சனி, ஜூலை 15, 2006

வறுமை குறித்த மாற்றுச் சிந்தனைகள்

ஒரு நிர்வாகவியல் 'குரு' எனக் கருதப்படுபவர் வறுமை / கடைநிலை மக்கள் பற்றியெல்லாம் எழுதினால் எவ்வாறிருக்கும்? ஆர்வத்தைத் தூண்டியதாலேயே இந்த நூலைப் படிக்கத் தொடங்கினேன். முழுவதும் படித்து முடிக்கவில்லையென்றாலும் பல முக்கியமான கருத்துகள் கூறப்பட்டிருப்பது தெரிந்தது. அவற்றின் மீது எனக்கு விமர்சனங்கள் இருந்தாலும், இந்த நூல் தரும் positive / ஆக்கப்பூர்வமான சில ஆலோசனைகள் பரிசீலிக்கப்பட வேண்டியது. நான் மிகவும் மதிக்கும் இந்த நிர்வாகவியல் குரு. திரு. C K பிரஹலாத். Michigan பல்கலைக்கழகத்தின் ஒரு விரிவுரையாளர். 'Core competence' என்ற சொற்றொடரை இவ்வுலக்குக்கு அளித்த பெருமை அவரையே சேரும். (இந்தச் சொற்றொடரை என்னைப் போன்ற 'tie கட்டிப் பொய் பேசும்' பணியிலிருப்பவர்கள் எவ்வளவு முறை பயன்படுத்தியிருப்போம் என்பதற்கு கணக்கே கிடையாது) இந்த நூற்றாண்டின் மிக முக்கிய நிர்வாகவியல் சிந்தனையாளர்களில் ஒருவர் என்றெல்லாம் வர்ணிக்கப்படும் இந்தியர். கிட்டத்தட்ட திரு.அமர்த்தியா சென் அளவுக்குப் புகழ் பெற்றவர். நொபெல் பரிசு ஒன்றுதான் missing :) அவர் எழுதிய நூல் The Fortune at the Bottom of the Pyramid.(கடைநிலைகளில் பொதிந்திருக்கும் பொக்கிஷம்) அதிலிருந்து எனக்குப் பிடித்த கருத்துகளை இங்கு வழங்குகிறேன்.

வறுமை வரி / அபராதம் (Poverty penalty): பெரும்பாலான சமூகங்களில் கடைநிலையிலிருப்பவர்களுக்கு 'வறுமை வரி' விதிக்கப்படுகிறது - வெளிப்படையாக அல்ல, ஆனால் மறைமுகமாக. அவர்கள் ஏழைகளாக இருப்பதனாலேயே அவர்கள் வாங்கும் பொருட்களுக்கும் சேவைகளுக்கும் ஆகாய விலை வழங்க வேண்டியுள்ளது. சில உதாரணங்களுடன் இந்நிலையை விளக்க முடியும். கீழே கொடுக்கப்பட்டது மும்பை மாநகரில் தாராவி குடிசைப்பகுதியில் ஆகும் சில செலவுகளை, வார்டன் ரோட் எனப்படும் பணக்காரர்கள் வாழும் பகுதியில் ஆகும் அதே செலவுகளுடன் ஒப்பிடும் ஒரு அட்டவணை:































செலவு
தாராவிவார்டன் ரோட்
1. கடன் மீது செலுத்த வேண்டிய வருடாந்திர வட்டி600 – 1000%்12 – 18%
2. தண்ணீர் (1000 லிட்டர்கள்)ரூ.50/-ரூ1.50/-
3. தொலைப்பேசி (ஒரு நிமிடம்) ரூ.2.50/-ரூ.0.40 – 1.00/-
4. டயரியாவுக்கான மருத்துவம்ரூ.900/-ரூ.90/-
5. அரிசி (1 கிலோ)ரூ.15/-ரூ.12.50/-

ஏழைகள் தங்கள் ஏழ்மைக்குக் கொடுக்க வேண்டிய விலை அதிகமானது. இந்த வறுமை வரியை அகற்றும் வகையில் கடைநிலை மக்களுக்கு இந்தப் பொருட்களையும் சேவைகளையும் குறைந்த / நியாய விலைக்கு வழங்க முன்வரும் தனியார் நிறுவனங்கள், அதிக விற்பனைகளையும் லாபங்களையும் ஈட்டக்கூடும். இது அனைத்துத் தரப்பினருக்கும் வெற்றிகரமாகவே முடியும். ஏனெனில், ஏழை மக்களைப் பொறுத்த வரை, முன்னர் ஆகாய விலைகளைக் கொடுத்து வந்ததற்கு பதிலாக நியாய விலைகளையே கொடுப்பதால், இதர அத்தியாவசியச் செலவுகள் செய்ய கைவசம் பண வசதி இருக்கும். உணவு, உடை, கல்வி, ஆரோக்கியம் போன்றவற்றை உறுதி செய்வதற்கு இந்தப் பணம் உதவும். தனியார் நிறுவனங்களுக்கோ, ஒரு புது வியாபாரச் சந்தையை இது திறந்து விடும். Saturate ஆகிப் போன நகர்ப்புற, மேல்தட்டுச் சந்தைகளை விட, இதில் விற்பனை அளவுகளை அதிகரிக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.

கடைநிலை மக்களுக்கேற்ற சேவைகள்: தற்போதைய நிலவரத்தை நோக்கினால், சந்தையிலுள்ள பெரும்பாலான பொருட்களும் சேவைகளும் வசதி படைத்தவர்களுகென்றே வடிவமைக்கப் பட்டிருக்கின்றன. இவற்றை அப்படியே கொண்டு சென்று கடைநிலை மக்களிடம் விற்க முயன்றால் அதில் வெற்றி காண்பதும் அரிது, அதனால் அவர்களது தேவைகள் நிறைவேறாமலும் போகலாம். அவர்களது வாழ்க்கைச் சூழல், கடினமான சுற்றப்புற நிலைமை போன்றவற்றைக் கணக்கிலெடுத்து, அதற்கேற்றவாறு பொருட்களில் / சேவைகளில் புதுமைகளைப் புகுத்தினாலேயே, இந்த முயற்சியில் வெற்றியடைய முடியும். உ-ம், கிராமப்புறங்களுக்கென்று தயாரிக்கப்படும் கணினிகள் அங்கு நிலவும் மின்சாரத்தின் தரம் போன்றவற்றிற்குத் தகுந்தாற்போல் செயல்படும் தன்மையைப் பெற்றிருக்க வேண்டும். ஒரு வங்கியின் ATM, படிப்பறிவில்லாத வாடிக்கையாளராலும் பயன்படுத்தக்கூடிய வகையில் வடிவமைக்கப் பட்டிருக்க வேண்டும். Iodized உப்பு என்றால் அது இந்திய கிராமப்புறங்களில் நிலவக்கூடிய பாதகமான வெப்ப தட்ப நிலைகளையும், வன்முறை மிகுந்த இந்தியச் சமையல் முறைகளையும்(!) கடந்து தனது iodineஐ இழக்காது தக்க வைத்துக் கொள்ளும் தன்மையைப் பெற்றிருக்க வேண்டும், இல்லாவிட்டால் அது iodizedஆக இருந்து ஒரு பயனுமில்லை. (Hindustan Lever இதில் ஆய்வு நடத்தி வெற்றி கண்டிருக்கிறதாம், molecular encapsulation என்ற நுட்பத்தைப் பயன்படுத்தி)

கடைநிலைச் சந்தைகளுக்கேற்ற செயல்முறைப் புதுமைகள் (Process innovations): ஒருவர் McDonalds உணவகங்கள் இயங்கும் விதத்தைப் பார்வையிட்டு விட்டு, அதே வகையில் தனது கண் மருத்துவமனையை மாற்றியமைக்கிறார். இதனால் நாளொன்றுக்குப் பல மடங்கு அதிக நோயாளிகளுக்கு காடராக்ட் சிகிச்சை செய்ய முடிகிறது. மேலும் ஒரு புதுமையைப் புகுத்துகிறார் - அதாவது, வருகை தரும் ஏழை நோயாளிகளுக்கு இச்சிகிச்சை இலவசம் என்று. அதனால் பல ஏழைகள் பலனடைகின்றனர் (மொத்த நோயாளிகளில் அறுபது சதவிகிதம்). இதர வசதி படைத்த நோயாளிகளுக்கும் மலிவு விலையில் சிகிச்சை. ஆகவே, கட்டணம் செலுத்தி சிகிச்சை பெறுவோரும் அதிக எண்ணிக்கையில் வருகை தருகின்றனர் (அதற்கு சமூக நல்லெண்ணமும் ஒரு காரணம் என்பதில் எனக்கு சந்தேகமில்லை). மேலும், அவர்கள் தரும் இலவச சிகிச்சையினால் கிடைக்கும் goodwill / விளம்பரம், பல திசைகளிலிருந்தும் ஆதரவு....... இப்படியாக, பெருவாரியான ஏழை மக்களுக்கு இலவச சேவை வழங்கிக் கொண்டே, ஒரு தனியார் நிறுவனத்தால் லாபத்தில் இயங்க முடிகிறது. எங்கே என்று கண்கள் விரிய யோசிக்கின்றீர்களா? நம்ம சங்கம் வளர்த்த மதுரையிலதாங்க! Arvind Eye Hospitalன்னு கூகிளுங்க.

இப்படியாக, நம் நகர்ப்புற வசதி படைத்தவர்களுக்குக் கிடைக்கும் பெருவாரியான வசதிகள், இவை தற்போது மறுக்கப்பட்டிருக்கும் கிராமப்புற / நகர்ப்புற ஏழைகளுக்கும் அவர்களின் சக்திக்கேற்ப வழங்கப்படுமானால், அதுவே அவர்களது அன்றாடப் பிரச்சினைகளைப் பெரிய அளவில் குறைக்கக் கூடும். (முன்பு குறிப்பிட்ட ஒரு உதாரணத்தில், மிதிவண்டி எனப்படும் ஒரு எளிய உபகரணம் எப்படி ஒரு சமுதாய மாற்றத்தை நிகழ்த்தியது என்று பார்த்தோம்.) வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளான கல்வி, மருத்துவம், நிதிச் சேவைகள் (financial services), தொடர்பாடல் வசதிகள் (communications) ஆகியவற்றிற்கும் இது பொருந்தும்.

மேலும், பெருவாரியான தனியார் நிறுவனங்கள் இப்படி கடைநிலைச் சந்தைகளை நோக்கிப் படையெடுக்க முடிவு செய்யுமானால், அவற்றின் திட்டங்களைச் செயல்படுத்த விற்பனையாளர்கள், நிறைவேற்றாளர்கள்(?) என்று ஒரு மாபெரும் பணியாளர் படையே தேவைப்படும். அவற்றை நிரப்ப (சந்தைப் பரிச்சியம், போன்ற காரணங்களால்) கடைநிலை மக்களின் பிரதிநிதிகளே சிறந்தவர்கள் என்பதால், பல கடைநிலை நபர்களுக்கு (குறிப்பாகப் பெண்களுக்கு) இதனால் வேலை வாய்ப்புகள் கிடைக்கக்கூடும். வசதியடைந்த அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவது, மாறி விரும் சூழலில் புதிய வணிக வாய்ப்புகள் என்று ஒரு கடைநிலைப் பொருளாதாரமே உருவாக வாய்ப்புள்ளது. தற்போதுள்ள தரகர்கள், நிலப்பிரபுக்கள், தடியர்கள் ஆகியோரின் ஆதிக்கம் அதில் செல்லுபடியாகாது. ஏனென்றால், அது நவீனத் தொழில்நுட்பங்கள், சிறந்த வணிகப் பழக்கங்கள் (best practices) போன்றவற்றால் இயங்கும் ஒரு அமைப்பாக இருக்கும்.

தொடர்ச்சி - கதைகளும் படிப்பினைகளும்.

5 கருத்துகள்:

வானம்பாடி சொன்னது…

//'tie கட்டிப் பொய் பேசும்' பணி//
//வன்முறை மிகுந்த இந்தியச் சமையல் முறை//
:))

இந்த செலவு ஒப்பீடு எந்த அடிப்படையில் செய்யப்பட்டது? வித்தியாசம் நம்ப முடியாத அளவில் இருக்கிறதே..

- உடுக்கை முனியாண்டி சொன்னது…

//கடைநிலை மக்களுக்கு இந்தப் பொருட்களையும் சேவைகளையும் குறைந்த / நியாய விலைக்கு வழங்க முன்வரும் தனியார் நிறுவனங்கள், அதிக விற்பனைகளையும் லாபங்களையும் ஈட்டக்கூடும்.//

சாதரண மக்களை நோக்குன பார்வையில சரவணா ஸ்டோர்ஸ் கூட ஒரு வெற்றின்னு தான் சொல்லுவேன்.

//Arvind Eye Hospital//

நீங்க சொன்ன இந்த சாதனைகளுக்கு சொந்தக்காரர் Dr. வெங்கடசாமி போன வாரம் இறந்து போயிட்டாரு. அதைப்பத்தி செய்தி எதுவும் வலைப்பூவுல வந்த மாதிரி தெரியலை. (எனக்கு இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என்னோட நண்பன் மூலமா தெரிய வந்தது)

உங்களோட அடுத்த பதிவையும் ஆர்வத்தோட எதிர்பார்க்கறேன்

தருமி சொன்னது…

அந்த தாராவி-வார்டன் ரோட் அட்டவணை புரியலையே. ஒரு விளக்கம் கிடைக்குமா?

Voice on Wings சொன்னது…

சுதர்சன் மற்றும் தருமி, இந்த அட்டவணை பற்றி எனக்கும் முழுமையான நம்பிக்கை வரவில்லை. சிலவற்றைப் புரிந்து கொள்ள முடிகிறது. உ-ம், தண்ணீர். ஒரு வார்டன் ரோட் நபர் தனது மாதாந்திர தண்ணீர் கட்டணமாக municipalityக்கு ஐம்பதோ நூறோ செலுத்தினால் போதுமானது. தாராவி நபர் லாரிகளில் தருவித்துக்கொள்ளும் தண்ணீருக்கு 1000 லிட்டர் ரூ.50 என்ற விகிதத்தில் செலவழிக்க வேண்டுமோ என்னவோ. தொலைபேசி - வார்டன் ரோட் காரர் செலவழிப்பது நிமிடத்திற்கு 40 பைசா. தாராவிக்காரரோ, பொதுத் தொலைப்பேசிக் க்டைகளில் (PCO) ரூ.2.50 அழ வேண்டும். இவ்விதமாக இதை விளக்கலாம் என்று நினைக்கிறேன்.

முனியாண்டி, சரவணா ஸ்டோர்ஸின் செயல்பாடுகள் பற்றி முழுமையாக அறியாததால், என்னால் உறுதியாக உங்களுடன் உடன்பட இயலவில்லை. அரவிந்த் மருத்துவமனை உரிமையாளரின் மறைவு வருந்தத் தக்கது. எனினும் அவர் தொடங்கி வைத்த நற்பணிகள் தொடரும் என்றே நம்புகிறேன்.

துளசி, தேசிபண்டிட் இணைப்புக்கு நன்றி :)

மா சிவகுமார் சொன்னது…

வறுமைக்கு சந்தைப் பொருளாதாரப் போட்டி முறையிலும் இப்படி ஒரு வழி இருக்கிறதே! அரவிந்தா கண் மருத்துவமனை பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். எங்க ஊரிலிருந்தெல்லாம் அங்கேதான் போவார்கள்.

அன்புடன்,

மா சிவகுமார்