சனி, அக்டோபர் 28, 2006
ஒரு மோசடி பற்றிய முன்னறிவிப்பு
நாடெங்கிலும் ஆயிரக்கணக்கான ஏக்கர்கள் பரப்பளவுள்ள நிலப்பகுதிகளை வர்த்தக வட்டாரங்களாக (Special Economic Zones or SEZs) மாற்றி, அவற்றில் பெருந்தொழிற்சாலைகளை நிறுவி, இந்தியாவை உற்பத்தித் துறையில் உலக அளவில் முன்னணிக்குக் கொண்டு செல்லும் உன்னதத் திட்டம் ஒன்று துரித கதியில் நடைமுறைக்கு வந்துகொண்டிருக்கிறது. இத்தகைய வட்டாரங்கள் நூற்றுக்கணக்கில் ஒப்புதல் வழங்கப்பட்டு, வேகவேகமாக உருவாகிக் கொண்டிருக்கின்றன. மற்ற இடங்களைப் போலல்லாது, இங்கு இயங்கும் நிறுவனங்களுக்கு வரிச் சலுகைகள், விதி விலக்குகள், என்று பல வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. தொழிலாளர் நலன் காக்கும் சட்டங்கள், சுற்றுச்சூழலைப் பேணுவதற்கான வரைமுறைகள், இவையெல்லாவற்றிலிருந்தும் விடுமுறைதான். கண்ணாடி மாளிகைகள், ஐந்து நட்சத்திர விடுதிகள், golf மைதானங்கள் போன்ற ஆடம்பர அம்சங்கள் பொருந்திய இவ்வட்டாரங்களில் ஏற்றுமதி செய்வதற்கான பொருட்களே தயாரிக்கப்படுமாம். நம்மைப் போன்ற சாமானியர்களெல்லாம் இவற்றின் உள்ளே புகுந்து விட முடியாது. ஒரு வெளிநாட்டிற்குச் செல்வதைப் போல், தகுந்த அனுமதிகள் இருந்தாலேயே எவரும் உள்ளே அனுமதிக்கப் படுவார்கள் (அவற்றின் பளபளப்பைப் பாதுகாக்க வேண்டுமல்லவா?). லட்சக் கணக்கில் வேலை வாய்ப்புகள், இது வரையில் கண்டிராத அளவிற்கு வர்த்தக வளர்ச்சி, என்று இத்திட்டத்தினால் உண்டாகக் கூடிய பலன்கள் பட்டியலிடப்படுகின்றன.
இத்திட்டம் செயல்படும் முறையைப் பார்ப்போம். யார் வேண்டுமானாலும் இத்தகைய வட்டாரங்களை உருவாக்கலாம். அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், அந்நிய நாட்டு நிறுவனங்கள் என்று முதலீடு செய்யும் சக்தி படைத்த எவரும் இந்த அமைப்புகளை அமைக்கலாம். அவர்களது வேலையை எளிதாக்குவதற்காக அரசும் தனது சேவைகளை ஆற்றும். எத்தகைய சேவைகள்? திட்டப் பகுதி நிலங்களிலுள்ள விவசாயிகளை உருட்டி மிரட்டி, அவர்களிடமிருந்து நிலத்தைப் பறிப்பது, அதை அவர்கள் எதிர்த்தால் தனது கூலிப்படையான காவல் துறையை அவர்கள் மீது ஏவி அவர்களை நிராதரவாக்குவது, போன்ற விலை மதிப்பற்ற சேவைகள். இத்தகைய பங்களிப்பு அரசிடமிருந்து உறுதியாகக் கிடைக்கும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையைக் கொண்டிருந்ததனால்தான் முகேஷ் அம்பானியால் இத்திட்டத்தில் ஒரு அமைப்பாளராக இறங்க முடிந்தது. மகாராஷ்டிரத்தில் ஒரு நிலப்பரப்பை தத்தெடுத்துக் கொண்டு அதை ஒரு வர்த்தக வட்டாரமாக மாற்றும் பொறுப்பை அவரது ரிலையன்ஸ் நிறுவனம் ஏற்றுக்கொண்டுள்ளது. அப்பகுதியில் வாழும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஊடகங்களுக்குக் கொடுக்கும் பேட்டிகளில், அவரையும் அவரது நிறுவனத்தையும் அச்சிட முடியாத மொழிகளில் விமர்சிக்கின்றனராம். அதைப்பற்றி அவருக்கு பெரிதாக கவலையிருக்காது என்றே தோன்றுகிறது. அவருக்குத்தான் இந்திய அரசின் மீது அசைக்க முடியாத நம்பிக்கையிருக்கிறதே?
ஊடகங்களின் பங்கையும் இங்கு குறிப்பிட வேண்டும். அரசு அதிகாரிகள் தங்கள் நிலத்தை தரிசு நிலம் (barren land) என்று மதிப்பிட்டதை எதிர்த்து சில விவரமறிந்த விவசாயிகள் Google Earth வரைபடங்களுடன் தங்கள் நிலங்கள் விளைநிலங்களே என்று நிருபித்தார்களாம். இந்த செய்தித்துண்டைப் பிடித்துக் கொண்டு ஊடகம் (CNBC TV-18) செய்த திரித்தலை கவனியுங்கள்: "விவசாயிகள் Google Earth போன்ற நுட்பங்களைப் பயன்படுத்தியது உலகம் 'தட்டை'யாகிக் கொண்டிருப்பதையே உறுதி செய்கிறது. (Thomas Friedmanஐ தினந்தோறும் வழிபடும் நிருபர் போலிருக்கிறது). இப்படியாக, உலகத்தைத் தட்டையாக்கி, ஏற்றத் தாழ்வுகளைச் சமன்படுத்துவதுதான் SEZ திட்டத்தின் நோக்கமும் ஆகும். ஆகவே, SEZ போற்றி, போற்றி". கூஜா தூக்குவது என்று முடிவு செய்தபின், அதில் புதுமைகளைப் புகுத்துகின்றன, நம் ஊடகங்கள்.
அவலங்களுக்கிடையே முளைக்கப்போகும் இந்த அரண்மனைகளால் நாட்டிற்கு எதாவது பலன் கிட்டுமா? அல்லது ஆதாயமெல்லாம் அரண்மனைவாசிகளுக்குத்தானா? சாமானியர்களைத் தீவிரவாதிகளாக்கி, அவர்கள் கையில் ஆயுதங்களை ஒப்படைக்கும் விதமாகச் செயல்படும் ஆட்சியாளர்கள் இருக்கையில், யாரை முதலில் தூக்கிலிடுவது? ஒரு #1 செல்வந்தர் இந்தியாவின் மீதுள்ள அசைக்க முடியாத நம்பிக்கையைப் பிரகடனப்படுத்தும் இன்றைய நிலையிலிருந்து, கடைநிலையிலுள்ள ஒவ்வொரு நபரும் அத்தகைய பிரகடனத்தைச் செய்யும் நிலை என்றாவது ஏற்படுமா? கோடானுகோடி மக்களின் துயர் துடைக்கும் பணியை விட, ஆங்காங்கே 'பள பள' பிரதேசங்களை உருவாக்கும் பணி மிக எளிதானது (மற்றும் சுயலாபங்களை ஈட்டக்கூடியது) என்ற முடிவுக்கு நம் ஆட்சியாளர்கள் என்றைக்கோ வந்து விட்ட நிலையில், எந்தவொரு நம்பிக்கைக்கும் இனி இடமுள்ளதா?
இது பற்றிய சில செய்திச் சுட்டிகள்:
1. Economist வலைத்தளத்திலிருந்து
2. BBC வலைத்தளத்தில் ஒரு பிரபல பொருளாதார வல்லுனரின் கருத்துரை
3. The South Asian மின்னிதழில் ஒரு கட்டுரை
4. பொருளாதார நிபுணர் ஜக்தீஷ் பக்வதியின் கருத்து
5. இடதுசாரிக் கட்சியின் சீதாராம் யெசூரியின் அறிக்கை (இடதுசாரிகள் ஆளும் மேற்கு வங்க மாநிலம் படு சுறுசுறுப்புடன் இத்தகைய SEZக்களை உருவாக்கி வருகிறது என்பது கொசுறுச் செய்தி)
6. "இப்படியே போனால் நானும் 'மாவோயிஸ்ட்' ஆகி விட வேண்டியதுதான்" - முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கின் பேட்டி
ஞாயிறு, ஜூலை 16, 2006
கதைகளும் படிப்பினைகளும்
இந்த ஒரு வாரத்தில் என்ன சொல்ல வந்தேன் என்றுத் தெளிவுப்படுத்தும் முயற்சி இது. 'இந்தியா ஒளிர்கிறது' என்ற கோஷங்களையெல்லாம் அன்றாடம் கேட்டுக் கொண்டிருந்தாலும், தினசரி வாழ்வில் ஒரு மாபெரும் மக்கள் கூட்டம் இந்த மாற்றங்களாலெல்லாம் எந்தவொரு முன்னேற்றமும் அடையாமல், முன்பிருந்த நிலையிலேயே (அல்லது அதை விட மோசமான நிலையில்) தொடர்ந்து கொண்டிருந்த உண்மை நிலையைக் காண்கையில், 'எங்கேயோ உதைக்குதே' என்ற எண்ணம் தோன்றிக் கொண்டிருந்தது. இந்நிலையில்தான் நிகழ்ந்தன விவசாயிகள் தற்கொலை, கிராமப்புறப் பட்டினிச் சாவுகள் ஆகியன. அப்போதுதான் உறைத்தது 'trickle down economics' பேசும் நிபுணர்களின் அயோக்கியத்தனம். நடக்க இயலாதவொன்றைக் காட்டி, நம்மைக் குஷிப்படுத்தும் திட்டத்தைத்தான் நம் ஆட்சியாளர்களும் கொள்கை ஆலோசகர்களும் செயல்படுத்திக் கொண்டிருந்தார்கள் / கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் ஊடகங்களிலிருந்தாவது உண்மை நிலவரம் புலப்படக்கூடுமா என்று பார்த்தால், அவையும் மக்களின் கேளிக்கைத் தேவைகளையே நிறைவேற்றிக் கொண்டிருந்தன. அவ்வப்போது எங்காவது அசம்பாவிதங்கள் நடந்தால் அந்தந்த நேரங்களில் மட்டும் மக்கள் பிரச்சனைகளுக்குக் கூடிய கவனம் வழங்கப்படும். மற்ற நேரங்களில் business, as usualதான். இதில் ஆட்சியிலிருப்பவர்களை நோக்கி அடிவருடுதல் வேறு. கம்பியெண்ணிக் கொண்டிருக்க வேண்டிய சந்திர பாபு நாயுடுவை CEO of the State ஆக்கிய பெருமை நம் ஊடகங்களையே சேரும்.
இதுபோல் திரிக்கப்பட்ட உண்மைகளையே அன்றாடம் உட்கொள்ள வேண்டிய நிலையிலிருக்கும் நாம், உண்மையான ஜனநாயக நாட்டில் வாழ்ந்து கொண்டிருப்பதாக எண்ணிக் கொள்ள முடியாது. ஏனென்றால் ஆட்சியாளர்களைப் பற்றிய நம் கருத்துகள் / முடிவுகள் / தேர்வுகள் ஆகியன, இத்தகைய திரிக்கப்பட்ட உண்மைகளின் அடிப்படையிலேயே அமைகின்றன. ஒரு மாபெரும் மூளைச்சலவை செய்யப்பட்ட மக்கள் கூட்டம் என்று வேண்டுமானால் நம்மை விவரித்துக் கொள்ளலாம், நிச்சயமாக ஜனநாயகம் என்றல்ல.
சந்திர பாபு நாயுடு புகழேணியின் உச்சியில் இருந்த காலத்தில்தான் Hinduவில் திரு.P சாய்நாத்தின் ஒரு செய்தியறிக்கையைப் படித்தேன். வேறெந்த ஊடகத்திலும் கிடைக்காத ஒரு செய்தி (மற்றும் ஹைதராபாத்தில், மற்ற அலுவலக நண்பர்களும் அறிந்திடாத ஒரு செய்தி) அந்தக் கட்டுரையில் எனக்குக் கிடைத்தது. அதாவது ஆந்திர மாநிலத்தின் பெருவாரியான கிராமங்களில் மக்களின் பசியைப் போக்குவதற்காக கஞ்சி ஊற்றும் நிலையங்கள் (soup kitchens) தன்னார்வலத் தொண்டர்களால் நடத்தப்படுகின்றன என்பதே செய்தி. பல இடங்களில் இது மார்க்சீயக் கட்சியால் முன்னின்று நடத்தப்பட்டது என்பது உபரியான செய்தி (to give the devil his due. மேலும், பொதுவிடங்களில் உண்டி குலுக்கும் தோழர்களின் பங்களிப்பைக் குறைத்து மதிப்பிடக் கூடாதல்லவா?). IT powerhouse என்றெல்லாம் எல்லாத் தரப்பினராலும் செல்லமாக வர்ணிக்கப்பட்ட ஆந்திர மாநிலத்தின் கிராமப்புறங்களில், பெருவாரியான மக்கள் யாசகம் பெற்று வாழ்க்கை நடத்தும் அவல நிலையிலுள்ளனர் என்றத் திகைக்க வைக்கும் செய்தியை மற்ற ஊடகங்கள் எவ்வாறு தவற விட்டன? அல்லது திட்டமிட்டு இருட்டடிப்பு செய்தனவா, என்று எனக்கு இன்னமும் அது புரியாத புதிராகவே உள்ளது. இது போல் தமிழகத்தில் எத்தனை திகைக்க வைக்கும் செய்திகள் மறைக்கப்பட்டுள்ளன? மற்ற மாநிலங்களின் நிலவரம் எப்படி? இதற்கெல்லாம் நமக்கு விடைகள் கிடைக்காமலே போகலாம். 'கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய்' என்பதே நம் நாட்டின் நகர்ப்புற வாழ்க்கை கற்பிக்கும் அரிய பாடம்.
'இல்லாத பிரச்சினைகள்' குறித்தே இந்த ஒரு வாரம் முழுக்க எழுதியிருக்கிறேன். நம் ஊடகங்கள், ஆட்சியாளர்கள் மற்றும் (நானும் அங்கம் வகிக்கும்) மத்திய வர்க்கத்தினர், ஆகியோரைப் பொறுத்த வரை, அவை 'இல்லாத பிரச்சினைகள்'தாம். இப்பிரச்சினைகளைப் பற்றிய நம்பகமான source என்று நான் கருதும் ஒருவர் அளித்திருக்கும் தகவல்களை வைத்து, அவற்றின் அசல் வடிவத்தை விளக்க முயற்சித்திருக்கிறேன். அவற்றிற்குத் தீர்வுகள் வழங்கும் அளவுக்கு அனுபவமோ முதிர்ச்சியோ இல்லாத காரணத்தால், அத்தகைய core competence ;) உடைய ஒருவரது பங்களிப்பைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறேன்.
இன்று, இந்தத் தகவல்களைத் தொடர்ந்து, எனக்குத் தோன்றும் சில வலுவான எண்ணங்களை முன்வைக்க விரும்புகிறேன்.
- கிராமம் - இது எக்காரணம் கொண்டும் அழிக்க முடியாத ஒரு அமைப்பாக நம் அரசியல் சட்டத்தில் திருத்தியமைக்க வேண்டும். அதன் இறையாண்மை (sovereignty) சட்டத்தால் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டும்.
- தனியொருவனுக்கிங்கு கல்வியில்லையேல் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்
- தனியார்மயமாக்கம் - தேவையானது மற்றும் இன்றியமையாதது. ஆனால் அதன் engagement modelதான் கேள்விக்குரியது. நூறு கோடி இந்தியர்களின் சார்பாக அரசு என்றொரு அமைப்பு ஒற்றை வாடிக்கையாளனாகச் செயல்பட்டுக் கொண்டு, அது தனியாரை நோக்கி, "வாங்க, எனக்கு something குடுத்துட்டு இதோ இவங்கள இஷ்டத்துக்கு கொள்ளையடிச்சிக்கோங்க" என்று கூறும் ஏற்பாடு ஏற்றுக் கொள்ள முடியாதது. அதே நூறு கோடி இந்தியர்கள் ஒவ்வொருவரும் தனியாரை நோக்கி "என்னாப்பா, சொத்தையும் சொள்ளையுமா இருக்கு? வேற குடு" என்று விழிப்புணர்வுடன் தாம் பெற வேண்டியதை வற்புறுத்தி வாங்கிப் பெறும் நிலை ஏற்றுக் கொள்ளக்கூடியது, மற்றும் சாதகமானதுவும் கூட.
- வளர்ச்சித் திட்டங்கள் - இவை செயல்படுத்தப்படும் பகுதியிலுள்ள கிராம மக்களின் ஒப்புதல் இருந்தால் மட்டுமே, இவை முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும்.
- மக்கள் நலத் திட்டங்கள் - அவை யாருக்காகத் தீட்டப்படுகிறதோ, அந்தப் பலனாளிகளைக் கலந்தாலோசித்தே இவை செயல்படுத்தப்பட வேண்டும். அப்போதுதான் அவை அவர்களின் உண்மைத் தேவைகளை நிறைவேற்றும் வாய்ப்பைப் பெறும்.
சனி, ஜூலை 15, 2006
வறுமை குறித்த மாற்றுச் சிந்தனைகள்
ஒரு நிர்வாகவியல் 'குரு' எனக் கருதப்படுபவர் வறுமை / கடைநிலை மக்கள் பற்றியெல்லாம் எழுதினால் எவ்வாறிருக்கும்? ஆர்வத்தைத் தூண்டியதாலேயே இந்த நூலைப் படிக்கத் தொடங்கினேன். முழுவதும் படித்து முடிக்கவில்லையென்றாலும் பல முக்கியமான கருத்துகள் கூறப்பட்டிருப்பது தெரிந்தது. அவற்றின் மீது எனக்கு விமர்சனங்கள் இருந்தாலும், இந்த நூல் தரும் positive / ஆக்கப்பூர்வமான சில ஆலோசனைகள் பரிசீலிக்கப்பட வேண்டியது. நான் மிகவும் மதிக்கும் இந்த நிர்வாகவியல் குரு. திரு. C K பிரஹலாத். Michigan பல்கலைக்கழகத்தின் ஒரு விரிவுரையாளர். 'Core competence' என்ற சொற்றொடரை இவ்வுலக்குக்கு அளித்த பெருமை அவரையே சேரும். (இந்தச் சொற்றொடரை என்னைப் போன்ற 'tie கட்டிப் பொய் பேசும்' பணியிலிருப்பவர்கள் எவ்வளவு முறை பயன்படுத்தியிருப்போம் என்பதற்கு கணக்கே கிடையாது) இந்த நூற்றாண்டின் மிக முக்கிய நிர்வாகவியல் சிந்தனையாளர்களில் ஒருவர் என்றெல்லாம் வர்ணிக்கப்படும் இந்தியர். கிட்டத்தட்ட திரு.அமர்த்தியா சென் அளவுக்குப் புகழ் பெற்றவர். நொபெல் பரிசு ஒன்றுதான் missing :) அவர் எழுதிய நூல் The Fortune at the Bottom of the Pyramid.(கடைநிலைகளில் பொதிந்திருக்கும் பொக்கிஷம்) அதிலிருந்து எனக்குப் பிடித்த கருத்துகளை இங்கு வழங்குகிறேன்.
வறுமை வரி / அபராதம் (Poverty penalty): பெரும்பாலான சமூகங்களில் கடைநிலையிலிருப்பவர்களுக்கு 'வறுமை வரி' விதிக்கப்படுகிறது - வெளிப்படையாக அல்ல, ஆனால் மறைமுகமாக. அவர்கள் ஏழைகளாக இருப்பதனாலேயே அவர்கள் வாங்கும் பொருட்களுக்கும் சேவைகளுக்கும் ஆகாய விலை வழங்க வேண்டியுள்ளது. சில உதாரணங்களுடன் இந்நிலையை விளக்க முடியும். கீழே கொடுக்கப்பட்டது மும்பை மாநகரில் தாராவி குடிசைப்பகுதியில் ஆகும் சில செலவுகளை, வார்டன் ரோட் எனப்படும் பணக்காரர்கள் வாழும் பகுதியில் ஆகும் அதே செலவுகளுடன் ஒப்பிடும் ஒரு அட்டவணை:
செலவு | தாராவி | வார்டன் ரோட் |
1. கடன் மீது செலுத்த வேண்டிய வருடாந்திர வட்டி | 600 – 1000% | ்12 – 18% |
2. தண்ணீர் (1000 லிட்டர்கள்) | ரூ.50/- | ரூ1.50/- |
3. தொலைப்பேசி (ஒரு நிமிடம்) | ரூ.2.50/- | ரூ.0.40 – 1.00/- |
4. டயரியாவுக்கான மருத்துவம் | ரூ.900/- | ரூ.90/- |
5. அரிசி (1 கிலோ) | ரூ.15/- | ரூ.12.50/- |
ஏழைகள் தங்கள் ஏழ்மைக்குக் கொடுக்க வேண்டிய விலை அதிகமானது. இந்த வறுமை வரியை அகற்றும் வகையில் கடைநிலை மக்களுக்கு இந்தப் பொருட்களையும் சேவைகளையும் குறைந்த / நியாய விலைக்கு வழங்க முன்வரும் தனியார் நிறுவனங்கள், அதிக விற்பனைகளையும் லாபங்களையும் ஈட்டக்கூடும். இது அனைத்துத் தரப்பினருக்கும் வெற்றிகரமாகவே முடியும். ஏனெனில், ஏழை மக்களைப் பொறுத்த வரை, முன்னர் ஆகாய விலைகளைக் கொடுத்து வந்ததற்கு பதிலாக நியாய விலைகளையே கொடுப்பதால், இதர அத்தியாவசியச் செலவுகள் செய்ய கைவசம் பண வசதி இருக்கும். உணவு, உடை, கல்வி, ஆரோக்கியம் போன்றவற்றை உறுதி செய்வதற்கு இந்தப் பணம் உதவும். தனியார் நிறுவனங்களுக்கோ, ஒரு புது வியாபாரச் சந்தையை இது திறந்து விடும். Saturate ஆகிப் போன நகர்ப்புற, மேல்தட்டுச் சந்தைகளை விட, இதில் விற்பனை அளவுகளை அதிகரிக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.
கடைநிலை மக்களுக்கேற்ற சேவைகள்: தற்போதைய நிலவரத்தை நோக்கினால், சந்தையிலுள்ள பெரும்பாலான பொருட்களும் சேவைகளும் வசதி படைத்தவர்களுகென்றே வடிவமைக்கப் பட்டிருக்கின்றன. இவற்றை அப்படியே கொண்டு சென்று கடைநிலை மக்களிடம் விற்க முயன்றால் அதில் வெற்றி காண்பதும் அரிது, அதனால் அவர்களது தேவைகள் நிறைவேறாமலும் போகலாம். அவர்களது வாழ்க்கைச் சூழல், கடினமான சுற்றப்புற நிலைமை போன்றவற்றைக் கணக்கிலெடுத்து, அதற்கேற்றவாறு பொருட்களில் / சேவைகளில் புதுமைகளைப் புகுத்தினாலேயே, இந்த முயற்சியில் வெற்றியடைய முடியும். உ-ம், கிராமப்புறங்களுக்கென்று தயாரிக்கப்படும் கணினிகள் அங்கு நிலவும் மின்சாரத்தின் தரம் போன்றவற்றிற்குத் தகுந்தாற்போல் செயல்படும் தன்மையைப் பெற்றிருக்க வேண்டும். ஒரு வங்கியின் ATM, படிப்பறிவில்லாத வாடிக்கையாளராலும் பயன்படுத்தக்கூடிய வகையில் வடிவமைக்கப் பட்டிருக்க வேண்டும். Iodized உப்பு என்றால் அது இந்திய கிராமப்புறங்களில் நிலவக்கூடிய பாதகமான வெப்ப தட்ப நிலைகளையும், வன்முறை மிகுந்த இந்தியச் சமையல் முறைகளையும்(!) கடந்து தனது iodineஐ இழக்காது தக்க வைத்துக் கொள்ளும் தன்மையைப் பெற்றிருக்க வேண்டும், இல்லாவிட்டால் அது iodizedஆக இருந்து ஒரு பயனுமில்லை. (Hindustan Lever இதில் ஆய்வு நடத்தி வெற்றி கண்டிருக்கிறதாம், molecular encapsulation என்ற நுட்பத்தைப் பயன்படுத்தி)
கடைநிலைச் சந்தைகளுக்கேற்ற செயல்முறைப் புதுமைகள் (Process innovations): ஒருவர் McDonalds உணவகங்கள் இயங்கும் விதத்தைப் பார்வையிட்டு விட்டு, அதே வகையில் தனது கண் மருத்துவமனையை மாற்றியமைக்கிறார். இதனால் நாளொன்றுக்குப் பல மடங்கு அதிக நோயாளிகளுக்கு காடராக்ட் சிகிச்சை செய்ய முடிகிறது. மேலும் ஒரு புதுமையைப் புகுத்துகிறார் - அதாவது, வருகை தரும் ஏழை நோயாளிகளுக்கு இச்சிகிச்சை இலவசம் என்று. அதனால் பல ஏழைகள் பலனடைகின்றனர் (மொத்த நோயாளிகளில் அறுபது சதவிகிதம்). இதர வசதி படைத்த நோயாளிகளுக்கும் மலிவு விலையில் சிகிச்சை. ஆகவே, கட்டணம் செலுத்தி சிகிச்சை பெறுவோரும் அதிக எண்ணிக்கையில் வருகை தருகின்றனர் (அதற்கு சமூக நல்லெண்ணமும் ஒரு காரணம் என்பதில் எனக்கு சந்தேகமில்லை). மேலும், அவர்கள் தரும் இலவச சிகிச்சையினால் கிடைக்கும் goodwill / விளம்பரம், பல திசைகளிலிருந்தும் ஆதரவு....... இப்படியாக, பெருவாரியான ஏழை மக்களுக்கு இலவச சேவை வழங்கிக் கொண்டே, ஒரு தனியார் நிறுவனத்தால் லாபத்தில் இயங்க முடிகிறது. எங்கே என்று கண்கள் விரிய யோசிக்கின்றீர்களா? நம்ம சங்கம் வளர்த்த மதுரையிலதாங்க! Arvind Eye Hospitalன்னு கூகிளுங்க.
இப்படியாக, நம் நகர்ப்புற வசதி படைத்தவர்களுக்குக் கிடைக்கும் பெருவாரியான வசதிகள், இவை தற்போது மறுக்கப்பட்டிருக்கும் கிராமப்புற / நகர்ப்புற ஏழைகளுக்கும் அவர்களின் சக்திக்கேற்ப வழங்கப்படுமானால், அதுவே அவர்களது அன்றாடப் பிரச்சினைகளைப் பெரிய அளவில் குறைக்கக் கூடும். (முன்பு குறிப்பிட்ட ஒரு உதாரணத்தில், மிதிவண்டி எனப்படும் ஒரு எளிய உபகரணம் எப்படி ஒரு சமுதாய மாற்றத்தை நிகழ்த்தியது என்று பார்த்தோம்.) வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளான கல்வி, மருத்துவம், நிதிச் சேவைகள் (financial services), தொடர்பாடல் வசதிகள் (communications) ஆகியவற்றிற்கும் இது பொருந்தும்.
மேலும், பெருவாரியான தனியார் நிறுவனங்கள் இப்படி கடைநிலைச் சந்தைகளை நோக்கிப் படையெடுக்க முடிவு செய்யுமானால், அவற்றின் திட்டங்களைச் செயல்படுத்த விற்பனையாளர்கள், நிறைவேற்றாளர்கள்(?) என்று ஒரு மாபெரும் பணியாளர் படையே தேவைப்படும். அவற்றை நிரப்ப (சந்தைப் பரிச்சியம், போன்ற காரணங்களால்) கடைநிலை மக்களின் பிரதிநிதிகளே சிறந்தவர்கள் என்பதால், பல கடைநிலை நபர்களுக்கு (குறிப்பாகப் பெண்களுக்கு) இதனால் வேலை வாய்ப்புகள் கிடைக்கக்கூடும். வசதியடைந்த அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவது, மாறி விரும் சூழலில் புதிய வணிக வாய்ப்புகள் என்று ஒரு கடைநிலைப் பொருளாதாரமே உருவாக வாய்ப்புள்ளது. தற்போதுள்ள தரகர்கள், நிலப்பிரபுக்கள், தடியர்கள் ஆகியோரின் ஆதிக்கம் அதில் செல்லுபடியாகாது. ஏனென்றால், அது நவீனத் தொழில்நுட்பங்கள், சிறந்த வணிகப் பழக்கங்கள் (best practices) போன்றவற்றால் இயங்கும் ஒரு அமைப்பாக இருக்கும்.
தொடர்ச்சி - கதைகளும் படிப்பினைகளும்.
புதுக்கோட்டையின் புதுமைப் பெண்கள்
சுமார் 4000 ஏழைத் தாழ்த்தப்பட்ட பெண்கள், தாம் எங்கு அடிமட்டக் கூலிகளுக்கு வேலை செய்து வந்தார்களோ, அதே கல்லுடைக்கும் ஆலைகளுக்கு அவர்களே அதிபதிகளானார்கள். அவர்களின் கணவர்கள் அதே ஆலைகளில் தினக்கூலிகளாகச் சேர்ந்தார்கள். இந்த மாற்றத்தால், முன்பு எட்டு மணி நேர வேலைக்கு ரூ.6/- சம்பாதித்து வந்த இப்பெண்கள், இப்போது நாளொன்றுக்கு ரூ.35 – 40 வரை ஈட்ட முடிகிறது. அனைவரும் அறிவொளியால் பயிற்றுவிக்கப்பட்டு விட்டதால் அவர்களது கணக்கு வழக்குகளை அவர்களாலேயே பார்த்துக் கொள்ள முடிகிறது. வருமானமும் பெண்களின் கட்டுப்பாட்டிலிருப்பதால் அது குடும்பச் செலவுகளுக்குச் செல்கிறது, சாராயக்கடைகளில் சென்று ஐக்கியமாகாமல். குழந்தைகள் பசியின்றி, நல்ல உடைகளில் பள்ளிக்கூடங்களுக்குச் சென்று வர முடிகிறது. உபரி வருமானம் தந்த வசதியில் இப்பெண்களால் தங்கள் வீடு வாங்கும் திட்டங்களைச் செயல்படுத்த முடிகிறது.
பொதுவாக இத்தகைய ஆலைகள் அரசுக்கு ஒரு தொகையைக் கட்டணமாக செலுத்த வேண்டும். ஒரு லாரி அளவு ஜல்லிக்கு (தமிழ்மண ஜல்லி அல்ல ;) ) ரூ.110/- என்ற விகிதத்தில். முன்பு காண்டிராக்டர்களின் ஆதிக்கத்தில் இருந்தபோது, இந்தப் பணம் அரசை வந்தடைந்ததே இல்லையாம். ஒரு வருடம் ரூ.525யே இது போல் வசூலிக்க முடிந்ததாம். ஆனால், சரிபாதியான ஆலைகள் ஏழைப்பெண்களின் கட்டுப்பாட்டில் வந்த பிறகு வருடத்திற்கு ரூ.25 லட்சமாக உயர்ந்ததாம் இந்த வசூல் தொகை. அதற்கடுத்த ஆண்டு ரூ.48 லட்சம் எதிர்ப்பாரக்கப்பட்டதாம், அதில் பெண்கள் நிர்வகிக்கும் ஆலைகளின் பங்கு ரூ.38 லட்சம். 10 லட்சமே தனியார் காண்டிராக்டர்கள் பொய்க்கணக்குகள் காட்டி, அரசுக்கு செலுத்தும் தொகை.
இத்திட்டத்தில் சிக்கல்கள் இல்லாமலில்லை. குத்தகையை இழந்த காண்டிராக்டர்கள், அவர்களது அரசியல்வாதி நண்பர்கள், அவர்களிடம் something பெற்று வந்த அரசு ஊழியர்கள் என்று கூட்டு சேர்ந்து கொண்டு இத்திட்டத்தைக் குலைக்கும் முயற்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறதாம். அருகாமையிலுள்ள ஒரு கோவிலுக்கு இந்த ஆலைகளால் ஆபத்து என்று புரளியைக் கிளப்பி Archeological Survey of Indiaவைத் துணைக்கழைத்தது, ரவுடிகளை இப்பெண்களுக்கு எதிராக ஏவி விட்டது, போன்ற நற்பணிகளை நம் ஆதிக்க சக்திகள் செவ்வனே செய்து வருகின்றன. அறிவொளி மட்டுமே இப்பெண்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தது.
*************
புதுக்கோட்டையின் சாராய சாம்ராஜ்யத்திற்கெதிராக போர்க்கொடி ஏந்திய பெண்களைப் பற்றியும் இங்கு குறிப்பிட வேண்டும்.
மலர்மணி - அறிவொளி இயக்கத்தின் ஒரு தன்னார்வலப் பணியாளர். 'ஊர் பெரியவர்கள்' அனுப்பிய பெண்களால் அடித்து நொறுக்கப்படுகிறார். இந்த சம்பவத்திற்குப் பிறகு அவருக்கு மாவட்ட ஆட்சியாளரின் ஆதரவு கிட்டுகிறது. ஆகவே, ஊர் பெரியவர்களால் (மற்றும் காவல்துறையினரால்) மேற்கொண்டு எதுவும் செய்ய முடியவில்லை. இருந்தாலும் அவரை ஊர் புறக்கணிப்பு செய்கிறது. அவரது மகன்களுக்கு முடி திருத்துவது மறுக்கப்படுகிறது. அவருக்கு தேநீர் வாங்கி வந்த ஒரு மகனின் கைகளிலிருந்து தேநீர் கோப்பை தட்டி விடப்படுகிறது, ஒரு ஊர் பெரியவரால். மளிகை சாமான்கள் வாங்க அவர் நான்கு கி.மீ. தூரத்திலுள்ள அடுத்த கிராமத்திற்குச் செல்ல வேண்டும். குடிநீருக்காக, இரண்டு கி.மீ. நடந்தே சென்று எடுத்து வரவேண்டும். இந்த தண்டனைகள் பெறும் நிலைக்கு அவர் ஆளாகக் காரணம் - அரசு அறிவித்திருந்த மது விலக்கு வாரத்தில் நடத்திய ஒரு மேடைப்பேச்சு நிகழ்ச்சியில், சில தலித் மக்களை அதே மைக்கை உபயோகித்து பேச வைத்த அவரது செயல். அரசு திட்டத்தைச் செயல்படுத்தியதால் ஒரு பெண்ணுக்கு நேர்ந்த நிலை இது.
இருந்தும் தளராமல் மலர்மணி போன்ற பெண்கள் உழைத்ததால், பல கிராமங்களில் சாராயம் தடை செய்யப்பட்டது. வேடிக்கை என்னவென்றால், சாராயம் அருந்துபவர்களும் திருந்தினார்களாம், சாராயம் காய்ச்சுபவர்களும் திருந்தி, தம் நற்பணிகளை நிறுத்திக் கொள்வதற்கு சம்மதித்தார்களாம். ஆனால் இந்த வர்த்தகத்தினால் ஆதாயமடைந்து கொண்டிருந்த காவல்துறையினரோ, வியாபாரத்தை மறுபடியும் தொடங்குமாறு திருந்திய சாரய வியாபாரிகளை வற்புறுத்திக் கொண்டிருந்தார்களாம்.
**************
இன்னொரு புரட்சி, பெரும்பாலான பெண்கள் மிதிவண்டிகள் ஒட்டப் பழகியது. இதிலும் திருமதி. ஷீலாராணி சுங்கத் மற்றும் அறிவொளியின் பங்கு கணிசமானது. மிதிவண்டி இருந்தால் எங்கு வேண்டுமானாலும் விரைவில் சென்றடையலாம், பேருந்துகளுக்குக் காத்திருக்கவோ, அல்லது தந்தை / கணவர் / சகோதரர் / மகன் ஆகியோரின் தயவை நம்பி இருக்கவோ தேவையில்லை, நினைத்த மாத்திரத்தில் நினைத்த இடங்களுக்குச் சென்று திரும்பலாம் என்ற காரணங்களினால் இது அறிவொளியால் ஒரு முக்கியமான நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டது.
இப்படியாக மிதிவண்டி ஓட்டுவதற்குப் பழகிய பெண்களோ, அதனால் பெரிதும் கவரப்பட்டு, அதை அதிக அளவில் வாங்கவும் பயன்படுத்தவும் செய்தார்கள். ஊர் ஊராகச் சென்று தம் விளைப் பொருட்களை விற்று வருவது, தண்ணீர்க் குடங்களை சுமந்து வருவது, குழந்தைகளை அழைத்துச் செல்வது போன்ற பல தேவைகளுக்கு மிதிவண்டிகள் பயன்படுத்தப்பட்டன. ஒரு நான்கு கி.மீ.க்கு உட்பட்ட தூரங்களை பெண்களால் எளிதாகக் கடந்து செல்ல முடிந்தது. முன்பு குறிப்பிட்ட கல்லுடைக்கும் ஆலைகளில் பணியற்றும் பெண்களுக்கும், தங்கள் தொலைதூரப் பணியிடங்களுக்குச் சென்று வர மிதிவண்டி பெரிதும் உதவியது. இவையனைத்தும் அல்லாமல், மிதிவண்டி ஓட்டுவது என்பது ஒரு பெண்ணின் சுதந்திரத்தின் அறிகுறியாக கருதப்படும் நிலையும் ஏற்பட்டது. எல்லா பெண்களும் மிதிவண்டியை ஓட்டும் திறனைப் பெற வேண்டும் என்ற சிந்தனை பெண்கள் மத்தியில் வலுவாகத் தோன்ற ஆரம்பித்தது. இவ்வாறாக, சுமார் ஒரு லட்சம் பெண்கள் மிதிவண்டி ஓட்டப் பயின்று, தங்கள் வாழ்வில் பெரும் மாற்றத்தைக் கண்டார்கள். மற்ற பெண்களுக்கும் பயிற்சியளித்து இந்த இயக்கத்தைப் பரப்பினார்கள். இந்தியாவிலேயே அதிகமான அளவில் பெண்கள் மிதிவண்டிகள் ஓட்டும் மாவட்டம் புதுக்கோட்டைதானாம்.
ஆனால், இது அத்தனை சுலபமாக நிகழவில்லை. ஆணாதிக்கப் போக்குகளால், தொடக்கக் காலங்களில் மிதிவண்டி பழகிய பெண்களைப் பற்றி மோசமான விமர்சனங்களெல்லாம் வைக்கப்பட்டன. இருந்தும் தங்கள் நம்பிக்கையில் உறுதியாக இருந்து சாதனை படைத்தனர் இப்பெண்கள்.
******************
இதுவரை திரு.சாய்நாத் எழுதிய Everybody loves a good drought என்ற நூலிலிருந்து சில உதாரணங்களை வழங்கியுள்ளேன். நான் முதல் பதிவில் குறிப்பிட்டுள்ளது போல் அரசியல்வாதிகள், தனியார் துறையினர், ஊடகங்கள் மற்றும் மத்திய வர்க்கத்தினர் ஆகியோரால் உதாசீனப்படுத்தப்படும் / மோசமான நிலைகளுக்குத் தள்ளப்படும் அதிகாரமற்ற மக்களின் நிலைமையை இந்த உதாரணங்கள் விவரமாக விளக்கியிருக்குமென்று நம்புகிறேன். தற்போது பொறுமை காத்துவரும் இம்மக்கள் ஒரு நாள் பொறுமையிழக்கக் கூடும். புரட்சி என்பதிலெல்லாம் எனக்கு நம்பிக்கையில்லை. ஆனால் பெரிய அளவில் வன்முறைகள் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் அதிகமாகிக் கொண்டிருப்பதையே தினமும் காண்கிறோம். அத்தகைய நிலை ஏற்படுமுன், இந்த ஏற்ற தாழ்வுகள் சரி செய்யப்படுமென்று நம்புவோம்.
அடுத்து, திரு.சாய்நாத்தை வழியனுப்பி விட்டு, வேறு சில கருத்தியல்களின் மீது வெளிச்சம் போட்டுப் பார்க்கலாமென்றிருக்கிறேன். அதுவே அடுத்த இடுகை - வறுமை குறித்த மாற்றுச் சிந்தனைகள்.
வெள்ளி, ஜூலை 14, 2006
மன்னிக்கவும்.......
(இதற்கு tagging எல்லாம் வேண்டாமில்லையா?)
வியாழன், ஜூலை 13, 2006
வறட்சி விரும்பிகளும் தண்ணீர்த் தடியர்களும்
வறட்சி நிவாரணம் என்ற பெயரில் மஹாராஷ்டிர மாநிலம் ஒரு வருடத்திற்கு செலவிடும் தொகை ஆயிரம் கோடிகளுக்கு மேல். அதே போல் ஒரிஸ்ஸா மாநிலத்தில் வறட்சி நிவாரணம் என்று மத்திய அரசின் நிதியிலிருந்து சுமார் ஆயிரம் கோடிகள் வருடத்திற்கு செலவிடப்படுகின்றன. இவை பெரும்பாலும் வறட்சியை உண்டாக்கும் காரணிகளை (அதாவது, பொது நீர்வளங்களை செல்வாக்குள்ள தனி நபர்கள் தம் வசப்படுத்திக் கொள்வது, போன்ற காரணிகளை) எதிர்கொள்வதில்லை. மாறாக, சாலைகள் அமைத்தல், பாலங்கள் கட்டுதல், லாரிகளில் குடிநீர் வழங்குதல், (தண்ணீர் இல்லாத) குளங்களைச் செப்பனிடுதல் போன்ற பணிகளுக்கு தனியார் காண்டிராக்ட்கள் வழங்குவதற்கே செலவிடப்படுகின்றன. இப்பணிகளும் எந்த அழகில் நிறைவேற்றப்படும் என்பதை விவரிக்கத் தேவையில்லை. இது போன்ற நிவாரண நிதி பெறுவதற்கும் 'வறட்சியால் பாதிக்கப்படக்கூடிய பகுதி' (drought-prone area) என்ற அங்கீகாரம் தேவை. இத்தகைய வ.பா.ப.க்கள் முற்றிலும் அரசியல் ரீதியிலேயே நிர்ணயிக்கப்படுகின்றன. உ-ம், தொண்ணூறு வ.பா.ப.க்கள் இருந்த மஹாராஷ்டிரத்தில், ஆறு வருடங்கள் கழித்து இந்த எண்ணிக்கை நூற்றைம்பதாக உயர்ந்ததாம். அதே போல், 54 வ.பா.ப.க்கள் இருந்த பீஹாரின் எண்ணிக்கை, அம்மாநிலத்தவர் ஒருவர் மத்திய அமைச்சரான பிறகு உடனே 55ஆக உயர்ந்தது (அவரது தொகுதியின் சேர்க்கையால்) . சில வருடங்களில் இந்த எண்ணிக்கை நூற்று இருபதாக உயர்ந்து விட்டது. இத்தனைக்கும், இந்த இடைப்பட்ட வருடங்கள் நல்ல மழை பெய்த வருடங்களாம். பெரும்பாலான வ.பா.ப.க்கள் நல்ல மழைக்காலங்களை அனுபவித்து வருபவை. கரும்பு போன்ற அதிக அளவிலான பாசனத் தேவைகளைக் கொண்ட பயிர்களைப் பயிரிடுபவை. இருந்தும் இங்கு வறட்சியால் வாடும் மக்களும் உள்ளனர். அவர்களே சமூகத்தின் அதிகாரமற்ற கடைநிலை மக்கள். குடிநீருக்காகப் பல மைல்கள் அலைந்து திரும்பும் பொதுஜனங்கள். அவர்களை முன்வைத்து பல பகற்கொள்ளைகளை நிகழ்த்துகின்றனர், நம் அரசியல் தலைவர்களும் அவர்களது கூட்டாளிகளும். எவ்வளவு கோடிகள் நிவாரண நிதி ஒதுக்கினாலும் இந்நாட்டின் வறட்சி நிலை மாறப்போவதுமில்லை, அதனால் பலனடையும் கூட்டமும் ஒழியப்போவதுமில்லை என்பதே இங்கு நிலவும் உண்மை நிலவரம்.
****************
இடம்: இராமநாதபுரம் மாவட்டம், தமிழ் நாடு
தொடர்ந்து வானம் பொய்த்து வரும் இராமநாதபுரம் மாவட்டத்தில், வயல்களுக்குப் பாசனம் செய்ய தண்ணீர் கிடைப்பது ஒரு பெரிய பிரச்சினையாகும். அதுவும் சொந்தமாகக் கிணறுகளும் பம்பு செட்களும் இல்லாத விவசாயிகளின் பாடு திண்டாட்டம்தான். இவைகளை உடைய பெரிய விவசாயிகளிடமிருந்து தண்ணீரைக் காசு கொடுத்து வாங்க வேண்டிய நிலைதான்.
ராமு - ஒரு வசதி படைத்த விவசாயி. தனது 3HP மின்சார பம்பு செட்டை மணிக்கு பன்னிரண்டு ரூபாய் என்ற விலையில் வாடகைக்கு வழங்கியே, ஒவ்வொரு சிறு விவசாயியிடமிருந்தும் நாற்பத்தைந்து நாட்களில் ரூ.2000 வரை சம்பாதித்து விடுவதால், அவருக்கு சொந்தமாக விவசாயம் செய்வதற்கெல்லாம் நேரமோ தேவையோ இருப்பதில்லை. நீளும் வாடிக்கையாளர் பட்டியலை கவனிப்பதற்கே நேரம் சரியாக இருக்கிறது. இரு காரணிகள் அவருக்குச் சாதகமாகத் திகழ்கின்றன: 1. அவரும் விவசாயி என்பதால் அவருக்கு மின்சாரச் செலவு கிடையாது 2. அங்கு நிலவும் low voltage மின்சாரத்தால், வயல்களுக்குப் பாசனம் செய்ய இரண்டு மடங்கு அதிக நேரம் பிடிக்கிறது, அதனால் ராமு போன்றவர்களுக்கு இரட்டிப்பு லாபம்.
ராஜு - தனது 5HP டீசல் பம்பு செட்டை மணிக்கு ரூ.30 என்ற விலைக்கு வாடகைக்குத் தருபவர். (டீசல் இலவசமாகக் கிடைக்காதல்லவா?) இவ்வாறு, ஐந்தாறு கிராமங்களின் பாசனத் தேவைகளை நிறைவேற்றி வருபவர். கிணற்றுத் தவளையாக இருந்து கொண்டிருக்காமல், பொதுக் கண்மாய்களிலிருந்தெல்லாம் தண்ணீரை இறைக்கும் சக்தி படைத்தவர். உங்களூர் கண்மாயின் தண்ணீர் அளவு குறைந்து விட்டதா? அப்படியென்றால் அவரை அணுகலாம். ஆனால் குறைந்தது ஐம்பது வாடிக்கையாளர்களாவது உங்கள் ஊரில் இருப்பது உத்தமம். அதை விடக் குறைந்த எண்ணிக்கைகளுக்கெல்லாம் அவர் நேரத்தை வீணாக்குவதில்லை.
கோவிந்தராஜன் - மேலே குறிப்பிடப்பட்டுள்ள டீசல் பம்பு செட்டைப் போன்று இரண்டையும், மின்சார பம்பு செட் ஒன்றையும் வைத்து நடத்தி வருபவர். மேலும் தனது கிணறுகளிலிருந்து தண்ணீரை விற்பதுவும் அவரது நடவடிக்கைளில் ஒன்று. இவ்வாறாக, ஒரு வறட்சிக் காலத்தில் ரூ.70,000 வரை சம்பாதித்து விடக்கூடியவர்.
பாசனத்திற்கு இவ்வாறென்றால், குடிநீருக்கும் அதே வகையான பொருளாதார அமைப்புதான். பொதுக் கண்மாய்களின் படுகைகளில் கிணறுகள் தோண்டி, அந்த நீரை ஒரு குடம் முப்பது பைசா என்ற விலையில் விற்று வரும் தனி நபர்களின் ஆதிக்கம் இங்கு அதிகம். முத்துச்செல்லன், அருணாசலம் மற்றும் சிவலிங்கம் - சாயல்குடி கிராமத்தின் பொதுக் கண்மாயின் படுகையில் பதிமூன்று கிணறுகளை வெட்டி, அவை தமக்குச் சொந்தமானவையே என்றுப் பிரகடனம் செய்து கொண்டவர்கள். பிறகு, நாளொன்றுக்கு ஒவ்வொரு கிணற்றிலிருந்தும் 500 குடங்கள் என்ற விகிதத்ததில் பொதுத் தண்ணீரை விற்று, மாதத்திற்கு ரூ.60,000 வரை சம்பாதித்து விடுபவர்கள்.
தொடர்ச்சி: புதுக்கோட்டையின் புதுமைப்பெண்கள் (தொடர்ந்து சோகக் கதைகளாக அமைந்து விட்டதால், ஒரு மாறுதலுக்காக, ஊக்கமளிக்கும் ஒரு வெற்றிக்கதை)
(குறிப்பு: எழுத்துரு சிறிதாக இருப்பதாகச் சிலர் குறிப்பிட்டுள்ளனர். தற்போது வீட்டில் இணைய வசதி இல்லாததால், வீட்டில் OpenOfficeஇல் எழுதி, அதை MS Officeக்கு மாற்றி, மீண்டும் htmlக்கு மற்றி இந்தப் பதிவுகளை வலையேற்றுகிறேன். இதில் கை வைத்தால் மிகப்பெரிய எழுத்துக்களாகக் காட்டி பயமுறுத்துகிறது. ஆகவே, வாசகர்களுக்கு நான் விடுக்கும் வேண்டுகோள்: எழுத்துக்கள் சிறிதாகத் தெரிந்தால், உங்கள் உலாவியில் எழுத்துக்களைப் பெரிதாக்கிப் படியுங்கள். நன்றி்)
புதன், ஜூலை 12, 2006
ராஜ்மஹால்
இடம்: கோத்தா மாவட்டம், பீஹார் (இப்போது , ஜர்கண்ட்)
வரலாற்றுப் புகழ் பெற்ற தாஜ்மஹாலைத் தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது. நம் நாட்டின் அவலங்களுக்கிடையே முளைத்த பிரம்மாண்டமான வெளிப்பாடுகளில் அதுவும் ஒன்று. அதைப் போலவே ஒரு பிரம்மாண்டமான வெளிப்பாடுதான் ராஜ்மஹால் - ஆசியாவிலேயே மிகப் பெரிய ஒற்றைக் குழி, திறந்த வெளி நிலக்கரிச் சுரங்கம் (Asia's largest single-pit, opencast, coal mine). இதன் மற்றொரு சிறப்பு, இது அமைக்கப்பட்ட இடம் இந்தியாவிலேயே வறுமை அதிகமுள்ள (மற்றும் இரயில் போக்குவரத்தால் இணைக்கப்படாத) மாவட்டங்களில் ஒன்றாகும். உடனே இதன் முக்கியத்துவம் நமக்குப் புலப்படக் கூடும். "மிகப் பெரிய வளர்ச்சித் திட்டம் ஒன்று, நாட்டின் மிக வறுமையான பகுதிகளில் இடம்பெறுவதனால் அங்குள்ள பொருளாதார நிலையே மாற்றமடைந்து அனைவரும் சுபிட்ச நிலையை எட்டுவதற்கான வலுவான காரணங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன" என்றெல்லாம் 'நிபுணர்' மனப்பான்மையுடன் சிந்திக்கலாம். ஆனால் அதற்கு ஒரு சிறு இடையூறாகத் திகழ்வது அங்குள்ள நடைமுறை நிலவரம்.
பதினெட்டு பட்டி கிராமங்களையும் (அவற்றில் வாழும் ஆயிரக்கணக்கான மக்களையும்) அப்புறப்படுத்திவிட்டு, 1989ஆம் ஆண்டு இத்திட்டம் வெற்றிகரமாகத் துவக்கப்பட்டது. கனேடிய அரசு வழங்கிய கடனால் மேற்கொள்ளப்படும் திட்டம் என்பதால் Met-Chem என்னும் கனேடிய நிறுவனத்திற்கே இதன் 'ஆலோசகர் - கூட்டாளி' என்ற பொறுப்பு வழங்கப்பட்டது. அதன் ஆலோசனைப்படி முற்றிலும் இயந்திரமயமான ஒரு சுரங்கம் நிறுவப்பட்டது. சுமார் ஆயிரம் கோடி செலவான இத்திட்டத்திற்கு, Met-Chem நிறுவனத்திற்குத் தரப்பட்ட தொகை நூறு கோடிகளுக்கு மேல். மேலும், இத்திட்டத்திற்கான இயந்திரங்களைத் தருவிப்பது போன்ற பொறுப்புகளையும் Met-Chemஏ பார்த்துக் கொண்டதால், அந்த நடவடிக்கைகளிலிருந்தும் நல்ல வருமானம் ஈட்டியிருக்கக் கூடிய வாய்ப்பிருக்கிறது. கிட்டத்தட்ட இந்நிறுவனத்திற்கு நம் நாட்டின் வளங்களைச் சுரண்டுவதற்கான ஏகபோக உரிமை வழங்கப்பட்டது போலத்தான்.
இப்போது வேலைவாய்ப்பு நிலவரம் - முற்றிலும் இயந்திரமயமான இச்சுரங்கம் சுமார் 2500 வேலைகளே வழங்கக்கூடியதாயிருக்கிறது.. அதிலும், இயந்திரங்களை இயக்குவது போன்ற சிறப்புத்திறமைகள் தேவைப்படுவதால், பெரும்பாலும் வெளியாட்களையே நியமிக்க வேண்டிய கட்டாயம். ஆகவே, அப்புறப்படுத்தப்பட்ட மக்களில் சிலருக்கே வேலை வாய்ப்பு. மேலும், இச்சுரங்கத்தின் ஆயுட்காலம் சுமார் 40 ஆண்டுகளே என்பதாலும், மற்றும் இங்குள்ள விளைநிலங்கள் அனைத்தும் இத்திட்டத்தால் விழுங்கப்பட்டு விட்டதாலும், 40 ஆண்டுகளுக்குப் பிறகு இத்திட்டத்தால் யாருக்கும் வேலைவாய்ப்பும் கிடையாது, விவசாய சாத்தியங்களும் மூடப்பட்டு விட்டன. இத்திட்டத்தால் சுற்றுப்புறத்திலுள்ள சிறுதொழில்களுக்கும் எந்தவொரு ஆதாயமும் கிடையாது. பெரும்பாலும் இறக்குமதி செய்யப்பட்ட இதன் இயந்திரங்களுக்கு ball bearing மாற்றுவதற்குக் கூட வெளிநாடுகளிலிருந்துதான் பொருள்கள் வந்தாக வேண்டும்.
Dont be a Luddite! என்று என் மனசாட்சியே என்னைச் சுடுவதால், நாட்டின் தேவையான நிலக்கரி மற்றும் அது அளிக்கும் மின்சார சக்தி போன்றவைகளைப் பாராட்ட முயற்சிக்கிறேன். NTPCயின் ஃபரக்கா (Farakka) மற்றும் கெஹல்காவ் (Kahalgaon) ஆகிய இடங்களில் உருவாகி வரும் மின் உற்பத்தி நிலையங்களுக்குத் தேவைப்படும் நிலக்கரியை வழங்குவதற்கே இந்த ராஜ்மஹால் சுரங்கம் அமைக்கப்பட்டது. சுரங்கம் உருவாகி நாளொன்றுக்கு பதினொன்றாயிரம் டன்கள் நிலக்கரியை உற்பத்தி செய்து கொண்டிருந்தாலும், இந்த நிலக்கரியை உள்வாங்கிக் கொள்ள வேண்டிய மின் நிலையங்கள் இன்னும் முழுமையடையவில்லை. ஆகவே லட்சக்கணக்கான டன்கள் விற்க முடியாமல் குவிந்து கொண்டிருக்கின்றன, தீ விபத்து போன்ற அபாயங்களையும் தோற்றுவித்துக் கொண்டு. என்றாவது இந்த நிலக்கரியை விற்க முடிந்தாலும், நாட்டிற்கு அது பெருஞ்செல்வத்தை வழங்கக்கூடுமல்லவா என்று யோசித்தால் அதற்கும் வாய்ப்புகளில்லை போலிருக்கிறது. இச்சுரங்கத்திலிருந்து ஒரு டன் நிலக்கரி தயாரிக்க ரூ.450 ஆகிறதாம். ஆனால் அதை ரூ.250 என்ற விலைக்குத்தான் விற்க முடியுமாம்.
ராஜ்மஹால் - ஆசியாவிலேயே மிகப்பெரிய ஒற்றைக் குழி நிலக்கரிச் சுரங்கம் என்று காலரைத் தூக்கி விட்டுக் கொள்வோம்.
(Update:
1. Year 2001: Met-Chem was (or at least tried to get) back in action: http://www.hinduonnet.com/businessline/2001/06/16/stories/02164684.htm
http://www.thehindubusinessline.com/2006/05/27/stories/2006052703920900.htm
3. Year 2006: From ECL’s website:
http://easterncoal.gov.in/press.html
)
செவ்வாய், ஜூலை 11, 2006
மிளகாய்த் தரகும், கொத்தடிமைத்தனமும்
இடம்: இராமநாதபுரம் மாவட்டம், தமிழ் நாடு
ராமசாமி தனது நிலத்தில் விளைந்த 40கிலோ மிளகாய்களை இரு மூட்டைகளில் கட்டிக் கொண்டு நம் தரகரிடம் விற்பனைக்குச் செல்கிறார். தரகர் மூட்டையில் கைவிட்டு, ஒரு கை நிறைய மிளகாய்களை அள்ளி எடுத்து, தம் பக்கமாகப் போட்டுக் கொள்கிறார். அதற்குப் பெயர் 'சாமி வத்தல்' - விலை கொடுக்காமல் பெற்றுக் கொள்ளப்படும் சுமார் பத்து ரூபாய் மதிப்புள்ள மிளகாய்கள். தரகர் கிலோவுக்கு பத்து ரூபாய் என்று விலையை நிர்ணயிக்கிறார். அதற்கு மேல் தனக்கு 5% (ரூ.20) கமிஷன் வேறு எடுத்துக் கொள்கிறார். பிறகு, மூட்டைகள் எடை போடப்படுகின்றன. தரகரின் தராசுகள் மொத்தம் முப்பத்தியாறு கிலோக்களையே காட்டுகின்றன. இறுதியில், முப்பத்தியிரண்டு கிலோக்களுக்கே விலை கொடுக்கப்படுகிறது. இது போல் ராமசாமி, இன்னமும் ஐந்து முறை தரகரிடம் வருகை தந்து, தனது 200கிலோ விளைச்சலையும் இவ்வகையிலேயே ('சாமி வத்தல்' சடங்கு உட்பட) விற்று முடிப்பார், ரூ.1600க்கு.
ராமசாமியிடம் கிலோவுக்குப் பத்து ரூபாய் விலை பேசிய தரகரின் வருமான விவரங்களைப் பார்போம். அவர் ஏற்றுமதி செய்வாரானால் அம்மிளகாய்களுக்கு ரூ.20,000 வரை வசூலிக்க முடியும். சென்னை / கேரளச் சந்தைகளில் விற்றாலும் கிலோவுக்கு 25இலிருந்து 40 ரூபாய் வரை பெற முடியும். சாமி வத்தல் / எடை போடும் மோசடிகளால் பெறப்பட்ட கொள்ளை லாபம் வேறு. ராமசாமியைப் போலவே இத்தரகரை நம்பியிருக்கும், அவரிடமே ரூ.3000 கடன் பெற்று முதலீடு செய்து, இறுதியில் ரூ.1600 மட்டுமே வருமானம் சம்பாதிக்கும் விவசாயிகள் நூற்றுக்கணக்கானோர்.
மேற்கூறிய தரகரைப் போல் எழுபது பேர், மேற்கூறிய விவசாயிகளைப் போல் ஆயிரக்கணக்கானோர் - இதுவே உங்கள் இராமநாதபுரம் மாவட்டம்.
**********
மீசல் - மனித நாகரீகத்திலிருந்து 40கி.மீ. தொலைவிலுள்ள ஒரு கிராமம். இப்படி கண்காணாத இடத்திலிருப்பதிலும் சில வசதிகள் உள்ளன. உ-ம், கொத்தடிமைத்தனத்தைத் தங்கு தடையின்றி கடைபிடிக்க முடியும், எந்த விதமான குறுக்கீடுகளுமின்றி.. இங்குள்ள நிலப்பிரபுக்களிடம் கடன் வாங்கிய கடைநிலை மக்களான சக்கிலியர் என்னும் வகுப்பினர்தான் இதில் பலிகடாக்கள்.
'பத்து ரூபாய் வட்டி' எனப்படும் நூறு ருபாய் கடனுக்கு, மாதத்திற்குப் பத்து ரூபாய் வட்டி (120% வருடாந்திர வட்டி) என்பதே இங்கு எழுதப்படாத விதி. வாங்கும் கடனுக்கு suretyயாகத் தரப்படுவதுதான் இந்த அடிமைத்தனம். அதாவது, ஒரு சக்கிலியர் கடன் வாங்கிய பிறகு வேறு எங்கும் பணியாற்ற முடியாது. கடனை அடைக்கும் வரை (நிலவும் வட்டி விகிதத்தில் இது next to impossible என்பதை விளக்கத் தேவையில்லை) கடன் கொடுத்த நிலப்பிரபுவுக்கே தனது உழைப்பை வழங்க வேண்டும். இதில் தாம் ஏதோ பெரிய தாரள குணம் கொண்டவர்களாகக் தோற்றமளிக்கும் வண்ணம், நாளொன்றுக்குப் பன்னிரண்டு மணி நேரம் வேலை வாங்கப்படும் இக்கொத்தடிமைகளுக்கு, மிகப்பெரியத் தொகையான வருடத்திற்கு ஆயிரம் ருபாய் சம்பளம் வழங்குதல் வேறு. அதோடு, நேற்றைய மீந்து போன உணவு போன்ற கிம்பளங்களும் உண்டு. 10 Best places to work for போன்ற கணக்கெடுப்புகளில் பங்கு பெற இந்த எஜமானர்கள் விண்ணப்பித்துப் பார்க்கலாம்!
இவ்வாறு அடிமைத்தனத்தில் சிக்கி வாடும் சக்கிலியர் இனத்தவர்களைப் பற்றி: 'பூச்சி', 'அடிமை', என்றெல்லாம் சர்வ சாதாரணமாகப் பெயர் வழங்கப்பட்டிருக்கும் இவர்களது மொத்த உடைமைகளின் மதிப்பைக் கணக்கெடுத்தால் சில நூறு ரூபாய்களை மிஞ்சாது. எஜமானர்கள் வீட்டிலிருந்து கொண்டு வந்த மீந்து போன பண்டங்களே அவர்களது பிரதான உணவு என்பதால், சமையல் என்பது அவர்களுக்குத் தேவைப்படாத, மற்றும் வசதிப்படாத ஒன்றே. ஆனால் அவர்களது குடும்ப அட்டைகளிலோ, "இரண்டாவது gas cylinder உள்ளதா?" என்றெல்லாம் அபத்தமான கேள்விகள் கேட்கப்பட்டிருக்கும். (Adding insult to the injury). புழங்கும் சாதியமைப்பில், இருப்பதிலேயே மிகவும் கடைநிலையிலிருப்பவர்களாகக் கருதப்படும் இவர்களை நோக்கி மற்ற தலித் இனத்தவர்களும் தீண்டாமை முறையைக் கடைபிடிக்கின்றனராம். இவர்களுக்கு முடி திருத்த, வேறு தாழ்த்தப்பட்ட இனத்தவர்களும் முன்வர மாட்டார்களாம்.
தமிழ் நாடு அரசின் அறிக்கைகளின் படி, தமிழகத்தில் கொத்தடிமைத்தனம் என்பது ஏறக்குறைய மறைந்து போய்விட்ட, அங்கொன்றும் இங்கொன்றுமாக மட்டுமே காணப்படக்கூடிய ஒரு முறையாகும். ஆனால் உச்ச நீதி மன்றம் நியமித்த ஒரு விசாரணை கமிஷனின் விவரப்படி, தமிழகத்தில் பத்து இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் (அதாவது 2% தமிழர்கள்) அடிமைத்தளைகளால் பிணைக்கப்பட்டுள்ளனராம். மேலும் இந்தக் கமிஷன் அறிக்கை கூறுவது: "மாநில அரசும் மாவட்ட ஆட்சியாளர்களும் இது குறித்து அளிக்கும் தகவல்கள் ஒன்றோடு ஒன்று உடன்படுவதில்லை. பெரும்பாலும் இத்தகவல்கள் உற்பத்தி செய்யப்பட்டதாகவே தோன்றுகின்றன."
(குறிப்பு: இதன் மூலக் கட்டுரைகள் எழுதப்பட்ட தொண்ணூறுகளில் ஒன்று பட்ட இராமநாதபுரமாக இருந்து பிறகு அது இரண்டாகப் பிரிக்கப்பட்டிருப்பதை நான் அறிவேன். மாவட்டத்தின் பெயரைத் தவிர இதர விவரங்கள் இன்றைக்கும் பொருந்தக்கூடும் என்பது என் அனுமானம்)
திங்கள், ஜூலை 10, 2006
அனைவரும் விரும்பும் வறட்சி நிலை
இந்தியா ஒரு வறண்ட நாடு. அதன் வறட்சிக்குக் காரணம், சில இடது சாரி இடுப்பசைவுகளைச் செய்து கொண்டே தம் வலது சாரித் திட்டங்களைத் திடமாக முன்னெடுத்துச் செல்லும் அதன் அரசியல் கட்சிகளே. இதில் பாரபட்சமில்லாமல் அனைத்துக் கட்சிகளும் உண்டு - காந்தீய, பிராந்திய, தேசிய, மாநில, பெரியாரிய, சோஷலிச, மார்க்சீய, சாதீய, தலித்திய......... என்று அனைத்து ஈயங்களும் இதில் அடக்கம். மேற்கூறிய கொள்கைகளைப் பின்பற்றுவதாகக் கூறிக்கொண்டு, தம் கொள்ளைகளைத்தான் செயல்படுத்திக் கொண்டிருக்கின்றன இக்கட்சிகளும் அவை ஆளும் அரசுகளும். கொள்கையளவில் எதிரும் புதிருமாக இருந்தாலும், கொள்ளையளவில் இக்கட்சிகளிடையே மிகுந்த ஒற்றுமை இருப்பதைக் காணலாம். என்னதான் ஆட்சிகள் மாறினாலும், நாட்டில் 'வளர்ச்சி'த் திட்டங்கள் அறிவிக்கப்படுவதிலும், அவைகளைச் செயல்படுத்துவதற்காக காண்டிராக்ட்களை வாரி வழங்குவதிலும், எந்த விதமான மாற்றமும் நிகழ்வதில்லை. நம் நகரங்களில் ஆங்காங்கே தேவையில்லாத இடங்களிலெல்லாம் மேம்பாலங்கள் அமைக்கப்படுவது ஒரு tip of the iceberg உதாரணம். வேடிக்கை என்னவென்றால், கோடிகளை விழுங்கும் பல 'வளர்ச்சி'த் திட்டங்களில் கணக்கிடக் கூடிய பலன் என்று எதையும் சுட்டிக்காட்ட இயலாது. கணக்கில் வராத செலவுகளை வேண்டுமானால் காட்ட முடியுமோ என்னவோ.
என்னைப் போன்றவர்களின் சந்தேகத்தைத் தெளிவுப் படுத்தும் வகையில் சில உதாரண நிலவரங்களைப் பார்ப்போம். (தகவல் உதவி - பத்திரிகையாளர் திரு. சாய்நாத் எழுதிய கட்டுரைத் தொகுப்பு)
************
இடம்: மல்கன்கிரி, ஒரிஸா
துண்டிக்கப்பட்ட பிராந்தியம் (Cut-off Area) என்ற குறிப்புடன், ஒரு நூற்றைம்பது கிராமங்களையும், சுமார் முப்பதாயிரம் மக்களையும் உள்ளடக்கியிருக்கிறது ஒரு பகுதி. இப்பகுதியின் சிறப்பு, இது நாலாபக்கங்களிலும் தண்ணீரால் முற்றிலுமாகச் சூழப்பட்டு, நாட்டின் ஏனைய பகுதிகளிலிருந்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டிருக்கிறது என்பதே.
ஆனால் இந்நிலப்பரப்பு எப்பொழுதும் அவ்வாறிருக்கவில்லை. ஒரு இயற்கை அழகு ததும்பும் பிரதேசமாக, ஒரு சொர்க்க பூமியாகத்தான் திகழ்ந்தது இப்பகுதி. முன்னூறு அடி உயரத்திலிருந்து விழுந்த ஒரு நீர்வீழ்ச்சியின் நீர்த்துளிகள் ஏற்படுத்திய மேகமூட்டமும் சூரிய ஒளியும் பிணைந்து ஒரு நிரந்தர வானவில்லையே உருவாக்கியிருந்ததாகக் கூறுகின்றன வரலாற்றுக் குறிப்புகள். இத்தகைய சொர்க்கபுரியை மயான தேசமாக மாற்றுவதற்கும் ஒரு 'வளர்ச்சி'த் திட்டத்தைத் தீட்டினார்கள் நம் சான்றோர்.
'பலிமேளா' மின்சாரத் திட்டத்தின் கீழ் இங்கு ஒரு அணை எழுப்பப்பட்டு, அதன் நீர்த் தேக்கத்தால் தொண்ணூறு கிராமங்கள் மற்றும் அவற்றின் சுற்றுப்புற வனப்பகுதிகள் ஆகிய அனைத்துமே முற்றிலுமாக முழுகிப் போயின. ஒரு மாபெரும் நிலப்பரப்பு, மேற்கூறிய 'துண்டிக்கப்பட்ட பகுதியாக மாறியது. நீர்த்தேக்கத்தால் முழுகிய கிரமங்களில் வசித்த மக்களும் இப்பகுதியிலேயே குடிவைக்கபட்டனர். இவர்களில் பெரும்பாலோர் பழங்குடியினர் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள். (இல்லாவிட்டால் இவ்வளவு பேரை இப்படி எளிதாக அப்புறப்படுத்தி, இத்திட்டத்தை வெற்றிகரமாக நடத்தியிருக்க முடியுமா என்பது கேள்விக்குறி)
ஒரு எண்பது மெகாவாட் மின்சார உற்பத்தித் திறன் இதனால் ஒரிஸாவுக்கும் ஆந்திர மாநிலத்திற்கும் கிட்டியதாம். ஆனால் இத்திட்டத்தால் பாதிக்கப்பட்ட, அப்புறப்படுத்தப்பட்ட, வாழ்க்கையே ஒரு தீவாக்கப்பட்ட, முப்பதாயிரம் பேர்களின் வாழ்வில் இன்னமும் ஒளி வீசவில்லை. Cut-off area, black-out areaவும் கூட. நாட்டுக்கு விளக்கேற்ற வேண்டி தம் வாழ்வை விரும்பியோ விரும்பாமலோ தியாகம் செய்த இம்மக்கள் கூட்டம், தம் வீடுகளுக்கு விளக்கேற்ற முடியாது திண்டாடுகிறது.
அது மட்டுமல்லாமல், முற்றிலும் துண்டிக்கப்பட்டதால், அத்தியாவசியப் பொருள்களும் கிட்டாமல், பற்றாக்குறை நிலைதான். மூன்று நாட்களுக்கு ஒரு முறை வந்து செல்லும் படகு. மூழ்க்கடிக்கப்பட்ட காடுகளினூடே செல்லவேண்டியிருப்பதால், மெதுவாகத்தான் செல்ல வேண்டும். அறுபது கிலோமீட்டர் பயணத்திற்குப் பல மணி நேரங்கள் எடுத்துக் கொண்டுதான், அதுவும் அறுபது பேருக்கான படகில் நானூறு பேரை ஏற்றிக் கொண்டுதான் சென்றாக வேண்டும். எல்லாப் பொருள்களையும் உபரி விலை கொடுத்துத்தான் வாங்க வேண்டும். அடிமட்டக் கூலி தரும் வேலைவாய்ப்புகளே கிட்டும் இப்பகுதியில். (பல மணி நேர உழைப்பிற்கு ரூ.4/-, போன்ற கூலி வேலைகள்)
அரசால் பயிரிடுவதற்காக விநியோகம் செய்யப்படும் கடலை மூட்டைகள் பெரும்பாலும் உணவாகவே உண்ணப்படுகின்றன, வறுமையின் மிகுதியால். இம்மூட்டைகள் சீல் பிரிக்கப்பட்டு, திறந்த நிலையிலேயே வழங்கப்படுகின்றன, அரசின் ஊழியர்களால். ("அத்தகைய மூட்டைகளை வாங்க வேண்டாம்" என்று மூட்டைகளின் மேல் கொட்டை எழுத்துக்களில் எச்சரிக்கை செய்யப்பட்டிருந்தாலும், அதைப் பின்பற்றும் நிலையிலில்லை மக்கள்.) ஒவ்வொரு பெறுனரிடமிருந்தும் முதலில் கையொப்பம் பெறப்படுகிறது. ஆனால் படிவத்தில் 'அவருக்கு எத்தனை மூட்டைகள் வழங்கப்பட்டன' என்ற தகவல் நிரப்பப்படுவதில்லை (பிறகு நிரப்பிக் கொள்வார்களோ, என்னவோ).
இந்த cut-out areaவில் வாழும் மக்கள் கேட்கும் நியாயமான கேள்வி - "நாங்கள் இந்தியர்கள் என்று பெருமை கொள்வதற்கு ஏதாவது ஒரு காரணம் வழங்க முடியுமா?" அருகே நீர்த்தேக்கத்தில் ஒரு கல்வெட்டு பெருமையாக அறிவித்துக் கொண்டிருந்தது, "மூழ்க்கடிக்கப்பட்ட கிராமங்கள் - 91" என்று.
*********
இடம்: வார்ட்ராஃப் (Wardroff) நகர், சுர்குஜா மாவட்டம், மத்தியப் பிரதேசம்.
ராம்தாஸ் கோர்வா, ரச்கேதா கிராமத்தைச் சேர்ந்த, 'கோர்வா' எனப்படும் மலைவாழ் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர். அரசு ஆவணங்களின் படி அவரது மதிப்பு - ரூ.பதினேழரை லட்சம். எப்படியென்றால் அவர் அக்கிராமத்தில் வாழும் ஒரே கோர்வா நபர் என்றாலும், அவர் பெயரை முன்நிறுத்தி அக்கிராமத்திற்கு பதினேழரை லட்சம் ரூபாய் செலவில் ஒரு 3 கி.மீ. நீளமுள்ள ஒரு சாலை அமைக்கப்பட்டுள்ளது, அதுவும் பழங்குடியினர் நலத் திட்ட நிதியிலிருந்து. (3 கி.மீ நீளமுள்ள, அதுவும் கிராமப்புற 1-lane சாலைக்கு 17.5 லட்சங்களாகுமா என்பது தனிக்கேள்வி). நிச்சயமாக அவரது விருப்பத்தின் பெயரில் அந்த சாலை போடப்படவில்லை. அவரது தேவைகளே வேறு. உ-ம், தன் விவசாய நிலத்திற்குக் கொஞ்சம் பாசன வசதி, போன்றவை.
பின் யாருடைய தேவைக்காக அவரது பெயரும் இனப் பின்புலமும் துஷ்பிரயோகம் செய்யப்பட்டன? ஒரு கோர்வா நபருக்குக் கூடப் பயன் தராமல், பதினேழரை லட்சம் ரூபாய் எவ்வாறு கோர்வா நல நிதியிலிருந்து செலவிடப்பட்டது? இது புரியுமானால், இந்தியா என்ற மாபெரும் புதிரும் சுலபமாகப் புரிந்து விடக்கூடும்.
மலைவாழ் கோர்வாக்கள் மிகவும் பின்தங்கிய நிலையிலிருப்பவர்கள் என்று அறியப்படுபவர்கள் (அதாவது இந்திய மக்களிலேயே கடைசி 5% வகுப்பினர்களில் வருபவர்கள்). சுமார் பதினைந்தாயிரம் எண்ணிக்கை கொண்ட இவர்களின் மேம்பாட்டுக்காக, மத்திய அரசு ஒரு ஐந்தாண்டு காலத்திற்கு ரூ.42 கோடிகளை அனுமதித்துள்ளது. இந்த கோர்வா மக்கள் பெரும்பாலும் வாழ்வது சுர்குஜா மாவட்டத்தில்தான். ஆனால், அரசியல் காரணங்களை முன்னிட்டு, அவர்களின் நலனுக்காக ஒதுக்கப்பட்ட நிதி, அவர்கள் வாழாத ராய்காட் மாவட்டத்திற்கே செலவிடப்படுகிறது. ஐந்தாண்டு காலமும் கடந்து, ரூ.42 கோடிகளையும் விழுங்கிய பின்னர், கோர்வா நலத் திட்டம், கோர்வா மக்களின் நலனுக்கு ஆற்றியிருக்கக் கூடிய பங்கு குறித்து யாருக்கேனும் ஏதேனும் கேள்விகள் உள்ளனவா?
ஞாயிறு, ஏப்ரல் 23, 2006
தமிழ்ப்பதிவுகளில் ஆங்கிலம் ஏன்?
மேலே 'மார்க்கெட்டிங்' என்று ஆங்கிலத்தில் எழுதியதைச் சுட்டிக் காட்டத் துடிதுடிக்கும் உங்கள் கரங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். இது ஆங்கிலத்தை எதிர்த்து எழுதப்பட்டதல்ல. நானும் அவ்வப்போது ஆங்கிலச் சொற்களை இடையிடையே புகுத்தி எழுதுபவன்தான், மற்றும் அவ்வாறு எழுதுவது அவரவரின் சொந்தத் தேர்வு என்பது என் கருத்து. அதில் விமர்சனம் செய்வதற்கு எதுவும் இருப்பதாக நான் நினைக்கவில்லை.
இந்தப் பதிவு எழுதக் காரணம், பின்னூட்டங்களில் பெருகி விட்ட ஆங்கிலப் பயன்பாடு. வழக்கமாக தமிழில் எழுதும் பழக்கமுடையவர்களும் அவ்வப்போது, "மன்னிச்சிக்கோங்க, கலப்பைய வீட்டிலேயே வச்சிட்டு வந்துட்டேன். இப்போதைக்கு ஆங்கிலத்துல உழுதுக்கறேன்" என்று உழுதுவிட்டுப் போய்விடுகிறார்கள். இதில் பல, தங்கிளிஷில் வேறு. kodumaidaa, saami. இன்னொன்று, அண்மையில் கலந்து கொண்ட சில விவாதங்களில் என்னை நோக்கி ஆங்கிலத்தில் கேள்விக் கணைகள் தொடுக்கப் பட்டதால் அவற்றிற்கு நானும் ஆங்கிலத்திலேயே விடையளிக்க வேண்டி வந்தது. அதற்கான எதிர்வினைகள் மறுபடியும் ஆங்கிலத்தில். இப்படியாக, தமிழில் எழுதப்பட்ட ஒரு பதிவை பற்றி ஆங்கிலத்தில் விவாதம் நடந்து கொண்டிருந்தது. நானும் அதற்கு உடந்தை :) ஒருவேளை நான் மொழி மாறாமல்் தமிழிலேயே தொடர்ந்திருக்க வேண்டுமோ என்னவோ. பொதுவாக, கேள்வி எந்த மொழியில் கேட்கப்படுகிறதோ அதே மொழியில் விடை தருவது நாகரீகமான செயல் எனபதானால்தான் நான் ஆங்கிலத்திற்கு மாறினேன். அப்படிப் பார்த்தால், ஒரு தமிழ்ப்பதிவுக்கு ஆங்கிலத்தில் பின்னூட்டம் விடுவதும் அநாகரீகமானதுதானே? இந்த மாதிரியான semantic பிரச்சனைகள் பற்றி ஆழ்ந்து யோசிக்க வேண்டும்.
கலப்பையை வீட்டில் வைத்து விட்டேன் என்று ஆங்கிலத்திலோ தங்கிளிஷிலோ எழுதுபவர்கள், மற்றும் தமிழில் உள்ளிட வேண்டுமென்றால் அ, ஆ, இ, ஈ என்று label செய்யப்பட்ட keyboard வைத்திருக்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டிருப்பவர்கள் - இவர்களுக்காகவே இப்பதிவு. முதல் வகையைச் சேர்ந்தவர்களுக்கும், இரண்டாம் வகையைச் சேர்ந்தவர்களுக்குமுள்ள வேறுபாடு, ஐ.ஐ.டி மாணவர்களுக்கும் சி.ஐ.டி மாணவர்களுக்குமுள்ள வேறுபாட்டைப் போன்றது என்பதால் இருவருக்கும் வெவ்வேறு ஆலோசனைகள் வழங்குகிறேன். (சி.ஐ.டி. ரொம்பல்லாம் மோசம் கிடையாதுங்க, நானும் அதன் வெளியீடுதான் :) )
முதலில், இரண்டாம் வகையைச் சேர்ந்தவர்களுக்கு ஒரு நற்செய்தி. A, B, C, D என்று label செய்திருக்கும் ஆங்கில keyboardகளைக் கொண்டே தமிழில் தட்டச்சு செய்யலாம். இப்பக்கத்திலுள்ள சுரதாவின் புதுவை தமிழ் எழுதியைக் கொண்டு நீங்கள் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து, உங்களுக்கு வேண்டிய தமிழ் வாக்கியங்களைப் பெறலாம். அவற்றை வெட்டி, வேண்டிய பின்னூட்டப் பெட்டியில் ஒட்டி, சமர்ப்பித்தால், உங்கள் பின்னூட்டங்களும் தமிழிலேயே இடப்படும். தொடக்கத்தில் தட்டச்சுவது கடினமாக இருக்கும், நாளடைவில் பழகி விடும். அதற்குப் பிறகு நீங்களும் கலப்பையைத் தூக்க ஆரம்பித்து விடலாம்.
இப்போது முதல் வகை. எனக்கு நிஜமாகவே புரியாத புதிர் - நீங்களும் மேலே குறிப்பிட்ட வழிமுறையைப் பின்பற்றி தமிழிலேயே பின்னூட்டமிடலாமே, ஏன் செய்வதில்லை? கலப்பைக்கு பழகிப்போனதால் வேறு நிரலிக்கு மாறிக் கொள்ள இயலவில்லையா? ் அப்படியென்றால், மற்றும் நீங்கள் பயன்படுத்தும் கணினியில் Firefox உலாவி நிறுவப்பட்டிருக்கிறதென்றால், என்னால் கலப்பையில்லாமலேயே தமிழில் உழுவதற்கு ஒரு உத்தியைப் பரிந்துரைக்க முடியும். அதுவே, தமிழாவின் TamilKey Firefox Extension. 10KBக்கும் குறைவாகவே இருப்பதால், இதை ஒரு நொடியில் தரவிறக்கி நிறுவ முடியும். நிறுவிய பின், கலப்பையைப் போன்றே, இதைக் கொண்டும் உலாவியில் நேரடியாகத் தமிழில் உள்ளிடலாம். அஞ்சல் (romanized) மற்றும் தமிழ்நெட் 99 ஆகிய இரு வடிவமைப்புகள் இதில் வழங்கப்பட்டிருக்கின்றன. Ctrl+F12 அழுத்தினால், உங்கள் உள்ளீடுகள் அஞ்சல் முறையில் தமிழில் பதியும். F12 அழுத்தினால் தமிழ்நெட்99 முறையில் தமிழில் பதியும். F9 விசையை வைத்து ஆங்கிலத்திற்கும் தமிழுக்கும் மாறிக் கொள்ளலாம். விண்டோஸ் இயங்கு தளத்தில் மட்டுமல்லாது லினக்ஸ் போன்ற பிற இயங்கு தளங்களிலும் இதைப் பயன்படுத்தலாம். Chatzilla அரட்டை நீட்சியில், இதைக் கொண்டு தமிழில் chatting செய்யலாம். உங்கள் Gmail கணக்கிலிருந்து தமிழிலேயே மின்மடல்கள் எழுதி அனுப்பலாம். இது போன்ற வசதிகளால், ் பயணத்தின் போதும் பொது இணைய மையங்களிலிருந்து உங்களால் தமிழ்க்கணிமையைத் தொடர வாய்ப்பிருக்கிறது (Firefox உலாவி மட்டும் இருந்துவிட்டால்).
சனி, ஏப்ரல் 22, 2006
ஒரு வழக்கமான பதிவு
காணாமல் போயின
நதியும் குளமாகி
மறைந்தே போனது
முல்லையும் மருதமும்
பாலையாய் ஆனது
குறிஞ்சியோ விரைவாக
சமவெளியாய் மாறுது
விலங்குகள் வேட்டையால்,
மெதுவாய் அழிந்தன
எஞ்சியவை மரித்தன
உணவு நீரின்றி.
கடலின் நிறமும்
கருமையாகிப் போனதால்
மீன்களும் சுறாக்களும்
மிதந்தன நீரின் மேல்
தீப்பெட்டிக் கட்டடங்கள்
எங்கும் முளைத்தன
புகையின் மூட்டமும்
நாசியைத் துளைத்தது
இரவு பகலானது
இரைச்சல் மயமானது
மனிதரின் சாதனை
இவ்வுலகின் வேதனை.
ஞாயிறு, ஏப்ரல் 16, 2006
சுயநலவாதம்
வெள்ளி, ஏப்ரல் 14, 2006
காத்திருந்து..... காத்திருந்து.......
வேளை கெட்ட வேளையில்
உனை miss பண்ணும் இதயத்தை
சாந்தப் படுத்திடவே
குறுஞ்செய்தியும் அனுப்பி
அழைப்பும் விடுத்தேன்,
கிடைத்ததா, கண்மணியே?
காத்திருக்கேன்் இங்கு
தூதுவனை நோக்கியே,
வருவாய் நீயென்றே.
டிவியும் சலித்ததின்று,
இன்னிசையும் இறைச்சலாய்
தோன்றுதே, என்ன செய்வேன்?
சீக்கிரம் வந்துன்னைச்
சீண்டுமின்பம் தா,
தாமதிக்காதே, அன்பே.
அதுவரை வரிகளை
ஒடித்துக் கவிதை போல்
வடித்து வலையேற்றுவேனே.
வெள்ளி, ஏப்ரல் 07, 2006
வர்ணாஸ்ரமமக் கொள்கை
இந்தியாவிலேயே பகுத்தறிவின் பாசறையாக விளங்கும் தமிழ்நாட்டில், ஒரு முன்னணி நாளிதழ் அதன் வாசகர்களுக்கு, இத்தேர்தலில் போட்டியிடும் சில பெண் வேட்பாளர்களைப் பற்றிய சில முக்கியத் தகவல்களை, 'நச்சென்று' வழங்கியுள்ளது. அத்தகவல்களைக் காண, கீழேயுள்ள படத்தைச் சொடுக்குக. (அது வழங்கியுள்ள அதிமுக்கியத் தகவல்களை சிவப்புக் கோடிட்டுக் காட்டியுள்ளேன்.)வாழிய செந்தமிழ், வாழிய நற்றமிழர், வாழிய பாரத மணித்திரு நாடு!
வியாழன், ஏப்ரல் 06, 2006
விரதம்
விஞ்ஞான வளர்ச்சிகளால் சாத்தியமடைந்த இன்றைய நகர்ப்புற, நவீன வாழ்க்கை முறைகள் இன்று அனைவராலும் ஆவலுடன் ஏற்றுக் கொள்ளப்பட்டு, மனித இனத்தின் முன்னேற்றத்திற்கான அறிகுறிகளாக முன்வைக்கப்படுகின்றன. இத்தகைய வசதியான வாழ்வு முறைகளால், வாழ்க்கை முன்பை விட சுலபமடைந்திருக்கிறதா என்ற கேள்விக்கு தெளிவான விடைகள் கிடைப்பது அரிதே.
உடலுழைப்பு குறைந்திருக்கிறது என்பது உண்மையே. ஆனால் இத்தகைய மாற்றத்தால் மக்களுக்கு உடற்பயிற்சி குறைந்து போய், அது் பல மருத்துவச் சிக்கல்களை உண்டாக்குவதையும் காண முடிகிறது. 1000+ cc எஞ்சின் (உந்துபொறி என்று தமிழில் அழைக்கலாம்) கொண்ட சொந்த வாகனங்கள், உலகின் மூலை முடுக்குகளையெல்லாம் இணைக்கும் 6/8 வழிப்பாதைகள் கொண்ட நெடுஞ்சாலைகள், தும்மி முடிப்பதற்குள் கொண்டு சேர்ப்பிக்கும் ஆகாய விமானங்கள், என்று உலகில் பயணம் செய்வது மிக எளிதான ஒரு செயலாகி விட்டது. அதற்கு நாம் கொடுக்கும் விலை global warming எனப்படும் உலகளாவிய சூடேற்றமாகும். இதனால் உலகின் பனிப்பாறைகள் உருகி, கடல்களின் உயரம் பெருகி, ஒரு நூறாண்டுகளுக்குள்ளாகவே பல தீவுகள், மாகாணங்கள் ஆகியன கடலால் விழுங்கப்பட்டு, இருந்த இடம் தெரியாமல் மறையப்போகும் அபாயம் நம்மை அச்சுறுத்துகிறது. குளிர்சாதனப் பெட்டிகள், குளிர்பதனப்பெட்டிகள் ஆகியவை உண்மையிலேயே வரப்பிரசாதம்தான், அதுவும் வெப்பநிலை அதிகமுள்ள நம்மைப்போன்ற நாட்டினருக்கு. ஆனால், ஆவை வெளியிடும் வாயுக்களால், நம் உலகின் ஓசோன் காற்று மண்டலம் ஒரு சைக்கிள் டியூப் பஞ்சர் ஆவது போல் பஞ்சர் ஆகிக் கொண்டிருக்கிறது. இதனால் சூரியக் ஒளியிலுள்ள சில அபாயகரமான கதிர்கள் நம்மை நேரடியாகத் தாக்கும் அபாயமேற்பட்டிருக்கிறது. கிரிக்கெட் வீரர்கள் தங்கள் முகத்தில் களிம்புகள் பூசிக் கொண்டு களத்திற்கு வருவது இத்தகைய அபாயத்திலிருந்து தம்மைக் காத்துக்கொள்ளுவதற்கே.
இவ்வாறாக, எது முன்னேற்றம், எங்கே முன்னேற்றம் என்ற கேள்விக்கு விடை மழுங்கலாகத்தான் நமக்குக் கிடைக்கிறது. இதனால் மட்டுமே, முன்னேற்றம் என்ற பெயரில் முன்வைக்கப்படும் எந்தவொரு மகா / மெகா திட்டத்தையும் ஒரு சந்தேகத்துடனே பார்க்க வேண்டியது அவசியமாகிறது. மனித இனத்தின் / உலகின் வருங்காலத்திற்கு பாதிப்பு என்ற கவலையாவது தொலைநோக்குப் பார்வை என்ற வகையில் வரலாம். அது அனைவருக்கும் எப்போதும் இருக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமுமில்லை. ஆனால், நம் நாட்டில் மேற்கொள்ளப்படும் மகா திட்டங்களால் பலருக்கு உடனடி பாதிப்பு என்பது தெள்ளத் தெளிவான ஒரு உண்மை. இருந்தும் வருடா வருடம் திட்டங்கள் தீட்டப்படுகின்றன. கோடிகள் விரயமாகின்றன. தங்க நாற்கரங்கள் அமைக்கப்படுகின்றன. சேது சமுத்திரக் கால்வாய்கள் அகழப் படுகின்றன. அடுக்கு மாடிக் கட்டடங்கள் எழுப்பப் படுகின்றன. பாலங்கள் கட்டப்படுகின்றன. அணைகள் உயர்த்தப்படுகின்றன. அணு உலைகள் முடுக்கி விடப்படுகின்றன. சுரங்கங்கள் தோண்டப்படுகின்றன. காடுகள் அழிக்கப்படுகின்றன.
இவை மேற்கொள்ளப்பட்டு, திட்டம் தொடங்கும் நாள் வரை அது பற்றிய ஒரு முன்னறிவிப்பு கூட அளிக்கப்படாமல், அப்பகுதிகளில் காலகாலமாய் வாழ்ந்து வந்த விவசாயிகள், பழங்குடி இனத்தவர், குடிசை வாழ் மக்கள், மீனவர்கள், சிறுவணிகர்கள் என்று நம் நாட்டில் taken for granted ஆசாமிகள் ஏராளம். தம் அன்றாடப் பிரச்சனைகளே தம்மை மூழ்க்கடிக்கும் நிலையில், இவர்கள் தங்கள் உரிமைக்காகப் போராடும் சக்தியை முற்றிலும் இழந்து நிற்கிறார்கள். கல்லாமை, வெளியுலகத் தொடர்பின்மை போன்ற போதாமைகளாலும் இவர்களால் தங்கள் உரிமைகளை முழுமையாக நிலைநாட்ட முடியாமல் போய்விடுகிறது. இத்தகைய இயலாமைகளால் அவதிப்படும் இப்பெரும் மக்கள் கூட்டத்தை, அரசும், வர்த்தகமும் எளிதில் கிள்ளுக்கீரைகளாகக் கிள்ளி எறிந்து விட முடிகிறது. தூசித் தட்டுவதைப் போல் தன் ஒட்டடைக் குச்சிகளான காவல் துறை, மற்றும் நீதித்துறை ஆகியவை கொண்டு இவர்களை விரைவில் அப்புறப்படுத்த முடிகிறது.
இத்தகைய நடவடிக்கைகளுக்கு, படித்த மக்கள் கூட்டமான நம்மைப் போன்றோரும் உடைந்தையே. ஐந்து நிமிடங்களுக்கு மின்சாரம் தடைப்பட்டுப் போனால், நமக்கு வாழ்க்கையே ஸ்தம்பித்து விடுகிறது. அமெரிக்காக் காரனிடமிருந்து அணுசக்திக்கான எரிபொருள் கிடைக்குமா என்று யோசிக்கிறது புத்தி. ஒன்றிரண்டு அடிகள் அகலமுள்ள வாகனங்களுக்கு பதிலாக ஐந்தாறு அடிகள் அகலமுள்ள வாகனங்களில் அனைவரும் செல்வதால் ஏற்படும் நெரிசலால் பயண நேரம் மும்மடங்காகப் பெருகியதால், சாலைகளை அகலப்படுத்தக் கோரி Letters to the Editor எழுதத் தூண்டுகிறது நம் பொறுமையின்மை. நம் 24 மணி நேர தண்ணீர் தேவைகள் பூர்த்தியடைய, கங்கையையும் காவிரியையும் இணைக்குமாறு அனைத்து ஊடகங்களிலும் அழுத்தங்கள் வேறு. விமான நிலையங்கள் பேருந்து நிலையங்கள் போலாகி விட்டனவே / விடுமே என்றெல்லாம் ஆழ்ந்த கவலைகள் நமக்கு. அவற்றை விரிவாக்கக் கோரி தலையங்கங்கள், தொலைக்காட்சி நிலையத்திற்கு குறுஞ்செய்திகள், மற்றும் இத்தகைய அரசு திட்டங்களுக்கு கைத்தட்டி ஆரவாரங்கள், ஆர்ப்பரிப்புகள்...... பெங்களூருக்கு ஏழு மணி நேரம் எடுத்துக் கொண்ட சாலைவழிப் பயணத்தை மூன்று மணி நேரத்திலேயே முடிக்க ஆசை, ஆகவே நெடுஞ்சாலைத் திட்டத்திற்கு நிபந்தனைகளற்ற ஆதரவு....... இப்படி நம் நிலைப்பாட்டில் சுயநலம் ஒன்றையே காணமுடிகிறது. இத்திட்டங்களால் தூசி தட்டப்படுவதைப் போல் அப்புறப்படுத்தப் படும் மக்களைப் பற்றிய கவலையோ, அக்கறையோ சிறிதளவுமில்லை நமக்கு.
நல்லவேளையாக நம்மைப் போலல்லாமல், சில படித்த அறிவுஜீவிகள், அப்பாவி மக்களுக்கு ஆதரவாக களத்தில் இறங்கியிருக்கிறார்கள். சுந்தர்லால் பகுகுணா, பாபா ஆம்தே, அன்னா ஹசாரே போன்ற நல்லுள்ளம் படைத்தவர்கள் வரிசையில் கடந்த இருபது ஆண்டுகளாக மேதா பட்கர் பாதிக்கப்பட்ட மக்களை ஒன்று் திரட்டி, நர்மதா அணைத் திட்டத்தை எதிர்த்து போராடி வருகிறார். இவரது போரட்டத்திற்கு அருந்ததி ராய் போன்ற பிரபலங்களின் ஆதரவும் உண்டு. போராட்டத்தின் உச்சக் கட்டமாக, கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக உண்ணாவிரதம் மேற்கொண்டு, அரசை அதன் திட்டத்தை மறு பரிசீலனை செய்யும் நிலைக்குத் தள்ளும் முயற்சியில் இறங்கியுள்ளார் மேதா. அவரது இப்போராட்டத்தை மனப்பூர்வமாக ஆதரிப்பதோடு, இத்தகைய அணைத்திட்டங்களை அவசியமாக்கும் நம் நுகர்வுப் பழக்கங்களையும் கேள்விக்குள்ளாக்க வேண்டும். நம் தேவைகளை சற்று குறைத்துக் கொண்டிருந்தால்், இன்று மேதாவின் உண்ணாவிரதத்திற்குத் தேவையிருந்திருக்காதோ என்னவோ.