ஞாயிறு, ஜூலை 16, 2006

கதைகளும் படிப்பினைகளும்

இந்த ஒரு வாரத்தில் என்ன சொல்ல வந்தேன் என்றுத் தெளிவுப்படுத்தும் முயற்சி இது. 'இந்தியா ஒளிர்கிறது' என்ற கோஷங்களையெல்லாம் அன்றாடம் கேட்டுக் கொண்டிருந்தாலும், தினசரி வாழ்வில் ஒரு மாபெரும் மக்கள் கூட்டம் இந்த மாற்றங்களாலெல்லாம் எந்தவொரு முன்னேற்றமும் அடையாமல், முன்பிருந்த நிலையிலேயே (அல்லது அதை விட மோசமான நிலையில்) தொடர்ந்து கொண்டிருந்த உண்மை நிலையைக் காண்கையில், 'எங்கேயோ உதைக்குதே' என்ற எண்ணம் தோன்றிக் கொண்டிருந்தது. இந்நிலையில்தான் நிகழ்ந்தன விவசாயிகள் தற்கொலை, கிராமப்புறப் பட்டினிச் சாவுகள் ஆகியன. அப்போதுதான் உறைத்தது 'trickle down economics' பேசும் நிபுணர்களின் அயோக்கியத்தனம். நடக்க இயலாதவொன்றைக் காட்டி, நம்மைக் குஷிப்படுத்தும் திட்டத்தைத்தான் நம் ஆட்சியாளர்களும் கொள்கை ஆலோசகர்களும் செயல்படுத்திக் கொண்டிருந்தார்கள் / கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் ஊடகங்களிலிருந்தாவது உண்மை நிலவரம் புலப்படக்கூடுமா என்று பார்த்தால், அவையும் மக்களின் கேளிக்கைத் தேவைகளையே நிறைவேற்றிக் கொண்டிருந்தன. அவ்வப்போது எங்காவது அசம்பாவிதங்கள் நடந்தால் அந்தந்த நேரங்களில் மட்டும் மக்கள் பிரச்சனைகளுக்குக் கூடிய கவனம் வழங்கப்படும். மற்ற நேரங்களில் business, as usualதான். இதில் ஆட்சியிலிருப்பவர்களை நோக்கி அடிவருடுதல் வேறு. கம்பியெண்ணிக் கொண்டிருக்க வேண்டிய சந்திர பாபு நாயுடுவை CEO of the State ஆக்கிய பெருமை நம் ஊடகங்களையே சேரும்.

இதுபோல் திரிக்கப்பட்ட உண்மைகளையே அன்றாடம் உட்கொள்ள வேண்டிய நிலையிலிருக்கும் நாம், உண்மையான ஜனநாயக நாட்டில் வாழ்ந்து கொண்டிருப்பதாக எண்ணிக் கொள்ள முடியாது. ஏனென்றால் ஆட்சியாளர்களைப் பற்றிய நம் கருத்துகள் / முடிவுகள் / தேர்வுகள் ஆகியன, இத்தகைய திரிக்கப்பட்ட உண்மைகளின் அடிப்படையிலேயே அமைகின்றன. ஒரு மாபெரும் மூளைச்சலவை செய்யப்பட்ட மக்கள் கூட்டம் என்று வேண்டுமானால் நம்மை விவரித்துக் கொள்ளலாம், நிச்சயமாக ஜனநாயகம் என்றல்ல.

சந்திர பாபு நாயுடு புகழேணியின் உச்சியில் இருந்த காலத்தில்தான் Hinduவில் திரு.P சாய்நாத்தின் ஒரு செய்தியறிக்கையைப் படித்தேன். வேறெந்த ஊடகத்திலும் கிடைக்காத ஒரு செய்தி (மற்றும் ஹைதராபாத்தில், மற்ற அலுவலக நண்பர்களும் அறிந்திடாத ஒரு செய்தி) அந்தக் கட்டுரையில் எனக்குக் கிடைத்தது. அதாவது ஆந்திர மாநிலத்தின் பெருவாரியான கிராமங்களில் மக்களின் பசியைப் போக்குவதற்காக கஞ்சி ஊற்றும் நிலையங்கள் (soup kitchens) தன்னார்வலத் தொண்டர்களால் நடத்தப்படுகின்றன என்பதே செய்தி. பல இடங்களில் இது மார்க்சீயக் கட்சியால் முன்னின்று நடத்தப்பட்டது என்பது உபரியான செய்தி (to give the devil his due. மேலும், பொதுவிடங்களில் உண்டி குலுக்கும் தோழர்களின் பங்களிப்பைக் குறைத்து மதிப்பிடக் கூடாதல்லவா?). IT powerhouse என்றெல்லாம் எல்லாத் தரப்பினராலும் செல்லமாக வர்ணிக்கப்பட்ட ஆந்திர மாநிலத்தின் கிராமப்புறங்களில், பெருவாரியான மக்கள் யாசகம் பெற்று வாழ்க்கை நடத்தும் அவல நிலையிலுள்ளனர் என்றத் திகைக்க வைக்கும் செய்தியை மற்ற ஊடகங்கள் எவ்வாறு தவற விட்டன? அல்லது திட்டமிட்டு இருட்டடிப்பு செய்தனவா, என்று எனக்கு இன்னமும் அது புரியாத புதிராகவே உள்ளது. இது போல் தமிழகத்தில் எத்தனை திகைக்க வைக்கும் செய்திகள் மறைக்கப்பட்டுள்ளன? மற்ற மாநிலங்களின் நிலவரம் எப்படி? இதற்கெல்லாம் நமக்கு விடைகள் கிடைக்காமலே போகலாம். 'கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய்' என்பதே நம் நாட்டின் நகர்ப்புற வாழ்க்கை கற்பிக்கும் அரிய பாடம்.

'இல்லாத பிரச்சினைகள்' குறித்தே இந்த ஒரு வாரம் முழுக்க எழுதியிருக்கிறேன். நம் ஊடகங்கள், ஆட்சியாளர்கள் மற்றும் (நானும் அங்கம் வகிக்கும்) மத்திய வர்க்கத்தினர், ஆகியோரைப் பொறுத்த வரை, அவை 'இல்லாத பிரச்சினைகள்'தாம். இப்பிரச்சினைகளைப் பற்றிய நம்பகமான source என்று நான் கருதும் ஒருவர் அளித்திருக்கும் தகவல்களை வைத்து, அவற்றின் அசல் வடிவத்தை விளக்க முயற்சித்திருக்கிறேன். அவற்றிற்குத் தீர்வுகள் வழங்கும் அளவுக்கு அனுபவமோ முதிர்ச்சியோ இல்லாத காரணத்தால், அத்தகைய core competence ;) உடைய ஒருவரது பங்களிப்பைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறேன்.

இன்று, இந்தத் தகவல்களைத் தொடர்ந்து, எனக்குத் தோன்றும் சில வலுவான எண்ணங்களை முன்வைக்க விரும்புகிறேன்.

  • கிராமம் - இது எக்காரணம் கொண்டும் அழிக்க முடியாத ஒரு அமைப்பாக நம் அரசியல் சட்டத்தில் திருத்தியமைக்க வேண்டும். அதன் இறையாண்மை (sovereignty) சட்டத்தால் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டும்.
  • தனியொருவனுக்கிங்கு கல்வியில்லையேல் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்
  • தனியார்மயமாக்கம் - தேவையானது மற்றும் இன்றியமையாதது. ஆனால் அதன் engagement modelதான் கேள்விக்குரியது. நூறு கோடி இந்தியர்களின் சார்பாக அரசு என்றொரு அமைப்பு ஒற்றை வாடிக்கையாளனாகச் செயல்பட்டுக் கொண்டு, அது தனியாரை நோக்கி, "வாங்க, எனக்கு something குடுத்துட்டு இதோ இவங்கள இஷ்டத்துக்கு கொள்ளையடிச்சிக்கோங்க" என்று கூறும் ஏற்பாடு ஏற்றுக் கொள்ள முடியாதது. அதே நூறு கோடி இந்தியர்கள் ஒவ்வொருவரும் தனியாரை நோக்கி "என்னாப்பா, சொத்தையும் சொள்ளையுமா இருக்கு? வேற குடு" என்று விழிப்புணர்வுடன் தாம் பெற வேண்டியதை வற்புறுத்தி வாங்கிப் பெறும் நிலை ஏற்றுக் கொள்ளக்கூடியது, மற்றும் சாதகமானதுவும் கூட.
  • வளர்ச்சித் திட்டங்கள் - இவை செயல்படுத்தப்படும் பகுதியிலுள்ள கிராம மக்களின் ஒப்புதல் இருந்தால் மட்டுமே, இவை முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும்.
  • மக்கள் நலத் திட்டங்கள் - அவை யாருக்காகத் தீட்டப்படுகிறதோ, அந்தப் பலனாளிகளைக் கலந்தாலோசித்தே இவை செயல்படுத்தப்பட வேண்டும். அப்போதுதான் அவை அவர்களின் உண்மைத் தேவைகளை நிறைவேற்றும் வாய்ப்பைப் பெறும்.
இத்துடன் எனது வாரம் முடிவடைகிறது. வாய்ப்பு கொடுத்த தமிழ்மணத்தாருக்கும், வாசித்து ஆதரித்த நண்பர்களுக்கும் நன்றி.

15 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

உள்ளபடியே, இம்சை அரசன், பின்னூட்டச்சண்டைகள், தன்னிலை விளக்கங்கள், வியாக்கியானங்கL காரணமாக, இந்தப் பதிவுகள், வேண்டிய அளவு கவனத்தைப் பெறாமல் போனதிலே எனக்கு வருத்தம்.

தனியார் மயமாக்குதல் குறித்த உங்கள் பார்வையிலும், தொனியிலும் எனக்கு வேறுபாடுகள் இருந்தாலும், ( குறிப்பாக ராஜ்மஹல் சுரங்கப் பதிவு), அதிலே தென்படும் அக்கறைக்காகவும், அடிப்படை நோக்கத்துக்காகவும் மதிக்கிறேன்.

தொடர்ந்து எழுதுங்கள். நன்றி

- உடுக்கை முனியாண்டி சொன்னது…

கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் இடையிலான இந்த வேறுபாட்டை எப்படி குறைக்க போறோம்ன்றது ஒரு பெரிய சவால் தான். இது போக நகரங்கள்லயே வசிக்கற/குடிபெயர்ந்த வசதியற்றவர்களையும் கணக்குல எடுக்க வேண்டியதிருக்கு. அதுவும் பெரிய எண்ணிக்கை தான்.

மக்கள் தொகைதான் வளரும் இந்தியாவோட மூலதனம்னு ஒரு பக்கம் சொல்லிக்கிட்டே அந்த மக்கள் தொகையோட ஒரு பெரும் பகுதியையே கண்டுக்காம போய்க்கிட்டு இருக்கோம்.

இதைப் பத்தின தீர்வுகளை உங்களோட அடுத்த பதிவுகள்ல கொஞ்சம் விரிவாவே அலச முடிஞ்சா நல்லது.

பொருளாதார ஏற்றத்தாழ்வு ஒரு பக்கம்னா இன்னொரு பக்கம் Digital divde மிரட்டிக்கிட்டு இருக்கு. அதுவும் நிறைய பிரச்சனைகளை கொண்டு வரும்.


அப்புறம் இந்த வாரப் பதிவுகளுக்கு நன்றி. முத்து, பிரகாஸ் சொல்லியிருக்கற மாதிரி மத்த கூச்சல்களுக்கிடையில இந்த பதிவுகள் கவனம் பெறாமல் போனதில வருத்தம் தான்.

அதனால என்ன தொடர்ந்து எழுதுங்க.மாற்றுக்கருத்துகளுக்கான தேவை இருந்துகிட்டே தான் இருக்கு.

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) சொன்னது…

மிக நல்ல தகவல்களை வழங்கி மிக அருமையாக இருந்தது உங்களின் நட்சத்திர வாரம். நன்றாக எழுதுகிறீர்கள். நீங்கள் தமிழ்மணத்தின் கருவிப் பதிவேட்டை நிறுவி comment moderation செய்திருந்தால் இந்தப் பதிவுகள் மிக அதிக அளவில் சென்றடைந்திருக்கும். உங்களுக்கு நேரம் கிடைக்கும் பொழுது இதை செய்யுங்கள் என்று விண்ணப்பித்துக் கொள்கிறேன். மீண்டும் ஒரு முறை உங்களுக்கு நட்சத்திரமாக வாய்ப்பு வழங்கப் பட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

Voice on Wings சொன்னது…

பிரகாஷ், உங்கள் ஆதரவுக்கு நன்றி. கில்லியில் இணைப்பு கொடுத்ததையும் பார்த்தேன். அதற்கும் நன்றி. மற்றபடி, இதர நிகழ்வுகளால் எனது இடுகைகள் கவனம் பெறவில்லை என்பதிலெல்லாம் எனக்கு வருத்தம் கிடையாது. அதிக கவனத்தை ஈர்க்கக்கூடியவை அல்ல என்பது தெரிந்தே இந்தத் தகவல்கள் குறித்து எழுத முடிவு செய்தேன். So, no regrets. 'ராஜ்மஹால்' குறித்து ஏன் என்னுடன் உடன்படவில்லை என்பதையும் நீங்கள் தெரிவித்திருக்கலாம். அது ஒரு தோல்வித் திட்டம் என்பது அவர்களது வலைத்தளத்திலிருந்தே தெரிகிறதல்லவா?

முனியாண்டி, உங்களோட முழுவதுமா உடன்படறேன். தற்போது மனித 'வளமா' கருதப்படறது, மொத்த ஜனத்தொகையில ஒரு சிறிய விழுக்காடுதான். நீங்க சொல்ற digital / analogன்னு எல்லா விதமான ஏற்ற தாழ்வுகளும் சமன்படணும். இதுக்கு, துக்கி விடும் முயற்சிகள் ஒரு பக்கம்னா, இன்னொரு பக்கம் பிடிமானங்கள பிடிச்சிக்கிட்டு மேல வர்றதுக்கான முயற்சிகளும் மேற்கொள்ளப் படணும். கல்வி / அதை பெறுவதற்கான விடாமுயற்சிகள், ஆகியவற்றின் முக்கியத்துவம் மக்களுக்கு போதிய அளவுக்கு எடுத்துச் சொல்லப் படல்லையோன்னும் தோணுது. உங்க தொடர்ந்த ஊக்குவிப்புக்கு நன்றி :)

குமரன் எண்ணம், உங்கள் ஆதரவுக்கு மிகுந்த நன்றி. 'பதிவு' பட்டை, மட்டுறுத்தல் போன்றவற்றைப் பற்றி அறிந்திருந்தாலும் பல்வேறு காரணங்களால் அதைச் செயல்படுத்தவில்லை. தமிழ்மண முகப்புப் பக்கத்திலிருந்து எனது இடுகைகளுக்கு நல்ல விதமாகவே கவனம் கிடைத்ததாக எண்ணுகிறேன். இருந்தும், உங்கள் யோசனைக்கு நன்றி :)

மா சிவகுமார் சொன்னது…

அங்கங்கே உங்கள் பெயர்கள் தென்பட்டுக் கொண்டிருந்தாலும், நட்சத்திரமாக தமிழ் மண முகப்பில் மிளிர்ந்து கொண்டிருந்த போதும், இன்று வரை உங்கள் பக்கங்களுக்கு வரவே இல்லை. வலைப்பதிவாக இருப்பதால் விட்டுப் போனதை படித்துக் கொள்ளலாம் என்ற ஆறுதல்.

இந்தப் பதிவின் இன்றைய மக்களாட்சி முறையில் குவிந்து கிடக்கும் அதிகாரங்களால் உணர்வு நீக்கப்பட்டு விட்ட அரசுகளும், வணிகத்தரகர்களாகி விட்ட ஊடகங்களும் எப்படி மக்களைச் சுரண்ட வழி வகுக்கின்றன என்று அழகாக எழுதியுள்ளீர்கள். கூடவே கம்யூனிஸ்டுகளுக்கு ஒரு இடி வேறு.

எந்தப் பத்திரிகையும் எழுதா விட்டாலும், வீட்டை விட்டு, குளிரூட்டப்பட்ட அலுவலக அறைகளிலிருந்து வெளியே வந்து நான்கு தெருக்கள் கடந்து விட்டால் எந்த இந்தியனும் இந்தியா ஒளிரும் அழகைப் பார்த்து விட முடியும். இரண்டு நாட்கள் முன்பு சென்னை ரிச்சி தெரு அருகில் ஒரு சந்துக்குள் போய் வந்தேன். அங்கு வாழும் மக்களுக்கு வாழ்க்கை ஒளிரும் நாள்தான் இந்தியா ஒளிரும் நாள். அதை பங்குச் சந்தை குறியீடு பின்னால் அலையும் நிதியமைச்சரோ, தில்லியிலிருந்து, சென்னையிலிருந்து எல்லாவற்றையும் ஆட்டி வைக்க முனையும் அதிகார அமைப்போ சாதிக்கக் கண்டிப்பாக முடியாது.

கிராம அமைப்பை கொஞ்சம் கொஞ்சமாக கொன்று வரும் பொருளாதாரக் கொள்கைகளையும் சுட்டிக் காட்டியிருக்கிறீர்கள். நீங்கள் கேடும் ஒவ்வொன்றும் மிக அவசியமாக செய்யப்பட வேண்டியவை. அதற்கு மக்கள் பங்கு கொள்ளும் மக்களாட்சி வேண்டு. ஐந்தாண்டுக்கு ஒரு முறை ஓட்டு மட்டும் போடும் உரிமை போதாது.

அன்புடன்,

மா சிவகுமார்

வானம்பாடி சொன்னது…

//ஒரு மாபெரும் மூளைச்சலவை செய்யப்பட்ட மக்கள் கூட்டம் என்று வேண்டுமானால் நம்மை விவரித்துக் கொள்ளலாம், நிச்சயமாக ஜனநாயகம் என்றல்ல.//

வெட்ககரமான உண்மை

Kasi Arumugam சொன்னது…

அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள். ஆழமான இடுகைகள். கிராமப்புறத்திலிருந்து வந்தவன், நகரிலேயே வசிக்க நேர்ந்தாலும் புறநகரையே நாடுபவன் என்ற வகையிலும், நட்புக்கள், சொந்தங்கள் என்று பெருமளவு கிராமத் தொடர்புகளைப் பேணுபவன் என்ற முறையிலும் உங்கள் கருத்துக்களோடு பெரும்பாலும் ஒத்துப்போக முடிகிறது. ஆனாலும் இத்தகைய சிந்தனை ஓட்டங்கள் ஆட்சியதிகாரம், முடிவெடுக்கும் அதிகாரம் உள்ளவர்களிடம் அறுகிவருவது நிதர்சனம். வருத்தமாகத்தான் இருக்கிறது.

நல்ல நட்சத்திர வாரத்திற்கும் நன்றி.

சன்னாசி சொன்னது…

//இதுபோல் திரிக்கப்பட்ட உண்மைகளையே அன்றாடம் உட்கொள்ள வேண்டிய நிலையிலிருக்கும் நாம், உண்மையான ஜனநாயக நாட்டில் வாழ்ந்து கொண்டிருப்பதாக எண்ணிக் கொள்ள முடியாது. ஏனென்றால் ஆட்சியாளர்களைப் பற்றிய நம் கருத்துகள் / முடிவுகள் / தேர்வுகள் ஆகியன, இத்தகைய திரிக்கப்பட்ட உண்மைகளின் அடிப்படையிலேயே அமைகின்றன. ஒரு மாபெரும் மூளைச்சலவை செய்யப்பட்ட மக்கள் கூட்டம் என்று வேண்டுமானால் நம்மை விவரித்துக் கொள்ளலாம், நிச்சயமாக ஜனநாயகம் என்றல்ல. //

சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள் - எல்லாம் பிரமாதமாக இருக்கிறது என்று 'தன்னைப் பாதிக்காதவரையில் எதுவும் பிரச்னையில்லை' என்ற ரீதியில் அணுகாமல், இதுபோன்ற சிக்கல்களின் receiving endல் நாம் இருந்தால் எப்படியிருக்கும் என்று யோசித்து இந்தரீதியிலான கருத்தாக்கங்களை விமர்சித்தால் பெரும்பாலும் அது ஒரு அபஸ்வரமாகத்தான் பெரும்பாலானோருக்குப் படுகிறது.

//'பதிவு' பட்டை, மட்டுறுத்தல் போன்றவற்றைப் பற்றி அறிந்திருந்தாலும் பல்வேறு காரணங்களால் அதைச் செயல்படுத்தவில்லை. //

பின்னூட்ட மட்டுறுத்தல் என்ற நிர்ப்பந்திப்புக்கு ஆளாகாமல் இருப்பது, கவன ஈர்ப்பு குறித்துக் கவலைப்படாமல் தன் கருத்துக்களை எழுதுவது என்ற ரீதியில் எழுதப்படும் உங்கள் பதிவுகள் மேல் எனக்குப் பெரும் மதிப்புண்டு - தொடர்ந்து இதேபோல்தான் இருக்கவேண்டுமென்றும் ஒரு வேண்டுகோளை (நிர்ப்பந்திப்பு அல்ல) வைக்கிறேன் :-). மிகவும் பயனுள்ள பதிவுகள் - நன்றி.

மலைநாடான் சொன்னது…

நட்சத்திர வாரத்தில் வரும் நண்பர்களுக்கு கூடிய வரையில் முன்னமே வாழ்த்துக்கூறி வரவேற்றுக் கொள்வேன். உங்கள் முதல் இரண்டு பதிவுகளைப் பார்த்ததும் இறுதியாகச் சொல்லலாம் எனப்பட்டது. அதனால்தான் இப்போ வந்திருக்கின்றேன். அரசியலாளர்களின் சூதாட்ட விளையாட்டில் இழக்கப்படும் முதுகெலும்பினைப்பற்றிப் பேசியிருக்கின்றீர்கள். சிந்தனைக்குரிய கருத்துக்கள். தொடரந்து எழுதுங்கள். உங்கள் ஆக்கபூர்வமான எழுத்துக்கள் தொடர வேண்டுமெனும் எனும் பெருவிருப்போடு வாழ்த்துக்கள்.

Boston Bala சொன்னது…

நன்றி. முழுதும் இன்னும் படித்து முடிக்கவில்லை. பாக்கியையும் வாசித்து விட்டு சந்தேகங்கள் & மீத வணக்கங்களுடன் வருகிறேன்.

தருமி சொன்னது…

'நரி இடம் போனால் என்ன; வலம் போனால் என்ன? என் மேல விழுந்து கடிக்காம இருந்தா சரி' 'சித்தம் போக்கு; சிவன் போக்கு' 'நாம ஒரு ஆளு சொல்லி/மாறி என்ன ஆகப்போகுது'

-- என்ற தத்துவங்களின் தொகுப்பாகவே நாம் எல்லோரும் இருக்கிறோம். மாற/மாற்ற ஆசை. வழி...?

வசந்தன்(Vasanthan) சொன்னது…

நட்சத்திரக் கிழமையின் அனைத்துப் பதிவுகளும் படித்தேன்.
அருமையான பதிவுகளைத் தந்தமைக்கு நன்றி.

Yagna சொன்னது…

என்னடா இது நெடுநாளா ஒரு பதிவும் போடாம திடீர்னு இவ்வளவு பதிவுகள் அதுவும் ஆழமானவைனு யோசிச்சேன், ஓ நட்சத்திர வாரமா? விடாம படிச்சேன் நட்சத்திர வாரம்னு இப்பொ தான் தெரியும். உன்மையான முன்னேற்றத்தை குறித்து பல விஷயங்களை தொட்டிருக்கிறீர்கள். ஆனா இவ்வளவு விஷயங்களுக்கும் அப்பாலும் ஒரு வளர்ச்சியிருக்குனு நினைக்கிறேன். அதற்கு தொழில்நுட்பம் [அப்படினா மென்பொருள்/கணினி இல்லை :-)] தான் சாவி. இதைப்பற்றி விரிவாக எழுதனும்.

Voice on Wings சொன்னது…

மா.சிவகுமார், ரிச்சி தெருவின் சந்துகளில் வாழும் மக்களின் வாழ்க்கை ஒளிரும் நாளே இந்தியா ஒளிரும் நாள் என்ற உங்கள் கருத்துடன் முழுமையாக உடன்படுகிறேன். மக்கள் ஐந்தாண்டுக்கொரு முறை ஓட்டு போடுவதோடு மட்டும் நின்று விடும் அவர்களது பங்கும் போதாதுதான்.

சுதர்சன், முன்பே கூறியது போல், உங்கள் தொடர்ந்த ஆதரவுக்கு நன்றி என மீண்டும் கூறிக் கொள்கிறேன்.

காசி, தமிழ்மணம் என்னும் மேடையமைத்து என்னைப் போன்றவர்களின் புலம்பல்கள் ஒரு சில நூறு பேர்களுக்காவது கேட்க வழி செய்ததற்கு நான் உங்களுக்கு நன்றியைக் கூறிக் கொள்கிறேன். இதில் 'நட்சத்திர வாரம்' என்ற முறை, வலைப்பதிவர்களுக்குக் கிடைக்கும் மேலதிக வாய்ப்பே. இந்தச் சேவைக்காக நீங்களும் மதியும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

சன்னாசி, உங்கள் எழுத்தாற்றல் மீதும் எனக்கு மிகுந்த மதிப்புண்டு. எனது வலைப்பதிவுச் செயல்பாட்டில் (இடுகைகளின் எண்ணிக்கை குறைவதைத் தவிர) பெரிய மாற்றமெதுவுமிருக்காது என்று உங்களுக்கு உறுதியளிக்கிறேன் :)

மலைநாடான், எனது அனைத்து இடுகைகளையும் வாசித்து, பிறகு இறுதியில் உங்கள் கருத்தைத் தெரிவித்ததற்கு நன்றி.

பாலா, உங்கள் சந்தேகங்களை எதிர்ப்பார்த்திருக்கிறேன் :)

தருமி, எனது பல இடுகைகளிலும் உங்கள் ஆதங்கத்தைத்் தெரிவித்திருக்கிறீர்கள். அவற்றை நானும் பகிர்ந்து கொள்கிறேன், வேறொன்றும் செய்ய இயலாத நிலையில்.

வசந்தன் மற்றும் யக்ஞா, எனது அனைத்துப் பதிவுகளையும் பொறுமையுடன் வாசித்ததற்கு மிகுந்த நன்றி :) யக்ஞா, தொழில்நுட்பம் ஒரு கருவி. அது எதற்காகப் பயன்படுத்தப்படுது என்பதை வைத்து அது மக்களின் துயரை உண்டாக்குமா அல்லது போக்குமா என்று தெரிய வரும். தொழில்நுட்பத்தை ஆக்கப்பூர்வமா பயன்படுத்தினா அது மக்களின் முன்னேற்றத்தைத் துரிதப்படுத்தக்கூடும் என்ற அளவில் நான் உங்களுடன் உடன்படுகிறேன்.

Unknown சொன்னது…

தனியார் மயமாக்குதல் குறித்த உங்கள் karuthukkalin அக்கறைக்காகவும், அடிப்படை நோக்கத்துக்காகவும் மதிக்கிறேன்.நல்ல தகவல்களை வழங்கி , நன்றாக எழுதுகிறீர்கள்
நிதர்சனம். வருத்தமாகத்தான் இருக்கிறது.

நல்ல நட்சத்திர வாரத்திற்கும் நன்றி.
cuddalore bala