கனவுகளே மனிதரைச் செலுத்தும் உந்து சக்திகளாகத் திகழ்கின்றன. கனவுகளைச் சுமந்து திரியும் எல்லாரும் தம் இலக்கை அடைந்து விடுவதில்லை. கனவுகளோடு, அதைச் செயல்படுத்தும் நரித்தனமான சந்தர்ப்பவாதமும் இருந்தாலொழிய, கனவுகள் கனவுகளாகவே நின்று விடுகின்றன. பெரும்பாலான கனவுகள் நிறைவேறுவதில்லை. இறுதியில் ஒரு மிகப் பெரிய ஏமாற்றமே மிஞ்சுகிறது பலருக்கும். ஆனால், கனவு காண்பது அவசியமாக்கப்படுகிறது. "Dream on, dream on till your dreams come true" என்று கூரை மீது நின்று கொண்டு கூவுகின்றனர் சிந்தனைச் சிற்பிகள். அவர்களால் பரப்பப்படும் வெற்றிக்கதைகளே எங்கும் நிறைந்திருக்கும் இன்றைய சூழலில், தோல்விக்கதைகளும் பதிவு செய்யப்பட வேண்டியது அவசியமாகிறது. ஏனென்றால் அவையே பெரும்பான்மையை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. இனி, சென்ற இடுகையின் தொடர்ச்சி..........
இளம் பெண்ணுடன் ஏற்பட்ட நெருக்கமான நிகழ்வினால் குழம்பிப் போயிருக்கிறார் இளைஞர். அந்த நேரம் பார்த்து ஒரு துக்கச் செய்தி. தன் கனவுகளில் பின்னடைவு ஏற்பட்டதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்கிறார் இளைஞரின் மாமன் (கார் விற்பனையாளர்). அவரது மரணப் படுக்கையில் அவரிடம் வாக்கு கொடுக்கிறார் இளைஞர், அவரது வணிகத்தையும், விதவையையும் நன்கு கவனித்துக் கொள்வதாக. அவரது இறுதிச் சடங்குகள் முடிந்து பல நாட்களாக நகரத்திலேயே இருந்து விடுகிறார் இளைஞர். ஆனாலும், விட்டுச் சென்ற காதலுறவு அவரை மறுபடியும் நாட்டுப்புறப் பண்ணை வீட்டிற்கே துரத்துகிறது. அங்கு அவருக்காக வெகு நாட்களாகக் காத்திருந்து ஏமாற்றமடைந்த காதலியின் கடுமையான கோபத்தை எதிர்கொள்கிறார். கோபம் கைகலப்பாக மாறி, பிறகு புணர்ச்சியில் முடிவடைந்து, சமாதானம் திரும்புகிறது. மீண்டும் பறக்கும் திட்டம் தொடரப்படுகிறது. இம்முறை வெற்றிகரமாக இயந்திரம் செயல்பாட்டு நிலையை அடைகிறது. வளர்ப்பு மகள் சாந்தமடைந்து, எந்த நாச வேலையிலும் இறங்காதது ஒரு காரணமாக இருக்கக் கூடும். முதிய பெண் கனவு நனவான மகிழ்ச்சியில் திளைத்திருக்கிறார். அந்த வெற்றிக்குக் காரணமான இளைஞருக்கோ குழப்பங்களே மிஞ்சுகின்றன. தனது காதல் முடிவை மீள் பரிசீலனைக்குட்படுத்தும் மனநிலையிலிருகிறார் அவர்.
கனவுகளின் பாரத்தைத் தயக்கமின்றிச் சுமந்து திரியும் மற்றொருவர், அந்த இளைஞரின் நண்பர். அவரது கனவு - ஒரு நடிகனாக வேண்டுமென்பது. இளைஞரின் முறை தவறிய காதலை அங்கீகரிக்காவிட்டாலும், அவருக்கு உறுதுணையாகத் திகழ்கிறார். ஒரு கலை நிகழ்ச்சியில், ஒரு விமானத்தால் துரத்தப் படுவது போல் (பல முறை தரையில் விழுந்து எழுந்து) நடித்துக்காட்ட, அது பார்வையாளர்களிடமிருந்து போதிய வரவேற்பைப் பெறாது போக, அவர்களின் ரசனையைக் குறை கூறுகிறார். பிறகு, முதிய பெண் வெற்றிகரமாக பறக்கும்போது, அந்தக் காட்சி உண்மையில் நடந்தேறுகிறது - அதாவது, அப்பெண்ணின் பறக்கும் இயந்திரத்தால் துரத்தப்பட, நம் நடிகர் அதிலிருந்து தப்புவதற்காகப் பலமுறை தரையில் விழுந்து எழுவது, ஒரு புன்னகையை வரவழைக்கும் காட்சி. இவரது பாத்திரம் கதைக்கு அதிக வலு சேர்க்காவிட்டாலும், 'வெற்றுக் கனவுகள்' என்ற கருத்தை வலியுறுத்துவதற்கு அவரது கதை உதவுகிறது.
இளைஞருக்கும் இளம் பெண்ணுக்குமுள்ள இடைவெளி மேலும் குறைகிறது. முதிய பெண்ணுடனான காதல் கொஞ்சங் கொஞ்சமாகக் கசந்து விட, இளம் பெண்ணின் பால் ஈர்க்கப்படுகிறார் இளைஞர். தனது காதல் தேர்வில் தவறிழைத்து விட்டதாக அவரிடம் ஒப்புக் கொள்கிறார். முதிய பெண்ணால் தான் பயன்படுத்தப்பட்டதாகவே உணர்வதாகக் கூறுகிறார். அவரது மேம்போக்கான குணத்தை இப்போதே உணர முடிந்ததாகத் தெரிவிக்கிறார். இளம்பெண்ணை அழைத்துக் கொண்டு எங்காவது ஓடிவிடத் தயாராக இருப்பதாகவும் தன்னுடன் வரும்படியும் இளம்பெண்ணை அழைக்கிறார். அவரோ, சில business விவகாரங்களை கவனிக்க வேண்டியிருப்பதால், தன்னால் அந்த அழைப்பை ஏற்று வர இயலாது என்று விடையளிக்கிறார்.
இந்நேரத்தில் முதிய பெண்ணின் பிறந்த நாள் வருகிறது. படத்தின் நீஈஈஈஈண்ட காட்சியும் உச்சக்கட்டமும் அதுதானென்பதால், அதற்கென ஒரு தனியிடுகை........ அடுத்த முறை மூட் வரும்போது :)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக