திங்கள், அக்டோபர் 01, 2007
கனம் கோர்ட்டார் அவர்களே!
என்னடா நம்ம கோர்ட்டாருங்க இப்படி ஞாயித்திக் கெழமையெல்லாம் வேலை செய்யறாங்களேன்னு அப்படியே புல்லரிச்சி நிக்கும்போது, உங்களப் பத்தின வேற சில தகவல்கள் ஞாபகம் வந்து உறுத்த ஆரம்பிச்சுது. அதாவது, உங்கள மாதிரி கோர்டடு்களோட ஆமை வேக செயல்பாட்டால நம்ம நாட்டுல மூணு லட்சம் பேர் குற்றம் நிருபிக்கப் படாமலேயே சிறையில் வருஷக் கணக்கா வாடிக்கிட்டிருக்காங்க என்பது போன்ற தகவல்கள். நிலம இந்த மாதிரி இருக்கும்போது, இந்த தமிழக பந்த் விவகாரத்தில் மட்டும் ஏன் உங்களோட அதீத ஈடுபாடுன்னு கொஞ்சம் யோசிக்க வச்சிட்டீங்க. இப்படி ஞாயித்திக் கிழமையெல்லாம் வேலை செஞ்சி உங்களோட மத சார்பின்மையை காட்டிக்கிட்டது உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டியதுதாங்க. பொதுமக்கள் நலனில் உங்களுக்கு இருக்கற அக்கறையை நான் மெச்சிக்கறேன்.
இன்னிக்கி காலையில சில செய்திகளை படிச்சேங்க. எங்க கலைஞர் ஐயா இந்தியில பேசினாராம், உண்ணாவிரதம் இருக்காராம். மாநிலம் முழுவதும் பல உழைப்பாளர் சங்கங்கள் வேலை நிறுத்தம் செய்யறதுனால, தமிழகத்தில் கிட்டதட்ட பந்த் சூழ்நிலைதான் நிலவுது, அப்படியிப்படீன்னு கேள்விப்பட்டேங்க. அதாவது, நீங்க ஓவர்டைம் செஞ்சி குடுத்த தீர்ப்பு, கிட்டத்தட்ட செல்லுபடியாகாத மாதிரிதாங்க. வருத்தமான செய்திதான், என்ன பண்ணறது?
இப்பிடி செய்திகள மேஞ்சிக்கிட்டே வரும்போது இது கண்ணுல பட்டுதுங்க - அதாவது இன்னிக்கி நீங்க புடுங்கி மாதிரி ஏதோ பேசியிருக்கீங்களாம் (SC pulls up TN govt என்பதன் தமிழாக்கம் ;-) ) , மக்கள் தேர்ந்தெடுத்த அரசை கவிழ்க்கணும் அது இதுன்னு. மறுபடியும் சில தகவல்கள் ஞாபகத்துக்கு வந்து உறுத்துதுங்க. அதான், முன்னாடி காவிரி நீர் பிரச்சனை, முல்லைப் பெரியார் பிரச்சனைன்னெல்லாம் வந்தப்போ எங்களுக்கு நியாயமா கிடைக்க வேண்டிய தண்ணி பத்தி நீங்களும் தீர்ப்பு சொன்னீங்க. அப்போ, சம்மந்தப் பட்ட எதிர் தரப்பு மாநிலங்கள் உங்க தீர்ப்பை நிராகரிச்சி, உங்க ஆணைய செயல்படுத்தாம முரண்டு பிடிச்சாங்க. இப்போ நீங்க தமிழக அரசை குற்றம் சாட்டற அதே contempt of courtதான் அவங்களும் செஞ்சாங்க. இப்போ தமிழக அரசை கலைக்கணும்ன்னு கூக்குரல் விடற நீங்க, அப்போ மட்டும் என்ன சிறைச்சிக்கிட்டா இருந்தீங்க?
புதன், செப்டம்பர் 05, 2007
புகைப்படம்
தற்போது ஒரு சகப் பதிவரின் உருவப் படத்தை அதிகம் காண முடிகிறது. முதல் ஓரிரு முறைகள் அதற்கான எதிர்ப்பை அவர் தெரிவித்த பின்னரும் கூட அவருக்குத் திமிரான எதிர்வினைகளே கிடைத்தன என்று நினைக்கிறேன். அதன் பிறகு அவர் அமைதியாகி விட்டாலும், இப்போது இச்செயல்களுடன் அவர் உடன்படுகிறாரா என்பது தெரியவில்லை, தெரிந்து கொள்ளும் ஆர்வமுமில்லை. தனது உருவப்படத்தைப் பயன்படுத்த வேண்டாம் என்று தெரிவிக்க ஒருவருக்கு தார்மீக உரிமையுண்டு. அவ்வாறு தெரிவிக்கப்பட்ட பின், அதை மதித்து நடப்பதுதான் அம்மனிதருக்கு நாம் காட்டும் மரியாதை.
ஞாயிறு, ஜூலை 15, 2007
வெற்று விவாதங்கள் தரும் அயர்ச்சி
முதலில் நம் தமிழ்ச்சூழலில் புழங்கும் அடைமொழிக் கலாச்சாரம். ராஜாதி ராஜ, ராஜ கம்பீர, ராஜ மார்த்தாண்ட என்று அக்காலத்தில் அரசர்களுக்குத் துதி பாடிய கேவலமான செயலின் நீட்சியாக இன்றும் ஒவ்வொருவருக்கும் அடைமொழி அளித்துக் கொள்ள வேண்டிய தேவை தொடருகிறது. ஆகவே, புரட்சித் தலைவர், புரட்சிக் கலைஞர், சொல்லின் செல்வர், சிலம்புச் செல்வர், மெல்லிசை மன்னர் போன்ற வெத்துப் பட்டங்கள் சராமாரியாக வாரி வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அக்காலாச்சாரம் இணையத்திலும் புகுந்து, தமிழ் இணைய பிதா, மாதா என்று தனது அவல முகத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறது. நாளடைவில் இன்றைய முன்னணி இணைய பெர்சனாலிடிகளுக்கெல்லாம் இத்தகைய அடைமொழிகள் வந்துவிடக்கூடிய வேடிக்கையான சூழல் ஏற்படும் நாள் வெகு தொலைவிலில்லை என்பதை வருத்தத்துடன் குறிப்பிட்டுக் கொள்ள வேண்டியிருக்கிறது. Sycophancy என்பது நமது ரத்தத்தில் ஊறிவிட்ட ஒரு சமாச்சாரமாக இருக்கும் வேளையில் இது குறித்து எதுவும் செய்ய இயலப்போவதில்லை.
தமிழை வலையேற்றுவது அத்தகைய அரிய செயலா? அது ஒரு விஞ்ஞான / தொழில்நுட்பக் கண்டுபிடிப்பா என்றெல்லாம் நம்மை நாமே கொஞ்சம் கடினமான கேள்விகளைக் கேட்டுக் கொள்வது நலம். எல்லா மொழிகளும் தமது எழுத்துக்களை கணிமைப் படுத்திய பின், தமிழர்களுக்கே உரிய வேகத்துடன் ஆற அமர நமது எழுத்துக்களையும் கணிமைப்படுத்தி உள்ளோம். இதற்காக எதுவும் புதிய நுட்பங்களை உருவாக்கியிருக்கத் தேவை இருந்திருக்காது. மற்ற மொழிகளில் என்ன செய்திருக்கிறார்கள் என்று பார்த்துக் கொண்டு, அதை நமது மொழிக்கும் localize செய்ய வேண்டியிருந்திருக்கும். ஒரு சில நாட்களில், இரவு உணவுக்குப் பின் படுக்கப்போகுமுன் சில மணி நேரங்களுக்கு சில சோதனைகளைச் செய்து அதில் வெற்றி கண்டுவிடக்கூடிய ஒரு வேலைக்கு "இணைய பிதா" போன்ற பில்டப்புகள் தேவையா? அது யாராக இருந்தால் என்ன? இந்தப் பிதா இல்லையென்றால் வேறொரு பிதா அதைச் செய்திருப்பார். இந்த நுட்பங்களெல்லாம் ராணுவ ரகசியங்களல்ல. நுட்ப ஆர்வலர்கள் மத்தியில் எளிதாகவே பரிமாறிக் கொள்ளப்படுபவைதான் இவையெல்லாம்.
இவ்வளவு புளகாங்கிதமடைகிறோம் நமது தமிழ்க் கணிமையைக் குறித்து. ஆனால் உண்மை நிலையென்ன? ஆங்கிலம் தெரியாத ஒருவரால் கணினியைப் பயன்படுத்த முடியாது என்ற கசப்பான உண்மைதான் இன்றும் நிலவுகிறது. தேநீர்க் கடையில் தினத்தந்தி வாசிக்கும் பாமரன் கணினியைப் பயன்படுத்த முடியப் போவது எப்போது? அவரது கணினிப் பயன்பாட்டுக்குத் தடையாயிருப்பது அவரது பொருளாதார நிலை மட்டும்தானா? கணினிகளின் விலை குறைந்து கொண்டே வருகின்றன. ஒரு சிறிய வங்கிக் கடனை வாங்கி, அதில் ஒரு கணினியை வாங்கிப் போடுவது அவருக்கு அப்படியொன்றும் கடினமான செயலாக இருக்காது. அதைவிட அவருக்குப் பெரிய தடைக்கற்களாக இருக்கக்கூடியவை அக்கணினியிலுள்ள ஆங்கில QWERTY விசைப்பலகையும், Start > Program Files என்று விளிக்கும் ஆங்கில இடைமுகமும்தான். அதன்பிறகு அவர் தமிழ்மணத்திற்கோ தினமலர் தளத்திற்கோ வரவேண்டுமென்றாலும் அதற்கு அவருக்குத் தெரிந்திருக்க வேண்டிய ஆங்கில URL முகவரிகளும்தான். ஆகவே,
- முற்றும் முழுவதுமாகத் தமிழ் பேசும் கணினி தேவை (அது 'ழ' கணினியோ அல்லது 'ஙே' கணினியோ :) )
- அதன் விசைப்பலகையின் விசைகளில் தமிழெழுத்துக்கள் பொறித்திருக்க வேண்டும் என்பது ஒரு obvious தேவை. (பாமினி, ஷாலினி என்று ஆயிரத்தெட்டு வகையறாக்கள் இல்லாமல், ஆங்கிலத்தில் QWERTY என்று ஒன்று இருப்பது போல், அனைவருக்கும் ஏற்புடைய ஒரு வடிவமைப்பில்)
- URL transliterator: இப்போதைக்கு தமிழில் URLகள் வரப்போவதில்லை. ஆனால் ஒரு பயனர் தனக்கு வேண்டிய வலைத்தள முகவரியைத் தமிழில் தட்டச்சு செய்தால், அதை ஒரு ஆங்கில http வேண்டுகோளாக மாற்றுவது சாத்தியமே. இதுவும் ஒரு அத்தியாவசியத் தேவை.
- OpenOffice முற்றும் முழுவதுமாக தமிழ் இடைமுகத்துடன்
- நெடுங்கால இலக்கு - பயனர் ஆங்கில வலைத்தளங்களைக் கோரினாலும் குத்துமதிப்பாகவாவது machine translation செய்து அவற்றைத் தமிழில் வழங்கும் தொழில்நுட்பம். அது போலவே, ஆங்கில ஆவணங்களை (குத்துமதிப்பாகவாவது) தமிழில் மொழிபெயர்க்கும் OpenOffice plugin.
வெள்ளி, ஜூலை 13, 2007
தமிழ்த்திரையில் பெண்கள் பற்றிய விவாதம்
இங்க நான் உதாரணமா குறிப்பிட விரும்பும் ஒரு படம் Kill Bill. படம் ஒரு பெண்ணை மையமாகக் கொண்டது. அவளது எதிரிகளும் பெண்களே. படத்தில் நிறைய சண்டைக் காட்சிகள் வரும், நன்றாகப் படமாக்கப்பட்டிக்கும். கொஞ்சம் உன்னிப்பா கவனிச்சீங்கன்னா, அவள் ஆண்களை வெகு சுலபமா வீழ்த்தி விடுவாள். அவர்கள் நூற்றுக்கணக்கா வந்தாலும் அவர்களையெல்லாம் ஒரு சில நிமிடங்களில் ஒன்றுமில்லாமல் ஆக்கி விடுவாள். ஆனா எதிரில் சண்டையிடுவது பெண் என்னும்போது மட்டும் வெகு நேரப் போராட்டத்துக்குப் பிறகே அவளால வெற்றியடைய முடியும். இது ஏன் அப்படின்னா, அதைப் படைத்தவரின் மனநிலையை ஒத்தே அவர் வெளியிடும் படைப்பும் அமையும்ன்னு அதை அப்படியே ஏத்துக்க வேண்டியதுதான். பெண்களை சண்டைக்கலையில் திறமை மிக்கவர்களாகக் காட்ட வேண்டும் என்ற படைப்பாளியின் முடிவை நாம கேள்வி கேட்க முடியாது, அப்படி கேள்வியில்லாமல் ஏற்றுக் கொண்டுதான் இருக்கிறோம் (படத்தை வெற்றியாக்கியதன் மூலமாக). Crouching tiger........, Charlie's Angels, போன்ற படங்களிலும் இத்தகைய கருத்தை வெளிப்படுத்தியிருப்பார்கள். அவையும் வெற்றியடைந்தனன்னு நினைக்கறேன்.
இது என்ன அநியாயம்? ஆண்களை விட அவ வலு மிக்கவளாகவே இருக்கட்டும்....... ஆனாலும், அவளை சில நிமிடங்களாவது தாக்குப் பிடிக்கக் கூடியவர்களா ஆண்களை சித்தரிச்சிருக்க'லாம்', 'லாம்'ன்னு பல லாம்களை அடுக்குவது எவ்வளவு அபத்தமானதா இருக்கு? இன்னைக்கு பெண்களை 33% ஆவது புத்திசாலிகளா காட்டணும்ன்னு கேப்போம். அப்பறம், சிறுபான்மையினரை குற்றவாளிகளாவோ, தீய பழக்கம் உடையவர்களாவோ காட்டக்கூடாதுன்னுவோம். அதுக்கு அப்பறம் எரிபொருள் சேமிக்கிறதுக்காக இனிமே ஹீரோக்கள் பஸ்லயோ, டிரெயின்லயோ பயணம் செய்யற மாதிரிதான் காட்சி அமைக்கணும், கார்ல போற மாதிரி காட்டினா நல்ல 'முன்மாதிரி'யா இருக்காதுன்னுவோம். ஏற்கனவே, சினிமால புகை பிடிக்கக்கூடாது, தண்ணியடிக்கக்கூடாது, முத்தம் குடுத்துக்கக்கூடாதுன்னு சட்டம் போட்டு தடை செஞ்சாச்சு. தமிழ்ல பேர் வைக்க'லாமே'ன்னு (வன்மையாவே) அறிவுறுத்தியாச்சு. இவ்வளவு விதிகள் / வழிகாட்டுதல்களையும் கடந்து ஒரு படைப்பாளிக்கு புனைய எதாவது கதை மிஞ்சுமான்னு பாக்கணும்.
Stereotypeகள் தொடரணும்ன்னு சொல்லல்ல. பெண்கள் சில குறிப்பிட்ட நடிகர்களின் படங்களில் சற்று சாமர்த்தியம் குறைந்தவர்களாகக் காட்டப்படுகிறார்கள்ன்னா அதை ஒத்துக்கறேன். ஆனா, ஒட்டு மொத்த தமிழ் சினிமால வர்ற பெண் பாத்திரங்கள் எல்லாமே அவ்வாறுதான் சித்தரிக்கப்படுகிறார்கள்ன்னா அதை என்னால நிச்சயமா மறுக்க முடியும். (நடிகை) லட்சுமி, சுஜாதா, ஸ்ரீதேவி, சரிதா, சுகாசினி, ரேவதி, ராதிகா போன்ற நடிகைகள் பல படங்களில் சுயசிந்தனையாளர்களா காட்டப்பட்டிருக்காங்க. அவங்கல்லாம் பாலசந்தர் பட நாயகிகள் எனப்படும் 'தாழ்த்தப்பட்ட' கேட்டகிரில வர்றாங்களான்னு தெரியல. ஒரு சில நாட்களுக்கு முன்பு நான் பார்த்த '16 வயதினிலே', அதே இயக்குனரின் 'சிகப்பு ரோஜாக்கள்'ன்னு நிறைய top-of-the-mind உதாரணங்களைத் தர முடியும். 'மிஸ்டர் சுகாசினியின் பெண்கள்' அப்படீன்னு மதுரா ஒரு தனிப்பதிவே போடுமளவுக்கு உதாரணங்கள் உண்டு.
பழைய எம்ஜியார் படம் ஒண்ணு டிவில போய்க்கிட்டு இருந்தது. பேர் தெரியல. ஆனா கதை என்னன்னா, ஒரு துஷ்டப் பெண்ணரசி, பகடை விளையாட்டுல தந்திரம் செஞ்சி வேற்று நாட்டு அரசர்களை எல்லாம் தனக்கு அடிமைகளாக்கி, அவர்களது நாடுகளையும் தன்வசப்படுத்துகிறாள் என்பதுதான். இன்னொரு உதாரணம் - "வாராய் நீ வாராய்............. போகுமிடம் வெகு தூரமில்லை, நீ வாராய்........" என்ற பாட்டின் காட்சியமைப்பு ஞாபகமிருக்கும்ன்னு நினைக்கிறேன். தன்னை மலையிலிருந்து தள்ளிவிடப்போகும் கணவனை தந்திரத்தால் வென்று உயிர் தப்பும் பெண்ணை பற்றிய காட்சி அதுன்னு நினைக்கிறேன். ஆக, பெண்களை அறிவுக் கூர்மை மிக்கவர்களாக (பெண்ணியமெல்லாம் பேசப்படாத) அந்தக்காலத்திலிருந்தே காட்டி வந்திருக்கிறார்கள் என்பதுதான் இதிலிருந்து நான் நிறுவ முயலுவது.
ஒரு பாத்திரப் படைப்பு என்பது முற்றும் முழுவதுமாக ஒரு படைப்பாளியின் உரிமை. சரஸ்வதி நிர்வாணமாக இருக்கிறாளா என்பது அவளைப் படைப்பவன் கையிலேயே உள்ளது. அவ்வாறு இருந்திருக்கக் கூடாது என்பதெல்லாம் கலை வன்முறையே. அதே போலத்தான் ஒரு படைப்பாளியின் பாத்திரப் படைப்பை கேள்விக்குள்ளாக்குவதுவும்.
சனி, ஜூலை 07, 2007
ஒரு வேற்று மொழியில் சில வெளிப்பாடுகள்
இதே மாதிரி இன்னொரு regexஐப் பார்க்கலாம்:
^(http://)?.*(blog|wordpress|typepad|livejournal).*$ - இதைப் பார்த்தா ஏதோ வலைப்பதிவுகள் சம்மந்தப்பட்டதுன்னு புரிஞ்சிருக்கும். ஒரு பக்கத்தில் இருக்கும் எல்லா வலைப்பதிவு முகவரிகளையும் தேடிக் குடுக்கத்தான் இந்த regex. குறிப்பிட்ட பதிவு / தளத்தில் எந்தெந்த வலைப்பதிவுகளுக்கெல்லாம் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளதுன்னு தேட விரும்பினா இதை பயன்படுத்தலாம்.
இதப் பாருங்க: .*[;:]-?[)\*pD]$ இது என்னவா இருக்கும்ன்னு நினைக்கறீங்க? இதை வச்சி உங்களுக்கு வந்த ஒரு மடலில் அதை அனுப்பியவர் என்னல்லாம் சொல்லி உங்க கிட்ட வழிஞ்சிருக்காருன்னு தெரிஞ்சிக்கலாம் ;) (இதோ, இந்த மாதிரிதான்)
இப்படி, சிக்கலான வேலைகளையும் சுருக்கமான குறிப்புகளைக் கொண்டு சாதிக்கும் ஆற்றல் படைத்தவை இந்த regexகள். அவற்றின் புரியாத மொழியை எப்படி புரிஞ்சிக்கிறது?
அ, ஆ, இ, ஈ, யிலிருந்து ஆரம்பிக்க வேண்டியதுதான். அவற்றுடைய எழுத்துக்கள் இவைதான்:
^ - ஒரு பொருளின் தொடக்கம் (இதில் பொருள் என்பது இடத்திற்குத் தகுந்தாற்போல் சொல் / வாக்கியம் / பத்தி இப்படி எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்) . உ-ம். ^தமிழ் - தமிழ் என்று தொடங்கும் அனைத்துப் பொருட்களையும் குறிக்கும்.
$ - ஒரு பொருளின் முடிவு. உ-ம். வடை$ - வடை என்று முடியும் அனைத்து பொருட்களையும் குறிக்கும் (இட்லிவடை, சட்னிவடை, etc.)
. - எந்த ஒரு குறியீடாகவும் இருக்கலாம்
உ-ம். ப.ம் எனபது பணம் என்பதற்கும் பொருந்தும், பலம் / பதம் என்பவற்றுக்கும் பொருந்தும். பயணம் என்பதற்குப் பொருந்தாது, ஏன் என்பதை ஊகித்துக் கொள்ளவும்.
* - இதற்கு முன் இடம்பெறும் குறியீடு ஒரு முறையும் வராமலிருக்கலாம் அல்லது , ஒரு முறையோ பலமுறைகளோ கூட வரலாம்.
உ-ம். க.*னி. இதற்குப் பொருந்தக் கூடிய சொற்கள் 'கனி' (ஒரு குறியீடு கூட இல்லாதிருக்கலாம் அல்லவா?), கணினி (நடுவில் ஒரு குறியீடு), கவிதாயினி (நடுவில் பல குறியீடுகள்)
+ - இதற்கு முன் இடம் பெறும் குறியீடு ஒரு முறையோ அல்லது அதற்கு மேலோ வரலாம். உ-ம். (லக)+ எனபது லகலகலகலகலகலக என்று எவ்வளவு 'லக-லக'க்களை வேண்டுமானாலும் குறிக்க வல்லது.
? - இதற்கு முன் வரும் குறியீடு ஒரு முறை வரலாம் அல்லது வராமலே போகலாம்.
உ-ம். இ?ராமன். ராமனுக்கு முன் 'இ' போட்டாலும் போடாவிட்டாலும் பொருத்தமே.
[ ] - இவற்றுக்குள் இருக்கும் குறியீடுகளில் ஒன்றைக் குறிக்கும்
உ-ம். க[லரடணன]ம் எனபது கலம், கரம், கணம், கனம், கடம் ஆகியவற்றைக் குறிக்கும். கரணம் என்பதைக் குறிக்காது.
இந்த சதுர அடைப்புக்குறிகளுக்குள் ஒரு rangeஐயும் குறிப்பிடலாம்.
உ-ம் ^[அ-ஔ] என்பது உயிரெழுத்துக்களில் தொடங்கும் சொற்களுக்குப் பொருந்தும். அவ்வாறு வேண்டாமென்பதையும் குறிப்பிட இயலும்
உ-ம் ^[^அ-ஔ] என்பது உயிரெழித்துக்களில் தொடங்கும் சொற்களைத் தவிர இதர சொற்களைத் தருமாறு வேண்டுவதற்காகும். caret(^) சின்னம் சதுர அடைப்புகளுக்குள் வரும்போது அதன் பொருள் வேறுபடுவதைப் பார்க்கலாம்.
( ) - இவற்றுக்குள் இருக்கும் குறியீடுகள் அப்படியே கூட்டாக இயங்கும் எனபதை முந்தைய லகலக உதாரணத்திலேயே பார்த்தோம். அதோடு, இது ஒரு தற்காலிக நினைவகமாகவும் செயல்படுகிறது. அதாவது, இந்த அடைப்புக் குறிகளுக்குள் உள்ளவற்றை $1, $2, $3...... போன்ற பெயர்களைக் கொண்டு இதர வெளிப்பாடுகளில் பயன்படுத்த இயலும்.
| - மேலுள்ள கூட்டெழுத்துகளுக்கு options கொடுக்க இந்தக் குறியீடு பயன்படும்.
உ-ம் .*\.(mp3|wav|wma|ogg|ram|aac)$ என்பது எல்லா விதமான ஒலிக்கோப்புகளையும் தேடிப் பெறுவதற்கு உபயோகப்படும்.
\ - மேலுள்ள குறியீடுகளையே regex கொண்டு தேடணும்ன்னா, அவற்றை அப்படியே கொடுக்க முடியாது. ஆகவே, இந்தக் குறியீட்டைப் பயன்படுத்தி, அவைகளைத் தேடணும். உ-ம். \$[0-9]+(\.00)? $1000.00 என்பதைத் தேடிப் பெறணும். ஆனா $க்கும் .க்கும் regexல வேற பொருள் இருக்கு. ஆகவே \$, \. அப்படீன்னு குறிப்பிட்டு, அதுக்கு regexக்கான பொருளை எடுத்துக் கொள்ளாமல், வழக்கமான பொருளை எடுத்துக் கொள்ளும்படி குறிப்பிடுவதற்குத்தான் இந்தக் குறியீடு. இந்த உத்தியை escape செய்வது என்பார்கள். தவறாகப் புரிந்து கொள்ளப்படுவதிலிருந்து பிழைத்துக் கொள்வது என்று எடுத்துக் கொள்ளலாம்.
அ, ஆ, இ, ஈ தெரிஞ்சாச்சி இல்லையா? இனி படைப்பிலக்கியத்தில் இறங்கி விட வேண்டியதுதான். வாங்க, கொஞ்சம் regex வெளிப்பாடுகளை நாமும் வெளிப்படுத்தலாம்.
(\+[0-9]+[- ])?\(?[0-9]+\)?[- ][0-9]+([- ][0-9]+)? - இந்த அழகான expressionஐக் கொண்டு ஒரு ஆவணத்தில் இடம்பெறும் எல்லா தொலைப்பேசி எண்களையும் பெறலாம்.
^.*sort.*\(.*\).*{$ - இது கோடாளிகளுக்கு. வரிசைப்படுத்தும் (sorting) நிரல்களை தேடிப் பிடிக்கலாம் (hopefully).
^.*(எட்|8)டு?.*.*$ - எல்லா எட்டு போட்ட பதிவுகளின் தலைப்புகளும் ('டு'வுக்கு அடுத்துள்ள கேள்விக்குறியை கவனிக்க! எட்டப்பன், எட்டாக்கனி, எட்டிய உயரங்கள்ன்னு எல்லா சாத்தியங்களையும் cover பண்ணணுமில்லையா?)
^.*(போதும்)+.*(ஐயோ)*.*(அம்மா)*!? - இப்பதிவைப் படித்துக் கொண்டிருக்கும் உங்களின் இப்போதைய மனநிலை இப்படி இருக்காது என்று நம்புகிறேன்.
Regexஐ எங்கே பயன்படுத்துகிறார்கள் என்றால், பொதுவாக மென்பொருள்களில் அதிகமாக இது உபயோகப் படுத்தப் படுகிறது. Markup மொழிகளில் உள்ள ஆவணங்களிலிருந்து வேண்டிய தகவலைப் பிரித்தெடுப்பதற்கு (இதை ஆங்கிலத்தில் parsing என்பார்கள்) இது பயன்படுகிறது. மென்பொருள்களுக்கு அப்பாலும், வழக்கமான தேடலை விட மிகத் துல்லியமான விடைகளை அளிக்கும் சாத்தியத்தை regex நமக்கு அளிக்கிறது. ஆகவேதான், OpenOfficeஇல் இதைக் கொண்டு தேடும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. Microsoft Officeஇன் தற்போதைய பதிப்பில் எப்படியென்று தெரியவில்லை. கூகிள் போன்ற இணையத் தேடல்களிலும் இத்தகைய தேடல் வசதியை வழங்கலாமென்று தோன்றுகிறது.
இன்னொரு பயன்பாடு, வலைத்தளங்களின் URLஐ அழகுபடுத்துவதற்கு. வெளியுலகுக்கு ஒரு வலைப்பக்கத்தின் URL www.domain.com/abcd/efgh/ijkl என்று அழகாக வழங்கப்பட்டிருக்கும். ஆனால் பக்கம் இருப்பதுவோ www.domain.com/cgi-bin/abcd.cgi?x=efgh&y=JwwpxU4852&z=ijkl என்று எதாவதொரு கந்திர கோளமான முகவரியில். கொடுக்கப்பட்ட URLஐயும் பக்கம் உண்மையில் இருக்கும் URLஐயும் எப்படி பொருந்த வைப்பது? இதற்குத்தான் web serverஇல் ^/([^/]+)/([^/]+)/([^/]+)$ என்பதைப் போன்ற ஒரு regex எழுதப்பட்டிருக்கும், அதற்குப் பொருந்தும் http வேண்டுகோள்களை இவ்வாறு மாற்றி எழுதுவதற்கு: ^/cgi-bin/$1\.cgi\?x=$2&y=JwwpxU4852&z=$3$. இந்த மாற்றியெழுதுதலுக்கு URL rewriting என்று பெயர். இதற்கு regex பெரிதும் பயன்படுகிறது.
வேறெதுவும் பயன் இருக்கிறதா என்றுத் தெரியவில்லை. இருந்தாலும் ஒரு சாமர்த்தியமான ஒரு நுட்பம் இது என்பதில் சந்தேகமில்லை. மிகவும் பயனுள்ள செயல்பாடுகளை இதனால் நாம் அடையக்கூடும் என்பதை மட்டும் உறுதியாகக் கூறிக் கொள்கிறேன்.
ஞாயிறு, ஜூன் 03, 2007
தலைக்கவசம்
அவர் இந்த அமலாக்கத்தைச் செயல்படுத்திய விதம் புதுமையானது. Helmet இல்லாமல் பிடிபடும் ஓட்டுனர்களை பிடித்துக் கொண்டு போய் ஒரு வகுப்பில் உட்கார வைத்து, அவருக்கு helmet அணிவதனால் என்ன பயன் என்று சுமார் ஒரு மணி நேரத்திற்கு விரிவுரை வழங்கப்படும். அந்த விரிவுரையைக் கேட்ட பின்னரே, பிடிபட்டவர் விடுவிக்கப்படுவார், ஆனால் அவருக்கு வேறெந்த அபராதமோ, தண்டனையோ விதிக்கப்பட மாட்டாது. இது ஒரு பரவலான jokeஆக அனைவராலும் பேசப்பட்டது. இந்த வகுப்பில் உட்காருவதற்கு பயந்தே அனைவரும் அவசர அவசரமாக helmet வாங்கி அணியத் தொடங்கினார்கள். Helmet எதிர்ப்புப் போராட்டங்களும் நடந்தன - எப்படியென்றால், பேருந்தில் செல்வதற்குக் கூட helmet அணிந்து கொண்டு இச்சட்டத்தை நக்கலடிப்பது போன்ற உத்திகளைக் கொண்டு. இது பற்றி ஈ-டிவி, மா-டிவியிலெல்லாம் பரபரப்பாக செய்திகள் வெளியாயின. பொதுமக்கள் பேட்டி எடுக்கப்பட்டார்கள். helmet அணிந்தால் தலை வலிக்கிறது, கழுத்து வலிக்கிறது என்றெல்லாம் சிறுபிள்ளைத்தனமாகப் புலம்பினார்கள். "ஓ, அப்படியா? உலகெங்கும் helmet அணிகிறார்களே, அவர்களுக்கு வராத தலைவலி, கழுத்து வலியெல்லாம் இவர்களுக்கு வந்து விட்டதா?" என்று தொலைகாட்சித் திரையில் தோன்றி பதிலடி கொடுத்தார் மேற்கூறிய துணை கமிஷனர். கடமையைச் செய்யும் காவலதிகாரிகள் தூக்கியடிக்கப் படுவதைப் போல், இப்போது அவர் எந்தத் துறையில் தூக்கியடிக்கப்பட்டுள்ளார் என்றுத் தெரியவில்லை. ஆனாலும், அவரது சிறப்பான பணிக்காக ஒரு சர்வதேச விருது கிடைத்த செய்தியை இங்கு காணலாம்.
வேண்டா வெறுப்புடன் அணிய ஆரம்பித்திருந்தாலும், பழக்கமாகிவிட்ட காரணத்தால் தொடர்ந்து helmetஐப் பயன்படுத்துகிறேன். பெங்களூருக்கு மாற்றல் ஆகி வந்த போது இங்கும் helmet கட்டாயமாக்கப்பட்டது. ஏற்கனவே பயன்படுத்திக் கொண்டிருந்ததால் பிரச்சனையில்லை. ஆனால் வேறொரு மாற்றம் நிகழ்ந்தது. முன்பு scooter ஓட்டிக் கொண்டிருந்ததிலிருந்து இப்போது bikeஇற்கு மாறியிருக்கிறேன். இந்த அனுபவம் புதிதென்பதால் கொஞ்சம் பழக்கமாவதில் பிரச்சனை இருந்தது. ஒரு முறை கடும் மழையில் இரவு 3 மணிக்கு அலுவலகத்திலிருந்து திரும்பிக் கொண்டிருக்கையில், எதிரே வந்த கார் கொஞ்சம் zig-zagஆக என்னை நோக்கி வர, அதனால் கலக்கமடைந்து நான் முன் பிரேக்கை அழுத்த, வண்டி சறுக்கிக் கொண்டு விழுந்தது. விழுந்த அந்த கணத்தில் எனது தலை நேராக சாலையில் போய் மோதியது. அன்று helmet அணிந்திருக்காவிட்டால் விளைவுகளை எண்ணிப் பார்ப்பதற்கே அச்சமாக உள்ளது. வேறெந்தச் சேதமுமின்றி எனது பயணத்தைத் தொடர்ந்தேன். அதே போல் மழை நேரத்தில் முன் பிரேக்கை அழுத்தி மேலும் இரு முறை சறுக்கி விழுந்திருக்கிறேன். கடைசி முறை ஏற்பட்ட அனுபவத்தை விரிவாக இவ்விடுகையில் விளக்கியுள்ளேன் :)
இப்போது தமிழகத்தில் கட்டாயத் தலைக்கவச நிபந்தனை அறிவிக்கப்பட்டு பின்னர் வாபஸ் பெறப்பட்டு விட்டதாக அறிகிறேன். அது பற்றி வலைப்பதிவுகளில் பல விதமான கருத்துகள் :) ஒரு இரு சக்கர மோட்டார் வாகனத்தில் பயணம் செய்ய helmet அவசியமே என்று எனக்குப் படுகிறது (அதன் வேகம், அதிகரிக்கும் விபத்துகள் / உயிரிழப்புகள், போன்ற காரணங்களால்). இந்த அடிப்படை ஒழுங்கை உறுதி செய்வதற்குக் கூட ஒருவர் பொது நல வழக்கு தொடுக்க வேண்டியிருக்கிறதே என்று நினைத்தால் விரக்தியாக உள்ளது. இப்போது அரசும் பின்வாங்கிக் கொண்டுள்ளது.
வாங்கிய helmetஐ என்ன செய்வது என்று குழம்பிப் போயிருப்பவர்களுக்கு ஒரு யோசனை: அதை நீங்கள் அணிந்து கொண்டு பாதுகாப்பாகவே பயணம் செய்யலாம். இந்த யோசனை உங்களுக்கே தோன்றியிருக்க வாய்ப்பிருக்கிறது. இருந்தாலும்..........
வெள்ளி, மே 18, 2007
கறுப்பு ஞாயிறு
இன்றைய heavy metal எனப்படும் இசைக்கு முன்னோடி என அறியப்படுபவர்கள் இந்த Black Sabbath குழுவினர்கள். எழுபதுகளில் தொடங்கி, தொடர்ந்து இசை ஆல்பங்களை வெளியிட்டு வந்திருக்கிறார்கள். எண்பதுகளில் அதன் முன்னணிப் பாடகரான Ozzy Osbourne குழுவிலிருந்து வெளியேற்றப்பட்டு, அவருக்கு பதிலாக Ronnie James Dio அந்த இடத்தைப் பிடித்தார். Dio அதன் பிறகு பல முறை குழுவிலிருந்து வெளியேறி, மீண்டும் இணைந்து கொண்டுள்ளார். இப்போதைய இணைப்பும் அத்தகையதே. எது எப்படியோ, ரசிகர்களுக்குக் கொண்டாட்டம்தான் இத்தகைய கூட்டுறவுகளால். Black Sabbath பற்றி பேசும்போது Ozzy Vs. Dio ஓப்பீட்டைச் செய்யாமலிருக்க முடியாது. Ozzy இருந்த காலத்தில்தான் குழுவின் ஆரம்பக் கால hit பாடல்கள் வெளிவந்தன. ஆனால், நாட்கள் செல்லச் செல்ல, அவரது ஈடுபாடு / திறமை / பங்களிப்பு ஆகிவை கேள்விக்கிடமாகியிருக்கலாம். குழுவுக்கு ஒரு புத்துணர்ச்சி தேவைப்பட்ட போது அவரது வெளியேற்றம் தேவையானதொரு மாற்றமாக இருந்தது. அவருக்கு மாற்றாக வந்த Dio ஏற்கனவே Rainbow இசைக்குழுவின் முன்னணிப் பாடகராக இருந்து, அதிலிருந்து வெளியேறியவர். (Rainbowவின் hit பாடல்களெல்லாம் Dio பாடியவைதான் என்பது எனது தாழ்மையான கருத்து. Black Sabbath விஷயத்திலும் அது உண்மையாக இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். ஆனால் Ozzy பாடிய அவர்களது பல ஆரம்ப காலப் பாடல்கள் வெகு அருமையானவை) அவர் வந்து இணைந்ததும் வெளியான Heaven & Hell என்ற வெளியீடு பல உச்சங்களை எட்டியது. நிச்சயமாக Dio ஒரு சிறப்பான பாடகர் என்பதில் எந்தவொரு ஐயமும் கிடையாது. Ozzy பற்றி அப்படியெல்லாம் எதுவும் கூற விரும்பவில்லை :)
Black Sabbathஇன் இசைக்குச் செல்வதற்கு முன் கொஞ்சம் அவர்களது ஆன்மீகத்தைப் பற்றி: அபாரமான இசைத் திறமையைப் பெறுவதற்கான உத்திகளில் ஒன்று, சாத்தானிடம் ஆன்மாவை விற்பது (sell your soul to the devil), அதற்கு பதிலாக வேண்டிய கலைத் திறமையைப் பெற்றுக் கொள்வது, என்று மேற்குலகில் (விளையாட்டாக) ஒரு ஐதீகமுண்டு. விளையாட்டு வினையாகி விடுவது போல், பல இசைக்குழுக்கள் சாத்தானிய சடங்குகளில் ஈடுபடுவதாக வதந்திகள் பரவிக் கொண்டிருந்தன. பாடல் வரிகளிலும் உட்பொருள் வைத்து சாத்தானின் மகிமைகளைப் போற்றிக் கொண்டிருந்தன இசைக் குழுக்கள், அல்லது அவ்வாறு குற்றம் சாட்டப்பட்டன. இந்தக் கதைகளில் தனி கவனம் செலுத்திக் கொண்டு ஒரு கும்பல் அலைந்து கொண்டிருந்தது. இந்த வகையில், சாத்தானுடன் தொடர்பிருந்ததாக நம்பப்பட்ட குழுக்களில் ஒன்று இந்த Black Sabbathஉம் ஆகும். அவர்களது பாடல்களின் சிலிர்க்க வைக்கும் தொனியிலிந்து இது உண்மையாக இருக்கலாம் என்ற உணர்வு ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
Black Sabbathஇன் தலைவர் என்று கருதப்படக்கூடியவர் அதன் கித்தார் கலைஞர் Tony Iommi. அவரது சிறப்புத்தன்மை அவரது ஆபாரமான, உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் riffs. riff - இதைத் தமிழ்ப்படுத்தணும்ன்னா, ஒரு பாடலோட இதயத்துடிப்பு மாதிரி திரும்பத் திரும்ப ஒலிச்சிக்கிட்டே இருக்குமே, அதுதான். ரிதம்ன்னு தவறா புரிஞ்சுக்காதீங்க. ரிதம் வெறும் தாளம் மட்டும்தான். riff அந்தத் தாளத்துக்கு மேல வர்ற அமைப்பு. ஒரு மெட்டை உள்ளடக்கிய, தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருக்கும் ஒரு ஒலியமைப்பு. ஒரு பாடலின் moodஐ நிர்ணயிப்பது இந்த riffதான். Tonyயின் வாசிப்பில் இந்த riff பிரதானமாக ஒலிப்பதைக் காணலாம். Black Sabbathஇன் பல பாடல்களின் வெற்றிக்கு அவற்றின் கவர்ச்சிகரமான riffsஏ காரணம். (Ozzy அல்ல ;) ) riffs மட்டுமல்லாமல், அவரது solosஉம் (அதாங்க, தனி ஆவர்தனம்ன்னு சொல்வோமே, அது) நம்மை உயரங்களுக்கு எடுத்துச் செல்லக்கூடியவை. சொல்ல முடியாத உணர்வுகளையெல்லாம் ஏற்படுத்தக் கூடியவை.
Bill Ward இக்குழுவின் drums கலைஞர். பல பாடல்களில் அவரது அசத்தலான வாசிப்பைக் கேட்கலாம். ஒரு Jazz drummerஐப் போன்ற சுதந்திரமான, கலக்கலான வாசிப்பு, variations, அவ்வப்போது ஆச்சரியப்படுத்துவது, என்று, பாடல்களுக்கு drums ஒரு தனி பரிமாணத்தை வழங்குவதை மறுக்க முடியாது. அதே போல், குழுவின் bass guitar கலைஞரான Geezer Butlerஇன் வாசிப்பையும் கூர்ந்து கவனித்தால், அது பாடல்களுக்குப் புதுப் புது அர்த்தங்களைக் கற்பிக்கும். அருமையான (bass) solos, மற்றும் பாடல்களுக்கு வித்தியாசமான backing........ பல இடங்களில் leadஉடன் சேர்ந்து ஒலிப்பது, வேறு பல இடங்களில் leadஇலிருந்து தனித்து வேறு notes ஒலிப்பது, அப்படி இரு வேறு ஓலிகள் ஒருங்கிணைந்து ஏற்படுத்தும் பாதிப்பு, என்று உன்னிப்பாகக் கேட்டால் கூடுதல் பயன்களைப் பெறலாம்.
தனித்தனியாக குழுவினரின் அருமை பெருமைகளைப் பட்டியலிட்டு விட்டேன். மொத்தக் குழுவின் இசை எப்படி என்றுக் கேட்டீர்களென்றால், ஒரு eerie, அச்சமேற்படுத்தக் கூடிய தொனியில், அதே சமயம், மனதைக் கவரும் இசையை வழங்கியுள்ளனர் இந்த Black Sabbath குழுவினர். அடிமைப்படுத்தும் இசை. கவர்ந்திழுக்கும் தீமை (evil) :)
என்னிடமுள்ள இவர்களின் குறுவட்டுகள்:

இரண்டையுமே பரிந்துரைக்கிறேன். இவர்களைப் போன்ற பிற இசைக்குழுக்கள்: Deep Purple, Rainbow, Whitesnake, Uriah Heep..... (இவற்றில் எதாவது உங்களுக்குப் பிடித்திருந்தால், Black Sabbathஐ நம்பிக்கையுடன் கேட்கலாம். அல்லது Black Sabbath பிடித்துப் போனால் இவற்றையும் முயற்சிக்கலாம்).உங்கள் வசதிக்காக, சில Black Sabbath பாடல்களை இணைத்திருக்கிறேன், கேட்டு மகிழுங்கள்.
Ozzy பாடிய Wicked World (பாடல் மட்டுமே, நிகழ்படம் கிடையாது):
Dio ஒரு live நிகழ்ச்சியில் பாடிய Die Young என்ற பாடலின் ஒளிப்பதிவு:
ஒன்றே குலம், ஒருவனே சாத்தான்!
ஞாயிறு, ஏப்ரல் 22, 2007
ஐப்பீ
"“ஓ… என் ஐ.பி முகவரியை நீ ஏன் சொன்னாய்”, என்று பொங்குவதில் அவ்வளவு விஷயம் இல்லை. அப்படி ஒன்றும் அது அதி இரகசியம் இல்லை. நீங்கள் செல்லுகிற ஒவ்வொரு இடத்திலும் ஐ.பி முகவரியைச் சொல்கிறீர்கள். நீங்கள் பின்னூட்டம் இடும் ஒவ்வொரு பதிவிலும் உங்கள் முத்திரையையும் அடையாளத்தையும் விட்டு வருகிறீர்கள்."
இதில் மூன்றாம், நானகாம் வாக்கியங்களில் முழு உடன்பாடு. (இரண்டாம் வாக்கியத்தைப் பற்றி, பிறகு) ஆனால் அவற்றைக் கொண்டு முதல் வாக்கியத்தை நியாயப்படுத்த முடியாது என்பது எனது கருத்து. செல்லுமிடமெல்லாம் ஐப்பீ முகவரியைத் தெரிவிப்பது எனது சொந்தத் தேர்வின் விளைவு (result of my personal choice) - எனது நம்பிக்கைக்குப் பாத்திரமான தளங்களுக்கு மட்டுமே செல்கிறேன், அவற்றிற்கு எனது கணினியின் முகவரியைத் தெரிவிக்க வேண்டும் என்ற முழுமையான புரிதலின் பேரில், மற்றும் அவை அதனை துஷ்பிரயோகிக்க மாட்டா, என்ற நம்பிக்கையின் பேரில்.
இப்போது இரண்டாம் வாக்கியம். அப்படி ஒன்றும் அது அதி இரகசியம் இல்லைதான் - நானே அதைத் தெரிவிக்கும் பட்சத்தில். நான் தெரிவிக்காத ஒரு நபருக்கு அது தெரியவருமானால், எனது பாதுகாப்பு சமரசம் செய்யப்பட்டதாகவே அதை எடுத்துக் கொள்ள வேண்டும். வீட்டுக்கு ஆட்டோ அனுப்பக் கூடிய ஒருவரை எனது வீட்டு முகவரி சென்றடையுமானால் அது எவ்வளவு பாதுகாப்பான ஒரு நிலைமையோ, அவ்வளவு பாதுகாப்பான நிலைமையே, எனது ஐப்பீ, நான் தராத ஒருவரிடம் சென்று தஞ்சமடைவது. எனது ஐப்பீயைக் கொண்டு ஒருவர் என்னவெல்லாம் செய்யக்கூடும்? முதலில் எனது கணினியை ஊடுருவ முயற்சிக்கக் கூடும். அது முடிந்தால் அதில் spyware, malware, நிறுவக்கூடும். பிறகு எனது நடவடிக்கைகளைக் கண்காணிக்கக் கூடும். எனது சொந்தத் தகவல்களை (அலுவலக மின்னஞ்சல் / வங்கிக் கடவுசொற்கள், இத்யாதி) எனது அனுமதியின்றி பெற்றுக் கொண்டு, மோசடிகளை நிகழ்த்தக் கூடும். அல்லது எனது கணினியை ஒரு spam mail serverஆக மாற்றக்கூடும் :) இவையெல்லாம் செய்ய முடியாத படிக்கு எனது கணினியைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டியதுதான். இருந்தும் நாளொரு மேனி, பொழுதொரு வண்ணமாக புதுப் புது வகையான ஊடுருவல்கள் தோன்றிக் கொண்டே இருக்கும் இன்றைய நிலையில், நமக்குத் தெரியாதவர்களை நமது சொந்தத் தகவல்கள் (ஐப்பீயும் இதில் அடக்கம்) சென்றடையா வண்ணம் உறுதி செய்து கொள்வதே சிறந்த பாதுகாப்பு நடவடிக்கை.
இப்போது முதல் வாக்கியம். மேற்கூறிய காரணங்களால், எனது ஐப்பீ unauthorized நபர்களை அடைவது பற்றி நான் கவலையாவது கொள்ள வேண்டும். அது குறித்து பொங்கலாமா, கூடாதா என்பது சூழ்நிலையைப் பொறுத்தது. என்னுடன் வணிக உறவு வைத்திருக்கும் ஒரு சேவை வழங்குனர் எனது பாதுகாப்பை சமரசம் செய்தால் ஒரு வேளை அவரிடம் பொங்குவேனோ என்னவோ. அப்படி எந்தவொரு உறவும் இல்லாத இடங்களில் எனது சொந்தத் தகவல்களை (மீண்டும், ஐப்பீயும் இதில் அடக்கம்) வெளியிடுவது at my own riskஏ ஆகும், அவை எந்த நேரமும் சமரசம் செய்யப்படலாம் என்ற முழூ புரிதலின் பேரில்.
திங்கள், ஏப்ரல் 16, 2007
வியர்டுரை
முதலில், எனது வினோதங்களைப் பிரஸ்தாபிக்கும்படி அழைப்பு விடுத்த லிவிங் ஸ்மைல் வித்யாவுக்கு நன்றி.
பிறகு, ஒரு சிறிய flashback - அதிகம் பின்நோக்கிப் போக வேண்டியதில்லை, ஒரு நான்கைந்து நாட்கள், அவ்வளவே. இடம் - Madras Bank Road, Bangalore. நேரம் - இரவு சுமார் எட்டரை மணி. வளைந்து நெளிந்து செல்லும் சாலை. லேசாகத் தூறல் போட்டிருந்தது. சிக்னல் கிடைத்ததுதான் தாமதமென விர்ரென முன்னோக்கிப் பாய்ந்தது ஒரு மோட்டார் பைக். அதில் அப்போதுதான் gymமில் (இரண்டாவது நாளாக) workoutஐ முடித்து விட்டு வரும் ஒருவன். work out தந்த உற்சாகம் / தன்னம்பிக்கை / over-confidence (இதில் நீங்கள் விரும்பியதை எடுத்துக் கொள்ளலாம்) -இன் காரணத்தால், சிறு மழையைக் கண்டு எச்சரிக்கை அடைவதற்கு பதிலாக, மேலும் உற்சாகமடைகிறான். (சிறுமழையைக் கண்டு மோட்டார் வாகன ஓட்டுனர்கள் ஏன் எச்சரிக்கை கொள்ள வேண்டும் என்று எண்ணுபவர்கள் கட்டாயம் இவ்விடுகையை மேற்கொண்டு படிக்க வேண்டும்). அவனது உற்சாகத்தை வண்டியின் accelerator பிரதிபலிக்கிறது. தனக்கு முன்னால் சென்று கொண்டிருந்த ஒவ்வொரு வாகனமாகக் கடந்து அதிவேகத்தில் சென்று கொண்டிருக்கிறான் நமது candidate. (candidate - ஆந்திர வழக்கின்படி, person / ஆள் என்பதைக் குறிக்கும்)
நம் ஆள் எப்போதும் தனக்கு முன்னால் செல்லும் வண்டியை மட்டும் பார்ப்பது கிடையாது, அதற்கும் முன் சில வண்டிகள் எவ்வாறு செல்கின்றன, எவை வேகத்தைக் குறைக்கின்றன என்றெல்லாம் sub-consciousஆகவே கவனித்துக் கொண்டு செல்லும் பேர்வழி ஆவான். அப்படி, தனக்கு ஓரிரு வாகனங்களுக்கு முன் வேகமாகச் சென்று கொண்டிருந்த ஒரு ஸ்கூட்டர், திடீரென்று வேகத்தைக் குறைத்து, நேராகப் போவதா அல்லது வலது பக்கம் (Museum roadக்குள்) திரும்புவதா என்று குழம்பிக் கொண்டிருந்ததை நம் candidate தனது ஞானக் கண்ணாலேயே அறிந்து விடுகிறான். அப்படியே, தான் சென்று கொண்டிருக்கும் வேகத்தில் தொடர்ந்தால் அந்தக் குழப்பவாதியின் (வண்டியின்) பின்புறத்தை சேதப்படுத்துவதுதான் நடக்குமென்றும் ஆழ்மனதில் உணர்ந்து விடுகிறான். உடனே, தனது முன் பின் சக்கரங்களுக்கான பிரேக்களை அழுத்தி, வேகத்தைக் குறைக்க முயலுகிறான்.
ஆனால், மழை நீராலும் எண்ணைக் கசிவுகளாலும் ஈரம் தோய்ந்த சாலையில், அவனது பைக் சறுக்கிக் கொண்டு தனது vertical நிலையிலிருந்து horizontal நிலைக்கு மாறி, தனது பயணத்தை சிறிது தூரம் தொடர்ந்து விட்டு, பிறகு நிற்கிறது. நம் ஆளுக்கு இவ்வண்ணம் நிகழ்வது இது மூன்றாவது முறை. சென்ற இரு முறைகளும் தனது உள்ளங்கைகளில் land ஆகி, எலும்பு முறிவு எதுவும் ஆகாமல் தப்பித்ததால், எப்படி விழ வேண்டுமென்பது கிட்டத்தட்ட அவனுக்கு பழக்கமாகி விட்டிருந்தது. இப்போதுதான் வினோதத்திலும் வினோதம் நடந்தது.
அவனைப் பின் தொடர்ந்து மேலும் மூன்று மோட்டார் பைக்குகள் அவனைப் போலவே சறுக்கிக் கொண்டு விழுந்தன. அவற்றில் ஒன்று விழுந்து கிடக்கும் நம் ஆளின் மீதே வந்து விழுந்தது. அதன் காரணமாக, சேதமின்றி விழ முடிந்தவனால் சேதமின்றி எழுந்திருக்க முடியாமல் போய்விட்டது. சரி, யாராவது இந்த பைக்கை முதுகின் மீதிருந்து எடுப்பார்கள் என்று காத்திருந்தான். சிறிது நேரமாகியும் யாரும் எடுக்காமல் போகவே, 'somebody pls take this bike off me' என்று கூச்சலிட்டான். (Bob Dylan 'Ma, take this badge off of me' என்று பாடிய மனநிலையில்தான் நம் ஆளும் அப்போது இருந்திருப்பானோ என்று எனக்கு ஒரு ஐயம்) அது யாருக்காவது கேட்டதோ இல்லையோ. கொஞ்சம் நேரம் கழித்து தன் மீதிருந்த பாரம் அகற்றப் பட்டு, அவனால் எழுந்திருக்க முடிந்தது.
எழுந்ததும் gymமில் warm up செய்வது போல் தனது கைகளையும் கால்களையும் நீட்டி மடக்கிப் பார்த்துக் கொண்டான், எலும்புகளெல்லாம் நலமா என்று. இடது கை கொஞ்சம் படுத்தியது. சறுக்கிய வீரர்கள் அனைவரது வண்டிகளும் வரிசையாக சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டன. ஒருவரை ஒருவர் விசாரித்துக் கொண்டார்கள். எல்லாரும் நலமே என்று தெரிந்த பின், வண்டிகள் மீண்டும் பிரயாணப் பட்டன. நம் ஆளும் தனது 200கிலோ எடையுள்ள வண்டியை, படுத்தும் இடதுகையையும் பொருட்படுத்தாது, வீட்டை நோக்கிச் செலுத்தினான்.
இடதுகையில் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகித்து மருத்துவமனையில் சோதனை செய்து பார்த்ததில், ஒன்றும் பாதிப்பில்லை என்று தெரிய வந்தது. வண்டியை விற்று விட வேண்டும், இனி அது தேவையில்லை என்றெல்லாம் தோன்றியது. மறுநாள் செய்தித்தாளை வாசித்ததில், முன்தினம் பெய்த லேசான மழையால் மற்றும் பெங்களூரின் எண்ணை தோய்ந்த சாலைகளால்), இது போன்ற நிகழ்வுகள் நகரின் பல இடங்களிலும் ஏற்பட்டு, கிட்டத்தட்ட முப்பது இரு சக்கர வாகன ஓட்டுனர்கள் இது போல் சறுக்கினார்கள் என்று தெரிய வந்தது. சே, வண்டியைக் குறை சொல்லி விட்டோமே, நாம்தான் பார்த்து ஓட்டியிருக்க வேண்டும்.
சக்கரங்களின் காற்றழுத்தத்தையும் சரிபார்த்திருக்க வேண்டும் என்றெல்லாம் எண்ண ஆரம்பித்தான்.
இப்போது ஒரு வார ஓய்வில் இருந்து கொண்டு, இடது கை வலியை மட்டுப்படுத்த Proxyvonகளை விழுங்கிக் கொண்டு (மருத்துவர் ஆலோசனைப் படிதான் - இதுல வேற எதுவும் weirdness கிடையாது. இந்த மாதிரின்னெல்லாம் நினைச்சிடாதீங்க) இந்த இடுகையை எழுதிக் கொண்டிருக்கிறான் நம் candidate, எப்போது தன்னால் மீண்டும் வண்டியை ஓட்ட முடியும் என்ற ஆதங்கத்துடன்.
இக்கதை நமக்கு அளிக்கக்கூடிய படிப்பினை............. வேண்டாம், இதற்கு மேல் சொதப்பப் போவதில்லை. :)
செவ்வாய், மார்ச் 13, 2007
இணையத்தை ஊக்க மருந்தில் இயங்க வைக்க.... (Internet on Steroids)
உங்கள் இணைய இணைப்பின் settings பற்றி கொஞ்சம் பரிச்சியமிருந்தால் இதைச் செய்வது மிக எளிது. கீழே உள்ள படத்தைப் பாருங்கள்:

மேலே காட்டியுள்ளதைப் போல் connection properties என்ற dialogஐத் திறக்க வேண்டும். இதை Windows நிறுவப்பட்ட கணினிகளில், Control Panel > Network Connections வழியாக அடையலாம். இதிலிருந்து Internet Protocol என்பதைத் தேர்வு செய்து, அதன் propertiesஐத் திறக்க வேண்டும். அதற்கான dialog கீழே காட்டப்பட்டுள்ளது.

மேலுள்ள படத்தில், DNS server settingsஐ கவனிக்கவும். 208.67.222.222 என்பது பிரதான DNS serverஆகவும், 208.67.220.220 என்பது மாற்று DNS Serverஆகவும் இடப்பட்டுள்ளது. உங்கள் கணினிக்கும் இதே DNS server முகவரிகளை வழங்குங்கள். பிறகு OK செய்து உங்கள் தேர்வை உறுதி செய்யுங்கள். அதன் பிறகு மின்னல் வேக இணைய இணைப்பை அனுபவியுங்கள்். விரல் சொடுக்கும் நேரத்தில் பக்கங்கள் திறக்கும் அதி அற்புதத்தைக் கண்டு மகிழுங்கள்.
இது பற்றிய மேல்விவரங்களைக் காண இங்கே சொடுக்கவும்.
திங்கள், மார்ச் 05, 2007
(பி/இ)றந்த நாள் விழா
திரைப்படத்தின் உச்சக் காட்சியாக இந்தப் பிறந்த நாள் விழா அமைகிறது. ஒரு மூத்த வயது, அழகான, கவர்ச்சிகரமான பெண்ணின் பிறந்த நாள் விழா நள்ளிரவில் தொடங்குகிறது. அவரது இளம் வயதுக் காதலன், அவரது வளர்ப்பு மகள், மற்றும் காதலனின் (நடிப்பில் ஆர்வமுள்ள) நண்பன் என்று அடக்கவொடுக்கமான பங்கேற்புதான் அவ்விழாவில். நகர்ப்புறத்துச் சலசலப்பெல்லாம் இல்லாத ஒரு நாட்டுப்புறப் பண்ணை வீட்டில் வெறென்ன எதிர்பார்க்க முடியும்? ஆனால் கொண்டாட்டத்துக்கென்னவோ குறையில்லாது ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. அப்பகுதி வட்டார வழக்கப்படி ஒரு போட்டி நடத்தப்படுகிறது. அதன்படி, எல்லாருடைய கண்களும் கறுப்புத் துணியால் கட்டி விடப்படுகின்றன. அவ்வாறு கட்டிய நிலையிலேயே, வீட்டின் வெளியே ஒரு மரத்தில் தொங்க விடப்பட்ட ஒரு பொம்மை உருவத்தைத் தேடிக்கண்டு பிடித்து, கையில் வைத்திருக்கும் ஒரு குச்சியால் அந்த பொம்மையை அடித்து நொறுக்க வேண்டும். வெற்றிகரமாக யாரால் அவ்வாறு கண்டுபிடிக்க முடிகிறதோ அவரே வெற்றி பெற்றவர். இருண்ட நிலையில் அனைவரும் தடுமாறுகையில் முதிய பெண் வெற்றிகரமாக அதனைச் செய்து முடிக்கிறார். அவரது இள வயதுக் காதலனும், அவரது வளர்ப்பு மகளும் கண்கள் கட்டி விட்ட நிலையிலும் தடுமாறிச் சென்று ஓரிடத்தில் இணைகிறார்கள். அதை, அவர்களிடையே உள்ள இயற்கையான ஈர்ப்பைக் குறிப்பதாகக் கருத வாய்ப்பிருக்கிறது. (இளைஞருக்கு முதிய பெண்ணுடனான காதல் ஆட்டங்கண்டு கொண்டிருப்பதையும், அவர் இளம் பெண்ணின்பால் ஈர்க்கப் பட்டுக் கொண்டிருப்பதையும் முன்பு விவரித்திருந்தேன்).
ஆட்டம் முடிந்ததும் வீட்டின் உள்ளே சென்று கேக் வெட்டும் படலம் நடத்தப்படுகிறது. ஏற்பாடு செய்யப்பட்ட ஹிஸ்பானிய இசைக் கலைஞர்கள், தங்கள் கித்தார்களைக் கொண்டு இசை விருந்து படைத்துக் கொண்டிருக்கிறார்கள்.அவர்களுடன் சேர்ந்து பாடுகிறார்கள் விழாக் கொண்டாடுபவர்கள். சிறிது நேரம் இந்தக் கச்சேரி தொடர்கிறது. பிறகு வளர்ப்பு மகள் எழுந்து கொள்கிறார், தூங்கச் செல்வதாக. அவரை தடுத்துப் பார்க்கிறார்கள் அனைவரும். அவர் வேலையிருப்பதால் செல்வதாக உறுதியாகக் கூறிவிட்டு, தன் அறைக்குச் செல்கிறார். பிறகு முதிய பெண்ணும் அவரது காதலனும், தாங்களும் செல்வதாக அறிவிக்கிறார்கள். எஞ்சியிருப்பது இளைஞனின் நண்பர் மட்டுமே. குதூகலங்களில் கலந்து கொள்ளாது அனைவரும் விடைப் பெற்றுச் சென்றதால் அவருக்குப் பெருத்த ஏமாற்றமேற்படுகிறது. இசைக் கலைஞர்களிடம் இசையை நிறுத்துமாறு கூறிவிட்டு, தனது அறைக்கு வந்து தொலைக்காட்சியை இயக்குகிறார்.
தொலைக்காட்சியில் Godfather படம் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆகா, என்று பார்க்கத் துவங்குகிறார். கிட்டத்தட்ட அதில் வரும் மொத்த வசனமும் அவருக்கு மனப்பாடமாகியிருப்பதால், படத்தின் கூடவே தானும் வசனம் பேசுகிறார், ஏதோ தானே படத்தில் நடிப்பதாக நினைத்துக் கொண்டு. வெளியே இடியுடன் கூடிய மழை பெய்கிறது. முதிய பெண்ணுக்கு அவரது காதலனிடமிருந்து ஒரு பிறந்த நாள் பரிசு கிடைக்கிறது - காதல் முறிவு என்னும் பரிசு. அதனைத் தொடர்ந்து இருவருக்கும் வாக்குவாதம் நடந்து கொண்டிருப்பது நமக்கு சன்னல் கண்ணாடி வழியாகக் காட்டப்படுகிறது (வாக்குவாதப் பேச்சு ஒலிகளின்றி). மற்றொரு சன்னல் வழியாக இளம் பெண் கறுப்பு உடையிலிருந்து வெண்மை உடைக்கு மாறி, வெளியே கிளம்பும் ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருப்பது காட்டப்படுகிறது. மெதுவாக அவர் இறங்கி வருகிறார். பின்னணியில் Godfather வசனங்கள், உரத்த குரலில். வீட்டை விட்டு வெளியேறி மழையில் நடக்கிறார். ஒரு பேரிடி இடிக்க, அவர் கொண்டு போன குடையோ வேறொரு பொருளோ, ஒரு இடிதாங்கியைப் போல் செயல்பட்டு, அவரை எரித்துச் சாம்பலாக்குகிறது. தன் முடிவை விரும்பித் தேடிக் கொண்டு, தனது கனவு வாழ்க்கையை முடித்துக் கொள்கிறார் இளம் பெண்.
அவரது தற்கொலைக்கான காரணம் புரியாது போகலாம். இளைஞருக்குத் தன்மீது வந்த புதிய காதல் பற்றி சந்தேகமிருந்திருக்கலாம். மரம் விட்டு மரம் தாவும் குரங்கைப் போன்ற தன்மையுடைய இளைஞரின் காதலை ஏற்பதை விட சாவதே மேல் என்று நினைத்திருக்கலாம். அல்லது தனது வளர்ப்புத் தாயின் இழப்பின் மீது தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்வதில் விருப்பமில்லாதிருக்கலாம். பல்வேறு காரணங்களால் இளைஞரை உண்மையாகக் காதலித்த இளம் பெண் குரூரமான ஒரு முடிவைத் தேரந்தெடுத்து, தன் கனவுலக வாழ்க்கையை முடித்துக் கொள்கிறார். இளைஞரோ, தனது மாஜி காதலியின் பிறந்த நாளன்று, தனது உண்மைக் காதலியை இழக்கிறார்.
அடுத்த காட்சி - இளைஞர் தனது மாமனின் தூசி படிந்த கார் காட்சியறைக்குத் திரும்புகிறார். முதலில் கண்ட மீன், மீண்டும் காற்றில் நீந்துகிறது.
அதற்கடுத்த காட்சி - முதல் காட்சியில் வந்த எஸ்கிமோக்கள் மீண்டும் உரையாடுகிறார்கள். உரையாடலில் மீன் பிடிப்பதைப் பற்றி மட்டுமே பேசுகிறார்கள். கனவுகள், சாதனைகள், வாழ்க்கையின் குறிக்கோள்களைப் பற்றியெல்லாம் பேச்சுக்களில்லை. (Arizona Dream - 1993).
ஞாயிறு, மார்ச் 04, 2007
எனது சிறந்தத் திரைப்படம் (தொடர்ச்சி)
இளம் பெண்ணுடன் ஏற்பட்ட நெருக்கமான நிகழ்வினால் குழம்பிப் போயிருக்கிறார் இளைஞர். அந்த நேரம் பார்த்து ஒரு துக்கச் செய்தி. தன் கனவுகளில் பின்னடைவு ஏற்பட்டதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்கிறார் இளைஞரின் மாமன் (கார் விற்பனையாளர்). அவரது மரணப் படுக்கையில் அவரிடம் வாக்கு கொடுக்கிறார் இளைஞர், அவரது வணிகத்தையும், விதவையையும் நன்கு கவனித்துக் கொள்வதாக. அவரது இறுதிச் சடங்குகள் முடிந்து பல நாட்களாக நகரத்திலேயே இருந்து விடுகிறார் இளைஞர். ஆனாலும், விட்டுச் சென்ற காதலுறவு அவரை மறுபடியும் நாட்டுப்புறப் பண்ணை வீட்டிற்கே துரத்துகிறது. அங்கு அவருக்காக வெகு நாட்களாகக் காத்திருந்து ஏமாற்றமடைந்த காதலியின் கடுமையான கோபத்தை எதிர்கொள்கிறார். கோபம் கைகலப்பாக மாறி, பிறகு புணர்ச்சியில் முடிவடைந்து, சமாதானம் திரும்புகிறது. மீண்டும் பறக்கும் திட்டம் தொடரப்படுகிறது. இம்முறை வெற்றிகரமாக இயந்திரம் செயல்பாட்டு நிலையை அடைகிறது. வளர்ப்பு மகள் சாந்தமடைந்து, எந்த நாச வேலையிலும் இறங்காதது ஒரு காரணமாக இருக்கக் கூடும். முதிய பெண் கனவு நனவான மகிழ்ச்சியில் திளைத்திருக்கிறார். அந்த வெற்றிக்குக் காரணமான இளைஞருக்கோ குழப்பங்களே மிஞ்சுகின்றன. தனது காதல் முடிவை மீள் பரிசீலனைக்குட்படுத்தும் மனநிலையிலிருகிறார் அவர்.
கனவுகளின் பாரத்தைத் தயக்கமின்றிச் சுமந்து திரியும் மற்றொருவர், அந்த இளைஞரின் நண்பர். அவரது கனவு - ஒரு நடிகனாக வேண்டுமென்பது. இளைஞரின் முறை தவறிய காதலை அங்கீகரிக்காவிட்டாலும், அவருக்கு உறுதுணையாகத் திகழ்கிறார். ஒரு கலை நிகழ்ச்சியில், ஒரு விமானத்தால் துரத்தப் படுவது போல் (பல முறை தரையில் விழுந்து எழுந்து) நடித்துக்காட்ட, அது பார்வையாளர்களிடமிருந்து போதிய வரவேற்பைப் பெறாது போக, அவர்களின் ரசனையைக் குறை கூறுகிறார். பிறகு, முதிய பெண் வெற்றிகரமாக பறக்கும்போது, அந்தக் காட்சி உண்மையில் நடந்தேறுகிறது - அதாவது, அப்பெண்ணின் பறக்கும் இயந்திரத்தால் துரத்தப்பட, நம் நடிகர் அதிலிருந்து தப்புவதற்காகப் பலமுறை தரையில் விழுந்து எழுவது, ஒரு புன்னகையை வரவழைக்கும் காட்சி. இவரது பாத்திரம் கதைக்கு அதிக வலு சேர்க்காவிட்டாலும், 'வெற்றுக் கனவுகள்' என்ற கருத்தை வலியுறுத்துவதற்கு அவரது கதை உதவுகிறது.
இளைஞருக்கும் இளம் பெண்ணுக்குமுள்ள இடைவெளி மேலும் குறைகிறது. முதிய பெண்ணுடனான காதல் கொஞ்சங் கொஞ்சமாகக் கசந்து விட, இளம் பெண்ணின் பால் ஈர்க்கப்படுகிறார் இளைஞர். தனது காதல் தேர்வில் தவறிழைத்து விட்டதாக அவரிடம் ஒப்புக் கொள்கிறார். முதிய பெண்ணால் தான் பயன்படுத்தப்பட்டதாகவே உணர்வதாகக் கூறுகிறார். அவரது மேம்போக்கான குணத்தை இப்போதே உணர முடிந்ததாகத் தெரிவிக்கிறார். இளம்பெண்ணை அழைத்துக் கொண்டு எங்காவது ஓடிவிடத் தயாராக இருப்பதாகவும் தன்னுடன் வரும்படியும் இளம்பெண்ணை அழைக்கிறார். அவரோ, சில business விவகாரங்களை கவனிக்க வேண்டியிருப்பதால், தன்னால் அந்த அழைப்பை ஏற்று வர இயலாது என்று விடையளிக்கிறார்.
இந்நேரத்தில் முதிய பெண்ணின் பிறந்த நாள் வருகிறது. படத்தின் நீஈஈஈஈண்ட காட்சியும் உச்சக்கட்டமும் அதுதானென்பதால், அதற்கென ஒரு தனியிடுகை........ அடுத்த முறை மூட் வரும்போது :)
எனது சிறந்தத் திரைப்படம்
இரு எஸ்கிமோ இனத்தைச் சார்ந்த நபர்கள் பனி படர்ந்த ஒரு குளத்தில் தூண்டிலிட்டு மீன் பிடித்துக் கொண்டிருகிறார்கள். ஒருவர் முதியவர். மற்றொருவர் இளைஞர். இளைஞருக்குப் பல சந்தேகங்கள். அவற்றை அவர் எஸ்கிமோ மொழியில் பெரியவரிடம் கேட்க, தனது எல்லாம் தெரிந்தத் தொனியில் அக்கேள்விகளுக்கு விடையளித்துக் கொண்டிருக்கிறார் முதியவர். மீன் பிடித்தலில் ஆரம்பித்து, உரையாடல் வாழ்வியல் தத்துவங்களையெல்லாம் தொட்டுவிட்டுத் திரும்புகிறது (என்று subtitles தயவில் தெரிய வருகிறது). அதற்குள் தூண்டில் வலுவாக இழுபட, இருவரும் சேர்ந்து இழுக்கிறார்கள். இதுவரை கண்டிராத அளவுக்குப் பெரிய மீன் ஒன்று தூண்டிலில் சிக்கி, தண்ணீரிலிருந்து போராடிக் கொண்டே வெளிவருகிறது. தம்மிடமுள்ள சுத்தியலால் அதனை ஒரு போடு போடுகிறார்கள் - போராட்டம் நின்று மீன் தரையில் கிடத்தப் படுகிறது. அதை எப்படி கூறு போடலாம் என இருவரும் யோசித்துக் கொண்டிருக்கையில், மீன் உயிர்த்தெழுந்து காற்றில் நீந்தத் தொடங்குகிறது. நம்ப முடியாமல் பார்த்துக் கொண்டிருக்கும் இருவரையும் கடந்து ஒயிலாக ஒரு சுற்று சுற்றி, தூசான் (Tucson) நகருக்குப் பயணிக்கிறது, மீனும் கதையும்.
முன்பு கண்ட இரு நபர்களும் மறுபடியும் தோன்றுகிறார்கள், ஆனால் நவீன நகரத்து ஆட்களாக. முதியவர் கார் விற்பனையாளர். அவரோடு உள்ள இளைஞர் அவரது மருமகன். தொழில் கற்றுக் கொள்வதற்காக மாமனிடம் தஞ்சம் புகுந்தவர், பெற்றோர்களை விட்டு வெளியேறிய பின். மாமனின் கனவு, கார்களாக விற்றுத் தீர்த்து விடவேண்டுமென்பதே. அப்படி விற்ற கார்களை வரிசையாக நிறுத்தினால் அவை பூமியிலிருந்து சந்திர மண்டலம் வரை உள்ள தூரத்தை நிரப்ப வேண்டும். அவ்வாறாக கார்களை விற்று, பெரும் பணக்காரராக மாறி, சமூகத்தில் மதிப்பு மிக்க நிலையை அடைந்து விட வேண்டுமென்பதே அவரது குறிக்கோள். தனது கனவுலக வாழ்வின் நீட்சியாக, தனக்கு வயதில் மிகவும் குறைந்த ஒரு மாடல் பெண்ணையும் மணந்து கொள்கிறார். இந்தச் சூழலில் இளைஞர் தனது வாழ்க்கைப் பாடங்களை பெறுகிறார். அவர்களது கார் காட்சியறைக்கு வருகை தரும் இரு மேட்டுக்குடிப் பெண்களிடம் அவருக்குப் பரிச்சயமேற்படுகிறது.
அவ்விரு பெண்களில் ஒருவர் சற்று வயதானவர், ஆனால் கவர்ச்சியான தோற்றமுடையவர். அவர் ஒரு விதவை, மற்றும் அவருடன் வரும் இள வயதுப் பெண்ணின் வளர்ப்புத் தாய். இருவரும் தங்கள் நாட்டுப்புற பண்ணை வீட்டில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். ஏதோ காரணத்தால் இளைஞருக்கு இப்பெண்களுடன் சென்று அந்தப் பண்ணை வீட்டில் வசிக்கும் வாய்ப்பேற்படுகிறது. அந்த மூத்தப் பெண்ணுடன் ஏற்படும் காதலும் ஒரு காரணமே. தலைமறைவாகும் மருமகனைத் தேடி வருகிறார் அவரது மாமன், கூடவே இளைஞனின் நண்பனும். முதிய பெண்ணிடம் பேசிப் பார்க்கிறார் தனது மருமகனை விடுவிக்கும் படி. பழைய காருக்கருகே ஒரு புதிய காரை நிறுத்தினால் எப்படியிருக்கும் என்றெல்லாம் உவமையளித்துப் பார்க்கிறார். (தனது சொந்தக் கதையை சௌகரியமாக மறந்துவிட்டு). "உனது மகனாக இருப்பதற்கேற்ற வயதுடையவன் அவன்" என்று சொல்லிப் பார்க்கிறார். "ஆனால் அவன் எனது மகன் கிடையாது, திருவாளரே, அவன் எனது காதலன்" என்று விடை கிடைக்கிறது. சலிப்படைந்து போய் வலுக்கட்டாயமாக மருமகனை இழுத்துக் கொண்டு போகப் பார்க்கிறார் மாமன், இளைஞனது நண்பனின் உதவியுடன். அப்போது அப்பெண்ணின் துப்பாக்கி பேசுகிறது. நீளமான வேட்டைத் துப்பாக்கியால் ஓட ஓட விரட்டப் படுகிறார் மாமன். இளைஞரின் நாட்டுப்புற வாசம் தொடர்கிறது.
தன் காதலுக்காக எதை வேண்டுமானாலும் செய்வதாக இளைஞர் வசனம் பேச, அவர் முன் தனது கனவை விரிக்கிறார் அப்பெண்மணி. அவரது கனவு - ஆகாயத்தில் பறப்பது, ஒரு சுதந்திரப் பறவையைப் போல். விமானத்தில் அல்ல, தன் பட்டறையிலேயே உருவாக்கப்பட்ட ஒரு பறக்கும் இயந்திரத்தில். அவரது கனவை நனவாக்கும் வேலையில் இளைஞர் ஈடுபடுகிறார். ஆதிகாலத்தில் விமானத்தைக் கண்டுபிடிக்க என்னென்ன செய்தார்களோ, அனைத்தையும் தனது காதலிக்காக மீள் கண்டுபிடிப்பு செய்யும் பணியில் நாட்களைக் கடத்துகிறார். பல்வேறு காரணங்களால் இக்கண்டுபிடிப்பு தாமதப் படுகிறது. காதலியின் வளர்ப்பு மகளுக்கு இந்த விளையாட்டுகள் பிடிக்காததால், அவ்வப்போது இரவு நேரமாகப் பார்த்து, இயந்திரத்தை உடைத்து போடுகிறார் அப்பெண். அல்லது புயல் மழையால் அந்த இயந்திரத்தின் சிறகுகள் தாமாகவே பிய்த்துக் கொண்டு விடுகின்றன. அல்லது, சோதனையின் போது இயந்திரம் சிறிது தூரம் எழும்பி, மீண்டும் தரையிறங்கி விடுகிறது. ஒரு முறை, இயந்திரத்தை மூத்த பெண் செலுத்திக் கொண்டு செல்கையில், அட்டகாசமாக மேலெழும்பி, நன்றாகப் பறந்து விட்டு, கொஞ்சம் பலமாகக் காற்றடித்ததால் கட்டுப்பாடிழந்து வானுயரத்திலிருந்து தரையிலிருக்கும் ஒரு மரத்தின் கிளைகளின் மீது வந்து விழுகிறது (பெண்ணுடன் சேர்ந்து). உடல் முழுக்க கட்டுகள் போடப்பட்டு கட்டாய ஓய்வுக்குத் தள்ளப்படுகிறார் அப்பெண்.
வளர்ப்பு மகள் - தனது வளர்ப்புத் தாயின் போக்குகளுடன் கொஞ்சமும் உடன்பாடில்லாதவர். எப்பொழுதும் ஒரு அக்கார்டியன் இசைக்கருவியை வைத்துக் கொண்டு அதே ராகத்தைத் திரும்பத் திரும்ப இசைத்து, எரிச்சலை ஏற்படுத்திக் கொண்டிருப்பவர். இளைஞருக்கு அவர் மீது இயற்கையாகவே ஒரு வெறுப்பு மேலிடுகிறது. ஒரு இரவு நேரத்தில் எங்கோ கிடைத்த ஒரு கைத்துப்பாக்கியுடன் இந்த வளர்ப்பு மகளின் அறைக்குள் நுழைந்து விடுகிறார். தூங்கிக் கொண்டிருப்பதாக நினைத்து, முதுகைக் காட்டிப் படுத்திருக்கும் அப்பெண்ணைச் சுடுவதற்குக் குறி பார்க்கிறார். பிறகு கொஞ்சம் தயங்குகிறார். "ஏன் தயங்குகிறாய்? சுட்டு விடு!" என்று கட்டளையிடுகிறார் பெண் (அவருக்கென்ன முதுகிலும் கண்கள் உள்ளனவா என்று ஆச்சரியப் படவைக்கும் விதத்தில்.) இளைஞர் மறுத்து விட, "சரி அப்படியானால் வா, ஒரு மரண விளையாட்டு விளையாடலாம்" என்று இளைஞரை மேசைக்கு அழைக்கிறார். கைத்துப்பாக்கியிலுள்ள தோட்டாக்களில் ஒன்றை மட்டும் விட்டு வைத்து, மற்றவைகளை நீக்கி, இளைஞரை Russian roulette ஆட அழைக்கிறார். இளைஞர் மறுபடியும் தயங்க, "சரி, முதலில் எனது முறை" என்று தன் தலையைக் குறிவைத்து சுட்டுக் கொள்கிறார். துப்பாக்கி வெடிக்காது, உயிர் பிழைக்கிறார் இளம் பெண். அடுத்து உன் முறை என்று துப்பாக்கியை இளைஞரிடம் நீட்ட, இளைஞர் "எனக்கு இறந்து போக விருப்பமில்லை" என்கிறார். அது விளையாட்டு விதியை மீறுவதாகும் என்று கூற, இளைஞர் முதலில் தயங்கி, பின் ஒரு முறை சுட்டுக் கொள்கிறார். வெடிக்காததால் சலிப்பேற்பட்டு ஒன்றன் பின் ஒன்றாகப் பலமுறை சுட்டுக் கொள்ள (அவையும் வெடிக்காமல் போக), பெண் அவரை நோக்கிப் பாய்ந்து அவரிடமிருந்து துப்பாக்கியைப் பறித்து அவரைக் காப்பாற்றி, அவர் விளையாட்டு விதியை மீறியதாகக் கடிந்து கொள்கிறார். இச்சம்பவம் இருவருக்குமுள்ள உறவை மாற்றி ஒரு நட்புணர்வை ஏற்படுத்துகிறது. அந்த இளம் பெண்ணுக்கு, இளைஞரின் மீதுள்ளக் காதலும் வெளிப்படுகிறது.
(மூட் வரும்போது தொடரப்படும்)
சனி, பிப்ரவரி 17, 2007
கணினிகளுக்கான கவிதைகள்
என் வாசகர்களை நான் அவ்வளவாக விரும்புவதில்லை. மிகக் கறாரான பேர்வழிகள். ஆனால், பெரும் அறிவாளிகள். எத்தகைய சிக்கலானக் கருத்தை முன்வைத்தாலும், நொடிப்பொழுதில் அதை உள்வாங்கிக் கொள்வதில் தீரர்கள். மேலும், பலமொழிப் புலமையுடையவர்களென்பதால் அவர்களுக்கு எம்மொழியும் சம்மதமே. எனவே, அவர்களுக்காக நான் பல மொழிகளில் கவிதையெழுதுவதுண்டு. ஆனால் எல்லா வாசகர்களையும் ஒரே மாதிரி எடை போட்டு விடக்கூடாது. ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்தன்மையுண்டு. அந்தத் தனித்தன்மையை மதிக்காவிட்டால் என் கவிதை அவர்களிடம் செல்லுபடியாகாது. ஆகவே, ஒவ்வொரு வகையினருக்கும் தனித்தனியாகக் கவிதையெழுதுவேன். அவர்களனைவரும் நிறைவடைந்தாலே எனக்கு மகிழ்ச்சி.
கவிதையெழுதுவதற்கு நேரம் காலம் கிடையாதென்பார்கள். அது எனக்கும் பொருந்தும். எனது முழு நேரத்தொழிலுக்கு மத்தியில் கள்ளத்தனமாகக் கவிதையெழுதுவது, கிளர்ச்சி ஏற்படுத்தக்கூடிய ஒரு அனுபவம் - ஒரு கள்ளக் காதலியுடன் சரசமாடுவதைப் போல். அதேபோல் நடுநிசியில் தூக்கம் கெட்டுக் கவிதை எழுதுவதும் ஒரு சுகமான அனுபவம்தான். கண்கள் தூக்கத்தில் தானாக மூடிக்கொள்ள, மனமோ அகலமாய் விழித்துக் கொண்டு, கவிதை வரிகளை விரல் நுனிகளுக்குச் செலுத்திக் கொண்டிருக்கும் அந்தப் போராட்ட நிலையை உணர்ந்தாலன்றி விவரிக்க இயலாது. பேசாமல் கவிதை எழுதுவதையே முழு நேரப்பணியாகக் கொண்டிருக்கலாம். ஆனால் அப்போது கவிதை மீது இவ்வளவு நாட்டம் வந்திருக்குமா என்பது சந்தேகமே. 'வயிற்றுப் பிழைப்புக்கு வேறு தொழிலிருக்க, மனநிறைவுக்காகக் கவிதை' என்பதே சிறந்த ஏற்பாடாகும்.
சில சமயம் இந்தக் கவிதை எழுதுவதால் சலிப்பேற்படுவதுமுண்டு. சொல்ல விரும்பும் கருத்தை சரியான வகையில் சொல்வதற்குள் தாவு தீர்ந்து விடும். என்னதான் முயன்று பார்த்தாலும் சரியான சொற்பிரயோகங்கள் தட்டுப்படாமல் திணற வைத்துவிடும். அவ்வப்போது முழு நிறைவில்லாவிட்டாலும் கவிதையை ஒப்பேற்றி விடுவதுண்டு. அழகியலை மட்டும் பார்த்துக் கொண்டிருக்காமல், கவிதையின் இறுதி இலக்கிற்கு முன்னுரிமை அளித்து இவ்வாறு இத்துயரத்தை முடித்துக் கொள்வதுண்டு. ஒரு கவிதை அதன் முடிவை அடைந்தே தீர வேண்டும் என்று நாமே ஒரு எதிர்பார்ப்பை உருவாக்கிக் கொண்டு விடுவதால் ஏற்படும் நிலைமை இது. ஒரு முடிவுறாதத் தொடராகக் கவிதை நீண்டு கொண்டே போகுமானால், வாழ்வின் அத்துனை ரகசியங்களையும் அது வெளிக் கொணர்ந்து விடுமோ என்னவோ. ஆனால் அதற்கெல்லாம் மனிதப் பிறப்புகளான நமக்குப் பொறுமையிருப்பதில்லை.
நான் எழுதும் கவிதைகள் பெரும்பாலான மானிடர்களுக்குப் பிடிப்பதில்லை. பெரும்பாலும், அவை monitorகளுக்கு மட்டுமே. :) நான் அண்மையில் எழுதிய சில கவிதைகளின் தொகுப்பை இங்கே காணலாம்.
சனி, அக்டோபர் 28, 2006
ஒரு மோசடி பற்றிய முன்னறிவிப்பு
நாடெங்கிலும் ஆயிரக்கணக்கான ஏக்கர்கள் பரப்பளவுள்ள நிலப்பகுதிகளை வர்த்தக வட்டாரங்களாக (Special Economic Zones or SEZs) மாற்றி, அவற்றில் பெருந்தொழிற்சாலைகளை நிறுவி, இந்தியாவை உற்பத்தித் துறையில் உலக அளவில் முன்னணிக்குக் கொண்டு செல்லும் உன்னதத் திட்டம் ஒன்று துரித கதியில் நடைமுறைக்கு வந்துகொண்டிருக்கிறது. இத்தகைய வட்டாரங்கள் நூற்றுக்கணக்கில் ஒப்புதல் வழங்கப்பட்டு, வேகவேகமாக உருவாகிக் கொண்டிருக்கின்றன. மற்ற இடங்களைப் போலல்லாது, இங்கு இயங்கும் நிறுவனங்களுக்கு வரிச் சலுகைகள், விதி விலக்குகள், என்று பல வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. தொழிலாளர் நலன் காக்கும் சட்டங்கள், சுற்றுச்சூழலைப் பேணுவதற்கான வரைமுறைகள், இவையெல்லாவற்றிலிருந்தும் விடுமுறைதான். கண்ணாடி மாளிகைகள், ஐந்து நட்சத்திர விடுதிகள், golf மைதானங்கள் போன்ற ஆடம்பர அம்சங்கள் பொருந்திய இவ்வட்டாரங்களில் ஏற்றுமதி செய்வதற்கான பொருட்களே தயாரிக்கப்படுமாம். நம்மைப் போன்ற சாமானியர்களெல்லாம் இவற்றின் உள்ளே புகுந்து விட முடியாது. ஒரு வெளிநாட்டிற்குச் செல்வதைப் போல், தகுந்த அனுமதிகள் இருந்தாலேயே எவரும் உள்ளே அனுமதிக்கப் படுவார்கள் (அவற்றின் பளபளப்பைப் பாதுகாக்க வேண்டுமல்லவா?). லட்சக் கணக்கில் வேலை வாய்ப்புகள், இது வரையில் கண்டிராத அளவிற்கு வர்த்தக வளர்ச்சி, என்று இத்திட்டத்தினால் உண்டாகக் கூடிய பலன்கள் பட்டியலிடப்படுகின்றன.
இத்திட்டம் செயல்படும் முறையைப் பார்ப்போம். யார் வேண்டுமானாலும் இத்தகைய வட்டாரங்களை உருவாக்கலாம். அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், அந்நிய நாட்டு நிறுவனங்கள் என்று முதலீடு செய்யும் சக்தி படைத்த எவரும் இந்த அமைப்புகளை அமைக்கலாம். அவர்களது வேலையை எளிதாக்குவதற்காக அரசும் தனது சேவைகளை ஆற்றும். எத்தகைய சேவைகள்? திட்டப் பகுதி நிலங்களிலுள்ள விவசாயிகளை உருட்டி மிரட்டி, அவர்களிடமிருந்து நிலத்தைப் பறிப்பது, அதை அவர்கள் எதிர்த்தால் தனது கூலிப்படையான காவல் துறையை அவர்கள் மீது ஏவி அவர்களை நிராதரவாக்குவது, போன்ற விலை மதிப்பற்ற சேவைகள். இத்தகைய பங்களிப்பு அரசிடமிருந்து உறுதியாகக் கிடைக்கும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையைக் கொண்டிருந்ததனால்தான் முகேஷ் அம்பானியால் இத்திட்டத்தில் ஒரு அமைப்பாளராக இறங்க முடிந்தது. மகாராஷ்டிரத்தில் ஒரு நிலப்பரப்பை தத்தெடுத்துக் கொண்டு அதை ஒரு வர்த்தக வட்டாரமாக மாற்றும் பொறுப்பை அவரது ரிலையன்ஸ் நிறுவனம் ஏற்றுக்கொண்டுள்ளது. அப்பகுதியில் வாழும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஊடகங்களுக்குக் கொடுக்கும் பேட்டிகளில், அவரையும் அவரது நிறுவனத்தையும் அச்சிட முடியாத மொழிகளில் விமர்சிக்கின்றனராம். அதைப்பற்றி அவருக்கு பெரிதாக கவலையிருக்காது என்றே தோன்றுகிறது. அவருக்குத்தான் இந்திய அரசின் மீது அசைக்க முடியாத நம்பிக்கையிருக்கிறதே?
ஊடகங்களின் பங்கையும் இங்கு குறிப்பிட வேண்டும். அரசு அதிகாரிகள் தங்கள் நிலத்தை தரிசு நிலம் (barren land) என்று மதிப்பிட்டதை எதிர்த்து சில விவரமறிந்த விவசாயிகள் Google Earth வரைபடங்களுடன் தங்கள் நிலங்கள் விளைநிலங்களே என்று நிருபித்தார்களாம். இந்த செய்தித்துண்டைப் பிடித்துக் கொண்டு ஊடகம் (CNBC TV-18) செய்த திரித்தலை கவனியுங்கள்: "விவசாயிகள் Google Earth போன்ற நுட்பங்களைப் பயன்படுத்தியது உலகம் 'தட்டை'யாகிக் கொண்டிருப்பதையே உறுதி செய்கிறது. (Thomas Friedmanஐ தினந்தோறும் வழிபடும் நிருபர் போலிருக்கிறது). இப்படியாக, உலகத்தைத் தட்டையாக்கி, ஏற்றத் தாழ்வுகளைச் சமன்படுத்துவதுதான் SEZ திட்டத்தின் நோக்கமும் ஆகும். ஆகவே, SEZ போற்றி, போற்றி". கூஜா தூக்குவது என்று முடிவு செய்தபின், அதில் புதுமைகளைப் புகுத்துகின்றன, நம் ஊடகங்கள்.
அவலங்களுக்கிடையே முளைக்கப்போகும் இந்த அரண்மனைகளால் நாட்டிற்கு எதாவது பலன் கிட்டுமா? அல்லது ஆதாயமெல்லாம் அரண்மனைவாசிகளுக்குத்தானா? சாமானியர்களைத் தீவிரவாதிகளாக்கி, அவர்கள் கையில் ஆயுதங்களை ஒப்படைக்கும் விதமாகச் செயல்படும் ஆட்சியாளர்கள் இருக்கையில், யாரை முதலில் தூக்கிலிடுவது? ஒரு #1 செல்வந்தர் இந்தியாவின் மீதுள்ள அசைக்க முடியாத நம்பிக்கையைப் பிரகடனப்படுத்தும் இன்றைய நிலையிலிருந்து, கடைநிலையிலுள்ள ஒவ்வொரு நபரும் அத்தகைய பிரகடனத்தைச் செய்யும் நிலை என்றாவது ஏற்படுமா? கோடானுகோடி மக்களின் துயர் துடைக்கும் பணியை விட, ஆங்காங்கே 'பள பள' பிரதேசங்களை உருவாக்கும் பணி மிக எளிதானது (மற்றும் சுயலாபங்களை ஈட்டக்கூடியது) என்ற முடிவுக்கு நம் ஆட்சியாளர்கள் என்றைக்கோ வந்து விட்ட நிலையில், எந்தவொரு நம்பிக்கைக்கும் இனி இடமுள்ளதா?
இது பற்றிய சில செய்திச் சுட்டிகள்:
1. Economist வலைத்தளத்திலிருந்து
2. BBC வலைத்தளத்தில் ஒரு பிரபல பொருளாதார வல்லுனரின் கருத்துரை
3. The South Asian மின்னிதழில் ஒரு கட்டுரை
4. பொருளாதார நிபுணர் ஜக்தீஷ் பக்வதியின் கருத்து
5. இடதுசாரிக் கட்சியின் சீதாராம் யெசூரியின் அறிக்கை (இடதுசாரிகள் ஆளும் மேற்கு வங்க மாநிலம் படு சுறுசுறுப்புடன் இத்தகைய SEZக்களை உருவாக்கி வருகிறது என்பது கொசுறுச் செய்தி)
6. "இப்படியே போனால் நானும் 'மாவோயிஸ்ட்' ஆகி விட வேண்டியதுதான்" - முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கின் பேட்டி
ஞாயிறு, ஜூலை 16, 2006
கதைகளும் படிப்பினைகளும்
இந்த ஒரு வாரத்தில் என்ன சொல்ல வந்தேன் என்றுத் தெளிவுப்படுத்தும் முயற்சி இது. 'இந்தியா ஒளிர்கிறது' என்ற கோஷங்களையெல்லாம் அன்றாடம் கேட்டுக் கொண்டிருந்தாலும், தினசரி வாழ்வில் ஒரு மாபெரும் மக்கள் கூட்டம் இந்த மாற்றங்களாலெல்லாம் எந்தவொரு முன்னேற்றமும் அடையாமல், முன்பிருந்த நிலையிலேயே (அல்லது அதை விட மோசமான நிலையில்) தொடர்ந்து கொண்டிருந்த உண்மை நிலையைக் காண்கையில், 'எங்கேயோ உதைக்குதே' என்ற எண்ணம் தோன்றிக் கொண்டிருந்தது. இந்நிலையில்தான் நிகழ்ந்தன விவசாயிகள் தற்கொலை, கிராமப்புறப் பட்டினிச் சாவுகள் ஆகியன. அப்போதுதான் உறைத்தது 'trickle down economics' பேசும் நிபுணர்களின் அயோக்கியத்தனம். நடக்க இயலாதவொன்றைக் காட்டி, நம்மைக் குஷிப்படுத்தும் திட்டத்தைத்தான் நம் ஆட்சியாளர்களும் கொள்கை ஆலோசகர்களும் செயல்படுத்திக் கொண்டிருந்தார்கள் / கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் ஊடகங்களிலிருந்தாவது உண்மை நிலவரம் புலப்படக்கூடுமா என்று பார்த்தால், அவையும் மக்களின் கேளிக்கைத் தேவைகளையே நிறைவேற்றிக் கொண்டிருந்தன. அவ்வப்போது எங்காவது அசம்பாவிதங்கள் நடந்தால் அந்தந்த நேரங்களில் மட்டும் மக்கள் பிரச்சனைகளுக்குக் கூடிய கவனம் வழங்கப்படும். மற்ற நேரங்களில் business, as usualதான். இதில் ஆட்சியிலிருப்பவர்களை நோக்கி அடிவருடுதல் வேறு. கம்பியெண்ணிக் கொண்டிருக்க வேண்டிய சந்திர பாபு நாயுடுவை CEO of the State ஆக்கிய பெருமை நம் ஊடகங்களையே சேரும்.
இதுபோல் திரிக்கப்பட்ட உண்மைகளையே அன்றாடம் உட்கொள்ள வேண்டிய நிலையிலிருக்கும் நாம், உண்மையான ஜனநாயக நாட்டில் வாழ்ந்து கொண்டிருப்பதாக எண்ணிக் கொள்ள முடியாது. ஏனென்றால் ஆட்சியாளர்களைப் பற்றிய நம் கருத்துகள் / முடிவுகள் / தேர்வுகள் ஆகியன, இத்தகைய திரிக்கப்பட்ட உண்மைகளின் அடிப்படையிலேயே அமைகின்றன. ஒரு மாபெரும் மூளைச்சலவை செய்யப்பட்ட மக்கள் கூட்டம் என்று வேண்டுமானால் நம்மை விவரித்துக் கொள்ளலாம், நிச்சயமாக ஜனநாயகம் என்றல்ல.
சந்திர பாபு நாயுடு புகழேணியின் உச்சியில் இருந்த காலத்தில்தான் Hinduவில் திரு.P சாய்நாத்தின் ஒரு செய்தியறிக்கையைப் படித்தேன். வேறெந்த ஊடகத்திலும் கிடைக்காத ஒரு செய்தி (மற்றும் ஹைதராபாத்தில், மற்ற அலுவலக நண்பர்களும் அறிந்திடாத ஒரு செய்தி) அந்தக் கட்டுரையில் எனக்குக் கிடைத்தது. அதாவது ஆந்திர மாநிலத்தின் பெருவாரியான கிராமங்களில் மக்களின் பசியைப் போக்குவதற்காக கஞ்சி ஊற்றும் நிலையங்கள் (soup kitchens) தன்னார்வலத் தொண்டர்களால் நடத்தப்படுகின்றன என்பதே செய்தி. பல இடங்களில் இது மார்க்சீயக் கட்சியால் முன்னின்று நடத்தப்பட்டது என்பது உபரியான செய்தி (to give the devil his due. மேலும், பொதுவிடங்களில் உண்டி குலுக்கும் தோழர்களின் பங்களிப்பைக் குறைத்து மதிப்பிடக் கூடாதல்லவா?). IT powerhouse என்றெல்லாம் எல்லாத் தரப்பினராலும் செல்லமாக வர்ணிக்கப்பட்ட ஆந்திர மாநிலத்தின் கிராமப்புறங்களில், பெருவாரியான மக்கள் யாசகம் பெற்று வாழ்க்கை நடத்தும் அவல நிலையிலுள்ளனர் என்றத் திகைக்க வைக்கும் செய்தியை மற்ற ஊடகங்கள் எவ்வாறு தவற விட்டன? அல்லது திட்டமிட்டு இருட்டடிப்பு செய்தனவா, என்று எனக்கு இன்னமும் அது புரியாத புதிராகவே உள்ளது. இது போல் தமிழகத்தில் எத்தனை திகைக்க வைக்கும் செய்திகள் மறைக்கப்பட்டுள்ளன? மற்ற மாநிலங்களின் நிலவரம் எப்படி? இதற்கெல்லாம் நமக்கு விடைகள் கிடைக்காமலே போகலாம். 'கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய்' என்பதே நம் நாட்டின் நகர்ப்புற வாழ்க்கை கற்பிக்கும் அரிய பாடம்.
'இல்லாத பிரச்சினைகள்' குறித்தே இந்த ஒரு வாரம் முழுக்க எழுதியிருக்கிறேன். நம் ஊடகங்கள், ஆட்சியாளர்கள் மற்றும் (நானும் அங்கம் வகிக்கும்) மத்திய வர்க்கத்தினர், ஆகியோரைப் பொறுத்த வரை, அவை 'இல்லாத பிரச்சினைகள்'தாம். இப்பிரச்சினைகளைப் பற்றிய நம்பகமான source என்று நான் கருதும் ஒருவர் அளித்திருக்கும் தகவல்களை வைத்து, அவற்றின் அசல் வடிவத்தை விளக்க முயற்சித்திருக்கிறேன். அவற்றிற்குத் தீர்வுகள் வழங்கும் அளவுக்கு அனுபவமோ முதிர்ச்சியோ இல்லாத காரணத்தால், அத்தகைய core competence ;) உடைய ஒருவரது பங்களிப்பைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறேன்.
இன்று, இந்தத் தகவல்களைத் தொடர்ந்து, எனக்குத் தோன்றும் சில வலுவான எண்ணங்களை முன்வைக்க விரும்புகிறேன்.
- கிராமம் - இது எக்காரணம் கொண்டும் அழிக்க முடியாத ஒரு அமைப்பாக நம் அரசியல் சட்டத்தில் திருத்தியமைக்க வேண்டும். அதன் இறையாண்மை (sovereignty) சட்டத்தால் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டும்.
- தனியொருவனுக்கிங்கு கல்வியில்லையேல் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்
- தனியார்மயமாக்கம் - தேவையானது மற்றும் இன்றியமையாதது. ஆனால் அதன் engagement modelதான் கேள்விக்குரியது. நூறு கோடி இந்தியர்களின் சார்பாக அரசு என்றொரு அமைப்பு ஒற்றை வாடிக்கையாளனாகச் செயல்பட்டுக் கொண்டு, அது தனியாரை நோக்கி, "வாங்க, எனக்கு something குடுத்துட்டு இதோ இவங்கள இஷ்டத்துக்கு கொள்ளையடிச்சிக்கோங்க" என்று கூறும் ஏற்பாடு ஏற்றுக் கொள்ள முடியாதது. அதே நூறு கோடி இந்தியர்கள் ஒவ்வொருவரும் தனியாரை நோக்கி "என்னாப்பா, சொத்தையும் சொள்ளையுமா இருக்கு? வேற குடு" என்று விழிப்புணர்வுடன் தாம் பெற வேண்டியதை வற்புறுத்தி வாங்கிப் பெறும் நிலை ஏற்றுக் கொள்ளக்கூடியது, மற்றும் சாதகமானதுவும் கூட.
- வளர்ச்சித் திட்டங்கள் - இவை செயல்படுத்தப்படும் பகுதியிலுள்ள கிராம மக்களின் ஒப்புதல் இருந்தால் மட்டுமே, இவை முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும்.
- மக்கள் நலத் திட்டங்கள் - அவை யாருக்காகத் தீட்டப்படுகிறதோ, அந்தப் பலனாளிகளைக் கலந்தாலோசித்தே இவை செயல்படுத்தப்பட வேண்டும். அப்போதுதான் அவை அவர்களின் உண்மைத் தேவைகளை நிறைவேற்றும் வாய்ப்பைப் பெறும்.
சனி, ஜூலை 15, 2006
வறுமை குறித்த மாற்றுச் சிந்தனைகள்
ஒரு நிர்வாகவியல் 'குரு' எனக் கருதப்படுபவர் வறுமை / கடைநிலை மக்கள் பற்றியெல்லாம் எழுதினால் எவ்வாறிருக்கும்? ஆர்வத்தைத் தூண்டியதாலேயே இந்த நூலைப் படிக்கத் தொடங்கினேன். முழுவதும் படித்து முடிக்கவில்லையென்றாலும் பல முக்கியமான கருத்துகள் கூறப்பட்டிருப்பது தெரிந்தது. அவற்றின் மீது எனக்கு விமர்சனங்கள் இருந்தாலும், இந்த நூல் தரும் positive / ஆக்கப்பூர்வமான சில ஆலோசனைகள் பரிசீலிக்கப்பட வேண்டியது. நான் மிகவும் மதிக்கும் இந்த நிர்வாகவியல் குரு. திரு. C K பிரஹலாத். Michigan பல்கலைக்கழகத்தின் ஒரு விரிவுரையாளர். 'Core competence' என்ற சொற்றொடரை இவ்வுலக்குக்கு அளித்த பெருமை அவரையே சேரும். (இந்தச் சொற்றொடரை என்னைப் போன்ற 'tie கட்டிப் பொய் பேசும்' பணியிலிருப்பவர்கள் எவ்வளவு முறை பயன்படுத்தியிருப்போம் என்பதற்கு கணக்கே கிடையாது) இந்த நூற்றாண்டின் மிக முக்கிய நிர்வாகவியல் சிந்தனையாளர்களில் ஒருவர் என்றெல்லாம் வர்ணிக்கப்படும் இந்தியர். கிட்டத்தட்ட திரு.அமர்த்தியா சென் அளவுக்குப் புகழ் பெற்றவர். நொபெல் பரிசு ஒன்றுதான் missing :) அவர் எழுதிய நூல் The Fortune at the Bottom of the Pyramid.(கடைநிலைகளில் பொதிந்திருக்கும் பொக்கிஷம்) அதிலிருந்து எனக்குப் பிடித்த கருத்துகளை இங்கு வழங்குகிறேன்.
வறுமை வரி / அபராதம் (Poverty penalty): பெரும்பாலான சமூகங்களில் கடைநிலையிலிருப்பவர்களுக்கு 'வறுமை வரி' விதிக்கப்படுகிறது - வெளிப்படையாக அல்ல, ஆனால் மறைமுகமாக. அவர்கள் ஏழைகளாக இருப்பதனாலேயே அவர்கள் வாங்கும் பொருட்களுக்கும் சேவைகளுக்கும் ஆகாய விலை வழங்க வேண்டியுள்ளது. சில உதாரணங்களுடன் இந்நிலையை விளக்க முடியும். கீழே கொடுக்கப்பட்டது மும்பை மாநகரில் தாராவி குடிசைப்பகுதியில் ஆகும் சில செலவுகளை, வார்டன் ரோட் எனப்படும் பணக்காரர்கள் வாழும் பகுதியில் ஆகும் அதே செலவுகளுடன் ஒப்பிடும் ஒரு அட்டவணை:
| செலவு | தாராவி | வார்டன் ரோட் |
| 1. கடன் மீது செலுத்த வேண்டிய வருடாந்திர வட்டி | 600 – 1000% | ்12 – 18% |
| 2. தண்ணீர் (1000 லிட்டர்கள்) | ரூ.50/- | ரூ1.50/- |
| 3. தொலைப்பேசி (ஒரு நிமிடம்) | ரூ.2.50/- | ரூ.0.40 – 1.00/- |
| 4. டயரியாவுக்கான மருத்துவம் | ரூ.900/- | ரூ.90/- |
| 5. அரிசி (1 கிலோ) | ரூ.15/- | ரூ.12.50/- |
ஏழைகள் தங்கள் ஏழ்மைக்குக் கொடுக்க வேண்டிய விலை அதிகமானது. இந்த வறுமை வரியை அகற்றும் வகையில் கடைநிலை மக்களுக்கு இந்தப் பொருட்களையும் சேவைகளையும் குறைந்த / நியாய விலைக்கு வழங்க முன்வரும் தனியார் நிறுவனங்கள், அதிக விற்பனைகளையும் லாபங்களையும் ஈட்டக்கூடும். இது அனைத்துத் தரப்பினருக்கும் வெற்றிகரமாகவே முடியும். ஏனெனில், ஏழை மக்களைப் பொறுத்த வரை, முன்னர் ஆகாய விலைகளைக் கொடுத்து வந்ததற்கு பதிலாக நியாய விலைகளையே கொடுப்பதால், இதர அத்தியாவசியச் செலவுகள் செய்ய கைவசம் பண வசதி இருக்கும். உணவு, உடை, கல்வி, ஆரோக்கியம் போன்றவற்றை உறுதி செய்வதற்கு இந்தப் பணம் உதவும். தனியார் நிறுவனங்களுக்கோ, ஒரு புது வியாபாரச் சந்தையை இது திறந்து விடும். Saturate ஆகிப் போன நகர்ப்புற, மேல்தட்டுச் சந்தைகளை விட, இதில் விற்பனை அளவுகளை அதிகரிக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.
கடைநிலை மக்களுக்கேற்ற சேவைகள்: தற்போதைய நிலவரத்தை நோக்கினால், சந்தையிலுள்ள பெரும்பாலான பொருட்களும் சேவைகளும் வசதி படைத்தவர்களுகென்றே வடிவமைக்கப் பட்டிருக்கின்றன. இவற்றை அப்படியே கொண்டு சென்று கடைநிலை மக்களிடம் விற்க முயன்றால் அதில் வெற்றி காண்பதும் அரிது, அதனால் அவர்களது தேவைகள் நிறைவேறாமலும் போகலாம். அவர்களது வாழ்க்கைச் சூழல், கடினமான சுற்றப்புற நிலைமை போன்றவற்றைக் கணக்கிலெடுத்து, அதற்கேற்றவாறு பொருட்களில் / சேவைகளில் புதுமைகளைப் புகுத்தினாலேயே, இந்த முயற்சியில் வெற்றியடைய முடியும். உ-ம், கிராமப்புறங்களுக்கென்று தயாரிக்கப்படும் கணினிகள் அங்கு நிலவும் மின்சாரத்தின் தரம் போன்றவற்றிற்குத் தகுந்தாற்போல் செயல்படும் தன்மையைப் பெற்றிருக்க வேண்டும். ஒரு வங்கியின் ATM, படிப்பறிவில்லாத வாடிக்கையாளராலும் பயன்படுத்தக்கூடிய வகையில் வடிவமைக்கப் பட்டிருக்க வேண்டும். Iodized உப்பு என்றால் அது இந்திய கிராமப்புறங்களில் நிலவக்கூடிய பாதகமான வெப்ப தட்ப நிலைகளையும், வன்முறை மிகுந்த இந்தியச் சமையல் முறைகளையும்(!) கடந்து தனது iodineஐ இழக்காது தக்க வைத்துக் கொள்ளும் தன்மையைப் பெற்றிருக்க வேண்டும், இல்லாவிட்டால் அது iodizedஆக இருந்து ஒரு பயனுமில்லை. (Hindustan Lever இதில் ஆய்வு நடத்தி வெற்றி கண்டிருக்கிறதாம், molecular encapsulation என்ற நுட்பத்தைப் பயன்படுத்தி)
கடைநிலைச் சந்தைகளுக்கேற்ற செயல்முறைப் புதுமைகள் (Process innovations): ஒருவர் McDonalds உணவகங்கள் இயங்கும் விதத்தைப் பார்வையிட்டு விட்டு, அதே வகையில் தனது கண் மருத்துவமனையை மாற்றியமைக்கிறார். இதனால் நாளொன்றுக்குப் பல மடங்கு அதிக நோயாளிகளுக்கு காடராக்ட் சிகிச்சை செய்ய முடிகிறது. மேலும் ஒரு புதுமையைப் புகுத்துகிறார் - அதாவது, வருகை தரும் ஏழை நோயாளிகளுக்கு இச்சிகிச்சை இலவசம் என்று. அதனால் பல ஏழைகள் பலனடைகின்றனர் (மொத்த நோயாளிகளில் அறுபது சதவிகிதம்). இதர வசதி படைத்த நோயாளிகளுக்கும் மலிவு விலையில் சிகிச்சை. ஆகவே, கட்டணம் செலுத்தி சிகிச்சை பெறுவோரும் அதிக எண்ணிக்கையில் வருகை தருகின்றனர் (அதற்கு சமூக நல்லெண்ணமும் ஒரு காரணம் என்பதில் எனக்கு சந்தேகமில்லை). மேலும், அவர்கள் தரும் இலவச சிகிச்சையினால் கிடைக்கும் goodwill / விளம்பரம், பல திசைகளிலிருந்தும் ஆதரவு....... இப்படியாக, பெருவாரியான ஏழை மக்களுக்கு இலவச சேவை வழங்கிக் கொண்டே, ஒரு தனியார் நிறுவனத்தால் லாபத்தில் இயங்க முடிகிறது. எங்கே என்று கண்கள் விரிய யோசிக்கின்றீர்களா? நம்ம சங்கம் வளர்த்த மதுரையிலதாங்க! Arvind Eye Hospitalன்னு கூகிளுங்க.
இப்படியாக, நம் நகர்ப்புற வசதி படைத்தவர்களுக்குக் கிடைக்கும் பெருவாரியான வசதிகள், இவை தற்போது மறுக்கப்பட்டிருக்கும் கிராமப்புற / நகர்ப்புற ஏழைகளுக்கும் அவர்களின் சக்திக்கேற்ப வழங்கப்படுமானால், அதுவே அவர்களது அன்றாடப் பிரச்சினைகளைப் பெரிய அளவில் குறைக்கக் கூடும். (முன்பு குறிப்பிட்ட ஒரு உதாரணத்தில், மிதிவண்டி எனப்படும் ஒரு எளிய உபகரணம் எப்படி ஒரு சமுதாய மாற்றத்தை நிகழ்த்தியது என்று பார்த்தோம்.) வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளான கல்வி, மருத்துவம், நிதிச் சேவைகள் (financial services), தொடர்பாடல் வசதிகள் (communications) ஆகியவற்றிற்கும் இது பொருந்தும்.
மேலும், பெருவாரியான தனியார் நிறுவனங்கள் இப்படி கடைநிலைச் சந்தைகளை நோக்கிப் படையெடுக்க முடிவு செய்யுமானால், அவற்றின் திட்டங்களைச் செயல்படுத்த விற்பனையாளர்கள், நிறைவேற்றாளர்கள்(?) என்று ஒரு மாபெரும் பணியாளர் படையே தேவைப்படும். அவற்றை நிரப்ப (சந்தைப் பரிச்சியம், போன்ற காரணங்களால்) கடைநிலை மக்களின் பிரதிநிதிகளே சிறந்தவர்கள் என்பதால், பல கடைநிலை நபர்களுக்கு (குறிப்பாகப் பெண்களுக்கு) இதனால் வேலை வாய்ப்புகள் கிடைக்கக்கூடும். வசதியடைந்த அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவது, மாறி விரும் சூழலில் புதிய வணிக வாய்ப்புகள் என்று ஒரு கடைநிலைப் பொருளாதாரமே உருவாக வாய்ப்புள்ளது. தற்போதுள்ள தரகர்கள், நிலப்பிரபுக்கள், தடியர்கள் ஆகியோரின் ஆதிக்கம் அதில் செல்லுபடியாகாது. ஏனென்றால், அது நவீனத் தொழில்நுட்பங்கள், சிறந்த வணிகப் பழக்கங்கள் (best practices) போன்றவற்றால் இயங்கும் ஒரு அமைப்பாக இருக்கும்.
தொடர்ச்சி - கதைகளும் படிப்பினைகளும்.
புதுக்கோட்டையின் புதுமைப் பெண்கள்
சுமார் 4000 ஏழைத் தாழ்த்தப்பட்ட பெண்கள், தாம் எங்கு அடிமட்டக் கூலிகளுக்கு வேலை செய்து வந்தார்களோ, அதே கல்லுடைக்கும் ஆலைகளுக்கு அவர்களே அதிபதிகளானார்கள். அவர்களின் கணவர்கள் அதே ஆலைகளில் தினக்கூலிகளாகச் சேர்ந்தார்கள். இந்த மாற்றத்தால், முன்பு எட்டு மணி நேர வேலைக்கு ரூ.6/- சம்பாதித்து வந்த இப்பெண்கள், இப்போது நாளொன்றுக்கு ரூ.35 – 40 வரை ஈட்ட முடிகிறது. அனைவரும் அறிவொளியால் பயிற்றுவிக்கப்பட்டு விட்டதால் அவர்களது கணக்கு வழக்குகளை அவர்களாலேயே பார்த்துக் கொள்ள முடிகிறது. வருமானமும் பெண்களின் கட்டுப்பாட்டிலிருப்பதால் அது குடும்பச் செலவுகளுக்குச் செல்கிறது, சாராயக்கடைகளில் சென்று ஐக்கியமாகாமல். குழந்தைகள் பசியின்றி, நல்ல உடைகளில் பள்ளிக்கூடங்களுக்குச் சென்று வர முடிகிறது. உபரி வருமானம் தந்த வசதியில் இப்பெண்களால் தங்கள் வீடு வாங்கும் திட்டங்களைச் செயல்படுத்த முடிகிறது.
பொதுவாக இத்தகைய ஆலைகள் அரசுக்கு ஒரு தொகையைக் கட்டணமாக செலுத்த வேண்டும். ஒரு லாரி அளவு ஜல்லிக்கு (தமிழ்மண ஜல்லி அல்ல ;) ) ரூ.110/- என்ற விகிதத்தில். முன்பு காண்டிராக்டர்களின் ஆதிக்கத்தில் இருந்தபோது, இந்தப் பணம் அரசை வந்தடைந்ததே இல்லையாம். ஒரு வருடம் ரூ.525யே இது போல் வசூலிக்க முடிந்ததாம். ஆனால், சரிபாதியான ஆலைகள் ஏழைப்பெண்களின் கட்டுப்பாட்டில் வந்த பிறகு வருடத்திற்கு ரூ.25 லட்சமாக உயர்ந்ததாம் இந்த வசூல் தொகை. அதற்கடுத்த ஆண்டு ரூ.48 லட்சம் எதிர்ப்பாரக்கப்பட்டதாம், அதில் பெண்கள் நிர்வகிக்கும் ஆலைகளின் பங்கு ரூ.38 லட்சம். 10 லட்சமே தனியார் காண்டிராக்டர்கள் பொய்க்கணக்குகள் காட்டி, அரசுக்கு செலுத்தும் தொகை.
இத்திட்டத்தில் சிக்கல்கள் இல்லாமலில்லை. குத்தகையை இழந்த காண்டிராக்டர்கள், அவர்களது அரசியல்வாதி நண்பர்கள், அவர்களிடம் something பெற்று வந்த அரசு ஊழியர்கள் என்று கூட்டு சேர்ந்து கொண்டு இத்திட்டத்தைக் குலைக்கும் முயற்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறதாம். அருகாமையிலுள்ள ஒரு கோவிலுக்கு இந்த ஆலைகளால் ஆபத்து என்று புரளியைக் கிளப்பி Archeological Survey of Indiaவைத் துணைக்கழைத்தது, ரவுடிகளை இப்பெண்களுக்கு எதிராக ஏவி விட்டது, போன்ற நற்பணிகளை நம் ஆதிக்க சக்திகள் செவ்வனே செய்து வருகின்றன. அறிவொளி மட்டுமே இப்பெண்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தது.
*************
புதுக்கோட்டையின் சாராய சாம்ராஜ்யத்திற்கெதிராக போர்க்கொடி ஏந்திய பெண்களைப் பற்றியும் இங்கு குறிப்பிட வேண்டும்.
மலர்மணி - அறிவொளி இயக்கத்தின் ஒரு தன்னார்வலப் பணியாளர். 'ஊர் பெரியவர்கள்' அனுப்பிய பெண்களால் அடித்து நொறுக்கப்படுகிறார். இந்த சம்பவத்திற்குப் பிறகு அவருக்கு மாவட்ட ஆட்சியாளரின் ஆதரவு கிட்டுகிறது. ஆகவே, ஊர் பெரியவர்களால் (மற்றும் காவல்துறையினரால்) மேற்கொண்டு எதுவும் செய்ய முடியவில்லை. இருந்தாலும் அவரை ஊர் புறக்கணிப்பு செய்கிறது. அவரது மகன்களுக்கு முடி திருத்துவது மறுக்கப்படுகிறது. அவருக்கு தேநீர் வாங்கி வந்த ஒரு மகனின் கைகளிலிருந்து தேநீர் கோப்பை தட்டி விடப்படுகிறது, ஒரு ஊர் பெரியவரால். மளிகை சாமான்கள் வாங்க அவர் நான்கு கி.மீ. தூரத்திலுள்ள அடுத்த கிராமத்திற்குச் செல்ல வேண்டும். குடிநீருக்காக, இரண்டு கி.மீ. நடந்தே சென்று எடுத்து வரவேண்டும். இந்த தண்டனைகள் பெறும் நிலைக்கு அவர் ஆளாகக் காரணம் - அரசு அறிவித்திருந்த மது விலக்கு வாரத்தில் நடத்திய ஒரு மேடைப்பேச்சு நிகழ்ச்சியில், சில தலித் மக்களை அதே மைக்கை உபயோகித்து பேச வைத்த அவரது செயல். அரசு திட்டத்தைச் செயல்படுத்தியதால் ஒரு பெண்ணுக்கு நேர்ந்த நிலை இது.
இருந்தும் தளராமல் மலர்மணி போன்ற பெண்கள் உழைத்ததால், பல கிராமங்களில் சாராயம் தடை செய்யப்பட்டது. வேடிக்கை என்னவென்றால், சாராயம் அருந்துபவர்களும் திருந்தினார்களாம், சாராயம் காய்ச்சுபவர்களும் திருந்தி, தம் நற்பணிகளை நிறுத்திக் கொள்வதற்கு சம்மதித்தார்களாம். ஆனால் இந்த வர்த்தகத்தினால் ஆதாயமடைந்து கொண்டிருந்த காவல்துறையினரோ, வியாபாரத்தை மறுபடியும் தொடங்குமாறு திருந்திய சாரய வியாபாரிகளை வற்புறுத்திக் கொண்டிருந்தார்களாம்.
**************
இன்னொரு புரட்சி, பெரும்பாலான பெண்கள் மிதிவண்டிகள் ஒட்டப் பழகியது. இதிலும் திருமதி. ஷீலாராணி சுங்கத் மற்றும் அறிவொளியின் பங்கு கணிசமானது. மிதிவண்டி இருந்தால் எங்கு வேண்டுமானாலும் விரைவில் சென்றடையலாம், பேருந்துகளுக்குக் காத்திருக்கவோ, அல்லது தந்தை / கணவர் / சகோதரர் / மகன் ஆகியோரின் தயவை நம்பி இருக்கவோ தேவையில்லை, நினைத்த மாத்திரத்தில் நினைத்த இடங்களுக்குச் சென்று திரும்பலாம் என்ற காரணங்களினால் இது அறிவொளியால் ஒரு முக்கியமான நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டது.
இப்படியாக மிதிவண்டி ஓட்டுவதற்குப் பழகிய பெண்களோ, அதனால் பெரிதும் கவரப்பட்டு, அதை அதிக அளவில் வாங்கவும் பயன்படுத்தவும் செய்தார்கள். ஊர் ஊராகச் சென்று தம் விளைப் பொருட்களை விற்று வருவது, தண்ணீர்க் குடங்களை சுமந்து வருவது, குழந்தைகளை அழைத்துச் செல்வது போன்ற பல தேவைகளுக்கு மிதிவண்டிகள் பயன்படுத்தப்பட்டன. ஒரு நான்கு கி.மீ.க்கு உட்பட்ட தூரங்களை பெண்களால் எளிதாகக் கடந்து செல்ல முடிந்தது. முன்பு குறிப்பிட்ட கல்லுடைக்கும் ஆலைகளில் பணியற்றும் பெண்களுக்கும், தங்கள் தொலைதூரப் பணியிடங்களுக்குச் சென்று வர மிதிவண்டி பெரிதும் உதவியது. இவையனைத்தும் அல்லாமல், மிதிவண்டி ஓட்டுவது என்பது ஒரு பெண்ணின் சுதந்திரத்தின் அறிகுறியாக கருதப்படும் நிலையும் ஏற்பட்டது. எல்லா பெண்களும் மிதிவண்டியை ஓட்டும் திறனைப் பெற வேண்டும் என்ற சிந்தனை பெண்கள் மத்தியில் வலுவாகத் தோன்ற ஆரம்பித்தது. இவ்வாறாக, சுமார் ஒரு லட்சம் பெண்கள் மிதிவண்டி ஓட்டப் பயின்று, தங்கள் வாழ்வில் பெரும் மாற்றத்தைக் கண்டார்கள். மற்ற பெண்களுக்கும் பயிற்சியளித்து இந்த இயக்கத்தைப் பரப்பினார்கள். இந்தியாவிலேயே அதிகமான அளவில் பெண்கள் மிதிவண்டிகள் ஓட்டும் மாவட்டம் புதுக்கோட்டைதானாம்.
ஆனால், இது அத்தனை சுலபமாக நிகழவில்லை. ஆணாதிக்கப் போக்குகளால், தொடக்கக் காலங்களில் மிதிவண்டி பழகிய பெண்களைப் பற்றி மோசமான விமர்சனங்களெல்லாம் வைக்கப்பட்டன. இருந்தும் தங்கள் நம்பிக்கையில் உறுதியாக இருந்து சாதனை படைத்தனர் இப்பெண்கள்.
******************
இதுவரை திரு.சாய்நாத் எழுதிய Everybody loves a good drought என்ற நூலிலிருந்து சில உதாரணங்களை வழங்கியுள்ளேன். நான் முதல் பதிவில் குறிப்பிட்டுள்ளது போல் அரசியல்வாதிகள், தனியார் துறையினர், ஊடகங்கள் மற்றும் மத்திய வர்க்கத்தினர் ஆகியோரால் உதாசீனப்படுத்தப்படும் / மோசமான நிலைகளுக்குத் தள்ளப்படும் அதிகாரமற்ற மக்களின் நிலைமையை இந்த உதாரணங்கள் விவரமாக விளக்கியிருக்குமென்று நம்புகிறேன். தற்போது பொறுமை காத்துவரும் இம்மக்கள் ஒரு நாள் பொறுமையிழக்கக் கூடும். புரட்சி என்பதிலெல்லாம் எனக்கு நம்பிக்கையில்லை. ஆனால் பெரிய அளவில் வன்முறைகள் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் அதிகமாகிக் கொண்டிருப்பதையே தினமும் காண்கிறோம். அத்தகைய நிலை ஏற்படுமுன், இந்த ஏற்ற தாழ்வுகள் சரி செய்யப்படுமென்று நம்புவோம்.
அடுத்து, திரு.சாய்நாத்தை வழியனுப்பி விட்டு, வேறு சில கருத்தியல்களின் மீது வெளிச்சம் போட்டுப் பார்க்கலாமென்றிருக்கிறேன். அதுவே அடுத்த இடுகை - வறுமை குறித்த மாற்றுச் சிந்தனைகள்.
வெள்ளி, ஜூலை 14, 2006
மன்னிக்கவும்.......
(இதற்கு tagging எல்லாம் வேண்டாமில்லையா?)
வியாழன், ஜூலை 13, 2006
வறட்சி விரும்பிகளும் தண்ணீர்த் தடியர்களும்
வறட்சி நிவாரணம் என்ற பெயரில் மஹாராஷ்டிர மாநிலம் ஒரு வருடத்திற்கு செலவிடும் தொகை ஆயிரம் கோடிகளுக்கு மேல். அதே போல் ஒரிஸ்ஸா மாநிலத்தில் வறட்சி நிவாரணம் என்று மத்திய அரசின் நிதியிலிருந்து சுமார் ஆயிரம் கோடிகள் வருடத்திற்கு செலவிடப்படுகின்றன. இவை பெரும்பாலும் வறட்சியை உண்டாக்கும் காரணிகளை (அதாவது, பொது நீர்வளங்களை செல்வாக்குள்ள தனி நபர்கள் தம் வசப்படுத்திக் கொள்வது, போன்ற காரணிகளை) எதிர்கொள்வதில்லை. மாறாக, சாலைகள் அமைத்தல், பாலங்கள் கட்டுதல், லாரிகளில் குடிநீர் வழங்குதல், (தண்ணீர் இல்லாத) குளங்களைச் செப்பனிடுதல் போன்ற பணிகளுக்கு தனியார் காண்டிராக்ட்கள் வழங்குவதற்கே செலவிடப்படுகின்றன. இப்பணிகளும் எந்த அழகில் நிறைவேற்றப்படும் என்பதை விவரிக்கத் தேவையில்லை. இது போன்ற நிவாரண நிதி பெறுவதற்கும் 'வறட்சியால் பாதிக்கப்படக்கூடிய பகுதி' (drought-prone area) என்ற அங்கீகாரம் தேவை. இத்தகைய வ.பா.ப.க்கள் முற்றிலும் அரசியல் ரீதியிலேயே நிர்ணயிக்கப்படுகின்றன. உ-ம், தொண்ணூறு வ.பா.ப.க்கள் இருந்த மஹாராஷ்டிரத்தில், ஆறு வருடங்கள் கழித்து இந்த எண்ணிக்கை நூற்றைம்பதாக உயர்ந்ததாம். அதே போல், 54 வ.பா.ப.க்கள் இருந்த பீஹாரின் எண்ணிக்கை, அம்மாநிலத்தவர் ஒருவர் மத்திய அமைச்சரான பிறகு உடனே 55ஆக உயர்ந்தது (அவரது தொகுதியின் சேர்க்கையால்) . சில வருடங்களில் இந்த எண்ணிக்கை நூற்று இருபதாக உயர்ந்து விட்டது. இத்தனைக்கும், இந்த இடைப்பட்ட வருடங்கள் நல்ல மழை பெய்த வருடங்களாம். பெரும்பாலான வ.பா.ப.க்கள் நல்ல மழைக்காலங்களை அனுபவித்து வருபவை. கரும்பு போன்ற அதிக அளவிலான பாசனத் தேவைகளைக் கொண்ட பயிர்களைப் பயிரிடுபவை. இருந்தும் இங்கு வறட்சியால் வாடும் மக்களும் உள்ளனர். அவர்களே சமூகத்தின் அதிகாரமற்ற கடைநிலை மக்கள். குடிநீருக்காகப் பல மைல்கள் அலைந்து திரும்பும் பொதுஜனங்கள். அவர்களை முன்வைத்து பல பகற்கொள்ளைகளை நிகழ்த்துகின்றனர், நம் அரசியல் தலைவர்களும் அவர்களது கூட்டாளிகளும். எவ்வளவு கோடிகள் நிவாரண நிதி ஒதுக்கினாலும் இந்நாட்டின் வறட்சி நிலை மாறப்போவதுமில்லை, அதனால் பலனடையும் கூட்டமும் ஒழியப்போவதுமில்லை என்பதே இங்கு நிலவும் உண்மை நிலவரம்.
****************
இடம்: இராமநாதபுரம் மாவட்டம், தமிழ் நாடு
தொடர்ந்து வானம் பொய்த்து வரும் இராமநாதபுரம் மாவட்டத்தில், வயல்களுக்குப் பாசனம் செய்ய தண்ணீர் கிடைப்பது ஒரு பெரிய பிரச்சினையாகும். அதுவும் சொந்தமாகக் கிணறுகளும் பம்பு செட்களும் இல்லாத விவசாயிகளின் பாடு திண்டாட்டம்தான். இவைகளை உடைய பெரிய விவசாயிகளிடமிருந்து தண்ணீரைக் காசு கொடுத்து வாங்க வேண்டிய நிலைதான்.
ராமு - ஒரு வசதி படைத்த விவசாயி. தனது 3HP மின்சார பம்பு செட்டை மணிக்கு பன்னிரண்டு ரூபாய் என்ற விலையில் வாடகைக்கு வழங்கியே, ஒவ்வொரு சிறு விவசாயியிடமிருந்தும் நாற்பத்தைந்து நாட்களில் ரூ.2000 வரை சம்பாதித்து விடுவதால், அவருக்கு சொந்தமாக விவசாயம் செய்வதற்கெல்லாம் நேரமோ தேவையோ இருப்பதில்லை. நீளும் வாடிக்கையாளர் பட்டியலை கவனிப்பதற்கே நேரம் சரியாக இருக்கிறது. இரு காரணிகள் அவருக்குச் சாதகமாகத் திகழ்கின்றன: 1. அவரும் விவசாயி என்பதால் அவருக்கு மின்சாரச் செலவு கிடையாது 2. அங்கு நிலவும் low voltage மின்சாரத்தால், வயல்களுக்குப் பாசனம் செய்ய இரண்டு மடங்கு அதிக நேரம் பிடிக்கிறது, அதனால் ராமு போன்றவர்களுக்கு இரட்டிப்பு லாபம்.
ராஜு - தனது 5HP டீசல் பம்பு செட்டை மணிக்கு ரூ.30 என்ற விலைக்கு வாடகைக்குத் தருபவர். (டீசல் இலவசமாகக் கிடைக்காதல்லவா?) இவ்வாறு, ஐந்தாறு கிராமங்களின் பாசனத் தேவைகளை நிறைவேற்றி வருபவர். கிணற்றுத் தவளையாக இருந்து கொண்டிருக்காமல், பொதுக் கண்மாய்களிலிருந்தெல்லாம் தண்ணீரை இறைக்கும் சக்தி படைத்தவர். உங்களூர் கண்மாயின் தண்ணீர் அளவு குறைந்து விட்டதா? அப்படியென்றால் அவரை அணுகலாம். ஆனால் குறைந்தது ஐம்பது வாடிக்கையாளர்களாவது உங்கள் ஊரில் இருப்பது உத்தமம். அதை விடக் குறைந்த எண்ணிக்கைகளுக்கெல்லாம் அவர் நேரத்தை வீணாக்குவதில்லை.
கோவிந்தராஜன் - மேலே குறிப்பிடப்பட்டுள்ள டீசல் பம்பு செட்டைப் போன்று இரண்டையும், மின்சார பம்பு செட் ஒன்றையும் வைத்து நடத்தி வருபவர். மேலும் தனது கிணறுகளிலிருந்து தண்ணீரை விற்பதுவும் அவரது நடவடிக்கைளில் ஒன்று. இவ்வாறாக, ஒரு வறட்சிக் காலத்தில் ரூ.70,000 வரை சம்பாதித்து விடக்கூடியவர்.
பாசனத்திற்கு இவ்வாறென்றால், குடிநீருக்கும் அதே வகையான பொருளாதார அமைப்புதான். பொதுக் கண்மாய்களின் படுகைகளில் கிணறுகள் தோண்டி, அந்த நீரை ஒரு குடம் முப்பது பைசா என்ற விலையில் விற்று வரும் தனி நபர்களின் ஆதிக்கம் இங்கு அதிகம். முத்துச்செல்லன், அருணாசலம் மற்றும் சிவலிங்கம் - சாயல்குடி கிராமத்தின் பொதுக் கண்மாயின் படுகையில் பதிமூன்று கிணறுகளை வெட்டி, அவை தமக்குச் சொந்தமானவையே என்றுப் பிரகடனம் செய்து கொண்டவர்கள். பிறகு, நாளொன்றுக்கு ஒவ்வொரு கிணற்றிலிருந்தும் 500 குடங்கள் என்ற விகிதத்ததில் பொதுத் தண்ணீரை விற்று, மாதத்திற்கு ரூ.60,000 வரை சம்பாதித்து விடுபவர்கள்.
தொடர்ச்சி: புதுக்கோட்டையின் புதுமைப்பெண்கள் (தொடர்ந்து சோகக் கதைகளாக அமைந்து விட்டதால், ஒரு மாறுதலுக்காக, ஊக்கமளிக்கும் ஒரு வெற்றிக்கதை)
(குறிப்பு: எழுத்துரு சிறிதாக இருப்பதாகச் சிலர் குறிப்பிட்டுள்ளனர். தற்போது வீட்டில் இணைய வசதி இல்லாததால், வீட்டில் OpenOfficeஇல் எழுதி, அதை MS Officeக்கு மாற்றி, மீண்டும் htmlக்கு மற்றி இந்தப் பதிவுகளை வலையேற்றுகிறேன். இதில் கை வைத்தால் மிகப்பெரிய எழுத்துக்களாகக் காட்டி பயமுறுத்துகிறது. ஆகவே, வாசகர்களுக்கு நான் விடுக்கும் வேண்டுகோள்: எழுத்துக்கள் சிறிதாகத் தெரிந்தால், உங்கள் உலாவியில் எழுத்துக்களைப் பெரிதாக்கிப் படியுங்கள். நன்றி்)
