செவ்வாய், ஜனவரி 31, 2006

உனக்குத் தடா!

சுரேஷ் கண்ணன் அவரது பதிவில் சில கருத்துகளைக் கூறியுள்ளார். உணர்ச்சிவசப்படாமல், அசட்டுத்தனமாக எதிர்க்காமல், யதார்த்தமாக சிந்தித்ததில் அவருக்குத் தோன்றியவொரு எண்ணம் - கல்விக்கூடங்களில் உடைக் கட்டுப்பாடுகள் தேவையே. அதற்கான காரணங்கள் - அவர் காண நேரிட்ட சில பெண்கள் உடுத்தியிருந்த உடைகள், அவர்களது அங்க அளவுகளைச் சந்தேகமின்றி வெளிப்படுத்தினவாம் (கண்களால் அளப்பது என்பது இதுதானோ?). இதனால் அவர் அச்சப்படும் பின்விளைவு - இத்தகைய காட்சிகளைக் காண நேரிடும் ஆண்களுக்கு ரத்தக் கொதிப்பு அதிகரித்து, அதன் விளைவாக அவர்கள் அப்பெண்களை மனதால் (மற்றும், வாய்ப்பு கிடைத்தால் செயலிலும்கூட) துகிலுரியக் கூடுமாம். இத்தகைய துகிலுரிதலுக்கு அவர் வழங்கும் ஆண் தரப்பு நியாயம் - இங்கு நிலவும் பாலியல் வறட்சி. ஆகவே, இவ்வறட்சியால் பாதிக்கப்பட்ட ஆண்களைத் தவறான பாதையில் கொண்டு செல்லாமலிருக்க, பெண்களே, தயவு செய்து உங்கள் உடலைப் போர்த்திக் கொள்ளுங்கள், தலையிலிருந்து கால் வரை.

எனக்குத் தோன்றும் ஒரு fashion idea - தலையிலிருந்து கால் வரை ஒரு cylindrical வடிவத்தில் (துணியாலான ஒரு கூண்டு போலிருக்கக் கூடிய) ஒரு உடை, with constant radius from head to toe. இது பொது இடங்களில் ஆண்கள் தம்மை கண்களால் அளப்பது, மனதால் துகிலுரிவது, போன்றவற்றைச் செய்வதிலிருந்து தடுக்க உதவும். உள்ளே இருப்பது ஒரு மனித உயிரா (அல்லது, I, Robot மாதிரியானதொரு இயந்திரமா) என்று கூட அறிந்து கொள்ள வாய்ப்பிருக்காது. இந்த உடையிலிருக்கும்போது உட்கார்ந்தால் பிரச்சனை வர வாய்ப்பிருக்கிறது. (அதாவது, அங்க அளவுகள் வெளிப்பட்டு விடக்கூடும்). ஆகவே, இதற்கு ஒரு பொறியியலாளர்தான் ஏற்ற உடையை வடிவமைக்க வேண்டும். உட்காரும்போது சுற்றளவு அதிகமாகவும், உயரம் குறைவாகவும் இருக்க வேண்டும், but still retaining the cylindrical shape. அல்லது ஒரு tent போன்ற வடிவமைப்பைக் கொண்டிருக்கலாம், அதைத் தாங்கிப் பிடிக்கும் கம்பிகள் சகிதத்துடன் (அந்தக்கால ஐரோப்பிய மங்கைகள் உடுத்தியதைப்போல்). என்ன, நெரிசலான இடங்களில் கொஞ்சம் பிரச்சனையாகி விடக்கூடும். இது போன்ற உத்திகளைக் கொண்டுதான், நம் நாட்டில் (அல்லது சென்னையில்) நிலவும் வறட்சி நிலையை எதிர்கொள்ள முடியுமென்று தோன்றுகிறது. (எனது யதார்த்தமான, உணர்ச்சிவசப்படாத, அசட்டுத்தனமாக எதிர்க்காத, சிந்தனைகளின் விளைவாக).

அவரது பதிவில் கூறப்படாத விஷயம் - ஆண்களும் இதுபோல் கண்களால் துகிலுரியப்படுகிறார்களா என்பதே (கிடையாது என்று நாமாக அனுமானம் செய்துகொள்ளக்கூடாதல்லவா?). ஆண்களின் உடைகளான ஜீன்ஸ், ஷார்ட்ஸ், நெஞ்சை அணைக்கும் பனியன்ஸ் போன்றவைகளால், அவர்களது அளவுகளையும் கணித்துவிட வாய்ப்பிருக்கிறதே? மேலும் வறட்சி என்பது இருபாலாருக்கும் பொதுவிலுள்ளதுதானே? அவர்களுக்கும் இருக்கிறது தீர்வு - எல்லா ஆண்களும் சாமியார்கள் அணியும் காவி அங்கியைப்போல் ஒரு ஆடையை அணியும்படி சட்டம் பிறப்பிக்கலாம். Hairstyle / மொட்டைத் தலைகளைக்் கண்டு சிலருக்கு ரத்தக் கொதிப்புகள் அதிகமாகி விடும் அபாயத்தைப் போக்க, அனைவரையும் ஒரு முண்டாசு அணிய வைக்கலாம். எல்லோரும் விவேகானந்தரைப்போல் வளைய வரலாம்.

இதுபோல், பல புரட்சிகள் செய்து, இவ்வறட்சியைப் போக்குவோம்!!

13 கருத்துகள்:

Yagna சொன்னது…

சரி அதெல்லாம் உடு நைனா, இந்த பத்மாவை கண்டுகினியா?

Voice on Wings சொன்னது…

யக்ஞா, அதை முன்பே நிறுவிப் பார்த்தேன். ஒன்றும் புரிபடவில்லை. ஒருங்குறி அல்லாதத் தளங்களை தானாகவே ஒருங்குறிக்கு மாற்றுவதெல்லாம் நடப்பதில்லை. Maybe because of my Win'98.

சுரேஷ் கண்ணன் சொன்னது…

நண்பரே,

உங்கள் பதிவை படித்து ரசித்துச் சிரித்தேன்.

அதனால்தான் இதை உணர்ச்சிவசப்படாமல் யதார்த்தமாக அணுகச் சொன்னேன். உணர்ச்சிவசப்படுதல் என்பது கோபத்துடன் அணுகுதல் மட்டுமல்ல. நகைச்சுவையும் பகடியும் உணர்ச்சியின் வெளிப்பாடுகளே.

Yagna சொன்னது…

எனக்கு பிரமாதமாக வேலை செய்கிறது. ஆனால் 1998க்கு பிறகு கணினி உலகில் முன்னேற்றமே இல்லையென்று அறுதியிட்டு கூறும் win98 உபாசகரே ;-), உங்கள் கணினியில் வேலை செய்யாது. இதே மாதிரி ஒருங்குறிக்கு பதிலா திஸ்கிக்கு இருந்தா உங்களுக்கு உபயோகப்படும் இல்லையா? தவிர இந்த வெவ்வேறு தளத்தின் (justified + unjustified + random encodings) எழுத்துருக்கள் நமக்கு இனி பிரச்சினையில்லை. நெடுநாட்களாக தேடிக்கொண்டிருந்த விடை இதுதான்னு நினைக்கிறேன்.

சுதர்சன் சொன்னது…

:))
மிக நல்ல பதில். விஸ்வனாதன் காதில் விழுந்தால் அமல்படுத்த முயற்சி செய்தாலும் செய்வார். மன்னர் ஆண்களுக்கும்தானே உடை கட்டுப்பாட்டு ஆணை பிறப்பித்திருக்கிறார். ஜீன்ஸ் துணியாலான உடைகள், பனியன் துணியாலான உடைகள், வெளிர் நிறமல்லாதவை ஆகியவற்றை ஆண்கள் அணியக் கூடாது. ஒருவேளை இவையெல்லாம் பெண்களின் பால்வறட்சிக்கு தூபம் போடுமோ?

அதாவது, எனக்கு எதெல்லாம் பிடிக்காதோ அதையெல்லாம் யாரும் அணியக் கூடாது. இந்த சர்வாதிகாரத்திற்கு ஆதரவாக நாலு பேர். வாழ்க சனநாயகம்!

Voice on Wings சொன்னது…

சுரேஷ் கண்ணன், வேறு காரணங்களால் இக்கட்டுப்பாடு / கோட்பாட்டை நியாயப்படுத்த முடியுமோ என்னவோ, ஆனால் நீங்கள் கூறிய காரணம் அறவே செல்லுபடியாகாது என்பதுதான் நான் நகைச்சுவை மூலமாகவும் கூற வருவது. உடலழகு என்பது வெட்கப்பட வேண்டிய ஒன்றல்ல, மாறாக, போற்றப்பட வேண்டியது. இவ்வளவு காலமாக அதை வெளிப்படுத்தாமல் இருந்ததும் நீங்கள் குறிப்பிடும் பாலியல் வறட்சிக்கு ஒரு காரணமாகும் (இன்னொரு காரணம் மதங்களால் ஊட்டப்பட்ட பாலியல் குறித்த குற்ற உணர்வு). வெளிப்படுத்துதல் என்றால் முற்றிலுமாக ஆடைகளைக் களைந்துவிட்டு வெளிப்படுத்துவதைப் பற்றி கூறவில்லை. நீங்கள் பார்வையிட்டது போல் (என்று ஊகிக்கிறேன்) உடலோடு ஒட்டிய, அல்லது இறுக்கமாகப் பற்றிக் கொள்ளும் விதமான உடைகளை அணிந்து (e.g. Jeans & t-shirt, or even a mini-skirt with top), தனது உடல் வடிவத்தை வெளிப்படுத்துதல். இப்படி தன்னம்பிக்கையைக் குறிக்கும் வகையில் ஒருவர் (ஆணோ, பெண்ணோ) உடையணிவது பாராட்டுக்குரிய செயல்தான். நீங்கள் நினைப்பதுபோல் இது மன வக்கிரங்களுக்குத் தீனி போடுவதற்கு பதிலாக, அவற்றை அறவே ஒழிப்பதற்கு உதவலாமென்பது என் கருத்து. உ-ம், நீங்கள் பார்த்தது போன்ற உடையிலுள்ள ஒரு பெண், ஒரு வக்கிர புத்திக்காரரைக் கடந்து செல்கிறாரென்று வைத்துக் கொள்வோம். எதிர்பார்த்ததைப்போல், நம் வ.பு.கா தனது மனத்திரையில் slow motionஐ ஓட்டுவார். தொடர்ந்து மேலும் பத்து பெண்கள், அவர்களைப் பினதொடர்ந்து இன்னொரு நூறு பெண்கள், எல்லோரும் அதே வகை உடைகளில், என்று வருகை தரும் நிலையில், திக்குமுக்காடிப் போய் விடமாட்டார் நம் வ.பு.கா? அவரது வக்கிர புத்தியும் Vicks சாப்பிட்ட பிறகு தொண்டையில் 'கீச் கீச்'ஐப்போல் அழிந்து மறைந்து விடாது? சரி, இத்தகைய அதீத optimismகளை முன்வைக்காமல் ஒரு எளிய கேள்வி - தவறு வ.பு.கா.விடம் இருக்கும்போது, அவருக்கு எதிர்தரப்பிலிருக்கும் பெண்கள் மீது உடைக் கட்டுப்பாடு விதிப்பது எவ்வகையில் நியாயம்? வ.பு.கா.வின் மீதுதானே நாம் கவனம் செலுத்த வேண்டும்? Why should women become the automatic choice for the imposition of any kind of control? மேலும் நீங்கள் கூறும் வாதம் (வ.பு.கா.க்களால் தொல்லை/அபாயம் etc), கல்விக்கூடங்களில் பயிலாத மற்ற பெண்களுக்கும் கூடப் பொருந்துகிறதல்லவா? ஆக, தெருவில் சில வக்கிர புத்திக்காரர்கள் உலா வருகிறார்கள் என்பதற்காக, அனைத்துப் பெண்களும் இழுத்துப் போர்த்திக் கொண்டுதான் தெருவிலிறங்க வேண்டுமென்கிறீர்களா? "ஆம்பிளைங்கன்னா அப்பிடியிப்பிடிதான் இருப்பாங்க, பொம்பளைங்கதான் பொறுத்துக்கிட்டு போகணும்" போன்ற சிந்தனைகளையொத்ததாக அல்லவா இருக்கிறது இத்தகைய நிலைப்பாடு?

நீங்கள் அறிவுரைத்தது போலவே எந்த உணர்வுக்கும் இடம் கொடுக்காமல் சிந்தித்து எழுதிய எதிர்வினையிது.

சுரேஷ் கண்ணன் சொன்னது…

Voice on wings,

Good arguement. I think it needs a detailed answer. Let me try to come back to you at the earliest.

Voice on Wings சொன்னது…

யக்ஞா, வேறு கணினிகளில் சோதிக்கும் வாய்ப்பு கிடைத்தால் முயன்று பார்க்கிறேன். என்னுடையது பழைய கணினி. அப்கிரேட் செய்வதைத் தள்ளிப்போட்டுக் கொண்டிருக்கிறேன். வலைப்பதிவதற்கும் ஜாவாஸ்கிரிப்ட்டில் நோண்டுவதற்கும் இது போதுமே என்ற நினைப்பும் ஒரு காரணம். :) நான் எதற்குமே திஸ்கியை உபயோகிப்பது கிடையாது. ஒருங்குறி மட்டுமே (on OpenOffice & e-Kalappai)

Voice on Wings சொன்னது…

சுதர்சன், முழு விவரமும் தெரியாது, ஆனால் துணைவேந்தரின் முடிவு நீங்கள் கூறுவது போல் ஒரு சர்வாதிகாரமாகத்தான் தோன்றுகிறது. அவரது நோக்கம் என்ன என்று தெரிந்தால் அதைப்பற்றி மேலும் கருத்து கூற முடியும். பல அலுவலகங்களில் உள்ளதுபோல் ஒரு formal / professional சூழலை உருவாக்குவதா, அல்லது வழக்கமான நன்நடத்தை நடவடிக்கையா (disciplinary measure)? காரணம் முன்னது என்றால் ஓரளவு புரிந்து கொள்ளலாம், பின்னது என்றால் இது எதிர்க்கப்பட வேண்டியதே.

ராம்கி சொன்னது…

சுரேஷ் கண்ணனின் பதிலைப் படிக்கக் காத்திருக்கிறேன்.

Voice on Wings சொன்னது…

ராம்கி, அவருக்கு நேரம் கிடைக்கவில்லையோ என்னவோ, ஆனால் அவரது இந்த மீள்பதிப்பில் சுருக்கமாக விடையளித்திருக்கிறார். அது எனக்கு ஏற்புடையதாகயில்லை என்பதை மட்டும் குறிப்பிட்டுக் கொள்கிறேன். :) அவரது மறுப்பையும் கடந்து, அவரது பார்வையை ஒரு பிற்போக்கான ஆணாதிக்கப் பார்வையாகத்தான் என்னால் பார்க்க முடிகிறது. அவர் ஆண்களுக்குத் தெரிவிக்கும் கண்டனமும், சில நாட்களுக்கு முன் கேட்ட "கற்பைப் பொதுவில் வைப்போம்" என்ற கோஷங்களுக்கு நிகரானதாகத்தான் தோன்றுகிறது.

பெயரில்லா சொன்னது…

Looking for information and found it at this great site... » » »

பெயரில்லா சொன்னது…

Very cool design! Useful information. Go on! » » »