ஞாயிறு, டிசம்பர் 07, 2008

"வசிக்க ஒரு வீடு, பிழைக்க ஒரு வேலை"

'இப்படிக்கு ரோஸ்' தொலைக்காட்சி நிகழ்ச்சியை உள்ளடக்கிய சில பதிவுகளைக் காண நேரிட்டது. ஈழம் பற்றி சில நாட்களுக்கு முன் அதிக பரபரப்போட பேசப்பட்டது. ஈழத்தில் / இலங்கையில் அமைதி திரும்பி அனைவருக்கும் ஏற்புடைய சமரசம் / தீர்வு ஏற்பட வேண்டியது நிச்சயமாக நமது நெடுங்கால இலக்காக இருக்கிறது. ஆனா அதற்கு முன்பு போர்ச்சூழலால் அவதிப்படும் மக்களின் துயரைத் துடைப்பதுவும் ஒரு அவசரத் தேவை என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள். தேசிய / சர்வதேச உடன்படிக்கைகளின் அடிப்படையில் உணவு மூட்டைகளை வெற்றிகரமாக அனுப்பி விட்டோம். அவ்வளவு மெனக்கெடாமலேயே அதை விட அதிகமாக அம்மக்களுக்கு நம்மால் செய்ய முடியுமென்று தோன்றுகிறது.

ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்தவர்கள் மேற்கத்திய நாடுகளில் பரவலாக வாழ்ந்து வந்தாலும், எண்ணிக்கை அடிப்படையில் நமது நாட்டில்தான் அதிக அளவில் வாழ்ந்துக்கிட்டு இருக்காங்கன்னு நினைக்கறேன் (இந்தத் தகவல் தவறாகவும் இருக்கலாம்). மேற்குறிப்பிட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சியிலிருந்து தெரிய வருவது என்னன்னா, கொட்டும் மழையில் செங்கல்பட்டு வரை மனிதச் சங்கிலியாக நிற்பதை விட நம்மால் மேலும் பயனுள்ள வகையில் உதவ முடியும் என்பதுதான்.

தமிழகம் - இந்தியாவின் முன்னோடியான மாநிலங்களில் ஒன்று. (எந்த அடிப்படையில் பார்த்தாலும் முதல் மூன்று இடங்களுக்குள் வந்து விடுகிறது). தொழில்மயமாக்கம் (#1), அந்நிய முதலீடு (#3), ஏற்றுமதி (#3), பொருளாதாரம் (#3 - state's GDP = US$70 billion), அதிகமான வீட்டு உரிமையாளர்கள் (#3), இத்யாதி, இத்யாதி........ இப்படி செல்வச் செழிப்போடு இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு மாநிலத்தால் நிச்சயமாக தன்னை நம்பி வந்தோருக்கு இதை விட அதிகமாகச் செய்து தர இயலும். நாம் கோருவதெல்லாம் 'வசிக்க ஒரு வீடு'. நாட்டிலேயே மிக அதிகமான வீடுகளைக் கொண்ட மாநிலங்களில் மூன்றாவது இடத்திலிருக்கும் தமிழகத்திற்கு இது ஒரு பெரிய சவால் கிடையாது என்று நம்புகிறேன். அதே போல், 'பிழைக்க ஒரு வேலை'. நாட்டின் மூன்றாவது மிகப் பெரிய பொருளாதாரமாகத் திகழும் தமிழகத்தில் வேலை வாய்ப்புகள் குறைந்து போய்விடவில்லை என்றும் நம்புகிறேன்.

நிறுவன உரிமையாளர்கள், அதிகாரப் பொறுப்பிலிருப்பவர்கள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் பார்வைக்கு இந்த சிந்தனைகளை முன்வைக்கிறேன். மேலும், ஈழத்தவர்களை வேலைக்கு அமர்த்துவதிலோ, அல்லது அவர்களுக்கு வாடகைக்கு வீடு தருவதிலோ ஏதேனும் சட்ட ரீதியான சிக்கல்கள் இருக்குமானால், அவற்றை உடனே நீக்குவதற்கு நம் தமிழக அரசு வேண்டிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.