திங்கள், ஜூன் 09, 2008

பணி அடிமைகள்

தொலைக்காட்சியில ஒரு விவாத நிகழ்ச்சி நடந்துக்கிட்டு இருந்தது. Workoholic எனப்படும் 'வேலையே கதி'ன்னு இருப்பவர்கள் தங்களை நியாயப்படுத்திக்கிட்டும், எதிர் தரப்பினர் (பெரும்பாலும் முதல் தரப்பினரின் குடும்பத்தினர்) இவங்கள குறை சொல்லிக்கிட்டும், விவாதம் செஞ்சிக்கிட்டு இருந்தாங்க. அதுல ஒரு கணவன் - மனைவி தம்பதி. கணவன் 'வேலையே கதி' என்று இருப்பவர்கள் தரப்பிலும், அவரது மனைவி எதிர் தரப்பிலும் கலந்துக்கிட்டாங்க. மனைவி கணவனைப் பற்றி முறையீடு செஞ்சிக்கிட்டு இருந்தாங்க, அவங்களுக்கு மணமாகி ஐந்து மாதங்கள்தான் ஆகியிருக்குன்னும், கணவர் வேலையிலிருந்து திரும்பறதுக்கு தினமும் இரவு இரண்டு மணி ஆயிடுதுன்னும் சொன்னாங்க மனைவி. கணவர் தன் பங்குக்கு தன்னுடைய தியாகங்கள் பற்றி பட்டியலிட்டுக்கிட்டு இருந்தார் - மணமாவதுக்கு முன்னாடி வார இறுதிகளில் கூட அலுவலகத்துக்கு வேலை செய்யப் போயிக்கிட்டு இருந்ததாவும், கல்யாணத்துக்குப் பிறகு மனைவிக்காக அதைத் தியாகம் செஞ்சிட்டு வீட்டிலேயே இருக்கிறதாவும் :) தன்னுடையது எப்போதும் சிந்திச்சிக்கிட்டே இருக்க வேண்டிய வேலைன்னும், அதனால வேலைக்கு கால நேரமெல்லாம் பாக்க முடியாதுன்னும் சொன்னார். அதிலிருந்து அவர் மென்பொருள் துறையினரா இருக்கணும்ன்னு ஊகிச்சேன் (அந்த விவரம் சொல்லப்பட்ட போது நான் சரியாக கவனிக்கல்ல, தவறா இருந்தா தெரிவியுங்க). நானும் அந்தத் துறையைச் சேர்ந்தவன்ங்கிற முறையில் அவரோட தகவல்களை ஒத்துக்கறேன். சில சமயம் சிக்கல்கள் விடுபடுவதற்கு நினைத்ததை விட அதிக நேரமாகி விடலாம். அந்த சமயங்களில் கொஞ்சம் கூடுதல் நேரம் செலவழிச்சி அவற்றின் தீர்வுகளை அடைய வேண்டிய கட்டாயங்கள் ஏற்படலாம். ஆகவே, அவர் சொன்னதில் பெரிய பிரச்சனையில்லை, மனைவிக்காக சனிக்கிழமைகளைத் 'தியாகம்' செய்கிறேன்னு கூறியதை தவிர்த்து.

ஆனா அதுக்கப்பறம் நடுவர் அவரைப் பார்த்து ஒரு கேள்வியைக் கேட்டார் - நீங்க எதுக்கு முன்னுரிமை குடுப்பீங்க மனைவிக்கா, வேலைக்கான்னு. நண்பர் ஒரு அரை நிமிடம்தான் யோசித்தார் (அல்லது அவ்வளவு நேரம் கூட எடுத்துக் கொள்ளவில்லை). வேலைக்குத்தான் முன்னுரிமைன்னு பதில் சொன்னார். ஒரு பெரிய பாறாங்கல் எதாவது இருந்தா அதை அந்தாள் தலையில் தூக்கிப் போடணும் போல இருந்தது, தொலைக்காட்சியில் இதைப் பார்த்துக்கிட்டு இருந்த எனக்கே. நேரில் கேட்டுக்கிட்டிருந்த அவரோட மனைவிக்கு எப்படி இருந்திருக்கும்ன்னு விவரிக்கத் தேவையில்லை. அதெப்பபடி இப்படி ஒரு பதிலை முகத்தில் அறைஞ்ச மாதிரி சொல்ல முடியுது? கூடவே இருக்கப்போற மனைவியின் உணர்வுகளைப் பற்றிக்கூட சிந்திக்கத் தெரியாத / விரும்பாத ஒருத்தன், வேற சிந்தனைகள் செஞ்சி வேலை செய்யறதுனால யாருக்கு என்ன லாபம்? இதே மனநிலையைத்தானே தன்னுடைய சகப் பணியாளர்கள், தன் கீழ் பணி செய்பவர்கள் ஆகியோரிடமும் வெளிப்படுத்துவான்? (விட்டால் மேலதிகாரி / வாடிக்கையாளர்களிடமும்). என்னதான் கம்பியூட்டரோட சிந்திச்சி கொலாவினாலும், இறுதியில் உங்கள் வெளியீடுகளெல்லாம் உணர்வுகளைக் கொண்ட மனிதர்களின் பயன்பாட்டுக்காகத்தானே? உணர்வுகளைப் பற்றிய புரிதல் / மரியாதை இல்லாம தன்னை workoholicன்னு சொல்லிக்கறவங்க, தங்கள் பதவிக்கே தகுதியற்றவங்கன்னு சொல்லத் தோணுது.

மேலும் பல அம்சங்களை கவனிச்சேன். இந்த workoholics என்பவர்களுக்கு தங்களைப் பற்றிய அதீத மதிப்பீடுகள் இருப்பதையும் கவனிக்க முடிந்தது. இந்த நாடே தங்களால்தான் முன்னேறுதுன்னு கூசாம சில பேர் சொன்னாங்க :) தங்களைப் போலில்லாதவங்கல்லாம் சோம்பேறிகள் என்ற எண்ணமும் அவர்களிடமிருப்பதைக் காண முடிந்தது. எதிர் தரப்பில் பேசிய ஒரு தொழிலதிபர் ஒரு அருமையான கருத்தை சொன்னார். வருங்காலம் என்பது கணிக்க முடியாத ஒன்று (future is a mystery), எனவே வருங்காலத்தில் கிடைக்கப்போகிற பலன்களுக்காக இன்றைய வாழ்க்கையைச் சிதைத்துக் கொள்வது மூடத்தனம்ன்னு. உடனே அதற்கு எதிர்வினையாக ஒரே கொந்தளிப்பு, 'வேலைப் பிரியர்கள்' என்று சொல்லிக் கொள்பவர்களிடமிருந்து. நாங்கல்லாம் ரொம்ப productive, நாங்க இப்படி இருக்கிறதுனாலதான் நீங்கல்லாம் வாழ்க்கையை நல்லா அனுபவிக்க முடியுதுன்னு. எனக்கு ஒரு சந்தேகம் - productiveஆ இருக்கிறவங்களுக்கு ஏன் தங்கள் வேலையைச் செய்ய அதிக நேரம் தேவைப்படுது? எனக்குத் தெரிந்த வரை, குறைந்த நேரத்தில் அதிக வேலைகளைச் செய்து முடிப்பதுதான் productivity. அதிக நேரத்தில் அதே வேலையையோ, அதற்கும் குறைவாகவோ செய்து முடிப்பதை inefficiency / செயல்திறன் குறைவுன்னுதான் சொல்ல முடியும்.

வேலைப்பரியராக ஒருவர் இருப்பதற்கு என்ன காரணம் இருக்க முடியும்ன்னு யோசிக்கணும். ஒரு மோசமான வேலைச் சூழலிலிருந்து ஒரு சுமாரான அல்லது நல்ல வேலைச் சூழலுக்கு மாறும்போது ஆகான்னு விசுவாசம் பொத்துக்கிட்டு வரும் :) அந்த விசுவாசத்தில் அதிக உழைப்பை வழங்குவோமா, மேலதிகாரியை குஷிப்படுத்துவோமான்னு கிடந்து அலைபாயும் மனசு. இது ஒரு காரணமா இருக்கலாம். மேலும் இதையே சாதகமாப் பயன்படுத்தி, தட்டிக் குடுத்து வேலை (தன்னோட வேலையையும் சேர்த்து) வாங்கற மேலதிகாரிகளும் காரணமா இருக்கலாம். Dangling carrots / ஆசைக் காட்டி மோசம் செய்யறதுன்னுல்லாம் இதுக்குப் பேர் உண்டு. அல்லது வேலைச் சூழலே ஒருவருக்கு வீட்டுச் சூழலை விட இதமானதாக இருக்கலாம். நேரத்துக்கு வீட்டுக்கு வந்தா அது என்னாச்சு, இது என்னாச்சுன்னு கேள்விகள் வரும். குழந்தைகள், வீட்டு வேலைகள்ன்னு பொறுப்புகள் அதிகமாகும். அலுவலகத்திலேயே இருந்துட்டா இதையெல்லாம் தட்டிக் கழிச்சிடலாம் :)

இது போன்ற போக்கை நிறுவனங்களும் ஆத,ரிப்பதால், ஒரு போட்டி மிகுந்த சூழல் ஏற்படுது, எல்லாரும் அதிக நேரம் வேலை செய்யறாங்க, அதனால நானும் அதிக நேரம் வேலை செஞ்சாகணும்ன்னு. நாளடைவில் பணியாளர்கள் மீதான நிறுவனங்களின் எதிர்பார்ப்புகளும் அதிகமாயிடுது, குடுக்கற ஊதியத்தில் அதிக அதிகரிப்பு இல்லாமலேயே. இப்படி தன்னைச் சுரண்டும் திட்டத்திற்கு தானே துணை போவதில்தான் போய் முடியுது. அது அவங்களை மட்டும் பாதிச்சுதுன்னா கூட வருத்தப்பட்டுட்டு அடுத்ததப் பாக்கப் போயிடலாம். ஆனா அவங்களை மட்டுமில்லாம அவங்க குடும்பங்களையும் பாதிக்கும்போதுதான் இது பற்றி தீவிரமா சிந்திக்கத் தோணுது, இதுக்கு என்ன தீர்வுன்னு. அரசின் தலையீடு பல விஷயங்களில் தேவைப் படுவதைத்தான் இந்த உதாரணங்களெல்லாம் நமக்கு உணர்த்துது.

3 கருத்துகள்:

பினாத்தல் சுரேஷ் சொன்னது…

வாய்ஸ்,

நல்ல அலசல், தேவையான விவாதம்.

இந்த வேலை வெறியர்களாலதான் நாடு ஓடுதுன்ற நெனைப்பு ரொம்ப கடுப்பை எனக்குமே கொடுக்கும். என்னவோ வீடு பத்தியும் மத்த விஷயங்களைப்பத்தியும் பேசறது தேசத்துரோகம் போல பில்ட் அப் கொடுக்கறது எல்லாம் டூ மச்!

வேலையைக் காதலிக்கறவன் வேலை வெறியனா, ரொம்ப நேரம் அலுவலகத்துல உக்காந்திருக்கவனான்றதும் இன்னொரு முக்கியமான கேள்வி. அஞ்சு மணிக்கு வீட்டுக்கு வந்துட்டாலும், நாளை என்ன செய்யணும் ஆபீஸ்லே என்ற சிந்தனையே இரவு முழுக்க ஓடும் சில நாட்களும், மாணவனின் சந்தேகத்துக்கு நடுவே அந்த ப்ளாஷ்லே என்ன கோட் கொடுக்கணும்ன்ற சிந்தனை ஓடற சில நாட்களும், ஆபீஸ் பவர் பாயீந்த் நடுவுல நியூ ஓப்பன் பண்ணி குழந்தைக்கும் சில கட் & பேஸ்டு வேலை செய்யும் சில நாட்களும் கொண்ட என்னை எப்படி வகைப்படுத்துவீங்க:-)

கிரி சொன்னது…

//இந்த நாடே தங்களால்தான் முன்னேறுதுன்னு கூசாம சில பேர் சொன்னாங்க :) //

அவங்க தான் சொல்லிக்கணும்

//ஆகான்னு விசுவாசம் பொத்துக்கிட்டு வரும் :) //

திடீர்னு வராதுன்னு நினைக்கிறேன். அவர்கள் குணமே அப்படி தான் இருக்க வேண்டும். சுறுசுறுப்பான ஆள் சோம்பேறி ஆக வாய்ப்புண்டு, சோம்பேறி எந்த காலத்திலும் சுறுசுறுப்பாக முடியாது என்பது என் கருத்து.

//நேரத்துக்கு வீட்டுக்கு வந்தா அது என்னாச்சு, இது என்னாச்சுன்னு கேள்விகள் வரும். குழந்தைகள், வீட்டு வேலைகள்ன்னு பொறுப்புகள் அதிகமாகும். அலுவலகத்திலேயே இருந்துட்டா இதையெல்லாம் தட்டிக் கழிச்சிடலாம் :) //

சரியா சொன்னீங்க

Voice on Wings சொன்னது…

சுரேஷ்,

தன்னையே சரியாகப் புரிந்து கொள்ளாததால் ஏற்படற தன்னம்பிக்கையின்மை போன்றவற்றை புத்திசாலித்தனமா மறைக்கவும் இது போன்ற (வேலையின் மீது காதல் என்ற) வெளி வேஷம் பலருக்கு தேவைப்படுது. இரவு பகலா உழைக்கறேன், வார இறுதிகளிலெல்லாம் உழைக்கறேன்ன்னு சொல்லிக்கலாம். அதனால ஏற்படற பலன்களைப் பற்றியும் மிகையான தோற்றத்தை ஏற்படுத்தி விடலாம், யாரும் அதை ஆராயப் போவதில்லை.

நீங்க குடுத்த தகவல்களை வைத்து உங்களை எப்படி வகைப்படுத்துவதுன்னு தெரியல, அப்படி வகைப்படுத்துதல் அவசியமான்னும் தெரியல :) எனக்குத் தெரிந்த தகவல்களின் அடிப்படையில் உங்கள 'மூத்த பதிவர்ன்னு' வகைப் படுத்திடறேன் :)

***********

கிரி,

சுறுசுறுப்புத்தனம், சோம்பேறித்தனம் ஆகியவையெல்லாம் ஒருவரது எதிர்வினைகள்தான், அவருக்குத் தரப்படும் வசதிகள், ஊக்கம், தரப்பட்ட பொறுப்புகளில் அவருக்குள்ள ஆர்வம் (aptitude) ஆகியவற்றைப் பொறுத்து. ஒருவரை சுறுசுறுப்பாளி அல்லது சோம்பேறி என்று முத்திரை குத்த முடியாதுன்னு நினைக்கறேன். சூழலைப் பொறுத்து அவரது குணம் மாறும்.

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.