திங்கள், மார்ச் 20, 2006

வீட்டிற்குள் வேற்றுமை பாராட்டல்

வீட்டில் பல அரிய பாடங்கள் புகட்டப் படுகின்றன. சாதி வேற்றுமை பாராட்டுவது அவற்றில் முக்கியமானவொன்று.

உலகின் மற்ற இடங்களைப் போலல்லாது, இந்தியாவின் நகர்ப்புற வாழ்க்கை அளிக்கும் ஒரு வசதி, வீட்டு வேலைகளுக்கு பணியாள் அமர்த்தும் வசதியாகும். உயர் பதவியிலிருப்பவர்களின் குடும்பங்கள் இவ்வசதியைப் பயன்படுத்தத் தவறுவதில்லை. பொருளாதார அடிப்படையில் நோக்கினால், ஒருபுறம் இச்சேவையைக் கோருபவர்கள், மற்றும் மறுபுறம் இச்சேவையை வழங்கி, தங்கள் ஏழ்மையை ஓரளவுக்காவது சமாளிக்க எண்ணுபவர்கள், என்று இரு தரப்புத்் தேவைகளையும் நிறைவேற்றும் ஒரு ஏற்பாடாக இது அமைகிறது. ஆகவே, வலுவான பொருளாதார நியாயங்களை இதற்கு ஆதரவாக முன்வைக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால், இதில் அவ்வளவாகக் கண்டு கொள்ளப்படாத ஒரு அம்சம் உண்டெனில், அது இவ்விரு தரப்பினர்களுக்குமிடையே உள்ள சாதி வேற்றுமையே ஆகும். விரிவாகக் கூற வேண்டுமென்றால், மேலே குறிப்பிட்ட உயர் நிலையிலிருக்கும் குடும்பங்கள், பெரும்பாலும் உயர் சாதிகளைச் சேர்ந்தவை. கால காலமாகக் கிடைத்து வந்த சாதகமான சமூகச் சூழலால், கல்வி மற்றும் பொருளாதார அடிப்படையில் வெகுவான முன்னேற்றங்களைக் கண்டு, தற்போதைய உயர் நிலையை எட்டியவை. இதற்கு நேர்மாறாக, அவர்களுக்குப் பணி செய்ய விழையும் கூட்டமோ, கிராமப்புறங்களிலிருந்து நகரத்திற்குக் குடிபெயர்ந்த, குடிசைப் பகுதிகளில் குடியிருக்கும், தாழ்த்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த மக்கள் கூட்டமாகும்.

ஆக, இங்கு நாம் காண்பது, இரு வேறு பின்புலங்களையும் சாதியமைப்புகளையும் சார்ந்த மக்கள், தத்தம் தேவைகளை முன்னிட்டு ஒன்று கூடும் ஒரு சூழலை, அதுவும் வீடு எனப்படும் பொதுப்பார்வைக்கப்பாற்பட்ட ஒரு தனியிடத்தில். விழிப்புணர்வு மிக்க இந்நாட்களில், பொதுவிலே எவரும்,் முற்போக்கு, தாராள குணம், சமத்துவம், மதசார்பின்மை, போன்ற நல்லெண்ணங்களைப் பறைசாற்றத் தவறுவதில்லை, மேலே குறிப்பிட்ட உயர் நிலையிலுள்ள குடும்பத்தினர்களையும் உள்ளிட்டு. ஆனால் வீட்டிற்குள்ளேயோ, அவர்களது இக்கொள்கைகளெல்லாம் ஆவியாய் மறைவதைத்தான் காண முடிகிறது.

காலகாலமாகப் பாதுகாத்து வந்த சாதீயச் சிந்தனைகள் இங்கு தலைவிரித்தாடுவதைக் காணலாம். தங்களது உயர் சாதிப் பின்புலத்தை நினைவுப் படுத்திக் கொண்டு், தங்கள் வீட்டிற்குப் பணி செய்ய வரும் பணியாளர்கள் மீது அவர்கள் விதிக்கும் கட்டுபாடுகள் கவனிக்கப்பட வேண்டியவை. ஒரு பணிப்பெண்ணிற்கு, கொல்லைக் கதவு வழியாகத்தான் வீட்டிற்குள் நுழைய அனுமதியுண்டு. இது சாத்தியப்படாத அடுக்கு மாடி வீடுகளில் மட்டுமே இந்நிபந்தனை சமரசம் செய்து கொள்ளப்படும். இதற்குக் காரணமென்ன என்று ஆராய்ந்தால், முன்கதவு, செல்வங்களைக் கொண்டு வரும் லட்சுமி தேவிக்காகத் திறந்து வைக்கப் பட்டிருக்கிறதாம். அதன் வழியாக ஒரு தாழ்த்தப்பட்ட பணிப்பெண் வருகை தருவதை அனுமதிக்க முடியுமா? மேலும், ஒரு பணிப்பெண்ணுக்கு வீட்டின் பல பகுதிகளுக்கு அனுமதி மறுக்கபடலாம். உ-ம், பூஜையறை, மேசை / நாற்காலிகள், அதி நவீனக் கழிப்பறைகள், வரவேற்பறை......... இப்படி ஒவ்வொரு வீட்டைப் பொறுத்தும் இது மாறுபடும். ஆக, அவர் உட்கார வேண்டுமென்றால் தரையில்தான் உட்கார வேண்டும். மற்றும் பணியாளர்களுக்கென்று வேறு கழிப்பறைகளிருந்தால் அவற்றைப் பயன்படுத்தலாம். அன்பின் அடையாளமாக, அவ்வப்போது அவருக்கு (கேள்விக்கிடமளிக்கும் தரத்தில்) காபி / தேநீர் / சிற்றுண்டிகள் வழங்கப்படலாம். அவை, அவருக்கென்று தனியாக ஒதுக்கப்பட்ட பிளாஸ்டிக் / அலுமினிய கோப்பைகளிலும் தட்டுகளிலும்தான் வழங்கப்படும். இல்லாவிட்டால், அக்குடும்பத்தினர் நிராகரித்து விட்ட பழைய steel / ceramic வகையறாக்களிலும் அவை பரிமாறப்படலாம். குடும்பத்தினர் பயன்படுத்தும் எப்பொருளும் பணியாளர்களின் பயன்பாட்டுக்கு வழங்கப்பட மாட்டாது என்பதே இங்கு வழிகாடும் கொள்கை. மீந்து போகும் உணவு வகைகள் மிக அன்புடன் வழங்கப்படும், இனி அதை குடும்பத்தினர் எவரும் சீந்த மாட்டார்கள் என்ற நிச்சயமேற்படும் நிலையில். தாகமெடுத்தால், குடிநீருக்கு பதிலாக குழாய் நீரையே பயன்படுத்திக் கொள்ளும் வசதியுமுண்டு, பணிப்பெண்ணுக்கு.

இதில் கவலை தரும் செய்தி என்னவென்றால், அப்பணிபெண் இத்தகைய வேற்றுமை பாராட்டல்களையெல்லாம் பொருட்படுத்தாமலேயே போக வாய்ப்பிருக்கிறது. இதாவது கிடைத்ததே என்ற நன்றியுணர்வும் அப்பெண்ணுக்கு வர வாய்ப்பிருக்கிறது. ஆனால், அவ்வீட்டில் வளரும் சின்னஞ்சிறுசுகள் இதையெல்லாம் பார்த்துக் குறிப்பெடுத்துக் கொண்டு, சாதீயச் சிந்தனைகளில் தங்களது பாலபாடங்களைப் பெறுவதுதான் இதன் வருத்தமான பின்விளைவு. இப்படியாக, சாதிக்கொடுமை என்பது இந்நாட்டில் ஒவ்வொரு தலைமுறைக்கும் எடுத்துச் செல்லப்படுகிறது, ஒரு உன்னதமான கலை வடிவத்தைப் போலவே.

PS - English version of this post

6 கருத்துகள்:

பாலராஜன்கீதா சொன்னது…

தோழியர் வலைப்பதிவில் உதயச் செல்வி அவர்களின் கவிதை (எழுதியது: ஏப்ரல் 19, 2004)

(இங்கு இடுவதில் காப்புரிமைச் சிக்கல் வரும் எனில் பின்னூட்டத்தினை நீக்கிவிடுங்கள்)

சேவகியாக வந்த உறவு

நானும் மகனும் மட்டும்
தனித்து வாழ்ந்திருந்த
மனச் சோர்வு மிகுந்து கிடந்த
ஒரு மாலையில்
சிவப்புத் தாவணியை
இழுத்துச் செருகியபடி
சின்னத் துணிப்பையை
கையில் பிடித்தபடி
குறுகுறுப் பார்வையோடு
வீட்டுக்குள் வந்தாய்

அதுவரைத்
திறக்கப் படாமலிருந்த
வலது மூலைச் சன்னல் வழியாக
வேப்பம்பூ வாசத்தோடு
தென்றலும் வந்தது

குளிர்சாதனப் பெட்டியில்
காய்கறி அடுக்கு நிறைந்தது
சமையலறையும்
உணவு மேசையும் மணந்தது
வயிறு பசியையும்
வாய் ருசியையும்
உணர்ந்தன
இரவிலிருந்தே
மனதைக் குடையும்
மறுநாட் சமையல்
தவிப்பும் தீர்ந்தது

எனக்குப் பிடித்த
நூல் சேலைகள்
கஞ்சி மொடமொடப் போடு
கொடியில் காத்திருந்தது
மகனைக் கொஞ்சவும்
கதைப் பேசி
நடையுலா போகவும்
கூடக் கொஞ்சம்
நேரமும் கிடைத்தது

இப்போதோ
எல்லோரும் இணைந்திருக்கும்
இந்த இல்லறத்தை
இனிமையாக்கியதில்
உன் பங்கு கொஞ்சம் அதிகம் தான்
என்ற உண்மையை
ஒப்புக் கொள்வதில்
எனக்கொன்றும்
சங்கடமில்லை

களைத்த மாலைக்
காப்பிக்கும்
கனத்த தலையின் ‘பத்து’க்கும்
அவரவர் ருசியறிந்து
சமைக்கும் சமையலுக்கும்
வீட்டின்
மூலை முடுக்கெல்லாம் ஒளிரும்
சுத்தத்திற்கும்
குழந்தைகளின் ஒட்டுதலுக்கும்
உன் உள்ளன்பிற்கும்
என்ன சம்பளம் தந்து
எப்படி கடனைத் தீர்ப்பது
தங்கையாய்
சமயத்தில் அம்மாவாய்
சொல்லடிப் பெண்ணே….

விசேஷத்திற்கு
விடுமுறை கேட்டு
வீட்டுக்குப் போய்விட்டு
தங்காமல்
ஓடிவந்துவிடாய்
கேட்டதற்கு
உன் அப்பா சொல்கிறார்
‘அங்கே
அக்காவும் அண்ணாவும்
நானில்லாமல்
சிரமப் படுவார்கள்’ என்றாயாம்

நெகிழ்ந்துதான் போய்க்
கிடக்கிறோம்

நானெப்படித் தீர்ப்பேன்
இந்த நன்றிக் கடனை.

Voice on Wings சொன்னது…

அருமையான கவிதையை இங்கு இட்டதற்கு நன்றி, பாலராஜன்கீதா. படைப்பாசிரியரின் பெயரைக் குறிப்பிட்டு credit அளித்துவிட்டதால், காப்புரிமைப் பிரச்சனை பற்றிய கவலையை விடுங்கள் :) உதயச் செல்வி நம் இருவர் மீதும் வழக்கு போடும்போது பார்த்துக்கொள்ளலாம் :)

ஸ்ரீ சொன்னது…

உண்மைதான்.ஆனால் சாதீய வேற்றுமைகளை காட்டிலும் ஏழ்மை நிலையே இத்தகைய செயல்பாடுகளுக்கு காரணம் என்பது எனது கருத்து.

Voice on Wings சொன்னது…

ஸ்ரீ, உங்கள் கருத்துக்கு நன்றி. இந்த ஒதுக்குமுறைக்கு பணியாளரின் ஏழ்மை / எளிமை ஒரு காரணமென்றாலும், வீட்டின் எஜமானர் மற்றும் பணியாளர் இருவரும் ஒத்த சாதிக்காரர்களாக அமையும் சில தருணங்களில், இந்த அளவுக்கு வேற்றுமை பாராட்டப்படுவதில்லையோ என்ற ஒரு ஐயமும் எழுகிறது. காரணம் எதுவானாலும், இத்தகைய போக்கு கண்டிக்கப்பட வேண்டியது என்பதை ஏற்றுக் கொள்வீர்களென்று நம்புகிறேன். பதிவில் கூறியது போல், இளம் உள்ளங்கள் இவற்றைக் கண்டு களங்கமடைவது வருத்தமான பின்விளைவு.

ஸ்ரீ சொன்னது…

இத்தகைய போக்கு மட்டுமல்ல எங்கும், எப்பொழுதும், எதற்காகவும்,மனிதன் சக மனிதனை மனிதனாக மதிக்காத போக்கு வன்மையாக கண்டிக்கதக்கது. உங்கள் இந்த பதிவிலே அனைவராலும் சிந்தித்து பார்க்க கூடிய வரிகள் "சின்னஞ்சிறுசுகள் இதையெல்லாம் பார்த்துக் குறிப்பெடுத்துக் கொண்டு, சாதீயச் சிந்தனைகளில் தங்களது பாலபாடங்களைப் பெறுவதுதான் இதன் வருத்தமான பின்விளைவு".எனது முந்தைய பின்னூட்டதிலே இதை குறிப்பிட விரும்பினேன்.

Voice on Wings சொன்னது…

//எங்கும், எப்பொழுதும், எதற்காகவும்,மனிதன் சக மனிதனை மனிதனாக மதிக்காத போக்கு வன்மையாக கண்டிக்கதக்கது//

அருமையாகக் கூறினீர்கள், ஸ்ரீ.