புதன், நவம்பர் 14, 2007

பிழைப்பு

சில (ஒரு பக்க) விவாதங்களைப் படிக்க நேர்ந்ததன் விளைவுதான் இந்த இடுகை. பிரஞ்சுப் புரட்சி நடந்த காலக் கட்டத்தில், மக்கள் உண்பதற்கு ரொட்டியின்றி திண்டாடுகிறார்கள் என்ற செய்தியைக் கேள்விப்பட்டு, விவரம் புரியாத அப்பாவியாக இருந்த அந்நாட்டு ராணி 'அப்படியென்றால் அவர்கள் கேக் உண்ணலாமே?' என்று கேட்டாளாம். அதற்கு நிகரான ஒரு வாதம் தமிழ்மண விவாதக் களத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. OMG..... how can people be so insensitive என்பதுதான் அதைப் பார்த்தபின் எனக்குத் தோன்றிய முதல் எண்ணம்.

விஷயம் இதுதானங்க. தமிழ் படிச்சி வேலை கிடைக்காதவங்க டீக்கடை வச்சி பிழைச்சிக்கலாம்ங்கற அருமையான யோசனையை 'ஓசை' செல்லா சத்தமா முன்மொழிஞ்சிருக்காரு. அதையே பலரும் வழி மொழிஞ்சிருக்காங்க. இப்போதைக்கு அது விவாதமே இல்லாதக் களமாத்தான் இருக்கு. (அங்க நான் போட்ட பின்னூட்டம் இன்னும் வெளியாகல)

டீக்கடை வைக்கிறது அவ்வளவு சுலபமானதா, அதை வெற்றிகரமா நடத்துறதுக்கான திறமை எல்லாருக்கும் இருந்துடுமான்னு அவ்வளவு நிச்சயமா தெரியல. ஒரு டீ எவ்வளவு விலை, அதிலிருந்து எவ்வளவு வருமானம் பாக்க முடியும், ஒரு மதிப்பான தொகையை அந்தத் தொழில்லருந்து பாக்கணும்ன்னா எவ்வளவு டீ ஒரு நாளுக்கு வித்தாகணும், வரப்போற போட்டிகளையும், எதிர்ப்புகளையும் சமாளிக்கறதுக்கு ஆகக்கூடிய செலவுகள், தேவைப்படும் சக்தி எவ்வளவுன்னு ஒரு ஆராய்ச்சிக்கான மேட்டரே அதுல அடங்கியிருக்கு. இல்லன்னா எல்லாரும் டீக்கடை வச்சி வாழ்வாதாரப் பிரச்சனைகள்ன்னா என்னன்னு கேக்கற நிலமைக்கு நாம எப்பவோ போயிருப்போம்.

படிப்புங்கறது பலருக்கு வேண்டா வெறுப்பான ஒரு விஷயம். சிலருக்கு அதுவே தங்கள் கனவுகளை அடையக்கூடிய ஒரு வாய்ப்பு. ஒரு துறையை விரும்பி ஒருத்தன் படிக்கறான்னா அந்தத் துறையில் ஜொலிக்கணும்ங்கிறதுக்காகதாங்க. ஒரு தமிழய்யாவைப் பாத்து தானும் அவரைப் போலவே மதிப்பான ஒரு ஆளா இந்த சமூகத்தில் வளைய வரணும்ன்னு நினைக்கிறான். அந்தக் கனவுக் கோட்டைக்கான வாசல் கதவுதான் அவனோட தமிழ் MA பட்டம். அவனை ஒரு 250 ரூபாய்க்கு வக்கில்லாதவனாதான் இந்த சமூகம் வச்சிருக்குங்கறதுதான் அந்தப் படம் சொல்ற செய்தி. "மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமான்" என்ற கருத்தை மாணவர்களுக்கு ஒரு உதாரணத்தோட விளக்கிட்டு ("எல்லாரும் பாத்துக்கிட்டு இருக்கும் போது ஒன்ன ஒரு போலிஸ்காரன் பொடனியில ஒண்ணு போட்டு இழுத்துக்கிட்டு போனான்னா எவ்வளவு அவமானமாப் போகும்?" etc etc) , அடுத்த காட்சியில் அந்த உதாரணத்தையே மாணவர்களுக்கு எதிரில் (காவல்துறையினரால் அவமானப் பட்டு) வாழ்ந்து காமிக்கிற அவல நிலைமையைத்தான் இந்த சமூகம் அவனுக்கு பரிசா தருது. இதைத்தான் படம் விமர்சிக்குதுங்கிறது என்னோட புரிதல். ஒரு டீக்கடை வச்சி எவ்வளவு கப் டீ ஆத்தினாலும் இந்த ரணத்தை அவனால ஆத்த முடியுமா?

மனிதர்களுக்கான அடிப்படையான தேவை எதுன்னா அது மதிப்பு / மரியாதை என்பதுதான் (உண்ண உணவு, உடுத்த உடை, உறங்க உறைவிடம் ஆகியவை தவிர்த்து). காலகாலமா அத்தகைய மதிப்பு அவனது தனித்துவத்திற்காக கிடைத்து வந்தது - அவனது கல்விக்காக, வலிமைக்காக, வீரத்திற்காக, போர்குணத்திற்காக, கலைத் திறனுக்காக, இப்படி பலவித காரணங்களுக்காக. அண்மைக் காலங்களில் (மேற்கத்தியத் தாக்கத்தால்?) ஒருவனுக்கு மதிப்பு / மரியாதை கிடைப்பது அவனிடம் இருக்கும் செல்வத்தைப் பொறுத்தே, என்றாகி விட்டது. ஆகவே, கவரிமான் குணம் என்பது செல்வந்தர்களுக்கு மட்டுமே உரிய ஆடம்பரமாகி விட்டது. மற்றவர்கள், அவர்கள் அனுபவிக்கும் மிதிபாடுகளிலிருந்து எழுந்து தூசியைத் தட்டி விட்டுக் கொண்டு, நடையைக் கட்ட வேண்டிய நிலையில்தான் இருக்கிறார்கள்.

இந்த உண்மையை அழுத்தமாக வெளிப்படுத்தியதற்காக அந்தப் பட இயக்குனர் எவ்வித விளக்கங்களும் அளிக்க வேண்டியதில்லை என்பது எனது கருத்து. வழங்கப்படும் (மேலோட்டமான) விமர்சனங்கள் குறித்த அவரது எதிர்வினையும் நியாயமாகவே படுகிறது. ஆசியாவின் சிறந்தப் படங்களில் ஒன்று என்ற அங்கீகாரத்திற்கு ஒரு வேளை இப்படம் தகுதியில்லாமல் போகலாம். ஆனால் அத்தகைய அங்கீகாரத்தை வழங்கியவர் தமிழில் தரமான படங்களை வழங்கிய வெகு சில இயக்குனர்களில் ஒருவர் என்பதால், அவரது கருத்துக்கு நம்மைப் போன்ற 'சொகுசு நாற்காலி விமர்சகர்களை' விட அதிக மதிப்புண்டு.

3 கருத்துகள்:

மதி கந்தசாமி (Mathy Kandasamy) சொன்னது…

இன்னும் படம் பார்க்கவில்லை. நீங்கள் கொடுத்திருக்கும் சுட்டிப்பக்கமும் போகவில்லை. i think i will go hunt down this movie. lovely writeup. could sense that i came directly from the heart. :)

-Mathy

Voice on Wings சொன்னது…

நிச்சயமா பாருங்க, மதி. சிந்தனையைத் தூண்டக் கூடிய படம்தான் அது :) பெண்ணிய பார்வைகளிலிருந்து கொஞ்சம் (நியாயமான) எரிச்சலைத் தரக்கூடும் என்பதையும் எச்சரித்து விடுகிறேன்.

பெயரில்லா சொன்னது…

இப்போதுதான் இந்தப்பதிவை வாசிக்கின்றேன். நீங்கள் இப்படம் குறித்து எழுதிய பலபுள்ளிகளில் எனக்கும் உடன்பாடுண்டு.