வறட்சி நிவாரணம் என்ற பெயரில் மஹாராஷ்டிர மாநிலம் ஒரு வருடத்திற்கு செலவிடும் தொகை ஆயிரம் கோடிகளுக்கு மேல். அதே போல் ஒரிஸ்ஸா மாநிலத்தில் வறட்சி நிவாரணம் என்று மத்திய அரசின் நிதியிலிருந்து சுமார் ஆயிரம் கோடிகள் வருடத்திற்கு செலவிடப்படுகின்றன. இவை பெரும்பாலும் வறட்சியை உண்டாக்கும் காரணிகளை (அதாவது, பொது நீர்வளங்களை செல்வாக்குள்ள தனி நபர்கள் தம் வசப்படுத்திக் கொள்வது, போன்ற காரணிகளை) எதிர்கொள்வதில்லை. மாறாக, சாலைகள் அமைத்தல், பாலங்கள் கட்டுதல், லாரிகளில் குடிநீர் வழங்குதல், (தண்ணீர் இல்லாத) குளங்களைச் செப்பனிடுதல் போன்ற பணிகளுக்கு தனியார் காண்டிராக்ட்கள் வழங்குவதற்கே செலவிடப்படுகின்றன. இப்பணிகளும் எந்த அழகில் நிறைவேற்றப்படும் என்பதை விவரிக்கத் தேவையில்லை. இது போன்ற நிவாரண நிதி பெறுவதற்கும் 'வறட்சியால் பாதிக்கப்படக்கூடிய பகுதி' (drought-prone area) என்ற அங்கீகாரம் தேவை. இத்தகைய வ.பா.ப.க்கள் முற்றிலும் அரசியல் ரீதியிலேயே நிர்ணயிக்கப்படுகின்றன. உ-ம், தொண்ணூறு வ.பா.ப.க்கள் இருந்த மஹாராஷ்டிரத்தில், ஆறு வருடங்கள் கழித்து இந்த எண்ணிக்கை நூற்றைம்பதாக உயர்ந்ததாம். அதே போல், 54 வ.பா.ப.க்கள் இருந்த பீஹாரின் எண்ணிக்கை, அம்மாநிலத்தவர் ஒருவர் மத்திய அமைச்சரான பிறகு உடனே 55ஆக உயர்ந்தது (அவரது தொகுதியின் சேர்க்கையால்) . சில வருடங்களில் இந்த எண்ணிக்கை நூற்று இருபதாக உயர்ந்து விட்டது. இத்தனைக்கும், இந்த இடைப்பட்ட வருடங்கள் நல்ல மழை பெய்த வருடங்களாம். பெரும்பாலான வ.பா.ப.க்கள் நல்ல மழைக்காலங்களை அனுபவித்து வருபவை. கரும்பு போன்ற அதிக அளவிலான பாசனத் தேவைகளைக் கொண்ட பயிர்களைப் பயிரிடுபவை. இருந்தும் இங்கு வறட்சியால் வாடும் மக்களும் உள்ளனர். அவர்களே சமூகத்தின் அதிகாரமற்ற கடைநிலை மக்கள். குடிநீருக்காகப் பல மைல்கள் அலைந்து திரும்பும் பொதுஜனங்கள். அவர்களை முன்வைத்து பல பகற்கொள்ளைகளை நிகழ்த்துகின்றனர், நம் அரசியல் தலைவர்களும் அவர்களது கூட்டாளிகளும். எவ்வளவு கோடிகள் நிவாரண நிதி ஒதுக்கினாலும் இந்நாட்டின் வறட்சி நிலை மாறப்போவதுமில்லை, அதனால் பலனடையும் கூட்டமும் ஒழியப்போவதுமில்லை என்பதே இங்கு நிலவும் உண்மை நிலவரம்.
****************
இடம்: இராமநாதபுரம் மாவட்டம், தமிழ் நாடு
தொடர்ந்து வானம் பொய்த்து வரும் இராமநாதபுரம் மாவட்டத்தில், வயல்களுக்குப் பாசனம் செய்ய தண்ணீர் கிடைப்பது ஒரு பெரிய பிரச்சினையாகும். அதுவும் சொந்தமாகக் கிணறுகளும் பம்பு செட்களும் இல்லாத விவசாயிகளின் பாடு திண்டாட்டம்தான். இவைகளை உடைய பெரிய விவசாயிகளிடமிருந்து தண்ணீரைக் காசு கொடுத்து வாங்க வேண்டிய நிலைதான்.
ராமு - ஒரு வசதி படைத்த விவசாயி. தனது 3HP மின்சார பம்பு செட்டை மணிக்கு பன்னிரண்டு ரூபாய் என்ற விலையில் வாடகைக்கு வழங்கியே, ஒவ்வொரு சிறு விவசாயியிடமிருந்தும் நாற்பத்தைந்து நாட்களில் ரூ.2000 வரை சம்பாதித்து விடுவதால், அவருக்கு சொந்தமாக விவசாயம் செய்வதற்கெல்லாம் நேரமோ தேவையோ இருப்பதில்லை. நீளும் வாடிக்கையாளர் பட்டியலை கவனிப்பதற்கே நேரம் சரியாக இருக்கிறது. இரு காரணிகள் அவருக்குச் சாதகமாகத் திகழ்கின்றன: 1. அவரும் விவசாயி என்பதால் அவருக்கு மின்சாரச் செலவு கிடையாது 2. அங்கு நிலவும் low voltage மின்சாரத்தால், வயல்களுக்குப் பாசனம் செய்ய இரண்டு மடங்கு அதிக நேரம் பிடிக்கிறது, அதனால் ராமு போன்றவர்களுக்கு இரட்டிப்பு லாபம்.
ராஜு - தனது 5HP டீசல் பம்பு செட்டை மணிக்கு ரூ.30 என்ற விலைக்கு வாடகைக்குத் தருபவர். (டீசல் இலவசமாகக் கிடைக்காதல்லவா?) இவ்வாறு, ஐந்தாறு கிராமங்களின் பாசனத் தேவைகளை நிறைவேற்றி வருபவர். கிணற்றுத் தவளையாக இருந்து கொண்டிருக்காமல், பொதுக் கண்மாய்களிலிருந்தெல்லாம் தண்ணீரை இறைக்கும் சக்தி படைத்தவர். உங்களூர் கண்மாயின் தண்ணீர் அளவு குறைந்து விட்டதா? அப்படியென்றால் அவரை அணுகலாம். ஆனால் குறைந்தது ஐம்பது வாடிக்கையாளர்களாவது உங்கள் ஊரில் இருப்பது உத்தமம். அதை விடக் குறைந்த எண்ணிக்கைகளுக்கெல்லாம் அவர் நேரத்தை வீணாக்குவதில்லை.
கோவிந்தராஜன் - மேலே குறிப்பிடப்பட்டுள்ள டீசல் பம்பு செட்டைப் போன்று இரண்டையும், மின்சார பம்பு செட் ஒன்றையும் வைத்து நடத்தி வருபவர். மேலும் தனது கிணறுகளிலிருந்து தண்ணீரை விற்பதுவும் அவரது நடவடிக்கைளில் ஒன்று. இவ்வாறாக, ஒரு வறட்சிக் காலத்தில் ரூ.70,000 வரை சம்பாதித்து விடக்கூடியவர்.
பாசனத்திற்கு இவ்வாறென்றால், குடிநீருக்கும் அதே வகையான பொருளாதார அமைப்புதான். பொதுக் கண்மாய்களின் படுகைகளில் கிணறுகள் தோண்டி, அந்த நீரை ஒரு குடம் முப்பது பைசா என்ற விலையில் விற்று வரும் தனி நபர்களின் ஆதிக்கம் இங்கு அதிகம். முத்துச்செல்லன், அருணாசலம் மற்றும் சிவலிங்கம் - சாயல்குடி கிராமத்தின் பொதுக் கண்மாயின் படுகையில் பதிமூன்று கிணறுகளை வெட்டி, அவை தமக்குச் சொந்தமானவையே என்றுப் பிரகடனம் செய்து கொண்டவர்கள். பிறகு, நாளொன்றுக்கு ஒவ்வொரு கிணற்றிலிருந்தும் 500 குடங்கள் என்ற விகிதத்ததில் பொதுத் தண்ணீரை விற்று, மாதத்திற்கு ரூ.60,000 வரை சம்பாதித்து விடுபவர்கள்.
தொடர்ச்சி: புதுக்கோட்டையின் புதுமைப்பெண்கள் (தொடர்ந்து சோகக் கதைகளாக அமைந்து விட்டதால், ஒரு மாறுதலுக்காக, ஊக்கமளிக்கும் ஒரு வெற்றிக்கதை)
(குறிப்பு: எழுத்துரு சிறிதாக இருப்பதாகச் சிலர் குறிப்பிட்டுள்ளனர். தற்போது வீட்டில் இணைய வசதி இல்லாததால், வீட்டில் OpenOfficeஇல் எழுதி, அதை MS Officeக்கு மாற்றி, மீண்டும் htmlக்கு மற்றி இந்தப் பதிவுகளை வலையேற்றுகிறேன். இதில் கை வைத்தால் மிகப்பெரிய எழுத்துக்களாகக் காட்டி பயமுறுத்துகிறது. ஆகவே, வாசகர்களுக்கு நான் விடுக்கும் வேண்டுகோள்: எழுத்துக்கள் சிறிதாகத் தெரிந்தால், உங்கள் உலாவியில் எழுத்துக்களைப் பெரிதாக்கிப் படியுங்கள். நன்றி்)
5 கருத்துகள்:
River linking project, இந்திய நதிகளை இணைக்கும் கொள்கை பற்றி உங்கள் கருத்து என்ன...? முன்னமே இதைப் பற்றி எழுதியிருந்தீர்கள் என்றால் சுட்டவும்..
வஜ்ரா ஷங்கர்,
நான் அந்தத் திட்டத்தைப் பற்றி எங்கும் எழுதியதில்லை. ஆனால் அதை ஆதரிக்கவில்லை. முதலாவதாக, அதைச் செயல்படுத்த ரூ.25,000 கோடி ஆகும் என்பது போன்ற estimateகளைப் படிக்கும் போது, இது நிச்சயமாக பலரும் பணம் பார்ப்பதற்கே உதவும் என்ற எண்ணம் தோன்றுகிறது. மேலும், இன்று நர்மதை நதிக்கரையில் ஏற்பட்டுள்ள நிலைமையை விடப் பல மடங்கு மக்கள் இத்திட்டத்தால் அப்புறப்படுத்தப்படும் அபாயமுள்ளதால், இத்திட்டத்தை ஒரு தீர்வாக என்னால் நினைக்க முடியவில்லை. தெலுகு கங்காவின் நிலை என்ன என்பதைப் பற்றியே தெளிவில்லாத நிலையில், நாட்டின் வேறு பகுதிகளிலிருந்து தண்ணீர் கொண்டு வரும் திட்டம் எதுவும் எனக்கு நம்பிக்கையை அளிக்கவில்லை.
அதை அரசாங்கம் தான் செய்யவேண்டும் என்று நினைத்து அப்படிச் சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன். அதிக தனியார் முதலீடு இருந்தால் ஊழல் இல்லாமல் நதிகளை இணைக்கலாம்.
விவசாயிகள் நலம் பெறுவார்கள். மழையை நம்பி, வானம் பார்த்த பூமி போல் இல்லாமல் இருக்க வாய்ப்புகள் அதிகம்.
நர்மதை பிரச்சனை போல் இது மாற வாய்ப்பு இல்லை என்பதே என் கருத்து.
வஜ்ரா ஷங்கர், இது போன்ற திட்டங்களிலும் அவற்றைத் தனியாரிடம் ஒப்படைப்பதிலும் நீங்கள் வைத்துள்ள நம்பிக்கையை என்னால் பகிர்ந்து கொள்ள முடியவில்லை. ஏன் என்பதற்கான காரணங்களை இந்த வாரம் நான் வெளியிட்டிருக்கும் இதர இடுகைகளிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
நன்றாக எழுதி வருகிறீர்கள். உங்களின் பதிவுகள் என்னை மேலும் மேலும் சிந்திக்க வைக்கிறது.
கருத்துரையிடுக