இடம்: கோத்தா மாவட்டம், பீஹார் (இப்போது , ஜர்கண்ட்)
வரலாற்றுப் புகழ் பெற்ற தாஜ்மஹாலைத் தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது. நம் நாட்டின் அவலங்களுக்கிடையே முளைத்த பிரம்மாண்டமான வெளிப்பாடுகளில் அதுவும் ஒன்று. அதைப் போலவே ஒரு பிரம்மாண்டமான வெளிப்பாடுதான் ராஜ்மஹால் - ஆசியாவிலேயே மிகப் பெரிய ஒற்றைக் குழி, திறந்த வெளி நிலக்கரிச் சுரங்கம் (Asia's largest single-pit, opencast, coal mine). இதன் மற்றொரு சிறப்பு, இது அமைக்கப்பட்ட இடம் இந்தியாவிலேயே வறுமை அதிகமுள்ள (மற்றும் இரயில் போக்குவரத்தால் இணைக்கப்படாத) மாவட்டங்களில் ஒன்றாகும். உடனே இதன் முக்கியத்துவம் நமக்குப் புலப்படக் கூடும். "மிகப் பெரிய வளர்ச்சித் திட்டம் ஒன்று, நாட்டின் மிக வறுமையான பகுதிகளில் இடம்பெறுவதனால் அங்குள்ள பொருளாதார நிலையே மாற்றமடைந்து அனைவரும் சுபிட்ச நிலையை எட்டுவதற்கான வலுவான காரணங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன" என்றெல்லாம் 'நிபுணர்' மனப்பான்மையுடன் சிந்திக்கலாம். ஆனால் அதற்கு ஒரு சிறு இடையூறாகத் திகழ்வது அங்குள்ள நடைமுறை நிலவரம்.
பதினெட்டு பட்டி கிராமங்களையும் (அவற்றில் வாழும் ஆயிரக்கணக்கான மக்களையும்) அப்புறப்படுத்திவிட்டு, 1989ஆம் ஆண்டு இத்திட்டம் வெற்றிகரமாகத் துவக்கப்பட்டது. கனேடிய அரசு வழங்கிய கடனால் மேற்கொள்ளப்படும் திட்டம் என்பதால் Met-Chem என்னும் கனேடிய நிறுவனத்திற்கே இதன் 'ஆலோசகர் - கூட்டாளி' என்ற பொறுப்பு வழங்கப்பட்டது. அதன் ஆலோசனைப்படி முற்றிலும் இயந்திரமயமான ஒரு சுரங்கம் நிறுவப்பட்டது. சுமார் ஆயிரம் கோடி செலவான இத்திட்டத்திற்கு, Met-Chem நிறுவனத்திற்குத் தரப்பட்ட தொகை நூறு கோடிகளுக்கு மேல். மேலும், இத்திட்டத்திற்கான இயந்திரங்களைத் தருவிப்பது போன்ற பொறுப்புகளையும் Met-Chemஏ பார்த்துக் கொண்டதால், அந்த நடவடிக்கைகளிலிருந்தும் நல்ல வருமானம் ஈட்டியிருக்கக் கூடிய வாய்ப்பிருக்கிறது. கிட்டத்தட்ட இந்நிறுவனத்திற்கு நம் நாட்டின் வளங்களைச் சுரண்டுவதற்கான ஏகபோக உரிமை வழங்கப்பட்டது போலத்தான்.
இப்போது வேலைவாய்ப்பு நிலவரம் - முற்றிலும் இயந்திரமயமான இச்சுரங்கம் சுமார் 2500 வேலைகளே வழங்கக்கூடியதாயிருக்கிறது.. அதிலும், இயந்திரங்களை இயக்குவது போன்ற சிறப்புத்திறமைகள் தேவைப்படுவதால், பெரும்பாலும் வெளியாட்களையே நியமிக்க வேண்டிய கட்டாயம். ஆகவே, அப்புறப்படுத்தப்பட்ட மக்களில் சிலருக்கே வேலை வாய்ப்பு. மேலும், இச்சுரங்கத்தின் ஆயுட்காலம் சுமார் 40 ஆண்டுகளே என்பதாலும், மற்றும் இங்குள்ள விளைநிலங்கள் அனைத்தும் இத்திட்டத்தால் விழுங்கப்பட்டு விட்டதாலும், 40 ஆண்டுகளுக்குப் பிறகு இத்திட்டத்தால் யாருக்கும் வேலைவாய்ப்பும் கிடையாது, விவசாய சாத்தியங்களும் மூடப்பட்டு விட்டன. இத்திட்டத்தால் சுற்றுப்புறத்திலுள்ள சிறுதொழில்களுக்கும் எந்தவொரு ஆதாயமும் கிடையாது. பெரும்பாலும் இறக்குமதி செய்யப்பட்ட இதன் இயந்திரங்களுக்கு ball bearing மாற்றுவதற்குக் கூட வெளிநாடுகளிலிருந்துதான் பொருள்கள் வந்தாக வேண்டும்.
Dont be a Luddite! என்று என் மனசாட்சியே என்னைச் சுடுவதால், நாட்டின் தேவையான நிலக்கரி மற்றும் அது அளிக்கும் மின்சார சக்தி போன்றவைகளைப் பாராட்ட முயற்சிக்கிறேன். NTPCயின் ஃபரக்கா (Farakka) மற்றும் கெஹல்காவ் (Kahalgaon) ஆகிய இடங்களில் உருவாகி வரும் மின் உற்பத்தி நிலையங்களுக்குத் தேவைப்படும் நிலக்கரியை வழங்குவதற்கே இந்த ராஜ்மஹால் சுரங்கம் அமைக்கப்பட்டது. சுரங்கம் உருவாகி நாளொன்றுக்கு பதினொன்றாயிரம் டன்கள் நிலக்கரியை உற்பத்தி செய்து கொண்டிருந்தாலும், இந்த நிலக்கரியை உள்வாங்கிக் கொள்ள வேண்டிய மின் நிலையங்கள் இன்னும் முழுமையடையவில்லை. ஆகவே லட்சக்கணக்கான டன்கள் விற்க முடியாமல் குவிந்து கொண்டிருக்கின்றன, தீ விபத்து போன்ற அபாயங்களையும் தோற்றுவித்துக் கொண்டு. என்றாவது இந்த நிலக்கரியை விற்க முடிந்தாலும், நாட்டிற்கு அது பெருஞ்செல்வத்தை வழங்கக்கூடுமல்லவா என்று யோசித்தால் அதற்கும் வாய்ப்புகளில்லை போலிருக்கிறது. இச்சுரங்கத்திலிருந்து ஒரு டன் நிலக்கரி தயாரிக்க ரூ.450 ஆகிறதாம். ஆனால் அதை ரூ.250 என்ற விலைக்குத்தான் விற்க முடியுமாம்.
ராஜ்மஹால் - ஆசியாவிலேயே மிகப்பெரிய ஒற்றைக் குழி நிலக்கரிச் சுரங்கம் என்று காலரைத் தூக்கி விட்டுக் கொள்வோம்.
(Update:
1. Year 2001: Met-Chem was (or at least tried to get) back in action: http://www.hinduonnet.com/businessline/2001/06/16/stories/02164684.htm
http://www.thehindubusinessline.com/2006/05/27/stories/2006052703920900.htm
3. Year 2006: From ECL’s website:
http://easterncoal.gov.in/press.html
)
8 கருத்துகள்:
வாய்ஸ்,
இந்த கட்டுரையும் சரி.இதற்கு முந்தைய மிளகாய் (சாமி வத்தல்) விஷயமும் சரி.
அனைவரும் சிந்திக்கவேண்டிய விஷயங்கள்.பெரும்பான்மை மக்களை பாதிக்கக்கூடிய விஷயங்களை பேசாமல் மிகச்சிறுபான்மை மக்களையும் அவர்கள் பிரச்சினைகளையும் பேசி நேரத்தை வீணடிக்கிறொம்(நானும்தான்)..
வெட்கி தலைகுனிகிறேன்.
நட்சத்தர வாரத்தை அருமையாக கொண்டு செல்கிறீர்கள்.வாழ்த்துக்கள்
முத்து, வாழ்த்துக்களுக்கு நன்றி :)
பிரச்சினைகளில் பெரும்பான்மை சிறுபான்மை என்றெல்லாம் கிடையாது. பாதிக்கப்பட்ட எல்லாருடைய பிரச்சினைகளும் பேசப்பட வேண்டும். அதில் வெட்கப்படுவதற்கு ஒன்றுமில்லை என்பது என் கருத்து.
450 ரூபாய் செலவழித்து 250 ரூபாய் கிடைக்கும் திட்டத்திற்கு ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதார சொத்துக்களையும் உரிமைகளையும்(ஏழைகள், எதிர்க்க திராணியற்றவர்கள் என்பதாலும்) பிடுங்கிகொண்டு நாட்டின் உயிர் நாடியான கிராமங்களை அழிக்கும் இத்தகைய செயல்களை என்னவென்பது? பணப்பேராசை என்னும் பேய், நாட்டை ஆள்வோரை முழுமையாக பீடித்து விட்டது,
நிறைய விசயங்கள் கொண்டுள்ள பதிவு.
மிக்க நன்றி.
VOW, தங்கள் பதிவுகளின் (blog post) எழுத்து அளவை அதிகரித்தீர்களெனில் படிப்பதற்கு வசதியாக இருக்கும் - தற்போதுள்ளது மிகச் சிறிதாகப் படுகிறது.
ஸ்ரீ, சிவபாலன், அனானி, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
எழுத்துருவைப் பெரிதாக்குவதில் தற்போதைக்கு சில பிரச்சனைகள் உள்ளன. தயவு செய்து உங்கள் உலாவியில் பெரிதாக்கிப் படித்துக் கொள்ளவும்.
மிக உபயோகமான தகவல்கள் சிந்திக்க வைக்கின்றன உங்களின் பதிவுகள்.
முடிவெடுக்கும் நிலையில் உள்ளவர்களின் மெத்தனப் போக்கும், accountablility என்பதே நம் எல்லொரிடமும் ஒட்டு மொத்தமாக இல்லாமல் இருப்பதற்குரிய காரணமும் எனக்குப் புரியவேயில்லை. உங்களுக்கு...?
கருத்துரையிடுக