சனி, மார்ச் 04, 2006

சென்னைச் சுற்றுலா

இந்த இரு சொற்களும் ஒன்றோடொன்று சம்மந்தமில்லாதவையா? ஒரு வெளியூர் பயணிக்கு ஆர்வமூட்டும் வகையில் சென்னை் வழங்குவதென்ன? எனக்குத் தெரிந்த வரை, சென்னை ஒரு வாடிக்கையான, மாறுதலில்லாத, குறிப்பிடும் வகையில் எந்தவொரு சுற்றுலா மையத்தையும் கொண்டிராத ஒரு routine நகரமென்றுதான் கூறவேண்டும். தில்லியென்று எடுத்துக்கொண்டால் ஏகப்பட்ட சரித்திரப் புகழ் வாய்ந்த இடங்கள், மற்றும் சில மணிநேரப் பயணத்தில் உலக அதிசயமான ஆக்ரா. மும்பையின் அருகாமையிலும்் எலிஃபென்டா குகைகள், மாதேரான், லோனாவ்லா, (அமீர் கான் / ரானி முகர்ஜி புகழ்) கண்டாலா, என்று எவ்வளவோ சுற்றுலா மையங்கள். ஹைதராபாதில் தடுக்கி விழுந்தால் வராலாற்றுச் சின்னங்களும் கட்டிடங்களும்தான். (சென்னையிலும் இதுபோன்ற பழைமை வாய்ந்த கட்டிடங்கள் ஆங்காங்கே உள்ளன, ஆனால் அவை அரசு மற்றும் இதர நிறுவனங்களின் அலுவலகங்களாக மாறி, அவற்றின் சிறப்பை இழந்து கொண்டிருக்கின்றன). பெங்களூருக்கு அருகாமையிலும்் சில சுற்றலாத் தலங்கள் (காடுகள், மலைகள், etc) உள்ளதாக அறிகிறேன். கொல்கத்தாவிலும் சாந்தி நிகேதன், பேலூர் மடம், விக்டோரியா நினைவகம் என்று அதன் பங்குக்கு சில இடங்கள், (மற்றும் அந்த ஊரே ஒரு மியூசியம் போலத்தான், டிராம் வண்டிகளென்ன, பாதாள இரயிலென்ன, என்று :) ). ஆக, சென்னைதான் இருக்கும் பெருநகரங்களிலேயே ஒரு monotonous exceptionஆ?

ஒரு சென்னைவாசிக்கு இருக்கும் தேர்வுகளைப் பார்ப்போம். சென்னையின் கடற்கரைகள் நிச்சயமாக அருமையானவை. மெரினாவை விட கொஞ்சம் கூட்டம் குறைவான Eliot's (பெசன்ட் நகர்), மற்றும் திருவான்மியூர் கடற்கரைகள் சற்று ஏற்புடையவை. இன்னும் தூரம் சென்றால் நீலாங்கரை, முட்டுக்காடு (இங்கு boating வசதி உள்ளதாமே?) என்றெல்லாம் பட்டியல் நீளும். ஆனால் அங்கெல்லாம் சென்றதில்லை. வி.ஜி.பி. தங்கக் கடற்கரைக்கு மட்டும் சென்றிருக்கிறேன். அது என்னை அவ்வளவாகக் கவரவில்லை. இவற்றை விட்டால் சென்னை நகர எல்லைக்குள் வேறெந்த optionஉம் கிடையாது. (abc கோயில், xyz ஆலயம், ஆகியவையெல்லாம் கணக்கில் வரமாட்டா) தில்லியிலிருந்து வந்த ஒரு அலுவலக விருந்தாளி, கிண்டி snake park என்று கேள்விப்பட்டு, ஏதோ Discovery Channel ரேஞ்சிற்கு கற்பனை செய்திருப்பார் போலிருக்கிறது. அங்கே போகவேண்டும் என்று அடம் பிடித்து, நானும் கூட சென்று........... பாவம், வெகுவாக ஏமாந்து போனார்.

சென்னைக்கு அருகாமையில் என்றுப் பார்த்தால், உடனே நினைவிற்கு வருவது நம் சரித்திரப் புகழ் வாய்ந்த 'மஹாப்ஸ்'தான் (அதாங்க, மஹாபலிபுரம்). சென்னையில் வளரும் குழந்தைகள் உண்மையிலேயே பரிதாபத்திற்குரியவர்கள். ஒவ்வொரு வருடமும் அவர்களது பள்ளிகளில் excursion என்ற பெயரில், வள்ளுவர் கோட்டம், மியூசியம், வண்டலூர் உயிரியல் பூங்கா, காந்தி மண்டபம் ஆகிய இடங்களையெல்லாம் சுற்றிக் காண்பித்த பின்னர், அவர்களை கரிசனத்தோடு மஹாபலிபுரத்திற்கும் அழைத்துச் செல்வார்கள், அவர்களது பள்ளியாசிரியர்கள். அங்கு சில பாறைகளையும் அவற்றில் செதுக்கப்பட்ட சிற்பங்களையும் பார்த்துவிட்டு, கைகோர்த்துக் கொண்டு வீடு திரும்ப வேண்டியதுதான். இப்படிச் செய்தே அவ்விடத்தின் மீது ஒரு வெறுப்பை ஊட்டியிருக்கிறார்கள் நமது பள்ளிகளில். ஒரு மாறுதலுக்காக அங்கு சென்று, சில நாட்கள் தங்கி, கடலலைகளில் குளித்து (அது பாதுகாப்பானதா என்பதை யோசிக்க வேண்டும்), நேரத்தை வெட்டியாகக் கழித்து......... இப்படியெல்லாம் ஏன் யாரும் சிந்திப்பதில்லை? "காலைல போனமா, சாயந்திரம் வந்தமா" என்ற ரீதியில் இவ்விடங்களை அணுகுவதற்கு பதிலாக, அங்கு போகாமலே இருக்கலாம். அங்கே தங்கும் வசதிகளின் தரம் பற்றியும் தெரியவில்லை.

பள்ளி இறுதியாண்டில் சில நண்பர்களாகச் சேர்ந்து கொண்டு, மிதிவண்டிகளின் மீதே மஹாப்ஸ் வரை பயணம் செய்வோமென்று முடிவு செய்து கொண்டு, ஒரு பத்து பன்னிரண்டு பேர் அவ்வாறு சென்று வந்தோம். போவதற்கு அரை நாள், திரும்ப வருவதற்கு அரை நாள், இடையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு பாறைகளின் மீது ஓய்வு, மிதித்த களைப்பு தீருவதற்காக. சென்னையிலிருந்து அதிகாலை புறப்பட்டுச் சென்றோம், மதியம் வாக்கில் சென்றடைந்தோம், பிறகு உடனே அங்கிருந்து கிளம்பி, இரவில் சென்னை வந்து சேர்ந்தோம். இந்தப் பயணத்தின் நோக்கமென்ன, அது நிறைவேறியதா என்பதெல்லாம் யாராலும் கேட்கப்படவுமில்லை, கேட்டிருந்தாலும் அதற்கு எவராலும் விடையளித்திருக்க முடியுமா என்பதும் ஐயமே. ஊர் திரும்பும் பயணத்தின் போது, சில மிதி வண்டிகள் பழுதடைந்து, அவற்றை பழுது பார்க்கும் பணி நெடுஞ்சாலையிலேயே மேற்கொள்ளப்பட்டு (சரியாக Silver Sands முன்னால் என்று ஞாபகம்), இதனால் வெகுவாகக் கால தாமதமாகி......... என்று, அது ஒரு மறக்க முடியாத அனுபவமாகும். எப்படா வீடு வருமென்று அனைவரும் இருட்டில் மிதித்துக் கொண்டிருந்த போது, சென்னையின் எல்லை வருவதற்கு இன்னமும் இருபது - முப்பது கிலோமீட்டர் இருக்கையில், "Do you see the bright horizon? That's Madras" என்று ஊற்சாகமூட்டினார் ஒரு நண்பர். இன்னொரு நண்பர் ஒரு மிதிவண்டியை ஓட்டிக் கொண்டு, இன்னொரு பழுதடைந்த மிதிவண்டியை கூடவே இழுத்துக் கொண்டும் வந்தார். Heroes are all around you.

இவ்வாறு மஹாபலிபுரம் என்பது சென்னைவாசிகளின் ரத்தத்தில் ஊறிய ஒன்றாகி விட்ட நிலையில், இதை மாற்ற வேண்டும் என்று முடிவு செய்தேன். அதற்கான வாய்ப்பும் கிடைத்தது. இளைய சகோதரர் அப்போதுதான் பள்ளி இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்தார். அவர்களது பள்ளியில் சுற்றுலா செல்லப்போவதாக வீட்டில் வந்து அறிவித்தார். மஹாபலிபுரம்தான் செல்கிறார்கள் என்றதும், அவர்கள் ஏன் மாறுதலாக ஏதாவது செய்யக்கூடாது என்று கேட்டேன். சென்னையைச் சுற்றியுள்ள மற்ற இடங்களையும் சென்று பார்க்க வேண்டுமல்லவா, எவ்வளவு முறைதான் ஒரே இடத்தைப் பார்ப்பது, என்று வினவினேன். சகோதரருக்கும் இது சரியென்று பட, "வேறெங்கே செல்வது?" என்று கேட்டார். "அருகே புலிக்காட் ஏரி இருக்கிறதாமே, அங்கெல்லாம் சென்று பார்த்துவிட்டு வரலாமல்லவா?" என்று பதிலுக்குக் கேட்டேன். அப்போது ஹிந்து நாளிதழில் ஏதாவது கட்டுரை வந்திருக்கலாம், புலிக்காட் ஏரியைப் பற்றி. ஹிந்துவில் இது போல் எழுதுவதற்கென்றே சில வேலையற்றவர்கள் இருப்பார்களென்று நினைக்கிறேன். சகோதரருக்கு இது வலுவான யோசனை என்று பட, மறுநாள் பள்ளிக்குச் சென்று, அனைவரையும் convince செய்திருக்கிறார். அவரது பேச்சை நம்பிக்கொண்டு நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள், மற்றும் அவர்களது ஆசிரியர்கள், அனைவருமாக புலிக்காட் ஏரியை நோக்கிப் படையெடுத்திருக்கிறார்கள்.

அங்கு சென்று அவர்கள் கண்டு களித்தது: 1. உச்சி வெயில் 2. பொட்டல் வெளி 3. கவனிப்பாரற்றுக் கிடக்கும் ஏரி 4. ஒரே ஒரு (குச்சி ஐஸ் விற்கும்) ஐஸ் வண்டி். சகோதரருக்கு தர்ம அடி கிடைக்காத குறைதான். வந்தது வந்தோம் இதையாவது செய்து முடிப்போம் என்று அனைவரும் குச்சி ஐஸ் வாங்கி சாப்பிட்டு விட்டு , ஊர் வந்து சேர்ந்தார்கள். "எங்கள இப்படி கவுக்கணும்னு எவ்வளவு நாளாடா திட்டம் போட்டே?" என்று சகோதரரை, அவர் செய்யாத ஒரு குற்றத்திற்கு விளக்கம் கேட்டார்கள் அவனது சக மாணவர்கள். சில ஆசிரியர்கள், கோபத்தின் உச்சியில், அவருடன் பேசுவதையும் தவிர்த்து முகத்தைத் திருப்பிக் கொண்டார்களாம்். எனக்கு நேரடி அனுபவம் கிடையாது, ஆனால், மிகவும் இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டார் சகோதரர், என்பது மட்டும் புரிந்தது அவர் கூறியதிலிருந்து. (அண்மையில் புலிக்காட் ஏரி பற்றி கூகிள் செய்ததில், பதினைந்து ஆண்டுகளுக்கு முன் இருந்த நிலைமை இப்போதும்் மாறவில்லை என்று தெரிய வருகிறது. சுற்றுலாத் துறை என்று ஒன்று செயல்படுகிறதா, இல்லை சும்மா 'நாம் கே வாஸ்தே'தானா?)

அன்றிலிருந்து யாருக்கும் சுற்றுலா சம்மந்தமான ஆலோசனைகள் வழங்குவதில்லை என்று முடிவு செய்திருக்கிறேன். இருந்தாலும், அந்த முட்டுக்காடு நன்றாக இருக்கிறது என்று பேசிக் கொள்கிறார்கள். முயன்று பார்த்துவிட்டுக் கூறுங்களேன்? ;)

4 கருத்துகள்:

நிலா சொன்னது…

நல்ல கட்டுரை

Boston Bala சொன்னது…

Very true. Having my daughter & wife in Chennai for visit/sightseeing, they are reciprocating your experiences... I was about to write my laments; but U were more suave. Thx!

Voice on Wings சொன்னது…

நிலா மற்றும் பாலா, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி :)

கிட்டத்தட்ட நமக்கிருப்பதைப் போன்றே வானிலை, மற்றும் ஏறக்குறைய நம்மிடமிருக்கும்் இயற்கை வளங்கள் ஆகியவற்றையே கொண்டிருந்தாலும், அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை வெகுவாக மேம்படுத்தி, தன்னை ஒரு God's Own Countryயாகக் காட்டிக்கொள்ள முடிகிறது, அருகிலிருக்கும் கேரளத்தால். திறமையாக மார்கெட்டிங் செய்து, சுற்றுலாப் பயணிகளைக் குவிக்கவும் முடிகிறது அதனால். இத்தனைக்கும் அங்கு ஊட்டி, கொடைக்கானல் போன்ற star destinations் எதுவும் கிடையாது. கோட்டைகள், கோயில்கள் போன்ற பாரம்பரியக் கட்டிடக் கலைக்கு் எடுத்துக்காட்டுகளாகவும் சொல்லிக்கொள்ளும் வகையில் அங்கு எதுவும் கிடையாது. நமக்கோ, எல்லாம் இருந்தும் பஞ்சப்பாட்டுதான். நம் ஆட்சியாளர்கள் விரைவில் தம் நித்திரையிலிருந்து எழுந்து ஏதாவது செய்வார்களென்று நம்புவோம்.

ஜென்ராம் சொன்னது…

நன்றி..ரசித்துப் படித்தேன்..