வியாழன், ஜனவரி 26, 2006

விடாது தணிக்கை

எவ்வகையான கருத்துக்களைப் பதியலாம் என்று வரையறுக்கும் விதிகளை இப்போதுதான் உள்வாங்கியிருக்கும் நிலையில், இப்போது எவ்வகையான எதிர்வினைகளைப் பெறலாம் என்று நிர்ணயிக்கும் புதிய விதிகள் அமலுக்கு வருகின்றனவாம்.

வாழ்க, கருத்துச் சுதந்திரம்!27 கருத்துகள்:

ஜென்ராம் சொன்னது…

கடந்த டிசம்பர் 10 ஆம் தேதி நீங்கள் எடுத்த உறுதி மொழியை நடைமுறைப்படுத்தத் தவறிவிட்டீர்கள் போல் தெரிகிறது..அல்லது பயிற்சியில் குறை இருப்பதாகத் தெரிகிறது :-))

Voice on Wings சொன்னது…

ராம்கி, எனது உறுதிமொழியை நினைவுப்படுத்தியதற்கு மிக்க நன்றி. :) உண்மையிலேயே அந்த உறுதிமொழியை மறந்திருந்தேன். இப்போதுதான் சென்று பார்த்து விட்டு வருகிறேன், அந்தப் பதிவை. அதில் குறிப்பிட்டிருப்பதைப் போல், சகல சுதந்திரங்களும் விரைவில் காலாவதியாகிவிடும் போலிருக்கிறதே?

Jayaprakash Sampath சொன்னது…

எந்த விதமான எதிர்வினைகளைப் பெறலாம் என்பதற்கான புதிய விதிகள் அல்ல. நீங்கள் வலைப்பதிவுகளைத் தொடர்ந்து படித்து வருகிறீர்களா, பின்னூட்டங்கள், தமிழ் மண முகப்புப் பக்கத்தில் இற்றைப் படுத்தப்படும் வசதியை உபயோகிக்கிறீர்களா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனல், பின்னூட்டங்களை மட்டுறுத்து செய்யக் கோரி மடல் வந்த உடன் , கருத்துச் சுதந்திரத்தை காப்பாற்ற வேண்டி பதிவு களத்தில் குதித்திருக்கிறீர்கள் என்பது புரிகிறது.

ஒருவர், தான் உடன்படாத விஷயங்களிலே, அதற்கு எதிராகக் கருத்துச் சொல்வது நியாயமானது. அந்தக் கருத்தை, தன் சொந்தப் பெயரிலே சொல்வது அவரது துணிச்சலைக் காட்டும். பெயரில்லாமல், அனாமத்தாக வந்து சொல்வதிலும் எனக்குப் பிரச்சனை இல்லை. ஆனால், பிறரது பெயரை, குறிப்பாக, தமிழ்மணம் நிர்வாகி காசியின் பெயரில், அதே வடிவமைப்புடன், ஒரு blogger profile ஐ உருவாக்கிக் கொண்டு, மற்றவர்கள் வலைப்பதிவில், மிக மிக அசிங்கமாகவும், ஆபாசமாகவும் பின்னூட்டம் அளித்தால், வலைப்பதிவின் சொந்தக் காரரோ, அல்லது, வலைப்பதிவை வாசிப்பவர்களோ, அது காசி இட்ட பின்னூட்டம் தான் என்று தவறாக முடிவு செய்ய மாட்டார்களா? நாளொன்று பத்து புதிய பதிவுகள், தமிழ்மணத்தில் இணையும் பொழுது, ஒவ்வொருவரிடமும், சென்று, அது காசி இட்ட பின்னூட்டம் இல்லை, ஒருவன் வேண்டுமென்றே தொந்தரவு செய்கிறான் என்று சொல்லிக் கொண்டிருக்க முடியுமா?

இந்த விஷயம் மேலும் மேலும் சிக்கலாவதற்கு முக்கியமான காரணமே, பின்னூட்டங்கள் டிராக் செய்யப்படுவதுதான்.எல்லாவலைப்பதிவுகளுக்கும் சென்று, சென்று, காசியின் பெயரிலே ஒரு அசிங்கமான பின்னூட்டம் அளித்து விட்டால் போதும். தமிழ்மணம் முகப்புப் பக்கத்திலே, காசியின் பெயர் நாறும். காசிக்கு அந்த மாதிரி unparlimentary வார்த்தைகளை போட்டு எழுதத் தெரியாது என்று உங்களுக்கும் எனக்கும் தெரியும். ஆனால், புதிசாக வருபவருக்கு. சொந்தக் காசை போட்டு, சொந்த நேரத்தை செலவழித்து, வலைப்பதிவுகளை திரட்டி, இந்த நிமிடத்தில், வலைப்பதிவுகளில், என்ன நடக்கிறது என்று அப்டுடேட்டாகத் தெரிவிக்கும் ஒரு வாலண்டரி சர்வீஸ் நடத்தி, அதுக்கு பரிசாக, கேரக்டர் அசாசினேஷன் வேற செஞ்சுக்கணுமா? குடும்பத்தையே சந்தி சிரிக்க வெச்ச மாதிரியான பின்னூட்டங்கள், காசிக்கு என்ன விதமான மன உளைச்சலை ஏற்படுத்தியிருக்கும் அப்படிங்கறதுக்கு உதாரணமா, ஒரு சில சாம்பிள்களை வேணா அனுப்பி வெக்கட்டுமா? தொழில்நுட்ப ரீதியிலே, இதை சமாளிக்க முடியலை அப்படிங்கற காரணத்தாலேதான், பின்னூட்டத்தை மட்டுறுத்த செய்யச் சொல்றாங்க..

இந்த விவகாரத்தை எல்லாம் நீங்கள் அறிந்திருக்கிறீர்களா என்றே புரியவில்லை. உங்களோட பதிவுலே, என்ன பின்னூட்டம் வெச்சுக்கணும்ங்கறது உங்களோட விருப்பம். அது ஆபாசப் பின்னூட்டமோ, அசிங்கப் பின்னூட்டமோ. ஆனால், அது பிறரது போலிப் பெயரை உபயோகித்து வரும் பட்சத்தில், தமிழ்மணம் அந்தப் பதிவைத் திரட்டாது. இது ஒரு தற்காலிகமான ஏற்பாடுதான்.

இந்த சிக்கலை முழுவதுமாக தீர்த்துக் கட்ட, சில நண்பர்களின் உதவியுடன், தமிழகக் காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவின் உதவி ஆய்வாளரிடம் முறையாகப் புகார் செய்யப்பட்டு, அது சிபிசிஐடியின் டிஐஜி ராங்கில் இருக்கும் பெண் காவல்துறை அதிகாரியிடம் ரெ·பர் செய்யப்பட்டுள்ளது. கமிஷனர் அலுவலகத்தில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது, ஒரு பத்திரிக்கை நிருபர் வந்து வேவு பார்த்தார். மொத்த விஷயத்தையும் ஜூவி மாதிரி பத்திரிக்கையிடம் சொல்லி, எக்ஸ்போஸ் செய்தால் என்ன என்று கூட யோசனை வந்தது. நாட் நௌ என்று உபதேசம் கிடைத்தது. காவல் துறை நடவடிக்கை மேற்கொள்ளப் படுகிறது.

ஆகவே, இதுக்கும் கருத்துச் சுதந்திரத்துக்கும் எந்தத் தொடர்புமில்லை. காசியின் பெயரால், பின்னூட்டம் அளித்து அவ்ர் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் முயற்சி. இதை ஒத்துழைப்பு கொடுங்கள். கருத்துச் சுதந்திரம் பற்றிய விவாதம் ஆரோக்கியமானது. அதை அடுத்துச் செய்வோம். உங்களுடன் சேர்ந்து நானும் குரல் கொடுக்கிறேன்.

அன்புடன்
பிரகாஷ்

SnackDragon சொன்னது…

பிரகாஷ் முதலில் இதை பதிவாக்குங்கள்.
பிரகாஷ் சொல்வதில் வரிக்கு வரி உடன்பாடு. கல்வெட்டுவின் பதிவிலும், இன்னொருவர் பாராட்டினாரே அவரது பதிவிலும் எழுதலாம் என்று போனால் ப்ளாக்கர் வேலை செய்யவில்லை.

கல்வெட்டுவுக்கு சொல்வது இது: டோண்டுவையும் , சொந்தமாக வாலண்டரி சர்வீஸ் செய்துகொண்டு வரும், **தமிழ்மண நிர்வாகி** காசியையும் ஒன்றாக பார்க்கமுடியாது. முன்னது அவரது சொந்தக்கருத்து வேறுபாட்டால் போலிடோண்டுவுடன் அல்லல்படுவது. பின்னது நல்லதை செய்ய நினைப்பவருக்கு அருவருக்கத்தப் பரிசு கொடுப்பது.

நீங்கள் எல்லாம் முன்ன பின்ன எந்த ஃபோரம்களிலும் எழுதியது கிடையாது என்பதைத்தான் இப்படி பதிவுபோட்டு காண்பித்துக் கொண்டுள்ளீர்கள். எங்காவது ஃபோரம்களில் எழுதினால் நிர்வாகி என்னவெல்லாம் செய்யமுடியும் என்று தெரிந்திருக்கும். இது ஃபோரமா என்று கேட்பீர்களானால், தமிழ்மணம் இல்லாமல் இயங்கவேண்டியதுதானே என்ற கேள்வியையும் கேட்கவேண்டிவரும்.

Voice on Wings சொன்னது…

பிரகாஷ், ஒரு குறிப்பிட்ட நபர் செய்யும் அடையாளத் திருட்டு, ஆபாசக் கூச்சல் விவகாரங்களைப் பற்றி நான் அறியாமலில்லை. நிச்சயமாக அவருக்கு எனது எதிர்ப்பும் கண்டனங்களும் உண்டு. ஆனால் இந்தப் பிரச்சனையை எதிர்கொள்ள எடுத்துக் கொண்ட அணுகுமுறைதான் 'throwing the baby out with the bath water' வகையிலிருப்பதாகத் தோன்றுகிறது.

பெரும்பாலான பதிவர்கள் பொறுப்புணர்வுள்ளவர்கள்், அவர்களே இத்தகைய நச்சுக்களை அழித்து விடுவார்கள் என்ற நம்பிக்கையின் அடிப்படையில், இந்தப் பிரச்சனைக்கு ஒரு தீர்வைக் கண்டிருக்கலாம். போலிகளைப் பற்றிய விழிப்புணர்வுப் பதிவுகளையும் முகமூடி, டோண்டு ராகவன் போன்றவர்கள் அவ்வப்போது எழுதி வந்திருப்பதால், இப்பிரச்சனையைப் பற்றிய அறிவு பரவலாக உள்ளது எனபதே எனது புரிதல். இத்தகவல்களை மன்றம் / உதவிப்பக்கங்கள் போன்றவற்றிலும் பதித்து விழிப்புணர்வை அதிகரிக்கவும் வாய்ப்பிருக்கிறது.

மற்றபடி, எது தனிநபர் தாக்குதல், எது ஆபாசம், எது வெறுப்புணர்வு போன்ற கேள்விகளுக்கு துல்லியமான விடைகள் கண்டிராத நிலையில், நம் பதிவு நிர்வாகிகளின் அதிருப்திக்குக் காரணமாகி விடுமோ என்றக் கவலையுடனேயே எப்போதும் பதிவிட்டுக் கொண்டிருக்கும் சூழல், ஒரு சுதந்திரமான ஒன்றாக எனக்குப் படவில்லை.

மேலும், பின்னூட்ட வசதியின் சிறப்பே, ஒரு வாசகர் தனது கருத்தை உடனே பொதுவில் வைக்க வழி செய்து கொடுப்பதுதான் என்பது எனது கருத்து. அவருக்கு தடை விதிப்பது, அவரை மரியாதை குறைவாக நடத்துவதற்குச் சமமாத்தான் என்னால் பார்க்க முடிகிறது. உ-ம், உங்களுடைய அல்லது ராம்கியுடைய பின்னூட்டம், எனது அங்கீகாரத்திற்காகக் காத்துக் கொண்டிருப்பது, எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாதது. ஒரு வலைப்பதிவனாக, எனது வாசகர்களுக்கு சகல வசதிகளும் கிடைக்கச் செய்வதையே நான் விரும்புகிறேன். தடைகளை எழுப்பி, அவர்களது பின்னூட்டமிடும் உந்துதலைக் குறைத்து, அவர்களது கருத்து வெளிப்பாட்டிற்கு அணை போடுவதையல்ல.

பி.கு: விதிக்குக் கட்டுப்பட்டு என் பதிவில் comment moderationஐ வைத்திருக்கிறேன் என்பதை கவனிக்க.

வானம்பாடி சொன்னது…

இருந்த சுதந்திரத்தை இஷ்டத்துக்கு பயன்படுத்திய சிலரின் செயல்களால் எற்பட்ட விளைவு இது. உண்மையில் பின்னூட்ட மட்டுறுத்தல் என்பது நேரத்தை விரயமாக்கும், அயர்வை ஏற்படுத்தும் ஒரு வேலை. என்ன செய்ய, கசப்பு மருந்து..!

===
மட்டுறுத்தலை உடனே செய்து விட்டீர்கள் போலிருக்கிறதே!

SnackDragon சொன்னது…

உங்களைக் குறித்தும் மேலே எதுவும் சொல்லப்படவில்லை. சொன்னது பொதுவான கருத்து.
/மற்றபடி, எது தனிநபர் தாக்குதல், எது ஆபாசம், எது வெறுப்புணர்வு போன்ற கேள்விகளுக்கு துல்லியமான விடைகள் கண்டிராத நிலையில், /

உதாரணமாக, தமிழ்மணத்துக்கும் போலிநாத்த பின்னூட்டங்களுக்கும் எந்தவகையிலும் சம்பந்தமில்லாத காசியின் குடும்பத்தினரைக் குறித்து எதுவும் எழுத எனக்கோ உங்களுக்கோ போலிக்கோ எந்த உரிமையும் கிடையாது. இதை மேலே சொன்ன எல்லாவகையிலும் சேர்க்கலாம்.

Voice on Wings சொன்னது…

கார்த்திக், உங்கள் கருத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது. உரையாடல் குழுக்களிலுள்ள மட்டுறுத்தல்களைப் பற்றி நானும் அறிவேன். மட்டுறுத்தல்களில்லாத குழுக்களையும் கண்டிருக்கிறேன், அத்தகைய குழுக்களையே அதிகமாகவும் விரும்பியிருக்கிறேன்.

//உதாரணமாக, தமிழ்மணத்துக்கும் போலிநாத்த பின்னூட்டங்களுக்கும் எந்தவகையிலும..........//

நீங்கள் கொடுத்திருப்பது ஒரு உதாரணம். இதைக் கண்டால் அழிக்க வேண்டுமென்பது அனைவருக்கும் தெரிந்ததே. இது போன்ற எத்தனை உதாரணங்களை வைத்துத் தெளிவுப்படுத்த முடியும்? இறுதியில் 'எனக்கு பிடிச்ச கருத்து..........' நிலை வந்து விடாமலிருக்க என்ன வழி?

சுதர்சன், நீங்கள் கூறுவது உண்மைதான். அவ்வப்போது, Blogger கணக்கைத் திறந்து பின்னுட்டங்களை வெளிக்கொண்டு வருவது ஒரு கூடுதலான வேலையாகிப்போனது :)

மு. சுந்தரமூர்த்தி சொன்னது…

(இது கல்வெட்டு பதிவில் இட்ட பின்னூட்டம். இங்கும் பொருந்தும் என்பதால் இன்னொரு முறை)

கல்வெட்டு,
உங்களைப் போலவே நானும் ஆரம்பத்தில் எதிர்த்தேன், குறிப்பாக மத விஷயங்களை எழுதியவர்களை நீக்குவது எனக்கு உடன்பாடில்லை. மதநம்பிக்கை இல்லாவிட்டாலும் கருத்தளவில் இன்றும் இதுவே நிலைப்பாடே. ஆனால் நடைமுறையில் வேறு சிக்கல்கள் முளைத்து அவற்றின் வக்கிரம் பரவிக்கொண்டு வருகிறது. அது ஒருநாள் உங்களையும் தொடலாம். முகத்தில் முக்காடு போட்டுக்கொண்டு எழுதுபவர்களுக்கு பிரச்சினையில்லை. அவர்கள் என்னவேண்டுமானாலும் எழுதிவிட்டு நண்பர்களுக்கிடையில் கூட யோக்கியமானவர்களாக வலம் வரலாம். ஆனால் முகத்தை வெளியில் காட்டி இயங்குபவர்களுக்கு அது சாத்தியமில்லை. முகமூடிகள் அணிந்து எழுதுவது கூட சில நேரம் தேவையாயிருக்கும். ஆனால் வெளியே தெரிந்த முகங்களைத் திருடி முகமூடிகளாக அணிந்து அவர்களைப் பற்றியே வக்கிரமாக எழுதுவதை எந்த வகைக் கருத்துச் சுதந்திரத்தில் சேர்ப்பது? கருத்து சொல்வதற்குள்ள சுதந்திரம் எவ்வளவு முக்கியமோ அதே அளவு, சொன்ன கருத்துக்கு பொறுப்பேற்பதும் முக்கியமானது. அப்படிப் பொறுப்பேற்றுக்கொள்ளக்கூடியவர்களின் கருத்துச் சுதந்திரத்தைத் தான் நாம் பாதுகாக்க முயலவேண்டும். போலி முகங்களுடன் எச்சம் கழித்துவிட்டு பொறுப்பேற்காமல் ஓடுபவர்களின் கருத்துச் சுதந்திரத்திற்காக சிலர் போராடுவது வேடிக்கையாக உள்ளது. நம் கேள்வியும், கோபமும் இத்தகைய வக்கிரங்கள் மீது இருக்கவேண்டுமேயன்றி தமிழ்மணம் நிர்வாகிகள் மீதல்ல.

இவ்விஷயமாக சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க யாரேனும் முன்வந்தால் என் முழு ஆதரவும், உதவியும் உண்டு. அதுவரை தமிழ்மணம் நிர்வாகிகளின் செயல்பாடுகளை ஆதரிக்க வேண்டியது கட்டாயமாகிறது.

Voice on Wings சொன்னது…

சுந்தரமூர்த்தி,

//போலி முகங்களுடன் எச்சம் கழித்துவிட்டு பொறுப்பேற்காமல் ஓடுபவர்களின் கருத்துச் சுதந்திரத்திற்காக சிலர் போராடுவது வேடிக்கையாக உள்ளது.//

மற்றவர்களைப் பற்றி எனக்குத் தெரியாது, ஆனால் நான் 'போராடுவது' நிச்சயமாக அந்தப் போலி நபரின் சுதந்திரத்திற்காக அல்ல, மாறாக என் மற்றும் என் வாசகர்களின் சுதந்திரத்திற்கே. பின்னூட்டங்களை மட்டுறுத்துவதும் மட்டுறுத்தாததும், பொதுவாக ஒரு பதிவரின் முடிவாக இருக்கும். அந்த உரிமையைப் பறிப்பதாகவுள்ளது இந்த நிபந்தனை. மேலும், பின்னூட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டு வெளியாவதில் ஏற்படும் தாமதம், மற்றும் அது நிராகரிக்கப்படக்கூடிய சாத்தியக்கூறு, ஆகியவற்றால், வாசகர்களுக்கு பின்னூட்டமிடுவதற்கு ஊக்கமில்லாமல் போகும் நிலையில்், வலைபதிவுகள் ஒருவழிப்பாதைகளாகிவிடும் சாத்தியமுள்ளது (esp. for low-profile bloggers like me :) ). வலைப்பதிவுகள் விவாதக்களங்களாக இருக்கும் நிலையிலிருந்து இதுவொரு வீழ்ச்சியே.

போலிகளின் மீதான கண்டனங்களை எனது முந்தைய பின்னூட்டங்களில் வழங்கியிருக்கிறேன். அதோடு, போலிப் பின்னூட்டங்களை அடையாளம் கண்டுகொள்வதற்கும் நுட்ப உதவிகள் வழங்கியிருக்கிறேன்,் அவற்றால் பாதிக்கப்பட்ட பதிவர்களுக்கு. (போலிகளுக்கு ஆதரவாக இந்தப் பதிவை எழுதவில்லை என்பதை நிலைநாட்ட இந்த உபரித் தகவல்கள்)

Sri Rangan சொன்னது…

உங்கள் நேர்மையான எண்ணங்களை மதிக்கிறோம் வொய்ஸ் ஒன் விங்ஸ்.இது முழுக்க முழுக்கக் காசியின் முடிவுமட்டுமன்று,நாங்கள்கூடக் காசியிடம் நமக்கேற்பட்ட தொல்லைகளுக்காகக் கேட்ட முறைமைகளைக் கொண்டே இந்த முடிவைக் காசி எடுத்திருக்கிறார்.எனினும் காசியின் இந்த முடிவுதாம் சரியெனப் படுகிறது.காரணம் நானும் அநாமதேயங்களால் பலத்த அடி வேண்டியதன் பலானாக இந்த முடிவுக்கு ஆதரவாக நிற்கிறேன்.குடும்பத்தைத் தெருவுக்கு இழுப்பதற்கு யாருக்கும் உரிமையில்லை.அதைச் செய்பவர்மீது தாளாத கோபம் மேலிடுகிறது!
அன்புடன்
ப.வி.ஸ்ரீரங்கன்

வசந்தன்(Vasanthan) சொன்னது…

கீழ்க்குறிப்பிடப்படுபவை ஏற்கனவே வேறு பதிவுகளில் எழுதியவை. உங்கள் பதிவுக்கும் பொருந்தும்.
------------------
ஏற்கனவே மட்டுறுத்தலின் பயனை அனுபவித்து கருத்துத் தணிக்கை செய்தவர்கள்கூட இப்போது மட்டுறுத்தலை சகட்டுமேனிக்கு எதிர்ப்பது வேடிக்கைதான்.
---------------------------
இன்னொரு முக்கியவிசயம்:
தமிழ்மணம் தான் இலவச வலைப்பதிவு சேவையையும் (blogger உட்பட)வழங்குகிறதென்ற புரிதல் இன்றும்கூட வலைப்பதிவாளர் சிலரிடமுண்டு. அதாவது தமிழ்மணத்தில் அங்கத்துவமாயில்லாவிட்டால் வலைப்பதியவே முடியாதென்ற புரிதல். இதை இரு நாட்களின் முன் நேரடியாக சக வலைப்பதிவாளர் ஒருவரிடமிருந்து அறிய நேர்ந்தது. இங்கும் அப்படியொரு நோக்கில் பலர் கருத்துச் சொல்கிறார்களோ என்ற ஐயமுண்டு.
-----------------------------
என் நிலையில் அனாமதேயப் பின்னூட்டங்களை நிறுத்தப்போவதில்லை. இது பிறர் பெயரில் பின்னூட்டங்கள் வருவதைச் சாத்தியப்படுத்துமென்ற போதும் இதை நான் நிறுத்தப்போவதில்லை. பிறர் பெயரில் ஆபாசமாக, விசமத்தனமாகப் பின்னூட்டமிட்டால் அதைக் கண்டுணரும் நிலையில் நானிருப்பதால் மட்டுறுத்தலிலேயே அதை நிவர்த்தி செய்துகொள்வேன்.
-----------------------------
இங்கே வலைப்பதிவுகள் சக வலைப்பதிவாளரால் மட்டும் படிக்கப்படுவதில்லை. அவை இவ்வலைப்பதிவுகள் பற்றி ஏதும் தெரியாதவர்களாலும் பெருமளவிற் படிக்கப்படுகின்றன. அப்படி வரும் மக்களுக்கு நாங்கள் ஆபாசப்பின்னூட்டங்களை வாசிக்கக் கொடுப்பதைப் பற்றி சதயமுட்பட அவர்பக்கம் நிற்பவர்கள் என்ன சொல்கிறீர்கள்?

எல்லாத்துக்கும் டோண்டுவை மையப்படுத்துவது எரிச்சலைத்தான் தருகிறது. அவரும் இந்தநேரத்தில் கதாநாயகனாகிவிட்டார். மட்டுறுத்தலை எதிர்த்தாலும் டோண்டுவை மையப்படுத்தித்தான். அதை ஆதரித்தாலும் டோண்டுவுக்கு ஒரு சலாம் வைத்துத்தான் நடக்கிறது. டோண்டுவுக்கு முதலே ரோசாவசந் போன்றவர்கள் இப்படி போலிகளால் பாதிக்கப்பட்டார்கள். அவர் எழுதாத கருத்தை வைத்து அவர் வசைபாடப்பட்டார். இப்படி வேறும் சிலருக்கு நடந்தது. டோண்டு எழுதாத கருத்துக்கு எல்லாரிடமும் வாங்கிக்கட்டிக்கொண்டார். இதுமட்டில் வலைப்பதிவாளரிடையே வீணாண சண்டைகள் நடந்ததுதான் மிச்சம். தேவையற்ற வாதப்பிரதிவாதங்கள். ஆனால் இதற்குக் காரணமாயிருந்த நபர் சும்மா தள்ளிநின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பான்.

அண்மையில் அப்படிப்பட்ட நபர் 'காசி' என்ற பெயரில் இரயாகரனின் பதிவில் கீழ்த்தரமான பின்னூட்டமொன்றை இட்டுவிட, அதைப் போலி என்று உணரும் நிலை தனக்கில்லை என்று சொல்லிக்கொண்டு அந்தப்பின்னூட்டத்தை வைத்து இரயாகரன் பெரியதொரு விவாதம் (வியாபாரம்) செய்தார். பின்னர் ஒரு பதிவே கூட போட்டார். (அது போலியென்று சொன்னபின்னும்கூட, அவர் அந்தப்பின்னூட்டங்களை வைத்து வதம்(எழுத்துப்பிழையில்லை) செய்தது வேறு விசயம். அவை அழிக்கப்படவுமில்லை.) இந்நிலையில் சம்பந்தப்பட்ட இரு வலைப்பதிவாளர்களினதும் அவர்தம் குடும்பத்தினரதும் நிலையென்ன?
இவற்றையெல்லாம் கருத்துச் சுதந்திரமென்ற பேரில் அனுமதிப்பது பற்றித்தானே நீங்கள் சொல்கிறீர்கள்?

இப்போது வந்துள்ள நிலைமையின்படி, ஆபாசப்பின்னூட்டங்களை தொடர்ந்து தம் வலைப்பதிவில் வைத்துக்கொள்பவர்கள் இனிமேல் அப்படிச் செய்யமுடியாது. அதற்கு அவர்கள் பதில் சொல்லியே ஆகவேண்டும். இதுவரை, தாமே அப்படிப் பின்னூட்டங்களைப் போட்டுவிட்டு, குய்யோ முறையோ என்று கத்தியவர்கள் இனிமேல் அந்த நரித்தனங்களைச் செய்ய முடியாது. இன்னார்தான் இப்படி ஆபாசப்பின்னூட்டங்களைப் போடுகிறார்கள் என்ற மாயையை வலைப்பதிவாளர்களிடையே உருவாக்கும் நோக்கத்தோடே சிலர் இயங்குகிறார்கள். அவையெல்லாம் தவிர்க்கப்பட வேண்டியவைதானே? இதில் நியாயமானவர்களின் பெயர்கள் காப்பாற்றப்படவேண்டுமென்பதை யாராவது மறுக்க முடியுமா?


இப்போதெல்லாம், பின்னர் வரப்போகும் கேள்விகளுக்காக முன்கூட்டியே பதிவுபோட வேண்டுமென்ற நோக்கில் பல பதிவுகள் வருவதாகப் படுகிறது.

வசந்தன்(Vasanthan) சொன்னது…

தெருத்தொண்டனிடம் கேள்வி.

இன்னும் மாதக்கணக்கில் ஆபாசப்பின்னூட்டங்களை அழிக்காமல் தம் பதிவில் வைத்து அழகு பார்த்து வியாபாரம் செய்யும் பதிவர்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்?

குறிப்பிட்ட சிலர்தான் அப்பின்னூட்டங்களை எழுதினார்களென்ற தோற்றத்தை, சக வலைப்பதிவாளர்களிடம் ஏற்படுத்தவென்றே திட்டமிட்டு வேலை செய்யும் நிலையை நீங்கள் உணர்ந்ததில்லையா? இதுமட்டில் செய்ய வேண்டியவை என்ன?
-----------------------------------
நிற்க, எல்லாவற்றையும் (ஆபாசப் பின்னூட்டங்கள், போலியாக எழுதுவது....)எதிர்க்கிறேன், விமர்சிக்கிறேன் என்று சொல்லும் நீங்கள், ஒரு நையாண்டியாக இம்மட்டுறுத்தலை எதிர்த்து எழுதுவது ஏன்?
இதற்குத் தீர்வு எதையாவது உங்களால் இப்போதைக்குச் சொல்ல முடியுமா?
மட்டுறுத்தலைத்தவிர இப்போதைக்கு வேறு வழியில்லையென்பது என் கருத்து. உங்கள் கருத்தென்ன?

மட்டுறுத்தலை எதிர்ப்பதென்பது அதனால் வரும் விளைவுகளை ஏற்றுக்கொள்வதற்குச் சமன். அதுவுமில்லை - இதுவுமில்லை என்று இடையில் நின்று சளாப்புவதும்(ஜல்லியடித்தல்), நையாண்டி பண்ணுவதும் ஏற்புடையதன்று.
-----------------------------
இதுமட்டில் பிரகாசின் பின்னூட்டம் தட்டையானது. தனியே காசியை மட்டும் முன்னிறுத்தி அவரது விளக்கமிருக்கிறது. காசியை ஓர் உதாரணமாகச் சொல்லியிருந்தாற் பரவாயில்லை. ஆனால் அவரது விளக்கம், காசிக்கு வந்த சிக்கலை வைத்துத்தான் இப்போதைய மட்டுறுத்தல் வந்ததாகச் சொல்கிறது.

சிலர், காசி வலைப்பதிவாளர்கள் சிலரிடம் விலைபோய்விட்டதாகச் சொல்கிறார்கள். டோண்டு போன்ற ஜாம்பவான்கள் இக்கருத்துக்குத் தூபம் போடும் வகையில் எழுதுகிறார்கள்.

அடையாளத் திருட்டை உணர முடியாதவர்களுக்கு மட்டுறுத்தலாலும் பயனில்லை. ஆபாசப்பின்னூட்டங்களைத் தடுக்க மட்டுமே அவர்களுக்கு இது பயன்படும்.
----------------------------------
மட்டுறுத்தலில் பின்னூட்டங்கள் 'முதலாளியின்' ஒப்புதலுக்குக் காத்திருப்பது பற்றிய உங்கள் கருத்துச் சரி. ஆனால் இது கருத்துச் சுதந்திரம் பறிபோவது பற்றிய "புலம்பலோடு" பொருத்த முடியுமா? மட்டுறுத்தலால் ஏற்படும் நன்மைகளோடு ஒப்பிடுகையில் காத்திருப்பு என்பது வெறும் தூசி போலவே எனக்குப் படுகிறது.

தெருத்தொண்டன் சொன்னது…

வசந்தன்: //தெருத்தொண்டனிடம் கேள்வி.

இன்னும் மாதக்கணக்கில் ஆபாசப்பின்னூட்டங்களை அழிக்காமல் தம் பதிவில் வைத்து அழகு பார்த்து வியாபாரம் செய்யும் பதிவர்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்?

குறிப்பிட்ட சிலர்தான் அப்பின்னூட்டங்களை எழுதினார்களென்ற தோற்றத்தை, சக வலைப்பதிவாளர்களிடம் ஏற்படுத்தவென்றே திட்டமிட்டு வேலை செய்யும் நிலையை நீங்கள் உணர்ந்ததில்லையா? இதுமட்டில் செய்ய வேண்டியவை என்ன?//

voice on wings பதிவில் எனக்குக் கேள்வி கேட்டிருக்கிறீர்கள்..ஆபாசப் பின்னூட்டங்களை அழிக்காமல் அழகு பார்த்து வியாபாரம் செய்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. அவற்றை அழிக்க வேண்டும் என்பதே எனது நிலை.

நீங்கள் இரண்டாவது விஷயமாகக் குறிப்பிடும் சாத்தியக் கூறையும் மறுப்பதற்கில்லை. ஐபி முகவரி மற்றும் வருகை தொடர்பான அடையாளங்களை வைத்து இந்த சாத்தியத்தை அம்பலப்படுத்தலாம் அல்லது நடவடிக்கை எடுக்கலாம் என்பதில் எனக்கு கருத்து வேறுபாடு இல்லை. தமிழ்மணம் விதியாக நடைமுறைப்படுத்தும் முன்பாகவே ஒரு பதிவு போட்டு மட்டுறுத்தலை செயல்படுத்திவிட்டேன் என்பதை நீங்கள் கவனிப்பீர்கள் என நம்புகிறேன்.

//நிற்க, எல்லாவற்றையும் (ஆபாசப் பின்னூட்டங்கள், போலியாக எழுதுவது....)எதிர்க்கிறேன், விமர்சிக்கிறேன் என்று சொல்லும் நீங்கள், ஒரு நையாண்டியாக இம்மட்டுறுத்தலை எதிர்த்து எழுதுவது ஏன்?
இதற்குத் தீர்வு எதையாவது உங்களால் இப்போதைக்குச் சொல்ல முடியுமா?
மட்டுறுத்தலைத்தவிர இப்போதைக்கு வேறு வழியில்லையென்பது என் கருத்து. உங்கள் கருத்தென்ன?

மட்டுறுத்தலை எதிர்ப்பதென்பது அதனால் வரும் விளைவுகளை ஏற்றுக்கொள்வதற்குச் சமன். அதுவுமில்லை - இதுவுமில்லை என்று இடையில் நின்று சளாப்புவதும்(ஜல்லியடித்தல்), நையாண்டி பண்ணுவதும் ஏற்புடையதன்று.//

இந்தக் கேள்வியும் என்னிடம் கேட்கப்பட்டதா என்று தெரியவில்லை. வாய்ஸ் ஆன் விங்க்ஸ் பதிவில் எனது முதல் பின்னூட்டம் உங்களுக்கு நான் மட்டுறுத்தலை நையாண்டி செய்வதாகப் பட்டால், அது நையாண்டி அல்ல என்று சொல்வதைத் தவிர வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை.

வாய்ஸ் ஆன் விங்க்ஸ் உணர்ச்சிவசப்பட்டு பரிபூரண சனநாயகத்திற்கான குரலை எழுப்புகிறாரே, அவரை அவரது பதிவின் வார்த்தைகளில் இருந்து கட்டுப்படுத்துவோமே என்ற எண்ணத்தில் எழுதியதே அந்த மறுமொழி.. விதியாவதற்கு முன்பே எனது பதிவில் மட்டுறுத்திவிட்டு அதை எப்படி நான் நையாண்டி செய்வேன் என்று நினைக்கிறீர்கள் வசந்தன்?

Voice on Wings சொன்னது…

ஸ்ரீரங்கன், உங்கள் கருத்தை வெளியிட்டதற்கு நன்றி. நிச்சயமாக, யாருக்கும் யாரையும் அவமதிக்கும் உரிமை கிடையாதுதான். எனினும், இக்கட்டாயத் தணிக்கை முறை சரியே என்ற உங்கள் கருத்திலிருந்து நான் வேறுபடுகிறேன். அதற்கான காரணங்களை முந்தைய பின்னூட்டங்களில் விவரித்திருக்கிறேன்.

வசந்தன், நீங்கள் பொதுவாகக் கூறிய கருத்துகளுக்கு நன்றி. என்னை் (தெருத்தொண்டன் என்றுப் பிழையாக?) குறிப்பிட்டு எழுப்பிய கேள்விகளுக்கான விடைகள் கீழே:

//இங்கே வலைப்பதிவுகள் சக வலைப்பதிவாளரால் மட்டும் படிக்கப்படுவதில்லை. அவை இவ்வலைப்பதிவுகள் பற்றி ஏதும் தெரியாதவர்களாலும் பெருமளவிற் படிக்கப்படுகின்றன. அப்படி வரும் மக்களுக்கு நாங்கள் ஆபாசப்பின்னூட்டங்களை வாசிக்கக் கொடுப்பதைப் பற்றி சதயமுட்பட அவர்பக்கம் நிற்பவர்கள் என்ன சொல்கிறீர்கள்?//

நிச்சயமாக, மட்டுறுத்தலை வைத்துக் கொள்ளுங்கள். அது உங்கள் சொந்த முடிவு. உ ங்களைப் போல்ல்லாமல், "வாசகர்களின் கருத்து உடனே வெளியாவது முக்கியம், அதன் விளைவாக ஏதாவது ஆபாச வாக்கியங்கள் வெளியிடப்படுமானால் அவற்றை அழித்துக் கொள்ளலாம்", என்ற நிலைப்பாடுடைய என்னைப்போன்றவர்கள் அத்தகைய நடவடிக்கையை எடுக்காமல் இருப்போம். மாறாக, அனைவரும் கட்டாயமாகத் தங்கள் பதிவை மாற்றியமைக்க வேண்டுமென்ற நிபந்தனை, ஒரு பதிவரின் சொந்த்த் தேர்வுகளை பறிப்பதாகிறது.

//இன்னும் மாதக்கணக்கில் ஆபாசப்பின்னூட்டங்களை அழிக்காமல் தம் பதிவில் வைத்து அழகு பார்த்து வியாபாரம் செய்யும் பதிவர்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்?//

அப்படிப்பட்டவர்கள் கருத்துத் தணிக்கையையும்் தாண்டி அத்தகைய பின்னூட்டங்களை அனுமதிக்கலாமல்லவா? இப்பிரச்சனையை கருத்துத் தணிக்கை எவ்வாறு தவிர்கிறது என்று கருதுகிறீர்கள்?

//நிற்க, எல்லாவற்றையும் (ஆபாசப் பின்னூட்டங்கள், போலியாக எழுதுவது....)எதிர்க்கிறேன், விமர்சிக்கிறேன் என்று சொல்லும் நீங்கள், ஒரு நையாண்டியாக இம்மட்டுறுத்தலை எதிர்த்து எழுதுவது ஏன்?//

எனது வலைப்பதிவின் செயல்பாடு பாதிக்கப்படுவதால். எனக்கு விருப்பமில்லாவிட்டாலும், என் வாசகர்களின் instant gratification (on seeing the comment published) பறிக்கப்படுவதால்.

//இதற்குத் தீர்வு எதையாவது உங்களால் இப்போதைக்குச் சொல்ல முடியுமா?
மட்டுறுத்தலைத்தவிர இப்போதைக்கு வேறு வழியில்லையென்பது என் கருத்து. உங்கள் கருத்தென்ன?//

ஒரு பின்னூட்டம் போலியா இல்லையா என்று கண்டுகொள்வது நுட்ப ரீதியில் சாத்தியமே (அதிலுள்ள பிளாக்கர் எண், பிளாக்கர் நிழற்ப்படம் போன்றவற்றை வைத்து). ஒரு பின்னூட்டம் போலியென்று உறுதியான பின்,
1. வலைப்பதிவர் அதை அழிக்க வேண்டும்
2. அதுவரை, மற்ற வாசகர்கள் அதைப் புறக்கணிக்க வேண்டும். (அல்லது பதிவரிடம் முறையிட்டு நீக்கக் கோரலாம், தத்தம் நேர வசதிகளைப் பொறுத்து)
இதற்கு மேல் இதில் செய்வதற்கு எதுவுமில்லை, செய்ய வேண்டியதும் எதுவுமில்லை, என்பதே என் கருத்து. இதை நீங்கள் கேட்டதால் கூறுகிறேன். பிறருக்கு இதில் மாற்றுக் கருத்துக்கள் இருக்க வாய்ப்புள்ளது. அவற்றை மதிக்கிறேன்.

//ஆனால் இது கருத்துச் சுதந்திரம் பறிபோவது பற்றிய "புலம்பலோடு" பொருத்த முடியுமா?//

கட்டுப்பாடுகள் அதிகரித்தால் சுதந்திரம் பறிக்கப்படும் என்பது நடைமுறையிலுள்ளதுதானே. ஒரு வாசகனாக, ஒரு பதிவில் மட்டுறுத்தல் இருப்பதைக் கண்டால், அங்கு பின்னூட்டமிடும் ஆர்வம் குறைந்து விடுகிறது. ஏனென்றால்,
1.அது பதிவரின் ஒப்புதலைப் பெற்று வெளியாவதற்குப் பல நாட்களாகலாம்
2. பதிவர் அதனை நிராகரித்து விடக்கூடும். வேறொரு பதிவில் ஆதிரை இதே கருத்தைக் கூறியிருக்கிறார்.
நிச்சயமாக இது ஒரு சுதந்திரச் சூழலைக் குறிப்பதாகயில்லை. நீண்ட விலாவாரியான பின்னூட்டமிட்ட பின், அது வெளியாகாமல் போகும் நிலைமை விரும்பத்தக்க ஒன்றா? ஒரு வாசகனாக, அது எனக்கு ஏற்படுவதையும் விரும்பவில்லை. அதேபோல் என் வாசகர்களுக்கும் அத்தகைய அச்சங்கள் வரக்கூடிய நிலையை நான் விரும்பவில்லை.

வசந்தன்(Vasanthan) சொன்னது…

தெருத்தொண்டன்,
தவறுக்கு வருந்துகிறேன். இதில் எதுவுமே உங்களை நோக்கிக் கேட்கப்படவில்லை. மாறாக Voice on Wings இடம்தான்.

<<<<
//இன்னும் மாதக்கணக்கில் ஆபாசப்பின்னூட்டங்களை அழிக்காமல் தம் பதிவில் வைத்து அழகு பார்த்து வியாபாரம் செய்யும் பதிவர்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்?//

அப்படிப்பட்டவர்கள் கருத்துத் தணிக்கையையும்் தாண்டி அத்தகைய பின்னூட்டங்களை அனுமதிக்கலாமல்லவா? இப்பிரச்சனையை கருத்துத் தணிக்கை எவ்வாறு தவிர்கிறது என்று கருதுகிறீர்கள்?
>>>>

ஆம். அவர்கள் கருத்துத் தணிக்கையையும் மீறி அதை வெளிப்படுத்த முடியும். இப்போது உள்ள நிபந்தனையின்படி அப்படி அவர்கள் வெளியிட்டால் அவர்களின் பின்னூட்டங்கள் தமிழ்மணத்தில் திரட்டப்படாது என்பதுதான் முக்கியம். அந்நிபந்தனைதான் அவர்களைக் கட்டுப்படுத்துகிறது. அவர்கள் இலகுவாகச் சொல்லக்கூடிய நியாயம், "அவங்கள் எழுதிறதுக்கு நாங்களென்ன செய்யிறது?" இனிமேல் அப்படியெல்லாம் புருடா விடமுடியாது. அதாவது அவர்களின் மட்டுறுத்தலையும் தாண்டி வருகிறதென்றால் அவர்கள்தான் அப்பின்னூட்டங்களை எழுதுகிறார்கள் அல்லது அதை வரவேற்கிறார்கள் என்று புரியும். இனி அவர்கள் தம் முகமூடிகளைக் கிழிக்கத் தயாராக மாட்டார்கள்.

மேலும், ஆபாசப் பின்னூட்டம் வந்தபின் அவற்றை அழிக்கலாமென்று சொல்வது சிரிப்பாக இருக்கிறது. பலமணிநேரம் பலரின் பார்வைக்கு வைக்கப்பட்டு, பின் அவை அழிக்கப்படுவதால் என்ன பலன்? உடனடியாகவே அழிக்கக்கூடியதாக வலையுலகத்தில் உலவக்கூடிய ஒருவரால் மட்டுறுத்தலையும் அதே நேர தாமதத்துள் ஏன் செய்ய முடியாது?
ஆக, பின்னூட்டங்கள் வெளிவந்தபின் அவற்றை அழிக்கலாமென்று சொல்வது சரியில்லை.

//அது பதிவரின் ஒப்புதலைப் பெற்று வெளியாவதற்குப் பல நாட்களாகலாம்//

என்று நீங்களே விளக்கம் தருகிறீர்கள். பின்னூட்டத்தை அழிப்பதற்கும் அந்தப் பதிவருக்கு அதே பலநாட்கள் தேவைப்படும். எனவே அந்தப் 'பல நாட்கள்' அந்த ஆபாசப்பின்னூட்டம் பதிவில் இருக்கத்தானே போகிறது?

வசந்தன்(Vasanthan) சொன்னது…

<<<<<<<<<<<<<<<
ஒரு பின்னூட்டம் போலியா இல்லையா என்று கண்டுகொள்வது நுட்ப ரீதியில் சாத்தியமே (அதிலுள்ள பிளாக்கர் எண், பிளாக்கர் நிழற்ப்படம் போன்றவற்றை வைத்து). ஒரு பின்னூட்டம் போலியென்று உறுதியான பின்,
1. வலைப்பதிவர் அதை அழிக்க வேண்டும்
2. அதுவரை, மற்ற வாசகர்கள் அதைப் புறக்கணிக்க வேண்டும். (அல்லது பதிவரிடம் முறையிட்டு நீக்கக் கோரலாம், தத்தம் நேர வசதிகளைப் பொறுத்து)
>>>>>>>>>>>>>>>

போலிகளை இனங்காணலாம். அதுசரி. யார் இனங்காணலாம் என்பது தான் பிரச்சினை. எல்லா வாசகர்களும் இனங்காணுவார்களா? பதிவர் இனங்காண்பதற்கான சாத்தியம் அதிகம். ஏனென்றால் அவருக்கு இச்சூட்சுமங்கள் தெரிந்திருக்கும். மாறாக சாதாரண பொதுமகனொருவருக்கு இவை தெரியப்போவதில்லை. "வாசகர்கள் புறக்கணிக்க வேண்டும்" என்று சொல்கிறீர்கள். இது சுத்தமாக எனக்குப் புரியவில்லை. எதுவரை? எப்படி அவர்கள் புறக்கணிப்பது? அதுசரியானதுதான் என்று வாசகர்களுக்கு யார் சொல்வது?
இதையே, போலியா இல்லையா என உணரத்தக்க வலைப்பதிவர் மட்டுறுத்தலின்மூலம் செய்துவிடலாமே? தேவையற்ற குழப்பங்களுமில்லை.

போலிப்பின்னூட்டங்களை இனங்காணும் சந்தர்ப்பத்தில் மட்டுறுத்தல் மூலம் நிறுத்தலாமென்பதைத் தவிர மட்டுறுத்தலுக்கும் அடையாளத் திருட்டை நிறுத்துவதற்கும் சம்பந்தமில்லை.

அன்பு சொன்னது…

Yow... sorry WoW:)

மறுமொழி மட்டுறுத்தல் ஏற்பாடு செய்துகொள்ளத் தவறினால் தங்கள் பதிவுக்கு தமிழ்மணம் தளத்தில் மறுமொழி நிலவரம் காட்டப்படும் வசதியைத் தொடர இயலாமல் போகும்

என்பதில் மறுமொழி தமிழ்மணத்தில் காட்டப்படாது என்றுதானே கூறப்பட்டுள்ளது. இதில் கருத்துச்சுதந்திரம் எங்கு வந்தது. உங்களைப்போன்ற தொழில்நுட்பம் தெரிந்தவர்கள் இதைவிட மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப யோசனைகளை, உதவிகளை வழங்கலாமே அதை விடுத்து 'கருத்துச் சுதந்திரம்' என்ற போர்வையில் எடுக்கப்படும் ஓரிரு முயற்சிகளையும் கீழறுக்க வேண்டும்!?

Voice on Wings சொன்னது…

வசந்தன்,

நீங்கள் கூறுவது போல் ஆபாசப் பின்னூட்டங்கள் (எது ஆபாசம் என்ற பள்ளிக்கூடக் கேள்வியை இங்கு கேட்காமல் விட்டாலும், அது முக்கியமான கேள்வி என்று நான் நினைத்தாலும்) பதிவர்களால் ஆதரிக்கப்படுவது தடுக்கப்படலாம் என்பதை ஒப்புக்கொள்கிறேன். இத்தகைய பதிவர்களின் மொத்த எண்ணிக்கை என்று பார்த்தால், விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் இருப்பார்கள். இவர்களைக் கட்டுப்படுத்த ஒரு ஆயிரம் பதிவர்களின் செயல்பாட்டை மாற்றக் கோருவது அதிகப்படியாகத் தோன்றுகிறது..

உங்கள் பதிவில் விழும் எச்சங்களை மற்றவர்களின் பார்வையில் படாமல் அப்புறப்படுத்த விழையும் உங்கள் நோக்கத்தை மதிக்கிறேன். வலைப்பதிவின் தூய்மைக்கு முன்னுரிமை அளிக்கும் உங்களைப் போன்ற பதிவர்களுக்கு மட்டுறுத்தல் ஒரு சிறந்த தீர்வு. ஆனால் உங்களைப் போலல்லாத மற்றவர்கள், வேறு விஷயங்களுக்கு முன்னுரிமை அளிக்க வாய்ப்பிருக்கிறது. உ-ம், எனது ஈடுபாடு இல்லாமலேயே எனது பதிவின் பின்னூட்ட இழைகளில் ஒரு ஆரோக்கியமான விவாதம் நடைபெறுமானால், அதில் எனக்கு மகிழ்ச்சியே. அத்தகைய விவாதத்திற்கு ஒரு தூண்டுகோலாக எனது பதிவு அமையுமானால், அதன் பயனை அடைந்து விட்டதாக நான் எண்ணுவதற்கு வாய்ப்பிருக்கிறது. இதன் பக்கவிளைவுகளாக அவ்வப்போது விழும் எச்சங்களை, மற்றவர்கள் பொருட்படுத்தாமல் போவதும், நான் அவற்றைக் கண்டவுடன் அழிப்பதுவும் நடக்குமானால், அத்தைகைய ஏற்பாட்டில் எனக்கு உடன்பாடே. இந்த எச்சங்களுக்குத் தமிழ்மண publicity கிடைப்பதுதான் பிரச்சனையென்றால், அந்தக் கருவிப்பட்டையை அகற்றுவதிலும் எனக்கு பிரச்சனையில்லை.

போலிகளை இனம் காண்பது எல்லோராலும் சாத்தியமா என்று கேட்டிருக்கிறீர்கள். அடிக்கடி வருகை தரும் (பதிவரல்லாத) வாசகர்களுக்கு இது ஒரு பெரிய சவாலாக இருக்காது. அத்தகைய வாசகர்கள் தொலைக்காட்சி சீரியல்களைப் போல் விட்டு விட்டு வருகை தந்தாலும் இத்தகைய நுணுக்கங்களைப் பிடிபடச் செய்வது கடினமான செயலல்ல. ஆடிக்கு ஒரு முறை வருபவருக்கு நீங்களும் நானும் ஒன்றுதான். நம் பெயரில் எத்தகைய பின்னூட்டமிருந்தாலும் அவருக்கு ஒரு பொருட்டல்ல. மட்டுறுத்தலைக் கொண்டு போலிகளை இனம் காண்பது சாத்தியமல்ல என்றுத் தெரியவிருகிறது. ஏனென்றால் மட்டுறுத்தும் திரையில் பிளாக்கர் எண் காட்டப்படுவதில்லை, பெயர் மட்டும்தான். ஆக, ஆபாசமில்லாத, ஆனால் விஷமத்தனமான கருத்துக்களை, மட்டுறுத்தல்களையும் கடந்து ஒரு போலியால் வைக்க முடியும். எனவே, மட்டுறுத்தி வெளியிட்ட பிறகும் போலியா என்று (பிளாக்கர் எண்ணை) சோதித்துப் பார்ப்பது நலம். இதைத்தான், //மட்டுறுத்தலுக்கும் அடையாளத் திருட்டை நிறுத்துவதற்கும் சம்பந்தமில்லை.// என்று நீங்களும் குறிப்பிட்டருக்கிறீர்கள் என்று நினைக்கறேன்.

===================
பிடிக்கவில்லையென்றால் போகவேண்டியதுதானே என்ற எதிர்பார்க்கப்பட்ட வாதம் வைக்கப்பட்டு விட்டது கண்டு மகிழ்ச்சி. இன்று, தேன்கூடு, புறாக்கூடு என்று எவ்வளவோ வசதிகள் வந்து விட்டாலும், என்னைப் பொறுத்தவரை, தமிழ்மணம் (நான் உட்பட) பலரை, தமிழ் மொழியில் எழுதத் தூண்டிய ஒரு இயக்கம் (தமிழ்மணம் அப்படிக் கூறிக்கொள்ளாவிட்டாலும்). அதன் விதிகளுக்குக் கட்டுப்பட்டு அதனுள் இயங்குவதையே விரும்புகிறேன். அறிவிப்பு வந்தவுடன் முதலில் எனது பின்னூட்டத் தணிக்கையைச் செயல்படுத்தி விட்டு, பிறகுதான் மற்ற வேலைகளை கவனித்தேன். விருப்பமில்லாத இந்த மாற்றத்தைப் பற்றிய சலிப்பை ஒரு ஒற்றை வரியில் பதியலாம் என்று தொடங்கி, பெரிய விவாதமாக வளர்ந்து விட்டது. தமிழ்மணத்தை விமர்சிக்கக் கூடாது என்ற விதி எதுவும் Terms & conditionsஇல் இருக்கிறதா என்றுத் தெரியவில்லை. இருந்தால் இப்பதிவை மாற்றியெழுதுவதற்கும் நான் தயார். :)

Voice on Wings சொன்னது…

அன்பு, கருத்துச் சுதந்திரம் ஒரு போர்வையல்ல. அதுதான் இறுதி இலக்கே. அதனை அடைவதற்கு, தொழில்நுட்பம் வேண்டுமானால் ஒரு போர்வையாக இருக்கலாம். என்னை யோவ் என்று அன்புடன் அழைத்ததற்கு நன்றி :)

dondu(#11168674346665545885) சொன்னது…

எல்லா சுதந்திரத்துக்கும் ஒரு விலை உண்டு. மட்டுறுத்தல் வேண்டாம் என்று ஒருவர் இருக்கலாம். ஆனால் அதற்கான விலை தமிழ்மணத்தில் அவரது பதிவில் பின்னூட்டங்கள் வந்தால் மறுமொழியப்பட்ட பதிவுகளில் இற்றைப்படுத்த மாட்டாது என்பதே. அந்த விலையைக் கொடுத்துவிட்டு சுதந்திரமாக இருங்கள்.

சைபர் க்ரைம் போலீஸில் ஒரு புகார் சென்று விசாரணை, நடவடிக்கை என்று வந்தால், ஆபாசப் பின்னூட்டம் வரும் பதிவுக்கு சொந்தக்காரர்களும் குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததாகத்தான் கருதப்படுவார்கள்.

"போலிகளை இனங்காணலாம். அதுசரி. யார் இனங்காணலாம் என்பது தான் பிரச்சினை. எல்லா வாசகர்களும் இனங்காணுவார்களா? பதிவர் இனங்காண்பதற்கான சாத்தியம் அதிகம்."
வெங்கட் சாமினாதன் அவர்களுடன் போலி டோண்டு பற்றி பேசிக் கொண்டிருந்தேன். ஒரு பதிவையும் (என்னுடையதல்ல) அவருக்கு காண்பித்தேன். அதில் அவன் மத்தளராயன் என்ற பெயரில் அசிங்கப் பின்னூட்டமிட்டிருந்தான். அதை அவர் படித்துவிட்டு கூறினார்: "கிரகசாரம், என்ன இந்த இரா.முருகன் இப்படி எழுதியிருக்கிறார்" என்று. அவரிடம் உடனே அது இரா.மு. இல்லையென்றதும்தான் அவர் சமாதானமானார்.

"டோண்டு தன் கருத்துவேறுபாட்டால் அவதிப்பட்டார் ஆனால் காசி அப்படியில்லை, டோண்டுவை ஆதரித்ததற்காக அவர் பெயரில் ஆபாசப் பின்னூட்டங்கள் வந்தன" என்ற பொருள் படும்படி யாரோ கூறியிருந்தார். அவருக்கு நான் ஒன்று கூறுவேன். நான் என்ன என் பெயரில் அசிங்கப் பின்னூட்டங்கள் இடு என்று வேண்டி கேட்டுக் கொண்டா அவற்றைப் பெற்றேன்? வாதம் நடக்கும்போத்கு அதில் தன் கட்சி வலுவிழந்ததை உணர்ந்த ஒரு கோழை செய்த அக்கிரமம் அது. அதை எதிர்த்து என் முறையில் போராடினேன். இப்போது ஓரளவு வெற்றியும் பெற்றேன். அவனை இக்னோர் செய்யுமாறு கூறியவர்கள் அவர்கள் பெயரில் இம்மாதிரி அசிங்கம் செய்தால் விட்டுவிடுவார்களா?

ஆபாச்ப் பதிவு மட்டும் இல்லை, இன்னொருவர் பெயரில் அவர் கூறியிருக்க முடியாதக் கருத்துக்களைக் கூறுவதும் ஆட்சேபத்துக்குரியதே. அந்த வகையில் ஒரு உதாரணமாக மணிக்கூண்டு அவர்களின் இப்பதிவைப் பாருங்கள். http://manikoondu.blogspot.com/2005/06/blog-post_27.html#comments

போலி டோண்டு என் பெயரில் பின்னூட்டமிட, அதற்கு மூக்கு சுந்தர் பதில் கொடுக்க, அது நான் இட்டது என நான் எதிர்வினை கொடுக்க, அதை ஏற்று மூக்கு சுந்தர் இம்மாதிரி எழுதுகிறார்:
"Mookku Sundar said...
டோண்டுவின் பெயரில் பின்னூட்டம் இடும் அந்த முகமில்லா நண்பருக்கு,

இது மாதிரியான விவகாரங்களின் மூலம் என்ன சாதிக்க முயல்கிறீகள் என்பது புரியவில்லை. அவர் பெயரை உபயோகப்படுத்தி, நீங்கள் இடும் பின்னூட்டங்கள் முற்றிலும் நாகரீகமில்லாத அணுகுமுறை. அவருடன் பிணக்கு என்றால், கருத்து வேறுபாடு என்றால், அதை அவருடன் விவாதித்து கொள்ள, உங்களுக்கு என்ன வேறு முகமூடிப்பெயர்களா கிட்டவில்லை..?? சற்றும் நேர்மை இல்லாத, கிழ்த்தரமான அணுகுமுறை. அதன் பலன்கள் அவருக்கும், கேடுகள் உங்களுக்கும் கிடைத்துக் கொண்டிருப்பது கண்கூடு. பலருக்கு இதனால் தர்மசங்கடம். நீங்கள் இம் மாதிரியெல்லாம் அவர் பெயரில் பின்னூட்டம் விடாவிட்டால், அவரே அதை எழுதுவார் என்பதாவது உங்களுக்குத் தெரியுமா,,?? அந்த "வாய்ப்பை" அவருக்கே தராமல், நீங்கள் தட்டிப் பறிப்பது என்ன நியாயம்..??

வேலையை நேர்மையாக செய்யுங்கள் நண்பரே..! இதற்கும் எனக்கு கீழ்த்தரமான முறையில் பதில் தந்தால், நான் பதில் சொல்ல மாட்டேன். உங்கள தலையில் நீங்களே மண் அள்ளிப் போடுகிறீகள் என்று பேசாதிருந்து விடுவேன்."

அதாவது ஒரு அடிப்படையும் இல்லாது அம்மாதிரி லூசுத்தனமாகப் பேசுவேன் என்பது அவர் துணிபு.

இப்போது போலிடோண்டு இன்னொரு பின்னூட்டம் இட்டான்.

"//நீங்கள் இம் மாதிரியெல்லாம் அவர் பெயரில் பின்னூட்டம் விடாவிட்டால், அவரே அதை எழுதுவார் என்பதாவது உங்களுக்குத் தெரியுமா,,?? அந்த "வாய்ப்பை" அவருக்கே தராமல், நீங்கள் தட்டிப் பறிப்பது என்ன நியாயம்..??//

உண்மைதான் மூக்குசுந்தர் அவர்களே. எனது எண்ணம், எழுத்து, சிந்தனை என எல்லாமே பிராமனீயம் ஒன்று மட்டுமே. அதில் நான் ஊறிப் போய்விட்டேன். அதனைத்தாண்டி என்னால் வர இயலாது. நான் வர நினைத்தாலும் எனது மற்ற நண்பர்களும் எங்கள் பார்ப்பன சங்கமும் அனுமதி வழங்காது.

என்னைப்பற்றி நன்றாகத் தெரிந்து வைத்து இருக்கிறீர்களே. நன்றி

வழக்கம்போல இந்த பின்னூட்டம் எனது வலைப்பூவிலும் இடம்பெறும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்
(எலிக்குட்டியைப் ப்ளாக்கர் ஐ.டி.யின் மேல் வைத்து கீழே அதே எண் தெரிகிறதா என்று பார்க்கவும்)"

சாதரணமாக எலிக்குட்டியை வைத்துப் பார்த்திருந்தாலே தெரிந்து போயிருக்கும் அது என்னுடையதில்லை என்று. அதைக் கூட செய்யாது மூக்கு சுந்தர் மறுபடியும் எழுதுகிறார்:
"Mookku Sundar said...
//உண்மைதான் மூக்குசுந்தர் அவர்களே. எனது எண்ணம், எழுத்து, சிந்தனை என எல்லாமே பிராமனீயம் ஒன்று மட்டுமே. அதில் நான் ஊறிப் போய்விட்டேன். அதனைத்தாண்டி என்னால் வர இயலாது. நான் வர நினைத்தாலும் எனது மற்ற நண்பர்களும் எங்கள் பார்ப்பன சங்கமும் அனுமதி வழங்காது.

என்னைப்பற்றி நன்றாகத் தெரிந்து வைத்து இருக்கிறீர்களே. நன்றி //

டோண்டு சார், இதற்கெல்லாம் எதற்கு நன்றி சொல்கிறீர்கள். ஏற்கனவே வெளிப்படையாக அறிவித்து இருக்கிறீர்களே.. அது ஒன்று போதாதா..?? :-)"
இந்த அழகில் ஸ்மைலி வேறு.

இப்போது நான் அதற்கு கொடுத்த எதிர்வினை:
"dondu(#4800161) said...
"டோண்டு சார், இதற்கெல்லாம் எதற்கு நன்றி சொல்கிறீர்கள். ஏற்கனவே வெளிப்படையாக அறிவித்து இருக்கிறீர்களே.. அது ஒன்று போதாதா..?? :-)"

மறுபடியும் தவறு செய்து விட்டீர்களே மூக்கு சுந்தர் அவர்களே. எலிக்குட்டியை வைத்து பார்த்து விட்டு எழுதியது நான்தானா என்று ஏன் பார்க்க மாட்டேன் என்கிறீர்கள். என்னைப் பற்றி இவ்வளவு தவறான அபிப்பிராயம் ஏன் மூக்கு சுந்தர் அவர்களே? டோண்டு அவ்வாறு பேசக் கூடியவர் என்று வேறு சப்பை கட்டு கட்டுவீர்கள். நான் கூறுவேன் நீங்கள் அவசரக்காரர் என்று. அருணிடம் கோபித்து கொண்டு பிரயோசனம் இல்லை. முதலில் உங்கள் அளவில் சரியாக பார்த்து எழுதவும் என்று நான் கேட்டு கொள்கிறேன்.

வழக்கம் போல இப்பின்னூட்டமும் என் தனிப்பதிவில் வரும். http://dondu.blogspot.com/2005/05/blog-post_25.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

அதற்கு மூக்கு சுந்தர் பதிவில் பதிலளிக்கவில்லை. ஆனால் நான் சற்றும் எதிர்பாராத முறையில் என்றென்றும் பாலா பதிலளித்தார்.

12:27 AM
enRenRum-anbudan.BALA said...
Dear Sundar,
//மறுபடியும் தவறு செய்து விட்டீர்களே மூக்கு சுந்தர் அவர்களே. எலிக்குட்டியை வைத்து பார்த்து விட்டு எழுதியது நான்தானா என்று ஏன் பார்க்க மாட்டேன் என்கிறீர்கள்.
//
This is TOO MUCH !!! Sorry, THREE MUCH ;-)

FYI, I too failed to observe that the comment was from Duplicate Dondu :-)

I will take more care to check the Blogger ID, from now on !

மேலே உள்ளதுதான் பதிவில் கடைசிப் பின்னூட்டம் இன்றையத் தேதி வரை. மூக்கு சுந்தர் அவர்களுக்கு நான் இது பற்றி போட்ட மின்னஞ்சலும் அதற்கு அவரது பதிலும் பின்வருமாறு:

Dear Sundar,
You are aware of the travails I am going throrugh due to the antics of
false Dondu. In one blog of Manikkoondu you mistakenly thought that an outrageous comment in my name was made by me in actual fact. Buit it was not. You could have avoided the misunderstanding with the simple technique of a mouseover. No matter.

But why should you repeat the same mistake in the next blog of the
same Manikoondu? I refer to his blog on Saathiiyam, see
http://manikoondu.blogspot.com/2005/06/blog-post_27.html

Kindly read my latest posting in my blog http://dondu.blogspot.com on
the subject. This false Dondu has opened a new blog with my user name and my profile details including photo. The only defence I have
against him now is the blogger number. But if experienced persons like
you neglect to do that simple test, I will be nowhere.

I take this opportunity to deny vehemently that at no time would I
have made the outrageous casteist comments that were expressed by
false Dondu. All I did earlier was to acknowledge my origins in face
of great hostility against Brahmins. Believe me, it is a crown of
thorns but then I willingly wore it as a matter of principle as a
reaction mainly against fellow Brahmins, who hide their Brahmin
identity for one reason or other and try to sound more anti-Brahmin
than everybody else. This I see as pathetic gesture on their part.
They know in their heart of hearts that the moment their Brahmin
origin is known they will face ridicule in the hands of others. I
repeat that nowhere I have said that Brahmins are the best of the lot.
I am old enough to know that each caste contains its great men as well
as riffraffs and as a student of logic, I will be the last one to make
any hasty generalization.

Sorry for this rambling mail, but I thought I will let you know.

Regards,
N.Raghavan
sundar reply to me:
More options 6/30/05

Hello Dondu Sir,
I understand your situation. Thanks for your mail.
From now on, I will avoid answering to whoever posts in your name. I really dont know why you are hesistant
to take action against that criminal.

I know you already have enough suggestions from all your friends and well wishers.

I dont want to bug you more. Have a Great day every day.
love
-sundarrajan
p.s: your post on Uppliyappan kovil was fine. My Grandma is from Nachchiyar koil. I have enjoyed Garuda
Sevai so many times.

போலிப் பின்னூட்டங்கள் அப்பதிவில் இன்றுவரை அப்படியே உள்ளன என்பது வேறு விஷயம்.

ஆபாசப் பின்னூட்டங்களைக் கூட கண்டுபிடித்து விடலாம். ஆனால் இம்மாதிரி நான் கூறாததை என் பெயரில் எழுதி மற்றவர்களும் அதை நம்பி விடுகிறார்கள், அதுதான் உண்மையான அபாயம். ஆகவேதான் நான் எங்கு பின்னூட்டமிட்டாலும் என்னுடைய தனிப்பதிவிலும் பின்னூட்டமாக நகலிடுகிறேன். இப்பின்னூட்டத்தையும் அவ்வாறே இடுவேன். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/2.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

வசந்தன்(Vasanthan) சொன்னது…

WoW, உங்கள் பதிலை வாசித்தேன்.
மேற்கொண்டு இதில் கதைப்பதற்கு ஏதுமில்லை.
ஆனால் தமிழ்மணத்தை விட்டு விலத்திப்போ என்று எங்கும் சொல்லப்படவில்லையே?

பிறகு சந்திப்போம்.

பெயரில்லா சொன்னது…

See the Legal aspect on the need for moderation

பெயரில்லா சொன்னது…

வசந்தன், நீங்கள் கேட்டதை தமிழ்மணத்தின் நிர்வாகி அவர்கள் இங்கு சொல்லியிருக்கிறார்கள்.

http://selvaraj.weblogs.us/archives/182

enRenRum-anbudan.BALA சொன்னது…

இந்தப் பிரச்சினை குறித்து பலரும் நிறைய அலசியாகி விட்ட நிலையில் என் கருத்து:

1. டோண்டு அவர்களின் சில செயல்பாடுகளினால், பிரச்சினை பெரிதாகிப் போனது என்பதில் எனக்கும் உடன்பாடே.
2. இப்போது நிலவும் அவலச்சூழலைப் பார்த்த பின்னும், இந்த மட்டுறுத்தலை "ஜனநாயக வழிமுறைக்கு எதிரானது" என்று சிலர் நிறுவ முயற்சிப்பது, மிகுந்த அயற்சியைத் தருகிறது.
3. இது ஒரு தற்காலிக நடவடிக்கையாக எடுத்துக் கொள்ளும் அளவு நம்மிடையே ஒரு புரிந்துணர்வு மிக அவசியமாகிறது.
4. தமிழ்மணம் என்னும் இலவச சேவை, சில காரணங்களுக்காக, ஒன்றை வலியுறுத்தும்போது இவ்வளவு வாதம்-பிரதிவாதம் செய்யும் நாம், பிளாகர் இது போன்று ஒரு நடவடிக்கை எடுத்தால், இவ்வளவு பேச மாட்டோம் என்றும் தோன்றுகிறது.

என்றென்றும் அன்புடன்
பாலா

Voice on Wings சொன்னது…

வசந்தன், பாலா, மற்றும் அனானி நண்பர்களே, உங்கள் கருத்துகளுக்கு நன்றி. எனது நிலைப்பாட்டைத் தெளிவுப்படுத்தி விட்டதால், மேலும் இவ்விஷயத்தில் கூறுவதற்கு எதுவுமில்லை என்பதுதான் என் நிலையும். சட்டப்படி பார்த்தால், இங்கு நாம் வெளியிட்டுக் கொண்டிருக்கும் கருத்துகளின் அடிப்படையில், நம்மில் பலர் ஏதாவது ஒரு நாட்டில் கம்பியெண்ணிக்கொண்டிருக்க வேண்டியதுதான். சட்டத்தையெல்லாம் பாரத்துக்கொண்டிருந்தால் பதிவிட முடியாது.

பெயரில்லா சொன்னது…

圣诞树 小本创业
小投资
条码打印机 证卡打印机
证卡打印机 证卡机
标签打印机 吊牌打印机
探究实验室 小学科学探究实验室
探究实验 数字探究实验室
数字化实验室 投影仪
投影机 北京搬家
北京搬家公司 搬家
搬家公司 北京搬家
北京搬家公司 月嫂
育儿嫂 月嫂
育婴师 育儿嫂
婚纱 礼服

婚纱摄影 儿童摄影
圣诞树 胶带
牛皮纸胶带 封箱胶带
高温胶带 铝箔胶带
泡棉胶带 警示胶带
耐高温胶带 特价机票查询
机票 订机票
国内机票 国际机票
电子机票 折扣机票
打折机票 电子机票
特价机票 特价国际机票
留学生机票 机票预订
机票预定 国际机票预订
国际机票预定 国内机票预定
国内机票预订 北京特价机票
北京机票 机票查询
北京打折机票 国际机票查询
机票价格查询 国内机票查询
留学生机票查询 国际机票查询