வெள்ளி, ஜூலை 13, 2007

தமிழ்த்திரையில் பெண்கள் பற்றிய விவாதம்

அண்மையில சில சுவாரசியமான விவாதங்களைப் பார்க்க முடிஞ்சுது - குறிப்பா லட்சுமி மற்றும் மோகன்தாசுக்கு இடையில் நடைபெற்று வரும் / வந்த 'சிவாஜி' குறித்த விவாதங்கள். அந்தப் படத்த நான் இன்னும் பாக்கல்ல - பாக்கறதா உத்தேசமும் கிடையாது. லட்சுமியோட வாதம் முதலில் கவனத்தை கவர்ந்தது. அவர் கூறும் கருத்து - பெண்களை (அல்லது ஒரு குறிப்பிட்ட பெண்ணை) 'கொஞ்சமே கொஞ்சம்' புத்திசாலித்தனத்துடனாவது இப்படத்தில் சித்தரித்திருக்க வேண்டும் என்பதாகப் புரிந்து கொள்கிறேன். அதுக்கு மோகன்தாஸ் எதிர்வினையாற்றி மொத்த ஆண்குலத்தின் சார்பா சில கருத்துகளைத் தெரிவிச்சதில் எனக்கு அவ்வளவா உடன்பாடு கிடையாது. ஒரு ஆண் என்ற முறையில், திறமையுள்ள பெண்களையே விரும்பியிருக்கிறேன், தொடர்ந்து விரும்பவும் செய்வேன் என்ற உறுதிமொழி அளித்துவிட்டு (அப்படியே மோகன்தாசின் கூற்றில் உண்மையில்லை என்பதையும் நிரூபித்துக் கொண்டு) எனது வாதத்தைத் தொடர்கிறேன்.

இங்க நான் உதாரணமா குறிப்பிட விரும்பும் ஒரு படம் Kill Bill. படம் ஒரு பெண்ணை மையமாகக் கொண்டது. அவளது எதிரிகளும் பெண்களே. படத்தில் நிறைய சண்டைக் காட்சிகள் வரும், நன்றாகப் படமாக்கப்பட்டிக்கும். கொஞ்சம் உன்னிப்பா கவனிச்சீங்கன்னா, அவள் ஆண்களை வெகு சுலபமா வீழ்த்தி விடுவாள். அவர்கள் நூற்றுக்கணக்கா வந்தாலும் அவர்களையெல்லாம் ஒரு சில நிமிடங்களில் ஒன்றுமில்லாமல் ஆக்கி விடுவாள். ஆனா எதிரில் சண்டையிடுவது பெண் என்னும்போது மட்டும் வெகு நேரப் போராட்டத்துக்குப் பிறகே அவளால வெற்றியடைய முடியும். இது ஏன் அப்படின்னா, அதைப் படைத்தவரின் மனநிலையை ஒத்தே அவர் வெளியிடும் படைப்பும் அமையும்ன்னு அதை அப்படியே ஏத்துக்க வேண்டியதுதான். பெண்களை சண்டைக்கலையில் திறமை மிக்கவர்களாகக் காட்ட வேண்டும் என்ற படைப்பாளியின் முடிவை நாம கேள்வி கேட்க முடியாது, அப்படி கேள்வியில்லாமல் ஏற்றுக் கொண்டுதான் இருக்கிறோம் (படத்தை வெற்றியாக்கியதன் மூலமாக). Crouching tiger........, Charlie's Angels, போன்ற படங்களிலும் இத்தகைய கருத்தை வெளிப்படுத்தியிருப்பார்கள். அவையும் வெற்றியடைந்தனன்னு நினைக்கறேன்.

இது என்ன அநியாயம்? ஆண்களை விட அவ வலு மிக்கவளாகவே இருக்கட்டும்....... ஆனாலும், அவளை சில நிமிடங்களாவது தாக்குப் பிடிக்கக் கூடியவர்களா ஆண்களை சித்தரிச்சிருக்க'லாம்', 'லாம்'ன்னு பல லாம்களை அடுக்குவது எவ்வளவு அபத்தமானதா இருக்கு? இன்னைக்கு பெண்களை 33% ஆவது புத்திசாலிகளா காட்டணும்ன்னு கேப்போம். அப்பறம், சிறுபான்மையினரை குற்றவாளிகளாவோ, தீய பழக்கம் உடையவர்களாவோ காட்டக்கூடாதுன்னுவோம். அதுக்கு அப்பறம் எரிபொருள் சேமிக்கிறதுக்காக இனிமே ஹீரோக்கள் பஸ்லயோ, டிரெயின்லயோ பயணம் செய்யற மாதிரிதான் காட்சி அமைக்கணும், கார்ல போற மாதிரி காட்டினா நல்ல 'முன்மாதிரி'யா இருக்காதுன்னுவோம். ஏற்கனவே, சினிமால புகை பிடிக்கக்கூடாது, தண்ணியடிக்கக்கூடாது, முத்தம் குடுத்துக்கக்கூடாதுன்னு சட்டம் போட்டு தடை செஞ்சாச்சு. தமிழ்ல பேர் வைக்க'லாமே'ன்னு (வன்மையாவே) அறிவுறுத்தியாச்சு. இவ்வளவு விதிகள் / வழிகாட்டுதல்களையும் கடந்து ஒரு படைப்பாளிக்கு புனைய எதாவது கதை மிஞ்சுமான்னு பாக்கணும்.

Stereotypeகள் தொடரணும்ன்னு சொல்லல்ல. பெண்கள் சில குறிப்பிட்ட நடிகர்களின் படங்களில் சற்று சாமர்த்தியம் குறைந்தவர்களாகக் காட்டப்படுகிறார்கள்ன்னா அதை ஒத்துக்கறேன். ஆனா, ஒட்டு மொத்த தமிழ் சினிமால வர்ற பெண் பாத்திரங்கள் எல்லாமே அவ்வாறுதான் சித்தரிக்கப்படுகிறார்கள்ன்னா அதை என்னால நிச்சயமா மறுக்க முடியும். (நடிகை) லட்சுமி, சுஜாதா, ஸ்ரீதேவி, சரிதா, சுகாசினி, ரேவதி, ராதிகா போன்ற நடிகைகள் பல படங்களில் சுயசிந்தனையாளர்களா காட்டப்பட்டிருக்காங்க. அவங்கல்லாம் பாலசந்தர் பட நாயகிகள் எனப்படும் 'தாழ்த்தப்பட்ட' கேட்டகிரில வர்றாங்களான்னு தெரியல. ஒரு சில நாட்களுக்கு முன்பு நான் பார்த்த '16 வயதினிலே', அதே இயக்குனரின் 'சிகப்பு ரோஜாக்கள்'ன்னு நிறைய top-of-the-mind உதாரணங்களைத் தர முடியும். 'மிஸ்டர் சுகாசினியின் பெண்கள்' அப்படீன்னு மதுரா ஒரு தனிப்பதிவே போடுமளவுக்கு உதாரணங்கள் உண்டு.

பழைய எம்ஜியார் படம் ஒண்ணு டிவில போய்க்கிட்டு இருந்தது. பேர் தெரியல. ஆனா கதை என்னன்னா, ஒரு துஷ்டப் பெண்ணரசி, பகடை விளையாட்டுல தந்திரம் செஞ்சி வேற்று நாட்டு அரசர்களை எல்லாம் தனக்கு அடிமைகளாக்கி, அவர்களது நாடுகளையும் தன்வசப்படுத்துகிறாள் என்பதுதான். இன்னொரு உதாரணம் - "வாராய் நீ வாராய்............. போகுமிடம் வெகு தூரமில்லை, நீ வாராய்........" என்ற பாட்டின் காட்சியமைப்பு ஞாபகமிருக்கும்ன்னு நினைக்கிறேன். தன்னை மலையிலிருந்து தள்ளிவிடப்போகும் கணவனை தந்திரத்தால் வென்று உயிர் தப்பும் பெண்ணை பற்றிய காட்சி அதுன்னு நினைக்கிறேன். ஆக, பெண்களை அறிவுக் கூர்மை மிக்கவர்களாக (பெண்ணியமெல்லாம் பேசப்படாத) அந்தக்காலத்திலிருந்தே காட்டி வந்திருக்கிறார்கள் என்பதுதான் இதிலிருந்து நான் நிறுவ முயலுவது.

ஒரு பாத்திரப் படைப்பு என்பது முற்றும் முழுவதுமாக ஒரு படைப்பாளியின் உரிமை. சரஸ்வதி நிர்வாணமாக இருக்கிறாளா என்பது அவளைப் படைப்பவன் கையிலேயே உள்ளது. அவ்வாறு இருந்திருக்கக் கூடாது என்பதெல்லாம் கலை வன்முறையே. அதே போலத்தான் ஒரு படைப்பாளியின் பாத்திரப் படைப்பை கேள்விக்குள்ளாக்குவதுவும்.

9 கருத்துகள்:

பூனைக்குட்டி சொன்னது…

//திறமையுள்ள பெண்களையே விரும்பியிருக்கிறேன், தொடர்ந்து விரும்பவும் செய்வேன் என்ற உறுதிமொழி அளித்துவிட்டு (அப்படியே மோகன்தாசின் கூற்றில் உண்மையில்லை என்பதையும் நிரூபித்துக் கொண்டு) எனது வாதத்தைத் தொடர்கிறேன். //

opinion differs. ;)

-/சுடலை மாடன்/- சொன்னது…

VoW,

I am surprised that you kind of justify the portrayal of women in the name of freedom of the artists. There is something called insensitivity in addition to the stereotyping among our film makers towards women and dark-skinned people, names or attires from lower-sections/castes, Muslim and Christians etc. To give an example, in old movies the street rowdy character would always be Robert or some such Christian name (like recently Sankarapandian or another Pandian is the Villain in most of the Tamil teleserials :-)

I do not have much time to elaborate. In 1993, we had a long but very interesting and fruitful discussion on this issue in Soc. Culture. Tamil. It summarizes most of what I feel on this issue.

http://groups.google.com/group/soc.culture.tamil/browse_frm/thread/16cd80bacd7f97b5/83398ad8632df321?lnk=gst&q=women+in+popular+tamil+movies&rnum=1#83398ad8632df321

S. Sankarapandi

Voice on Wings சொன்னது…

சுடலைமாடன், வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி. உங்களது விவாத இழையைப் பார்த்தேன். சுவாரசியமான விவாதத்தைத் தொடங்கி, நல்ல பல தகவல்களை வழங்கியுள்ளீர்கள். நீங்கள் அவற்றில் கூறிய எவற்றையும் மறுக்கவில்லை. தகவல்கள் என்ற வரையில் நீங்கள் குறிப்பிட்ட எல்லாமே உண்மைதான்.

நான் கூறியதெல்லாம், ஒரு குறிப்பிட்ட பாத்திரப் படைப்பை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உள்ளதா என்பதுதான். படைப்பாளியின் சுதந்திரம் என்று ஒன்று உண்டு. தனக்குத் தோன்றியதை தோன்றிய வண்ணம் வெளிப்படுத்துவதற்கான அடிப்படை உரிமை அது. அதை விமர்சனம் செய்ய (trash செய்ய) நமக்கு உரிமை உள்ளது. புறக்கணிக்கவும் உரிமை உள்ளது. ஆனால் அவன் படைப்புகள் எவ்வாறிருக்க வேண்டும் என்று நாம் நிர்ணயிக்க முயலுவது அவனது சுதந்திரத்தில் குறுக்கிடுவதாகும் என்பதுதான் நான் இவ்விடுகையின் மூலமாக வெளிப்படுத்துவது.

சமுதாய மாற்றத்தை திரையரங்குகளில் தேடுவதால் வரும் பிரச்சனை இது. திரைப்படம் என்பது ஒரு முகக்கண்ணாடியைப் போல்தான். பொதுவில் புழங்கும் stereotypeகள்தான் திரைக்கும் வருகின்றன. நான் கண்ணாடியில் பார்க்கும் பிம்பம் எனக்குப் பிடிக்கவில்லை என்றால் தவறு என் மீதுதான். சமுதாயம் திருந்தினால் படைப்புகளும் அதைப் பிரதிபலிக்கும். ஆகவே, நாம் கவனம் செலுத்த வேண்டியது நம் மீதுதான். ஒரு படைப்பாளியின் சிந்தனையைச் சிறையிடுவதில் அல்ல.

நீங்கள் பட்டியலிட்டுள்ள தவறான சித்தரிப்புகளை நான் நியாயப்படுத்தவில்லை என்பதையும் ஒரு தகவலுக்காக குறிப்பிட்டுக் கொள்கிறேன்.

பொன்ஸ்~~Poorna சொன்னது…

VoW,
சுடலை மாடனின் அதே ஆச்சரியம்/ஏமாற்றம் தான் எனக்கும்.

படைப்பு என்று ஒன்றை வெளியில் விட்ட பிறகு அதனைக் கேள்விக்குள்ளாக்குவதில் தவறில்லை என்பது என் கட்சி.

அதுவும் சிவாஜி போன்ற அதிக எதிர்பார்ப்பைக் கிளப்பிக் கொண்டு வரும் திரைப்படங்கள், சித்தரிக்கும் சமகால வாழ்க்கையையும் அதை வானளாவ புகழ்ந்து இன்னும் உயரே உயரே தூக்கி வைக்கும் ஊடகங்களும் இருக்கும் வரை அதன் தவறுகளையும் எடுத்துக் காட்ட வேண்டியது அவசியம் தான்.

ஏற்கனவே எங்கோ சுட்டிக் காட்டியது போல், நமது சமூகம் என்பது சினிமாக்களாலும் கதைகளாலும் கூட கட்டமைக்கப்படுகிறது. கில்லி பார்த்து கொலை செய்பவர்கள் இருக்கிறார்கள் என்னும் போது, சமூகம் திருந்தினால் தான் சினிமாக்கள் திருந்தும் என்று சொல்வது சரியாக தெரியவில்லை..

மொழி காட்டிய சமூகம் இன்றைய இந்தியாவில் இல்லை.. ஆனால் அந்தப் படம் பார்த்து 10% மக்களாவது வித்தியாசமான உடல்நலம் உள்ளவர்களை மதிக்கக் கற்றுக் கொண்டால் சமூகம் மாறத் தொடங்கும் இல்லையா?

btw, ஏன் word verification?

Voice on Wings சொன்னது…

பொன்ஸ்,

ஒரு படைப்பின் தவறுகளைச் சுட்டிக்காட்டக் கூடாது என்று நான் கூறவில்லையே? ஒரு படத்தில் ஒரு பாத்திரம் சற்று சாமர்த்தியம் குறைவானவராகக் காட்டப்படுகிறார். அவர் பெண் என்பதால்தான் அவ்வாறு காட்டப்படுகிறார் என்ற அடிப்படையில் அது புரிந்துகொள்ளப்பட்டு அதற்குத் தீர்வுகளும் (அதாங்க, புகழ்பெற்ற 'கொஞ்சமே கொஞ்சம்' கோட்பாடு) முன்வைக்கப்பட்டன. அத்தகைய புரிதலையும் அதற்கான தீர்வையும் நான் விமர்சித்திருக்கிறேன். முக்கியமாக, அந்தத் தீர்வு படைப்பாளியின் சுதந்திரத்தில் குறுக்கிடுவதாக உள்ளது என்ற என் கவலையைத் தெரிவித்திருக்கிறேன். இனி வரும் படங்களில் பத்து பெண் பாத்திரங்களில் ஒரு பாத்திரம் தங்களுக்கு ஒவ்வாத வகையில் படைக்கப் பட்டிருந்தாலும், தங்களது 'கொஞ்சமே கொஞ்சம்' கோட்பாடு கடைபிடிக்கப்படவில்லை என்று கண்டனம் தெரிவிக்கும் நிலை ஏற்படக்கூடும். அதற்கு பயந்து 'எதற்கு வம்பு' என்று எல்லா பெண் பாத்திரங்களையுமே polictically correctஆக படைக்க வேண்டிய கட்டாயத்திற்கு படைப்பாளிகள் தள்ளப்படுவார்கள் இத்யாதி, இத்யாதி.

நேற்று தொல்லைக்காட்சியில் 'புன்னகை மன்னன்' படம் போய்க் கொண்டிருந்தது. அதில் இருநூறு ரூபாய்களுக்கு ஆசைப்பட்டு ஒரு தந்தை தனது மகன் பயணம் செய்யும் வண்டியிலேயே தன்னை அறியாமல் வெடிகுண்டு வைப்பது போல் ஒரு காட்சி வரும். மகனின் அறியப்பட்ட எதிரியிடமிருந்து கூலி வாங்கிக் கொண்டு அவரது ஆணையை நிறைவேற்றுவதற்குமுன் கொஞ்சம் கூடவா ஒருவனுக்கு சந்தேகம் வந்திருக்காது என்று நமக்கு கேள்விகள் எழலாம். ஆனால் பாத்திரப் படைப்பு அவ்வாறுதான் படைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு நடப்பதற்கு சாத்திக்கூறுகளும் உள்ளன என்ற அடிப்படையில் அக்காட்சியை ஏற்றுக் கொண்டு நகருகிறோம். இங்கு அத்தகைய அடிமுட்டாளாகச் சித்தரிக்கப்படுபவர் ஒரு ஆண். சமையல் தொழில் செய்து வருபவர். குடிப்பழக்கம் உடையவர். ஆகவே இங்கு அவரை எந்தப் பிரிவின் பிரதிநிதியாகக் கொள்ளுவது? Which group should get offended by that portrayal? And what would that group demand? That no such portrayal should be made about them henceforth?

'மொழி' பட சமுதாயம் இன்று இந்தியாவில் இல்லை என்று எதைக் குறிப்பிடுகிறீர்கள் என்றுத் தெரியவில்லை. நகர்புற வாழ்க்கையில் சற்று வசதிகள் அதிகமாக இருப்பது போல் காட்டப்பட்டிருப்பது ஒரு exaggeration. ஆனால் ஒரு வித்தியாச உடல்நலம் உடையவர் இவ்வளவு தன்னம்பிக்கையோடு வாழ்வது என்பதில் எனக்கு அவ்வளவாக வியப்பில்லை. அத்தகைய உதாரணங்களை நிகழுலகிலும் கண்டிருக்கிறேன். உங்கள் உதாரணத்தை வைத்தே ஒரு கேள்வி: இதே 'மொழி' படம் ஒரு 30-40 வருடங்களுக்கு முன் வராமல் இப்போது வருவதற்கான காரணம்? இன்றைய சூழலில் முன்பை விட அதிக வாய்ப்புகள் அவர்களுக்கு இருப்பதால், 'தன்னம்பிகையோடு உலா வரும் ஒரு வித்தியாச உடல்நலமுடையவர்' என்ற பாத்திரத்தை credibility பிரச்சனையின்றி ஒரு படைப்பாளியால் இன்று படைக்க முடிகிறது. Fiction reflects reality :)

Word verification - haplog.com போன்ற அன்புத் தொல்லைகளைத் தவிர்க்கத்தான் :)

பொன்ஸ்~~Poorna சொன்னது…

//'மொழி' பட சமுதாயம் இன்று இந்தியாவில் இல்லை என்று எதைக் குறிப்பிடுகிறீர்கள் என்றுத் தெரியவில்லை. //
தன்னம்பிக்கையுடன் வலம் வரும் ஜோவைச் சொல்லவில்லை.. அவரை அப்படியே ஏற்றுக்கொள்ளும் மற்றவர்களை...

மற்றபடி, எத்தனை ரஜினி படங்களில் நீலாம்பரிகள் காட்டப்பட்ட அளவுக்கு சௌந்தர்யாக்கள் (கதாபாத்திரம் பெயர் மறந்துவிட்டது) புத்தியுள்ளவர்களாக காட்டப்பட்டிருக்கிறார்கள் என்ற கேள்வியை உங்களுக்கே விட்டுவிடுகிறேன்..

'கொஞ்சமே கொஞ்சம்' கோட்பாடுன்னு எதைச் சொல்றிங்க? சமீபத்தைய விவாதங்களில் வந்திருந்தால் எனக்குத் தெரியாது.. [லக்ஷ்மியின் முதல் இடுகையை மட்டும் தான் நான் படித்தேன்.. தாஸின் எதிர்வினை எப்படி இருக்கும்னு தான் முன்னமே தெரியுமே! ;-) ]

Voice on Wings சொன்னது…

நானும் லட்சுமியின் முதல் இடுகையைத்தான் குறிப்பிடுகிறேன் ('முட்டாள் மனைவிகளும்...'). அதில் அவர் தெரிவித்த கருத்து:

//எனக்கு என்னான்னா, அண்ணிங்களையும் இனி படங்களில் கொஞ்சமே கொஞ்சம் மூளையுள்ளவர்களாக காண்பித்தால் தலைவருக்கு வரும் இந்த எக்ஸ்ட்ரா பிரச்சனைகள் இருந்திருக்காதில்லையா? படமும் இரண்டு மணி நேரத்துக்குள்ளாகவே முடிஞ்சுடுமில்லையா? இந்த படம்தான் என்றில்லை, எண்ணிறந்த பல படங்களில் அற்புத ஹீரோக்கள் கூட அழகுச்சிலைகளாகவும் அறிவற்றவர்களாகவுமிருக்கும் ஹீரோயின்களால்தான் கடைசியில் மாட்டிக்கொள்வார்கள். அதை தவிர்க்கவாவது கொஞ்சம் அறிவுள்ள ஹீரோயின்களாய் காண்பிக்கலாமே...//

இதைத்தான் 'கொஞ்சமே கொஞ்சம்' கோட்பாடு என்று சுருக்கமாகக் குறிப்பிட்டேன். இத்தகைய எதிர்பார்ப்பில் முழு நியாயம் இருப்பதாகத் தோன்றினாலும், படைப்பாளிச் சுதந்திரம் போன்ற கோணங்களிலிருந்து இது பிரச்சனைக்குரிய எதிர்பார்ப்பே என்பதுதான் எனது கருத்து.

//மற்றபடி, எத்தனை ரஜினி படங்களில் நீலாம்பரிகள் காட்டப்பட்ட அளவுக்கு சௌந்தர்யாக்கள் (கதாபாத்திரம் பெயர் மறந்துவிட்டது) புத்தியுள்ளவர்களாக காட்டப்பட்டிருக்கிறார்கள் என்ற கேள்வியை உங்களுக்கே விட்டுவிடுகிறேன்..//

எனக்கு ரஜினி படங்களைப் பற்றி அதிகம் தெரியாது, அவற்றைப் பார்ப்பதிலும் அதிக ஆர்வம் கொண்டதில்லை. எனக்குத் தெரிந்த வரை, அவற்றிற்கென்று சில குணாதிசயங்கள் உண்டு. பெண் விடுதலை, பெண்களின் முன்னேற்றம், etc. are not a part of that feature-set.

லக்ஷ்மி சொன்னது…

நல்ல கட்டுரை.

// ஆனா, ஒட்டு மொத்த தமிழ் சினிமால வர்ற பெண் பாத்திரங்கள் எல்லாமே அவ்வாறுதான் சித்தரிக்கப்படுகிறார்கள்ன்னா அதை என்னால நிச்சயமா மறுக்க முடியும்.// இது நிச்சயமாய் என் கருத்தல்ல. இதே விவாதத்தின் அடுத்த பதிவில் நான் தெளிவாகவே சொல்லியிருந்தேன். இதை சோதித்தறிய விருப்பமிருப்பின் இங்கே பார்க்கலாம். ஆனாலும் நான் பாலச்சந்தர் பட நாயகிகள் என்ன பாவம் செய்தார்கள் என்பதை விளக்க தனி பதிவுதான் போடணும். விரைவில் போட முயற்சிக்கிறேன்.

// அவர் பெண் என்பதால்தான் அவ்வாறு காட்டப்படுகிறார் என்ற அடிப்படையில் அது புரிந்துகொள்ளப்பட்டு அதற்குத் தீர்வுகளும் (அதாங்க, புகழ்பெற்ற 'கொஞ்சமே கொஞ்சம்' கோட்பாடு) முன்வைக்கப்பட்டன. //
நான் ஏதோ சிவாஜி படத்தை மட்டும் பார்த்துவிட்டு இப்படி விமர்சிப்பதாக இருந்தால் என் புரிதல் நிச்சயம் தவறுதான். ஒரு இயக்குனர் ஆட்டிவைக்கும் படியெல்லாம் ஆட வேண்டிய அவசியம் என்றிலிருந்து ரஜினிக்கு இல்லாது போனதோ அன்றிலிருந்து இன்று வரை அவரது எல்லா படங்களிலும் ஊடாக ஒலிக்கும் இந்த பெண்களை மட்டம்தட்டும் தொனி தொடர்ந்து அவரை கவனித்து வரும் யாருக்கும் எளிதில் புரிபட்டு விடும்.

"அதிகமா கோபப்படும் பெண்ணும், அதிகமா ஆசைப்படும் ஆணும் உருப்பட முடியாது"

"பெண் பிள்ளையோ போகும் வரை ஆண் பிள்ளையோ சாகும் வரை"

"ஒரு பெண்ணை பார்க்கும் போதே கும்பிடணும் போல இருக்கும். ஒரு சில பெண்களை பார்க்கும் போதே ****** போல இருக்கும்."

என்பது தொடங்கி பெண்களுக்கு கையில் பிரம்பின்றி அவரெடுத்த வகுப்புகளும் அவர் உதிர்த்த முத்துக்களும் ஏராளம்.
ஒருவரது சுதந்திரமென்பது அடுத்தவரை தொந்தரவு செய்யாத வரைதான் என்கிற வரையரை படைப்பாளிகளுக்கும் பொருந்தும்தானே? படைப்பாளி எதை நியாயப்படுத்துகிறார் என்பதில் தானே அவரது அரசியல் பிரதிபலிக்கிறது? அந்த வகையில் ரஜினியின் ஆளுமைக்குட்பட்டு தயாரிக்கப் படும் எல்லா படங்களிலும் மனுதர்ம அடிப்படையில்தான் பெண்களுக்கான வரையரைகள் இருக்கின்றன. அவரது அந்த நிலைப்பாடே என்னளவில் எதிர்புக்குரியது. படைப்பாளிகளுக்கு சுதந்திரம் அவசியம்தான். ஆனால் அவர்களும் இச்சமூகத்தின் ஒரு அங்கம் என்கிற அளவில் சில தார்மிகக் கடமைகள் உடையவராய் இருக்க வேண்டுமென்கிற எதிர்பார்ப்பென்ன அவ்வளவு தவறா? ஹிட்லரின் நாஜி கருத்தாக்கங்களை ஆதரித்தும் கூட சில அற்புத கலை படைப்புகளுண்டு. அவற்றையெல்லாம் அவற்றின் படைப்புத்தரத்துக்காக கூட ஆதரித்து விட முடியாதில்லையா? பேச்சு சுதந்திரமிருக்கிறதென்பதால் கூட வேலைக்கு போகும் பெண்களெல்லோரும் நடத்தை கெட்டுப் போய் கலி முத்திப்போயிடும் என்று ஒரு மடத்தலைவர் சொன்னதை கூட எவ்வித எதிர்ப்புமின்றி கடந்து போய்விட முடியுமா என்ன? அதைப் போலவே இதையும் கண்டிக்கப் படவேண்டிய ஒரு விஷயமாய் பார்க்கிறேன்.

கடைசியா ஒரே ஒரு டவுட்டு...

//அதாங்க, புகழ்பெற்ற 'கொஞ்சமே கொஞ்சம்' கோட்பாடு)// புகழ் பெற்ற, கோட்பாடு .... ஆஹா.. எனக்கு எங்கயோ மிதக்கறா மாதிரி இருக்கே... மெய்யாலுமே சொல்றீங்களா, இல்லை என் போலவே இதும் வஞ்சப்புகழ்ச்சிதானா?

Voice on Wings சொன்னது…

லட்சுமி,

விரிவான விளக்கத்திற்கு நன்றி. உங்களுடைய 'மங்களம்' இடுகை வரை இந்த விவாதத்தில் வந்த எல்லாத்தையுமே படிச்சிட்டேன். இருந்தாலும் சுட்டிக்கு நன்றி. அதில் பண்டைய கிரேக்க சமுதாயம் பற்றிய தகவல்கள் நான் அறிந்திருக்காதவை.

படங்களில் மனு தர்ம கோட்பாடுகளை வலியுறுத்தும்படி வசனங்கள் வந்தால் அதை எதிர்த்து வழக்கு தொடுக்கலாம்ன்னு நினைக்கிறேன். யாரும் முயற்சி பண்ணாங்களான்னு தெரியல. வழக்கில் வெற்றி அடைய முடியாமப் போனாலும், இனிவரும் படங்கள்லயாவது ஜாக்கிரதையா இருப்பாங்க. ஹிந்தியில் My Wife's Murder என்று வந்த படத்தின் தெலுங்கு மூலம் 'மத்யானம் ஹத்யா' என்ற தலைப்பில் ராம் கோபால் வர்மாவின் இயக்கத்தில் வெளியானது. 'உங்கள் மனைவி இறந்தால் மகிழ்ச்சி அடைவீர்களா?' என்ற வரியைக் கொண்ட சுவரொட்டிகள் வாயிலாக அது விளம்பரப்படுத்தப்பட்டது. அதை எதிர்த்து மகளிர் அமைப்புகள் போராடி, நீங்கள் கூறுவது போல் 'கொஞ்சமே கொஞ்சம்' பாதிப்பாவது ஏற்படுத்த முடிந்தது. (தகவல்கள் இங்கே மற்றும் இங்கே). அதேபோல், நீங்கள் குறிப்பிடும் சர்ச்சைக்குரிய வசனங்களையும் எதிர்த்து (இந்திய அரசியல் சட்டம் முன்நிறுத்தும் 'சமத்துவம்' என்ற கொள்கையுடன் முரண்படுவதாக உள்ளது என்ற அடிப்படையில்) சட்ட ரீதியாக எதாவது முயற்சி செய்திருக்கலாம், இனிமேலாவது செய்ய வேண்டும்.

அதே நேரத்தில், சமுதாயத்தின் ஒவ்வொரு பிரிவையும் திருப்திப் படுத்தறதுக்காக, அப்பிரிவைச் சேர்ந்தவங்க எல்லாரையும் நல்லவங்களாவும் வல்லவங்களாவும் காட்டிக்கிட்டே இருக்கணும்ங்கற கட்டாய நிலை படைப்பாளிக்கு வந்துடக்கூடாதுங்கறதுதான் நான் இங்க சொல்ல முயற்சி பண்றது.

சர்ச்சைக்குரிய வசனங்கள் பத்தி பேச்சு வந்ததனால எனக்கு ஒரு சந்தேகம் - பல படங்கள்ல பெண்களே "நீயெல்லாம் ஒரு ஆம்பிளையா? போய் ஒரு புடவைய கட்டிக்கோ", "மீச வச்ச ஆம்பிளையா இருந்தா என்னோட மோதிப்பாரு" போன்ற வசனங்களை பேசற மாதிரி வருதே? இதுல பிரச்சனை இருக்கா, பிரச்சனையே இல்லையா? ஆண் Vs. பெண் மோதல் என்று காட்சி அமையும்போது எதிராளியின் பாலினத்தை இழுத்து விமர்சனம் செய்வது இயல்புதானே? ( கவனிக்கவும்: நியாயமானதுன்னு சொல்லல்லை) நீங்கள் குறிப்பிட்ட ரஜினியின் வசனங்களையும் அப்படி contextடோடு புரிந்து கொள்வதற்கான வாய்ப்பிருக்கா?

உங்கள் 'புகழ்பெற்ற' கோட்பாடு பற்றி - வஞ்சப் புகழ்ச்சியெல்லாம் கிடையாதுங்க. நெசமாலுமே புகழ்பெற்ற கோட்பாடுதான் அது :) ஆகவே, நீங்க தாராளமா 'எங்கயோ' மிதக்கலாம்.

'மிஸ்டர் பாலச்சந்தரின் பெண்கள்' பற்றிய இடுகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.