இடம்: இராமநாதபுரம் மாவட்டம், தமிழ் நாடு
ராமசாமி தனது நிலத்தில் விளைந்த 40கிலோ மிளகாய்களை இரு மூட்டைகளில் கட்டிக் கொண்டு நம் தரகரிடம் விற்பனைக்குச் செல்கிறார். தரகர் மூட்டையில் கைவிட்டு, ஒரு கை நிறைய மிளகாய்களை அள்ளி எடுத்து, தம் பக்கமாகப் போட்டுக் கொள்கிறார். அதற்குப் பெயர் 'சாமி வத்தல்' - விலை கொடுக்காமல் பெற்றுக் கொள்ளப்படும் சுமார் பத்து ரூபாய் மதிப்புள்ள மிளகாய்கள். தரகர் கிலோவுக்கு பத்து ரூபாய் என்று விலையை நிர்ணயிக்கிறார். அதற்கு மேல் தனக்கு 5% (ரூ.20) கமிஷன் வேறு எடுத்துக் கொள்கிறார். பிறகு, மூட்டைகள் எடை போடப்படுகின்றன. தரகரின் தராசுகள் மொத்தம் முப்பத்தியாறு கிலோக்களையே காட்டுகின்றன. இறுதியில், முப்பத்தியிரண்டு கிலோக்களுக்கே விலை கொடுக்கப்படுகிறது. இது போல் ராமசாமி, இன்னமும் ஐந்து முறை தரகரிடம் வருகை தந்து, தனது 200கிலோ விளைச்சலையும் இவ்வகையிலேயே ('சாமி வத்தல்' சடங்கு உட்பட) விற்று முடிப்பார், ரூ.1600க்கு.
ராமசாமியிடம் கிலோவுக்குப் பத்து ரூபாய் விலை பேசிய தரகரின் வருமான விவரங்களைப் பார்போம். அவர் ஏற்றுமதி செய்வாரானால் அம்மிளகாய்களுக்கு ரூ.20,000 வரை வசூலிக்க முடியும். சென்னை / கேரளச் சந்தைகளில் விற்றாலும் கிலோவுக்கு 25இலிருந்து 40 ரூபாய் வரை பெற முடியும். சாமி வத்தல் / எடை போடும் மோசடிகளால் பெறப்பட்ட கொள்ளை லாபம் வேறு. ராமசாமியைப் போலவே இத்தரகரை நம்பியிருக்கும், அவரிடமே ரூ.3000 கடன் பெற்று முதலீடு செய்து, இறுதியில் ரூ.1600 மட்டுமே வருமானம் சம்பாதிக்கும் விவசாயிகள் நூற்றுக்கணக்கானோர்.
மேற்கூறிய தரகரைப் போல் எழுபது பேர், மேற்கூறிய விவசாயிகளைப் போல் ஆயிரக்கணக்கானோர் - இதுவே உங்கள் இராமநாதபுரம் மாவட்டம்.
**********
மீசல் - மனித நாகரீகத்திலிருந்து 40கி.மீ. தொலைவிலுள்ள ஒரு கிராமம். இப்படி கண்காணாத இடத்திலிருப்பதிலும் சில வசதிகள் உள்ளன. உ-ம், கொத்தடிமைத்தனத்தைத் தங்கு தடையின்றி கடைபிடிக்க முடியும், எந்த விதமான குறுக்கீடுகளுமின்றி.. இங்குள்ள நிலப்பிரபுக்களிடம் கடன் வாங்கிய கடைநிலை மக்களான சக்கிலியர் என்னும் வகுப்பினர்தான் இதில் பலிகடாக்கள்.
'பத்து ரூபாய் வட்டி' எனப்படும் நூறு ருபாய் கடனுக்கு, மாதத்திற்குப் பத்து ரூபாய் வட்டி (120% வருடாந்திர வட்டி) என்பதே இங்கு எழுதப்படாத விதி. வாங்கும் கடனுக்கு suretyயாகத் தரப்படுவதுதான் இந்த அடிமைத்தனம். அதாவது, ஒரு சக்கிலியர் கடன் வாங்கிய பிறகு வேறு எங்கும் பணியாற்ற முடியாது. கடனை அடைக்கும் வரை (நிலவும் வட்டி விகிதத்தில் இது next to impossible என்பதை விளக்கத் தேவையில்லை) கடன் கொடுத்த நிலப்பிரபுவுக்கே தனது உழைப்பை வழங்க வேண்டும். இதில் தாம் ஏதோ பெரிய தாரள குணம் கொண்டவர்களாகக் தோற்றமளிக்கும் வண்ணம், நாளொன்றுக்குப் பன்னிரண்டு மணி நேரம் வேலை வாங்கப்படும் இக்கொத்தடிமைகளுக்கு, மிகப்பெரியத் தொகையான வருடத்திற்கு ஆயிரம் ருபாய் சம்பளம் வழங்குதல் வேறு. அதோடு, நேற்றைய மீந்து போன உணவு போன்ற கிம்பளங்களும் உண்டு. 10 Best places to work for போன்ற கணக்கெடுப்புகளில் பங்கு பெற இந்த எஜமானர்கள் விண்ணப்பித்துப் பார்க்கலாம்!
இவ்வாறு அடிமைத்தனத்தில் சிக்கி வாடும் சக்கிலியர் இனத்தவர்களைப் பற்றி: 'பூச்சி', 'அடிமை', என்றெல்லாம் சர்வ சாதாரணமாகப் பெயர் வழங்கப்பட்டிருக்கும் இவர்களது மொத்த உடைமைகளின் மதிப்பைக் கணக்கெடுத்தால் சில நூறு ரூபாய்களை மிஞ்சாது. எஜமானர்கள் வீட்டிலிருந்து கொண்டு வந்த மீந்து போன பண்டங்களே அவர்களது பிரதான உணவு என்பதால், சமையல் என்பது அவர்களுக்குத் தேவைப்படாத, மற்றும் வசதிப்படாத ஒன்றே. ஆனால் அவர்களது குடும்ப அட்டைகளிலோ, "இரண்டாவது gas cylinder உள்ளதா?" என்றெல்லாம் அபத்தமான கேள்விகள் கேட்கப்பட்டிருக்கும். (Adding insult to the injury). புழங்கும் சாதியமைப்பில், இருப்பதிலேயே மிகவும் கடைநிலையிலிருப்பவர்களாகக் கருதப்படும் இவர்களை நோக்கி மற்ற தலித் இனத்தவர்களும் தீண்டாமை முறையைக் கடைபிடிக்கின்றனராம். இவர்களுக்கு முடி திருத்த, வேறு தாழ்த்தப்பட்ட இனத்தவர்களும் முன்வர மாட்டார்களாம்.
தமிழ் நாடு அரசின் அறிக்கைகளின் படி, தமிழகத்தில் கொத்தடிமைத்தனம் என்பது ஏறக்குறைய மறைந்து போய்விட்ட, அங்கொன்றும் இங்கொன்றுமாக மட்டுமே காணப்படக்கூடிய ஒரு முறையாகும். ஆனால் உச்ச நீதி மன்றம் நியமித்த ஒரு விசாரணை கமிஷனின் விவரப்படி, தமிழகத்தில் பத்து இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் (அதாவது 2% தமிழர்கள்) அடிமைத்தளைகளால் பிணைக்கப்பட்டுள்ளனராம். மேலும் இந்தக் கமிஷன் அறிக்கை கூறுவது: "மாநில அரசும் மாவட்ட ஆட்சியாளர்களும் இது குறித்து அளிக்கும் தகவல்கள் ஒன்றோடு ஒன்று உடன்படுவதில்லை. பெரும்பாலும் இத்தகவல்கள் உற்பத்தி செய்யப்பட்டதாகவே தோன்றுகின்றன."
(குறிப்பு: இதன் மூலக் கட்டுரைகள் எழுதப்பட்ட தொண்ணூறுகளில் ஒன்று பட்ட இராமநாதபுரமாக இருந்து பிறகு அது இரண்டாகப் பிரிக்கப்பட்டிருப்பதை நான் அறிவேன். மாவட்டத்தின் பெயரைத் தவிர இதர விவரங்கள் இன்றைக்கும் பொருந்தக்கூடும் என்பது என் அனுமானம்)
18 கருத்துகள்:
அய்யா,
அது மீமிசல் என்ற கிராமமா, அல்லது மீசல் என்றே ஊர் இருக்கிறதா? நானொரு சிவகங்கை மாவட்டக் காரன், அதனால் கேட்கிறேன்.
:-(
இராம.கி., நான் படித்த ஆங்கிலக் கட்டுரையில் Meesal என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. 'Located 40km from nowhere' என்பது அதைப் பற்றிய மேலதிகத் தகவல் :)
விவசாயிகளின் சோகம் ஒரு தொடர்கதை. பருவநிலை, சந்தை விலை என்று பல காரணிகள் இருந்தாலும் இந்த இடைத்தரகர்களின் கொடுமையே அதில் முக்கிய பங்கு வகிப்பது.
மனது கனக்கிறது
திரு டி.பி.ஆரின் என்னுலகம் பதிவில் தூத்துக்குடி மீனவ சமுதாயத்தில் இத்தகைய கந்துவட்டிக்காரர்களின் கொத்தடிமை பற்றி விவரித்திருக்கிறார். மீச ல் (மிமீசல் ?) சாதிக் கொடுமையையும் கூடுதலாக கொண்டுள்ளது. மாதம் மும்மாரி பெய்கிறது என்று மந்திரிகள் சொல்வதை நம்பும் இராஜாக்கள் நாம் :(
//அது மீமிசல் என்ற கிராமமா, அல்லது மீசல் என்றே ஊர் இருக்கிறதா//
அயயா நான் ராமநாதபுரத்துக் காரன்.
மீமிசல் என்பது ஒரு சிற்றூர். ராமநாதபுரத்தில் இருந்து தொண்டி வழியாகப் பட்டுக்கோட்டை செல்லும் வழியில் இந்த ஊர் இருக்கிறது.
நாகரீகமான உலகை விட்டுக் கொஞ்சம் தனிமைப்படுத்தப்பட்ட ஊர்தான் அது.
கிழக்குக் கடற்கரைச் சாலை கன்னியாகுமரி வரை அமைக்கப்படும் போது அந்த ஊர் வளர்ச்சி பெறும் என நினைக்கிறேன்.
மேலும், இடைத்தரகர்கள் பற்றிச் சொன்னதில் பெரும்பாலான தகவல்கள் மிகைப்ப்டுத்தப் பட்டுள்ளன என நினைகிறேன். நான் ஒரு வியாபாரக் குடும்பத்தைச் சார்ந்தவன் என்ற முறையில் எழுதிய இந்தப் பழைய பதிவு ஒன்றை வாசித்துப் பாருங்கள்.
கொத்தடிமை முறை இப்போ எவ்வளவு தீவிரமா இருக்குன்னு தெரியலை. ஆனா விவசாயி ஏமாத்தப்படுறதுன்றது இன்னும் தொடர்ந்துகிட்டு தான் இருக்கு. எங்க ஊருப் பக்கம்(விருதுநகர் மாவட்டம்) வியாபாரிங்க நேரா விவசாயியோட எடத்துக்கே போயி விளை பொருட்களை வாங்குவாங்க. இதுல ஒவ்வொருத்தருக்கும் ஏத்த மாதிரியான தராசை எடுத்துக்கிட்டு போவாங்க. வியாபாரப் போட்டியில கூடுதல் விலைய விவசாயிக்கு குடுக்க வேண்டியது வந்ததுன்னா எடையில போட்டு தாக்கிருவாங்க. சாதரணமா 100 கிலோ எடை போடுறாங்கன்னா அது 110-115 வரைக்கும் இருக்கும். போட்டுப் பாக்குறதுன்னு முடிவு பண்ணிட்டாங்கன்னா இந்த வித்தியாசம் கூடிரும். இந்த தராசுங்க அப்டியே பிடிச்சு வைச்ச மாதிரி எவ்வளவு போட்டாலும் ஒரே எடையக் காட்டிக்கிட்டு இருக்கும். எங்க ஊருல பொதுவுல ஒரு தராசு வாங்குறதுக்கு நாங்க பண்ண முயற்சி கடைசி வரைக்கும் கை கூடல.
இந்த பிரச்சனைகளுக்காக கவர்மென்ட்ல இருந்து ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் எல்லாம் அமைச்சி வைச்சிருக்காங்க. எவ்வளவோ நல்ல விசயங்கள் வீணாப் போறமாதிரி இதுவும் ஒரு மூலையில முடங்கிக் கிடக்கு.
உழவர் சந்தைகள் கூட இந்த ஒழுங்கு முறை விற்பனைக்கூடங்களோட ஒரு நீட்சியாத்தான் பார்க்க முடியும். குறைஞ்சது இந்த திட்டமாவது மறுபடியும் எந்திரிச்சி வரும்னு நம்புவோம்.
வாய்ஸ்,
நட்சத்திரம் ஆனதற்கு வாழ்த்துக்கள்!!
வாய்ஸ் இடைத்தரகர் தொல்லை எங்கும் உண்டு. இராணுவ தளவாடங்கள் வாங்குவதில் இடைத்தரகருக்கு பெரும் பங்கு போவதில்லையா, அத விடுங்க அமெரிக்காவில் வேலைக்கு சேருவதில் இடைத்தரகர் நிறைய லாபம் பார்ப்பதில்லையா? இடைத்தரகர் இல்லாம ஒப்பந்தகாரரா வேலைக்கு சேரவே முடியாது.
உழவர் சந்தை என்பது அருமையான திட்டம் விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் சரியான பலன் கொடுத்த திட்டம், இடைத்தரகை ஒழித்த திட்டம்.
இதை முந்தைய அரசு காழ்ப்புணர்ச்சியோடு நிறுத்தி உழவர்களுக்கு பெரும் தீங்கிலைத்தது தற்போதைய அரசு இத் திட்டத்தை முனைப்பாக செயல்படுத்த வேண்டும்.
இராம.கி, நன்மனம், சுதர்சன், நிலா, மணியன், மகேஸ், முனியாண்டி, கார்த்திக் மற்றும் குறும்பன், வருகைக்கும் கருத்துக்கும் நன்றி :)
சுதர்சன், உண்மைதான். பலர் உழவர் சந்தை போன்ற தீர்வுகளைக் குறிப்பிட்டுள்ளனர். அவற்றைப் பற்றிய நேரடித் தகவல் தெரிந்தால் நன்றாயிருக்கும்.
மணியன், நீங்கள் கூறுவது மிகச் சரி. மந்திரிகளும் (அவர்களின் அடிவருடிகளான) ஊடகங்களும் ஏற்படுத்தியிருக்கும் கவர்ச்சிகரமான சித்திரத்தை கல்லெறிந்து உடைக்கும் முயற்சிதான் இந்தப் பதிவுகள். யாரையும் சோகத்திலாழ்த்துவதல்ல என் நோக்கம் என்பதையும் தெளிவுப் படுத்தி விடுகிறேன்.
மகேஸ், எந்தவொரு சாராரையும் ஒட்டு மொத்தமாக எதிர்க்கவில்லை. உங்கள் தரப்பு நியாயத்தையும் அறிந்து கொள்ள விரும்புகிறேன். நீங்கள் சுட்டிய பதிவைப் படித்தபின் எனது கருத்தைத் தெரிவிக்கிறேன்.
முனியாண்டி, உங்க மேலதிகத் தகவல்களுக்கு நன்றி.
குறும்பன், இடைத்தரகர்கள் மொத்தமா கூடாதுன்னு சொல்லல்ல. அவங்க எவ்வளவு % லாபம் பாக்கறாங்க என்பதை வைத்து அவங்க செய்யறது நியாயமா இல்லையான்னு முடிவு பண்ணணும். இந்த உதாரணத்துல அவங்க பாக்கறது கொள்ளை லாபம்தான் என்பதில் சந்தேகமிருக்கா?
கொள்ளையடிக்கும் தரகர்கள் கூட்டம் ஒருபுறம்,விளைபொருளுக்கு நிரந்தர விலை இல்லாத நிலமை மறுபுறம்,விவசாயியின் வேதனை தீருவது எப்போது?
ஸ்ரீ, உழவர் சந்தைகள் பற்றி, ஒரு விவசாயியான உங்கள் கருத்தென்ன? மற்றும் ITCயின் e-Choupal பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா?
மாற்றம் என்பது ஒரு இரவில் வந்து விடாது. மாற்றம் உண்டாக மிக முக்கியமானது தகவல்கள். இது போன்ற தகவல்களை கொண்ட இந்தப் பதிவு மிகவும் உபயோகமானது. இது போன்ற தகவல்கள் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும்.
வணக்கம்.....
எங்கள் ஊர் (மீமிசல்) பற்றி இங்கு ஒரு விவாதத்தை கண்டேன். சில செய்திகளை விரிவாக தறவே இந்த என் பதிப்பு.
மீமிசல் : பட்டுக்கோட்டையில் இருந்து 65 கி.மீ (approx)தெற்கு நோக்கி
அறந்தாகியில் இருந்து : 35 கி.மீ. கிழக்கு நோக்கி.
தொண்டியில் இருந்து 30 கி.மீ (Approx) வடக்கு நோக்கி
தமிழ்நாடு அரசு மேல் நிலை பள்ளி, பாலர் பள்ளி, அரசு சுகாதார நிலையம், அரசு பிரசவ சுகாதார நிலையம், ஸ்ரீகல்யாணராமர் திருக்கோவில், தெப்பகுலம், வற்றாத நீர் ஊற்று, பாரத ஸ்டேம் பாங்கு, கிராம வங்கி, காவல் நிலையம், தலைமை தாபால் நிலையம், டெலிபோன் நிலையம், கல்யாணராமன் திரை அரங்கம் இப்படி பல...
இதை வைத்தே தெறியும் எப்படி உள்ள ஊர் இந்த மீமிசல்.
இதை சுற்றி உள்ள பல கிராமங்களுக்கு ( புதூர், கோபாலபட்டினம், சேமங்கோட்டை, அரசநகரிப்பட்டினம், ஆலத்தூர், வேங்காகுடி,முத்துக்குடா,அரசங்கரை, பொய்யாதநல்லூர், புரசக்குடி இப்படி பல ஊர்) இது தான் டவுன்.
எப்போதுமே சந்தை போல் உள்ள கடைகளும், வார சந்தையும் இங்கு உண்டு.
இங்கு யாரும் யாரையும் அடிமை படுத்தவில்லை. அவர் அவர் வேலைகளை செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். விவசாயமே இங்கு உள்ள கிராமங்களின் முக்கிய தொழில்.
நாகரிகம் என்று எதை சொல்லிகிறீகள்? தாங்கள் மீமிசல் சென்று எவ்வளவு நாள் ஆகியியுள்ளது? இப்போது போய் பாருங்கள். நண்பர்களே... எங்கள் ஊர் பற்றி தெறியும்.
எங்கள் ஊரில் உள்ள ஒரே குறை... தனியாக பேரூந்து நிலையம் இல்லை அவ்வளவு தான்.
இன்னும் எங்கள் ஊரை பற்றி தெறியவேண்டும் என்றால் தங்கள் கேள்விகளை தறலாம், பதில் தருகிறேன்.
அன்புடன்
கண்ணன்
அனானிமஸ்,
நான் குறிப்பிட்டுள்ளது போல், நான் படித்த ஆங்கிலக் கட்டுரையில் மீசல்(Meesal) என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. அதை பலர் "மீசலா, மீமிசலா?" என்று வினவினார்கள். "தெரியாது" என்பதே நான் அளித்த, அளிக்கும் விடை. நீங்கள் கூறுவதைப் பார்த்தால் மீமிசலாக இருக்காது என்றுதான் தோன்றுகிறது. எப்படியிருந்தாலும், ஒரு ஊரை மட்டம் தட்டுவதல்ல என் நோக்கம். இந்த நாளிலும், நாம் அழிந்து விட்டன என்று நினைத்துக் கொண்டிருக்கும் தீய பழக்கங்களெல்லாம் இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கின்றவே என்பதைச் சுட்டிக்காட்டுவதுதான் என் நோக்கம்.
உங்கள் வருகைக்கும் தகவல்களுக்கும் நன்றி :)
மன்னிக்கவும், 'கண்ணன்' என்ற உங்கள் பெயரை கவனிக்கவில்லை. தவறுக்கு வருந்துகிறேன்.
Dear Voice on wings...
பதிலுக்கு நன்றி... இந்த blogger ரில் கடைசி பதிப்பு பதிக்கப்பட்ட தேதி July 16, 2006. நான் கொடுத்த விளக்கம் இங்கே உள்ள நண்பர்களால் பார்க்கப்படுமா என ஒரு சந்தேகம் இருந்தது. தாங்களின் பதில் கண்டு சந்தோஷம் அடைந்தேன். பதிலுக்கும் என்னை இங்கே வரவேற்றதுக்கும் நன்றி நண்பரே..
அன்புடன்
கண்ணன்
கருத்துரையிடுக