வியாழன், ஏப்ரல் 06, 2006

விரதம்

விஞ்ஞான வளர்ச்சிகளால் சாத்தியமடைந்த இன்றைய நகர்ப்புற, நவீன வாழ்க்கை முறைகள் இன்று அனைவராலும் ஆவலுடன் ஏற்றுக் கொள்ளப்பட்டு, மனித இனத்தின் முன்னேற்றத்திற்கான அறிகுறிகளாக முன்வைக்கப்படுகின்றன. இத்தகைய வசதியான வாழ்வு முறைகளால், வாழ்க்கை முன்பை விட சுலபமடைந்திருக்கிறதா என்ற கேள்விக்கு தெளிவான விடைகள் கிடைப்பது அரிதே.

உடலுழைப்பு குறைந்திருக்கிறது என்பது உண்மையே. ஆனால் இத்தகைய மாற்றத்தால் மக்களுக்கு உடற்பயிற்சி குறைந்து போய், அது் பல மருத்துவச் சிக்கல்களை உண்டாக்குவதையும் காண முடிகிறது. 1000+ cc எஞ்சின் (உந்துபொறி என்று தமிழில் அழைக்கலாம்) கொண்ட சொந்த வாகனங்கள், உலகின் மூலை முடுக்குகளையெல்லாம் இணைக்கும் 6/8 வழிப்பாதைகள் கொண்ட நெடுஞ்சாலைகள், தும்மி முடிப்பதற்குள் கொண்டு சேர்ப்பிக்கும் ஆகாய விமானங்கள், என்று உலகில் பயணம் செய்வது மிக எளிதான ஒரு செயலாகி விட்டது. அதற்கு நாம் கொடுக்கும் விலை global warming எனப்படும் உலகளாவிய சூடேற்றமாகும். இதனால் உலகின் பனிப்பாறைகள் உருகி, கடல்களின் உயரம் பெருகி, ஒரு நூறாண்டுகளுக்குள்ளாகவே பல தீவுகள், மாகாணங்கள் ஆகியன கடலால் விழுங்கப்பட்டு, இருந்த இடம் தெரியாமல் மறையப்போகும் அபாயம் நம்மை அச்சுறுத்துகிறது. குளிர்சாதனப் பெட்டிகள், குளிர்பதனப்பெட்டிகள் ஆகியவை உண்மையிலேயே வரப்பிரசாதம்தான், அதுவும் வெப்பநிலை அதிகமுள்ள நம்மைப்போன்ற நாட்டினருக்கு. ஆனால், ஆவை வெளியிடும் வாயுக்களால், நம் உலகின் ஓசோன் காற்று மண்டலம் ஒரு சைக்கிள் டியூப் பஞ்சர் ஆவது போல் பஞ்சர் ஆகிக் கொண்டிருக்கிறது. இதனால் சூரியக் ஒளியிலுள்ள சில அபாயகரமான கதிர்கள் நம்மை நேரடியாகத் தாக்கும் அபாயமேற்பட்டிருக்கிறது. கிரிக்கெட் வீரர்கள் தங்கள் முகத்தில் களிம்புகள் பூசிக் கொண்டு களத்திற்கு வருவது இத்தகைய அபாயத்திலிருந்து தம்மைக் காத்துக்கொள்ளுவதற்கே.

இவ்வாறாக, எது முன்னேற்றம், எங்கே முன்னேற்றம் என்ற கேள்விக்கு விடை மழுங்கலாகத்தான் நமக்குக் கிடைக்கிறது. இதனால் மட்டுமே, முன்னேற்றம் என்ற பெயரில் முன்வைக்கப்படும் எந்தவொரு மகா / மெகா திட்டத்தையும் ஒரு சந்தேகத்துடனே பார்க்க வேண்டியது அவசியமாகிறது. மனித இனத்தின் / உலகின் வருங்காலத்திற்கு பாதிப்பு என்ற கவலையாவது தொலைநோக்குப் பார்வை என்ற வகையில் வரலாம். அது அனைவருக்கும் எப்போதும் இருக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமுமில்லை. ஆனால், நம் நாட்டில் மேற்கொள்ளப்படும் மகா திட்டங்களால் பலருக்கு உடனடி பாதிப்பு என்பது தெள்ளத் தெளிவான ஒரு உண்மை. இருந்தும் வருடா வருடம் திட்டங்கள் தீட்டப்படுகின்றன. கோடிகள் விரயமாகின்றன. தங்க நாற்கரங்கள் அமைக்கப்படுகின்றன. சேது சமுத்திரக் கால்வாய்கள் அகழப் படுகின்றன. அடுக்கு மாடிக் கட்டடங்கள் எழுப்பப் படுகின்றன. பாலங்கள் கட்டப்படுகின்றன. அணைகள் உயர்த்தப்படுகின்றன. அணு உலைகள் முடுக்கி விடப்படுகின்றன. சுரங்கங்கள் தோண்டப்படுகின்றன. காடுகள் அழிக்கப்படுகின்றன.

இவை மேற்கொள்ளப்பட்டு, திட்டம் தொடங்கும் நாள் வரை அது பற்றிய ஒரு முன்னறிவிப்பு கூட அளிக்கப்படாமல், அப்பகுதிகளில் காலகாலமாய் வாழ்ந்து வந்த விவசாயிகள், பழங்குடி இனத்தவர், குடிசை வாழ் மக்கள், மீனவர்கள், சிறுவணிகர்கள் என்று நம் நாட்டில் taken for granted ஆசாமிகள் ஏராளம். தம் அன்றாடப் பிரச்சனைகளே தம்மை மூழ்க்கடிக்கும் நிலையில், இவர்கள் தங்கள் உரிமைக்காகப் போராடும் சக்தியை முற்றிலும் இழந்து நிற்கிறார்கள். கல்லாமை, வெளியுலகத் தொடர்பின்மை போன்ற போதாமைகளாலும் இவர்களால் தங்கள் உரிமைகளை முழுமையாக நிலைநாட்ட முடியாமல் போய்விடுகிறது. இத்தகைய இயலாமைகளால் அவதிப்படும் இப்பெரும் மக்கள் கூட்டத்தை, அரசும், வர்த்தகமும் எளிதில் கிள்ளுக்கீரைகளாகக் கிள்ளி எறிந்து விட முடிகிறது. தூசித் தட்டுவதைப் போல் தன் ஒட்டடைக் குச்சிகளான காவல் துறை, மற்றும் நீதித்துறை ஆகியவை கொண்டு இவர்களை விரைவில் அப்புறப்படுத்த முடிகிறது.

இத்தகைய நடவடிக்கைகளுக்கு, படித்த மக்கள் கூட்டமான நம்மைப் போன்றோரும் உடைந்தையே. ஐந்து நிமிடங்களுக்கு மின்சாரம் தடைப்பட்டுப் போனால், நமக்கு வாழ்க்கையே ஸ்தம்பித்து விடுகிறது. அமெரிக்காக் காரனிடமிருந்து அணுசக்திக்கான எரிபொருள் கிடைக்குமா என்று யோசிக்கிறது புத்தி. ஒன்றிரண்டு அடிகள் அகலமுள்ள வாகனங்களுக்கு பதிலாக ஐந்தாறு அடிகள் அகலமுள்ள வாகனங்களில் அனைவரும் செல்வதால் ஏற்படும் நெரிசலால் பயண நேரம் மும்மடங்காகப் பெருகியதால், சாலைகளை அகலப்படுத்தக் கோரி Letters to the Editor எழுதத் தூண்டுகிறது நம் பொறுமையின்மை. நம் 24 மணி நேர தண்ணீர் தேவைகள் பூர்த்தியடைய, கங்கையையும் காவிரியையும் இணைக்குமாறு அனைத்து ஊடகங்களிலும் அழுத்தங்கள் வேறு. விமான நிலையங்கள் பேருந்து நிலையங்கள் போலாகி விட்டனவே / விடுமே என்றெல்லாம் ஆழ்ந்த கவலைகள் நமக்கு. அவற்றை விரிவாக்கக் கோரி தலையங்கங்கள், தொலைக்காட்சி நிலையத்திற்கு குறுஞ்செய்திகள், மற்றும் இத்தகைய அரசு திட்டங்களுக்கு கைத்தட்டி ஆரவாரங்கள், ஆர்ப்பரிப்புகள்...... பெங்களூருக்கு ஏழு மணி நேரம் எடுத்துக் கொண்ட சாலைவழிப் பயணத்தை மூன்று மணி நேரத்திலேயே முடிக்க ஆசை, ஆகவே நெடுஞ்சாலைத் திட்டத்திற்கு நிபந்தனைகளற்ற ஆதரவு....... இப்படி நம் நிலைப்பாட்டில் சுயநலம் ஒன்றையே காணமுடிகிறது. இத்திட்டங்களால் தூசி தட்டப்படுவதைப் போல் அப்புறப்படுத்தப் படும் மக்களைப் பற்றிய கவலையோ, அக்கறையோ சிறிதளவுமில்லை நமக்கு.

நல்லவேளையாக நம்மைப் போலல்லாமல், சில படித்த அறிவுஜீவிகள், அப்பாவி மக்களுக்கு ஆதரவாக களத்தில் இறங்கியிருக்கிறார்கள். சுந்தர்லால் பகுகுணா, பாபா ஆம்தே, அன்னா ஹசாரே போன்ற நல்லுள்ளம் படைத்தவர்கள் வரிசையில் கடந்த இருபது ஆண்டுகளாக மேதா பட்கர் பாதிக்கப்பட்ட மக்களை ஒன்று் திரட்டி, நர்மதா அணைத் திட்டத்தை எதிர்த்து போராடி வருகிறார். இவரது போரட்டத்திற்கு அருந்ததி ராய் போன்ற பிரபலங்களின் ஆதரவும் உண்டு. போராட்டத்தின் உச்சக் கட்டமாக, கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக உண்ணாவிரதம் மேற்கொண்டு, அரசை அதன் திட்டத்தை மறு பரிசீலனை செய்யும் நிலைக்குத் தள்ளும் முயற்சியில் இறங்கியுள்ளார் மேதா. அவரது இப்போராட்டத்தை மனப்பூர்வமாக ஆதரிப்பதோடு, இத்தகைய அணைத்திட்டங்களை அவசியமாக்கும் நம் நுகர்வுப் பழக்கங்களையும் கேள்விக்குள்ளாக்க வேண்டும். நம் தேவைகளை சற்று குறைத்துக் கொண்டிருந்தால்், இன்று மேதாவின் உண்ணாவிரதத்திற்குத் தேவையிருந்திருக்காதோ என்னவோ.


7 கருத்துகள்:

பத்மா அர்விந்த் சொன்னது…

பூமி தினமான ஏப்ரல் 22 பொருத்தமான பதிவு. இதை நான் நிறைய யோசித்ததுண்டு.இங்கே நடத்திய ஒரு சமூக கூட்டத்தில் நிறைய நடுத்தர அமெரிக்க மக்கள் தேவைகளை அதிகமாக்கி கொண்டு இப்போது துன்பத்தில் உழலுவதாகவும், அதற்கு மாற்று என்ன எப்படி வெளியே வருவது என்பதுபற்றியும் கிட்டதட்ட 3 மணி நேரம் விவாதித்தார்கள். மிகவும் ஆர்வமான விவாதம். இப்பதிவிற்கு நன்றி

துளசி கோபால் சொன்னது…

அருமையான பதிவுங்க. மக்களைப் பற்றிய கவலை அரசுக்கு ஏது? ஓட்டு மட்டும் கிடைச்சால் போதாதா?

சிவக்குமார் (Sivakumar) சொன்னது…

நல்ல பதிவு.

இதேபோல் எழுதப்பட்டிருக்கும் இந்த இரண்டு கட்டுரைகளையும் படித்திருக்கிறேன்.


1


2

வானம்பாடி சொன்னது…

அருமையாக சொல்லியிருக்கிறீர்கள்.

Voice on Wings சொன்னது…

தேன்துளி, துளசி, பெருவிஜயன் மற்றும் சுதர்சன், உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

பல பொதுவான விஷயங்களைத் தொட்டிருந்தாலும், இப்பதிவை மேதாவின் போரட்டத்தை முன்வைத்தே எழுதியிருக்கிறேன். அவரது போராட்டம் வெற்றிகரமாக முடிவடையும் என்று நம்புவோம்.

ஜென்ராம் சொன்னது…

பதிவுக்கு நன்றி..

Voice on Wings சொன்னது…

வருகைக்கும் பின்னூட்டதிற்கும் நன்றி, ராம்கி.