சனி, ஜூலை 12, 2008

அண்மைய கொந்தளிப்புகள்

தங்களை 'அறிவுப் பூசாரிகள்' என்று அறிவித்துக் கொண்ட சிலர் அண்மைய சில தினங்களாக ரொம்பவே கொந்தளித்துப் போயிருக்கிறார்கள். அவர்களின் தரப்பிலும் ஓரளவுக்கு நியாயமில்லாமலில்லை. ஒரு வசதியை வெகு நாட்களாக அனுபவித்துவிட்டு அது இல்லாமல் போகும் தருணத்தில் ஏமாற்றம் ஏற்படுவது இயற்கையே. 'காமம்' உள்ளிட்ட பல பிரச்சனைக்குரிய சொற்கள் கொண்ட தலைப்புகளுக்கும், முதல் சில வரிகளுக்கும் 'தடா' விதித்துள்ளது தமிழ்மணம். இந்தச் சொற்களால் நிச்சயமாக எந்தப் பிரச்சனையும் கிடையாதுதான். இவற்றைக் காண நேர்வதால் கன்னியாகுமரியும் காஷ்மீரும் இடம் மாறி விடப்போவதில்லைதான். ஆனால், வணிகக் கட்டாயங்கள் உள்ள எந்தவொரு அமைப்பும் வெகுசனப் பார்வைக்கு ஒத்திசைந்தே தனது நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். ("ஒரு பேச்சிலராக உங்கள் படுக்கையறையில் நீங்கள் ஒட்டக்கூடிய கவர்ச்சி போஸ்டர்களை உங்கள் அலுவலக வரவேற்பறையில் ஒட்ட உங்கள் நிறுவனம் அனுமதிக்குமா?" என்பது போன்ற உவமைக் கேள்விகளைக் கேட்டுக் கொள்ளவும்).

இந்த episodeஇன் உச்சப்பட்ச காமெடி என்று நான் நினைப்பது, இந்த அறிவுப் பூசாரிகளின் சந்நதத்தைத்தான். செத்துப்போன மார்க்கீ த சாதே / நீட்ஷேயின் ஆவி உடலுக்குள் புகுந்து கொண்டு விட்டதோ என்ற சந்தேகம் ஏற்படும் வகையில் "moronகளே, கேளுங்கள்!" என்று Zarathushtraவைப் போல் அருள்வாக்கு கூறினார் ஒருவர். புரட்டிப் போடும் எழுத்துக்குச் சொந்தக்காரரோ மண்டியிட்டு தோழமையுடனும் (கோழைமையுடனும்) தமிழ்மணத்திற்கு மன்னிப்பு வாக்குமூலம் எழுதுகிறார். பாதிக்கப்பட்டவரோ, "அவங்க மட்டும் படுக்கையறையில பின்னியெடுக்கறாங்களே?" என்று தனது ஆதங்கத்தை வெளியிடுகிறார். இன்னொருவர் "கலாச்சாரக் காவலுக்கு எதிராக கணினி ரவுடி ஆவேன்" என்று சூளுரைக்கிறார். இந்த சூளுரையின் விளைவாக நமக்கெல்லாம் ஏற்படக்கூடிய பாதிப்பு என்ன என்பது குறித்து எந்தத் தகவலுமில்லை. அதை நினைத்து இன்னமும் நடுங்கிக் கொண்டிருக்கிறேன்........ இல்லை.

இப்படி தணிக்கைகள் நிறைந்த சூழலில் கலக எழுத்துக்கு இடமே கிடையாதா? என்றால் இருக்கிறது. எந்த ஒரு நிறுவன அமைப்பையும் சாராது ஒரு எதிர் அமைப்பை உருவாக்குவதுதான் இதற்கான தீர்வு. நான் முன்பே இது குறித்து எழுதியிருக்கிறேன். தேடல் என்ற இணையத்தின் மிக அடிப்படையான நுட்பத்தைப் பயன்படுத்தி, எந்தவொரு திரட்டியையும் சாராமல் பதிவர்களால் இயங்க முடியும். முன்பு எல்லாப் பதிவர்களுக்கும் பொதுவான தமிழ்ப்பதிவுகள் என்ற குறிச்சொல்லைப் பரிந்துரைத்தேன். இப்போது குறிப்பிட்ட வகையான எழுத்துகளுக்கு அதற்கேற்ற பெயரை யாரேனும் தேர்வு செய்து கொள்ளலாம். (உ-ம். 'காமம்', அல்லது 'கலகம்', இத்யாதி) அப்படித் தேர்வு செய்து கொண்டு, இத்தகைய தணிக்கைக்கப்பாற்பட்ட எழுத்துகளை அந்த பொதுவான குறிச்சொல்லைக் கொண்டு குறித்து, அதை வாசகர்கள் மத்தியிலும் பிரபலப்படுத்தினால், நாங்கள் திரட்டிகளில் படிக்க முடியாத அவ்வெழுத்துகளை தேடுபொறிகளின் வாயிலாகப் படித்துக் கொள்வோம். கலக எழுத்து என்றில்லை - சில தினங்களுக்கு முன்பு ஒரு பதிவர் சமையல் குறிப்புகளுக்கென்று ஒரு திரட்டியை உருவாக்குவதாகத் தெரிவித்திருந்தார். அவ்வளவு மெனக்கெடத் தேவையே இல்லை. எல்லா சமையல் பதிவர்களையும் 'சமையல் குறிப்பு' என்று குறிச்சொல் இடுமாறு கேட்டுக் கொண்டால், அதற்கான தேடல் பக்கம், செய்தியோடை, என்று எல்லாமே தயாராக உள்ளது.

தேடுபொறிகள் என்றால் technorati இருக்கிறது. அதைத் தவிர Icerocket, Google Blog search, reddit, delicious போன்ற சேவைகளும் இருக்கின்றன. நமது நண்பர் மாஹிர் உருவாக்கிய தமிழூற்றும் இருக்கிறது. பெரும்பாலும் இந்தத் தேடுபொறிகள் தாமாகவே crawl செய்து உங்கள் இடுகைகளை தங்கள் பட்டியலில் சேர்த்துக் கொள்கின்றன. அல்லது இவை எல்லாமே ping வசதியளிக்கின்றன. அவற்றைக் கொண்டு இத்தளங்களில் ping செய்து, உடனடியாக உங்கள் பதிவு தேடல்களில் கிடைக்குமாறும் செய்யலாம்.

நம் அறிவு ஜீவிகளுக்கு இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு நடந்த புரட்சிகளைப் பற்றியெல்லாம் நன்றாகத் தெரிந்துள்ளது. பாராட்டப்பட வேண்டிய விஷயம்தான். அதோடு, இன்றைய நிகழ்காலத்தில் நடக்கும் புரட்சிகளைப் பற்றியும் சிறிது தெரிந்து கொள்வார்களானால் நன்றாக இருக்கும். மேலும், கருத்துச் சுதந்திரத்திற்கு காவடி ஏந்தும் எல்லா அறிவு ஜீவிகளும் தங்கள் பதிவுகளில் தவறாது பின்னூட்ட மட்டுறுத்தலைச் செயல்படுத்தி இருக்கும் முரண்பாட்டைக் குறித்தும் குறிப்பிட விரும்புகிறேன்.

கண்டிப்பாக கலகம் செய்யுங்கள், ஆனால் அதை ஒப்பாரி வைக்காமல் செய்யுங்கள். அல்லது ஒப்பாரியும் ஒரு கலக வடிவமா?

39 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

கலகம் செய்பவர்கள் ஒப்பாரி எல்லாம் வைப்பதில்லை.

காமக்கதை என்பதே ஆண்மய்யச் சிந்தனைதான். என்னதான் ஒரு முற்போக்குச் சிந்தனை கொண்ட பெண்ணாக நான் இருந்தாலும், காமக்கதை என்று தலைப்பிட்டிருக்கும் பதிவுக்குள் நுழையத் தயக்கமாகத்தான் இருக்கிறது. கதை வேண்டுமானால் பாலியல் விடுதலை குறித்ததாக இருக்கலாம். ஆனால், அதைச் சுற்றி எழுப்பப்படும் விவாதங்கள்? இளைஞர்களின் பரிபாஷைகள்?

கலகம் என்ற பெயரிலே இவர்கள், ஒரு சேவல் பண்ணை போல, மதுக்கடை போல, பெண்களை தமிழ்மணம் போன்ற பப்ளிக் ஃபோரத்தில் இருந்து வெளியேற்றுவதிலேயே குறியாக இருக்கிறார்கள்.

கடந்த ஒரு வருடத்தில் நடந்த வலைப்பதிவர்கள் சந்திப்பில் எத்தனை பெண்கள் கலந்து கொண்டார்கள்? இவர்கள் செய்வதாகச் சொல்லும் கலகம், பாலியல் வார்த்தைகளை உபயோகித்து, நடுத்தர வர்க்கத்துப் பின்னணி கொண்ட எம் போன்ற பெண்களை, embarass செய்து activities இல் இருந்து ஒதுக்கி வைப்பதிலேயே குறியாகச் செயல்படுகிறது என்று நான் சொன்னால் ஜ்யோவராம் சுந்தர், பைத்தியக்காரன், சுகுணா திவாகர், வளர்மதி உள்ளிட்டவர்களின் பதில் என்ன?

பாலியல் விடுதலை வேட்கை என்பது தேவைதான். ஆனால், கிளர்ச்சிக்காக மார்புகளையும், தொடைகளையும் வார்த்தைகளில் தேடித் திரியும் கொழுப்பெடுத்த விடலைகள் இருக்கலாம் என்று நினைக்கிற இடத்தில், காமத்த்தை வெளிப்படையாக விவாதிக்கக் கூடிய நிலைமை இன்னும் வரவில்லை என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

வயதும் சூழ்நிலையும் கற்றுக் கொடுத்த கூச்ச நாச்சத்தை எல்லாம் களைந்து விட்டுச் செய்வதுதான் கலகம் என்றால், அதிலே பெண்களின் பங்கு என்ன?

ச.சங்கர் சொன்னது…

பதிவும் முதலில் வந்திருக்கும் "அனானி" பெண்ணின் பின்னூட்டம் அருமை. இந்த மாதிரி பின்னூட்டத்தக் கூட ஒரு பெண் பெயர் வெளியிட முடியாமல்தான் எழுதவேணியிருக்கிறது என்பது இணைய சூழல். உரிமைகள், சுதந்திரங்கள் பற்றி பேசுபவர்கள் ,சூழ்னிலைகளையும் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.

Voice on Wings சொன்னது…

அனானி நண்பரே,

விரிவான பின்னூட்டத்திற்கு நன்றி. நான் உணராத பல கோணங்களைச் சொல்கிறது உங்கள் பின்னூட்டம்.

எந்த அமைப்புமே inclusiveஆக இருப்பதே சிறந்தது. ஒரு சிலரின் அடாவடித்தனத்தால், மற்றவர்கள் தர்மசங்கடமடைந்து அங்கிருந்து விலகிச் செல்லும் நிலை நிச்சயமாக விரும்பக்கூடியதல்ல.

நீங்கள் கூறுவது போலவே, பாலியல் விடுதலை குறித்த ஆரோக்கியமான விவாதம், உரையாடல் தேவை என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அதற்கான சூழல், முதிர்ச்சி இன்னமும் இங்கு ஏற்படவில்லை என்பதும் உண்மைதான்.

Voice on Wings சொன்னது…

சங்கர், உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. பதிவின் கருத்திலிருந்து ஒரு வேறுபட்ட பார்வையை சிறப்பாக வெளியிட்டிருக்கிறார் முதல் அனானி. ஆமாம், அவர் அனானியாக வந்து தனது கருத்தைத் தெரிவிக்க வேண்டிய சூழலையும் நான் கவனிக்கத் தவறவில்லை.

கயல்விழி முத்துலெட்சுமி சொன்னது…

உங்கள் பதிவும் அனானி பின்னூட்டமும் புது விசயங்களை சொல்கிறது..

நீங்கள் ஏன் இன்னமும் வேர்ட் வெரிபிகேஷன் வைத்திருக்கிறீர்கள்..

Voice on Wings சொன்னது…

வருக முத்துலட்சுமி.

//நீங்கள் ஏன் இன்னமும் வேர்ட் வெரிபிகேஷன் வைத்திருக்கிறீர்கள்..//

இயந்திரங்கள் போடும் பின்னூட்டங்களிலிருந்து என்னைக் காப்பாற்றிக் கொள்ளத்தான் :) பலரும் முறையிடுவதால், இப்போது இதை அகற்றி இருக்கிறேன். பிரச்சனை வந்தால் பின்பு பார்த்துக் கொள்ளலாம்.

சென்ஷி சொன்னது…

அன்புள்ள அனானி சகோதரிக்கு,

உங்களின் பின்னூட்டத்தை முழுமனதுடன் ஆமோதிக்கிறேன்.

:((

ஆனால் வருத்தம் தரக்கூடிய விசயம் இதைக்கூட நீங்கள் அனானியாக வந்து சொல்ல வேண்டிய அளவில்தான் சக நண்பர்கள் மேல் மரியாதை உள்ளது என்பதுதான். உங்களது கருத்துக்கு என்னிடம் எந்த விதமான மாற்றுக்கருத்தும் இல்லை.

தலைக்குனிவுடன்....

சென்ஷி

அய்யனார் சொன்னது…

காமம் குறித்தான உரையாடல்களை வெகுசனம் எப்போதுமே ஏற்கப்போவதில்லை..சூழல்,முதிர்ச்சி என்பதெல்லாம் வானத்தில் இருந்து குதித்து வராது.சில பழிகளுடன் அதற்கான சாத்தியங்களை நிறுவுவதுதான் நம் எழுத்துக்கான குறைந்த பட்ச நேர்மையாய் இருக்க முடியும்..

நடுத்தர வர்க்கத்து பெண் அனானிக்கு,
காமக்கதைகள் பெண்களை பீதியடைச் செய்கிறது..தளத்திலிருந்து வெளியேற்றுகிறது..என்பதெல்லாம் உங்களுக்கான கற்பனை அல்லது உங்களின் நம்பிக்கைகள்..சுந்தரின் பதிவுகளில் கிருத்திகா, பெருந்தேவி போன்றோரின் பின்னூட்டங்களை பார்க்கலாம்.வலைப்பதிவர் சந்திப்பில் பெண்கள் கலந்துகொள்ளாததாலேயே அவர்கள் பயந்து போய் ஒளிந்துகொள்கிறார்கள் என்பது அபத்தமாய் இருக்கிறது..பொன்ஸ்,லக்ஷ்மி என சில விதிவிலக்குகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்.மேலும் வலைப்பதிவர் சந்திப்பென்பது நட்பு ரீதியிலான ஒரு நிகழ்வே தவிர பெண்களுக்கான உரிமைகளை நிறுவும் இடம் அல்ல...

சமகால பெண்கள் உடல்மொழியை மிகத் தேர்ச்சியாகவே பேசுகிறார்கள்..கூச்சம் நாச்சம் என்பதெல்லாம் மரபின் வழி வந்த இயலாமைகள்தானே தவிர ஒட்டுமொத்த மதிப்பீடுகள் அல்ல...

மேலும்,காமத்தை தடை செய்தது மட்டுமே பிரச்சினையில்லை.இந்த விதயத்தை தமிழ்மணம் எதிர்கொண்ட அணுகுமுறையே ஒப்பாரிக்கான பின்புலமாகவும் இருக்கிறது...

Voice on Wings சொன்னது…

சென்ஷி, உங்கள் வருகைக்கு நன்றி.

அய்யனார்,

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

//காமம் குறித்தான உரையாடல்களை வெகுசனம் எப்போதுமே ஏற்கப்போவதில்லை..சூழல்,முதிர்ச்சி என்பதெல்லாம் வானத்தில் இருந்து குதித்து வராது.சில பழிகளுடன் அதற்கான சாத்தியங்களை நிறுவுவதுதான் நம் எழுத்துக்கான குறைந்த பட்ச நேர்மையாய் இருக்க முடியும்..//

பாலியல் நோய்கள் பரவாமலிருக்க களப்பணிகள் செய்து கொண்டிருக்கும் நண்பர்கள் (அல்லது பாலியல் மருத்துவத்துறையில் இருப்பவர்கள், etc.) இது குறித்து தெளிவு படுத்தக்கூடுமென்று நினைக்கிறேன். அவர்களால் களத்தில் ஏற்படுத்தக்கூடிய ஆரோக்கியமான சூழல், முதிர்ச்சியான கையாளல் ஆகியன, வலையுலகில் நம் பதிவர்களால் உருவாக்கப்படவில்லை என்பதுதான் நிதர்சனம். இருப்பவர்களையும் விரட்டியடிக்கும் சாத்தியங்களே பெரும்பாலும் நிறுவப்பட்டுக் கொண்டிருந்தன.

//நடுத்தர வர்க்கத்து பெண் அனானிக்கு,
காமக்கதைகள் பெண்களை பீதியடைச் செய்கிறது..தளத்திலிருந்து வெளியேற்றுகிறது..என்பதெல்லாம் உங்களுக்கான கற்பனை அல்லது உங்களின் நம்பிக்கைகள்..//

'நடுத்தர வர்க்கம்' என்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்டதை இடித்துக் காட்ட சிலர் வருவார்கள் என்று எதிர்பார்த்ததுதான் :) அப்படி அடையாளப்படுத்திக் கொள்ளாமலேயே அவரது கருத்தைக் கூறியிருக்கலாமே என்று நினைத்தேன். கணினி / இணைய வசதி படைத்த எல்லாருமே நடுத்தர வர்க்கத்தினர்தான் (எம்மை மிடில் கிளாஸ் moronகள் என்று இகழ்ந்த அந்த அறிவு ஜீவி உட்பட) ஆகவே, let's not do this 'pot calling the kettle black' act. மற்றபடி, கூச்சம் என்பது அவரது இயலாமையா, அல்லது பொதுவாக நிலவும் ஒரு இயலாமையா, அத்தகைய ஒரு இயலாமை இருக்கும்போது ஒரு inaccessible / taboo subjectஐ மேலும் accessibleஆக ஆக்கி வழங்க முடியுமா, அல்லது மதுக்கடை பாணியில்தான் அதை எடுத்துச் செல்ல வேண்டுமா (let everybody go to hell என்ற மனநிலையோடு) என்பது போன்ற கேள்விகளை இதனால் பாதிக்கப்பட்டவர்கள்தான் சொல்ல வேண்டும். ஒருவர் வந்து சொல்லியிருக்கிறார், அதைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன். அப்படியெல்லாம் இல்லை என்று இன்னொரு பெண் பதிவர் வந்து கூறினால் அதையும் கேட்டுக் கொள்வேன்.

//இந்த விதயத்தை தமிழ்மணம் எதிர்கொண்ட அணுகுமுறையே ஒப்பாரிக்கான பின்புலமாகவும் இருக்கிறது...//

ஒரு நிறுவனத்திற்குப் பரிந்து பேச இப்பதிவை எழுதவில்லை. அவர்கள் தரப்பிலுள்ள நியாயத்தை உண்ர்ந்து கொள்ள முடிந்ததால் இதை எழுதினேன். முக்கியமாக, ஒப்பாரி வைப்பதிலுள்ள futilityஐக் குறிப்பிட்டு எழுதி இருக்கிறேன். அதை விட சிறப்பாக வேறென்ன செய்யலாம் என்று எழுதியிருக்கிறேன்.

ஒரு அமைப்பைச் சார்ந்து இயங்கும்போது அதன் சட்ட திட்டங்களுக்கு இசைந்தே இயங்க இயலும் என்பதை மகஇக / திமுக போன்ற (கலக?) அமைப்புகளில் இருப்பவர்களும் உறுதி செய்வார்கள்.

தருமி சொன்னது…

எதெதுக்கு வக்காலத்து வாங்கணுமோ அதுக்கு வக்காலத்து வாங்கினால்தான் வாங்குபவர்களுக்கும் மரியாதை.

கட்டுடைப்பு என்பது இதுதான் என்றால் let me call it "SHIT".

திரு ஜ்யோ-வின் இரு பதிவுகள் மட்டுமே படித்த எனக்குத் தோன்றியது: it is not even a third rate porno; it is nothing but filth .

எழுத்துக்கும், எழுதுமிடத்திற்கும் எந்த மரியாதையும் தராத எழுத்து யாருக்கு தேவை?

எழுதியவனுக்கு மரியாதை பெற்றுத் தராத, தரமுடியாத எழுத்தால் எழுதியவனுக்கேதான் என்ன பயன்?

ஏதோ எழுத முடியாத இலக்கியத்தைப் படைத்துவிட்டதுபோல் எழுதுபவரும், இதுவரை படித்திராத இலக்கியத்தைப் படித்துவிட்டது போல் சிலர் அதை "தாங்கிப் பிடிப்பதும்" ... ஒரே வார்த்தை அதற்கு: உவ்வ்வே...

Voice on Wings சொன்னது…

தருமி, உங்கள் கருத்துக்கு நன்றி.

ஒருவருடைய எழுத்தைப் பற்றி எத்தகைய விமர்சனமிருந்தாலும் அதை எழுதுவதற்கான வெளி அவருக்கு வழங்கப்பட வேண்டுமென்பதில் எனக்கு சந்தேகமில்லை. வெகுசன சந்தைப்படுத்தல் போன்ற முன்னெடுப்புகளில் கவனம் செலுத்துவதால், தமிழ்மணத்தால் அத்தகைய வெளியை அவருக்கு இனிமேலும் வழங்க இயலாது என்று தெரிகிறது.

ஜ்யோவின் (காமக் கதைகளல்லாத) மற்ற இடுகைகளை விரும்பிப் படித்து வந்திருக்கிறேன். அவற்றிலுள்ள தீவிரப் பார்வை, சமூக நோக்கு ஆகியன ஏனோ அவரது காமக் கதைகளில் பிரதிபலிக்கவில்லை. ஒரு மேலோட்டமான treatment இருந்ததாகவே தோன்றியது. எனக்கு இலக்கியம் பற்றி அவ்வளவாகத் தெரியாது என்பதையும் இங்கு குறிப்பிட்டுக் கொள்கிறேன் :)

பெயரில்லா சொன்னது…

/வெகுசன சந்தைப்படுத்தல் போன்ற முன்னெடுப்புகளில் கவனம் செலுத்துவதால், தமிழ்மணத்தால் அத்தகைய வெளியை அவருக்கு இனிமேலும் வழங்க இயலாது என்று தெரிகிறது./

தமிழ்மணம்-வெகுசனச்சந்தைப்படுத்தல் பற்றி எதுவும் சொல்ல முடியவில்லை. ஆயினும் தமிழ்மணம் எவ்வகையிலும் ஜ்யோவ்ராம் சுந்தரின் படைப்புக்கான வெளியைத் தடை செய்திருப்பதாகத் தெரியவில்லை. அவரின் இடுகைகள் தோன்றிக்கொண்டுதானே உள்ளன?

காமம் கட்டுடைப்பு இவற்றையெல்லாம் இந்தியாவிலும் அமீரகத்திலும் இருந்து பார்த்துக்கொண்டிருப்பதாலே, ஜ்யோவ்ராம் சுந்தரின் படைப்புகள் புடைத்துப் பிளப்பதாகத் தெரிகிறதோ தெரியவில்லை. என்னை அவரின் மற்றைய இடுகைகள் கவர்ந்ததுபோல ஜ்யோவ்ராமின் இயல்பற்ற சவ உத்தி காமக்கதை உற்பத்திகள் கவரவில்லை. They did not succeed either as eroica or as a postmodernist post with a social concern. All what he made was imitating like a cheap saru in time.

ஜ்யோவ்ராம் சுந்தர் சொன்னது…

பெரிய பின்னூட்டத்தை தட்டச்சினேன்.. நெட் பிரச்சனையில் காணாமல் போகிவிட்டது.

நாளை மறுபடி இடுகிறேன்... (என்ன கஷ்டம்டா சாமி!)

Voice on Wings சொன்னது…

அனானி நண்பரே, உங்கள் வருகைக்கு நன்றி.

//ஆயினும் தமிழ்மணம் எவ்வகையிலும் ஜ்யோவ்ராம் சுந்தரின் படைப்புக்கான வெளியைத் தடை செய்திருப்பதாகத் தெரியவில்லை.//

நான் கூறியது, அவர் அதே தொடரை அதே பெயரில் தொடர்ந்து வெளியிட விரும்பும் பட்சத்தில். மற்றபடி, அவரது இடுகைகள் தமிழ்மணத்தில் வந்து கொண்டுதான் இருக்கின்றன என்பதை நானும் அறிவேன். அவரது எழுத்தைப் பற்றிய உங்கள் கருத்தை உங்கள் தனிப்பட்ட கருத்தாக எடுத்துக் கொள்கிறேன் :)

ஜ்யோவ்ராம் சுந்தர், நீங்கள் தட்டச்சிய நீண்ட பின்னூட்டம் இணையப் பிரச்சனையால் மறைந்து போனது வருத்தமான செய்தி. அவசரமில்லை, உங்களுக்கு வசதிப்படும்போது உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்.

பெயரில்லா சொன்னது…

//பெரிய பின்னூட்டத்தை தட்டச்சினேன்.. நெட் பிரச்சனையில் காணாமல் போகிவிட்டது.//

உலகக் கலகக்காரர்களே! கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான 'நெட்' என்கிற அதிகாரமையத்தை உடைத்தெறிய ஒன்று சேருங்கள்.

ஜ்யோவ்ராம் சுந்தர் சொன்னது…

உங்களுடைய இந்தக் கட்டுரைக்கு நன்றி, VoW.

முதலில் ஒரு அறிவிப்பு : நான் கலகக்காரனோ, அறிவுஜீவியோ அல்லது போஸ்ட் மாடர்னிஸ்டோ கிடையாது. சாதாரண எழுத்தாளன். எனக்குத் தெரிந்த மற்றும் பாதிக்கும் விஷயங்களை எழுத்தாக்கிப் பார்க்க முயற்சிக்கிறேன்.

1990லிருந்து எழுதிவருகிறேன். 1991லிருந்து 1998 வரை சிறுபத்திரிகைகளில் என் எழுத்துகள் வெளியாயின. பிறகு 1998லிருந்து 2007 வரை எழுதுவதை நிறுத்தியிருந்தேன். 2007 நவம்பரிலிருந்து மறுபடியும் எழுதத் துவங்கியுள்ளேன். காமக் கதைகளை மட்டுமே நான் எழுதவில்லை. உண்மையில் அவை என் மொத்த எழுத்துகளில் மிகச் சிறிய சத வீதமாகத்தான் இருக்கும்!

பரபரப்பிற்காகவோ அல்லது பெயர் வாங்க வேண்டுமென்பதற்காகவோ இக்காமக் கதைகளை எழுதவில்லை என்பதை நம்புங்கள்! மேலும் ஒப்பாரியெல்லாம் ஒன்றும் கிடையாது - தமிழ்மண அறிவிப்பில் இருக்கும் அபத்தத்தைச் சுட்டிக் காட்டவே அந்த நடிகை உதாரணத்தை எழுதியிருந்தேன்.

தருமி ஐயாவின் காட்டடியான இடக்கை புறந்த்தள்ளுதல் வருத்தமளிக்கிறது. என்னுடைய சில கதை முயற்சிகள் தோல்வியடைந்திருக்கலாம். ஆனால் அதற்கான இப்படிப்பட்ட விமர்சனங்கள்... காலம் காலமாக மாற்று எழுத்துகளை இப்படித்தான் உவ்வே, ஆபாசம், மலம், சமூகத்திற்கு எதிரானது எனச் சொல்லி வந்திருக்கிறார்கள்.

பெண்களைத் தமிழ்மணத்திலிருந்து விரட்டவே இக்கைதைகள் என்பதெல்லாம் மிகைப் படுத்தல்களே. பெண்கள் படிக்கமுடியாதவை எனப் பொதுமைப் படுத்துதவது, கதைகளைப் படித்துப் பின்னூட்டமிட்ட மற்றும் கதைகளைத் தொடர்வதற்கு ஆதரவாக குரல் எழுப்பிய பெண்களையும் அசிங்கப்படுத்துவதாகுமென நினைக்கிறேன். அல்லது, அவர்களையும் காமக்கதைகளைப் படிக்கக் கூடாதென விடுக்கப்படும் 'மறைமுக' எச்சரிக்கையோ.!!

என் பதிவில் சொல்லியது போன்று தொடர்ந்து இத்தலைப்பிலேயே கதைத் தொடரை எழுத உத்தேசம். தமிழ்மண முகப்பில் தெரியாவிட்டாலும் பரவாயில்லை.!

தொடர்ந்து என் எழுத்துகளையும் அதை எழுதுவதன் நோக்கத்தையும் defend செய்து எழுதுவது கொஞ்சம் வெட்கமாகக் கூட இருக்கிறது.

பெயரில்லா சொன்னது…

கலாச்சார போலிஸ்களை எதிர்க்கும் கலாச்சார ரவுடிகளுக்கு ஒரு கேள்வி,

இணையத்தில் தான் உங்கள் புரட்சியா ? தெரு வீதிகளில் உங்கள் புரட்சி இல்லையா ? இணையத்தில் ஆவேசமாக, வீரமாக எழுதி விட்டு வீட்டில் முக்காடு போட்டு படுத்துக் கொள்ளலாம். ஆனால் வீதியில் இறங்கி போராடினால் லத்தி அடி கிடைக்கும் என்ற பயமா ?

சரிப்பாக இருக்கிறது :-)))

//கருத்துச் சுதந்திரத்திற்கு காவடி ஏந்தும் எல்லா அறிவு ஜீவிகளும் தங்கள் பதிவுகளில் தவறாது பின்னூட்ட மட்டுறுத்தலைச் செயல்படுத்தி இருக்கும் முரண்பாட்டைக் குறித்தும் குறிப்பிட விரும்புகிறேன
//

சூப்பர் :-)))

ஒருவர் பதிவில் நான் நேற்று எழுதிய பின்னூட்டம் இன்னும் வெளியாகவில்லை என்பதையும் சொல்லிக் கொள்கிறேன். காரணம் அது இவர்கள் கருத்துக்கு எதிராக திரட்டியின் நியாயத்தை விளக்கியதாக இருந்ததால் அந்த பின்னூட்டம் வெளியாகவில்லை. இதில் கருத்துச்சுதந்திரத்திற்கு கொடி பிடிக்கிறார்களாம் :-)))
நல்ல நகைச்சுவை

ஜ்யோவ்ராம் சுந்தர் சொன்னது…

கருத்துச் சுதந்திரத்திற்கு காவடி ஏந்தும் எல்லா அறிவு ஜீவிகளும் தங்கள் பதிவுகளில் தவறாது பின்னூட்ட மட்டுறுத்தலைச் செயல்படுத்தி இருக்கும் முரண்பாட்டைக் குறித்தும் குறிப்பிட விரும்புகிறேன/

இது குறித்து... பின்னூட்ட மட்டுறுத்தல் என்பது ஒரு வசதி. அதனாலேயே அதை உபயோகிக்கிறேன். மற்றபடி எனக்கு வந்த அனைத்து பின்னூட்டங்களையும் வெளியிட்டிருக்கிறேன்... சிலர் என் பதிவை அடுத்தவர்களைத் திட்ட உபயோகிக்கும் போது (அதுவும் இடுகைக்கும் திட்டப்படுபவர்களுக்கும் தொடர்பே இருக்காது!) நிராகரிக்க வேண்டியுள்ளது.

கருத்துச் சுதந்திரத்தை ஆதரிப்பவன் என்பதால் எனக்கோ அல்லது இடுகைக்கோ தொடர்பில்லாத மற்றவர்களைத் தனிப்பட்ட முறையில் மோசமாகத் திட்டுவதை அனுமதிக்க இயலுமா?

பெயரில்லா சொன்னது…

//
தமிழ்மணத்தால் அத்தகைய வெளியை அவருக்கு இனிமேலும் வழங்க இயலாது என்று தெரிகிறது
//

தமிழ்மணம் அத்தகைய வெளியை வழங்குகிறது. ஜ்யோவ்ராம் சுந்தர் தொடர்ந்து இத்தகைய பதிவுகளை எழுதலாம். தமிழ்மணத்தில் வெளிவரும் என்றே நினைக்கிறேன். தலைப்பு மட்டும் மறைக்கப்படும் என்று சொல்கிறார்கள்.

ஆனால் சூடான இடுகைகள், வாசகர் பரிந்துரை, மறுமொழி திரட்டி போன்ற சிறப்பு பகுதிகளில் இடமில்லை என்று தான் கூறியிருக்கிறது என்பது என்னுடைய புரிதல்

இந்த பகுதிகளில் இடம் பிடிக்க எல்லாம் முனையவில்லை என்பது தான் பின்நவீனத்துவ புரட்சி எழுத்தாளர்களின் உச்சபட்ச காமெடி புலம்பல்/ஒப்பாரி :-))

தமிழ்மணத்தில் காமத்துபால் போன்ற தலைப்புகளில் தொடர்ந்து பதிவுகள் வெளிவந்து கொண்டு தானே இருக்கிறது. நெல்லை கண்ணனின் காமத்துப்பால் விளக்கங்கள் தமிழ்மணத்தில் எந்த மட்டுறுத்தலும் இல்லாமல் வெளிவருகிறது.

Voice on Wings சொன்னது…

ஜ்யோவ்ராம், எழுதிய பின்னூட்டத்தை இழந்ததால் சலிப்படைந்து விடாமல், மீண்டும் வந்து உங்கள் கருத்தைப் பதிந்ததற்கு நன்றி.

நீங்கள் கவனித்தீர்களென்றால், உங்கள் எழுத்தைப் பற்றிய விமர்சனமாக இந்தப் பதிவை எழுதவில்லை. பின்னூட்டங்களில் மட்டும் ஒரு கருத்தைத் தெரிவித்திருக்கிறேன் - அதாவது இந்த காமக் கதைகள் என்ற தொடர் உங்கள் மற்ற எழுத்துக்களைப் போல் என்னை வசியப்படுத்தவில்லை என்பதை. (ஒரு வாசகனாக அதைக் கூறுவதற்கு எனக்கு உரிமை உண்டு என்ற நம்பிக்கையில்.) தருமி ஜயா, மற்றும் இன்னொரு அனானியின் புறந்தள்ளல் வருந்தத் தக்கதுதான். ஆனால் அதை அவர்களது கருத்து / constructive feedback என்ற வகையில் நீங்கள் விரும்பினால் எடுத்துக் கொள்ளலாம். மாறாக, அது உங்களைப் புண்படுத்தியிருந்தால் என்னை மன்னிக்கவும். உங்களை defend செய்ய வைக்க வேண்டும் என்ற நோக்கம் எனக்குக் கிடையாது, அதற்கான தேவையும் உங்களுக்குக் கிடையாது என்பதை நன்கு அறிவேன்.

இந்தப் பதிவின் கருப்பொருள், தமிழ்மணம் என்ற வெகுசனக் கட்டாயங்கள் உள்ள ஒரு அமைப்பின் மீது உங்களைப் போன்றவர்கள் பாய்ந்ததில் உள்ள அபத்தத்தை சுட்டிக் காட்டவே. உங்கள் கலக எழுத்தைத் தொடருங்கள், ஆனால் அதை விநியோகிக்க மாற்று வழிகளை நாடுங்கள் என்பதே நான் கூறியதுவும் கூறுவதுவும் ஆகும்.

பெண்களின் பார்வையை நான் பதிவில் கூறவில்லை. ஆனால் அது மற்றொரு பரிமாணமாக பின்னூட்டங்களில் விரிவடைந்தது. விரட்டியடிக்கும் நோக்கத்துடன் நீங்கள் எழுதவில்லை என்பதைப் புரிந்து கொள்கிறேன். ஆனால், விரட்டியடிக்கும் விளைவு ஏற்பட்டது என்று ஒருவர் வந்து கூறுகிறார். அதை நீங்களும் 'இடக்கை புறந்தள்ளல்' செய்யலாம் (அய்யனாரைப் போல்), அல்லது அதையும் ஒரு feedbackஆக ஏற்றுக் கொள்ளலாம். தேர்வு உங்களுடையது. அந்த அனானி பெண்ணின் கூற்றை மறுத்து வேறெந்த பெண் பதிவரும் இதுவரை தனது கருத்தைப் பதியவில்லை என்பதையும் உங்கள் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன்.

உங்களது பின்னூட்ட மட்டுறுத்தல் கொள்கை குறித்து தெளிவுப்படுத்தியதற்கு நன்றி. ஒரு தனிநபரான உங்களுக்கு ஒரு comments policy தேவைப்படுவது போலவே, ஆயிரக்கணக்கான வாசகர்களைக் கொண்ட ஒரு திரட்டிக்கு ஒரு content policy தேவைப்படலாமல்லவா?

அனானி, எல்லாப் பதிவர்களைப் போலவே, ஒருவர் சிறப்புப் பகுதிகளில் தனது பதிவு வருவதை விரும்புவது, அதைத் தனது எழுத்துக்கான அங்கீகாரமாக எடுத்துக் கொள்வது, போன்றவை இயற்கையான குணங்கள்தான். அதற்காக யாரையும் குறை கூற வேண்டியதில்லை என்று நினைக்கிறேன். உங்கள் கருத்துக்கு நன்றி.

பெயரில்லா சொன்னது…

//ஒரு தனிநபரான உங்களுக்கு ஒரு comments policy தேவைப்படுவது போலவே, ஆயிரக்கணக்கான வாசகர்களைக் கொண்ட ஒரு திரட்டிக்கு ஒரு content policy தேவைப்படலாமல்லவா?

//

அது...

Voice on Wings,
இந்தப் பிரச்சனையிலேயே உங்களுடைய கருத்துக்கள் தான் நேர்மையாக உள்ளன
உங்கள் பார்வைக்கு ஒரு வந்தனம், சபாஷ்

பெயரில்லா சொன்னது…

//சுந்தரின் பதிவுகளில் கிருத்திகா, பெருந்தேவி போன்றோரின் பின்னூட்டங்களை பார்க்கலாம்.
//

கிருத்திகாவின், பெருந்தேவியின் பின்னூட்டங்கள் வலைப்பதிவின் மொத்த பெண் பதிவர்களையும் represent செய்கிறதா ? என்னைப் போன்ற மிடில் க்ளாஸ் மாதவன்களுக்கு தெரியவில்லையே ? அய்யனார் போன்ற அறிவுஞீவிகளுக்கு தான் தெரிகிறது போலும்

Voice on Wings சொன்னது…

அனானி நண்பருக்கு,

நன்றி :)

அந்தத் தொடருக்கு சில பெண்பதிவர்களின் ஆதரவு இருந்தது என்றே வைத்துக் கொண்டாலும் (அது ஆதரவா அல்லது rap on the knucklesஆ என்ற குழப்பமிருந்தாலும்), வேறு சில பெண்களின் கடுமையான எதிர்ப்பும் இருந்து வந்திருக்கிறது என்பதைத்தான் முதலில் வந்த அனானி நண்பரின் பின்னூட்டம் நமக்குத் தெரிவிக்கிறது. இது கருத்தில் கொள்ளப்பட்டு, வேண்டிய கவனத்துடன் அத்தொடரின் இனி வரும் பதிப்புகள் வெளியிடப்படும் என்று நம்புவோம்.

செல்வராஜ் (R.Selvaraj) சொன்னது…

VoW,

சரியான புரிந்துகொள்ளலுக்கும், தெளிவான கருத்துக்களுக்கும், பின்னூட்டங்களுக்கும் நன்றி.

Voice on Wings சொன்னது…

வருகைக்கும் ஆதரவுக்கும் நன்றி, செல்வராஜ் :)

rapp சொன்னது…

//காமக்கதை என்பதே ஆண்மய்யச் சிந்தனைதான். என்னதான் ஒரு முற்போக்குச் சிந்தனை கொண்ட பெண்ணாக நான் இருந்தாலும், காமக்கதை என்று தலைப்பிட்டிருக்கும் பதிவுக்குள் நுழையத் தயக்கமாகத்தான் இருக்கிறது. கதை வேண்டுமானால் பாலியல் விடுதலை குறித்ததாக இருக்கலாம். ஆனால், அதைச் சுற்றி எழுப்பப்படும் விவாதங்கள்? இளைஞர்களின் பரிபாஷைகள்?

கலகம் என்ற பெயரிலே இவர்கள், ஒரு சேவல் பண்ணை போல, மதுக்கடை போல, பெண்களை தமிழ்மணம் போன்ற பப்ளிக் ஃபோரத்தில் இருந்து வெளியேற்றுவதிலேயே குறியாக இருக்கிறார்கள்.

கடந்த ஒரு வருடத்தில் நடந்த வலைப்பதிவர்கள் சந்திப்பில் எத்தனை பெண்கள் கலந்து கொண்டார்கள்? இவர்கள் செய்வதாகச் சொல்லும் கலகம், பாலியல் வார்த்தைகளை உபயோகித்து, நடுத்தர வர்க்கத்துப் பின்னணி கொண்ட எம் போன்ற பெண்களை, embarass செய்து activities இல் இருந்து ஒதுக்கி வைப்பதிலேயே குறியாகச் செயல்படுகிறது என்று நான் சொன்னால் ஜ்யோவராம் சுந்தர், பைத்தியக்காரன், சுகுணா திவாகர், வளர்மதி உள்ளிட்டவர்களின் பதில் என்ன?

பாலியல் விடுதலை வேட்கை என்பது தேவைதான். ஆனால், கிளர்ச்சிக்காக மார்புகளையும், தொடைகளையும் வார்த்தைகளில் தேடித் திரியும் கொழுப்பெடுத்த விடலைகள் இருக்கலாம் என்று நினைக்கிற இடத்தில், காமத்த்தை வெளிப்படையாக விவாதிக்கக் கூடிய நிலைமை இன்னும் வரவில்லை என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

வயதும் சூழ்நிலையும் கற்றுக் கொடுத்த கூச்ச நாச்சத்தை எல்லாம் களைந்து விட்டுச் செய்வதுதான் கலகம் என்றால், அதிலே பெண்களின் பங்கு என்ன?//
இதை நான் அப்படியே வழிமொழிகிறேன்.

Voice on Wings சொன்னது…

நன்றி rapp. பெரும்பாலோர் வழிமொழியக் கூடியதைத்தான் அவங்க எழுதிட்டு போயிருக்காங்க.

பைத்தியக்காரன் சொன்னது…

நண்பர் வாய்ஸ் ஆன் விங்ஸ்,

தாமதமான பின்னூட்டத்துக்கு மன்னியுங்கள். வேலை நெருக்கடி காரணமாக மூன்று நாட்களாக பதிவு பக்கம் வரவில்லை. இப்போதுதான் வந்தேன்.

முதலில், தோழமையுடன் நீங்கள் எழுதியுள்ள பதிவுக்கு நன்றி.

'தமிழ்மணம்' ஒரு இலவச சேவை வழங்கும் தளம். நிர்வாக அமைப்பின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட ஒரு அமைப்பு. எனவே 'பொதுபுத்தி' சார்ந்த கருத்தாடலை 'தமிழ்மணத்தால்' ஒதுக்க முடியாது. இதை மறுக்கவில்லை. அச்சு ஊடகத்தில் இயங்கி வரும் எனக்கு 'தமிழ்மணம்' நிர்வாகம் எதிர்கொள்ளும் சங்கடம் புரிகிறது.

அதேநேரம், சொல்லிவிட்டு செய்வது என்பதற்கும், செய்துவிட்டு 12 மணிநேரங்கள் கழித்து சொல்வதற்குமான வித்தியாசத்தை நீங்களும் மறுக்க மாட்டீர்கள் என நம்புகிறேன்.

காமம், பாலியல், பெண்ணுடல், உடை சார்ந்த பெருங்கதையாடல்களுக்கு மாற்றாக வைக்கப்படும் சிறுகதையாடல்களை அவ்வளவு சீக்கிரத்தில் 'பொதுபுத்தி' ஏற்காது. உரையாடல்களும், விவாதங்களும் தொடரவே செய்யும். தொடரவும் விருப்பம்.

நிற்க... 'பதிவர்களிடம் சொல்லிவிட்டுத்தான் நடவடிக்கையில் இறங்குவோம்' என சென்னையில் நடந்த தமிழ்மணம் நிர்வாக குழு - பதிவர் சந்திப்பில் நிர்வாக குழுவினர் சொன்னார்கள். சொன்னபடி நடந்து கொள்ளவில்லை என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

உங்கள் பதிவில் 'புரட்டிப் போடும் எழுத்துக்கு சொந்தக்காரராக' நீங்கள் சுட்டிக்காட்டியது பைத்தியக்காரனான என்னைத்தான் என நினைக்கிறேன். அப்படியிருந்தால் -

தங்கள் பாராட்டுதலுக்கு நன்றி. அதேநேரம், எதையும் நான் புரட்டிவிடவில்லை என்பதையும் சொல்லிக் கொள்கிறேன். 'நையாண்டி' பிரிவில் எழுதப்பட்ட ஒரு பதிவு, வாசிப்பில் அப்படி தெரியவில்லை என்பது தொடர்ந்து வந்த உங்களது அடுத்த வரியின் மூலம் புரிகிறது.

மொழியின் விளையாட்டில் நையாண்டி எனக்கு சரிவர கைகூடவில்லை என்பதை இதன் வழியே உணர்கிறேன். அது கை கூட இனி பயிற்சி எடுக்கிறேன்.

தோழமையுடன்
பைத்தியக்காரன்

Voice on Wings சொன்னது…

பைத்தியக்காரன், உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. முதலில், ஏதோ ஒரு வகையில் உங்களைப் பற்றிய எனது குறிப்பிடல்கள் உங்களைப் புண்படுத்தி விட்டது என்று தோன்றுகிறது. அதற்காக எனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களையோ, ஜ்யோவ்ராமையோ அல்லது சுகுணாவையோ உணர்த்தி நான் நையாண்டி செய்திருக்கக் கூடாதுதான் (உங்கள் இடுகைகளுடன் எனக்கு மாற்றுக் கருத்து இருந்த போதிலும்). பொதுமைப்படுத்தி புண்படுத்தப்படும்போது, சில சமயம் அதே தவறை நாமும் செய்து விடும் ஆபத்து நிகழ்ந்து விடுகிறது. எனது கோபம் வளர்மதி என்பவரின் மீதுதான். அதில் மற்றவர்களையும் club செய்தது எனது தவறுதான். மன்னிப்பு கோரிக் கொள்கிறேன்.

//அதேநேரம், சொல்லிவிட்டு செய்வது என்பதற்கும், செய்துவிட்டு 12 மணிநேரங்கள் கழித்து சொல்வதற்குமான வித்தியாசத்தை நீங்களும் மறுக்க மாட்டீர்கள் என நம்புகிறேன்.//

தளத்தின் நிர்வாகப் பொறுப்பில் இல்லாததால், இது குறித்தான மேலதிகக் கருத்து எதையும் கூற முடியவில்லை. ஆனால் வேறு சில இணையத் தளங்களை நிர்வாகம் செய்து வருவதால், இது ஏன் நடந்திருக்கக் கூடும் என்று என்னால் ஊகிக்க முடிகிறது. ஒரு குறிப்பட்ட காரணத்தால் மக்கள் தளத்தைப் பயன்படுத்தத் தயங்குகிறார்கள் என்றால் என்னைப் போன்ற site adminக்கு அந்தக் காரணத்தை உடனடியாகப் போக்கி நிலைமையை சீர் செய்ய வேண்டும் என்ற எண்ணமே முதலில் இருக்கும். அந்த அடிப்படையில் இது நிகழ்ந்திருக்கலாம் என்று கருதுகிறேன். இது எனது அனுமானம் மட்டுமே.

ILA சொன்னது…

//கட்டுடைப்பு என்பது இதுதான் என்றால் let me call it "SHIT".//

rather call it as BULL SHIT..

கயல்விழி சொன்னது…

//காமக்கதை என்பதே ஆண்மய்யச் சிந்தனைதான். என்னதான் ஒரு முற்போக்குச் சிந்தனை கொண்ட பெண்ணாக நான் இருந்தாலும், காமக்கதை என்று தலைப்பிட்டிருக்கும் பதிவுக்குள் நுழையத் தயக்கமாகத்தான் இருக்கிறது. கதை வேண்டுமானால் பாலியல் விடுதலை குறித்ததாக இருக்கலாம். ஆனால், அதைச் சுற்றி எழுப்பப்படும் விவாதங்கள்? இளைஞர்களின் பரிபாஷைகள்?
//

காமக்கதை என்பது ஆணியச்சிந்தனை என்பதை ஒப்புக்கொள்ள முடியாது. காமம் என்பது இருபாலினருக்கும் பொதுவானது. விவாதங்களும் ஆபாசமாக இருந்ததாக்(சிலவற்றை தவிர) நினைவில்லை.

//கலகம் என்ற பெயரிலே இவர்கள், ஒரு சேவல் பண்ணை போல, மதுக்கடை போல, பெண்களை தமிழ்மணம் போன்ற பப்ளிக் ஃபோரத்தில் இருந்து வெளியேற்றுவதிலேயே குறியாக இருக்கிறார்கள்.//
இதையும் ஒப்புக்கொள்ள இயலாது. பெண்களை யாரும் துரத்த நினைப்பதில்லை. நாமே ஓடிப்போனாலோ அல்லது பின்னூட்டமிடாமல் இருந்தாலோ அதற்கு அவர்கள் பொறுப்பாக முடியாது. I beleive the problem here is with us, not with them.

BTW, ஜ்யோவராம் சுந்தர் எழுதிய கதைகள் அனைத்தையும் படித்திருக்கிறேன். சிலவற்றில் பின்னூட்டமும் எழுதி இருக்கிறேன். அவருடைய இந்த முயற்சிக்கு இத்தனை எதிர்ப்பு இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

இந்த அனானி பெண்மணியின் குரல், வெறும் அவருடைய தனிப்பட்ட குரலாக இருக்க முடியுமே தவிர, ஒட்டு மொத்த பெண்களின் குரலாக இருக்க முடியாது என்று தெரிவிக்க விரும்புகிறேன்.

Voice on Wings சொன்னது…

இளா :) (வடிகட்டி ஜாக்கிரதை :) )

கயல்விழி, என்னோட விவாதம் புரிய வந்துட்டீங்களா? :)

நிச்சயமா அது அவருடைய தனிப்பட்ட குரல்தான். ஒருவர் கூறுவதை ஒட்டு மொத்தப் பெண்ணினத்தின் குரலாக எடுத்துக் கொள்ள முடியாதுதான். Same is true with what you say as well. உங்களுடைய தலைமுறை, exposure, ஆகியவற்றினால் உங்களால் இந்த subjectஐ சகஜமாக எடுத்துக் கொள்ள முடியலாம். ஒரு சிலர் ஆபாசமான கருத்தை வெளியிட்டாலும் அதைப் பெரிது படுத்தாமல் கடந்து செல்லும் மனவலிமை உங்களுக்கு இருக்கலாம். But so many people are not so fortunate. It's a diverse world.

கயல்விழி சொன்னது…

//But so many people are not so fortunate. It's a diverse world.
//

Exactly. But who gets to make the rules? Mostly the conservatives.

கயல்விழி சொன்னது…

//கயல்விழி, என்னோட விவாதம் புரிய வந்துட்டீங்களா? :)
//

நீங்க தானே விவாதம் பண்ணுவதில் பிரச்சினை இல்லை என்றது? அதனால் தான் எழுதுகிறேன். நீங்க சொன்னமாதிரியே I was testing the waters. :)

Thangamani சொன்னது…

இந்த பிரச்சனையில் ((பிரச்சனையா?) உங்களது அணுகுமுறையும், பார்வையும் ஆச்சர்யம் அளிக்கிறது. நீங்கள் முற்போக்கு சிந்தனையுள்ள- அதிகாரமையத்தை (இருப்பதிலேயே பாதகமாய் எதுவும் செய்யாத) புரட்டிபோடும் வல்லமை அற்றவர் என்பதும், தமிழர்களில் தமிழைப் புரிந்துகொள்ளும் ஆற்றல் உள்ளவராயும் இருப்பதும் புரிகிறது.

எனக்குப் புரியாதது ஒன்றே ஒன்றுதான்.

உங்கள் காலடியில் அதிகாரம் கிடக்கும் போது ஏன் நீங்கள் உதைக்க மறுக்கிறீர்கள்? அதுவும் இந்தக் கூட்டத்தில் அது எளிது. உங்களுக்கு அது அசாதரணமான களிப்பையும் மன உறுதியையும் தருமே!

*

நன்றி எண்ணங்களின் குரல்வடிவம்!

கயல்விழி சொன்னது…

//எனக்குப் புரியாதது ஒன்றே ஒன்றுதான்.

உங்கள் காலடியில் அதிகாரம் கிடக்கும் போது ஏன் நீங்கள் உதைக்க மறுக்கிறீர்கள்? அதுவும் இந்தக் கூட்டத்தில் அது எளிது. உங்களுக்கு அது அசாதரணமான களிப்பையும் மன உறுதியையும் தருமே!//

குழப்பிட்டாங்கப்பா, குழப்பிட்டாங்களே!

Voice on Wings சொன்னது…

தங்கமணி,

வெகு நாட்களுக்குப் பிறகு உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.

கைக்கெட்டும் (அல்லது காலுக்கெட்டும்) தூரத்திலுள்ள 'அதிகார மையமான' (within quotes) தமிழ்மண நிர்வாகத்தை நானும் ஏன் என் பங்குக்குப் போட்டுத் தாக்கவில்லை என்று கேட்கிறீர்கள் என்று நினைக்கிறேன். உங்கள் கேள்வி இந்தப் பதிவுக்கான எதிர்வினை என்பதைவிட இன்றைய சூழலுக்கான எதிர்வினை என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. நிச்சயமாக இது உங்களுக்கு சுகமானதொரு சூழல் கிடையாதுதான். விரைவில் சகஜ நிலை திரும்புமென்று எதிர்பார்ப்போம்.

சில வருடங்களுக்கு முந்தைய உங்களுடனான காந்தி பற்றிய உரையாடல்கள் மூலம் அதிகம் அறிந்து கொள்ள முடிந்தது. நீங்கள் முன் போல் பதிவெழுதாதது ஒரு இழப்புதான். மீண்டும் வந்தால் மகிழ்ச்சி அடைவேன்.

**********

கயல்விழி,

விதிகளை விதிப்பவர்கள் conservativeவாக இல்லாமல் போனாலும், எண்ணிக்கையில் பெரும்பான்மையான conservativeகளின் பார்வைகளுக்கு ஏற்றவாறே விதிகள் விதிக்கப்படும். இல்லாவிட்டால் தமிழ்மணத்திற்கும் வருகைகள் குறைந்து, உங்கள் பதிவுக்கும் வருகைகள் குறைந்து போகும். அது நீங்கள் விரும்பக்கூடிய விளைவுதானா என்று யோசித்து விடை கூறுங்கள் :)

ராம்கி சொன்னது…

VOW,
உங்கள் முதிர்ச்சியும் பக்குவமும் பொறுப்புணர்வும் உங்கள் பதிவுகளில் வெளிப்படுகின்றன. இந்தப் பதிவு உங்கள் மகுடத்தில் மேலும் ஒரு வைரம்!

Voice on Wings சொன்னது…

ராம்கி, வர\வேண்டும். வெகு நாட்களுக்குப் பிறகு வந்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். பதிவுகள், பின்னூட்டங்களில் கூட உங்களைப் பார்த்து வெகு நாட்கள் ஆகி விட்டது போன்ற ஒரு உணர்வு. எப்படி இருக்கிறீர்கள்? வீட்டில் எல்லோரும் நலம்தானே?

மகுடம், வைரம் என்றெல்லாம் என்னைக் கலக்கப் படுத்துகிறீர்கள், அதற்கெல்லாம் நான் உரியவனா என்ற வலுவான சந்தேகம் எனக்கு இருக்கிறது :)

இந்தப் பிரச்சனைகளை எல்லாம் கடந்து அமைதியாக இயங்கிக் கொண்டிருக்கலாம் என்று உத்தேசிக்கிறேன். நீங்களும் அவ்வப்போது பதிவெழுதலாமே?