வெள்ளி, ஜூலை 18, 2008
'))'))')) said...
<script>document.write(to_unicode(
'<script>document.write(to_unicode(
'<script>document.write(to_unicode(
'<script>document.write(to_unicode('யாத்திரீகன்'))</script>
ஒரே நிரல் எப்படி பல முறைகள் recurse ஆகியிருக்கு பார்த்தீங்களா? அதற்கு பதிலா, இப்படி இருந்திருந்தா இந்தப் பிரச்சினை இருந்திருக்காது:
<script>document.write(to_unicode('யாத்திரீகன்'))</script>
[குறிப்பு: இது தவறாகும். கீழே 'பிற்சேர்க்கை' என்ற குறிப்பைக் காண்க]
அல்லது, இப்படி இருந்திருந்தாலும்:
யாத்திரீகன்
to_unicode() என்ற நிரல் எதற்காக புகுத்தப்பட்டிருக்குன்னு தெரியல. இடைப்பட்ட காலத்தில் (பிளாக்கர் பீட்டா காலத்தில்) தமிழ் எழுத்துகள் தெரியாம accented ஐரோப்பிய எழுத்துகளா தெரிஞ்சதை சரிபண்ண யாராவது (ஜெகத் / கோபி?) உருவாக்கியிருக்காங்களோ என்னவோ.
சரி, இந்தப் பிரச்சனை உங்க பதிவில் இருந்தா அதை எப்படி சரி பண்றதுன்னு ஒரு கேள்வி இருக்கலாம். அதற்கான (குத்துமதிப்பான) விடை:
1. பிளாக்கர் dashboard சென்று 'Layout' -> 'Edit HTML' பகுதிக்கு போங்க.
2. அங்க Download Full Template அப்படீன்னு ஒரு சுட்டி இருக்கும். சொடுக்குங்க.
3. தரவிறங்கிய templateஐ இரு பிரதிகள் எடுத்து வச்சிக்கோங்க. ஒன்றுக்கு original.xml என்றும் மற்றொன்றுக்கு modified.xml அப்படீன்னும் பெயர் குடுங்க.
4. இப்போ, modified.xmlஐ Notepadஇல் திறந்து, கீழ்க்கண்ட string இருக்கும் வரியைத் தேடிக் கண்டுபிடிங்க:
<a expr:href='data:comment.authorUrl' rel='nofollow'>
5. அந்த மொத்த வரியையும் (அதாவது <a expr:href='data:comment.authorUrl' rel='nofollow'> என்பதில் தொடங்கி </a> என்பது வரை இருக்கும் நிரல் பகுதியை) கீழ குடுத்துருக்கிற மாதிரி மாற்றி அமையுங்க (i.e. replace the entire line as given below):
<a expr:href='data:comment.authorUrl' rel='nofollow'><data:comment.author/></a>
இதைச் செய்த பிறகு, பலமுறை recurse ஆகும் <script>document.write(to_unicode.........</script> என்ற நிரல் முற்றிலுமாக நீக்கப்பட்டிருக்கும் . அதுதான், நமது குறிக்கோள்.
6. இந்த திருத்ததை சேமித்துக் கொண்டு, மீண்டும் 'Layout' -> 'Edit HTML' பகுதிக்கு போங்க. அங்க Upload a template from a file on your hard drive வசதியைப் பயன்படுத்தி, நீங்கள் மாற்றிய modified.xml கோப்பை வலையேற்றுங்க. இதைச் செய்யும்போது சில சமயம் "We're sorry, but we were unable to complete your request." என்பது போன்ற பிழைச் செய்திகள் வரலாம். அப்படீன்னா சரியான ராகு காலத்தில் இதைச் செய்யத் தொடங்கினீங்கன்னு அர்த்தம். ஒரு 1 - 2 மணி நேரம் கழித்து முயற்சி செய்து பாருங்க. வேலை செய்யலாம். (i.e. there's a problem at Blogger end, which might become ok after sometime).
7. திருத்திய templateஐ வலையேற்றிய பிறகு, பெரும்பாலும் இந்தப் பிரச்சனை சரியாகி இருக்கும். "உள்ளதும் போச்சுடா நொள்ளக் கண்ணா"ங்கிற மாதிரி புதுப் பிரச்சனைகள் எதாவது வந்ததுன்னா, எந்த மாற்றமும் செய்யாத original.xml கோப்பை வலையேற்றுங்க. பழைய பிரச்சனைகளோட இயங்கும் தளம் மீண்டும் கிடைக்கும்.
பிற்ச்சேர்க்கை:
நண்பர் சின்னப்பையனின் பதிவில் ' said...' என்றுதான் பின்னூட்டாளர்களின் பெயர் தோன்றுகிறது (அதாவது அவர்களின் பெயர் தோன்றுவதே இல்லை). பரிசோதனையில் தெரிய வந்தது, code கீழ்க்கண்டவாறு இருக்கிறது:
<script>
document.write(to_unicode('ச்சின்னப் பையன்'))
</script>
அதாவது no recursions. அப்படியும் கூட, to_unicode நிரல் இருப்பதாலேயே பின்னூட்டாளர்களின் பெயர் மறைந்து விடுகிறது. ஆகவே, அதை முற்றிலுமாக நீக்குவதுதான் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வாக அமையும்.
திங்கள், ஜூலை 14, 2008
16 வயதினிலே
சமூகம் உயர் கணினிகளின் உதவி கொண்டு இளவட்டங்களைக் கட்டிப்போட்டு வெகு காலங்களாகி விட்டது. அவர்கள் எங்கிருந்தாலும் என்ன செய்தாலும் பெற்றொர்களுக்கு முப்பரிமாண ஒளிபரப்பு சென்று கொண்டே இருந்தது, அவர்களது கைக்கணினிகள், உடற்கணினிகள், இப்படி எதில் வேண்டுமானாலும். அதன் மூலமாகவே தங்கள் மக்களை இடைவிடாது கண்டித்துக் கொண்டிருந்தார்கள் அவ்வப்போது, "அங்கே அவனோடு என்ன பேச்சு?", "என்ன அவளைப் பாத்து ரொம்பத்தான் இளிக்கிற? பல்லெல்லாம் கழண்டு விழுந்துடப் போவுது!" என்ற ரீதிகளில். பெற்றோர் தம் குழந்தைகள் எதிர் பாலாரிடம் நட்பாயிருப்பதை விட ஒரே பாலாரிடம் நட்பு பாராட்டுவதை இன்னமும் தீவிரமாக எதிர்த்தார்கள்.
இந்நிலையில் ரதியும் மதனும் தங்கள் விதியை நொந்து கொண்டு, தத்தமது அறைகளிலிருந்து மின் நட்புத் தளங்களை வலம் வந்து கொண்டிருந்தார்கள் (அதுவும் பெற்றோர்களின் மேற்பார்வையைத் தப்பவில்லை). இந்த மின் நட்புத் தளங்களில் இள வயதினர் வேறொரு மொழியை உருவாக்கி அதிலேயே பேசிக் கொண்டிருந்தார்கள், வெளி உலகைச் சேர்ந்தவர்களுக்கு அது அவ்வளவாக விளங்கவில்லை. இம்மொழிக்கு விளக்கவுரைகளும் வந்து கொண்டுதானிருந்தன. ஆனால் இளைஞர்களோ அதை அடிக்கடி மாற்றிக் கொண்டே இருந்தார்கள். ஆகவே விளக்கவுரைகளும் பயன்றறுப் போய், பெற்றோர்களுக்கு தங்கள் மக்களின் மொழி புரியாமலேயே இருந்து வந்தது.
ரதியும், மதனும் கிடைத்த இந்த இடைவெளியில் காதல் பரிமாறிக் கொண்டார்கள். அதற்கு முன் பரஸ்பரம் அறிமுகமாகிக் கொண்டார்கள். ரதி தனக்கு யூனிக்ஸ் (UNIX) பிடிக்குமென்றாள். மதன் வாயைப் பிளந்தான். தனது கணினியிலுள்ள விண்டோஸை கடந்து அவன் வேறெதையும் அறிந்ததில்லை. தனக்கு கவிதை நன்றாக வருமென்றும், குறிப்பாக பெண்ணை வர்ணித்து கவிதை எழுதுவது தனக்கு விருப்பமான பொழுதுபோக்கு என்றும் கூறினான். தன்னை வர்ணித்து ஒரு கவிதை கூறும்படி கேட்டாள். அதற்கு அவளுக்குக் கிடைத்த பதில், அதுவரை அவள் அறிந்திருந்த shell scripts அனைத்தையும் விஞ்சியது. காதல் வயப்பட்டார்கள்.
விரல் நுனிக்காதல் விரைவில் சலித்தது. கவிதைப் பரிமாற்றங்கள் விரகத்தை அதிகரிக்கவே செய்தன. அவசர நிலை விரைவில் எட்டப்பட்டது. இனியும் தாமதிக்காமல் செயலில் இறங்க வேண்டுமென்பதை இருவருமே உணர்ந்தார்கள். மின் நட்பு தளத்தின் 'சிறப்புச் சேவையை' நாடுவதென முடிவு செய்தார்கள். தங்கள் சேமிப்பைச் செலவிட்டு, அதற்குப் பதிவும் செய்து கொண்டார்கள். விரைவிலேயே இருவருக்கும் வந்து சேர்ந்தன, அதற்குத் தேவையான உபகரணங்கள், பாடப் புத்தகங்களோ என்று எண்ண வைக்கும் வெளித் தோற்றத்தோடு. கண்காணிப்புகளிலிருந்துத் தப்ப வேண்டுமல்லவா?
இனி தங்கள் நோக்கத்துக்கு இடையூறாக இருக்கப் போவது சிவாவும் தேவியும்தான் என்பதை உணர்ந்தார்கள். ரதிக்கு சிவாவைப் பற்றி அதிகம் கவலையில்லை. அவனது கணினியை ஏற்கனவே ஊடுருவி, அறிய வேண்டிய தகவல்களை அறிந்து கொண்டுவிட்டாள். ஆகவே, அவனது கண்காணிப்பான்களை ஏமாற்றுவது கடினமல்ல. ஏற்கனவே செய்து வருவதுதான். பிரச்சனை தேவியிடமிருந்துதான். ரதியைப் போலவே (அல்லது அவளை விடப் பன்மடங்கு) கணினியில் மேதமை படைத்தவள் தேவி. அவர்களது வீட்டையே ஒரு உயர்கணினியின் பாதுகாப்பில் வைத்திருந்தாள். வெறுத்துப் போய் அரற்றினான் மதன், 'ரதி, என்னை தேவியின் பிடியிலிருந்து காப்பாற்று' என்று. அவளுக்கே அதன் சாத்தியம் குறித்து சற்று சந்தேகம் இருந்த போதும், "கவலைப்படாதே, உன்னை எல்லா கட்டுக்காவலிலிருந்தும் மீட்கிறேன்" என்று ஆறுதல் கூறினாள்.
ரதியின் அறிவுறுத்தலின் பேரில் தனது கணினியில் அவள் அனுப்பிய நிரல்களை நிறுவினான். அது வடிவமைத்தபடி, தேவியின் கணினியிலும் சென்று நிறுவிக் கொண்டது. தனது மகனின் கணினி அறிவு பற்றி தெரிந்திருந்ததாலும், அவனது கணினியிலிருந்து ஊடுருவல் ஏற்படும் என்று அவள் சற்றும் எதிர்பார்த்திருக்காததாலும் இத்தகைய தாக்குதலிலிருந்து தேவி தன் கணினியைப் பாதுகாத்துக் கொள்ளவில்லை. இவ்வாறு ஊடுருவப்பட்ட இரு பெற்றோர்களின் கண்காணிப்பான்களுக்கும் போலியான ஒளிபரப்புகள் அனுப்பும் ஏற்பாடுகள் செய்யபட்டன. ஒரு பதினைந்து நிமிட நேரம் நீடிக்கும் வகையில் இந்த போலி ஒளிபரப்பு அமைக்கப்பட்டது. அதற்கு மேல் என்றால் ஊடுருவிய நிரலியின் அளவு அதிகமாகி, வேண்டாத சந்தேகங்களைக் கிளப்பி விடும் என்று அஞ்சினாள் ரதி. இந்த போலி ஒளிபரப்புகள், தங்கள் மக்கள் படித்துக் கொண்டோ அல்லது வேறு வழக்கமான வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டோ இருப்பது போன்ற தோற்றத்தை அந்த இரு பெற்றோர்களுக்கும் அளிக்கக் கூடியதாய் இருந்தன.
ஒரு பதினைந்து நிமிட ஏமாற்று நாடகத்தை ஏற்பாடு செய்த நிறைவில் மற்றும் மகிழ்ச்சியில், மதனும் ரதியும் அந்த 'சிறப்புச் சேவையை' பெறுவதற்கு ஆயத்தமானார்கள். விரைவஞ்சலில் (பாடப்புத்தக உறையில்) வந்த உணர்விகளையும் (sensors) உணர்விப்பிகளையும் ( ;) ) அணிந்து கொண்டு, மெய் நிகர் (virtual reality) அறைக்குள் இருவரும் பிரவேசம் செய்தார்கள், கலவியில் (அல்லது அதைப் போன்ற ஒரு அனுபவத்தில்) ஈடுபடுவதற்கு.
பிகு:
1. இது போட்டிக்குன்னு சொன்னா பொதுமாத்துதான் விழும். அதனால, இது சும்மா ஜாலிக்குதான்.
2.இதைப் படிச்சிட்டு "Keanu Reeves" நடிச்ச படம் எதாவது ஞாபகம் வந்தா அதுக்கு நான் பொறுப்பு கிடையாது. ஏன்னா அந்தப் படத்தை நான் பார்க்கவில்லை, அல்லது பாதி தூக்கத்தில் பார்த்தேன், இப்படி எதாவது ஒண்ணை வச்சிக்கோங்க.
3. நூட்ப ரீதியா நோண்டாதீங்க. படிச்சா அனுபவிக்கணும், ஆராயக்கூடாது.
4. நுண்ணரசியல் பார்ட்டிங்களுக்கு - மேலே (#3) சொன்னதுதான் உங்களுக்கும்.
சனி, ஜூலை 12, 2008
அண்மைய கொந்தளிப்புகள்
இந்த episodeஇன் உச்சப்பட்ச காமெடி என்று நான் நினைப்பது, இந்த அறிவுப் பூசாரிகளின் சந்நதத்தைத்தான். செத்துப்போன மார்க்கீ த சாதே / நீட்ஷேயின் ஆவி உடலுக்குள் புகுந்து கொண்டு விட்டதோ என்ற சந்தேகம் ஏற்படும் வகையில் "moronகளே, கேளுங்கள்!" என்று Zarathushtraவைப் போல் அருள்வாக்கு கூறினார் ஒருவர். புரட்டிப் போடும் எழுத்துக்குச் சொந்தக்காரரோ மண்டியிட்டு தோழமையுடனும் (கோழைமையுடனும்) தமிழ்மணத்திற்கு மன்னிப்பு வாக்குமூலம் எழுதுகிறார். பாதிக்கப்பட்டவரோ, "அவங்க மட்டும் படுக்கையறையில பின்னியெடுக்கறாங்களே?" என்று தனது ஆதங்கத்தை வெளியிடுகிறார். இன்னொருவர் "கலாச்சாரக் காவலுக்கு எதிராக கணினி ரவுடி ஆவேன்" என்று சூளுரைக்கிறார். இந்த சூளுரையின் விளைவாக நமக்கெல்லாம் ஏற்படக்கூடிய பாதிப்பு என்ன என்பது குறித்து எந்தத் தகவலுமில்லை. அதை நினைத்து இன்னமும் நடுங்கிக் கொண்டிருக்கிறேன்........ இல்லை.
இப்படி தணிக்கைகள் நிறைந்த சூழலில் கலக எழுத்துக்கு இடமே கிடையாதா? என்றால் இருக்கிறது. எந்த ஒரு நிறுவன அமைப்பையும் சாராது ஒரு எதிர் அமைப்பை உருவாக்குவதுதான் இதற்கான தீர்வு. நான் முன்பே இது குறித்து எழுதியிருக்கிறேன். தேடல் என்ற இணையத்தின் மிக அடிப்படையான நுட்பத்தைப் பயன்படுத்தி, எந்தவொரு திரட்டியையும் சாராமல் பதிவர்களால் இயங்க முடியும். முன்பு எல்லாப் பதிவர்களுக்கும் பொதுவான தமிழ்ப்பதிவுகள் என்ற குறிச்சொல்லைப் பரிந்துரைத்தேன். இப்போது குறிப்பிட்ட வகையான எழுத்துகளுக்கு அதற்கேற்ற பெயரை யாரேனும் தேர்வு செய்து கொள்ளலாம். (உ-ம். 'காமம்', அல்லது 'கலகம்', இத்யாதி) அப்படித் தேர்வு செய்து கொண்டு, இத்தகைய தணிக்கைக்கப்பாற்பட்ட எழுத்துகளை அந்த பொதுவான குறிச்சொல்லைக் கொண்டு குறித்து, அதை வாசகர்கள் மத்தியிலும் பிரபலப்படுத்தினால், நாங்கள் திரட்டிகளில் படிக்க முடியாத அவ்வெழுத்துகளை தேடுபொறிகளின் வாயிலாகப் படித்துக் கொள்வோம். கலக எழுத்து என்றில்லை - சில தினங்களுக்கு முன்பு ஒரு பதிவர் சமையல் குறிப்புகளுக்கென்று ஒரு திரட்டியை உருவாக்குவதாகத் தெரிவித்திருந்தார். அவ்வளவு மெனக்கெடத் தேவையே இல்லை. எல்லா சமையல் பதிவர்களையும் 'சமையல் குறிப்பு' என்று குறிச்சொல் இடுமாறு கேட்டுக் கொண்டால், அதற்கான தேடல் பக்கம், செய்தியோடை, என்று எல்லாமே தயாராக உள்ளது.
தேடுபொறிகள் என்றால் technorati இருக்கிறது. அதைத் தவிர Icerocket, Google Blog search, reddit, delicious போன்ற சேவைகளும் இருக்கின்றன. நமது நண்பர் மாஹிர் உருவாக்கிய தமிழூற்றும் இருக்கிறது. பெரும்பாலும் இந்தத் தேடுபொறிகள் தாமாகவே crawl செய்து உங்கள் இடுகைகளை தங்கள் பட்டியலில் சேர்த்துக் கொள்கின்றன. அல்லது இவை எல்லாமே ping வசதியளிக்கின்றன. அவற்றைக் கொண்டு இத்தளங்களில் ping செய்து, உடனடியாக உங்கள் பதிவு தேடல்களில் கிடைக்குமாறும் செய்யலாம்.
நம் அறிவு ஜீவிகளுக்கு இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு நடந்த புரட்சிகளைப் பற்றியெல்லாம் நன்றாகத் தெரிந்துள்ளது. பாராட்டப்பட வேண்டிய விஷயம்தான். அதோடு, இன்றைய நிகழ்காலத்தில் நடக்கும் புரட்சிகளைப் பற்றியும் சிறிது தெரிந்து கொள்வார்களானால் நன்றாக இருக்கும். மேலும், கருத்துச் சுதந்திரத்திற்கு காவடி ஏந்தும் எல்லா அறிவு ஜீவிகளும் தங்கள் பதிவுகளில் தவறாது பின்னூட்ட மட்டுறுத்தலைச் செயல்படுத்தி இருக்கும் முரண்பாட்டைக் குறித்தும் குறிப்பிட விரும்புகிறேன்.
கண்டிப்பாக கலகம் செய்யுங்கள், ஆனால் அதை ஒப்பாரி வைக்காமல் செய்யுங்கள். அல்லது ஒப்பாரியும் ஒரு கலக வடிவமா?
ஞாயிறு, ஜூன் 29, 2008
இந்தோ - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் குறித்து
- உலகெங்கிலும் மின்சக்தி / எரிபொருள்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரிச்சிக்கிட்டே போகுது. இந்தியாவும் இதுக்கு விதிவிலக்கு கிடையாது. ஒரு பில்லியனுக்கு அதிகமான ஜனத்தொகை, அதுவும் பெருகிக்கிட்டே போகும் நிலையில் அனைவருக்கும் மின்வசதி செய்து கொடுப்பது சுலபமானது கிடையாது.
- எண்ணை / நிலக்கரி வளங்கள் குறைஞ்சிக்கிட்டு வருது, ஒரு நாள் இவை மொத்தமா தீர்ந்து போய்விடக்கூடிய நிலையும் ஏற்படலாம். அவற்றின் விலையேற்றம், மற்றும் இந்த எரிபொருட்களால் உலகளாவிய சூடேற்றம் / வானிலை மாற்றங்கள் போன்ற பின்விளைவுகளும் ஏற்படுது. அவற்றுக்கு மாற்று எரிபொருட்கள்ன்னா சூரிய ஒளி, காற்று, அலைகள் போன்ற புதுப்பிக்கக்கூடிய வளங்கள் இருக்கு. ஆனாலும் அவையால் எண்ணை / நிலக்கரி போன்ற பரவலை அடைய முடியாது. ஆங்காங்கே முடிந்த அளவு தேவைகளை நிறைவேற்றலாம். முற்றும் முழுவதுமா அவற்றை நம்பி இருக்க முடியாது. ஆக, இந்த எண்ணை / நிலக்கரிக்கு ஒரு நம்பகமான மாற்றுன்னா அது அணுசக்தியாதான் இருக்க முடியும்.
- அணுசக்திங்கும் போது, அது அணு ஆயுதத் தயாரிப்புக்கும் திசை திருப்பப்படும் அபாயம் இருக்கிறது. இதைக் காரணமா வச்சிக்கிட்டு ஏராளமான அரசியல் முன்னெடுப்புகள் நடந்துக்கிட்டு இருக்கு, போர்கள் உட்பட.
- அணுசக்தியிலிருந்து மின்சாரம் தயாரிக்கிறது முற்றிலும் பாதுகாப்பானதான்னு கேட்டா "நிச்சயமா" அப்படீன்னு அடிச்சு சொல்றதுக்கு தயாரா இருக்காங்க அணுசக்தித் துறையைச் சார்ந்தவங்க. அவங்க சொல்வதன்படி, அணுமின் நிலையங்களிலிருந்து உருவாகும் கதிரியக்கக் கழிவுகளை அதல பாதாளத்தில் ஆயிரங்காலத்துக்கு புதைத்து வைக்கணும், எந்தக் குறுக்கீடும் இல்லாம. அப்படி பாதுகாத்தா அவை கதிரியக்கத்தன்மையை முற்றிலும் இழந்துவிடும், அவற்றால் ஏற்படக்கூடிய அபாயங்களும் அகன்று விடும். கேக்கறதுக்கு நல்லாத்தான் இருக்கு. இன்னும் பத்து வருஷத்துக்குள்ள என்னல்லாம் நடக்கும்ன்னே சொல்ல முடிய மாட்டேங்குது. ஆயிரமாண்டுகளுக்கு நாம புதைத்து வைக்கிற கழிவுகள் ஒரு பாதிப்புமில்லாம அப்படியே பத்திரமா இருக்கும்ன்னு எந்த அடிப்படையில் உறுதி செய்து கொள்வது?
- அணு ஆயுதங்கள் தேவையா? தேவையில்லைன்னுதான் தோணுது, பின்ன ஏன் இந்த நிலைமை? இப்படியெல்லாம் எடக்கு மடக்கா கேக்ககூடாதுங்கறீங்களா? அப்போ இதுக்கு விடைதான் என்ன? இதுவா? அப்படின்னா நம்மால் உடன்படக்கூடிய தீர்வுதானா இது?
- அணுசக்தி நமக்கு நிச்சயம் தேவை என்பதில் உறுதியா இருக்கோமா, அதோட அணு ஆயுதம் நமக்குத் தேவையில்லை என்பதிலும் உறுதியா இருக்கோமா? அப்படீன்னா இந்தோ - அமெரிக்க அணு ஒப்பந்தம் ஒரு சரியான முடிவுதான். இருந்தாலும், இந்த ஒப்பந்தம் இல்லாமலேயே நம்மால் அணுசக்தித் தன்னிறைவை அடைந்திருக்க முடியுமா என்ற கேள்வியும் வருது. அது முடியுமானால் நமக்கு ஒவ்வாத இந்த 123 ஒப்பந்தத்தையே கையெழுத்திட்டிருக்க வேண்டாமே?
- கிட்டத்தட்ட நாற்பது வருடங்களா மேற்கூறிய அணு ஆயுதத் தடை ஒப்பந்தத்தை ஏற்காம இருந்திருக்கோம், அது ஒருதலைபட்சமா இருக்கு என்ற அடிப்படையில். இப்போ திடீர்ன்னு ஏன் நம் கொள்கையில் மாற்றம்? இந்த மாற்றத்துக்கான கட்டாயம் எப்படி ஏற்பட்டது? சரி இந்தக் கொள்கை மாற்றம் தேவையானதுன்னு வச்சிக்கிட்டாலும், அதை வெளிப்படையா அறிவிக்கலாமே? அறிவித்து, நேரடியாக இந்த NPT தடை ஒப்பந்தத்திலேயே கையெழுத்திடலாமே? ஏன் 123 என்ற மறைமுகமான பின் வாசல் அணுகுமுறை? முட்டாள்களை அடிமுட்டாள்கள் ஆக்கும் முயற்சியா இது?
நம்மோட மின்சக்தி உற்பத்தித் திறனை மிக அதிக அளவுக்கு அதிகரிக்கணும்ங்கிறதுல எந்த வித சந்தேகமும் இருக்க முடியாது. நம்மோட கிராமங்களுக்கெல்லாம் தடையற்ற மின்சக்தி கிடைக்கணும், அவையும் உலகப் பொருளாதாரச் சந்தையில் போட்டி போடும் அளவுக்கு அவற்றை முன்னேற்றணும். அதுக்கு அத்தியாவசியமானது போதிய அளவு கிடைக்கக்கூடிய மின்சாரம் என்பதில் சந்தேகமே கிடையாது. மேலும், எண்ணை நிலக்கரி வளம் குறைஞ்சிக்கிட்டும் அவற்றோட விலை உயர்ந்துக்கிட்டும் இருக்கும் நிலையில், மற்ற புதுப்பிக்கக்கூடிய வளங்களைய்ல்லாம் எவ்வளவு தூரம் பயன்படுத்த முடியும்ன்னு உறுதியா தெரியல. ஆகவே, அவற்றுக்கு சரியான மாற்றாக அணுசக்தி ஒன்றுதான் இருக்க முடியுமென்பதிலும் சந்தேகமில்லை. ஏறகனவே உலகின் மொத்த மின்சார உற்பத்தியில் ஆறில் ஒரு பங்கு அணுசக்தியிலிருந்துதான் வருது. இந்தியாவில் இந்த விழுக்காடு 3%தான். இதை 2050ஆம் ஆண்டுக்குள்ள 25%ஆ அதிகரிக்கணும்ங்கிற இலக்கு பற்றி பேசப்படுது. அதுக்குத் தடையா இருக்கக்கூடிய ஒரே காரணம், நம்மிடம் போதிய அளவுக்கு யுரேனியம் என்ற தாதுப் பொருள் இல்லாததுதான்.
அணுமின் உற்பத்தியில் ஒரு விரும்பத்தகாத அம்சமும் இருக்கு. அதுதான் கதிரியக்கக் கழிவுகள். அவற்றை அதல பாதாளத்தில் தனிமைப்படுத்தி ஆயிரம் ஆண்டுகளுக்கும் பாதுகாப்பா விட்டு வைத்தால்தான் அவை கதிரியக்கத்தன்மையை இழக்கும். இந்தக் கழிவுகள் எரிபொருட்களின் மிச்சம் மீதி மட்டுமில்லாம, அத்தகைய பொருட்களோட தொடர்பு ஏற்பட்ட சாதாரண மற்ற பொருள்களும் ஆகும். அதாவது ஒரு கையுறை அல்லது ஒரு வேற உபகரணங்கள் கொண்டு கதிரியக்கப் பொருட்களைக் கையாளும் பட்சத்தில் அந்த உபகரணங்களும் கதிரியக்கத்தன்மை அடையுது. ஆகவே, அவற்றையும் சேர்த்து ஆயிரங்காலத்துக்கு பாதுகாக்க வேண்டியதுதான். இல்லைன்னா அவற்றால் உலகத்து உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்புள்ளது. அமெரிக்க நெவாடா மாநிலத்தில் ஏற்படுத்தப்படவுள்ள இத்தகைய நிலவறை மற்றும் அதற்கு எழுந்துள்ள எதிர்ப்புகள் பற்றி இந்தப் பக்கத்தில் காணலாம். Seismic activity எனப்படும் நிலநடுக்கங்கள் எங்கெங்கே ஏற்படும், அதிலிருந்து முற்றிலும் பாதுகாப்பா இந்தப் பொருட்களை வைத்துக் கொள்ள முடியுமா என்பது போன்ற சந்தேகங்களெல்லாம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை. அதோட, செர்னோபில் போன்ற ஆபத்துகளையும் மறக்க முடியுமா?
இப்போது, அணு ஆயுதங்கள் பற்றிய சர்ச்சை குறித்து: அணு ஆயுதங்கள் தயரிக்கப்பட்டது வருத்தமானதே. ஒரு முறை பயன்படுத்தப்பட்டதுவும் அதை விட வருத்தமானதே. அவை இன்றைக்கும் கணிசமான அளவில் கிடங்குகளில் காத்திருப்பது மிக மிக வருத்தமானதே. அப்படியானால் நாற்பது வருடங்களாக செயல்பட்டு வந்த அணுஆயுதத் தடை ஒப்பந்தங்கள் (NPT, CTBT போன்றவை) சாதித்ததுதான் என்ன? இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடுகளின் வசம் 15000 அணு ஆயுதங்கள் உள்ளனவாம். (இந்தியா உட்பட) கையெழுத்திடாத நாடுகள் வசம் சில நூறு அணு ஆயுதங்கள் உள்ளனவாம். இதில் யாரால் அதிக ஆபத்து? இப்போ இந்த NPT ஒப்பந்தத்தைப் பற்றி: உலக நாடுகளை அணுஆயுதத் திறன் கொண்ட நாடுகள் அப்படீன்னும் அணு ஆயுதமற்ற நாடுகள் அப்படீன்னும் பிரிக்குது இந்த ஒப்பந்தம். ஆணு ஆயுதமுள்ள நாடுகள்ன்னு அமெரிக்கா, ருஷ்யா, இங்கிலாந்து, ஃபிரான்ஸ், மற்றும் சீனா ஆகிய நாடுகள் அடையாளப்படுத்தப்பட்டிருக்கு. மற்ற எல்லா நாடுகளும் இந்த ஒப்பந்தத்தின்படி அணு ஆயுதமற்ற நாடுகள்தான். இதில் ஆயுதமுள்ள நாடுகள் என்ன ஒப்புதல்களை அளிச்சிருக்குன்னா, தங்களுடைய அணு ஆயுதங்களையும் தொழில்நுட்ப ரகசியங்களையும் பிற நாடுகளுக்கு வழங்க மாட்டோம்ன்னுதான். தங்களுடைய அணு ஆயுதங்களைப் பயன்படுத்த மாட்டோம்ங்கிற உத்தரவாதத்தை இந்த நாடுகள் வழங்கவில்லை என்பதை கவனிக்கணும். இந்த நாடுகள் மற்ற நாடுகளின் மீது போடும் நிபந்தனையென்னன்னு பாத்தா, "இப்போது இருக்கும் அணு ஆயுதமற்ற நிலையிலயே அப்படியே தொடர்வோம்" என்ற வாக்குறுதியைத்தான் இந்த நாடுகள் மற்ற நாடுகளிடமிருந்து எதிர்பார்கின்றன. ஆதாவது, "அணு ஆயுத சோதனைகள், இன்ன பிற முயற்சிகளைச் செய்ய மாட்டோம்" அப்படீன்னு உத்தரவாதம் குடுக்கணுமாம் நாமல்லாம். ஆனா இந்த நாடுகளோ, ஒரு தீவிரவாதத் தாக்குதல் நடந்தாலும் "எங்களுடைய அணு ஆயுதங்களைப் பயன்படுத்தும் வாய்ப்புள்ளது"ன்னு அறிக்கை விடறாங்க. அதாவது, தடை அவங்களுக்கு கிடையாது, நமக்குத்தான்.
இந்த ஒருதலைபட்சமான தடை ஒப்பந்தத்தை சரியான காரணத்திற்காகவே நாம நாற்பது வருடங்களா எதிர்த்து வந்திருக்கோம். அதனால் நமக்கு ஏற்பட்ட தீண்டத் தகாத நிலையையும் பொறுத்துக்கிட்டே, அதில் உறுதியா இருந்தோம். எவ்வளவோ ஆட்சி மாற்றங்கள் நிகழ்ந்த போதும் அந்த நிலைப்பாட்டில் நாம மாறவில்லை. இப்போது திடீர் மாற்றத்துக்கான காரணமென்ன? இந்த 123 ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது, அணு ஆயுத சோதனைத் தடையை ஏற்றுக் கொண்டது போலத்தான். அதாவது, கிட்டதட்ட NPTயில் கையெழுத்திட்டது போலத்தான். அதை இன்று செய்ய வேண்டிய நிர்பந்தம் என்னன்னுதான் புரியவில்லை. அப்படியொரு நிர்பந்தம் இருந்தது உண்மைன்னா அதை மக்களிடம் சரியாக் கொண்டு போயிருக்கலாமே? வெளிப்படையாவே இன்னின்ன காரணங்களால் நமது அணு ஆயுதக் கொள்கையில் மாற்றமேற்பட்டிருக்குன்னு அறிவிச்சிருக்கலாமே? அப்படியில்லாம, கொள்கையில் எந்த மாற்றமுமில்லைன்னு பொய் சொல்லிகிட்டு திரியறது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போலத்தான்.
இந்த இறக்குமதி யுரேனியம் இல்லாத நிலையில், நம்மிடம் அபரிமிதமாக உள்ள தோரியம் என்ற மற்றொரு அணுசக்தி எரிபொருள் குறித்தும் சோதனைகள் நடந்துக்கிட்டு இருந்தது, இன்னமும் நடந்துக்கிட்டு இருக்கு. (உலகின் 25% தோரியம் வளம் நம்மிடம்தான் உள்ளது) இது மட்டும் வெற்றியடைஞ்சதுன்னா நம்முடைய எரிபொருள் கொண்டே தேவைப்படும் அணுமின்சாரத்தை தயரிக்கும் வாய்ப்புள்ளது. ஆனா, இந்த 123 ஒப்பந்தத்தினால் யுரேனியம் எளிதில் கிடைக்கக்கூடிய நிலையில், இத்தகைய சோதனை முயற்சிகள் பின்னுக்குத் தள்ளப்படும் அபாயமுள்ளது. நமது வெளியுறவுக் கொள்கையை சமரசம் செய்யாமலேயே, அணு மின்சாரத் தன்னிறைவு அடைவதற்கான ஒரு வாய்ப்பு தவறவிடப்பட்டுள்ளதுன்னுதான் சொல்ல முடியும். ஆட்சி கவிழ்ந்த பிறகாவது இது பற்றியெல்லாம் யோசிப்பாங்களான்னு பாக்கணும்.
(This post in English can be found here)
வியாழன், ஜூன் 19, 2008
வயதில் பெரியோர்களின் கவனத்திற்கு
மேலும் இந்த web 2.0, சமூக ஊடகம் போன்ற வளர்ச்சிகளில் நம்ம பெரியவர்கள் எந்தளவுக்கு கலந்துக்கறாங்கன்னும் தெரியல. எனக்குத் தெரிஞ்சி பல பெரியவர்கள் வலைப்பதியறாங்க. ஆனா, அதையும் விட எவ்வளவு பேர் (உ-ம். இங்க தீவிரமா வலைப்பதியும் பல இளவட்டங்களின் பெற்றோர்கள் மற்றும் வயதான குடும்பத்தினர்) இந்த வலைச்சூழலை விட்டு ஒதுங்கியே இருக்காங்கன்னும் யோசிக்கணும். ஒரு வேளை இணையம் என்பதே, இளைஞர்கள் மட்டுமே புழங்கக்கூடிய, மற்றவர்களுக்குக் கலாச்சார அதிர்ச்சிகளை வழங்கும் ஒரு இடமா ஆயிட்டதான்னு யோசிக்கத் தோணுது. சரி, பில்டப்பை நிறுத்திட்டு விஷயத்துக்கு வர்றேன்.
வயதில் பெரியோர்களை முதன்மைப்படுத்தியும், அதே நேரத்தில் மற்றவர்களுக்கும் அவர்களுக்குரிய இடமளித்தும் இயங்கும் வகையில் ஒரு சமூக உறவாடல் தளத்தை உருவாக்கியிருக்கேன். அதை www.mello.in என்ற முகவரியில் காணலாம். (பெயர்க்காரணம் - 'mellow' என்ற, 'முதிர்ச்சி', 'மென்மை' போன்ற குணங்களைக் குறிக்கும் ஆங்கிலச் சொல்லின் திரிபு). இத்தகைய தளங்களின் பொதுவான அம்சங்களான புரோஃபைல் ஏற்படுத்திக் கொள்ளும் வசதி, மற்ற பயனர்களுடன் நட்புறவுகள் (relationships) ஏற்படுத்தும் வசதி, வலைப்பதிவு வசதி, குழுக்கள்(groups) ஏற்படுத்தும் வசதி, குழுக்களுக்குள் உரையாடும் வசதி (discussion forums), மின்னஞ்சல் முகவரி இல்லாமலேயே தனிச்செய்திகள் (private messages) பரிமாறிக்கொள்ளும் வசதி, போன்றவை இதிலும் இருக்கு. ஆனா அவை மட்டுமில்லாம சில சிறப்பு அம்சங்களையும் புகுத்தியிருக்கேன். அந்த சிறப்பு அம்சங்களாவன:
- உறவுகளில் மூன்று வகையான தேர்வுகள் - நண்பர் (Friend), நெருங்கிய நண்பர் (Buddy), மற்றும் நலம் விரும்பி (Well-wisher) ஆகியவை
- மேற்கண்ட உறவு முறை அடிப்படையில் தான் வெளியிடும் ஒரு படைப்பு / தகவலுக்கு பார்வையாளர்களைத் தேர்வு செய்யும் வசதி. அதாவது, எல்லா தகவல் / ஆக்கங்களையும் பொதுப்பார்வைக்கு வைக்கும் நிர்பந்தம் இல்லாமல், சில தகவல்கள் மற்றும் ஆக்கங்களை 'நண்பர்களுக்கு மட்டும்' அல்லது 'நெருங்கிய நண்பர்களுக்கு மட்டும்' அப்படீன்னு வரையறுக்கும் வசதி.
- வேலை வாய்ப்புகள் பகுதி - ஓய்வு பெற்ற / பெறப்போகும் நிலையில் உள்ளவர்களுக்கான வேலை வாய்ப்புச் செய்திகள், மற்றும் அத்தகைய விளம்பரங்களுக்கு (CV கோப்புகள் இத்யாதிகளோடு) விண்ணப்பிக்கும் வசதி
- உடல்நலம் சார்ந்த பகுதி - உடல்நலப் பதிவுகள் (Wellness updates - குடும்பத்தினர் / நெடுநாளைய நண்பர்களின் - அதாவது மேற்கூறிய 'நலன் விரும்பி' அப்படீன்னு குறிக்கப்பட்டவர்களின் பார்வைக்கு மட்டும் கிடைக்கக்கூடியவை), மருத்துவ / உடல்நலன் சார்ந்த துறையினருக்கு சிறப்புப் பயனர் கணக்குகள் (இந்த சிறப்புக் கணக்கை வேண்டும் மருத்துவத் துறையினர் மற்றும் இதர உடல்நலன் சார்ந்த நிபுணர்கள் அன்புடன் வரவேற்கப்படுகிறார்கள். தயவு செய்து வழக்கமான கணக்கை ஏற்படுத்திக் கொண்டு, என்னைத் தொடர்பு கொள்ளவும். உங்கள் கணக்கை மேம்படுத்தித் தருகிறேன்)
- வோட்டுரிமை / பயனர் மதிப்பெண்கள் - நல்ல இடுகைகள், பின்னூட்டங்கள், மற்றும் பயனர்களை அடையாளம் காட்டி முதன்மைப்படுத்தும் வசதி
தொழில்நுட்பக் குறிப்புகள் - இதை Drupal CMS கொண்டு உருவாக்கினேன். PHP, MySQL, Javascript, Jquery ஆகிய தொழில்நுட்பங்களின் கூட்டுக் கலவைதான் இந்தத் தளம்.
வெள்ளி, ஜூன் 13, 2008
ஒரு phishing எச்சரிக்கை
இதுதான் தள முகவரி. தப்பித் தவறி கூட உங்க கடவுச்சொல்லையெல்லாம் இந்த மாதிரி தளங்களில் குடுத்துடாதீங்க.
தமிழனை தமிழனே ஏமாற்றும் அவலம் என்னைக்குத்தான் நிக்குமோ?
திங்கள், ஜூன் 09, 2008
பணி அடிமைகள்
ஆனா அதுக்கப்பறம் நடுவர் அவரைப் பார்த்து ஒரு கேள்வியைக் கேட்டார் - நீங்க எதுக்கு முன்னுரிமை குடுப்பீங்க மனைவிக்கா, வேலைக்கான்னு. நண்பர் ஒரு அரை நிமிடம்தான் யோசித்தார் (அல்லது அவ்வளவு நேரம் கூட எடுத்துக் கொள்ளவில்லை). வேலைக்குத்தான் முன்னுரிமைன்னு பதில் சொன்னார். ஒரு பெரிய பாறாங்கல் எதாவது இருந்தா அதை அந்தாள் தலையில் தூக்கிப் போடணும் போல இருந்தது, தொலைக்காட்சியில் இதைப் பார்த்துக்கிட்டு இருந்த எனக்கே. நேரில் கேட்டுக்கிட்டிருந்த அவரோட மனைவிக்கு எப்படி இருந்திருக்கும்ன்னு விவரிக்கத் தேவையில்லை. அதெப்பபடி இப்படி ஒரு பதிலை முகத்தில் அறைஞ்ச மாதிரி சொல்ல முடியுது? கூடவே இருக்கப்போற மனைவியின் உணர்வுகளைப் பற்றிக்கூட சிந்திக்கத் தெரியாத / விரும்பாத ஒருத்தன், வேற சிந்தனைகள் செஞ்சி வேலை செய்யறதுனால யாருக்கு என்ன லாபம்? இதே மனநிலையைத்தானே தன்னுடைய சகப் பணியாளர்கள், தன் கீழ் பணி செய்பவர்கள் ஆகியோரிடமும் வெளிப்படுத்துவான்? (விட்டால் மேலதிகாரி / வாடிக்கையாளர்களிடமும்). என்னதான் கம்பியூட்டரோட சிந்திச்சி கொலாவினாலும், இறுதியில் உங்கள் வெளியீடுகளெல்லாம் உணர்வுகளைக் கொண்ட மனிதர்களின் பயன்பாட்டுக்காகத்தானே? உணர்வுகளைப் பற்றிய புரிதல் / மரியாதை இல்லாம தன்னை workoholicன்னு சொல்லிக்கறவங்க, தங்கள் பதவிக்கே தகுதியற்றவங்கன்னு சொல்லத் தோணுது.
மேலும் பல அம்சங்களை கவனிச்சேன். இந்த workoholics என்பவர்களுக்கு தங்களைப் பற்றிய அதீத மதிப்பீடுகள் இருப்பதையும் கவனிக்க முடிந்தது. இந்த நாடே தங்களால்தான் முன்னேறுதுன்னு கூசாம சில பேர் சொன்னாங்க :) தங்களைப் போலில்லாதவங்கல்லாம் சோம்பேறிகள் என்ற எண்ணமும் அவர்களிடமிருப்பதைக் காண முடிந்தது. எதிர் தரப்பில் பேசிய ஒரு தொழிலதிபர் ஒரு அருமையான கருத்தை சொன்னார். வருங்காலம் என்பது கணிக்க முடியாத ஒன்று (future is a mystery), எனவே வருங்காலத்தில் கிடைக்கப்போகிற பலன்களுக்காக இன்றைய வாழ்க்கையைச் சிதைத்துக் கொள்வது மூடத்தனம்ன்னு. உடனே அதற்கு எதிர்வினையாக ஒரே கொந்தளிப்பு, 'வேலைப் பிரியர்கள்' என்று சொல்லிக் கொள்பவர்களிடமிருந்து. நாங்கல்லாம் ரொம்ப productive, நாங்க இப்படி இருக்கிறதுனாலதான் நீங்கல்லாம் வாழ்க்கையை நல்லா அனுபவிக்க முடியுதுன்னு. எனக்கு ஒரு சந்தேகம் - productiveஆ இருக்கிறவங்களுக்கு ஏன் தங்கள் வேலையைச் செய்ய அதிக நேரம் தேவைப்படுது? எனக்குத் தெரிந்த வரை, குறைந்த நேரத்தில் அதிக வேலைகளைச் செய்து முடிப்பதுதான் productivity. அதிக நேரத்தில் அதே வேலையையோ, அதற்கும் குறைவாகவோ செய்து முடிப்பதை inefficiency / செயல்திறன் குறைவுன்னுதான் சொல்ல முடியும்.
வேலைப்பரியராக ஒருவர் இருப்பதற்கு என்ன காரணம் இருக்க முடியும்ன்னு யோசிக்கணும். ஒரு மோசமான வேலைச் சூழலிலிருந்து ஒரு சுமாரான அல்லது நல்ல வேலைச் சூழலுக்கு மாறும்போது ஆகான்னு விசுவாசம் பொத்துக்கிட்டு வரும் :) அந்த விசுவாசத்தில் அதிக உழைப்பை வழங்குவோமா, மேலதிகாரியை குஷிப்படுத்துவோமான்னு கிடந்து அலைபாயும் மனசு. இது ஒரு காரணமா இருக்கலாம். மேலும் இதையே சாதகமாப் பயன்படுத்தி, தட்டிக் குடுத்து வேலை (தன்னோட வேலையையும் சேர்த்து) வாங்கற மேலதிகாரிகளும் காரணமா இருக்கலாம். Dangling carrots / ஆசைக் காட்டி மோசம் செய்யறதுன்னுல்லாம் இதுக்குப் பேர் உண்டு. அல்லது வேலைச் சூழலே ஒருவருக்கு வீட்டுச் சூழலை விட இதமானதாக இருக்கலாம். நேரத்துக்கு வீட்டுக்கு வந்தா அது என்னாச்சு, இது என்னாச்சுன்னு கேள்விகள் வரும். குழந்தைகள், வீட்டு வேலைகள்ன்னு பொறுப்புகள் அதிகமாகும். அலுவலகத்திலேயே இருந்துட்டா இதையெல்லாம் தட்டிக் கழிச்சிடலாம் :)
இது போன்ற போக்கை நிறுவனங்களும் ஆத,ரிப்பதால், ஒரு போட்டி மிகுந்த சூழல் ஏற்படுது, எல்லாரும் அதிக நேரம் வேலை செய்யறாங்க, அதனால நானும் அதிக நேரம் வேலை செஞ்சாகணும்ன்னு. நாளடைவில் பணியாளர்கள் மீதான நிறுவனங்களின் எதிர்பார்ப்புகளும் அதிகமாயிடுது, குடுக்கற ஊதியத்தில் அதிக அதிகரிப்பு இல்லாமலேயே. இப்படி தன்னைச் சுரண்டும் திட்டத்திற்கு தானே துணை போவதில்தான் போய் முடியுது. அது அவங்களை மட்டும் பாதிச்சுதுன்னா கூட வருத்தப்பட்டுட்டு அடுத்ததப் பாக்கப் போயிடலாம். ஆனா அவங்களை மட்டுமில்லாம அவங்க குடும்பங்களையும் பாதிக்கும்போதுதான் இது பற்றி தீவிரமா சிந்திக்கத் தோணுது, இதுக்கு என்ன தீர்வுன்னு. அரசின் தலையீடு பல விஷயங்களில் தேவைப் படுவதைத்தான் இந்த உதாரணங்களெல்லாம் நமக்கு உணர்த்துது.
புதன், மே 14, 2008
சனி, பிப்ரவரி 23, 2008
எரிதப் பிரச்சனைக்குத் தீர்வு
- அந்தப் பட்டியல்ல இருந்து randomஆ ஒரு மின்னஞ்சலை தேர்ந்தெடுங்க. உங்களுக்கு முன்ன பின்ன தெரியாதவங்களா இருந்தா இன்னமும் நல்லது. (அந்தப் பட்டியல்ல இருக்கிற பெரும்பாலோர் அப்படிப்பட்டவங்கதான்)
- இப்பொ Create a filter படிவத்தை திறங்க. அதில் "To" என்றிருக்கும் பெட்டியில் நீங்க தேர்தெடுத்த மின்னஞ்சலை ஒட்டுங்க. அதுக்கப்பறம் "Test search"ஐ அழுத்தினீங்கன்னா, இதுவரைக்கும் வந்த வேண்டாத மெயில் எல்லாம் அந்தத் தேடலில் கிடைக்கும். ஆக, வடிகட்டி வேல செய்யுதுன்னு அர்த்தம்.
- இப்பொ next step பொத்தானை அழுத்துங்க. அதில் வரும் தேர்வுப் பட்டியலில், skip the inbox, delete it ஆகிய ரெண்டையும் தேர்வு செஞ்சி, create the filter பொத்தானை அழுத்துங்க. அவ்வளவுதான்.
புதன், பிப்ரவரி 20, 2008
எரிதத் தடை
இந்த மடல்களை Report spam செய்யறதுனால எந்த பிரயோசனமும் இருக்காது. எவ்வளவு முகவரிகளைத்தான் தடை செஞ்சிக்கிட்டே இருக்க முடியும்? (அந்தப் பட்டியல்ல ஆயிரக்கணக்கான முகவரிகள் இருக்கும் போலயிருக்கு). மேலும், தானாகவே அஞ்சல் செய்து கொள்ளும் virus mail போன்றவற்றை report செய்தால், நண்பர்களின் முகவரிகள் (அவர்கள் எந்தத் தவறும் செய்யாத போது) தடை செய்யப்படும் ஆபத்தும் இருக்கு.
அதை விடப் பிரயோசனம் இல்லாத வேலை, 'reply to all' போட்டு தன்னை மட்டும் பட்டியல்ல இருந்து நீக்கி விடும்படி வேண்டுகோள் வைக்கறதுதான். அதைப் பின்பற்றி ஒரு பத்து பேர் அதே வேண்டுகோளை வைப்பாங்க (தன் பங்குக்கு யாரோட முகவரியையும் நீக்காம. அவங்களாலையே செயல்படுத்த முடியாத ஒண்ணை எப்படி மத்தவங்க கிட்ட இருந்து எதிர்பாக்க முடியுதோ தெரியல).
எனக்குத் தெரிஞ்சி இதை வெற்றிகரமா வீழ்த்தக்கூடிய ஒரு உத்தி - mail filters. சில விதிகளைக் குறிப்பிட்டு, இத்தகைய மடல்கள் உங்க அஞ்சல் பெட்டிக்கே வராம அழிக்கப்பட்டு விடும்படி உங்கள் மின்னஞ்சல் கணக்கை setup செய்யலாம். உ-ம், subject lineஐ குறிப்பிட்டு, இந்த subjectடோட வர்ற எல்லா மடல்களையும் அழிக்க சொல்லலாம். அல்லது ஒரு குறிப்பிட்ட நபர் கிட்டயிருந்து வர்ற மடல்களை தடுக்கலாம். அல்லது, மடலில் குறிப்பிட்ட சொற்கள் இடம்பெற்றிருந்தா அவற்றை filter செய்ய சொல்லலாம் (e.g. 'pls remove me', 'வாழ்த்துக்கள்', etc).
வருத்தமான விஷயம் என்னன்னா, இந்த மாதிரி filter செய்யறதுக்கான options ரொம்ப குறைச்சலா இருக்கு. ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேலான பெறுனர்களுக்கு அனுப்பப்படும் மடல்கள் (i.e. recipient-count > n) எல்லாத்தையும் தடுக்கும்படி ஒரு filtering option இருந்தா இது எல்லாத்தையும் ஒழிச்சிட்டு நிம்மதியா இருக்கலாம். கூகிள், யாஹூ நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் இந்த வேண்டுகோளை உங்க பெரிய தலைங்க கிட்ட போட்டு வையுங்க மாஹா ஜனங்களே!
செவ்வாய், ஜனவரி 29, 2008
அட்சய பாத்திரம் ஏற்படுத்திய எண்ணங்கள்
ஆனாலும், ஒரு சில உறுத்தல்கள் இருப்பதையும் மறுக்க முடியாது. முதலில் இதன் பின்னணியில் இருப்பவர்கள் குறித்து ஆராய்ந்தேன். இன்ஃபோஸிஸ் நிறுவனத்தினர் என்ற தகவல் கிடைத்தது. பாராட்டப்பட வேண்டியதுதான். என்றாலும் நிறுவனங்கள் social responsibility என்ற பெயரில் செய்யும் கேலிக்கூத்துகளை சற்று எச்சரிக்கை உணர்வுடனேயே அணுகி வந்திருக்கிறேன். நர்மதைத் திட்ட எதிர்ப்புக் குழு, போபால் விஷவாயுவால் பாதிக்கப்பட்டவர்கள் நலனுக்காகப் போராடும் குழுக்கள், போன்ற மக்கள் இயக்கங்கள் அளிக்கும் நம்பகத்தன்மையை இந்த நிறுவன ஆதரவு தொண்டுக் குழுக்கள் ஏனோ அளிப்பதில்லை. (ஏன் என்பது பிறகு)
தளத்தின் மற்ற பக்கங்களையும் புரட்டிக் கொண்டு வந்த போது ஒரு செய்தி அடிக்கடி repeat ஆவது போல் இருந்தது. அதாவது, அவர்கள் குழந்தைகளுக்காகத் தயாரிக்கும் உணவு யாருடைய கையும் படாமல் சுத்தமாகத் தயாரிக்கப்படுகிறது என்ற செய்தி. சத்துணவுக் கூடங்களில் பல்லி விழுந்த உணவெல்லாம் பரிமாறப்படலாம் என்ற நிலையோடு ஒப்பிடுகையில் இது ஆறுதலான ஒரு நிலைதான். ஆனாலும் மீண்டும் மீண்டும் உணர்த்தப்படும் 'யார் கையும் படாமல் தயாரிக்கப் பட்டது' என்ற செய்தி அவர்களது மனநிலையை வெளிப்படுத்துகிறதோ என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது. யாருடைய வீட்டிலும் யாரும் கையுரைகளை அணிந்து கொண்டு உணவு தயாரிப்பதில்லை. கைப்பட தயாரித்த உணவைத்தான் நாம் அனைவரும் விரும்பி உண்டு கொண்டிருக்கிறோம்.அவர்களது சமையலறைகளில் பாதுகாப்பு கருதி எடுக்கும் கையுரை அணிதல் போன்ற நடவடிக்கைகளைக் குறை கூறவில்லை. ஆனால் அதை அடிக்கொரு முறை கூறிக்கொள்ளும் நோக்கம் என்ன என்பதுதான் யோசிக்க வைக்கிறது. "எங்கள் ஊழியர்கள் எத்தகையவர்களாக இருந்தாலும் அவர்கள் கை பட்டு அசுத்தமாகாத உணவுதான் எங்களால் விநியோகிக்கப் படுகிறது" என்ற மேட்டுக்குடிச் சிந்தனைதான் இப்படி பக்கத்திற்குப் பக்கம் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறதோ என்றொரு ஐயம். வலைத்தளத்தைப் படித்து ஆதரவளிக்க முன்வரக்கூடிய இதர மேட்டுக்குடியினருக்கும் இது தேவையான செய்தியாக இருக்கக் கூடும் என்பதே இங்கிருக்கும் அவல நிலை.
அதே போல் repeat ஆகும் இன்னொரு செய்தி - இத்திட்டத்தால் பலனடைந்த குழந்தைகளின் குடும்பச் சூழல் பற்றிய தகவல்களில் "தந்தை குடிகாரன்" என்ற செய்தி (விமர்சனத் தொனியில்). "குழந்தைக்கு உணவளிக்க வக்கில்லாமல் தண்ணியடிக்கும் தந்தை" என்ற மேட்டுக்குடிப் பார்வைதான் இது. எனது வீட்டுக்கெதிரே ஒரு வீட்டை உடைத்துக் கொண்டிருந்தார்கள். ஒரு வீட்டின் கூறைப்பகுதிதான் (concrete roof) வலிமையானது என்பது தெரிந்திருக்கலாம். அதை ஒரு ஐந்து பேர் ஒரு பெரிய சுத்தியல் போன்ற கருவியைக் கொண்டு தகர்த்துக் கொண்டிருந்தார்கள். இந்த வேலையைச் செய்யகூடிய மக்களை எந்த வேலையும் செய்ய வைக்கலாம் என்பதே எனக்கு ஏற்பட்ட உணர்வு (ஆங்கிலத்தில் தெளிவாகக் கூறுகிறேன் - if somebody could be motivated to do this work, they can be motivated to do anything else) . முகமது யூனுஸ் போன்றவர்களோடு நான் வேறுபடுவது இங்குதான். தன்னை முன்னேற்றிக் கொள்ளும் உத்வேகமில்லாதவர்கள் என்று ஆண்களை ஒட்டு மொத்தமாக ஒதுக்கி வைத்து விட்டவர்கள் அவர்களே. Sorry for digressing - நான் கூற வருவது, வாழ்க்கை கடினமானது. அந்த சுத்தியல் கூலியாட்கள் இரவு தூங்குவதற்காக செய்ய வேண்டியதைச் செய்தால்தான் அவர்களால் தூங்க முடியும் என்பது நம்மைப் போன்ற மேட்டுக்குடிகளுக்குப் புரியவே புரியாது.
இப்போது million dollar macro-economic கேள்வி. இலவச மதிய உணவுதான் தீர்வா என்ற கேள்வி. தமிழகத்தில் புரட்சித் தலைவர் கொண்டு வந்த திட்டம். அரசின் குற்ற உணர்வால் உந்தப்பட்டு எடுத்த முடிவு. மனிதர்களின் வாழ்வு முறைகளை, வாழ்வாதாரங்களை திரும்பிப் பெற முடியாத வண்ணம் (irreversible) மாற்றியமைத்து அவர்களை வீடின்றி, நிலமின்றி, அகதிகளாக அலைய விட்ட அரசு, அவர்களது ஏழ்மைக்குக் காரணமான அரசு, மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்து அவர்களுக்கு சோத்துப் பிச்சை போட்டது. தொடர்ந்து வந்த தனியார்மயமாக்கம், மேலும் லட்சக்கணக்கானோரை நிலமற்றவர்களாக்கி, அவர்களை வறுமைக்கோட்டுக்கு கீழே தள்ளியது. அந்த தனியார்கள் இப்போது social responsibility என்று பகல் வேஷம் போட்டுக் கொண்டு, குற்ற உணர்வால் உந்தப்பட்டு சோத்துப் பிச்சை போடுகிறார்களோ என்று யோசிக்க வைக்கிறது.
காலை மிதித்து சாரி சொல்லாமல் செல்பவர்கள் இருக்கிறார்கள். அவர்களை விட காலை மிதித்து சாரி சொல்பவர்கள் உயர்ந்தவர்களே. இவர்கள் இருவரையும் விட உயர்ந்தவர்கள், யார் காலையும் மிதிக்காமல் கவனமாக செல்பவர்கள்ன்னு சொல்லித்தான் தெரிய வேண்டியதில்லைன்னு நினைக்கறேன்.
புதன், ஜனவரி 23, 2008
எப்படி வேண்ணா இருக்கலாம்
ஓஷோவையும் பெரியாரையும் ஒப்பிட்டு சுகுணா திவாகர் ஒரு இடுகை வெளியிட்டிருக்காரு. அதுல மு.சுந்தரமூர்த்தி பின்வரும் கருத்து தெரிவிச்சிருக்காரு:
//இருவரும் பாலுறவு இன்பத்தின் தேவையை வலியுறுத்தும் அதேவேளையில் கருவுறுதலை நிராகரிக்கின்றனர்.//கொஞ்சம் சிரமம் பாக்காம அவரது கருத்தை மொழி பெயர்த்தோம்ன்னா:
It should be quite opposit. Sexual pleasure is an incentive to engage in reproductive activity. All animals, except humans, engage in sexual activities for reproductive purpose and do not care for sexual pleasure at other times. Only humans turned this natural activity upside down--do it for pleasure even when not needed much like other human habits such eating more than we need to. And calls like this to have sex but shun the responsibility of bearing children sounds revolutionary but it is irrational. It tries to take women's liberation too far.
உண்மையில் அதற்கு நேர்மாறாக இருக்க வேண்டும். இனவிருத்தியை ஊக்குவிப்பதற்கே உடலுறவு இன்பமயமானதாக உள்ளது. மனித இனத்தைத் தவிர மற்ற உயிரினங்கள் அனைத்தும் உடலுறவை இனவிருத்திக்காகவே மேற்கொள்கின்றன. அதிலுள்ள இன்பத்தை ஒரு பொருட்டாகவே எண்ணுவதில்லை. ஆனால் மனிதர்கள் மட்டும், (இனவிருத்தி என்கிற) தேவை இல்லாத போதும் இன்பத்திற்காக உடலுறவில் ஈடுபடுகிறார்கள், அவர்களது (தேவைக்கதிகமாக உண்பது போன்ற) மற்ற தேவையற்ற பழக்கங்களைப் போலவே. உடலுறவை ஆதரிக்கும் ஆனால் மகப்பேற்றை எதிர்க்கும் இத்தகைய அறைகூவல்கள் புரட்சிகரமானவையாகத் தோன்றலாம், ஆனால் அவை பகுத்தறிவு அடிப்படையில் எழுபவை அல்ல. இவை பெண் விடுதலையை வரம்புக்கு மீறி எடுத்துச் செல்பவை.இந்தக் கருத்திலுள்ள அனுமானங்கள், போதிக்கப்படும் நெறிகள், ஒரு தனிநபர் முடிவுக்குள் மூக்கை நுழைக்கும் அத்துமீறல்............... இப்படி எதில் ஆரம்பிச்சி சொல்றது? உடலுறவு இன்பமா இருக்கு, சாப்பாடு இன்பமா இருக்கு, இசை இன்பமா இருக்கு, ஒரு மலரின் மணம் இன்பமா இருக்கு......... இவை அனைத்துக்கும் எதாவது காரண காரியம் இருந்துதான் இப்படி இன்பமா இருக்கா? அந்த காரணத்துக்கு கர்த்தா யாரு? 'இயற்கை அன்னை'ன்னு எதாவது கற்பிதமா? இன விருத்தி ஏற்படாம உடலுறவு கொண்டா யாருடைய உணர்வுகள் / நம்பிக்கைகள் புண்படுத்தப்படுது? நான் கூடலைக் கொண்டாடுவதால் உங்கள் தட்டிலிருக்கும் உணவு பறிக்கப்படுதா? மேலே கூறியிருக்கிற (போதும் நிறுத்திக்கோன்னு சொல்ற) கருத்துக்கும் மத அடிப்படைவாதத்திற்கும் என்ன வேறுபாடு? பெண் விடுதலைக்குன்னு எதாவது வரம்பு இருக்கா? யாருடைய விடுதலைக்கும் எதுவும் வரம்பு இருக்கா? அந்த வரம்பை விதிக்கும் யோக்கியவான் யாரு? அவருக்கு என்ன தகுதி?
இதைப்போலவே, நான் வாயடைச்சி போன இன்னொரு கருத்து, காசி 'ப்ளாக் பற்றிய தொலைக்காட்சி நிகழ்ச்சி' என்ற இடுகையில் பின்னூட்டத்தில் தெரிவிச்ச பின்வரும் கருத்து:
ஆங்கில வலைப்பதிவுகளில் புனைவுகள் எழுதுபவர் பத்தில் ஒன்றுகூட இல்லை, ஆனால் தமிழனை கற்பனையிலேயே மூழ்கடிக்க போட்டிபோட்டுக்கொண்டு பத்திரிகைகளோடு இப்போது வலைப்பதிவுகளும் வரிந்துகட்டுகின்றன. இது சரியான அறிகுறியல்ல (இதை இங்கே சொல்வது பலருக்கும் பிடிக்காது என்று தெரிந்தாலும் இதுதான் உண்மை). காத்திரமான வாழ்வியல் சிந்தனைகள், அன்றாட வாழ்க்கைக்குப் பயனுள்ள தகவல்கள் அதிகம் எழுதப்படாததும், எழுதப்படுபவை கவனம் பெறாததும் இதனாலேயே. என்று எழுத்தாளனாகும் ஆசையை விட்டொழிக்கிறாரோ அன்றே ஒரு வலைப்பதிவர் தன் முழு வீச்சையும் வெளிப்படுத்த முடியும். மாறாக பத்தியாளனாக (columnist) ஆசை வையுங்கள் என வேண்டுகோளை முன்வைக்கிறேன்.போதனைகள்........ போதனைகள்................. :) ஆங்கில வலைப்பதிவுகள் ஏதோ உயர்வான இடத்திலிருப்பவை என்பது போன்ற அனுமானங்கள். எது நல்ல 'அறிகுறி', எது அல்ல என்று அறிந்து தெளிந்த தொனி. என்ன மாதிரியான வெளியீடுகள் வெளி வரலாம்கிறத தீர்மானிக்கும் அதிகாரம் அதைப் படைப்பவரைத் தவிர வேறு யாருக்கும் கிடையாது. கோலம், சமையல் குறிப்பிலிருந்து, கடித் துணுக்குகள் வரை எதை வேண்டுமானாலும் ஒருவர் தனது பதிவில் வெளியிடலாம். போணியாகும் சரக்கு எதுவானாலும் அதைக் கடைப்பரப்பலாம். கதை கவிதைகளுக்கு ஒரு பெரிய வாசகர் வட்டம் இருக்கு நான் பார்த்த வரை. (நானும் அந்த வட்டத்துக்குள்ள இருக்கேன்.) அது நல்ல அறிகுறியா இல்லையா என்பது பற்றியெல்லாம் கவலைப்படாம அத்தகைய வெளியீடுகள் மேலும் மேலும் தொடரணும்.
இறுதியா சொல்லிக்க விரும்பறது............ எப்படி வேணா இருங்க.
ஞாயிறு, ஜனவரி 20, 2008
ஜல்லி கட்டு கதை
ஜல்லிக்கட்டுங்கற 'வீர' விளையாட்டு சங்க காலங்களிலிருந்தே நடைபெற்று வருதுன்னு ஒரு குமிழை ஊதி ஊதி பெருசாக்கிக்கிட்டே போகிற இன்றைய நிலையில், அந்தக் குமிழை ஒரு சின்னக் குத்தூசி கொண்டு லேசா குத்தியிருக்காங்க இந்தப் பக்கத்தில்.
ஒரு மிரண்டு ஒடும் வாயில்லா ஜீவனை கூட்டத்தோடு கூட்டமா விரட்டிப் பிடித்துத்தான் நம்ம தொன்மையான தமிழ் மரபைக் கட்டிக்காக்கணும்ங்கிற பரிதாபமான நிலையில் நம்ம தமிழ் மரபும் இல்லைன்னுதான் நினைக்கறேன். புலிகளைக் கொல்வது வீரமா ஒரு காலத்தில் பார்க்கப்பட்டு வந்தது. இப்பொ project tigerன்னு வந்து அவை அரசாலும் சட்டத்தாலும் பாதுக்காக்கப்படற நிலை இன்னைக்கி நிலவுது. அது மட்டுமில்லாம, SPCA, Blue Cross அப்படீன்னெல்லாம் நாகரீகத்தின் அறிகுறிகள் நம்ம இருண்ட பிரதேசங்களிலயும் தலைதூக்க ஆரம்பிச்சிருக்கு. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, நாம எப்படி நடத்தப் படணும்ன்னு எதிர்பார்க்கிறோமோ அதே மாதிரி நம்மைச் சார்ந்து வாழும் ஜீவன்களையும் நடத்துவோம். (மனுஷர் உங்களுக்கு எப்படிச் செய்யவேண்டுமென்று விரும்புகிறீர்களோ, அப்படியே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள். - லூக்கா 6:31)
அடுத்த வருசமாவது இந்த கோரப் பழக்கம் தடை செய்யப்படும்கிற நம்பிக்கையில்........
சனி, ஜனவரி 19, 2008
முற்போக்கு வாங்கல்லையோ, முற்போக்கு
புகுந்த வீடு பொறந்த வீடு வகையறாக்களைப் பற்றி கருத்து கூற விரும்பல்ல. (ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழும் வீட்டில் மற்றவர்களுக்கு வேலையில்லை என்பது எனது கருத்து)
தாலி கட்டுதல் பெண்ணடிமைத்தனம்தான். வேறு மதங்களில் இருவருக்கும் மோதிரம் அணிவிக்கும் பழக்கமுள்ளது. அது ஒரு சமத்துவ நிலையாகப் படுகிறது. இங்கு மனைவிக்கு மட்டும் தாலி என்னும் போது, அது ஒரு பக்க சாய்வு நிலையாகத் தெரிகிறது.
திருமணத்திற்குப் பிறகு வேற்று மனிதர்களுடன் காதல் கொள்ளலாமான்னா, அது கூடாதுன்னுதான் தோணுது. Free love பற்றி எனக்கு அவ்வளவு பரிச்சியம் கிடையாது. 'இருவருக்கும் சம்மதமென்றால் இருவரும் வேற்று மனிதர்களைக் காதலிக்கலாம்' அப்படின்னுல்லாம் சொல்ற அளவுக்கு எனக்கு இன்னும் முதிர்ச்சி ஏற்படல்ல.
fantasyகளை ஒருவருக்கொருவர் தெரியப்படுத்துவதா வேண்டாமா என்று பொதுப்படையாக கூற முடியாது. வாழ்க்கைத் துணையின் மனநிலையைப் பொறுத்து அதை அவரவர்கள் முடிவு செய்வது நல்லது.
*********
இவையெல்லாம் திருமணத்திற்கு தாலி தேவையா? அப்படீன்னு ஒருத்தர் வெளியிட்டிருக்கிற இடுகைக்கு நான் அளித்த பின்னூட்டம். பொது நலன் கருதி அதை இங்க மீள் பதிவு செஞ்சிருக்கேன் :)
வெள்ளி, ஜனவரி 11, 2008
வியாழன், ஜனவரி 03, 2008
போதும் புது வருடம்
அந்தப் பட்டியல்ல தமிழ் தெரியாதவங்க பலரோட மின்னஞ்சல் இருக்கு. அதோட, பலரின் அலுவலக மின்னஞ்சல்கள் வேற அதில இடம் பெற்றிருக்கு. முக்கியமான அலுவலக மடல்களை எதிர்பாத்துக்கிட்டு இருக்கும்போது நம்ம பதிவுலகத்தோட விளையாட்டுத்தனமான வாழ்த்துச் செய்திகள் வந்துக்கிட்டே இருந்துதுன்னா (அதுவும் புரியாத மொழியில), அது ஏற்படுத்தக் கூடிய எரிச்சலை என்னால உணர முடியுது. மேலும் மேலும் நம்ம பதிவுலக நட்புக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தறோம்ன்னாவது நாம உணரணும்.
புது வருடம் போதும். அடுத்த வேலையை கவனிப்போம். அதெல்லாம் முடியாது, நான் வாழ்த்தித்தான் ஆவேங்கறீங்களா? அப்பொன்னா ஆளை வுடுங்க, நான் இந்த விளையாட்டுக்கு வரல்ல.
வெள்ளி, டிசம்பர் 28, 2007
கருவிப்பட்டை ஆலோசனை
அதுல ஒரு சிக்கல் என்னன்னா, <script> எனப்படும் நிரல்கள் அவை தரவிறங்கற வரைக்கும் வேறெதைவும் தரவிறங்க விடாதுங்களாம். இங்க Yahoo!வோட நிபுணர் என்ன சொல்லியிருக்காருன்னு கொஞ்சம் படிச்சிப் பாருங்க. குறிப்பா:
- With scripts, progressive rendering is blocked for all content below the script. Moving scripts as low in the page as possible means there's more content above the script that is rendered sooner. (அதாவது, ஒரு நிரல் தரவிறங்கும்போது, அதுக்குக் கீழே இருக்கற மத்த பகுதிகள் தரவிரங்கறதுக்கு 'தடா' விதிக்கப்படுது. ஆனா, நிரலை பக்கத்துக்கு எவ்வளவு கீழே நகர்த்த முடியுமோ அவ்வளவு கீழே நகர்த்திட்டோம்ன்னா, அதுக்கு மேல் உள்ள பகுதிகளுக்கு விரைவா தரவிறங்கறதுக்கான வாய்ப்பு கிடைக்குது)
- While a script is downloading, however, the browser won’t start any other downloads, even on different hostnames. (அதாவது, ஒரு நிரல் தரவிறங்கிகிட்டு இருக்கும்போது, மற்ற பகுதிகளை தரவிறக்கறதுக்கு முயற்சி கூட செய்யாது நம்ம உலாவி)
- (Matrixஐப் போல்) Part 1, Part2ன்னு இருக்கிற எல்லா தமிழ்மண நிரலோட பாகங்களையும் ஒண்ணா சேருங்க.
- அதை அப்படியே கீழே படத்துல காட்டியிருக்கிற இடத்தில் (பின்னூட்டப் பகுதியில் கடைசியில்) ஒட்டுங்க. (</Blogger> என்பதற்கு முன் உள்ள </ItemPage>க்கு சற்று மேலே.)
இதை செஞ்சா, இடுகைகள் இன்னமும் வேகமா திறக்கும்ன்னு எதிர்பார்க்கலாம். அதோட, வெள்ளம், புயல், கடவுளின் கைங்கர்யம் (acts of God), போன்ற காரணங்களால தமிழ்மண வழங்கி செயல்படாம போனாலும், உங்கள் பதிவு எந்த பாதிப்புமில்லாம திறக்கும். (இப்பொ மட்டும் என்ன பாதிப்புன்னு கேட்டீங்கன்னா அதுக்கு எனக்கு விடை தெரியாது. நான் சொல்றது, அப்படி பாதிப்பு ஏற்படக்கூடிய சாத்தியம் இருந்துதுன்னாலும் அந்த சாத்தியமும் இல்லாமல் நீங்கிடும்ங்கறதுதான்)பிற்ச்சேர்க்கை: இன்றுதான் இப்பதிவை Bloggerஇன் புதிய பதிப்புக்கு (with "Blogger Layouts") மேம்படுத்தினேன். அதற்கான கருவிப்பட்டையைக் கீழ் நகர்த்தும் செய்முறை பின்வருமாறு:
- (கீழே படத்திலிருப்பது போல்) Expand widget templates என்பது தேர்வு செய்திருக்க வேண்டும்
- Comment block இருக்குமிடத்தைக் கண்டு கொள்ள வேண்டும். Templateஇல் <b:include data='post' name='comments'/> என்ற வரிதான் அது.
- இந்த comment blockஇற்கு அடுத்த வரியில் தமிழ்மண கருவிப்பட்டைக்கான மொத்த நிரலையும் சேர்க்க வேண்டும் (கீழே படத்தில் காட்டியுள்ளதைப் போல்).

- நிரலை தமிழ்மணத்தின் இந்தப் பக்கத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம். (ஆனால் அதில் part 1, part 2 என்றிருக்கும் பாகங்களை ஒன்றாக சேர்த்து மேலே காட்டியுள்ளபடி ஒட்ட வேண்டும்.)
சனி, டிசம்பர் 22, 2007
தமிழ்மணத்திற்கு தமிழ்மணம் authorityதான்
அவ்விடுகையின் பின்னூட்ட இழையில் ஒருவர் குறிப்பிட்டது போலவே, பெரிதும் அயர்ச்சியை ஏற்படுத்தியது அவ்விடுகை. பல பிரச்சனைகள் netizenஆக சிந்திப்பதால் வருபவை என்று தோன்றுகிறது. அவ்வாறில்லாமல் வெறும் citizenஆக மட்டுமே யோசித்திருந்தால் பல அடிப்படைத் தெளிவுகள் கிடைத்திருக்கக் கூடும்.
(இந்த நடை போரடிக்குது. இயல்பு நடைக்கு மாறிக்கறேன்)
எழவு, சாப்பிடப் போனாக்கூட உணவு விடுதியின் வாசலில் 'admissions reserved'ன்னு பலகை நம்மளப் பாத்து சிரிக்குது. அதுக்கு அர்த்தம் என்னன்னா, எப்போ வேணா உங்கள கழுத்தப் பிடிச்சி வெளிய தள்ள எங்களுக்கு உரிமை இருக்குன்றதுதான். அதைப் புரிஞ்சிக்கிட்டுதான் உள்ள போறோம். கழுத்துப் பிடிச்சி வெளில தள்ளினாலோ, மாவாட்ட சொன்னாலோ அந்த அனுபவத்தை வாங்கிக்கிட்டுதான்
வர்றோம். சாமானியனுக்கும் புரியற இந்த எளிமையான உண்மை netizenகளுக்கு ஏன் புரியறதில்லையோ தெரியல.
என்னதான் netizenship பேசினாலும், இணையமும் நடைமுறை உலகத்தைப் போன்றதுதான். தெருவில் கிடைக்காத எந்த உரிமையும் இங்க மட்டும் கிடைச்சிடாது. எந்த வலைத்தளத்துக்குள்ள போனாலும் அங்க 'admissions reserved' பலகை தொங்கறதா நினைச்சிக்கிட்டு உள்ள போங்க. ஏன்னா, அப்படி தொங்காட்டாலும், உண்மை அதுதான்.
உங்க வீட்டு gateல "No parking in front of this gate - Hanu Reddy Real Estates" அப்படீன்னு ஒருத்தன் பலகையை மாட்டிட்டு போறான். உங்க real estateல வந்து அவன் இப்படி இலவச விளம்பரம் செய்யறது உங்கள உறுத்திச்சுன்னா அதை நீக்கறதுக்கு உங்களுக்கு எல்லா உரிமையும் உண்டு. "என்னங்க 'சிறு பத்திரிகை' மனப்பான்மையோட செயல்படறீங்க?" அப்படீன்னு அவன் பதிலுக்கு கேட்டான்னா, அதுக்கு சிரிக்கிறதா அழறதான்னு முடிவு பண்ண வேண்டிய 'அவல' நிலைதான் ஏற்படும்.
சரி, இந்தப் பதிவை எழுதறதுக்கு கூட எனக்கு அயர்ச்சியா இருக்கு. Publish பண்ணிட வேண்டியதுதான்.
புதன், நவம்பர் 14, 2007
பிழைப்பு
விஷயம் இதுதானங்க. தமிழ் படிச்சி வேலை கிடைக்காதவங்க டீக்கடை வச்சி பிழைச்சிக்கலாம்ங்கற அருமையான யோசனையை 'ஓசை' செல்லா சத்தமா முன்மொழிஞ்சிருக்காரு. அதையே பலரும் வழி மொழிஞ்சிருக்காங்க. இப்போதைக்கு அது விவாதமே இல்லாதக் களமாத்தான் இருக்கு. (அங்க நான் போட்ட பின்னூட்டம் இன்னும் வெளியாகல)
டீக்கடை வைக்கிறது அவ்வளவு சுலபமானதா, அதை வெற்றிகரமா நடத்துறதுக்கான திறமை எல்லாருக்கும் இருந்துடுமான்னு அவ்வளவு நிச்சயமா தெரியல. ஒரு டீ எவ்வளவு விலை, அதிலிருந்து எவ்வளவு வருமானம் பாக்க முடியும், ஒரு மதிப்பான தொகையை அந்தத் தொழில்லருந்து பாக்கணும்ன்னா எவ்வளவு டீ ஒரு நாளுக்கு வித்தாகணும், வரப்போற போட்டிகளையும், எதிர்ப்புகளையும் சமாளிக்கறதுக்கு ஆகக்கூடிய செலவுகள், தேவைப்படும் சக்தி எவ்வளவுன்னு ஒரு ஆராய்ச்சிக்கான மேட்டரே அதுல அடங்கியிருக்கு. இல்லன்னா எல்லாரும் டீக்கடை வச்சி வாழ்வாதாரப் பிரச்சனைகள்ன்னா என்னன்னு கேக்கற நிலமைக்கு நாம எப்பவோ போயிருப்போம்.
படிப்புங்கறது பலருக்கு வேண்டா வெறுப்பான ஒரு விஷயம். சிலருக்கு அதுவே தங்கள் கனவுகளை அடையக்கூடிய ஒரு வாய்ப்பு. ஒரு துறையை விரும்பி ஒருத்தன் படிக்கறான்னா அந்தத் துறையில் ஜொலிக்கணும்ங்கிறதுக்காகதாங்க. ஒரு தமிழய்யாவைப் பாத்து தானும் அவரைப் போலவே மதிப்பான ஒரு ஆளா இந்த சமூகத்தில் வளைய வரணும்ன்னு நினைக்கிறான். அந்தக் கனவுக் கோட்டைக்கான வாசல் கதவுதான் அவனோட தமிழ் MA பட்டம். அவனை ஒரு 250 ரூபாய்க்கு வக்கில்லாதவனாதான் இந்த சமூகம் வச்சிருக்குங்கறதுதான் அந்தப் படம் சொல்ற செய்தி. "மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமான்" என்ற கருத்தை மாணவர்களுக்கு ஒரு உதாரணத்தோட விளக்கிட்டு ("எல்லாரும் பாத்துக்கிட்டு இருக்கும் போது ஒன்ன ஒரு போலிஸ்காரன் பொடனியில ஒண்ணு போட்டு இழுத்துக்கிட்டு போனான்னா எவ்வளவு அவமானமாப் போகும்?" etc etc) , அடுத்த காட்சியில் அந்த உதாரணத்தையே மாணவர்களுக்கு எதிரில் (காவல்துறையினரால் அவமானப் பட்டு) வாழ்ந்து காமிக்கிற அவல நிலைமையைத்தான் இந்த சமூகம் அவனுக்கு பரிசா தருது. இதைத்தான் படம் விமர்சிக்குதுங்கிறது என்னோட புரிதல். ஒரு டீக்கடை வச்சி எவ்வளவு கப் டீ ஆத்தினாலும் இந்த ரணத்தை அவனால ஆத்த முடியுமா?
மனிதர்களுக்கான அடிப்படையான தேவை எதுன்னா அது மதிப்பு / மரியாதை என்பதுதான் (உண்ண உணவு, உடுத்த உடை, உறங்க உறைவிடம் ஆகியவை தவிர்த்து). காலகாலமா அத்தகைய மதிப்பு அவனது தனித்துவத்திற்காக கிடைத்து வந்தது - அவனது கல்விக்காக, வலிமைக்காக, வீரத்திற்காக, போர்குணத்திற்காக, கலைத் திறனுக்காக, இப்படி பலவித காரணங்களுக்காக. அண்மைக் காலங்களில் (மேற்கத்தியத் தாக்கத்தால்?) ஒருவனுக்கு மதிப்பு / மரியாதை கிடைப்பது அவனிடம் இருக்கும் செல்வத்தைப் பொறுத்தே, என்றாகி விட்டது. ஆகவே, கவரிமான் குணம் என்பது செல்வந்தர்களுக்கு மட்டுமே உரிய ஆடம்பரமாகி விட்டது. மற்றவர்கள், அவர்கள் அனுபவிக்கும் மிதிபாடுகளிலிருந்து எழுந்து தூசியைத் தட்டி விட்டுக் கொண்டு, நடையைக் கட்ட வேண்டிய நிலையில்தான் இருக்கிறார்கள்.
இந்த உண்மையை அழுத்தமாக வெளிப்படுத்தியதற்காக அந்தப் பட இயக்குனர் எவ்வித விளக்கங்களும் அளிக்க வேண்டியதில்லை என்பது எனது கருத்து. வழங்கப்படும் (மேலோட்டமான) விமர்சனங்கள் குறித்த அவரது எதிர்வினையும் நியாயமாகவே படுகிறது. ஆசியாவின் சிறந்தப் படங்களில் ஒன்று என்ற அங்கீகாரத்திற்கு ஒரு வேளை இப்படம் தகுதியில்லாமல் போகலாம். ஆனால் அத்தகைய அங்கீகாரத்தை வழங்கியவர் தமிழில் தரமான படங்களை வழங்கிய வெகு சில இயக்குனர்களில் ஒருவர் என்பதால், அவரது கருத்துக்கு நம்மைப் போன்ற 'சொகுசு நாற்காலி விமர்சகர்களை' விட அதிக மதிப்புண்டு.
சனி, நவம்பர் 03, 2007
சில சுட்டிகள், பின்னூட்டங்கள்........
உங்களது தங்க நாற்கர உதாரணம் குறித்து - நாட்டின் ஒரு பகுதியை மற்றொரு பகுதியோடு துரிதமாக இணைப்பதற்கு அந்தத் திட்டம் உதவலாம். அதனால், நாடெங்கிலுமுள்ள விவசாய மற்றும் இதர உற்பத்தியாளர்களுக்கு புதிய சந்தை வாய்ப்புகள் ஏற்படுவது போன்ற ஆதாயங்கள் கிடைக்கலாம். (அத்திட்டத்தைப் பற்றியும் எனக்கு விமர்சனமுள்ளது. ஆனால் அது குறித்து வேறொரு சமயம் பேசுவோம்)இதைத் தொடர்ந்து, Sondham என்பவர் ஆங்கிலத்தில் ஒரு பின்னூட்டத்தை வழங்கியிருந்தார். அது கீழ்வருமாறு:
ஆனால் சேது திட்டத்தால் சென்னையும் தூத்துக்குடியும் இணையப்போவதில்லை என்று நினைக்கிறேன். கடல்வழிப் பாதையை விட மேலான சாலைவழி / இரயில் வழிப்பாதைகள் இவ்விரு நகரங்களையும் ஏற்கனவே இணைத்துக் கொண்டுதான் உள்ளன. கடல்வழி என்பது உலகின் இதர பகுதிகளுக்குச் சரக்குகளை அனுப்புவதற்கு அல்லது பெறுவதற்குத்தான். அத்தகைய பயணங்கள் வாரக்கணக்கில் அல்லது மாதக்கணக்கில் நீடிப்பவை. அப்பயணத்தில் ஒரு இருபத்தி நான்கு மணி நேரங்கள் குறைவதால், ஒரு சிறு சதவிகித லாபம் அக்கப்பல் முதலாளிகளுக்கு ஏற்பட வாய்ப்புள்ளது என்றே வைத்துக் கொள்வோம். அப்படி ஒரு லாபம் கிடைத்தாலும் அது அவர்களது நலனுக்கே அல்லவா? மேலும், நீங்களே கூறியிருப்பது போல், நம் துறைமுகங்களின் செயல்பாடுகள் காரணமாக பெட்டங்களை ஏற்றி இறக்குவதற்கே எப்படியும் வாரக்கணக்கில் தாமதம் ஏற்படும் நிலையில், ஒரு இருபத்தி நான்கு மணி நேர சேமிப்பினால் யாருக்கென்ன ஆதாயம் பெரிதாகக் கிடைத்து விடப் போகிறது?
இது போன்ற கேள்விகளால், ஒரு சாமானியனுக்கு எவ்வகையிலும் இத்திட்டத்தால் பலனில்லை என்ற முடிவுக்கே வரவேண்டியிருக்கிறது. உங்கள் கருத்துகளை அறிய விரும்புகிறேன்.
அதற்கு வவ்வாலின் விமர்சனமற்ற ஆமோதிப்பு கீழ்வருமாறு:At 12:48 PM, Sondham said…
Around 30 years ago, Dubai was a desert in the Arabian Gulf. Now, due to the government's effort to create infrastructures, it is a hot spot in the world map. It was possible because of many many mega projects, for that the government poured billions of Dirhams. Now many ships passing Dubai and there is no major Airline that did not touch Dubai. Import and export became a major source of income for the government. World major events being hosted in Dubai and the International Cricket Board shifted from England to Dubai and so on. Dubai became the hub between West and the East. Example of finished and ongoing projects in Dubai: (search in internet by name for details):
Dubai dry dock
Dubai Internet City
Dubai Gold City
Dubai Airport
World Class Hotels (Burj al Arab)
Dubai Media City
Dubai Palm Island
Dubai World Trade Centre
Dubai Knowledge village
Dubai Educationalal city
Dubai Property
Dubai Sports City
Dubai International City
Burj Tower
Mega Malls
dubai Marina Area
Dubai Land
Discovery Gardens
The Palm Jumeirah
Palm Diera
Hydropolis
Dubai Water front
The Lagoons
The Business Bay
Aqua Dubai
Dubai Maritime City
Dubai Techno Park
The Lost City
Dubai Aviation City
Silicon Oasis
Jabel Ali New Airport
Ski Doom at Dubailand
formula one world theme park
The world (300 man mand islan)
Exhibition City
Golf City
Dubai Metro (12.45 Billion Dirhams)
Bridges & tunnel over 2 km sea bay
...
many more
As I knew, most of the finished projects are successful ones and the ongoing too attracting the world to invest.
If the government calculate about 'individual citizen's benefit out of these projects' or 'profit and loss by Dirhams and Fils', before executing them - could it be achieved??
What we are talking is not even one percent of the total cost of the above projects where we are second largest populated country in the world.
இப்படி சொர்க்கபுரியாக விவரிக்கப்படும் (மற்றும் நாமும் அதை முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்படும்) துபாய் குறித்து சில தகவல்கள் அண்மையில் வெளிவந்துள்ளன. சில சுட்டிகள் நிலைமையை புரிய வைக்க உதவலாம்:சொந்தம் ,
நன்றி!
அருமையான ஒரு கருத்தை சுருக்கமாக சொல்லி இருக்கிங்க, நான் பக்கம் பக்கமா தமிழில் சொன்ன பிறகும் அது எப்படினு ஆரம்பபுள்ளிக்கே திரும்ப வராங்க மக்கள் இதுல நீங்க ஆங்கிலத்தில சில உதாரணங்கள் காட்டி சொல்வதை எப்படி புரிந்துக்கொள்வார்கள் என்று தெரியல?
சிங்கப்பூர், துபாய் போன்ற நாடுகளின் அதிசயிக்கத்தக்க வளர்ச்சிக்குப் பின்னால், நம் தெற்காசிய நாடுகளிலிருந்து பிழைப்பு தேடிச் சென்ற மலிவுக் கூலி உழைப்பாளிகளின் அவல நிலை மறைந்திருக்கிறது. அவர்களைச் சுரண்டாமல் இந்நாடுகள் இத்தகைய வளர்ச்சியை அடைந்திருக்காது என்றே கூறலாம்.
நாமும் இந்நாடுகளைப் பின்பற்ற வேண்டும், மாபெரும் திட்டங்களை அதிரடியாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும், என்ற அடிப்படையில் செயல்படும் நமது வலதுசாரி அரசுகளும், அவற்றின் கொள்கைகளுக்கு சாமரம் வீசும் பதிவர்களும் விரைவில் உண்மை நிலையை உணருவார்கள் என்று நம்புவோம் :)
