- உலகெங்கிலும் மின்சக்தி / எரிபொருள்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரிச்சிக்கிட்டே போகுது. இந்தியாவும் இதுக்கு விதிவிலக்கு கிடையாது. ஒரு பில்லியனுக்கு அதிகமான ஜனத்தொகை, அதுவும் பெருகிக்கிட்டே போகும் நிலையில் அனைவருக்கும் மின்வசதி செய்து கொடுப்பது சுலபமானது கிடையாது.
- எண்ணை / நிலக்கரி வளங்கள் குறைஞ்சிக்கிட்டு வருது, ஒரு நாள் இவை மொத்தமா தீர்ந்து போய்விடக்கூடிய நிலையும் ஏற்படலாம். அவற்றின் விலையேற்றம், மற்றும் இந்த எரிபொருட்களால் உலகளாவிய சூடேற்றம் / வானிலை மாற்றங்கள் போன்ற பின்விளைவுகளும் ஏற்படுது. அவற்றுக்கு மாற்று எரிபொருட்கள்ன்னா சூரிய ஒளி, காற்று, அலைகள் போன்ற புதுப்பிக்கக்கூடிய வளங்கள் இருக்கு. ஆனாலும் அவையால் எண்ணை / நிலக்கரி போன்ற பரவலை அடைய முடியாது. ஆங்காங்கே முடிந்த அளவு தேவைகளை நிறைவேற்றலாம். முற்றும் முழுவதுமா அவற்றை நம்பி இருக்க முடியாது. ஆக, இந்த எண்ணை / நிலக்கரிக்கு ஒரு நம்பகமான மாற்றுன்னா அது அணுசக்தியாதான் இருக்க முடியும்.
- அணுசக்திங்கும் போது, அது அணு ஆயுதத் தயாரிப்புக்கும் திசை திருப்பப்படும் அபாயம் இருக்கிறது. இதைக் காரணமா வச்சிக்கிட்டு ஏராளமான அரசியல் முன்னெடுப்புகள் நடந்துக்கிட்டு இருக்கு, போர்கள் உட்பட.
- அணுசக்தியிலிருந்து மின்சாரம் தயாரிக்கிறது முற்றிலும் பாதுகாப்பானதான்னு கேட்டா "நிச்சயமா" அப்படீன்னு அடிச்சு சொல்றதுக்கு தயாரா இருக்காங்க அணுசக்தித் துறையைச் சார்ந்தவங்க. அவங்க சொல்வதன்படி, அணுமின் நிலையங்களிலிருந்து உருவாகும் கதிரியக்கக் கழிவுகளை அதல பாதாளத்தில் ஆயிரங்காலத்துக்கு புதைத்து வைக்கணும், எந்தக் குறுக்கீடும் இல்லாம. அப்படி பாதுகாத்தா அவை கதிரியக்கத்தன்மையை முற்றிலும் இழந்துவிடும், அவற்றால் ஏற்படக்கூடிய அபாயங்களும் அகன்று விடும். கேக்கறதுக்கு நல்லாத்தான் இருக்கு. இன்னும் பத்து வருஷத்துக்குள்ள என்னல்லாம் நடக்கும்ன்னே சொல்ல முடிய மாட்டேங்குது. ஆயிரமாண்டுகளுக்கு நாம புதைத்து வைக்கிற கழிவுகள் ஒரு பாதிப்புமில்லாம அப்படியே பத்திரமா இருக்கும்ன்னு எந்த அடிப்படையில் உறுதி செய்து கொள்வது?
- அணு ஆயுதங்கள் தேவையா? தேவையில்லைன்னுதான் தோணுது, பின்ன ஏன் இந்த நிலைமை? இப்படியெல்லாம் எடக்கு மடக்கா கேக்ககூடாதுங்கறீங்களா? அப்போ இதுக்கு விடைதான் என்ன? இதுவா? அப்படின்னா நம்மால் உடன்படக்கூடிய தீர்வுதானா இது?
- அணுசக்தி நமக்கு நிச்சயம் தேவை என்பதில் உறுதியா இருக்கோமா, அதோட அணு ஆயுதம் நமக்குத் தேவையில்லை என்பதிலும் உறுதியா இருக்கோமா? அப்படீன்னா இந்தோ - அமெரிக்க அணு ஒப்பந்தம் ஒரு சரியான முடிவுதான். இருந்தாலும், இந்த ஒப்பந்தம் இல்லாமலேயே நம்மால் அணுசக்தித் தன்னிறைவை அடைந்திருக்க முடியுமா என்ற கேள்வியும் வருது. அது முடியுமானால் நமக்கு ஒவ்வாத இந்த 123 ஒப்பந்தத்தையே கையெழுத்திட்டிருக்க வேண்டாமே?
- கிட்டத்தட்ட நாற்பது வருடங்களா மேற்கூறிய அணு ஆயுதத் தடை ஒப்பந்தத்தை ஏற்காம இருந்திருக்கோம், அது ஒருதலைபட்சமா இருக்கு என்ற அடிப்படையில். இப்போ திடீர்ன்னு ஏன் நம் கொள்கையில் மாற்றம்? இந்த மாற்றத்துக்கான கட்டாயம் எப்படி ஏற்பட்டது? சரி இந்தக் கொள்கை மாற்றம் தேவையானதுன்னு வச்சிக்கிட்டாலும், அதை வெளிப்படையா அறிவிக்கலாமே? அறிவித்து, நேரடியாக இந்த NPT தடை ஒப்பந்தத்திலேயே கையெழுத்திடலாமே? ஏன் 123 என்ற மறைமுகமான பின் வாசல் அணுகுமுறை? முட்டாள்களை அடிமுட்டாள்கள் ஆக்கும் முயற்சியா இது?
நம்மோட மின்சக்தி உற்பத்தித் திறனை மிக அதிக அளவுக்கு அதிகரிக்கணும்ங்கிறதுல எந்த வித சந்தேகமும் இருக்க முடியாது. நம்மோட கிராமங்களுக்கெல்லாம் தடையற்ற மின்சக்தி கிடைக்கணும், அவையும் உலகப் பொருளாதாரச் சந்தையில் போட்டி போடும் அளவுக்கு அவற்றை முன்னேற்றணும். அதுக்கு அத்தியாவசியமானது போதிய அளவு கிடைக்கக்கூடிய மின்சாரம் என்பதில் சந்தேகமே கிடையாது. மேலும், எண்ணை நிலக்கரி வளம் குறைஞ்சிக்கிட்டும் அவற்றோட விலை உயர்ந்துக்கிட்டும் இருக்கும் நிலையில், மற்ற புதுப்பிக்கக்கூடிய வளங்களைய்ல்லாம் எவ்வளவு தூரம் பயன்படுத்த முடியும்ன்னு உறுதியா தெரியல. ஆகவே, அவற்றுக்கு சரியான மாற்றாக அணுசக்தி ஒன்றுதான் இருக்க முடியுமென்பதிலும் சந்தேகமில்லை. ஏறகனவே உலகின் மொத்த மின்சார உற்பத்தியில் ஆறில் ஒரு பங்கு அணுசக்தியிலிருந்துதான் வருது. இந்தியாவில் இந்த விழுக்காடு 3%தான். இதை 2050ஆம் ஆண்டுக்குள்ள 25%ஆ அதிகரிக்கணும்ங்கிற இலக்கு பற்றி பேசப்படுது. அதுக்குத் தடையா இருக்கக்கூடிய ஒரே காரணம், நம்மிடம் போதிய அளவுக்கு யுரேனியம் என்ற தாதுப் பொருள் இல்லாததுதான்.
அணுமின் உற்பத்தியில் ஒரு விரும்பத்தகாத அம்சமும் இருக்கு. அதுதான் கதிரியக்கக் கழிவுகள். அவற்றை அதல பாதாளத்தில் தனிமைப்படுத்தி ஆயிரம் ஆண்டுகளுக்கும் பாதுகாப்பா விட்டு வைத்தால்தான் அவை கதிரியக்கத்தன்மையை இழக்கும். இந்தக் கழிவுகள் எரிபொருட்களின் மிச்சம் மீதி மட்டுமில்லாம, அத்தகைய பொருட்களோட தொடர்பு ஏற்பட்ட சாதாரண மற்ற பொருள்களும் ஆகும். அதாவது ஒரு கையுறை அல்லது ஒரு வேற உபகரணங்கள் கொண்டு கதிரியக்கப் பொருட்களைக் கையாளும் பட்சத்தில் அந்த உபகரணங்களும் கதிரியக்கத்தன்மை அடையுது. ஆகவே, அவற்றையும் சேர்த்து ஆயிரங்காலத்துக்கு பாதுகாக்க வேண்டியதுதான். இல்லைன்னா அவற்றால் உலகத்து உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்புள்ளது. அமெரிக்க நெவாடா மாநிலத்தில் ஏற்படுத்தப்படவுள்ள இத்தகைய நிலவறை மற்றும் அதற்கு எழுந்துள்ள எதிர்ப்புகள் பற்றி இந்தப் பக்கத்தில் காணலாம். Seismic activity எனப்படும் நிலநடுக்கங்கள் எங்கெங்கே ஏற்படும், அதிலிருந்து முற்றிலும் பாதுகாப்பா இந்தப் பொருட்களை வைத்துக் கொள்ள முடியுமா என்பது போன்ற சந்தேகங்களெல்லாம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை. அதோட, செர்னோபில் போன்ற ஆபத்துகளையும் மறக்க முடியுமா?
இப்போது, அணு ஆயுதங்கள் பற்றிய சர்ச்சை குறித்து: அணு ஆயுதங்கள் தயரிக்கப்பட்டது வருத்தமானதே. ஒரு முறை பயன்படுத்தப்பட்டதுவும் அதை விட வருத்தமானதே. அவை இன்றைக்கும் கணிசமான அளவில் கிடங்குகளில் காத்திருப்பது மிக மிக வருத்தமானதே. அப்படியானால் நாற்பது வருடங்களாக செயல்பட்டு வந்த அணுஆயுதத் தடை ஒப்பந்தங்கள் (NPT, CTBT போன்றவை) சாதித்ததுதான் என்ன? இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடுகளின் வசம் 15000 அணு ஆயுதங்கள் உள்ளனவாம். (இந்தியா உட்பட) கையெழுத்திடாத நாடுகள் வசம் சில நூறு அணு ஆயுதங்கள் உள்ளனவாம். இதில் யாரால் அதிக ஆபத்து? இப்போ இந்த NPT ஒப்பந்தத்தைப் பற்றி: உலக நாடுகளை அணுஆயுதத் திறன் கொண்ட நாடுகள் அப்படீன்னும் அணு ஆயுதமற்ற நாடுகள் அப்படீன்னும் பிரிக்குது இந்த ஒப்பந்தம். ஆணு ஆயுதமுள்ள நாடுகள்ன்னு அமெரிக்கா, ருஷ்யா, இங்கிலாந்து, ஃபிரான்ஸ், மற்றும் சீனா ஆகிய நாடுகள் அடையாளப்படுத்தப்பட்டிருக்கு. மற்ற எல்லா நாடுகளும் இந்த ஒப்பந்தத்தின்படி அணு ஆயுதமற்ற நாடுகள்தான். இதில் ஆயுதமுள்ள நாடுகள் என்ன ஒப்புதல்களை அளிச்சிருக்குன்னா, தங்களுடைய அணு ஆயுதங்களையும் தொழில்நுட்ப ரகசியங்களையும் பிற நாடுகளுக்கு வழங்க மாட்டோம்ன்னுதான். தங்களுடைய அணு ஆயுதங்களைப் பயன்படுத்த மாட்டோம்ங்கிற உத்தரவாதத்தை இந்த நாடுகள் வழங்கவில்லை என்பதை கவனிக்கணும். இந்த நாடுகள் மற்ற நாடுகளின் மீது போடும் நிபந்தனையென்னன்னு பாத்தா, "இப்போது இருக்கும் அணு ஆயுதமற்ற நிலையிலயே அப்படியே தொடர்வோம்" என்ற வாக்குறுதியைத்தான் இந்த நாடுகள் மற்ற நாடுகளிடமிருந்து எதிர்பார்கின்றன. ஆதாவது, "அணு ஆயுத சோதனைகள், இன்ன பிற முயற்சிகளைச் செய்ய மாட்டோம்" அப்படீன்னு உத்தரவாதம் குடுக்கணுமாம் நாமல்லாம். ஆனா இந்த நாடுகளோ, ஒரு தீவிரவாதத் தாக்குதல் நடந்தாலும் "எங்களுடைய அணு ஆயுதங்களைப் பயன்படுத்தும் வாய்ப்புள்ளது"ன்னு அறிக்கை விடறாங்க. அதாவது, தடை அவங்களுக்கு கிடையாது, நமக்குத்தான்.
இந்த ஒருதலைபட்சமான தடை ஒப்பந்தத்தை சரியான காரணத்திற்காகவே நாம நாற்பது வருடங்களா எதிர்த்து வந்திருக்கோம். அதனால் நமக்கு ஏற்பட்ட தீண்டத் தகாத நிலையையும் பொறுத்துக்கிட்டே, அதில் உறுதியா இருந்தோம். எவ்வளவோ ஆட்சி மாற்றங்கள் நிகழ்ந்த போதும் அந்த நிலைப்பாட்டில் நாம மாறவில்லை. இப்போது திடீர் மாற்றத்துக்கான காரணமென்ன? இந்த 123 ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது, அணு ஆயுத சோதனைத் தடையை ஏற்றுக் கொண்டது போலத்தான். அதாவது, கிட்டதட்ட NPTயில் கையெழுத்திட்டது போலத்தான். அதை இன்று செய்ய வேண்டிய நிர்பந்தம் என்னன்னுதான் புரியவில்லை. அப்படியொரு நிர்பந்தம் இருந்தது உண்மைன்னா அதை மக்களிடம் சரியாக் கொண்டு போயிருக்கலாமே? வெளிப்படையாவே இன்னின்ன காரணங்களால் நமது அணு ஆயுதக் கொள்கையில் மாற்றமேற்பட்டிருக்குன்னு அறிவிச்சிருக்கலாமே? அப்படியில்லாம, கொள்கையில் எந்த மாற்றமுமில்லைன்னு பொய் சொல்லிகிட்டு திரியறது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போலத்தான்.
இந்த இறக்குமதி யுரேனியம் இல்லாத நிலையில், நம்மிடம் அபரிமிதமாக உள்ள தோரியம் என்ற மற்றொரு அணுசக்தி எரிபொருள் குறித்தும் சோதனைகள் நடந்துக்கிட்டு இருந்தது, இன்னமும் நடந்துக்கிட்டு இருக்கு. (உலகின் 25% தோரியம் வளம் நம்மிடம்தான் உள்ளது) இது மட்டும் வெற்றியடைஞ்சதுன்னா நம்முடைய எரிபொருள் கொண்டே தேவைப்படும் அணுமின்சாரத்தை தயரிக்கும் வாய்ப்புள்ளது. ஆனா, இந்த 123 ஒப்பந்தத்தினால் யுரேனியம் எளிதில் கிடைக்கக்கூடிய நிலையில், இத்தகைய சோதனை முயற்சிகள் பின்னுக்குத் தள்ளப்படும் அபாயமுள்ளது. நமது வெளியுறவுக் கொள்கையை சமரசம் செய்யாமலேயே, அணு மின்சாரத் தன்னிறைவு அடைவதற்கான ஒரு வாய்ப்பு தவறவிடப்பட்டுள்ளதுன்னுதான் சொல்ல முடியும். ஆட்சி கவிழ்ந்த பிறகாவது இது பற்றியெல்லாம் யோசிப்பாங்களான்னு பாக்கணும்.
(This post in English can be found here)
8 கருத்துகள்:
நல்ல அலசல்.எந்த ஒரு பிரச்சினையிலும் சாதக பாதகங்கள் இருக்கவே செய்கின்றன.ஒன்று இந்த ஒப்பந்தம் குறித்து முன்பே பாராளுமன்ற நிலையில் ஆய்ந்திருக்க வேண்டும்.அப்படி ஆய்ந்து பின் கையெழுத்து நிலைக்குப் போனபின் கால்சறுக்குதல் தவறு என்பது எனது பார்வை.
அரசியல் காரணங்கள் தவிர்த்து இது பாதகமானது என்னும் பட்சத்தில் இதனை கம்யூனிஸ்ட்டுகள் மக்களுக்கு எடுத்துச் செல்வதும் அல்லது பிரதமர் மன்மோகன்சிங் கூறுவது போல் இது நாட்டுக்கு நன்மை பயக்கும் என்பதனையும் விளக்கிக் கூறுவதும் அத்தியாசவசியமானது.
ஆயிரம் வருடம் எரிக்கழிவுகளை பாதுகாத்தல் என்பது நமது இந்திய சூழ்நிலையில் சாத்தியமானதா என்பதும் யோசிக்கப் பட வேண்டிய விசயம்.40 வருட எதிர்ப்புக் கொள்கையில் நாம் இழந்த அனுகூலங்களே அதிகம்.
எப்படியோ ஒப்பந்தத்தின் சாவி அமெரிக்காவின் கையிலேயே உள்ளது.இந்த சாவியைத் திறக்கும் காவல்காரனாக மட்டுமே ஏனைய நாடுகள் உள்ளதால் ஒப்பந்த கையெழுத்திட்டு குடிபோவதும் குடிசையின் இருட்டே எனக்குப் போதும் என்பதும் இந்தியாவின் கையிலேயே உள்ளது.
கேள்வி :
//இந்த 123 ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது, அணு ஆயுத சோதனைத் தடையை ஏற்றுக் கொண்டது போலத்தான். அதாவது, கிட்டதட்ட NPTயில் கையெழுத்திட்டது போலத்தான். அதை இன்று செய்ய வேண்டிய நிர்பந்தம் என்னன்னுதான் புரியவில்லை.//
பதில் :
//# உலகெங்கிலும் மின்சக்தி / எரிபொருள்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரிச்சிக்கிட்டே போகுது. இந்தியாவும் இதுக்கு விதிவிலக்கு கிடையாது. ஒரு பில்லியனுக்கு அதிகமான ஜனத்தொகை, அதுவும் பெருகிக்கிட்டே போகும் நிலையில் அனைவருக்கும் மின்வசதி செய்து கொடுப்பது சுலபமானது கிடையாது.
# எண்ணை / நிலக்கரி வளங்கள் குறைஞ்சிக்கிட்டு வருது, ஒரு நாள் இவை மொத்தமா தீர்ந்து போய்விடக்கூடிய நிலையும் ஏற்படலாம். அவற்றின் விலையேற்றம், மற்றும் இந்த எரிபொருட்களால் உலகளாவிய சூடேற்றம் / வானிலை மாற்றங்கள் போன்ற பின்விளைவுகளும் ஏற்படுது. அவற்றுக்கு மாற்று எரிபொருட்கள்ன்னா சூரிய ஒளி, காற்று, அலைகள் போன்ற புதுப்பிக்கக்கூடிய வளங்கள் இருக்கு. ஆனாலும் அவையால் எண்ணை / நிலக்கரி போன்ற பரவலை அடைய முடியாது. ஆங்காங்கே முடிந்த அளவு தேவைகளை நிறைவேற்றலாம். முற்றும் முழுவதுமா அவற்றை நம்பி இருக்க முடியாது. ஆக, இந்த எண்ணை / நிலக்கரிக்கு ஒரு நம்பகமான மாற்றுன்னா அது அணுசக்தியாதான் இருக்க முடியும்.//
40 ஆண்டுகளாக எதிர்த்ததை பற்றி சொல்கிறீர்கள். ஆனால் அன்ரு இருந்த மக்கள் தொகையும் எரிபொருள் தேவையும் இன்று உள்ளது போல் இல்லை. இப்போ தானே தேவை அதிகரித்துவிட்டது. இன்னும் பழங்கதையே பேசிக் கொண்டிருக்க வேண்டுமா?
மிக விரிவான படிப்பினையூட்டுக் கட்டுரை. நிறைய விசயங்கள் தெரிந்து கொள்ள முடிகிறது.
1000 காலத்து அணுக் கழிவு சேமிப்பும்/கதிரியக்க செயல்பாடுமென்பதெல்லாம் வெறும் தியரி நிலையிலேயே தங்கிப் போக நிறைய வாய்ப்புகள் உள்ளன போலவே.
கட்டுரைக்கு நன்றி, வாய்ஸ்!
ராஜ நடராஜன்,
நீங்கள் கூறுவது போல் 40 வருட எதிர்ப்புக் கொள்கையில் நாம் இழந்ததே அதிகமாக இருக்கலாம். ஆனால் அதை அரசு ஒப்புக் கொள்கிறதா? அல்லது இந்த நாற்பதாண்டுகளாகக் கடைபிடித்து வந்த கொள்கையிலிருந்து மாறுகிறோம் என்ற வரையிலாவது ஒப்புக் கொள்கிறதா? கொள்கையில் மாற்றமே இல்லையென்றுதானே (அயோக்கியத்தனமாக) சாதித்துக் கொண்டிருக்கிறது? பதவிக்கு வந்தால் NPTயில் கையெழுத்திடுவோம் என்று கூறிக் கொண்டு தேர்தலைச் சந்திக்கட்டுமே நாணயமான அரசாக இருந்தால்? அதனால் இந்தியா அணு ஆயுத சாத்தியங்களை மொத்தமாக இழக்கும் என்பதையும் வெளிப்படையாக அறிவிக்கட்டுமே?
*****************
sanjai,
நான் கூறியவற்றையே மேற்கோள் காட்டி விட்டீர்கள், மிக்க மகிழ்ச்சி. 40 ஆண்டுகளாகக் கடைப்பிடித்து வந்த கொள்கையில் தவறிருக்க வாய்ப்பிருக்கிறது. அந்த நிலைப்பாட்டிலிருந்து மாற வேண்டும் / மாற வேண்டாம் என்ற விவாதமே இல்லாமல், நடக்கும் மாற்றத்தைக் குறித்து வெளிப்படையாக விழிப்புணர்வையும் ஏற்படுத்தாமல், திருட்டுத்தனமாக தனது முடிவை நிறைவேற்றுவதைக் குறித்துத்தான் எனது எதிர்ப்பு.
இனி, அணு ஆயுத சோதனைகளைச் செய்வதற்கு முற்றும் முழுவதுமான தடை என்ற நிலையை நீங்க ஆதரிக்கறீங்களா? உங்களைப் போல் பலர் இருக்க வாய்ப்புண்டு. அவர்களுடைய ஆதரவோட முதலில் ஆட்சியைப் பிடிக்கட்டும் அரசு. பிறகு ஒப்பந்தங்களில் கையெழுத்திடட்டும்.
*************
தெகா, உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி :)
நல்ல அலசல்.123 ஒப்பந்தத்தினால் யாருக்கு வணிக அனுகூலம் என்பதும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
இருப்பினும் பிரச்சினையின் முழு பரிமாணமும் சரிவர பொதுவில் விவாதிக்கப்படவில்லை.தங்கள் அரசியல் சார்பு/ஆதாயம் கொண்டே கட்சிகள் இதனை அணுகுகின்றன.மற்ற நாடுகள் பாதுகாப்புடன் பயன்படுத்தும் அணுசக்தியை நம்மால் பாதுகாப்பாக செயல்படுத்த முடியாது என்பது ஏற்றுக் கொள்ளக்கூடிய வாதம் அல்ல.உலகம் ஒரு கிராமமாக பரிணமிக்கும் இக்காலத்தில் இயற்கை சீரழிவுகளால் ஏற்படும் விபத்துகள் அடுத்தநாடுகளின் அணுசக்தி வசதிகளாலும் ஏற்படும் என்பதால் நல்ல மாதிரிநாடாக இருக்க நம் வளர்ச்சியை பலி கொடுக்க வேண்டியதில்லை.
NPT/123 விவாதங்கள் உலகஅரசியல் சார்ந்தவை.அரசியலில் கொள்கைகள் நிரந்தரமானவை அல்ல. மாறிவரும் வாய்ப்புகளையும் பரஸ்பர பலத்தையும் பொறுத்து எடுக்கப்படும் நிலைகள் மாறுபடும்.
நாடாளுமன்றத்தில் ஒரு முழுமையான விவாதம் அரசியல் ஆதாயமற்று நடத்தப்பட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
மேட்டரை ஒருவழியா இப்பதான் புரிஞ்சுகிட்டேன். கருத்து சொல்ல கொஞ்சம் ஊறணும்..
இவ்வளவு நாள் உள்ளேயே போகமாட்டேன்னு அடம்பிடிச்ச மேட்டரை உள்ளே அனுப்பியமைக்கு நன்றியோ நன்றி,
மணியன், உங்கள் வருகைக்கு நன்றி.
//மற்ற நாடுகள் பாதுகாப்புடன் பயன்படுத்தும் அணுசக்தியை நம்மால் பாதுகாப்பாக செயல்படுத்த முடியாது என்பது ஏற்றுக் கொள்ளக்கூடிய வாதம் அல்ல.//
நிச்சயமாக. நான் எங்கும் அதுபோல் கூறவில்லை என்று நம்புகிறேன். பொதுவாகவே, அணுசக்தியில் கொஞ்சம் ஆபத்துகள் (கதிரியக்கக் கழிவுகள் போன்றவை) இருக்கின்றன என்றுதான் குறிப்பிட்டிருக்கிறேன். ஆயிரம் ஆண்டுகள் என்பது மனிதக் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட மிகப் பெரிய காலக்கட்டமாக எனக்குப் படுகிறது. அது குறித்த பொதுவான கவலையைத்தான் தெரிவித்திருக்கிறேன், நம் நாட்டைப் பற்றி மட்டுமல்ல.
//நல்ல மாதிரிநாடாக இருக்க நம் வளர்ச்சியை பலி கொடுக்க வேண்டியதில்லை.//
அப்படியும் நான் எங்கும் கூறவில்லை என்றே நம்புகிறேன்.
//அரசியலில் கொள்கைகள் நிரந்தரமானவை அல்ல. மாறிவரும் வாய்ப்புகளையும் பரஸ்பர பலத்தையும் பொறுத்து எடுக்கப்படும் நிலைகள் மாறுபடும்.//
இதையும் ஏற்றுக் கொள்கிறேன். கொள்கை நிலைப்பாடுகள் மாறுவது தவறு கிடையாது. அதற்கான காரணங்கள் எடுத்துக் கூறப்பட்டு விவாதிக்கப் பட்டிருக்க வேண்டும் என்பதுதான் நான் கூறுவது. குறைந்தது, அணு ஆயுதங்களைப் பொறுத்த வரை நாம் சர்வதேச சக்திகளின் அழுத்தத்திற்கு பலியாகி, சரணாகதி அடைகிறோம் (அதோடு, சுதந்திர வெளியுறவுக் கொள்கைகளையும் குழி தோண்டி புதைக்கிறோம்) என்ற உண்மையை ஒப்புக் கொள்ளும் துணிவாவது நம் அரசுக்கு இருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன். அதற்கு மாறாக, எந்த மாற்றமுமில்லை என்று சாதித்து வருவது நேர்மையற்ற செயலாகவே படுகிறது.
சுரேஷ் :) அனைத்துப் புகழும் மன்மோகன் சிங்குக்கே போகட்டும் :)
கருத்துரையிடுக