசியலில்லாத சூழலில், மக்கள் விரும்பி ஆங்கிலத்தைக் கற்றார்கள். சாமானிய மக்களும் இலக்கணப் பிழையின்றி ஆங்கிலம் பேசுவதை இங்குக் காணலாம். உருதுவையொத்த மொழியாதலால் ஹிந்தியையும் சரளமாகப் பேசுவார்கள். (இவையிரண்டுக்குமுள்ள வேறுபாடு என்னவென்று எனக்கு இன்னும் விளங்கவில்லை. ஒரு காதல் கவிதையைப் போல் ஒலித்தால் அது உருது, இல்லையேல் ஹிந்தி என்றளவில் புரிந்து கொண்டிருக்கிறேன்.) இங்குள்ள இஸ்லாமியர்களில் பலர் அரபியும் தெரிந்தவர்களாம். ஆகவே, எம்மொழிக்காரரும் இங்கு தழைக்கலாம். தெலுங்கில்லையேல் ஹந்தி, ஹிந்தியில்லையேல் ஆங்கிலம், அதுவுமில்லையேல் உங்களிடம் உடைந்தத் தமிழிலும் சிலர் பேச முயற்சித்து உதவுவார்கள். பதிமூன்று வருடங்களுக்குப் பிறகு இன்னும் எனக்குத் தெலுங்கு, ஹிந்தி இவையிரண்டும் சரியாகப் பேச வராது. இது எனக்குப் பெருமையான செய்தியல்ல. ஆனால் என் மொழி அறியாமையைக் காரணங்காட்டாது, என் உழைப்பையும் வசிப்பையும் ஏற்றுக் கொண்ட ஹைதராபாதுக்கு இது நிச்சயமாக ஒரு பெருமையான செய்தியே.
மணி குறிப்பிடாத இதர தகவல்கள் - சீதோஷண நிலை: பெரும்பாலும் இதமானதே, மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் மட்டும் வெய்யில் வாட்டிவிடும். வெய்யிலானாலும் வியர்க்காது. குளிர் காலத்தில் பெங்களூரை விட அதிகமாகக் குளிரெடுக்கும். கம்பளங்களோடு தயார் நிலையில் இருங்கள். மழை வழக்கமாக திடீரென ஆரம்பித்து திடீரென நின்று விடும். மழையில் மாட்டிக் கொண்டால் ஒவ்வொரு துளியும் உங்களை நோகும்படி அடிக்கும். ஆகவே எங்காவது ஒதுங்குவதே மேல்.
போக்குவரத்து - கச்சா முச்சா. Rules are meant to be broken என்ற சிந்தனையே பலருக்கும், போக்குவரத்து விதிகளைப் பொறுத்தவரை. எத்திசையிலிருந்து வேண்டுமானாலும், எத்தகைய வாகனம் வேண்டுமானாலும் உங்களை நோக்கி வரலாமென்ற உண்மையை எப்போதும் மனதில் கொள்க. இப்போது தலைக்கவசத்தைக் கட்டாயமாக்கி விட்டார்கள். இதனைக் கடைபிடிக்காதவருக்கு அபராதமெதுவும் கிடையாது. அழைத்துக் கொண்டு போய், 'தலைக்கவசத்தால் என்ன பலன்' என்பதை விளக்கும், (சுமார் ஒரு மணி நேரம் நீடிக்கும்) ஒரு பாடத்தை அமர்ந்து பார்க்க வைப்பார்கள். இந்தப் பாடத்துக்கு பயந்தே எல்லாரும் தலைக்கவசம் வாங்கியணியத் தொடங்கிவிட்டனர். பேருந்துகள் - அவ்வளவாகப் பயன்படுத்தியதில்லை. மின்சார இரயில் சேவை பெரும்பாலான இடங்களை இணைப்பதில்லை, ஆகவே, பயனில்லை. ஆட்டோக்கள் வசதிதான், நேர்மையான ஓட்டுனர்களும் கூட. 7-seaters என்று ஒரு வகையான வாகனம் உண்டு, அதில் எவ்வளவு நபர்கள் வேண்டுமானாலும் ஏறலாம். அவைகளுக்குக் குறிப்பிட்ட நிறுத்தமெல்லாம் கிடையாது. எங்கு வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் இவற்றைக் கையசைத்து, நிறுத்தி, ஏறிக்கொள்ளலாம். இவற்றால் போக்குவரத்துக்கேற்படும் அபாயம் மற்றும் நெரிசல்களைக் கருதி, இவற்றை சிறிது காலம் தடை செய்திருந்தார்கள். ஆனால் பொதுமக்களின் கோரிக்கையை முன்னிட்டு மீண்டும் இவற்றை அனுமதித்துள்ளார்கள்.
பொழுதுபோக்கு - வாய்ப்புகள் கொஞ்சம் குறைவுதான். சென்னையில் கடற்கரைகள் போல் இங்கு ஏரிக்கரைகள் - அவ்விடங்களில் புல்வெளிகளமைத்து மாலையில் அமரும் வண்ணம் செய்திருக்கிறார்கள். தென்னிந்தியாவிலுள்ள ஒரே IMAX திரையரங்கு என்ற புகழ் பெற்ற Prasad Multiplex மற்றும் ஒரு வனப் பிரதேசத்தை சீரமைத்து நடை, ஓட்டம் ஆகிய உடற்பயிற்சிகளுக்கு ஏற்றவாறு அமைக்கப் பட்ட KBR Park ஆகியவை மற்ற பொழுதுபோக்கு அம்சங்கள். இசை, நாடகம், நாட்டியம் ஆகிய நிகழ்ச்சிகள் எனக்குத் தெரிந்து குறைவே. Remix, bhangra என்று அவ்வப்போது நடக்கும் கூத்துகள் மட்டுமே உண்டு. குறை வைக்காமல் ஆங்காங்கே bars, pubs, wine shops ஆகியவற்றை நிறுவியுள்ளனர். இந்தியாவிலேயே beer அதிகம் பருகும் மாநிலம் ஆந்திரமே. சினிமா என்றெடுத்துக் கொண்டால் தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழித் திரைப் படங்களே காட்டப் படுகின்றன. தமிழ் கிடையாது. ஆனால் பெரும்பாலான தமிழ்ப்படங்கள் தெலுங்கில் ஒலிப்பதியப் பட்டு வெளியிடப் படுகின்றன, சிம்புவின் படங்களுட்பட.
வர்த்தகம்/வேலைவாய்ப்புகள் - தகவல் தொழில்நுட்பம், BPO ஆகியவை பெருவளர்ச்சியடைந்து கொண்டிருக்கின்றன. இத்துறைகளில், ஒரு காலத்தில் பெங்களூருக்குப் போட்டியென அறியப்பட்ட நகரம். இப்போது, புனே, சென்னை, மும்பாய், தில்லி ஆகியவையும் இதனுடன் போட்டியிட்டு இதனைப் பின்னுக்குத் தள்ளி விட்டதாக அறிகிறேன். (பெங்களூரின் முதன்மை நிலையே ஆட்டங்கண்டு கொண்டிருப்பதாகக் கேள்வி.) எனினும், இந்திய மென்பொருள் வல்லுனர்களில் நான்கிலொருவர் ஆந்திர மாநிலத்தவர் என்ற பெருமையுண்டு. இதைத் தவிர pharma எனப்படும் மருந்துகள் உற்பத்தியிலும் முன்னணியிலிருக்கிறது ஹைதராபாத். உயிரியல் தொழில்நுட்பம்(bio-technology) கொஞ்ச நாட்களாகப் பேசப்பட்டது. இன்றைய நிலை குறித்துத் தெரியவில்லை. பல விஞ்ஞான ஆய்வுக்கூடங்கள் இங்குண்டு, பெரும்பாலானவை மத்திய அரசால் நிறுவப்பட்டவை. DNA Fingerprinting என்ற மரபணுவியல் நுட்பத்தைத் தோற்றுவித்தது இங்குள்ள CCMB என்னும் ஆய்வுக்கூடமே. இந்நாளில் குற்றவியல் விசாரணைகளில் (criminal investigations) பேருதவியாக இருக்கிறது இந்நுட்பம். மேலும் இந்தியாவின் எரிகணைகளை (missiles) உருவாக்குவதும் இங்குள்ள மத்தியத் தற்காப்பு அமைச்சகத்தின் DRDO ஆய்வுக் கூடங்களே.
கல்வி வாய்ப்புகள் - Indian School of Business எனப்படும் நிர்வாகவியல் கல்லூரி, வெகு அண்மையில் தொடங்கப்பட்டு, இந்தியாவிலேயே முதன்மையான இடத்தை நோக்கி வளர்ந்து கொண்டிருக்கிறது. மேற்கிலுள்ள Kellog, Wharton ஆகிய கல்விக்கூடங்களுடன் இதற்குள்ள தொடர்பு மற்றும் கூட்டுறவே இதன் தனித்துவமாகும். University of Hyderabad எனப்படும் இங்குள்ள பல்கலைக் கழகம், இந்தியாவிலேயே முதன்மையான ஐந்து பல்கலைக் கழகங்களுக்குள் ஒன்றாகும். வரலாற்றுப் புகழ் பெற்ற ஒஸ்மானியா பல்கலைக் கழகமும் இங்குண்டு. ஆனால் அதன் தரம் சரிவடைந்து கொண்டே போய், 'ஒஸ்மானியா மாணவர்கள் இதற்கு முயற்சிக்க வேண்டாம்' என்ற குறிப்புடன் வேலைவாய்ப்பு விளம்பரங்கள் வெளிவரும் அளவுக்கு நிலைமை மோசமாயிற்று. இப்போது கொஞ்சம் பரவாயில்லை என்று அறிகிறேன். தனியார் கலைக்கல்லூரிகள் படு மோசம். ஜன நெரிசலுள்ள பகுதிகளில் சிறிய கட்டிடங்களில் அவை நடத்தப் படும் விதமே கொதிப்படையச் செய்யும். பல பள்ளிகளுக்கும் அதே நிலைதான். மைதானம், நூலகம் போன்ற வசதிகளில்லாது இலாப நோக்கோடு நடத்தப் படும் இக்கல்வி நிலையங்களைக் குறித்து என்ன சொல்வது? ஒரு புறம் இவையென்றால், மறுபுறத்தில் செல்வந்தர்களின் பிள்ளைகள் படிக்க வசதியான ஐந்து நட்சத்திரப் பள்ளிகள். குளிர் சாதன வீடுகளிலிருந்து, குளிர் சாதனப் பேருந்துகளால் வரவழைத்து, குளிர் சாதன அறைகளில் பாடங்கள் புகட்டி, இடையிடையே pizza, coke போன்றவற்றை ஊட்டி, பிறப்பிலிருந்தே பிள்ளைகளை மேற்கத்திய, மேலாதிக்க உணர்வுகளோடு தயாரிக்கும் பள்ளிகள் இங்கு ஏராளம். இதற்கு அவை விதிக்கும் கட்டணம் ஆகாயத்தைத் தொடக்கூடும். கேட்டால் தரமான கல்வியை பிள்ளைகளுக்கு வழங்குவதாக சப்பைக்கட்டுகள் வேறு. கடினமாக உழைத்து முன்னேறிய நடுத்தர வர்க்கத்தினரும், தங்கள் வருமானத்தையெல்லாம் கொட்டி, பல்வேறு காரணங்களுக்காக ('பிள்ளைகளுக்கு மேல் வர்க்கத்தினரோடு தொடர்பேற்படும்' போன்ற வலுவில்லாத காரணங்களுமிதில் அடக்கம்) தம் பிள்ளைகளை இப்பள்ளிகளில் சேர்ப்பது வருத்தமான செய்தி. இவற்றைத் தவிர, தொழிற்கல்லூரிகளின் நுழைவுத் தேர்வுகளுக்குத் தயார் செய்கிறோம் பேர்வழியென்று காளான்கள் போல் முளைத்துள்ள பயிற்சி நிலையங்கள் வேறு. ஹாஸ்டல் வசதியுடன் இயங்கும் இந்நிலையங்களில், மாணவ மாணவிகளை, பாட நேரம் உட்பட ஒரு நாளில் 14-15 மணி நேரம் வரை படிக்குமாறு நிர்பந்தித்து, அவர்களை சக்கையைப் பிழிவது போல் பிழிந்தெடுத்து விடுவார்களாம். இத்தகைய சுமையைத் தாங்காமல் சில மாணவ மாணவியர் தற்கொலையும் செய்து கொண்டுள்ளனராம். பெற்றோர்களின் நிறைவேறாத கனவுகளுக்குப் பிள்ளைகள்தான் பலிகடாக்கள் போலும்.
சுற்றுப்புறச் சூழல் - ஓரளவுக்கு பசுமையான நகரமென்றே கூறலாம். ஆங்காங்கே பூங்காக்கள், சாலையோரங்களில் மரங்கள் என்று நகரின் பசுமைத்தன்மையை உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். நகர எல்லைகளுக்குள் காற்றை மாசு படுத்தும் தொழிற்ச்சாலைகள் அதிகம் கிடையாது. எனக்கு நினைவுக்கு வருவது சார்மினார் சிகரட் தொழிற்ச்சாலை - அதன் அக்கம்பக்கங்களில் சென்றாலே புகையிலையின் வாசம் வீசும். ஆனால் நகரின் பிரதானமான ஹ¤சேன் சாகர் ஏரியில் தொழிற்ச்சாலைகளின் கழிவு நீர் கலப்பதால், தண்ணிர் அதிகமில்லாத காலங்களில் கொஞ்சம் துர்வாசம் வீசும். இது போதாதென்று, ஒவ்வொரு வருடமும் விநாயக சதுர்த்தி முடிந்தபின், பெரியப் பெரிய விநாயகர் உருவங்களை இந்த ஏரியில் கொண்டு வந்து கரைப்பதால் ஏற்படும் மாசு வேறு. இதனைத் தடை செய்ய வேண்டுமென்று சில சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர்கள் கோருகின்றனர். ஆனால் முடிகின்ற காரியமா அது? நகரைச் சுற்றி இரண்டு மூன்று வனவிலங்குச் சரணாலயங்கள் உள்ளனவாம். பல மான் வகைகளைக் கொண்டுள்ளனவாம், சென்று பார்த்ததில்லை. நான் முன்பு குறிப்பிட்ட KBR பூங்கா 400 ஏக்கர் பரப்பளவுள்ள அருமையானதொரு வனப்பகுதி. யோகமிருந்தால் மயில்கள், பாம்புகள், ஆமைகள் ஆகியவை உங்கள் பாதையில் குறுக்கிடலாம். நான் வசிக்குமிடத்திலிருந்து நடைப்பயணமாக 10-15 நிமிடத்தில் அங்கு சென்று விடலாம். என்னைப் பொருத்தவரை, ஹைதராபாதின் சிறந்த இடம் அதுவே. இயற்கைச் சூழல், தூயக் காற்று, மலர்களின் வாசம், நடை / ஓட்டத்தால் கிடைக்கும் உடற்ப்பயிற்சி (ஒரு சுற்று சுற்றினால் 6கி.மீ தூரமாகும். முடிந்தால் அதற்கு மேலும் சுற்றலாம்), அங்கு வரும் மற்ற உடல்நல ஆர்வலர்களிடம் தென்படும் உத்வேகம், இவையனைத்தும் எத்தகைய மனக்கசப்பையும் அகற்ற வல்லவை.
ஹைதராபாதுக்கு மாற்றாலாகி வருபவர்களுக்கு மேலுள்ள தகவல்கள் பயனுள்ளதாக இருக்குமென்று நம்புகிறேன். எனக்கு மிகவும் பிடித்த ஊரிது :)
7 கருத்துகள்:
அருமையான பதிவு!! தகவல்களுக்கு நன்றி.
இன்னும் நான் ஹைதராபாத் வந்ததில்லை.
ஒரு முறை வருவேன்!!!
என்னோட தெலுங்கு அங்கே செல்லுமான்னு பார்க்கணும்:-)
என்றும் அன்புடன்,
துளசி.
நல்ல பதிவு.
துளசி, பரணீ, உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி. மன்னிக்கவேண்டும், கணினிக்கு வைரஸ் ஜுரம் வந்திருப்பதால் முன்பே இதைத் தெரிவிக்க முடியவில்லை.
துளசி, நிச்சயமாக ஹைதராபாத் வாருங்கள். உங்களுக்கு தெலுங்கு கூடத் தெரியுமா? :)
கீழ்க்கண்ட பகுதிகளைத் தாண்டிச் செல்லும்போது எச்சரிக்கையாக இருப்பது நல்லது.ஏனெனில் இங்கு கண்ணிவெடிகள் இருக்கின்றன.
(இந்த வரிகளை அடிக்கும் போது எனது நாற்காலி லேசாக ஆடியது..நில நடுக்கம் சென்னையில்)
//ஆந்திரத் தலைநகரென்றாலும் இங்கு தெலுங்குக்கே முன்னிடமளிக்க வேண்டுமென்றெல்லாம் எவரும் (நல்ல வேளையாக) சிந்திப்பதில்லை. ஏனென்றால், தெலுங்கரல்லாத பெருவாரியான மக்களுக்கு இது உறைவிடமாகும், அவர்களை வெளியாட்களாக நோக்கும் முயற்சிகள் எனக்குத் தெரிந்து நடைபெற்றதில்லை//
//பதிமூன்று வருடங்களுக்குப் பிறகு இன்னும் எனக்குத் தெலுங்கு, ஹிந்தி இவையிரண்டும் சரியாகப் பேச வராது//
//இந்தப் பாடத்துக்கு பயந்தே எல்லாரும் தலைக்கவசம் வாங்கியணியத் தொடங்கிவிட்டனர்//
//7-seaters என்று ஒரு வகையான வாகனம் உண்டு, அதில் எவ்வளவு நபர்கள் வேண்டுமானாலும் ஏறலாம்.//
//செல்வந்தர்களின் பிள்ளைகள் படிக்க வசதியான ஐந்து நட்சத்திரப் பள்ளிகள். குளிர் சாதன வீடுகளிலிருந்து, குளிர் சாதனப் பேருந்துகளால் வரவழைத்து, குளிர் சாதன அறைகளில் பாடங்கள் புகட்டி, இடையிடையே pizza, coke போன்றவற்றை ஊட்டி, பிறப்பிலிருந்தே பிள்ளைகளை மேற்கத்திய, மேலாதிக்க உணர்வுகளோடு தயாரிக்கும் பள்ளிகள் இங்கு ஏராளம்//
உங்கள் பதிவைப் பார்த்தபின் வார இறுதிக்கே அங்கே வர வேண்டும் போல் இருக்கிறது.
தெருத்தொண்டன், அப்படி ஒன்றும் பயங்கரமான செய்திகளெதையும் நான் தரவில்லையே. :) ((7 seatersஐத் தவிர)
நிச்சயமாக ஹைதராபாத் வாருங்கள். இப்போது வெய்யில் குறைந்து மழையும் நின்று, இதமாக இருக்கிறது.
நல்ல விளக்கமான பதிவு.
ஹைத்ராபாத்திற்கு புதிதாய்வருவோருக்கு மட்டுமல்ல ஏற்கனவே வசிக்கும் என் போன்றோருக்கும் பயனுள்ள தகவல்கள்
நன்றி!
thanx for ur details
கருத்துரையிடுக