பொது வாழ்வில் இல்லாத தனிநபர்களின் புகைப்படங்களை பதிவுகளில் வெளியிடுவது எத்தகைய அநாகரீகமான செயல்? பல தனிநபர்கள் ஊடக வெளிச்சத்தை விரும்புவதில்லை. அல்லது, தாம் விரும்பும் அளவுக்கு மட்டும் தங்களை பொதுவில் வெளிப்படுத்திக் கொள்ள விரும்புகிறார்கள். (போவோர் வருவோரெல்லாம் தங்கள் உருவப்படத்தைப் போஸ்டர் அடித்து ஒட்டும் நிலையை நிச்சயமாக விரும்ப மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.) அதுவும் சம்மந்தப்பட்டவர் பெண் எனும்போது அதானால் ஏற்படும் பாதிப்புகள் அதிகம். நம் சூழலில் பெண்களுக்கு எல்லாத் தளங்களிலும் நிலவும் பாதுகாப்பின்மை காரணமாக (உ-ம், ஒரு அநாமதேயம் உருவப்பட நபரின் தோற்றத்தை வர்ணித்து போட்டுவிட்டுப் போகும் எச்சமும் ஒரு பாதுகாப்பின்மையின் வடிவம்தான், என் பார்வையில்), தம்மை பொதுவில் வெளிப்படுத்திக் கொள்ள அவர்கள் கூடுதல் தயக்கம் காட்டுவதையே அதிகம் காணமுடிகிறது, மற்றும் அதனைப் புரிந்து கொள்ளவும் முடிகிறது. இந்த அடிப்படைப் புரிதல் கூட பலருக்கு இல்லையோ, அல்லது இருந்தும் ஆணவத் திமிரோ என்னவோ, பதிவுலகில் மற்றவர்களின் புகைப்படத்தைப் போஸ்டர் அடித்து ஒட்டுவது சகஜமாகி விட்டது. பதிவுலகில் இயங்காத அப்பாவிகளும் (பதிவரின் மனைவி, மகள், இத்யாதி) விட்டு வைக்கப்படுவதில்லை இந்த வக்கிரச் சிந்தனையாளர்களால்.
தற்போது ஒரு சகப் பதிவரின் உருவப் படத்தை அதிகம் காண முடிகிறது. முதல் ஓரிரு முறைகள் அதற்கான எதிர்ப்பை அவர் தெரிவித்த பின்னரும் கூட அவருக்குத் திமிரான எதிர்வினைகளே கிடைத்தன என்று நினைக்கிறேன். அதன் பிறகு அவர் அமைதியாகி விட்டாலும், இப்போது இச்செயல்களுடன் அவர் உடன்படுகிறாரா என்பது தெரியவில்லை, தெரிந்து கொள்ளும் ஆர்வமுமில்லை. தனது உருவப்படத்தைப் பயன்படுத்த வேண்டாம் என்று தெரிவிக்க ஒருவருக்கு தார்மீக உரிமையுண்டு. அவ்வாறு தெரிவிக்கப்பட்ட பின், அதை மதித்து நடப்பதுதான் அம்மனிதருக்கு நாம் காட்டும் மரியாதை.
2 கருத்துகள்:
ம்ம்
:))))))))
உணர்ந்துக் கொள்ள வேண்டியது.
கருத்துரையிடுக