ஞாயிறு, ஜூலை 15, 2007

வெற்று விவாதங்கள் தரும் அயர்ச்சி

இணையத்தில் தமிழை முதலில் வலையேற்றியது யார் என்று ஒரு விரிவான விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அவற்றின் ஆயிரக்கணக்கான சொற்களையும் பின்னூட்டங்களையும் சுட்டிகளையும் படித்த பின்னரும் எந்த ஒரு பயனுள்ள தகவலோ, அந்நேரத்தைச் செலவழித்ததற்கான நியாயப்படுத்தலோ இல்லாமல் ஒரு வெற்றுணர்வே ஏற்பட்டிருக்கிறது. எழுத்துலகப் பெருந்தலைகளுக்கும் வலையுலகப் பெருந்தலைகளுக்கும் நடக்கும் பனிப்போரும் அதைச் சுற்றி நின்று வேடிக்கை பார்க்கும் கூட்டமுமாக, ஒரு நுட்ப விவாதம் நடத்திச் செல்லப்படுவது தமிழர் முன்னேற்றம் குறித்த நம்பிக்கையின்மையையே ஏற்படுத்துவதாக உள்ளது.

முதலில் நம் தமிழ்ச்சூழலில் புழங்கும் அடைமொழிக் கலாச்சாரம். ராஜாதி ராஜ, ராஜ கம்பீர, ராஜ மார்த்தாண்ட என்று அக்காலத்தில் அரசர்களுக்குத் துதி பாடிய கேவலமான செயலின் நீட்சியாக இன்றும் ஒவ்வொருவருக்கும் அடைமொழி அளித்துக் கொள்ள வேண்டிய தேவை தொடருகிறது. ஆகவே, புரட்சித் தலைவர், புரட்சிக் கலைஞர், சொல்லின் செல்வர், சிலம்புச் செல்வர், மெல்லிசை மன்னர் போன்ற வெத்துப் பட்டங்கள் சராமாரியாக வாரி வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அக்காலாச்சாரம் இணையத்திலும் புகுந்து, தமிழ் இணைய பிதா, மாதா என்று தனது அவல முகத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறது. நாளடைவில் இன்றைய முன்னணி இணைய பெர்சனாலிடிகளுக்கெல்லாம் இத்தகைய அடைமொழிகள் வந்துவிடக்கூடிய வேடிக்கையான சூழல் ஏற்படும் நாள் வெகு தொலைவிலில்லை என்பதை வருத்தத்துடன் குறிப்பிட்டுக் கொள்ள வேண்டியிருக்கிறது. Sycophancy என்பது நமது ரத்தத்தில் ஊறிவிட்ட ஒரு சமாச்சாரமாக இருக்கும் வேளையில் இது குறித்து எதுவும் செய்ய இயலப்போவதில்லை.

தமிழை வலையேற்றுவது அத்தகைய அரிய செயலா? அது ஒரு விஞ்ஞான / தொழில்நுட்பக் கண்டுபிடிப்பா என்றெல்லாம் நம்மை நாமே கொஞ்சம் கடினமான கேள்விகளைக் கேட்டுக் கொள்வது நலம். எல்லா மொழிகளும் தமது எழுத்துக்களை கணிமைப் படுத்திய பின், தமிழர்களுக்கே உரிய வேகத்துடன் ஆற அமர நமது எழுத்துக்களையும் கணிமைப்படுத்தி உள்ளோம். இதற்காக எதுவும் புதிய நுட்பங்களை உருவாக்கியிருக்கத் தேவை இருந்திருக்காது. மற்ற மொழிகளில் என்ன செய்திருக்கிறார்கள் என்று பார்த்துக் கொண்டு, அதை நமது மொழிக்கும் localize செய்ய வேண்டியிருந்திருக்கும். ஒரு சில நாட்களில், இரவு உணவுக்குப் பின் படுக்கப்போகுமுன் சில மணி நேரங்களுக்கு சில சோதனைகளைச் செய்து அதில் வெற்றி கண்டுவிடக்கூடிய ஒரு வேலைக்கு "இணைய பிதா" போன்ற பில்டப்புகள் தேவையா? அது யாராக இருந்தால் என்ன? இந்தப் பிதா இல்லையென்றால் வேறொரு பிதா அதைச் செய்திருப்பார். இந்த நுட்பங்களெல்லாம் ராணுவ ரகசியங்களல்ல. நுட்ப ஆர்வலர்கள் மத்தியில் எளிதாகவே பரிமாறிக் கொள்ளப்படுபவைதான் இவையெல்லாம்.

இவ்வளவு புளகாங்கிதமடைகிறோம் நமது தமிழ்க் கணிமையைக் குறித்து. ஆனால் உண்மை நிலையென்ன? ஆங்கிலம் தெரியாத ஒருவரால் கணினியைப் பயன்படுத்த முடியாது என்ற கசப்பான உண்மைதான் இன்றும் நிலவுகிறது. தேநீர்க் கடையில் தினத்தந்தி வாசிக்கும் பாமரன் கணினியைப் பயன்படுத்த முடியப் போவது எப்போது? அவரது கணினிப் பயன்பாட்டுக்குத் தடையாயிருப்பது அவரது பொருளாதார நிலை மட்டும்தானா? கணினிகளின் விலை குறைந்து கொண்டே வருகின்றன. ஒரு சிறிய வங்கிக் கடனை வாங்கி, அதில் ஒரு கணினியை வாங்கிப் போடுவது அவருக்கு அப்படியொன்றும் கடினமான செயலாக இருக்காது. அதைவிட அவருக்குப் பெரிய தடைக்கற்களாக இருக்கக்கூடியவை அக்கணினியிலுள்ள ஆங்கில QWERTY விசைப்பலகையும், Start > Program Files என்று விளிக்கும் ஆங்கில இடைமுகமும்தான். அதன்பிறகு அவர் தமிழ்மணத்திற்கோ தினமலர் தளத்திற்கோ வரவேண்டுமென்றாலும் அதற்கு அவருக்குத் தெரிந்திருக்க வேண்டிய ஆங்கில URL முகவரிகளும்தான். ஆகவே,
  • முற்றும் முழுவதுமாகத் தமிழ் பேசும் கணினி தேவை (அது 'ழ' கணினியோ அல்லது 'ஙே' கணினியோ :) )
  • அதன் விசைப்பலகையின் விசைகளில் தமிழெழுத்துக்கள் பொறித்திருக்க வேண்டும் என்பது ஒரு obvious தேவை. (பாமினி, ஷாலினி என்று ஆயிரத்தெட்டு வகையறாக்கள் இல்லாமல், ஆங்கிலத்தில் QWERTY என்று ஒன்று இருப்பது போல், அனைவருக்கும் ஏற்புடைய ஒரு வடிவமைப்பில்)
  • URL transliterator: இப்போதைக்கு தமிழில் URLகள் வரப்போவதில்லை. ஆனால் ஒரு பயனர் தனக்கு வேண்டிய வலைத்தள முகவரியைத் தமிழில் தட்டச்சு செய்தால், அதை ஒரு ஆங்கில http வேண்டுகோளாக மாற்றுவது சாத்தியமே. இதுவும் ஒரு அத்தியாவசியத் தேவை.
  • OpenOffice முற்றும் முழுவதுமாக தமிழ் இடைமுகத்துடன்
  • நெடுங்கால இலக்கு - பயனர் ஆங்கில வலைத்தளங்களைக் கோரினாலும் குத்துமதிப்பாகவாவது machine translation செய்து அவற்றைத் தமிழில் வழங்கும் தொழில்நுட்பம். அது போலவே, ஆங்கில ஆவணங்களை (குத்துமதிப்பாகவாவது) தமிழில் மொழிபெயர்க்கும் OpenOffice plugin.
'தமிழிணைய வேந்தர்கள்', 'செந்தமிழ்க் கணிமைப் புரவலர்கள்' (என் பங்குக்கு சில அடைமொழிகள்) ஆகியோர் இத்திசைகளில் சிந்தித்தால் கொஞ்சம் நன்றாயிருக்கும் - பழைய பல்லவிகளைப் பாடுவதை விடுத்து.

24 கருத்துகள்:

நாமக்கல் சிபி சொன்னது…

Good One.

அ. இரவிசங்கர் | A. Ravishankar சொன்னது…

ஒரு தமிழ்த் தளம், குழுமத்தை தொடங்கி நடத்தினாலே தமிழ்க் கணிமைக்குச் சேவை செய்து விட்டதாக புளங்காகிதம் அடைபவர்களை எண்ணி நோக வேண்டி இருக்கிறது. இது வரை தமிழ்க் கணிமை என்று நாம் சொல்லிக் கொண்டு திரிவதெல்லாம் localisation வேலை தான். அதையும் முழுமையாகவோ முதலிலோ செய்திருக்கவில்லை. இன்னும் தொய்வு தான்.

உலகத்துக்கான பெரிய நுட்பம் ஒன்றை இது வரை தமிழன் அளித்தானா தெரியாது. தமிழுக்கான தனித்த நுட்பம் ஒன்றை உலக மொழிகளுக்கெல்லாம் முன்மாதிரியாக உருவாக்கினானா என்றும் தெரியாது.

அப்படியிருக்க இணையத் தமிழ் பிதா, கணினித் தமிழ் பிதா, தமிழ்ப் பதிவுலகப் பிதா போன்ற சொல்லாடல்கள் நகைக்க வைக்கின்றன.

MS-Paintன் இடைமுகப்பைத் தமிழாக்கினாலோ அதில் முதலில் தமிழில் எழுதினாலோ ஓவியக்கணிமைப் பிதா ஆகிவிடுவோமோ ;)

முக்கியமான விசயத்தைத் துணிவுடன் இடித்துரைத்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

பட்டுக்கோட்டை பாரி.அரசு சொன்னது…

சுய விளம்பர நாயகர்களின் முகத்திரையை கிழித்திருக்கிறீர்கள்.
//முற்றும் முழுவதுமாகத் தமிழ் பேசும் கணினி தேவை (அது 'ழ' கணினியோ அல்லது 'ஙே' கணினியோ :) )//

Fedora or other linux versions தமிழ் இடைமுகப்புடன் நன்றாகவே இருக்கின்றது.

///அதன் விசைப்பலகையின் விசைகளில் தமிழெழுத்துக்கள் பொறித்திருக்க வேண்டும் என்பது ஒரு obvious தேவை. (பாமினி, ஷாலினி என்று ஆயிரத்தெட்டு வகையறாக்கள் இல்லாமல், ஆங்கிலத்தில் QWERTY என்று ஒன்று இருப்பது போல், அனைவருக்கும் ஏற்புடைய ஒரு வடிவமைப்பில்)////

TVS Champ விசைபலகை தமிழ்நெட்'99 முறைப்படி சந்தையில் கிடைக்கிறது விலை ரூ 450.00

//URL transliterator: இப்போதைக்கு தமிழில் URLகள் வரப்போவதில்லை. ஆனால் ஒரு பயனர் தனக்கு வேண்டிய வலைத்தள முகவரியைத் தமிழில் தட்டச்சு செய்தால், அதை ஒரு ஆங்கில http வேண்டுகோளாக மாற்றுவது சாத்தியமே. இதுவும் ஒரு அத்தியாவசியத் தேவை.//

சிங்கையை சேர்ந்த ஒரு நிறுவனம் நீங்கள் டொமைன் பெயர் தமிழிலில் பதிவு செய்யும் சேவையை வழங்குகிறார்கள்.

யாத்ரீகன் சொன்னது…

:-) @ VoW & Paari

பெயரில்லா சொன்னது…

சிந்தனையைத்தூண்டும் நல்ல பதிவிற்கு நன்றி

முரளிகண்ணன் சொன்னது…

//அக்காலாச்சாரம் இணையத்திலும் புகுந்து, தமிழ் இணைய பிதா, மாதா என்று தனது அவல முகத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறது //நல்ல கருத்து. நாம் சாதனை என்று சொல்லிக்கொள்ளுவதெல்லாம் சாதாரணமே.

ராஜ நடராஜன் சொன்னது…

இதுவரை ஆங்கிலம் தட்டியே அலுத்துப் போன எனக்கு பல வருசத்துப் பசிங்க.இப்ப கிடைக்கிறதே பெருசுங்க.தமிழ்ப் பக்கங்களை வலைய விட்டாலே கொஞ்சம் கொஞ்சமா மாற்றங்கள் வரும் கனவுகள் நனவாகும்.

விருபா - Viruba சொன்னது…

பலரும் தயங்கிக்கொண்டிருந்த விடயத்தை வெளிப்படையாகக் கூறியுள்ளீர்கள். இன்னமும் எவ்வளவோ கூறலாம், சென்னையும், பெங்களூரும் தகவல் தொழில் நுட்பத்தின் தொட்டில் என்று பலரும் புளகாங்கிதமடைகிறார்கள். தென்னிந்திய தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் கோடிக்கணக்கில் வருடா வருடம் அதிக லாபங்களை அடைவதாக சொல்லிக்கொண்டாலும் செய்வது என்னவோ மேற்குலக நிறுவனங்களுக்கு கூலிக்கு ஆட்களை அனுப்புவதும், அவர்கள் தரும் வேலையை செய்து முடிப்பதும்தான். லாபம் வரலாம், பணம் கொழிக்கலாம், ஆனால் அடையாளம்?

அன்று பிருத்தானியரின் ஆட்சிக்காலத்தில் மலேசியாவில் ரப்பர் தோட்டங்களில் வேலைக்கு ஆட்களைப் (சஞ்சிக் கூலிகளை ) பிடித்துக் கொடுத்த கெங்காணிகளுக்கும் இன்றைய தகவல் தொழில்நுட்ப, மென்பொருள் , bpo நிறுவனங்களுக்கும் அதிக வேறுபாடுகள் இருப்பதாக தெரியவில்லை. அன்று தோட்டத்தொழிலாளியாக அனுப்பப்பட்டவருக்கும் தொழிற்சங்க உரிமை இல்லை, இன்று பகட்டாக பயணாமாகும் IT person இற்கும் தொழிற்சங்க உரிமை இல்லை.

சர்வதேச அளவில் எத்தனை இந்திய இயங்குதளம் (OS) பயன்பாட்டில் உள்ளது?
எத்தனை இந்திய மென்பொருள்கள் சர்வதேச அளவில் பயன்பாட்டில் உள்ளன?

இவ்விரு கேள்விகளுக்கும் விடைதேடினால் தெரியும் எமது அவலம்.

ரவிசங்கர் கூறிய ஒரு விடயத்துடன் நான் ஒத்துப் போகிறேன்.

\\தமிழ்க் கணிமை என்று நாம் சொல்லிக் கொண்டு திரிவதெல்லாம் localisation வேலை தான். அதையும் முழுமையாகவோ முதலிலோ செய்திருக்கவில்லை. இன்னும் தொய்வு தான்.\\ - இவ்விடயம் உண்மையே

\\URL transliterator: இப்போதைக்கு தமிழில் URLகள் வரப்போவதில்லை. ஆனால் ஒரு பயனர் தனக்கு வேண்டிய வலைத்தள முகவரியைத் தமிழில் தட்டச்சு செய்தால், அதை ஒரு ஆங்கில http வேண்டுகோளாக மாற்றுவது சாத்தியமே. இதுவும் ஒரு அத்தியாவசியத் தேவை.\\

இவ்வசதி ஏற்கனவே வந்துவிட்டது. நாம் எமது தளத்திற்கும் தமிழில் வலைப் பெயரினை பதிவு செய்து பயன்படுத்தி வருகிறோம். பலரும் இவ்வசதியைப் பயன்படுத்துகிறார்கள்.

பெயரில்லா சொன்னது…

பிரச்னையை அதன் உண்மையான பரிமாணத்திலிருந்து சொல்லியிருக்கிறீர்கள். அந்த நிலைக்கு தமிழிணையம் வளர இன்னும் சிறிது நாட்களாகலாம். voice recognition தமிழுக்கு சாத்தியமாகுமா என்பது தெரியவில்லை.

அ. இரவிசங்கர் | A. Ravishankar சொன்னது…

//voice recognition தமிழுக்கு சாத்தியமாகுமா என்பது தெரியவில்லை//

கணினிக்குத் தமிழ், ஆங்கிலம்னு வேறுபாடு தெரியாதுங்க. அதுக்கு எல்லாமே ஓசை தான். நாம் முயற்சிகள் எடுத்தா நிச்சயமா செய்யலாம். அண்மையில் இது குறித்து SSN பொறியியல் கல்லூரி மாணவர்கள் முயற்சிகளில் ஈடுபட்டிருப்பதாகத் தகவல் காணக் கிடைத்தது.

//TVS Champ விசைபலகை தமிழ்நெட்'99 முறைப்படி சந்தையில் கிடைக்கிறது விலை ரூ 450.00 //

தனியாக விசைப்பலகை வாங்க வேண்டும் என்றில்லை. ஏற்கனவே இருக்கிற ஆங்கில விசைப்பலகையிலேயே ஒட்டிக் கொள்ளத்தக்க வகையில் stickerகளைப் பரவலாக விற்பனைக்கு விடலாம்

பட்டுக்கோட்டை பாரி.அரசு சொன்னது…

ரவிசங்கர்,
//தனியாக விசைப்பலகை வாங்க வேண்டும் என்றில்லை. ஏற்கனவே இருக்கிற ஆங்கில விசைப்பலகையிலேயே ஒட்டிக் கொள்ளத்தக்க வகையில் stickerகளைப் பரவலாக விற்பனைக்கு விடலாம்///

அவ்வாறு இருந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். விலையும் மிக மலிவாக இருக்கும். தொடர்ந்து சென்னையில் பேசிக்கொண்டே இருக்கிறேன். அவர்கள் நிறைய தேவைகளுக்கான விற்பனை ஆர்டர் வந்தால் மட்டுமே தயாரிக்க முடியும் என்கிற நிலையில் இருக்கிறார்கள். ஆர்வலர்கள் கடைகளுக்கு கணிணி சம்பந்தமாக பொருள் வாங்க செல்லும் போது தமிழ்விசைபலகை பற்றி கேள்வி எழுப்பினால் வணிகர்களுக்கு சந்தை மதிப்பு அதிகமாக இருப்பதாக தோன்றி உற்பத்தியில் இறங்குவார்கள் என்று எண்ணுகிறேன்.

MSATHIA சொன்னது…

அய்யா இறக்கைக்குரலாரே,
இது 'நச்'.

Voice on Wings சொன்னது…

நாமக்கல் சிபி, ரவிசங்கர், பாரி.அரசு, யாத்ரீகன், வதிலை முரளி, நட்டு, விருபா, மற்றும் இரு அனானிமஸ் நண்பர்களுக்கு,

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

**********************

- லினக்ஸ் முற்றும் முழுவதுமாக இப்போது தமிழிலேயே கிடைக்கிறது என்பதை தோராயமாகத் தெரிந்து வைத்திருக்கிறேன் (உறுதியாகத் தெரியாது). ஆனால் லினக்ஸைக் கையாள்வதில் பல நடைமுறைச் சிக்கல்களை அன்றாடம் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. கொஞ்சம் தொழில்நுட்பப் பரிச்சியமுள்ள நமக்கே இந்நிலை எனும்போது, முதன்முதலாகக் கணினியைப் பயன்படுத்தும், ஆங்கிலமும் தெரியாத ஒரு பயனருக்கு எவ்வளவு சுலபமாக அதைப் பழகிக் கொள்ள முடியும் என்பதில் சற்று உறுதியில்லாமலேயே இருக்கிறேன். ஆனாலும், தமிழுக்கான இயங்கு தளமென்றால் அது லினக்ஸாக இருப்பதுதான் பல வகைகளிலும் நல்லது.

- TVSE விசைப்பலகை பற்றியும் நான் அறிந்ததுதான். விலை விவரத்தைத் தவிர. இவ்வாறு தனித்தனி பாகங்களாக அதுவும் குறைந்த அளவில் உற்பத்தி செய்யப்பட்டு பெரும்பாலான நேரங்களில் / ஊர்களில் கிடைக்காத இன்றைய நிலையை விட, தமிழ்க்கணினி (with OS, keyboard, apps) என்ற ஒரு ஒருங்கிணைந்த தீர்வை ஏற்படுத்தி நமது சிற்றூர்களிலும் கிடைக்கும் வண்ணம் அது சந்தைப்படுத்தப்படுமானால், பல புதிய பயனர்களுக்கு கணினி என்ற நவீன வசதி அறிமுகமாகும்.

- யூனிகோட் வந்த பிறகு தமிழில் domain பெயர்களை வைத்துக் கொள்வது நுட்ப ரீதியாக சாத்தியம்தான் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனாலும் தற்போது extensions (.com, .net, .info, .edu, .in, .sg, etc.) அனைத்துமே ஆங்கிலத்தில்தானே உள்ளன? விருபா இங்கு தனது தளத்தின் தமிழ் முகவரி என்று அளித்துள்ளது எனக்கு ஆங்கிலத்தில்தான் (http://www.xn--mlcanp7au5iub0cdc.com/)
தெரிகிறது. நான் கூறுவது, உ-ம்,
வலை://வவவ.விருபா.வணிகம் என்று பயனர் உள்ளிட்டால் அது
http://www.viruba.com என ஏற்றுக் கொண்டு சரியான முகவரிக்குச் செல்லும் வகையில் மொழிபெயர்த்தல். இதை எளிதாகச் செய்து விடலாம். ஆனாலும் இது தேவையான ஒன்று என்பதைக் குறிப்பிடவே எனது இடுகையில் இதையும் பட்டியலிட்டேன்.

*******************

மற்றபடி, நாம் கணிமைத்துறையில் சாதித்தது கைமண் அளவே, போக வேண்டிய தூரம் வெகுதூரம் என்பதை வழிமொழிந்து கருத்திட்ட அனைவருக்கும் நன்றி.

வரலாறுகளை முதலில் படைத்து விட்டு, பிறகு அவற்றை எழுதினால் பொருத்தமாக இருக்கும்.

Voice on Wings சொன்னது…

சத்யா, உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி :)

-/பெயரிலி. சொன்னது…

எண்ணங்களின் குரல்,
மாலனுக்கு எதிர்வினையான என் இடுகையைப் பற்றிய உங்கள் கருத்து இதுவென்பதால், இங்கே எனது குறிப்பு
நீங்கள் சொல்லியிருக்கும் தமிழிலே இணையம், கணணி சம்பந்தமான தொழில்நுட்பத்தேவை குறித்து நூறுசதவீதம் ஒப்புக்கொள்கிறேன்.
நானும் தெளிவாக எழுதி, நீங்களும் இன்னும் பொறுமையாகப் படித்திருந்தால், நான் சொல்ல வந்ததைப் புரிந்துகொண்டிருப்பீர்கள்; நீங்கள் தேவையென்று சொல்வதுதான் முக்கியம் என்பதையும் வலியுறுத்துக்கின்றேன் என்பதைப் புரிந்திருப்பீர்கள்.

ஒன்றுக்கு மேற்பட்ட காரணங்களிருந்தாலுங்கூட, எனது பதிவின் தமிழ்-கணிமை-இணையம் தொடர்பான நோக்கத்தினைச் சொல்லிவிடுகிறேன்
1. இந்த மாதா, பிதா, குரு, தெய்வம் போன்ற பீடப்படுத்தற்சங்கதிகள் குமட்டிக்கொண்டு வந்ததாலேதான் இடுகையையே இடவேண்டியதாயிற்று
2. ஆனால், வரலாறு என்பது "யார் எப்போது என்ன செய்தார்" என்பதற்காக இல்லாவிட்டாலுங்கூட, "யார் எப்போது என்ன செய்யவில்லை" என்பதைக் குறிப்பதற்காகவும் எமது தொடர்ச்சிகளையும் வளர்ச்சிகளையும் பார்த்துக்கொள்ளவும் அவசியம்; அது தமிழ்க்கணிமை & தமிழிணையம் இவற்றுக்கும் இத்தேவையுண்டு. அனாச்சிஸ்டாக இருந்தாலொழிய பசாம் பாகம் பாகமாக எழுதிய இந்திய வரலாற்று தொடக்கம் கோசாம்பி குறித்தது முதலாக பல வரலாற்றுக்கான தேவையில்லை. வரலாற்றுத்தேவையென்று ஒன்றுண்டு.
3. "முதற்குரங்கு நம் குரங்கு" என்ற குமுகப்பாரம்பரியத்தோடும் ஆதாரமில்லாமல் பேசுவது தவறு மட்டுமல்ல, நீங்கள் சொல்வதுபோலவே பல சந்தர்ப்பங்களிலே அநாவசியமானதுங்கூட
4. வரலாற்றைப் பேசுவதென்பது தொழில்நுட்பத்தின் அவசியத்தை மறுத்தலாகாது.
5. பசியோடு பழத்தை முதலிலே கண்ட ஆதாமுக்குக் கடிக்கத் தோன்றியதென்றால், 1985/1986 இலேயே தமிழ் எழுத்துருவைச் செய்தவனும் 1990 ஆரம்பங்களிலே இணையத்தினைக் கண்டவனும் இரண்டையும் ஒன்றாகக் கண்டெடுத்துப் போட எண்ணுவது இயல்பாகவே வருவதுதான். எந்தளவு வேகமாகப் போய் பழத்தைப் பறித்தான் என்பதை எண்ணிப் பார்க்கச்சொல்கிறேன்


நிற்க, /நான் கூறுவது, உ-ம்,
வலை://வவவ.விருபா.வணிகம் என்று பயனர் உள்ளிட்டால் அது
http://www.viruba.com என ஏற்றுக் கொண்டு சரியான முகவரிக்குச் செல்லும் வகையில் மொழிபெயர்த்தல். இதை எளிதாகச் செய்து விடலாம். ஆனாலும் இது தேவையான ஒன்று என்பதைக் குறிப்பிடவே எனது இடுகையில் இதையும் பட்டியலிட்டேன். / என்றிருக்கின்றீர்கள்.
மெய்யாகவே இல்லையா? சிங்கை மணியம் சில ஆண்டுகளுக்கு முன்னரே இது சம்பந்தமாகக் கட்டுரை எழுதியும் இணையம் பதிவு செய்து அமைத்தும் காட்டியிருக்கின்றார் என்பதாக ஞாபகம். இப்போதைக்கு இச்சுட்டியைப் (warning: Pwer Point Presentation)பாருங்கள். ஒழுங்கான அவரது கட்டுரை/இடுகை/அஞ்சல் சேர்த்த சுட்டி கிடைத்தால், பின்னர் இணைக்கிறேன்.


உங்களின் இவ்விடுகையை வாசித்து "Good One" சொன்ன பின்னால், நாமக்கல் சிபி மொக்கைப்பதிவு இனியேதும் எழுத மாட்டாரென்ற நம்பிக்கையோடு :-)
-/பெயரிலி (எ) இரமணிதரன், க.
பிகு: வலையுலகப்பெருந்தலை என்று என்னைத்தான் குறித்திருந்தால், நன்றி! நன்றி! நன்றி!!! நமக்கெல்லாம் 'தமிழிணைய வேந்தர்கள்', 'செந்தமிழ்க் கணிமைப் புரவலர்கள்' என்ற பயனற்ற பட்டங்கள் எவரும் தருவதற்கான வாய்ப்பில்லாததால், நீங்கள் தந்திருக்கும் "வலையுலகப்பெருந்தலை" என்பதையே இனி வரும் வாதங்களிலே என் செங்கோல் ஆதாரமாகக் கொண்டு சுட்டிக் காட்டிச் செயற்படுவேன் என்று தெரிவித்துக்கொள்கிறேன் :-)

விருபா - Viruba சொன்னது…

"வளர்பிறை என்பதும் தேய்பிறை என்பதும் நிலவிற்குக் கிடையாது...."
அதுபோலத்தான் கணினிக்கும் தமிழும் ஆங்கிலமும் ஏன் எந்த மொழியுமேகூட. எல்லாமே "0"உம் "1" உம் தான்.

உங்கள் கணினியில் unicode இற்குரிய settings செய்யவில்லை என்றால் எல்லா தமிழ் எழுத்துக்களுமே பெட்டி பெட்டியாகத்தான் தெரியும். அதுபோலவே url தமிழில் தெரியவேண்டுமென்றால் Punycode என்ற மாற்றியின் உதவி தேவை. தவிர அதற்குரிய settings உம் உங்கள் கணினியில்கூட செய்யப்படல் வேண்டும். இதற்காக VeriSign இலவசமான ஒரு செயலியை தந்துள்ளது. இதை உங்கள் கணினியில் நிறுவிக்கொண்டால் http://www.xn--mlcanp7au5iub0cdc.com என்று தெரியும் இணைய முகவரி http://www.நூல்தேட்டம்.com என்று தெரிய ஆரம்பிக்கும். இது தொடர்பில் எமது வலைப்பதிவில் மேலோட்டமாக எழுதியுள்ளேன் பார்க்கவும்.

தவிரவும் www என்பதும் .com என்பதும் இன்னமும் தமிழ்ப்படுத்தப் படவில்லை. உலகளாவிய ரீதியில் இணைய முகவரிகளைக் கட்டுப்பட்டுத்துவது ICANN என்னும் அமெரிக்க நிறுவனம். (இந் நிறுவனத்தின் வலைப்பதிவை அவ்வப்போது பார்த்தால், நிகழும் மாற்றங்கள் தெரியும்) இந்நிறுவனமானது இன்னமும் நீங்கள் கூறுவதுபோல் "வலை://வவவ.விருபா.வணிகம்" என்று ஏற்படுத்திக் கொள்வதற்கான அனுமதியைத் தரவில்லை என்று நாம் தப்பித்துக்கொள்ளும் நிலையிலேயே உள்ளோம்.

localisation வேலை இன்னமும் முற்றுப் பெறவில்லை, இருப்பதில் உள்ள ஒரு மேம்பட்ட நிலை என்பதே சரி.

பட்டுக்கோட்டை பாரி.அரசு சொன்னது…

please refer tamil domain registration

http://www.i-dns.net/namereg/namereg.html#tamil

Voice on Wings சொன்னது…

பெயரிலி, விருபா மற்றும் பாரி,

IDN பற்றிய தகவலுக்கு நன்றி. ICANN, DNS என்று ரோடு போடுவது ஒரு நெடுங்காலத் திட்டமாகப் பலனளிக்கலாம். ஆனால் இப்போதுள்ள தமிழ்த்தளங்கள் நூறு சதவிகிதம் ஆங்கில URLகளையே பயன்படுத்துகின்றன என்பதால் தற்போதைக்கு ஒரு ஒற்றையடிப் பாதையையாவது உருவாக்கினால் அது உடனடியாக உதவலாம்.

என் சிற்றறிவுக்கு எட்டுவது, ஒரு Firefox நீட்சி (மற்ற உலாவிகளில் கொஞ்சம் கடினம்தான் என்று நினைக்கிறேன். மேலும் தமிழில் முழு இடைமுகமும் அளிப்பதாகச் சொல்லப்படும் லினக்ஸில் Firefox ஆதரவு உள்ளதால் அதுவே போதுமானதாக இருக்கலாம்). தமிழில் அடிக்கப்படும் தள முகவரியை ஆங்கிலத்திற்கு ஒலிபெயர்க்கும் திறனை இந்நீட்சி கொண்டு புகுத்த இயலும்.
உ-ம்.
வலை.விருபா.வணி-> www.viruba.com
வலை.தமிழ்மணம்.வணி -> www.thamizmanam.com
வலைபதிவன்.ப்ளொக்ஸ்பொட்.வணி ->
valaipadhivan.blogspot.com
etc etc.
ஒரு சில நாட்களில் இதைச் செய்து முடித்து விடலாம் என்றுதான் தோன்றுகிறது. Firefoxஉம் தமிழிலேயே கிடைப்பதால், உலாவிக்குள் மட்டுமாவது ஒரு முழு தமிழ்த் தீர்வாக இது அமையலாம்.

**************

பெயரிலி, இந்திய / இலங்கை வரலாறோ, உலக வரலாறோ படரும் கால அளவுக்கும் தமிழ் இணைய வரலாறு படரும் கால அளவுக்கும் அதிக இடைவெளி உள்ளது. இந்தக் குறுகிய கால அளவின் நிகழ்வுகளையும் பதிவு செய்வதற்கான தேவை நீங்கள் கூறுவது போல் இருக்கலாம். ஆனால் ஆக வேண்டிய வேலையை கவனிப்பதற்கான தேவை அதை விட வலுவாக இருக்கிறது என்பதே எனது தாழ்மையான எண்ணம்.

//4. வரலாற்றைப் பேசுவதென்பது தொழில்நுட்பத்தின் அவசியத்தை மறுத்தலாகாது.//

ஒரு மூன்றாம் நபராகப் பார்வையிட்டதில், இந்த வாரலாற்றைப் பற்றிய விவாதம் தேவைக்கதிகமான அகலப்பாட்டையை எடுத்துக் கொண்டு விட்டதோ என்ற எனது ஐயத்தை எனது இடுகையின் வாயிலாகப் பதிவு செய்திருக்கிறேன்.

Domain name பதிவு செய்வதைப் போல, நம் சூழலில் 'அடைமொழி'களைப் பதிவு செய்வதற்கான தேவையும் இருக்கிறது என்பதை உணர்கிறேன் :) 'வலையுலகப் பெருந்தலை' என்று போகிற போக்கில் சொன்னதை துண்டு போட்டு reserve செய்து கொண்டு விட்டீர்களே? :)

அ. இரவிசங்கர் | A. Ravishankar சொன்னது…

//வலை.விருபா.வணி-> www.viruba.com
வலை.தமிழ்மணம்.வணி -> www.thamizmanam.com
வலைபதிவன்.ப்ளொக்ஸ்பொட்.வணி ->
valaipadhivan.blogspot.com
etc etc.
ஒரு சில நாட்களில் இதைச் செய்து முடித்து விடலாம் என்றுதான் தோன்றுகிறது.//

அப்படியென்றால், இதைச் செய்வதை உங்கள் agendaவில் உடனடியாகச் சேர்க்கக் கோருகிறேன். !!

இதைச் செய்து முடிப்பவருக்குத் "தமிழ் வலை கொண்டார்" என்ற பட்டம அளிக்க இருப்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் ;)

-/பெயரிலி. சொன்னது…

/பெயரிலி, இந்திய இலங்கை வரலாறோ, உலக வரலாறோ படரும் கால அளவுக்கும் தமிழ் இணைய வரலாறு படரும் கால அளவுக்கும் அதிக இடைவெளி உள்ளது. இந்தக் குறுகிய கால அளவின் நிகழ்வுகளையும் பதிவு செய்வதற்கான தேவை நீங்கள் கூறுவது போல் இருக்கலாம். ஆனால் ஆக வேண்டிய வேலையை கவனிப்பதற்கான தேவை அதை விட வலுவாக இருக்கிறது என்பதே எனது தாழ்மையான எண்ணம்./

முன்னமே இங்கே என் பின்னூட்டத்திலே சொன்னதுமாதிரி அதை மறுக்கவில்லை. ஆனால், அதேநேரத்திலே தவறான அல்லது நிச்சயப்படுத்தப்படாத ஒரு தகவலை ஒருவர் முன்வைத்துவிட்டுப்போகும்போது, அதை மறுக்கவேண்டிய கடமையுண்டு.



/ஒரு மூன்றாம் நபராகப் பார்வையிட்டதில், இந்த வாரலாற்றைப் பற்றிய விவாதம் தேவைக்கதிகமான அகலப்பாட்டையை எடுத்துக் கொண்டு விட்டதோ என்ற எனது ஐயத்தை எனது இடுகையின் வாயிலாகப் பதிவு செய்திருக்கிறேன்./

இருக்கலாம். ஆனால், அவ்விடுகை இணையத்திலே தமிழ் என்பதன் வரலாறுமட்டும் சார்ந்த பதிவில்லையென்பதையென்பதையும் உணர்ந்திருப்பீர்களென நம்புகின்றேன். எனக்கு ஈழம் பற்றிய கருத்து, இணையத்திலே தமிழ்பற்றிய மாலனின் கருத்திலும்விட முக்கியமானது. உங்களுக்கு அப்படியாக இல்லததால், அப்பதிவு வெற்றுவிவாதங்களாகத் தோற்றியிருக்கலாம். மேலும், நான் மாலனுக்கான பதிலினை எழுதி, இருந்து திருத்தி இதுவரை இடவில்லை. இதுவரை வந்தவை பின்னூட்டமாக சீர்த்திருத்தாமல் எழுதியவைமட்டுமே.

வரலாறு என்பதன் தேவையை எழுதிக்கொள்ளவில்லையே என்று ஏதோ ஒன்றினை வரலாற்றினைப் பற்றி, அதை எழுதிக்கொள்ளாததன் பாதிப்பினை உணரும்போது, இதுபோன்ற வேறுவிடயங்களின் வரலாறும் பதியப்படவேண்டுமென உந்தப்படுகிறோம். அதன் வழியேதான் மாலனுக்கான எனது எதிர்வினை

-/பெயரிலி. சொன்னது…

/'வலையுலகப் பெருந்தலை' என்று போகிற போக்கில் சொன்னதை துண்டு போட்டு reserve செய்து கொண்டு விட்டீர்களே? :)/
விட்டால், யாராவது குருவி, எலி புழு என்று தூக்கிக்கொண்டு பறந்து போய்விட்டாலும் என்றே முன்னெச்சரிக்கைதான் :-) விளையாட்டினை விட்டுச்சொன்னால், மெய்யாகவே, இந்த அடைமொழிகள் ஏற்படுத்தும் எரிச்சலும் என் பதிலுக்கு ஒரு காரணம்.

என் தமிழ்நண்பர் ஒருவர் அடிக்கடி தமிழிலே கணணியென்பது பற்றிச் சொல்வது..."தமிழரின் கணிநுட்பம் piggy back / back pack technology." அவர் அசட்டை செய்வதற்காகச் சொன்னாலுங்கூட, எமக்குத் தொழில்முனைப்பாகத் தமிழ்த்தொழில்நுட்பம் வளர்ப்பதிலிருக்கும் ஆய்வுக்கான மனித, பொருள் வளத்தினை எண்ணாமல் கிண்டல் செய்தாலும், அப்படியாகத்தான் அதிகளவிலே இருக்கின்றோமென்பது ஒரு தவிர்க்கமுடியாத உண்மையே

Yagna சொன்னது…

VoW, எதுக்கு லினக்ஸ்? நான் இரண்டரை வருடங்களாக விண்டோஸ் எக்ஸ்பி மற்றும் ஆஃபீஸ் 2003 இரண்டையுமே தமிழ் இடைமுகத்தில் தான் பயன்படுத்துகிறேன்! போன மாதம் தான் ஆஃபீஸ் 2007 நிறுவியுள்ளேன் இது இன்னும் தமிழில் கிடைக்கவில்லை!

Voice on Wings சொன்னது…

ரவிசங்கர் :)

தற்போது சில காலக்கெடுக்களைச் சமாளிப்பதில் மும்முரமாக இருக்கிறேன். இந்த நெருக்கடி நிலை முடிந்து சகஜ நிலை திரும்பிய பின் இதை முயன்று பார்க்கிறேன்.

***************

பெயரிலி,

ஈழம் பற்றி கருத்து கொள்ளவோ அதை வெளியிடவோ உங்களுக்கு முழு உரிமையுள்ளது. அது குறித்து நான் எந்த விமர்சனமும் வைக்கவில்லை. 'கோவிந்தசாமியா, கல்யாணசுந்தரமா?', 'கார்த்திக் ராமாசா, சந்திரவதனாவா, நவனா?', 'திசைகளா, பூங்காவா?' என்று 'கூகிளாண்டவர் துணை', 'Wayback Machine துணை' என்று போட்டுக் கொண்டு நடந்த extended கருத்துப் பரிமாற்றங்களின் (நீங்கள் மட்டும் என்று சொல்லவில்லை. இதில் ஈடுபட்ட அனைவரையும்தான்) நோக்கம், அதனால் தமிழ்கூறும் நல்லுலகுக்கு ஏற்படக்கூடிய சாதக பாதகங்கள் போன்றவை கொஞ்சம் தெளிவில்லாமலிருந்ததால், நானும் என் பங்குக்கு கொஞ்சம் குட்டையைக் குழப்ப வேண்டியதாயிற்று :)

Backpack technologyயால் எந்தப் பாதகமும் கிடையாது, அதைப் பரவலாகப் பயன்படுத்த முடிகிறதென்றால். ஒரு சில கோடி மக்களால் பேசப்படும் மொழியில், ஒரு சில ஆயிரம் பேர்களாலேயே (not even 1%) அம்மொழி கணினியில் பயன்படுத்தப்படுகிறது என்ற நிலை அவ்வளவு ஊக்கமளிப்பதாக இல்லை. பொருளாதாரக் காரணிகளுக்கு அப்பால், நுட்பக் காரணங்களாலும் இத்தகைய தேக்க நிலை ஏற்பட்டிருக்கிறதா என்று சிந்திக்க வேண்டியிருக்கிறது.

*******************

யக்ஞா,

//எதுக்கு லினக்ஸ்?//

கடைநிலையிலிருக்கும் (என்னைப்போன்ற ;)) தமிழனுக்கு ஒரு சில ஆயிரங்களை மிச்சப்படுத்துவோமே என்ற நல்லெண்ணம்தான் :) நான் உபூண்டு பயன்படுத்தறேன். அதோட இலவசமா OpenOffice மற்றும் எவ்வளவோ மென்பொருட்கள் கிடைக்குது. விண்டோஸ்ன்னா ஒவ்வொரு மென்பொருளுக்கும் செலவு செய்யணும்.

Dhavappudhalvan சொன்னது…

ரொம்ப அருமையா இருக்குதுங்க, உங்க அலசல். இதுலே கருத்து சொல்லறத்துக்கோ ஆராயவோ எனக்கு தகுதியில்லைங்க. நான் கணணி பதிவுகளுக்கு புதுசு. ஏதோ எனக்கு தோன்றுவதை மறக்காமலிருக்க நாலைந்து பதிவுகளை போட்டு வருகிறேங்க. கொஞ்ச நேரம் எனக்கும் ஒதுக்கி கொஞ்சம் கிழியுங்களேன்.