ஞாயிறு, ஏப்ரல் 23, 2006
தமிழ்ப்பதிவுகளில் ஆங்கிலம் ஏன்?
மேலே 'மார்க்கெட்டிங்' என்று ஆங்கிலத்தில் எழுதியதைச் சுட்டிக் காட்டத் துடிதுடிக்கும் உங்கள் கரங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். இது ஆங்கிலத்தை எதிர்த்து எழுதப்பட்டதல்ல. நானும் அவ்வப்போது ஆங்கிலச் சொற்களை இடையிடையே புகுத்தி எழுதுபவன்தான், மற்றும் அவ்வாறு எழுதுவது அவரவரின் சொந்தத் தேர்வு என்பது என் கருத்து. அதில் விமர்சனம் செய்வதற்கு எதுவும் இருப்பதாக நான் நினைக்கவில்லை.
இந்தப் பதிவு எழுதக் காரணம், பின்னூட்டங்களில் பெருகி விட்ட ஆங்கிலப் பயன்பாடு. வழக்கமாக தமிழில் எழுதும் பழக்கமுடையவர்களும் அவ்வப்போது, "மன்னிச்சிக்கோங்க, கலப்பைய வீட்டிலேயே வச்சிட்டு வந்துட்டேன். இப்போதைக்கு ஆங்கிலத்துல உழுதுக்கறேன்" என்று உழுதுவிட்டுப் போய்விடுகிறார்கள். இதில் பல, தங்கிளிஷில் வேறு. kodumaidaa, saami. இன்னொன்று, அண்மையில் கலந்து கொண்ட சில விவாதங்களில் என்னை நோக்கி ஆங்கிலத்தில் கேள்விக் கணைகள் தொடுக்கப் பட்டதால் அவற்றிற்கு நானும் ஆங்கிலத்திலேயே விடையளிக்க வேண்டி வந்தது. அதற்கான எதிர்வினைகள் மறுபடியும் ஆங்கிலத்தில். இப்படியாக, தமிழில் எழுதப்பட்ட ஒரு பதிவை பற்றி ஆங்கிலத்தில் விவாதம் நடந்து கொண்டிருந்தது. நானும் அதற்கு உடந்தை :) ஒருவேளை நான் மொழி மாறாமல்் தமிழிலேயே தொடர்ந்திருக்க வேண்டுமோ என்னவோ. பொதுவாக, கேள்வி எந்த மொழியில் கேட்கப்படுகிறதோ அதே மொழியில் விடை தருவது நாகரீகமான செயல் எனபதானால்தான் நான் ஆங்கிலத்திற்கு மாறினேன். அப்படிப் பார்த்தால், ஒரு தமிழ்ப்பதிவுக்கு ஆங்கிலத்தில் பின்னூட்டம் விடுவதும் அநாகரீகமானதுதானே? இந்த மாதிரியான semantic பிரச்சனைகள் பற்றி ஆழ்ந்து யோசிக்க வேண்டும்.
கலப்பையை வீட்டில் வைத்து விட்டேன் என்று ஆங்கிலத்திலோ தங்கிளிஷிலோ எழுதுபவர்கள், மற்றும் தமிழில் உள்ளிட வேண்டுமென்றால் அ, ஆ, இ, ஈ என்று label செய்யப்பட்ட keyboard வைத்திருக்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டிருப்பவர்கள் - இவர்களுக்காகவே இப்பதிவு. முதல் வகையைச் சேர்ந்தவர்களுக்கும், இரண்டாம் வகையைச் சேர்ந்தவர்களுக்குமுள்ள வேறுபாடு, ஐ.ஐ.டி மாணவர்களுக்கும் சி.ஐ.டி மாணவர்களுக்குமுள்ள வேறுபாட்டைப் போன்றது என்பதால் இருவருக்கும் வெவ்வேறு ஆலோசனைகள் வழங்குகிறேன். (சி.ஐ.டி. ரொம்பல்லாம் மோசம் கிடையாதுங்க, நானும் அதன் வெளியீடுதான் :) )
முதலில், இரண்டாம் வகையைச் சேர்ந்தவர்களுக்கு ஒரு நற்செய்தி. A, B, C, D என்று label செய்திருக்கும் ஆங்கில keyboardகளைக் கொண்டே தமிழில் தட்டச்சு செய்யலாம். இப்பக்கத்திலுள்ள சுரதாவின் புதுவை தமிழ் எழுதியைக் கொண்டு நீங்கள் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து, உங்களுக்கு வேண்டிய தமிழ் வாக்கியங்களைப் பெறலாம். அவற்றை வெட்டி, வேண்டிய பின்னூட்டப் பெட்டியில் ஒட்டி, சமர்ப்பித்தால், உங்கள் பின்னூட்டங்களும் தமிழிலேயே இடப்படும். தொடக்கத்தில் தட்டச்சுவது கடினமாக இருக்கும், நாளடைவில் பழகி விடும். அதற்குப் பிறகு நீங்களும் கலப்பையைத் தூக்க ஆரம்பித்து விடலாம்.
இப்போது முதல் வகை. எனக்கு நிஜமாகவே புரியாத புதிர் - நீங்களும் மேலே குறிப்பிட்ட வழிமுறையைப் பின்பற்றி தமிழிலேயே பின்னூட்டமிடலாமே, ஏன் செய்வதில்லை? கலப்பைக்கு பழகிப்போனதால் வேறு நிரலிக்கு மாறிக் கொள்ள இயலவில்லையா? ் அப்படியென்றால், மற்றும் நீங்கள் பயன்படுத்தும் கணினியில் Firefox உலாவி நிறுவப்பட்டிருக்கிறதென்றால், என்னால் கலப்பையில்லாமலேயே தமிழில் உழுவதற்கு ஒரு உத்தியைப் பரிந்துரைக்க முடியும். அதுவே, தமிழாவின் TamilKey Firefox Extension. 10KBக்கும் குறைவாகவே இருப்பதால், இதை ஒரு நொடியில் தரவிறக்கி நிறுவ முடியும். நிறுவிய பின், கலப்பையைப் போன்றே, இதைக் கொண்டும் உலாவியில் நேரடியாகத் தமிழில் உள்ளிடலாம். அஞ்சல் (romanized) மற்றும் தமிழ்நெட் 99 ஆகிய இரு வடிவமைப்புகள் இதில் வழங்கப்பட்டிருக்கின்றன. Ctrl+F12 அழுத்தினால், உங்கள் உள்ளீடுகள் அஞ்சல் முறையில் தமிழில் பதியும். F12 அழுத்தினால் தமிழ்நெட்99 முறையில் தமிழில் பதியும். F9 விசையை வைத்து ஆங்கிலத்திற்கும் தமிழுக்கும் மாறிக் கொள்ளலாம். விண்டோஸ் இயங்கு தளத்தில் மட்டுமல்லாது லினக்ஸ் போன்ற பிற இயங்கு தளங்களிலும் இதைப் பயன்படுத்தலாம். Chatzilla அரட்டை நீட்சியில், இதைக் கொண்டு தமிழில் chatting செய்யலாம். உங்கள் Gmail கணக்கிலிருந்து தமிழிலேயே மின்மடல்கள் எழுதி அனுப்பலாம். இது போன்ற வசதிகளால், ் பயணத்தின் போதும் பொது இணைய மையங்களிலிருந்து உங்களால் தமிழ்க்கணிமையைத் தொடர வாய்ப்பிருக்கிறது (Firefox உலாவி மட்டும் இருந்துவிட்டால்).
சனி, ஏப்ரல் 22, 2006
ஒரு வழக்கமான பதிவு
காணாமல் போயின
நதியும் குளமாகி
மறைந்தே போனது
முல்லையும் மருதமும்
பாலையாய் ஆனது
குறிஞ்சியோ விரைவாக
சமவெளியாய் மாறுது
விலங்குகள் வேட்டையால்,
மெதுவாய் அழிந்தன
எஞ்சியவை மரித்தன
உணவு நீரின்றி.
கடலின் நிறமும்
கருமையாகிப் போனதால்
மீன்களும் சுறாக்களும்
மிதந்தன நீரின் மேல்
தீப்பெட்டிக் கட்டடங்கள்
எங்கும் முளைத்தன
புகையின் மூட்டமும்
நாசியைத் துளைத்தது
இரவு பகலானது
இரைச்சல் மயமானது
மனிதரின் சாதனை
இவ்வுலகின் வேதனை.
ஞாயிறு, ஏப்ரல் 16, 2006
சுயநலவாதம்
வெள்ளி, ஏப்ரல் 14, 2006
காத்திருந்து..... காத்திருந்து.......
வேளை கெட்ட வேளையில்
உனை miss பண்ணும் இதயத்தை
சாந்தப் படுத்திடவே
குறுஞ்செய்தியும் அனுப்பி
அழைப்பும் விடுத்தேன்,
கிடைத்ததா, கண்மணியே?
காத்திருக்கேன்் இங்கு
தூதுவனை நோக்கியே,
வருவாய் நீயென்றே.
டிவியும் சலித்ததின்று,
இன்னிசையும் இறைச்சலாய்
தோன்றுதே, என்ன செய்வேன்?
சீக்கிரம் வந்துன்னைச்
சீண்டுமின்பம் தா,
தாமதிக்காதே, அன்பே.
அதுவரை வரிகளை
ஒடித்துக் கவிதை போல்
வடித்து வலையேற்றுவேனே.
வெள்ளி, ஏப்ரல் 07, 2006
வர்ணாஸ்ரமமக் கொள்கை
இந்தியாவிலேயே பகுத்தறிவின் பாசறையாக விளங்கும் தமிழ்நாட்டில், ஒரு முன்னணி நாளிதழ் அதன் வாசகர்களுக்கு, இத்தேர்தலில் போட்டியிடும் சில பெண் வேட்பாளர்களைப் பற்றிய சில முக்கியத் தகவல்களை, 'நச்சென்று' வழங்கியுள்ளது. அத்தகவல்களைக் காண, கீழேயுள்ள படத்தைச் சொடுக்குக. (அது வழங்கியுள்ள அதிமுக்கியத் தகவல்களை சிவப்புக் கோடிட்டுக் காட்டியுள்ளேன்.)வாழிய செந்தமிழ், வாழிய நற்றமிழர், வாழிய பாரத மணித்திரு நாடு!
வியாழன், ஏப்ரல் 06, 2006
விரதம்
விஞ்ஞான வளர்ச்சிகளால் சாத்தியமடைந்த இன்றைய நகர்ப்புற, நவீன வாழ்க்கை முறைகள் இன்று அனைவராலும் ஆவலுடன் ஏற்றுக் கொள்ளப்பட்டு, மனித இனத்தின் முன்னேற்றத்திற்கான அறிகுறிகளாக முன்வைக்கப்படுகின்றன. இத்தகைய வசதியான வாழ்வு முறைகளால், வாழ்க்கை முன்பை விட சுலபமடைந்திருக்கிறதா என்ற கேள்விக்கு தெளிவான விடைகள் கிடைப்பது அரிதே.
உடலுழைப்பு குறைந்திருக்கிறது என்பது உண்மையே. ஆனால் இத்தகைய மாற்றத்தால் மக்களுக்கு உடற்பயிற்சி குறைந்து போய், அது் பல மருத்துவச் சிக்கல்களை உண்டாக்குவதையும் காண முடிகிறது. 1000+ cc எஞ்சின் (உந்துபொறி என்று தமிழில் அழைக்கலாம்) கொண்ட சொந்த வாகனங்கள், உலகின் மூலை முடுக்குகளையெல்லாம் இணைக்கும் 6/8 வழிப்பாதைகள் கொண்ட நெடுஞ்சாலைகள், தும்மி முடிப்பதற்குள் கொண்டு சேர்ப்பிக்கும் ஆகாய விமானங்கள், என்று உலகில் பயணம் செய்வது மிக எளிதான ஒரு செயலாகி விட்டது. அதற்கு நாம் கொடுக்கும் விலை global warming எனப்படும் உலகளாவிய சூடேற்றமாகும். இதனால் உலகின் பனிப்பாறைகள் உருகி, கடல்களின் உயரம் பெருகி, ஒரு நூறாண்டுகளுக்குள்ளாகவே பல தீவுகள், மாகாணங்கள் ஆகியன கடலால் விழுங்கப்பட்டு, இருந்த இடம் தெரியாமல் மறையப்போகும் அபாயம் நம்மை அச்சுறுத்துகிறது. குளிர்சாதனப் பெட்டிகள், குளிர்பதனப்பெட்டிகள் ஆகியவை உண்மையிலேயே வரப்பிரசாதம்தான், அதுவும் வெப்பநிலை அதிகமுள்ள நம்மைப்போன்ற நாட்டினருக்கு. ஆனால், ஆவை வெளியிடும் வாயுக்களால், நம் உலகின் ஓசோன் காற்று மண்டலம் ஒரு சைக்கிள் டியூப் பஞ்சர் ஆவது போல் பஞ்சர் ஆகிக் கொண்டிருக்கிறது. இதனால் சூரியக் ஒளியிலுள்ள சில அபாயகரமான கதிர்கள் நம்மை நேரடியாகத் தாக்கும் அபாயமேற்பட்டிருக்கிறது. கிரிக்கெட் வீரர்கள் தங்கள் முகத்தில் களிம்புகள் பூசிக் கொண்டு களத்திற்கு வருவது இத்தகைய அபாயத்திலிருந்து தம்மைக் காத்துக்கொள்ளுவதற்கே.
இவ்வாறாக, எது முன்னேற்றம், எங்கே முன்னேற்றம் என்ற கேள்விக்கு விடை மழுங்கலாகத்தான் நமக்குக் கிடைக்கிறது. இதனால் மட்டுமே, முன்னேற்றம் என்ற பெயரில் முன்வைக்கப்படும் எந்தவொரு மகா / மெகா திட்டத்தையும் ஒரு சந்தேகத்துடனே பார்க்க வேண்டியது அவசியமாகிறது. மனித இனத்தின் / உலகின் வருங்காலத்திற்கு பாதிப்பு என்ற கவலையாவது தொலைநோக்குப் பார்வை என்ற வகையில் வரலாம். அது அனைவருக்கும் எப்போதும் இருக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமுமில்லை. ஆனால், நம் நாட்டில் மேற்கொள்ளப்படும் மகா திட்டங்களால் பலருக்கு உடனடி பாதிப்பு என்பது தெள்ளத் தெளிவான ஒரு உண்மை. இருந்தும் வருடா வருடம் திட்டங்கள் தீட்டப்படுகின்றன. கோடிகள் விரயமாகின்றன. தங்க நாற்கரங்கள் அமைக்கப்படுகின்றன. சேது சமுத்திரக் கால்வாய்கள் அகழப் படுகின்றன. அடுக்கு மாடிக் கட்டடங்கள் எழுப்பப் படுகின்றன. பாலங்கள் கட்டப்படுகின்றன. அணைகள் உயர்த்தப்படுகின்றன. அணு உலைகள் முடுக்கி விடப்படுகின்றன. சுரங்கங்கள் தோண்டப்படுகின்றன. காடுகள் அழிக்கப்படுகின்றன.
இவை மேற்கொள்ளப்பட்டு, திட்டம் தொடங்கும் நாள் வரை அது பற்றிய ஒரு முன்னறிவிப்பு கூட அளிக்கப்படாமல், அப்பகுதிகளில் காலகாலமாய் வாழ்ந்து வந்த விவசாயிகள், பழங்குடி இனத்தவர், குடிசை வாழ் மக்கள், மீனவர்கள், சிறுவணிகர்கள் என்று நம் நாட்டில் taken for granted ஆசாமிகள் ஏராளம். தம் அன்றாடப் பிரச்சனைகளே தம்மை மூழ்க்கடிக்கும் நிலையில், இவர்கள் தங்கள் உரிமைக்காகப் போராடும் சக்தியை முற்றிலும் இழந்து நிற்கிறார்கள். கல்லாமை, வெளியுலகத் தொடர்பின்மை போன்ற போதாமைகளாலும் இவர்களால் தங்கள் உரிமைகளை முழுமையாக நிலைநாட்ட முடியாமல் போய்விடுகிறது. இத்தகைய இயலாமைகளால் அவதிப்படும் இப்பெரும் மக்கள் கூட்டத்தை, அரசும், வர்த்தகமும் எளிதில் கிள்ளுக்கீரைகளாகக் கிள்ளி எறிந்து விட முடிகிறது. தூசித் தட்டுவதைப் போல் தன் ஒட்டடைக் குச்சிகளான காவல் துறை, மற்றும் நீதித்துறை ஆகியவை கொண்டு இவர்களை விரைவில் அப்புறப்படுத்த முடிகிறது.
இத்தகைய நடவடிக்கைகளுக்கு, படித்த மக்கள் கூட்டமான நம்மைப் போன்றோரும் உடைந்தையே. ஐந்து நிமிடங்களுக்கு மின்சாரம் தடைப்பட்டுப் போனால், நமக்கு வாழ்க்கையே ஸ்தம்பித்து விடுகிறது. அமெரிக்காக் காரனிடமிருந்து அணுசக்திக்கான எரிபொருள் கிடைக்குமா என்று யோசிக்கிறது புத்தி. ஒன்றிரண்டு அடிகள் அகலமுள்ள வாகனங்களுக்கு பதிலாக ஐந்தாறு அடிகள் அகலமுள்ள வாகனங்களில் அனைவரும் செல்வதால் ஏற்படும் நெரிசலால் பயண நேரம் மும்மடங்காகப் பெருகியதால், சாலைகளை அகலப்படுத்தக் கோரி Letters to the Editor எழுதத் தூண்டுகிறது நம் பொறுமையின்மை. நம் 24 மணி நேர தண்ணீர் தேவைகள் பூர்த்தியடைய, கங்கையையும் காவிரியையும் இணைக்குமாறு அனைத்து ஊடகங்களிலும் அழுத்தங்கள் வேறு. விமான நிலையங்கள் பேருந்து நிலையங்கள் போலாகி விட்டனவே / விடுமே என்றெல்லாம் ஆழ்ந்த கவலைகள் நமக்கு. அவற்றை விரிவாக்கக் கோரி தலையங்கங்கள், தொலைக்காட்சி நிலையத்திற்கு குறுஞ்செய்திகள், மற்றும் இத்தகைய அரசு திட்டங்களுக்கு கைத்தட்டி ஆரவாரங்கள், ஆர்ப்பரிப்புகள்...... பெங்களூருக்கு ஏழு மணி நேரம் எடுத்துக் கொண்ட சாலைவழிப் பயணத்தை மூன்று மணி நேரத்திலேயே முடிக்க ஆசை, ஆகவே நெடுஞ்சாலைத் திட்டத்திற்கு நிபந்தனைகளற்ற ஆதரவு....... இப்படி நம் நிலைப்பாட்டில் சுயநலம் ஒன்றையே காணமுடிகிறது. இத்திட்டங்களால் தூசி தட்டப்படுவதைப் போல் அப்புறப்படுத்தப் படும் மக்களைப் பற்றிய கவலையோ, அக்கறையோ சிறிதளவுமில்லை நமக்கு.
நல்லவேளையாக நம்மைப் போலல்லாமல், சில படித்த அறிவுஜீவிகள், அப்பாவி மக்களுக்கு ஆதரவாக களத்தில் இறங்கியிருக்கிறார்கள். சுந்தர்லால் பகுகுணா, பாபா ஆம்தே, அன்னா ஹசாரே போன்ற நல்லுள்ளம் படைத்தவர்கள் வரிசையில் கடந்த இருபது ஆண்டுகளாக மேதா பட்கர் பாதிக்கப்பட்ட மக்களை ஒன்று் திரட்டி, நர்மதா அணைத் திட்டத்தை எதிர்த்து போராடி வருகிறார். இவரது போரட்டத்திற்கு அருந்ததி ராய் போன்ற பிரபலங்களின் ஆதரவும் உண்டு. போராட்டத்தின் உச்சக் கட்டமாக, கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக உண்ணாவிரதம் மேற்கொண்டு, அரசை அதன் திட்டத்தை மறு பரிசீலனை செய்யும் நிலைக்குத் தள்ளும் முயற்சியில் இறங்கியுள்ளார் மேதா. அவரது இப்போராட்டத்தை மனப்பூர்வமாக ஆதரிப்பதோடு, இத்தகைய அணைத்திட்டங்களை அவசியமாக்கும் நம் நுகர்வுப் பழக்கங்களையும் கேள்விக்குள்ளாக்க வேண்டும். நம் தேவைகளை சற்று குறைத்துக் கொண்டிருந்தால்், இன்று மேதாவின் உண்ணாவிரதத்திற்குத் தேவையிருந்திருக்காதோ என்னவோ.
வெள்ளி, மார்ச் 31, 2006
Pink Floyd கவிதை - என் பங்குக்கு
--------------------------------------------
ஓ, இசை நிகழ்ச்சிக்கு வந்து
ஆனந்திக்கலாமெனத் திட்டமிட்டாயோ?
இதன் குழப்பம் தரும் போதையை,
ஒளி வீச்சு தரும் மமதையை,
உணரத் துடிக்கின்றாயோ?
உனக்கொரு நற்செய்தி, என் தங்கமே!
உன் 'pink' இன்று வரவில்லை, மாறாக
நாங்களே இசைப்போம், உனை்னை மகிழ்விக்க.
அதற்குமுன், உன் தலை தப்புமா என்றொரு சோதனை.
அரங்கில் யாரேனும் ஓரினக் காதலரா?
எனில், இச்சுவற்றின் முன் நிறுத்துங்கள்
அங்கொருவனின் தோற்றமே சரியில்லை
அவனையும் சுவற்றின் முன் நிறுத்துங்கள்
அதோ, அவனென்ன யூதனா?
இதோ, இவன் உறுதியாகக் கறுப்பன்தான்்!
அங்கே அவன் புகைப்பதென்ன, கஞ்சாவா?
இங்கிவன் மீதென்ன, தழும்புகளா?
யார் வரவிட்டது இக்கழிசடைகளை?
நான் நினைப்பது மட்டும் நடக்குமானால்,
நீரனைவரும் இரையாவீர், துப்பாக்கிச் சூட்டினிலே.
இதன் மூலப்பாடலின் வரிகள் மற்றும் ஒலிக்கோப்பு (Real Audio)
திங்கள், மார்ச் 27, 2006
Being Cyrus: திரை விமர்சனம்
நம் திரை விமர்சகர்களிடையே உள்ள ஒரு குறைபாடு என்னவென்றால், லாப நோக்கோடு formula அம்சங்கள் என்று கருதக்கூடிய சண்டைக் காட்சிகள், கவர்ச்சி நடனங்கள், பாடல் காட்சிகள், நாயக வழிபாடுகள், ஆகிய எதுவும் இல்லாமல் ஒரு படம் வெளி வந்தால், அதை ஆகாய உயரத்திற்கு உயர்த்துவதே ஆகும். எனது அணுமுறை என்னவென்றால், இவையனைத்தையும் படத்தில் சேர்க்கவில்லை என்பதைக் கடந்து, அப்படத்தின் நிறை குறைகளை ஆராய வேண்டுமென்பதே. அண்மையில் 'தவமாய் தவமிருந்து', 'அன்பே சிவம்' போன்ற படங்களைப் புகழ்ந்து ஒரு meme அளவிற்கு பதிவுகள் வெளிவந்தது நினைவிருக்கலாம். Formula அம்சங்களைச் சேர்க்கவில்லை என்பது நிச்சயமாக ஒரு ஆரோக்கியமான முடிவுதான். அதற்கு மேல், அப்படத்திற்கு சொந்தக்காலில் நிற்கும் அளவிற்கு வலுவுள்ளதா என்பதையே ஆராய்ந்து விமர்சிக்க வேண்டும். ஒரு உவமையுடன் கூற வேண்டுமென்றால், ஒருவனுக்கு குடிப்பழக்கம், புகைப்பழக்கம் மற்றும் வேறெந்தக் கெட்டப் பழக்கமுமில்லை என்பதற்காகவே அவன் ஒரு சிறந்த மணமகனுக்கான தகுதி படைத்தவன் என்ற முடிவிற்கு வர இயலாதல்லவா? இந்த நல்ல குணங்களுடன், அவன் அன்பு செலுத்தக்கூடியவனா, மரியாதை தெரிந்தவனா, நீதி / நேர்மை பாராட்டுபவனா, குடும்பத்தைக் கட்டிக் காப்பாற்றும் திறமை படைத்தவனா, என்பதையெல்லாம் ஆராய்ந்த பிறகுதானே அவனது தகுதியை முடிவு செய்ய இயலும்?
இப்போது, Being Cyrus. விமர்சக தர்மத்தைக் கடைபிடித்து, கதையை வழங்கப்போவதில்லை. உங்கள் படம் பார்க்கும் திட்டத்தைக் கெடுக்கும் எண்ணமெல்லாம் எனக்குக் கிடையாது. படத்தைப் பார்த்த பின் எழுந்த தீவிரமாக கருத்துகளை மட்டுமே இங்கு வழங்குகிறேன். முதலில், formula அம்சங்கள் இல்லாத படம் என்பதைக் குறிப்பிட்டு விடுகிறேன். சைஃப் அலி கான், நஸ்ரருத்தீன் ஷா, போமன் இரானி, டிம்பிள் கபாடியா என்று நட்சத்திரப் பட்டாளத்திற்குக் குறைவில்லை. இவர்களைக் கடந்து இரண்டு மூன்று பிரதான பாத்திரங்கள் - முதியவரொருவர், போமனின் மனைவியாக வரும் சிமோன் சிங், மற்றும் ஒரு காவலதிகாரி வேடத்தில் மனோஜ் பாஹ்வா. அனைவரின்் நடிப்பும் எனக்குப் பிடித்திருந்தது, குறிப்பாக (வரிசைப்படி) டிம்பிள், போமன், நஸ்ரருத்தீன், மனோஜ், சிமோன்....... சைஃபுக்கு கொஞ்சம் அடக்கி வாசிக்கும் பாத்திரம்தான்.
இந்தியாவின் சிறுபான்மை மதமான பார்ஸி மதத்தைச் சேர்ந்த ஒரு குடும்பம், அதன் அங்கத்தினர், அவர்களுக்குள்ளான பிரச்சனைகள், என்று பின்னப்பட்டிருக்கிறது கதை. பார்ஸி பின்னணியால் கதைக்கு எந்த சிறப்பும் கிடையாது. அச்சமூகத்தின் வாழ்வு முறைகள், வழக்கங்கள், அது சந்திக்கும் பிரச்சனைகள் என்பதைப் பற்றியல்ல கதை. வேறொரு மதத்தை சார்ந்த அல்லது மத சார்பற்றவொரு குடும்பமாகக் காட்டியிருந்தாலும் கதையில் எந்த மாற்றமுமிருந்திருக்காது. அதுவே எனது முதல் ஏமாற்றம். கதைக்குத் தேவையில்லாமல், அவர்களின் உடைகள், வீட்டின் அமைப்புகள், பழக்க வழக்கங்கள் என்று அநாவசியமான திசை திருப்பலாகவே அமைகிறது, கதையின் பார்ஸி பின்னணி. ஆனால் எனது முக்கியமான பிரச்சனை அதுவல்ல.
மிகவும் பரிதாபத்திற்குரிய நிலையில், அவலமானதொரு வாழ்க்கையை வாழ்ந்து் கொண்டிருக்கும் சில ஜீவன்கள், அவர்களைச் சுரண்டி / ஏமாற்றிப் பிழைக்கும் வேறு சிலர், என்று தொடங்குகிறது படம். இவர்களது வாழ்க்கையில் ஒன்று சேரும் சில மூன்றாம் தரப்பினர், மற்றும் அவர்களது செயல்கள் அக்குடும்பத்தில் உண்டாக்கும் பாதிப்புகள்் என்பதுதான் கதை. வேறு மாதிரியாகக் கூற வேண்டுமென்றால், சாமர்த்தியமாகச் செயல்படும் சில சூழ்ச்சிக்காரர்களின் குற்றங்களால், சாமர்த்தியம் போதாத வேறு சில சூழ்ச்சிக்காரர்கள் சட்டத்தின் பிடியில் சிக்குகிறார்கள், அல்லது கொலை செய்யப்படுகிறார்கள். இந்த ஆட்டத்தில் அப்பாவிகள் காவு கொடுக்கப்படுகிறார்கள். முன்பு கூறிய சாமர்த்தியசாலிகள், சட்டத்தின் பிடியிலிருந்து தப்பியதோடு, கோடிக்கணக்கான சொத்துக்களின் வாரிசுதாரர்களாகிறார்கள். ஆகவே, 'எத்தகைய குற்றத்தைச் செய்தாலும், சாமர்த்தியசாலியாக மட்டும் இருந்து விட்டால், சட்டத்தின் பிடியிலிருந்து எப்படியாவது தப்பித்து விடலாம்்' என்பதுதான் இப்படம் போதிக்கும் அறநெறி. இதற்கு, "கசப்பான உண்மை உள்ளபடி வழங்கப்பட்டிருக்கிறது" போன்ற சப்பைக்கட்டு வாதங்களைக் கேட்க வாய்ப்பிருக்கிறது. அதற்கு எனது எதிர்வினை: யாருடைய பக்கம் நியாயப்படுத்தப் பட்டிருக்கிறது என்பதைத் தெளிவாகவே புரிந்து கொள்ள முடிகிறது. இளம்பருவத்தில் சந்தித்த கொடுமைகளுக்கெல்லாம் தீர்வு, சாமர்த்தியமான முறையில் சூழ்ச்சிகள் செய்து (அதுவும், துளியும் சம்மந்தமில்லாதவொரு குடும்பத்தை அழிக்கும் வகையில்) கோடிகளுக்கு வாரிசாவதே, என்ற ஆலோசனை தெளிவாக வழங்கப்பட்டிருக்கிறது. (இறுதியில் "we have arrived", என்று தம் முதுகிலேயே தட்டிக்கொள்ளுதல் வேறு). இத்தகையவொரு நச்சுக் கருத்தைத் தாங்கி வரும் ஒரு படம், எந்த intellectual, arty பாசாங்குகளுடன் வந்தாலும், அதற்கு எனது கண்டனங்களே மிஞ்சும்்.
உண்மை / யதார்த்தம் படம் பிடிக்கப்பட்டிருக்கிறது என்று புருடா விடுபவர்களுக்கு - கை ரேகைகளை வைத்து ஆள் மாறாட்டம் என்றொரு பூச்சுற்றல் செய்யப் பட்டிருக்கிறது. எனக்கு forensics பற்றி அதிகம் தெரியாது. இருந்தும், வேறொருவருடைய கை ரேகைகள் பதிந்த glovesஐ மாட்டிக் கொண்டு, தேர்ந்த புலனாய்வாளர்களை ஏமாற்றுவது அவ்வளவு எளிதான காரியமா என்பது ஐயமாகத்தானுள்ளது. மேலும் கொலை விசாரணைகளில் motive நிச்சயமாக ஆராயப்படும் என்று நினைக்கிறேன். ஒரு வீட்டில் இரு கொலைகள் நடந்து, அதன் விளைவாக ஒருவருக்கு கோடிக்கணக்கில் சொத்துக்கள் கைவசம் வருகின்றன என்றால் அவர் மீதுதானே முதலில் சந்தேகம் வரும்? இப்படியாக, உண்மையும் தேவைக்கேற்றவாறு திரித்து வழங்கப்பட்டிருக்கிறது.
இன்னொரு உறுத்தும் தகவல் - பெண்ணின் சதை ஒரு சர்வ சாதாரணக் காட்சிப் பொருளாகப் பயன்படுத்தப்பட்டிருப்பது, எந்தவொரு தேவையுமின்றி. டிம்பிள் கபாடியா ஒரு பாலுறவுக்கு ஏங்கும் நடு வயதுப் பெண்மணியாம். அவரைப் பற்றி நாயகனின் குரலில் இப்படியொரு விவரிப்பு - every one makes eye contacts, but she makes breast contacts with her every move. இதற்கு ஏற்ற காட்சியமைப்பு வேறு. மற்றும், மும்பை தெருவில் தூங்கும் ஒரு பிச்சைக்காரியின் ஆடை விலகல், அதனூடாகத் தெரியும் அவளது சதை. இன்னொரு காட்சியில், ஏறக்குறைய முழு நிர்வாணமாக ஒரு கனவுலக ஸ்த்ரீ. இதுவல்லவோ கலைநயம்? மேலும், எந்தவிதத் தயக்கமுமில்லாமல் வசைமாரிகள் வேறு...... bitch, bastard என்று, படம் முழுவதும். இவையெல்லாம் ஒரு படத்தில் இடம்பெறக்கூடாதென்பதல்ல எனது வாதம். "இது போன்ற காட்சிகள் கலாச்சாரச் சீரழிவுக்கே நம்மைக் கொண்டு செல்லும், ஆகவே இவற்றைத் தடை செய்ய வேண்டும்" என்று முழங்கும் தூய்மைவாதியல்ல நான். சமூகம் அல்லது வாழ்க்கையைப் பற்றிய விமர்சனத்தை வைக்கும் வகையில், இது போன்ற அம்சங்களைப் பயன்படுத்தி, ஒரு தாக்கதை ஏற்படுத்தும் genuine கலைப்படங்களை நானறிவேன். ஆனால் இது போன்றவற்றைப் பயன்படுத்தி, இதுவும் ஒரு கலைப்படமே என்று நிறுவ முயற்சிக்கும் wannabe படைப்புகள் எரிச்சலையே வரவழைக்கின்றன.
இறுதியாக, இதன் நிறைகுறைகளோடு இதைக் கண்டு களிக்கலாம். ஆனால் இதை ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கும் அபத்தங்களெல்லாம் நடக்காது என்றே நம்புகிறேன், பார்க்கலாம்.
திங்கள், மார்ச் 20, 2006
வீட்டிற்குள் வேற்றுமை பாராட்டல்
வீட்டில் பல அரிய பாடங்கள் புகட்டப் படுகின்றன. சாதி வேற்றுமை பாராட்டுவது அவற்றில் முக்கியமானவொன்று.
உலகின் மற்ற இடங்களைப் போலல்லாது, இந்தியாவின் நகர்ப்புற வாழ்க்கை அளிக்கும் ஒரு வசதி, வீட்டு வேலைகளுக்கு பணியாள் அமர்த்தும் வசதியாகும். உயர் பதவியிலிருப்பவர்களின் குடும்பங்கள் இவ்வசதியைப் பயன்படுத்தத் தவறுவதில்லை. பொருளாதார அடிப்படையில் நோக்கினால், ஒருபுறம் இச்சேவையைக் கோருபவர்கள், மற்றும் மறுபுறம் இச்சேவையை வழங்கி, தங்கள் ஏழ்மையை ஓரளவுக்காவது சமாளிக்க எண்ணுபவர்கள், என்று இரு தரப்புத்் தேவைகளையும் நிறைவேற்றும் ஒரு ஏற்பாடாக இது அமைகிறது. ஆகவே, வலுவான பொருளாதார நியாயங்களை இதற்கு ஆதரவாக முன்வைக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால், இதில் அவ்வளவாகக் கண்டு கொள்ளப்படாத ஒரு அம்சம் உண்டெனில், அது இவ்விரு தரப்பினர்களுக்குமிடையே உள்ள சாதி வேற்றுமையே ஆகும். விரிவாகக் கூற வேண்டுமென்றால், மேலே குறிப்பிட்ட உயர் நிலையிலிருக்கும் குடும்பங்கள், பெரும்பாலும் உயர் சாதிகளைச் சேர்ந்தவை. கால காலமாகக் கிடைத்து வந்த சாதகமான சமூகச் சூழலால், கல்வி மற்றும் பொருளாதார அடிப்படையில் வெகுவான முன்னேற்றங்களைக் கண்டு, தற்போதைய உயர் நிலையை எட்டியவை. இதற்கு நேர்மாறாக, அவர்களுக்குப் பணி செய்ய விழையும் கூட்டமோ, கிராமப்புறங்களிலிருந்து நகரத்திற்குக் குடிபெயர்ந்த, குடிசைப் பகுதிகளில் குடியிருக்கும், தாழ்த்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த மக்கள் கூட்டமாகும்.
ஆக, இங்கு நாம் காண்பது, இரு வேறு பின்புலங்களையும் சாதியமைப்புகளையும் சார்ந்த மக்கள், தத்தம் தேவைகளை முன்னிட்டு ஒன்று கூடும் ஒரு சூழலை, அதுவும் வீடு எனப்படும் பொதுப்பார்வைக்கப்பாற்பட்ட ஒரு தனியிடத்தில். விழிப்புணர்வு மிக்க இந்நாட்களில், பொதுவிலே எவரும்,் முற்போக்கு, தாராள குணம், சமத்துவம், மதசார்பின்மை, போன்ற நல்லெண்ணங்களைப் பறைசாற்றத் தவறுவதில்லை, மேலே குறிப்பிட்ட உயர் நிலையிலுள்ள குடும்பத்தினர்களையும் உள்ளிட்டு. ஆனால் வீட்டிற்குள்ளேயோ, அவர்களது இக்கொள்கைகளெல்லாம் ஆவியாய் மறைவதைத்தான் காண முடிகிறது.
காலகாலமாகப் பாதுகாத்து வந்த சாதீயச் சிந்தனைகள் இங்கு தலைவிரித்தாடுவதைக் காணலாம். தங்களது உயர் சாதிப் பின்புலத்தை நினைவுப் படுத்திக் கொண்டு், தங்கள் வீட்டிற்குப் பணி செய்ய வரும் பணியாளர்கள் மீது அவர்கள் விதிக்கும் கட்டுபாடுகள் கவனிக்கப்பட வேண்டியவை. ஒரு பணிப்பெண்ணிற்கு, கொல்லைக் கதவு வழியாகத்தான் வீட்டிற்குள் நுழைய அனுமதியுண்டு. இது சாத்தியப்படாத அடுக்கு மாடி வீடுகளில் மட்டுமே இந்நிபந்தனை சமரசம் செய்து கொள்ளப்படும். இதற்குக் காரணமென்ன என்று ஆராய்ந்தால், முன்கதவு, செல்வங்களைக் கொண்டு வரும் லட்சுமி தேவிக்காகத் திறந்து வைக்கப் பட்டிருக்கிறதாம். அதன் வழியாக ஒரு தாழ்த்தப்பட்ட பணிப்பெண் வருகை தருவதை அனுமதிக்க முடியுமா? மேலும், ஒரு பணிப்பெண்ணுக்கு வீட்டின் பல பகுதிகளுக்கு அனுமதி மறுக்கபடலாம். உ-ம், பூஜையறை, மேசை / நாற்காலிகள், அதி நவீனக் கழிப்பறைகள், வரவேற்பறை......... இப்படி ஒவ்வொரு வீட்டைப் பொறுத்தும் இது மாறுபடும். ஆக, அவர் உட்கார வேண்டுமென்றால் தரையில்தான் உட்கார வேண்டும். மற்றும் பணியாளர்களுக்கென்று வேறு கழிப்பறைகளிருந்தால் அவற்றைப் பயன்படுத்தலாம். அன்பின் அடையாளமாக, அவ்வப்போது அவருக்கு (கேள்விக்கிடமளிக்கும் தரத்தில்) காபி / தேநீர் / சிற்றுண்டிகள் வழங்கப்படலாம். அவை, அவருக்கென்று தனியாக ஒதுக்கப்பட்ட பிளாஸ்டிக் / அலுமினிய கோப்பைகளிலும் தட்டுகளிலும்தான் வழங்கப்படும். இல்லாவிட்டால், அக்குடும்பத்தினர் நிராகரித்து விட்ட பழைய steel / ceramic வகையறாக்களிலும் அவை பரிமாறப்படலாம். குடும்பத்தினர் பயன்படுத்தும் எப்பொருளும் பணியாளர்களின் பயன்பாட்டுக்கு வழங்கப்பட மாட்டாது என்பதே இங்கு வழிகாடும் கொள்கை. மீந்து போகும் உணவு வகைகள் மிக அன்புடன் வழங்கப்படும், இனி அதை குடும்பத்தினர் எவரும் சீந்த மாட்டார்கள் என்ற நிச்சயமேற்படும் நிலையில். தாகமெடுத்தால், குடிநீருக்கு பதிலாக குழாய் நீரையே பயன்படுத்திக் கொள்ளும் வசதியுமுண்டு, பணிப்பெண்ணுக்கு.
இதில் கவலை தரும் செய்தி என்னவென்றால், அப்பணிபெண் இத்தகைய வேற்றுமை பாராட்டல்களையெல்லாம் பொருட்படுத்தாமலேயே போக வாய்ப்பிருக்கிறது. இதாவது கிடைத்ததே என்ற நன்றியுணர்வும் அப்பெண்ணுக்கு வர வாய்ப்பிருக்கிறது. ஆனால், அவ்வீட்டில் வளரும் சின்னஞ்சிறுசுகள் இதையெல்லாம் பார்த்துக் குறிப்பெடுத்துக் கொண்டு, சாதீயச் சிந்தனைகளில் தங்களது பாலபாடங்களைப் பெறுவதுதான் இதன் வருத்தமான பின்விளைவு. இப்படியாக, சாதிக்கொடுமை என்பது இந்நாட்டில் ஒவ்வொரு தலைமுறைக்கும் எடுத்துச் செல்லப்படுகிறது, ஒரு உன்னதமான கலை வடிவத்தைப் போலவே.
PS - English version of this postசனி, மார்ச் 04, 2006
சென்னைச் சுற்றுலா
இந்த இரு சொற்களும் ஒன்றோடொன்று சம்மந்தமில்லாதவையா? ஒரு வெளியூர் பயணிக்கு ஆர்வமூட்டும் வகையில் சென்னை் வழங்குவதென்ன? எனக்குத் தெரிந்த வரை, சென்னை ஒரு வாடிக்கையான, மாறுதலில்லாத, குறிப்பிடும் வகையில் எந்தவொரு சுற்றுலா மையத்தையும் கொண்டிராத ஒரு routine நகரமென்றுதான் கூறவேண்டும். தில்லியென்று எடுத்துக்கொண்டால் ஏகப்பட்ட சரித்திரப் புகழ் வாய்ந்த இடங்கள், மற்றும் சில மணிநேரப் பயணத்தில் உலக அதிசயமான ஆக்ரா. மும்பையின் அருகாமையிலும்் எலிஃபென்டா குகைகள், மாதேரான், லோனாவ்லா, (அமீர் கான் / ரானி முகர்ஜி புகழ்) கண்டாலா, என்று எவ்வளவோ சுற்றுலா மையங்கள். ஹைதராபாதில் தடுக்கி விழுந்தால் வராலாற்றுச் சின்னங்களும் கட்டிடங்களும்தான். (சென்னையிலும் இதுபோன்ற பழைமை வாய்ந்த கட்டிடங்கள் ஆங்காங்கே உள்ளன, ஆனால் அவை அரசு மற்றும் இதர நிறுவனங்களின் அலுவலகங்களாக மாறி, அவற்றின் சிறப்பை இழந்து கொண்டிருக்கின்றன). பெங்களூருக்கு அருகாமையிலும்் சில சுற்றலாத் தலங்கள் (காடுகள், மலைகள், etc) உள்ளதாக அறிகிறேன். கொல்கத்தாவிலும் சாந்தி நிகேதன், பேலூர் மடம், விக்டோரியா நினைவகம் என்று அதன் பங்குக்கு சில இடங்கள், (மற்றும் அந்த ஊரே ஒரு மியூசியம் போலத்தான், டிராம் வண்டிகளென்ன, பாதாள இரயிலென்ன, என்று :) ). ஆக, சென்னைதான் இருக்கும் பெருநகரங்களிலேயே ஒரு monotonous exceptionஆ?
ஒரு சென்னைவாசிக்கு இருக்கும் தேர்வுகளைப் பார்ப்போம். சென்னையின் கடற்கரைகள் நிச்சயமாக அருமையானவை. மெரினாவை விட கொஞ்சம் கூட்டம் குறைவான Eliot's (பெசன்ட் நகர்), மற்றும் திருவான்மியூர் கடற்கரைகள் சற்று ஏற்புடையவை. இன்னும் தூரம் சென்றால் நீலாங்கரை, முட்டுக்காடு (இங்கு boating வசதி உள்ளதாமே?) என்றெல்லாம் பட்டியல் நீளும். ஆனால் அங்கெல்லாம் சென்றதில்லை. வி.ஜி.பி. தங்கக் கடற்கரைக்கு மட்டும் சென்றிருக்கிறேன். அது என்னை அவ்வளவாகக் கவரவில்லை. இவற்றை விட்டால் சென்னை நகர எல்லைக்குள் வேறெந்த optionஉம் கிடையாது. (abc கோயில், xyz ஆலயம், ஆகியவையெல்லாம் கணக்கில் வரமாட்டா) தில்லியிலிருந்து வந்த ஒரு அலுவலக விருந்தாளி, கிண்டி snake park என்று கேள்விப்பட்டு, ஏதோ Discovery Channel ரேஞ்சிற்கு கற்பனை செய்திருப்பார் போலிருக்கிறது. அங்கே போகவேண்டும் என்று அடம் பிடித்து, நானும் கூட சென்று........... பாவம், வெகுவாக ஏமாந்து போனார்.
சென்னைக்கு அருகாமையில் என்றுப் பார்த்தால், உடனே நினைவிற்கு வருவது நம் சரித்திரப் புகழ் வாய்ந்த 'மஹாப்ஸ்'தான் (அதாங்க, மஹாபலிபுரம்). சென்னையில் வளரும் குழந்தைகள் உண்மையிலேயே பரிதாபத்திற்குரியவர்கள். ஒவ்வொரு வருடமும் அவர்களது பள்ளிகளில் excursion என்ற பெயரில், வள்ளுவர் கோட்டம், மியூசியம், வண்டலூர் உயிரியல் பூங்கா, காந்தி மண்டபம் ஆகிய இடங்களையெல்லாம் சுற்றிக் காண்பித்த பின்னர், அவர்களை கரிசனத்தோடு மஹாபலிபுரத்திற்கும் அழைத்துச் செல்வார்கள், அவர்களது பள்ளியாசிரியர்கள். அங்கு சில பாறைகளையும் அவற்றில் செதுக்கப்பட்ட சிற்பங்களையும் பார்த்துவிட்டு, கைகோர்த்துக் கொண்டு வீடு திரும்ப வேண்டியதுதான். இப்படிச் செய்தே அவ்விடத்தின் மீது ஒரு வெறுப்பை ஊட்டியிருக்கிறார்கள் நமது பள்ளிகளில். ஒரு மாறுதலுக்காக அங்கு சென்று, சில நாட்கள் தங்கி, கடலலைகளில் குளித்து (அது பாதுகாப்பானதா என்பதை யோசிக்க வேண்டும்), நேரத்தை வெட்டியாகக் கழித்து......... இப்படியெல்லாம் ஏன் யாரும் சிந்திப்பதில்லை? "காலைல போனமா, சாயந்திரம் வந்தமா" என்ற ரீதியில் இவ்விடங்களை அணுகுவதற்கு பதிலாக, அங்கு போகாமலே இருக்கலாம். அங்கே தங்கும் வசதிகளின் தரம் பற்றியும் தெரியவில்லை.
பள்ளி இறுதியாண்டில் சில நண்பர்களாகச் சேர்ந்து கொண்டு, மிதிவண்டிகளின் மீதே மஹாப்ஸ் வரை பயணம் செய்வோமென்று முடிவு செய்து கொண்டு, ஒரு பத்து பன்னிரண்டு பேர் அவ்வாறு சென்று வந்தோம். போவதற்கு அரை நாள், திரும்ப வருவதற்கு அரை நாள், இடையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு பாறைகளின் மீது ஓய்வு, மிதித்த களைப்பு தீருவதற்காக. சென்னையிலிருந்து அதிகாலை புறப்பட்டுச் சென்றோம், மதியம் வாக்கில் சென்றடைந்தோம், பிறகு உடனே அங்கிருந்து கிளம்பி, இரவில் சென்னை வந்து சேர்ந்தோம். இந்தப் பயணத்தின் நோக்கமென்ன, அது நிறைவேறியதா என்பதெல்லாம் யாராலும் கேட்கப்படவுமில்லை, கேட்டிருந்தாலும் அதற்கு எவராலும் விடையளித்திருக்க முடியுமா என்பதும் ஐயமே. ஊர் திரும்பும் பயணத்தின் போது, சில மிதி வண்டிகள் பழுதடைந்து, அவற்றை பழுது பார்க்கும் பணி நெடுஞ்சாலையிலேயே மேற்கொள்ளப்பட்டு (சரியாக Silver Sands முன்னால் என்று ஞாபகம்), இதனால் வெகுவாகக் கால தாமதமாகி......... என்று, அது ஒரு மறக்க முடியாத அனுபவமாகும். எப்படா வீடு வருமென்று அனைவரும் இருட்டில் மிதித்துக் கொண்டிருந்த போது, சென்னையின் எல்லை வருவதற்கு இன்னமும் இருபது - முப்பது கிலோமீட்டர் இருக்கையில், "Do you see the bright horizon? That's Madras" என்று ஊற்சாகமூட்டினார் ஒரு நண்பர். இன்னொரு நண்பர் ஒரு மிதிவண்டியை ஓட்டிக் கொண்டு, இன்னொரு பழுதடைந்த மிதிவண்டியை கூடவே இழுத்துக் கொண்டும் வந்தார். Heroes are all around you.
இவ்வாறு மஹாபலிபுரம் என்பது சென்னைவாசிகளின் ரத்தத்தில் ஊறிய ஒன்றாகி விட்ட நிலையில், இதை மாற்ற வேண்டும் என்று முடிவு செய்தேன். அதற்கான வாய்ப்பும் கிடைத்தது. இளைய சகோதரர் அப்போதுதான் பள்ளி இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்தார். அவர்களது பள்ளியில் சுற்றுலா செல்லப்போவதாக வீட்டில் வந்து அறிவித்தார். மஹாபலிபுரம்தான் செல்கிறார்கள் என்றதும், அவர்கள் ஏன் மாறுதலாக ஏதாவது செய்யக்கூடாது என்று கேட்டேன். சென்னையைச் சுற்றியுள்ள மற்ற இடங்களையும் சென்று பார்க்க வேண்டுமல்லவா, எவ்வளவு முறைதான் ஒரே இடத்தைப் பார்ப்பது, என்று வினவினேன். சகோதரருக்கும் இது சரியென்று பட, "வேறெங்கே செல்வது?" என்று கேட்டார். "அருகே புலிக்காட் ஏரி இருக்கிறதாமே, அங்கெல்லாம் சென்று பார்த்துவிட்டு வரலாமல்லவா?" என்று பதிலுக்குக் கேட்டேன். அப்போது ஹிந்து நாளிதழில் ஏதாவது கட்டுரை வந்திருக்கலாம், புலிக்காட் ஏரியைப் பற்றி. ஹிந்துவில் இது போல் எழுதுவதற்கென்றே சில வேலையற்றவர்கள் இருப்பார்களென்று நினைக்கிறேன். சகோதரருக்கு இது வலுவான யோசனை என்று பட, மறுநாள் பள்ளிக்குச் சென்று, அனைவரையும் convince செய்திருக்கிறார். அவரது பேச்சை நம்பிக்கொண்டு நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள், மற்றும் அவர்களது ஆசிரியர்கள், அனைவருமாக புலிக்காட் ஏரியை நோக்கிப் படையெடுத்திருக்கிறார்கள்.
அங்கு சென்று அவர்கள் கண்டு களித்தது: 1. உச்சி வெயில் 2. பொட்டல் வெளி 3. கவனிப்பாரற்றுக் கிடக்கும் ஏரி 4. ஒரே ஒரு (குச்சி ஐஸ் விற்கும்) ஐஸ் வண்டி். சகோதரருக்கு தர்ம அடி கிடைக்காத குறைதான். வந்தது வந்தோம் இதையாவது செய்து முடிப்போம் என்று அனைவரும் குச்சி ஐஸ் வாங்கி சாப்பிட்டு விட்டு , ஊர் வந்து சேர்ந்தார்கள். "எங்கள இப்படி கவுக்கணும்னு எவ்வளவு நாளாடா திட்டம் போட்டே?" என்று சகோதரரை, அவர் செய்யாத ஒரு குற்றத்திற்கு விளக்கம் கேட்டார்கள் அவனது சக மாணவர்கள். சில ஆசிரியர்கள், கோபத்தின் உச்சியில், அவருடன் பேசுவதையும் தவிர்த்து முகத்தைத் திருப்பிக் கொண்டார்களாம்். எனக்கு நேரடி அனுபவம் கிடையாது, ஆனால், மிகவும் இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டார் சகோதரர், என்பது மட்டும் புரிந்தது அவர் கூறியதிலிருந்து. (அண்மையில் புலிக்காட் ஏரி பற்றி கூகிள் செய்ததில், பதினைந்து ஆண்டுகளுக்கு முன் இருந்த நிலைமை இப்போதும்் மாறவில்லை என்று தெரிய வருகிறது. சுற்றுலாத் துறை என்று ஒன்று செயல்படுகிறதா, இல்லை சும்மா 'நாம் கே வாஸ்தே'தானா?)
அன்றிலிருந்து யாருக்கும் சுற்றுலா சம்மந்தமான ஆலோசனைகள் வழங்குவதில்லை என்று முடிவு செய்திருக்கிறேன். இருந்தாலும், அந்த முட்டுக்காடு நன்றாக இருக்கிறது என்று பேசிக் கொள்கிறார்கள். முயன்று பார்த்துவிட்டுக் கூறுங்களேன்? ;)
ஞாயிறு, பிப்ரவரி 26, 2006
தமிழ் ஒருங்குறி - நியூ
தற்போதைய ஒருங்குறியிலுள்ள முக்கியமான பிழை அதில் உயிர்மெய்யெழுத்துக்கள் உருவாக்கப்படும் விதம்தான். ஒரு பள்ளி மாணவனுக்கும் தெரியும், க = க் + அ, கா = க் + ஆ,........... போன்றப் புணர்ச்சி விதிகளை. ஆனால், ஒருங்குறியை உருவாக்கிய சான்றோர்களோ, இந்த அடிப்படையை கூட மதிக்காமல், க் = க + ஃ, கா = க + ஆ,........... என்ற புது வழியை நமக்கு வழங்கியிருக்கிறார்கள். இதனால், எளிதில் கிடைத்திருக்கக் கூடிய ஒரு பொன்னான வாய்ப்பை நழுவ விட்டிருக்கிறது தமிழ்ச் சமூகம்.
எனக்குத் தெரிந்த வரையில், Tamil is a highly structured language. அதன் உறுதியான வடிவமைப்பினால், அதன் இலக்கண விதிகளைக் கொண்டே அதைக் கணிமைப்படுத்துவது எளிது. மொழியின் அடிப்படைகளைக் கடாசி விட்டு, க + ஆ, க + இ என்றெல்லாம் எழுத்துக்களை உருவாக்கியதால், இன்று நமக்கு எளிதில் கிடைத்திருக்கக் கூடிய ஒரு வசதி - கணிமையாற்றலால் சொற்களைத் தேடிப் பெறும் வசதி, ஒரு கைக்கெட்டாத கனியாகி விட்டது. ஒற்றில் முடியும் பெயர்ச் சொற்கள் - கோயமுத்தூர், சங்கர், ஜெயமோகன்....... போன்றவைகளை ஒரு ஆவணத்திலிருந்து தேடியெடுக்கும் வசதி இதனால் தாரை வார்க்கப் பட்டுவிட்டது. ஏனென்றால், அவை 'கோயமுத்தூரில்' (கோயமுத்தூர + இல்), 'சங்கரின்' (சங்கர + இன்), 'ஜெயமோகனை' (ஜெயமோகன + ஐ), என்றெல்லாம்தான் பெரும்பாலும் அந்த ஆவணத்தில் இடம் பெற்றிருக்கும். அவற்றை தேடிப் பெறுவதற்கு, "ஜெய ஜய சங்கர" என்று் முழங்க வேண்டியதுதான்.
இன்னும் சில சிக்கல்களைப் பற்றிக்் கூறுகிறேன், கேட்டுக்கொள்ளுங்கள். 'திருக்குறள்' அல்லது 'கம்பன்' என்ற சொல்லை எங்கிருந்தாவது select & copy செய்கிறீர்கள். அதைக் கொண்டு போய் paste செய்தால் வருவதென்ன? 'திருக்குறள' அல்லது 'கம்பன'. இன்னொரு சிக்கல், ஒரு சொல்லுக்குப் பிறகு full-stopஓ, commaவோ வைக்க மறந்து விட்டதால், cursorஐ அங்கு நகர்த்திச் சென்று, வேண்டிய நிறுத்தக் குறியீட்டைப் புகுத்துகிறீர்கள். உ-ம், 'நன்றி' என்பதற்குப் பிறகு full-stop வைக்கிறீர்கள். ஆனால், full-stop விழுவதோ, இவ்வாறு ----> 'ற.ி' மற்றொன்று - நேற்று ஒரு நண்பருடன் அரட்டையில், "கிருஷ்ணா கஃபேயில் என்ன சாப்பிட்டே?" என்று கேட்க முயன்ற போது, அது 'கஃபே'யை 'க்பே' என்று மாற்றி டென்ஷனாக்கியது. இது போல் பல சிக்கல்கள் இருக்கின்றன, இப்போதுள்ள ஒருங்குறியில்.
இப்போது TUNE எனப்படும் பயங்கரத்தைப் பற்றிப் பார்ப்போம். 'வெச்சா குடுமி, சிரைச்சா மொட்டை' என்பது போல், தற்போதைய ஒருங்குறியின் உயிர்மெய் புணர்ச்சி விதியில் தவறிருக்கிறது என்பதற்காக, புணர்ச்சி என்பதே இல்லாமல் ஒழித்துக் கட்டி விட்டு், ஒவ்வொரு உயிர்மெய்யெழுத்துக்கும் ஒரு தனி குறியீடு வைக்கப்பட்டிருக்கிறதாம். இவ்வாறு, மொத்தமாக முன்னூத்தி சொச்சம் குறியீடுகள். மொழியின் அடிப்படை என்ன? உயிர்மெய் என்பது ஒரு மெய்யெழுத்தும் ஒரு உயிரெழுத்தும் புணருவதால் ஏற்படும் கூட்டெழுத்து என்பதே. ஆகவே, அதை அப்படியே விட்டு வைப்பதுதான் மொழிக்கு நாம் செலுத்தும்் மரியாதை. உயிர்மெய் என்பது இரு குறியீடுகளைக் கொண்டே குறிக்கப்பட வேண்டும். அதை ஒரு குறியீடாகச் சுருக்குவதால் என்ன பயன்? இந்த ஏற்பாட்டில், 'இவன்' என்ற சொல் 'இவனால்' (இவனா + ல்), 'இவனை' (இவனை), 'இவனோடு' (இவனோ + டு), 'இவனிடம்' (இவனி +டம்) ஆகியவற்றில் இடம்பெறவில்லை என்பது, அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்ட அவற்றின் TUNE representationஐப் பார்த்தாலே் புரியும். முன்னூற்றுக்கும் மேற்பட்ட எண்களுடைய code set மட்டும் நமக்குக் கிடைத்துவிட்டால், நமது எல்லா பிரச்சனைகளும் தீர்ந்து விடும் என்ற தவறான எண்ணமும் ஆபத்தானது. 50 சொச்சம் குறியீடுகள் இருந்த இடத்தில் 300 சொச்சம் குறியீடுகளை வைத்துக் கணிமை செய்ய வேண்டுமென்றால், அதற்கு செயலியாற்றல் (CPU power), நினைவகத் தேவைகள் ஆகியன பல மடங்கு பெருகும் (இல்லாவிட்டால் கணிமைச் செயல்பாட்டின் வேகம் குறையலாம்). P4 / P5களுக்கு வேண்டுமானால் இது ஒரு பொருட்டாக இல்லாதிருக்கலாம். ஆனால் நாம் கிராமங்களுக்கெல்லாம்் கணினிகளைக் கொண்டு செல்ல வேண்டுமென்றால், lowest common denominatorஐத்தான் நாம் கணக்கில் கொள்ள வேண்டும். (சிம்ப்யூட்டர், கைக்கணினி, செல்பேசி, இதர embedded கணினிகளுக்கான இடைமுகங்கள் etc etc). We need a computing platform that's lean & mean.
எனது பரிந்துரைகள்:
- கீழ்க்கண்ட குறியீடுகளே இடம்பெற்றிருக்க வேண்டும்
- உயிரெழுத்துக்கள் 'அ' விலிருந்து 'ஔ' வரை (and not 'ஃ' to 'ஔ')
- ஆய்த எழுத்து
- மெய்யெழுத்துக்கள் 'க்'இலிருந்து 'ன்' வரை (இலக்கண வரிசைப்படி)
- கிரந்த எழுத்துக்கள் 'ஸ்'இலிருந்து 'க்ஷ்' வரை, மற்றும் 'ஸ்ரீ'
- உயிர்மெய்க் கீற்றுக்கள் (கால், கொக்கி, கொம்பு etc etc)
- தமிழ் எண்கள் மற்றும் சிறப்புச் சின்னங்கள்
- உயிர்மெய்யெழுத்து = மெய்யெழுத்து + கீற்றெழுத்து என்ற அடிப்படையில் புணர்ச்சிகள் ஏற்பட வேண்டும் (க = க் + அ, கா = க் + ஆ, இத்யாதி, இத்யாதி)
- grapheme boundary vs. word boundary வேறுபாட்டை நிரலிகள் அறிந்திருக்க வேண்டும் (if they claim Unicode compliance).
- 'Select', 'Insert', 'sort', 'letter-spacing' ஆகிய செயல்களைச் செய்யும்போது, நிரலிகள் முழு எழுத்துக் கொத்துக்களையும் (character clusters) எடுத்துக் கொண்டு, அவற்றின் மீதே இச்செயல்களைச் செய்ய வேண்டும்.
இப்பரிந்துரைகளைச் செயல்படுத்துவதன்் மூலமாக, தமிழ்க் கணிமையில் தேடல், வரிசைப்படுத்துதல், பக்க வடிவமைப்புகள், text-to-speech, ஆகிய செயல்பாடுகளில் கணிசமான முன்னேற்றமிருக்கும் என்பது என் எதிர்பார்ப்பு. முக்கியமாக, ஒற்றில் முடியும் பெயர்ச் சொற்களை ஆவணங்களிலிருந்து தேடியெடுக்க முடியும், அதாவது ஜெயமோகன் என்று தேடும்போது, 'ஜெயமோகனின்' (ஜெயமோகன் + இன்) என்ற அதற்குத் தொடர்புடைய instanceஉம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால், உகர / 'ம்' விகுதிச் சொற்களைத்் தேடிப்் பெறுவதில் இன்னமும் பிரச்சனை இருக்கும் (உ-ம், 'நாகப்பட்டினத்தில்', 'தமிழ் நாட்டை' ஆகியவை 'நாகப்பட்டினம்', 'தமிழ் நாடு' என்று கொடுத்துத் தேடினால் கிடைக்காது). அவற்றையும்் பெற வேண்டுமானால், மென்பொருள்களை கொஞ்சம் tinker செய்ய வேண்டியதுதான்.
வியாழன், பிப்ரவரி 16, 2006
இடுகைகளை எளிதில் tag செய்ய...........
உங்கள் இடுகைகளைத் தமிழ்மணத்தில் வகைப்படுத்துவது போலவே, tags எனப்படும் சொற்களாலும் வகைப்படுத்தலாம். ("இத இன்னும் எவ்ளோ வாட்டிப்பா சொல்லுவே", என்று சலித்துக் கொள்ளாதீர்கள் :) ) 15 -16 பொதுவான வகைகளுக்குள் ஒன்றாக உங்கள் இடுகைகளை வகைப்படுத்திய பின், அதை இன்னும் specificஆக வகைப்படுத்தினால் வருங்காலத் தேடல்களுக்கு வசதியாகயிருக்கும். உ-ம், 'ரஜினிகாந்த்' என்றோ, 'சுஜாதா' என்றோ, 'பெரியார்' என்றோ, 'கர்நாடக இசை' என்றோ, 'பின்நவீனத்துவம்' என்றோ, உங்கள் இடுகையை வகைப்படுத்தினால், உங்கள் பதிவு எதனைப் பற்றி, என்ற pointed information கிடைப்பதோடு மட்டுமல்லாமல், இச்சொற்களைக் கொடுத்துத் தேடுபவர்களுக்கு, ஒரு நபர் / நிகழ்வு / துறையைப் பற்றி வலையுலகில் என்னவெல்லாம் பேசப் பட்டதோ / படுகிறதோ அவையனைத்தும் தொகுக்கப்பட்டு, ஓரிடத்தில் வழங்கப்படும் சாத்தியமேற்படுகிறது. பதிவர்களாகிய உங்களுக்கு, இதனால் உங்கள் பதிவு பிற்காலத்திலும் படிக்கப்படலாமென்ற பலன் கிட்டுகிறது, அதுவும் ஒத்த மனதுடைய வாசகர்களால். வலைவாயில்களில் ஒரு சில மணி நேரங்களோ அல்லது ஒரு சில நிமிடங்களோ (இப்பொழுதெல்லாம் வைரஸ் தொல்லை அதிகரித்து விட்டதாமே? :) ) கிடைக்கும் கவனத்தை விட, ஒரு வாசகர் தேடிக் கண்டுபிடித்து உங்கள் பதிவுக்கு வரும் நிலையில், உங்கள் எழுத்து அதிகமாகப் பாராட்டப்படக் கூடிய வாய்ப்பிருக்கிறது. ஓன்றுக்கு மேற்பட்ட tagsஐக் கொண்டு உங்கள் இடுகையை வகைப்படுத்துவதும்் சாத்தியமே. சரி, இதற்கு மேல் taggingஐ மார்க்கெட்டிங் செய்யப்போவதில்லை. எனது நீட்சியின் செயல்பாடுகளைப் பார்ப்போம்.
இடுகைகளை tagging செய்ய நீளமான html நிரல்களை எழுத வேண்டியிருக்கிறது. "அதெல்லாம் கணினி அறிவு படைத்தவர்களுக்கே, நமக்கும் அதற்கும் சம்மந்தமில்லை" என்று நீங்கள் ஒதுங்கியிருக்கலாம். இந்த html சிக்கல்களெல்லாம் இல்லாமலேயே இடுகைகளை tag செய்ய முடிவது எனது நீட்சியின் ஒரு செயல்பாடு. மற்றொன்று, இந்த tagகளை உள்ளீடு செய்யாமல், முன்தொகுக்கப்பட்ட பட்டியல்களிலிருந்து (i.e. precompiled lists) தேர்வு செய்ய முடிவது. கீழே கொடுக்கப்பட்ட நீட்சியின் இடைமுகத்தைப் (interface) பார்த்தால் இது நன்கு புரிபடும் (அசல் அளவில் காண, படத்தைச் சொடுக்குங்கள்):

இப்பட்டியல்களை உருவாக்கி, மற்ற பதிவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வசதியுமுண்டு. ஏற்கனவே ஆங்கிலம், தமிழ் ஆகிய இரு மொழிகளுக்குமான பட்டியல்களை உருவாக்கி, நீட்சியுடன் இணைத்து வழங்கியிருக்கிறேன். அதில் திருப்தியடையாதவர்கள், அவர்களே புதுப் பட்டியல்களைத் தயாரித்து வழங்கலாம். சீன மொழியிலும் பட்டியல்களை உருவாக்கலாம் (என்று நினைக்கிறேன், முயன்று பார்க்கவில்லை. Frenchஇல் கொஞ்சம் முயன்று பார்த்தேன் ;) ) இது போல் பட்டியல்களிலிருந்து தேர்வு செய்யும் முறையினால், அனைவரும் பொதுவான tagsஐப் பயன்படுத்தும் வாய்ப்பு அதிகரிக்கிறது. (உ-ம், இன்று 'தமிழ்ப்பதிவுகள்' என்று பலரும் பயன்படுத்துவது போல். அவ்வாறில்லாமல், 'சினிமா', 'திரைப்படம்', 'திரை விமர்சனம்', 'திரைப்பார்வை', 'கீத்துக்கொட்டாய்' என்று அதே விஷயத்தை ஒவ்வொருவர் ஒவ்வொரு விதமாக tag செய்தால், இப்பதிவுகள் ஓரிடத்தில் தொகுக்கப் படாமல் வெவ்வேறு tagsஇன் கீழ் சிதறி விடுகின்றன.)
இன்னொரு பயன்பாடு - ஒரு tagஐ நீங்கள் பயன்படுத்தினால், அதே tagஉடன் வெளியான மற்ற பதிவுகளையும் படிக்க விரும்புவீர்கள் என்ற அனுமானத்தில், அந்த tagஇற்கான RSS தொகுப்பை நிகழ் புத்தகக்குறியாக (Live Bookmark) சேர்த்துக் கொள்ளும் வசதி. இத்துடன், பதிவை வெளியிட்ட பிறகு, தானே technoratiஐ ping செய்வதற்கும் வசதியுண்டு. நீங்கள் பலவாளுமை கொண்ட, பல பதிவுகளைப் படைப்பவராக இருந்தால், அவற்றின்் url பட்டியலையும் நீட்சியிடம் கொடுத்து, அதிலிருந்து எந்தப் பதிவை பற்றி ping செய்ய வேண்டுமோ அதைத் தேர்வு செய்து கொள்ளலாம். இவையெல்லாம் எனது விளக்கங்களால் புரியாவிட்டாலும், நீட்சியைப் பரிசோதித்தால் புரியுமென்று நம்புகிறேன்.
உங்கள் எல்லா தேர்வுகளையும் செய்த பின், 'Generate code' என்ற விசையை அழுத்தினால், தேவைப்படும் html நிரல் உருவாக்கப் பட்டுவிடும். அதன் பிறகு, உங்கள் பதிவின் editorஇல் வேண்டிய இடத்திற்கு cursorஐ நகர்த்திக் கொண்டு போய், 'paste' (Ctrl-V) கட்டளையை இட்டால்், tagsஸுக்கான நிரல் இடுகையில் புகுத்தப் பட்டு விடும். அதன் பிறகு, பின்விளைவுகளைப் பற்றி கவலைப்படாமல் publish செய்து விட வேண்டியதுதான். குறிப்பிட்ட புத்தகக் குறிகளும் உருவாக்கப் பட்டிருப்பதைக் காணலாம். மேலும்், ping அறிவிப்பும்் குறிப்பிட்ட நேர இடைவெளிக்குப் பிறகு தானாகவே வெளியிடப்படும்.
இது பதிவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்குமானால்் மகிழ்ச்சியடைவேன். இதைப் பற்றிய விரிவான தகவல்களை ஆங்கிலத்தில் இங்கு வழங்கியிருக்கிறேன். Mozillaவுக்கும் இதை சமர்ப்பித்திருக்கிறேன். இப்பதிவும் இந்த நீட்சியைக் கொண்டே tag செய்யப்பட்டுள்ளது :)
திங்கள், பிப்ரவரி 06, 2006
கீதா கயீதா ஆன கதை
காலை அலுவலகம் செல்கிறான் ரவி. வாயிலில் இருந்த ஒரு இயந்திரம், அவன் முன்பு துறுத்திக் கொண்டு, அவனது கண்ணின் மணிகளைச் சோதித்து விட்டு, அவன் யாரென்று அடையாளம் கண்டு கொள்கிறது. பிறகு இயந்திரக் குரலில் அது கூறுகிறது: "வணக்கம் ரவயி, நல்வரவவு". "இப்படி சொல்றத்துக்கு பதிலா, சொல்லாமலேயே இருந்திருக்கலாம்" என்று எரிச்சலுடன் அதற்கு பதிலளித்து விட்டு, தனது இருக்கையை நோக்கிச் செல்கிறான் ரவி.
அவனுக்குப் பின் வந்த கீதாவிடம், "வணக்கம் கயீதயா" என்கிறது. அதைக் கேட்டுக் கொலை வெறியுடன் உள்ளே செல்கிறாள் கீதா. ஒவ்வொரு நாளின் ஆரம்பத்திலும் இவ்வாறு தனது மனநிலை கெடுவதை நினைத்து அவளது ரத்த அழுத்தம் ஏறிக் கொண்டே போய், தற்போது அபாய நிலையை எட்டியிருந்தது. இது போல் பாதிக்கப்பட்ட அனைவரும் நிர்வாகத்திடம் முறையிடுகிறார்கள், காலையில் முதல் வேலையாக தாங்கள் அவமானப் படுத்தப்படுவது பற்றி, அதுவும் ஒரு இயந்திரத்தினால்.
நிர்வாகி கையை விரித்துவிட்டுக் கூறுகிறார், "நான் என்ன செய்யட்டும்? உங்கள் பெயர் தமிழ் ஒருங்குறியில் எவ்வாறு எழுதப் பட்டிருக்கிறதோ, அதன்படி இயந்திரம் உங்கள் பெயரை உச்சரிக்கிறது. உ-ம், கீதா - க + ஈ + த + ஆ, இவற்றைச் சேர்த்து உச்சரித்தால் அது 'கயீதயா' ஆகி விடுகிறது. இதை, இரண்டாயிரத்தி ஆறாம் ஆண்டிலேயே சரி செய்திருக்க வேண்டும். ஆனால் அப்போதிருந்தத் தமிழ்க் கணிமை வல்லுனர்களெல்லாம், 'வலைப்பதிவுகளில் போலிப் பின்னூட்டங்கள்' போன்ற முக்கியமான பிரச்சனைகளில் மும்முரமாக இருந்தார்கள். இதை கவனித்து சரி செய்வதற்கு அவர்களுக்கு நேரம் கிடைக்காமல் போய்விட்டது. தவற்றை உணர்ந்து கண் முழிப்பதற்குள் பிழையான ஒருங்குறி அனைத்திடங்களிலும் ஊடுருவி விட்டது, முன்பு Y2K பூச்சி அனைத்திடங்களிலும் விரவியிருந்ததைப் போல். இதை மாற்ற வேண்டுமென்றால், நமக்கு அமெரிக்காவைப் போல் பண வசதியிருந்தாலே அது சாத்தியமாகும். அவ்வாறில்லாத நிலையில், இந்தப் பிழையான குறியேற்றத்தையே தொடர்ந்து பயன்படுத்த வேண்டியிருக்கிறது. தயவு செய்து உங்கள் பெயர் சிதைத்து உச்சரிக்கப் படுவதை கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள். அதற்கு நஷ்ட ஈடாக, சம்பளத்தில் ஏதாவது கூட்டிக் கொடுக்க முடியுமென்றால், அதைப் பரிசீலிக்கிறோம்" என்று தனது இயலாமையை வெளிப்படுத்தினார்.
பணியாளர்கள் அனைவரும் ஏமாற்றத்துடன் கலைந்து சென்றார்கள்.
பி.கு:
1. இது பற்றிய மேலதிகத் தகவல்களை இங்கு காணலாம்.
2. 'புனைவு' என்று tag செய்து ஒரு பதிவை இடுவேனென்று கனவிலும் நினைக்கவில்லை :)
தமிழ்ப்பதிவுகள் | ஒருங்குறி | கணிமை | புனைவு | Tamil Unicode
செவ்வாய், ஜனவரி 31, 2006
உனக்குத் தடா!
எனக்குத் தோன்றும் ஒரு fashion idea - தலையிலிருந்து கால் வரை ஒரு cylindrical வடிவத்தில் (துணியாலான ஒரு கூண்டு போலிருக்கக் கூடிய) ஒரு உடை, with constant radius from head to toe. இது பொது இடங்களில் ஆண்கள் தம்மை கண்களால் அளப்பது, மனதால் துகிலுரிவது, போன்றவற்றைச் செய்வதிலிருந்து தடுக்க உதவும். உள்ளே இருப்பது ஒரு மனித உயிரா (அல்லது, I, Robot மாதிரியானதொரு இயந்திரமா) என்று கூட அறிந்து கொள்ள வாய்ப்பிருக்காது. இந்த உடையிலிருக்கும்போது உட்கார்ந்தால் பிரச்சனை வர வாய்ப்பிருக்கிறது. (அதாவது, அங்க அளவுகள் வெளிப்பட்டு விடக்கூடும்). ஆகவே, இதற்கு ஒரு பொறியியலாளர்தான் ஏற்ற உடையை வடிவமைக்க வேண்டும். உட்காரும்போது சுற்றளவு அதிகமாகவும், உயரம் குறைவாகவும் இருக்க வேண்டும், but still retaining the cylindrical shape. அல்லது ஒரு tent போன்ற வடிவமைப்பைக் கொண்டிருக்கலாம், அதைத் தாங்கிப் பிடிக்கும் கம்பிகள் சகிதத்துடன் (அந்தக்கால ஐரோப்பிய மங்கைகள் உடுத்தியதைப்போல்). என்ன, நெரிசலான இடங்களில் கொஞ்சம் பிரச்சனையாகி விடக்கூடும். இது போன்ற உத்திகளைக் கொண்டுதான், நம் நாட்டில் (அல்லது சென்னையில்) நிலவும் வறட்சி நிலையை எதிர்கொள்ள முடியுமென்று தோன்றுகிறது. (எனது யதார்த்தமான, உணர்ச்சிவசப்படாத, அசட்டுத்தனமாக எதிர்க்காத, சிந்தனைகளின் விளைவாக).
அவரது பதிவில் கூறப்படாத விஷயம் - ஆண்களும் இதுபோல் கண்களால் துகிலுரியப்படுகிறார்களா என்பதே (கிடையாது என்று நாமாக அனுமானம் செய்துகொள்ளக்கூடாதல்லவா?). ஆண்களின் உடைகளான ஜீன்ஸ், ஷார்ட்ஸ், நெஞ்சை அணைக்கும் பனியன்ஸ் போன்றவைகளால், அவர்களது அளவுகளையும் கணித்துவிட வாய்ப்பிருக்கிறதே? மேலும் வறட்சி என்பது இருபாலாருக்கும் பொதுவிலுள்ளதுதானே? அவர்களுக்கும் இருக்கிறது தீர்வு - எல்லா ஆண்களும் சாமியார்கள் அணியும் காவி அங்கியைப்போல் ஒரு ஆடையை அணியும்படி சட்டம் பிறப்பிக்கலாம். Hairstyle / மொட்டைத் தலைகளைக்் கண்டு சிலருக்கு ரத்தக் கொதிப்புகள் அதிகமாகி விடும் அபாயத்தைப் போக்க, அனைவரையும் ஒரு முண்டாசு அணிய வைக்கலாம். எல்லோரும் விவேகானந்தரைப்போல் வளைய வரலாம்.
இதுபோல், பல புரட்சிகள் செய்து, இவ்வறட்சியைப் போக்குவோம்!!
தமிழ்ப்பதிவுகள் உடை fashion
சனி, ஜனவரி 28, 2006
தணிக்கை செய்ய மனமின்றி......
இம்மாற்றங்களால் ஏற்படும் விளைவுகளாவன:
1. உங்கள் பின்னூட்டங்கள் முன்பிருந்ததைப் போலவே, உடனடியாக பொதுப்பார்வைக்கு வந்துவிடும். இதனால், என் பதிவின் மீதான உங்கள் உண்மையான கருத்துக்களை உடனுக்குடன் பொதுவில் வெளிப்படுத்த வசதியாக இருக்கும் (எனது ஈடுபாடு இல்லாமலேயே).
2. நட்சத்திரங்களைச் சொடுக்கி, உங்கள் ஆதரவையோ, எதிர்ப்பையோ தெரிவிக்கும் வசதி இனி இல்லாமல் போகிறது. ஒரு உற்சாக டானிக்காக இருந்து வந்த இந்த '+' குத்துக்களை நான் miss பண்ணப்போவது நிச்சயம். '-'களாக வந்து விழுந்தபோதும், என் கருத்து எவ்வாறு ஏற்றுக் கொள்ளப்பட்டது என்று அறிந்துகொள்ள முடிந்தது.
3. சுதந்திரத்திற்கான விலை - இனி வரும் பின்னூட்டங்கள் தமிழ்மண முகப்பில் திரட்டப்பட மாட்டா. இதனால் இப்பதிவிற்கு 2nd round, 3rd round views கிடைக்காமல் போகின்றன. ஆகவே, 1st roundஇலேயே எனது பதிவைப் படித்து விடுங்கள் :)
4. முன்பைப் போலவே, நீங்கள் பின்னூட்டமிடுவதற்கு பிளாக்கர் கணக்கை வைத்துக்கொண்டிருக்க வேண்டுமென்ற கட்டாயமெல்லாம் கிடையாது. அப்படி வைத்துக் கொண்டிருந்தாலும், என் வலைப்பதிவில் அதை வெளிப்படுத்த வேண்டிய நிர்பந்தம் கிடையாது. நீங்கள் தாராளமாக ஒரு anonymousஆக உங்கள் பின்னூட்டத்தை இட்டுச் செல்லலாம். நீங்கள் யாரென்பது எனக்கு முக்கியமல்ல, உங்கள் கருத்துதான் எனக்கு முக்கியம்.
5. முன்பைப் போலவே, கோணல்மாணலாகக் கொடுக்கப்பட்ட ஆங்கில எழுத்துக்களைச் சரியாக அடையாளம் கண்டு அவற்றை உள்ளிடக் கோரும் word verification போன்ற கட்டாயங்களை என் பதிவில் வைக்கவில்லை. ஆகவே, நீங்கள் பின்னூட்டமிடுவதற்கு, ஏழு மலைகள் எட்டு கடல்களையெல்லாம் தாண்டத் தேவையில்லை.
6. With freedom comes responsibility – என் பதிவில் எச்சப் பின்னூட்டங்களைக் காண நேரிட்டால், தயவு தாட்சண்யமின்றி அவை நீக்கப்படும். இது குறித்த தகவல்களை, பதிவின் கீழே, பின்னூட்டப் பகுதியின் இறுதியில் காணலாம்.
7. இதோடு, எனது பதிவில் எந்தவொரு வருகையாளர் விவரமும் திரட்டப்பட்டதில்லை, இனியும் அதற்கான உத்தேசமில்லை என்ற உத்தரவாததையும் இங்கே குறிப்பிட்டு விடுகிறேன். ஆகவே, உங்கள் privacyக்கு என்னால் எந்தத் தீங்கும் ஏற்பட வாய்ப்பில்லை.
இதுவரை என் பதிவுகளுக்குப் பச்சை விளக்கைக் காட்டி வந்த தமிழ்மணத்திற்கு நன்றி. மேற்கூறிய மாறுதல்களுக்குப் பிறகும் அது தொடரும் என்று நம்புகிறேன். இல்லையென்றாலும் நலமே. ஒரு வாசகர் என் பதிவைப் பற்றிய விமர்சனத்தை வெளியிடுவதற்கு என் ஒப்புதல் தேவை என்ற நிலையைத் தவிர்ப்பதே என் குறிக்கோள். இது தமிழ்மணத்தால் ஏற்றுக் கொள்ளப்படுமென்றால், மற்ற பதிவர்களும் இம்மாறுதல்களைச் செய்து வாசகரின் சுதந்திரத்தைக் காக்குமாறு வேண்டிக் கொள்கிறேன். நான் ஒரு பதிவன் மட்டுமல்ல ஒரு வாசகனும் கூட, என்பதால் இவ்வேண்டுகோள்.
தமிழ்ப்பதிவுகள்
வியாழன், ஜனவரி 26, 2006
விடாது தணிக்கை
வாழ்க, கருத்துச் சுதந்திரம்!
தமிழ்ப்பதிவுகள்
சனி, ஜனவரி 21, 2006
கோடுகள்
அமிர்தசரஸ் - லாஹோர் என்ற இரு பஞ்சாபிய நகரங்கள், ஐம்பது கிலோமீட்டர் தொலைவிலிருப்பவை, ஆனால் ஒன்று இந்தியாவிலும் இன்னொன்று பாகிஸ்தானிலும். எதிர்பார்த்ததைப் போல், இவையிரண்டிற்கும் இடையே கடந்த ஐம்பது வருடங்களாக எவ்வகையான போக்குவரத்தும் இருந்ததில்லையாம். அண்மையில் தொடங்கப்பட்ட பேருந்து வசதியால் இவ்விரு நகரங்களும் மறுபடி இணைக்கப்படுகின்றனவாம். வெகு அருகிலிருக்கும் ஒரு இடத்திற்குப் பயணப்படுவதற்கான சுதந்திரம் கூட இவ்வளவு நாட்களாக அம்மக்களுக்கு மறுக்கப்பட்டு வந்திருக்கிறது என்கிற உண்மை, இன்று பேருந்து வசதி அறிமுகப் படுத்தியதைத் தொடர்ந்து நடக்கும் கொண்டாட்டங்களால் மறக்கப்படக்கூடும். இன்றைய, இருபத்தியோராம் நூற்றாண்டுக் காலக்கட்டத்தில், மனித உரிமை என்பது எந்த அளவிலிருக்கிறது என்று நினைக்கையில் விரக்தியே மிஞ்சுகிறது. இவ்வளவு நாட்களாக அம்மக்கள் நடத்தியிருக்கக் கூடிய வணிக மற்றும் இதரப் பரிமாற்றங்கள், அதனால் கிடைத்திருக்கக் கூடிய ஆதாயங்கள், என்று தொலைந்து போன வாய்ப்புகளை நினைத்துப் பார்த்தால், ஒட்டுமொத்த இழப்புகளைக் கணக்கிட முடியாமலும் போகலாம்.
வங்காள தேசத்திலிருந்து வேலை வாய்ப்புக்காக இந்தியப் பகுதிக்குள் குடிபெயரும் மக்களைப் பற்றி அண்மையில் ஒருவருடன் உரையாடிக் கொண்டிருந்தேன். அவர்களால் நமக்குப் பிரச்சனையே, அவர்களது தேவைகளை கவனிக்க வேண்டும், அவர்களுக்கு உணவளிக்க வேண்டும் என்றெல்லாம் அடுக்கிக் கொண்டே போனார். அவர்களுக்கு யாரும் உணவைக் கொண்டு போய் ஊட்டியெல்லாம் விடுவதில்லை, அவர்களது கடும் உழைப்பால் சம்பாதித்த பணத்தை வைத்துக் கொண்டு அவர்கள் தங்களை கவனித்துக் கொள்கிறார்கள், என்று பதிலளித்தேன். இப்படி அவர்கள் சட்ட விரோதமாக நாட்டுக்குள் உட்புகுவதால், அவர்களோடு தீவிரவாதிகளுக்கும் உள்ளே நுழையும் வாய்ப்பு ஏற்படுகிறது என்ற வாதத்தை வைத்தார். செப்டம்பர் 11 சம்பவத்தில் ஈடுபட்ட அனைவருமே சட்டப்படி உட்புகுந்தவர்கள்தான், அதனால் அச்சம்பவத்தைத் தடுக்கவா முடிந்தது என்று பதிலுக்கு வினவினேன். அதெப்படி வேற்று நாட்டவர்கள் நம் நாட்டிற்குள் வரலாம், நாடு என்ற ஒன்றே இல்லாமல் போய்விடுமல்லவா என்றார். இப்படிக் கூறுவதற்கு நமக்கென்ன அருகதையுள்ளது, திரைகடல் ஓடியும் திரவியம் தேடுபவர்களல்லவா நாம், நமக்கொரு நியதி மற்றவர்களுக்கொரு நியதியா, என்று கேட்டேன். நண்பர் கோபமடைந்து இதற்கு மேல் தன்னால் வாதிட முடியாதென்றார். ஒருவர் தனது திறமைக்கு எங்கு மதிப்பும் வாய்ப்பும் அதிகம் என்று நினைக்கிறாரோ அங்கு குடிபுகுவதற்கு அவருக்கு உரிமை இருக்க வேண்டுமென்பது என் நிலைப்பாடு. இன்றைய நிலையில், மனிதன் வரைந்த கோடுகள் முற்றிலும் அழியும் வரையில், இது ஒரு கனவாக மட்டுமே இருக்க முடியும்.
பி.கு: நேற்று சென்னை சத்யம் தியேட்டரில் Hotel Rwanda என்றத் திரைப்படத்தைப் பார்க்க நேர்ந்தது. அது தொண்ணூறுகளில் நடந்த ஒரு இனக்கலவரத்தைப் பற்றிய படமாகும். அதைப் பார்த்த அனுபவமும் இப்பதிவில் வெளியிட்ட எனது எண்ணங்களை வலுப்பெறச் செய்தது. நிலக்கோடுகள் மட்டுமல்லாமல் மனக்கோடுகளும் முற்றிலும் தகர்க்கப்பட வேண்டும்.
தமிழ்ப்பதிவுகள் உலகம் மனித உரிமை
வெள்ளி, ஜனவரி 06, 2006
குரோ அப், டியூடெட்
நான் அண்மையில் தேசிபண்டிட் தளத்தில் ஒரு பதிவைப் படிக்க நேர்ந்தது. தலாஸ்ஸா மிக்ரா என்ற பெண் வலைப்பதிவர் எழுதிய ஒரு பதிவை, முன்னுரையுடன் வழங்குகிறது இப்பக்கம். "ஆண்களைக் காமப் பொருட்களாகப் பார்ப்பதிலுள்ள இன்பங்களை, மிகுந்த உற்சாகத்துடன் விவரிக்கிறார் தலாஸ்ஸா" என்பதே பதிவிற்கான அறிமுக வாக்கியம். பதிவும் நம் எதிர்பார்ப்புகளுக்குச் சற்றும் குறை வைக்காமல், சுவாரசியமாகச் செல்கிறது. "சபாஷ்", "பலே", "ஐ, நானும் அப்படித்தான்" என்று ஒரு இருபத்தி ஐந்து பின்னூட்டங்களையும் குவித்திருக்கிறது பதிவு. படித்து, சிரித்து விட்டு நகர்ந்தேன்.
ஓரிரு நாட்களுக்கு முன், நம் தமிழ் வலைப்பதிவுகளில் ஒரு ஆண் பதிவர் அவரது பதிவில், ஒரு மழையில் நனைந்த மங்கையின் அழகை விவரிக்கப் போக, அதற்கு உடல்நல, மனநல ஆலோசனைகள், பெண்ணியப் பரோட்டாக்களெல்லாம் தட்டில் வந்து விழுகின்றன. அவரது பதிவும் தேசிபண்டிட்டில், ஆனால் கடுமையான விமர்சனங்களுடன், குறிப்பிடப்படுகிறது. ஒட்டு மொத்தத் தமிழ் டியூட்களையும் நோக்கி அறிவுரைகள் பறக்கின்றன, ஆபாசத்தையும் அயோக்கியத்தனத்தையும் கைவிடும்படி.
இத்தகைய முரண்பாடுகளால் ஒன்றுமறியாதத் தமிழ் டியூட்கள் குழம்பப் போவது நிச்சயம். தலாஸ்ஸாவின் பதிவைப் படித்ததால் வந்த நம்பிக்கை, அதற்குப்பின் வந்த குற்றச்சாட்டுகளால் தகர்ந்து போனதொன்றே மிச்சம். உடலழகு ஆபாசமா? அதை இரசிப்பது ஆபாசமா? 'மழையில் நனைந்ததால் ஒரு பெண் மேலும் அழகாகக் காட்சியளித்தாள்' என்றக் கருத்தை வெளியிட்டது தவறு என்று கூறப்படுகிறது. இதில் தவறு எங்கென்று என் சிற்றறிவுக்கு எட்டவில்லை. நம் சூழலில், நம்மால் உடுத்தபடும் தொளதொள ஆடைகளால், உடலழகு என்பது மணமாகும் வரை கற்பனையில் மட்டுமே உணரக்கூடிய ஒரு அம்சமாக இருக்கிறது. அதைப்பற்றிப் பேசுவதும், நினைப்பதும் குற்ற உணர்வை அளிக்கக்கூடிய செயல்களாகி விட்டன. இந்நிலையில், ஒரு மழையால் வெளிப்பட்ட ஒரு அழகுணர்வை நினைவு கூர்ந்ததாகக் குறிப்பிட்ட அப்பதிவில், உண்மையாகவே எனக்கு மனநலக் குறைவாக எதுவுமே தோன்றவில்லை.
நாம் ஏன் உடலை ஒரு அவமானச் சின்னமாகக் கருத வேண்டும்? நம் அறிவு, ஆற்றல், சாதனைகள் என்பவற்றைப் போல் நம் உடலழகும் ஒரு போற்றுதலுக்குரிய அம்சம்தானே? ஒருவரிடமுள்ள மற்ற சிறப்புகளைப் போல், அவருடைய உடலழகையும் கருதலாமல்லவா? இதில் ஆபாசமும் குற்றவுணர்வும் ஏன்?
ஒட்டுமொத்தத் தமிழ் டியூடெட்களையும் நோக்கியெல்லாம் நான் அறிக்கைகள் விடப்போவதில்லை. ஒரு குறிப்பிட்ட டியூடெட்டுக்கு இந்தப் பதிவு கண்ணில் படுமானால் மகிழ்ச்சியே :)
வியாழன், டிசம்பர் 29, 2005
தேவை: வலைப்பதிவுகளில் ஒரு Edit Button
அளிப்பதற்கும் அழிப்பதற்குமுள்ள வேறுபாடு, களிப்பதற்கும் கழிப்பதற்குமுள்ள வேறுபாடு, போன்றவை மழுங்கி விடுகின்றன, அவ்வப்போது (அதாவது, அடிக்கடி - இதை ஒவ்வொரு முறையும் குறிப்பிடப்போவதில்லை, இனிமேல் நீங்களே மாற்றிப் புரிந்து கொள்ளுங்கள்). விளைவு - "விடுமுறையை நன்றாகக் களித்தேன், நேரத்தை நன்கு செலவளித்தேன்" போன்ற பிரயோகங்கள்.
கற்பு வேண்டாமென்று ஏகமனதாக முடிவு செய்து விட்டோம். சிலர், "அது இருக்கட்டுமே், இருபாலாருக்கும்் அதைப் பொதுவில் வைப்போமே?" என்றெல்லாம் கேட்டுப் பார்த்தனர். ஆனால், "முடியவே முடியாது" என்று அதைக் குழி தோண்டிப் புதைத்து விட்டு, இன்று வெற்றிப் பார்வை பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதில் எனக்கும் மகிழ்ச்சிதான். ஆனால் கற்பைத்தானே வேண்டாமென்றோம், 'கறுப்பு' இருந்துவிட்டுப் போகட்டுமே? 'எனக்குப் பிடிச்ச கலரு' அவ்வப்போது 'கருப்பாகி' விடுவது மற்றொரு சோகம்.
ஜனநாயகத்தைப் பற்றிய அதிருப்தியைத் தெரிவிக்கையில், அது ஜனனாயகமாகி விடுகிறது. உலகில் அநியாயம் நடப்பது சகஜம்தான். அதைக் கண்டு பொங்கியெழும் பதிவர்கள், அதை அனியாயமாக்கி விடுவதும் சகஜம்தான் போலிருக்கிறது.
சொற்களை ஒற்றெழுத்துக்களில் தொடங்கி எழுதக் கூடாதென்று ஒரு விதி இருப்பதாக நினைவு. அது தவறாமல் பின்பற்றப்பட வேண்டுமென்பது எனது ச்சின்ன ச்சின்ன ஆசைகளில் ஒன்று. இப்படிக் கூறுவதால் ப்ரச்சினை எதுவும் வராதில்லையா?
இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் ஒரு பதிவர், “தமிழில் spell checker இல்லாத காரணத்தால் நான் இப்படித்தான் எழுதுவேன்" என்ற தீர்மானத்துடன் தனது தமிழ்ப்பணியைச் செய்து வருகிறார். அவருக்கு விரைவில் ஒரு spell checker கிடைக்க நமது வாழ்த்துக்கள்.
நேற்று ஒரு அறிவிப்புப் பதிவைப் பார்த்தேன். அதாவது, அப்பதிவர் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறாரென்றும், விரைவில் அது அச்சில் வரப்போகிறதென்றும், அறிவித்திருந்தார். அது ஒரு சுயசரிதை என்றும் குறிப்பிட்டிருந்தார். ஆகா, சுயசரிதை எழுதும் அளவுக்குப் பெரிய மனிதரா நம் வலைப்பதிவுகளில், என்று மேற்கொண்டு படித்தால், அது ஏதோ நடிகரரொருவரின் வாழ்க்கை வரலாறாம் (அதாவது, சரிதை). பிழையைச் சுட்டிக்காட்டி பின்னூட்டமிடலாமென்றால், அதுவும் முடியாமல் ஏதோ தகராறு. நல்லவேளையாக அவரது மின்னஞ்சல் முகவரி இருந்தது, profileஇல். பிழையைத் திருத்தக் கோரி மின்னஞ்சலிட்டிருக்கிறேன். ஆவன செய்வாரென்று நம்புவோம்.
இதே உணர்வுகள் ஆங்கிலப் பதிவுகளைப் படிக்கும் போதும் ஏற்படுகின்றன. சில காலமாக, DesiPundit உபயத்தில், பரிந்துரைக்கப்பட்ட ஆங்கிலப் பதிவுகள் படிக்கக் கிடைக்கின்றன. அங்கும் நெஞ்சு வலி, இதயத் துடிப்பைக் நிறுத்தும் கணங்கள், ஆகியவை அவ்வப்போது ஏற்படுகின்றன. நிறுத்தக் குறியீடுகள் (punctuations) தேவையற்ற இடங்களில் இருப்பதும், தேவைப்படும் இடங்களில் இல்லாதிருப்பதும், பெரும்பாலும் வலைப்பதிவுகளில் ஒரு பொருட்டேயல்ல என்ற அளவுக்கு ஆகிவிட்டது.
பொதுவிடங்களிலும் இது போன்ற அறிவிப்புப் பலகைகள், பெயர்ப் பலகைகள், விளம்பரப் பலகைகள் போன்றவை இருப்பதைப் பற்றி யாருமே கண்டு கொள்வதில்லை என்று ஒரு புத்தகம் முழுவதிலும் புலம்பியிருக்கிறார் ஒரு அம்மணி. “Eats, shoots and leaves” என்ற அப்புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்ததும், "அட, நம்மைப் போல் இன்னொருவர்", என்றப் பாச உணர்வு பொங்கிற்று. நல்ல நகைச்சுவையான நடை, முழுவதும் படிக்க வேண்டும். Two weeks notice என்று வெளிவந்த ஒரு படத்தின் பெயரைப் பற்றி மாய்ந்து மாய்ந்து புலம்பியிருக்கிறார், "இப்படியும் ஒரு அநியாயமுண்டா, இதைக் கேட்பாரே இல்லையா", என்றெல்லாம். (இலக்கணப்படி, Two weeks' notice என்று இருந்திருக்க வேண்டும்.) Apostrophe Protection Society என்ற ஒரு அமைப்பைப் பற்றி கேள்விப்பட்டு, அகமகிழுந்து போய் அவர்களைத் தொடர்பு கொண்டு, “எவ்வாறு பிழையான பெயர்ப்பலகை வைப்பவர்களைத் திருத்துகிறீர்கள்?” என்று வினவியிருக்கிறார். அதற்கு அவர்கள், மரியாதை கலந்த மடல் ஒன்றை அனுப்புவதாக தெரிவித்தனராம். “அடுத்த முறை பெயர்ப்பலகையை மாற்றும்போது தயவு செய்து இந்தத் திருத்தத்தை நினைவில் கொள்ளுங்கள்" என்று இருக்குமாம் அம்மடலில். அம்மணிக்கு இதெல்லாம் திருப்திகரமாகத் தெரியவில்லை. "நாம் ஏன் ஒரு தீவிரவாத அணியாகச் செயல்படக்கூடாது? பெயிண்ட் சகிதம் களத்திலிறங்கி, தவறான குறியீடுகளை நாமே திருத்தலாமே?” என்ற ரீதியில் சிந்திக்கத் தொடங்கினாராம். செயல்படுத்தினாரோ இல்லையோ, மேற்கூறிய புத்தகத்தை எழுதியிருக்கிறார், "பிழைகளைச் சகிப்பதில்லை" (zero tolerance approach) என்ற அணுகுமுறையை முன்நிறுத்தி.
நமக்குத் தீவிரவாதமெல்லாம் கைவராது. ஏதோ, விக்கியைப் போல், பிழைகள் தென்பட்டால், அவற்றைத் திருத்த முடிந்தால் நன்றாகயிருக்குமே என்ற எண்ணத்தைத்தான் இங்கு உரக்கச் சிந்திக்கிறேன். சக வாசகர்கள் எதிர்பாராத விதங்களில் தாக்குதலுக்குள்ளாகும் சாத்தியங்களைக் குறைக்கும் நல்லெண்ணம்தான், வேறொன்றுமில்லை.
ஞாயிறு, டிசம்பர் 25, 2005
Mozilla Thunderbird - ஒரு அறிமுகம்
இப்படிப் பல புகழாரங்களை சூட்டிக் கொண்டே போகலாம். ஆனால் அது மட்டுமல்ல என் நோக்கம். உலாவி(browser) என்பது வந்ததிலிருந்து நமது நேரமும் சக்தியும் கூடுதலாக விரையமாகிறதோ என்று ஒரு எண்ணம். தேவையற்ற விளம்பரங்கள், நம் அந்தரங்கத்திற்குள் ஊடுருவப் பார்க்கும் நிரலிகள் / கண்காணிப்பான்கள், மின்மினுக்கும் சொடுக்கத் தூண்டும் சுட்டிகள், அவற்றைச் சொடுக்கியதால் அவசியமே இல்லாமல் செலவாகிப்போன மணித்தியாலங்கள், இவையனைத்தையும் இறக்கிக் கொள்ளத் தேவைப்படும் இணைய இணைப்புகள், அவற்றுக்குத் தேவைப்படும் கட்டமைப்பு வசதிகள், என்று விரயப்பட்டியலை நீட்டிக்கொண்டே போகலாம். சில மணி நேரங்கள் இணையத்தில் மேய்ந்த பிறகு, அதனால் கிட்டிய ஆதாயம் என்ன என்று பார்த்தால், பூஜ்யம்தான் மிஞ்சுகிறது. ஒரு உவமையோடு விளக்க வேண்டுமென்றால், இணையத்தில் உலாவுவது, ஒரு முன்திட்டமில்லாமல் ஒரு வண்டியை எடுத்துக் கொண்டு மனம் போன போக்கில் இங்குமங்கும் அலைவதற்கு ஒப்பானது என்று கூறலாம். தோன்றிய இடத்தில் வண்டியை நிறுத்தி, அங்கிருப்பதை வாங்கி அல்லது வேடிக்கை பார்த்து விட்டு, போரடித்ததும் அங்கிருந்து நகர்ந்து, அடுத்த கண்ணைக் கவரும் இடம் வந்ததும், அங்கும் முந்தைய இடத்தில் செய்ததைப் போலவே நேரவிரயம் செய்து........... நிஜ வாழ்வில் இப்படிச் செய்யாத பொறுப்பானவர்கள்தான் நாம். இருந்தும் இணையத்தில் பெரும்பாலும் இதைத்தான் செய்கிறோம். தொலைக்காட்சிக்கு முன் அமர்ந்தாலும் அதே கதிதான்.
நேரம்தான் நமது ஒரே அரிய பொக்கிஷம் என்று கூறப்படுகிறது. பணமோ, வேறு உடமைகளோ இழந்தால் திரும்பப் பெற்றுக் கொள்ள முடியும். ஆனால் நேரம் என்பது செலவிட்டது செலவிட்டதுதான். அத்தகைய ஒரு அரிய சொத்தை நாம் கவனத்துடன் செலவிடுவதில்லை. Thunderbird போன்ற ஒரு மென்பொருளை வைத்துக் கொண்டு நம் நேரத்தைத் திறம்பட நிர்வாகிக்க முடியும் என்பதே எனது கருத்து. பொதுவாக நாம் இணையத்தில் சில குறிப்பிட்ட தளங்களுக்குத்தான் பலமுறை செல்கிறோம். இவற்றில் மின்னஞ்சல் தளங்களும் அடக்கம். அவற்றைத் தவிர செய்தித் தளங்கள், வலைப்பதிவுகள், திரட்டிகள்............ இவை ஒரு நாளில் பலமுறை புதுப்பிக்கப்படும் தன்மையுடையவை என்பதால், ஒவ்வொரு முறையும் ஏதேனும் புதிதாகக் கிடைக்கலாமென்ற நம்பிக்கையில் மறுபடி மறுபடி இத்தளங்களுக்குச் செல்கிறோம். ஒவ்வொரு முறையும் அவை காண்பிக்கும் வர்ண ஜாலங்கள், உங்களுக்குத் தெரியாமலேயே உங்களைக் கண்காணிக்கும் நிரல்கள், தேவையற்ற விளம்பரப் பட்டைகள், முன் வந்து விழும் அறிவிப்புகள் / எச்சரிக்கைகள் இவையனைத்தும் உங்கள் பொன்னான நேரத்தை விழுங்குகின்றன. இவற்றை இறக்குவதற்கும் இணைய ஆற்றல் (connection speed), நேரம் ஆகியவை செலவாகிறது. Thunderbird போன்றதொரு மென்பொருளைக் கொண்டு இத்தகைய விரயங்களைக் கட்டுப்படுத்தலாம். அதிகமாக உலாவும் தளங்களின் RSS தொகுப்புகளை அதனிடம் குறிப்பிட்டு விட்டால், அதுவே இத்தளங்களின் புதிய வார்ப்புகளைக் கொண்டு வந்து ஒப்படைத்து விடும். அதே போல் உங்கள் gmail விவரங்களை அதற்குத் தெரிவித்து விட்டால், உங்கள் மின்னஞ்சல்கள் சுடச்சுட உங்களுக்குப் பரிமாறப்பட்டு விடும். அடிக்கடி gmail வலைத்தளத்திற்குச் சென்று பார்க்க வேண்டியதில்லை.
வலைப்பதிவு இன்று அதிக நேரத்தை விழுங்கும் ஒரு அம்சமாகி விட்டது. ஒரு பதிவைப் படிப்பதற்கு ஐந்து நிமிடங்கள் ஆகின்றது என்று வைத்துக் கொண்டால், அதற்கு முன் அதன் டெம்ப்ளேட் அட்டகாசங்களுடன் நம் உலாவியில் வந்திறங்குவதற்கு இன்னுமோர் ஐந்து நிமிடங்கள் ஆகிறது. இவ்வாறு ஒரு நாளில் தமிழில் நூறு பதிவுகள், ஆங்கிலத்தில் நூறு பதிவுகள், மற்ற தொழில் / ஆர்வத்துறைகளைச் சார்ந்த பதிவுகள் என்று கூட்ட ஆரம்பித்தால், அதற்கு இருபத்தி நான்கு மணி நேரங்கள் காணாது. இவற்றை உலாவியில் படிப்பதற்கு பதிலாக, Thunderbirdஇல் இவற்றின் RSSஐப் பார்வையிட்டால், சில நொடிகளில் தெரிந்து விடும், ஒரு பதிவை மேற்கொண்டு படிக்க வேண்டுமா அல்லது நழுவ விட்டு விடலாமா என்று. இந்த அணுகுமுறையில் பல நல்ல பதிவுகளை குறுகிய நேரத்திலேயே படித்து விட முடியும். பதிவிடுவதற்காவது உலாவி தேவையல்லவா என்கிறீர்களா? Bloggerஇல் பதிவுகளை மின்னஞ்சலிலிருந்தே பதிப்பிக்கலாம், Mail-to-Blogger என்ற வசதி கொண்டு. (இப்பதிவு அவ்வகையிலேயே வலையேற்றப்பட்டது, Thunderbirdஇலிருந்து)
மின்னஞ்சல் கொண்டே பதிவுகளை வெளியிட்டு, மின்னஞ்சல்களைப் போலவே (RSS செயல்பாடும் மின்னஞ்சலை ஒத்ததுதானே?) அவற்றைப் படிக்கும் இச்செயல்முறை பழைய மடற்குழுக்களை நினைவு படுத்துகிறதல்லவா? நுட்பமும் fashionஐப் போலத்தானே? முன்பு வெகுவாகக் கடைபிடிக்கப் பட்ட செயல்பாடுகள், பழக்க வழக்கங்கள் நாளடைவில் பல மாற்றங்களைக் கடந்து, மீண்டும் நடைமுறைக்கு வருவது மனித இயல்புதானே? பல உதாரணங்கள் அளிக்கலாம் இத்தகைய குணத்திற்கு. (e.g. Mainframe => PC => Server-side computing => Peer-to-peer etc.) ஒரு மடற்குழுவாக மட்டும் இல்லாமல், ஒரு வலைத்தளமாகவும் பதிவாவது ஒரு முன்னேற்றம். மேலும் மடற்குழுக்களிலுள்ள சில விரும்பத்தகாத அம்சங்கள் இதில் தவிர்க்கப்படலாம். ( உ-ம், எதிர் கருத்துக்கள், விவாதங்கள் ஆகியவை எல்லோருக்கும் விநியோகிக்கப் படாமல், படைப்புகள் மட்டுமே RSS தொகுப்பாக விநியோகிக்கப்படுகிறது. விவாதங்கள் வலைப்பதிவுகளில் நடக்கலாம். நேரக்குறைவுள்ளவர்கள் மற்றும் விவாதங்களைத் தொடர விரும்பாதவர்கள் படைப்புகளை மட்டும் படித்து விட்டுச் செல்லலாம்).
இணையம் ஒரு பயனுள்ள வசதிதான். அதில் நமக்குப் பயனளிக்கும் அங்கங்கள் எவை என்று தெரிந்து செயல்பட்டால், அவைகளிலிருந்து Thunderbird மூலமாக அதிகமான பயனை அடையலாம், குறுகிய நேரச் செலவிலேயே. நம் தேவைக்கேற்றவாறு தகவல் நமக்குத் 'தள்ளப்படும்' இத்தகைய நுட்பத்தை push technology என்பார்கள். அதற்கு மாறாக, நாமே (உலாவியைக் கொண்டு) அத்தகவலின் மூலங்களுக்குச் சென்று அதை 'இழுக்க' வேண்டியிருந்தால் அது pull technology ஆகும். Push ஒரு தானியங்கும் நுட்பம். Pullஓ, மனிதர் இயக்கும் நுட்பம். நமது பெரும்பாலான இணையச் செயல்பாடுகள் pushஆகவும், ஒரு சில மட்டுமே pullஆகவும் இருக்குமானால்.......... நமக்கு குடும்பத்துடன் செலவழிக்க அத்த்த்த்த்திக நேரம் கிடைக்கும். இதற்காக மட்டுமேனும் Thunderbird கவனிக்கப்பட வேண்டியது.
தமிழ்ப்பதிவுகள் நுட்பம் வாழ்க்கை

