ஒரு நாட்டின் மகிமை, அதன் பின்தங்கியவர்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதை வைத்தே கணிக்கப் படுகிறது. ஆகவே, உலக வர்த்தகம் இந்நாட்டை மேம்படுத்துகிறதா என்று ஆராய்வதற்கு, இன்று நம் இலட்சோபலட்சம் இளைஞர்களுக்கு உலகமயமாக்கத்தால் கிடைக்கும் வேலை வாய்ப்புகள், வசதியான வாழ்க்கை ஆகியவற்றை மட்டும் கணக்கில் கொள்ளாமல் அதைக் கடந்து, நம்மில் எளியவர்களின் நிலை எத்தகைய மாற்றங்களைக் கண்டிருக்கிறது, வரப்போகும் மாற்றங்களால் அவர்கள் அடையக்கூடிய பாதிப்புகள் / ஆதாயங்கள் என்னென்ன என்பதைப் பற்றியும் யோசிக்கவேண்டும்.
இது பொருளாதாரத்தைப் பற்றிய ஒரு அலசல் என்பதால் பேரெட்டோ செயல்திறன் (
Pareto Efficiency) விதியைப் பற்றிய அறிமுகமும் பயனுள்ளதாக இருக்குமென்று நினைக்கிறேன். சுருங்கக் கூறவேண்டுமென்றால், ஒரு மாற்றம் நிகழ்வதால் ஒருவருக்கு ஆதாயம், அதோடு வேறெவருக்கும் எவ்வகையான பாதிப்புமில்லை (முன்னிருந்த நிலைமையே தொடர்கிறது) என்றிருந்தால் அது பேரெட்டோ செயல்திறன் விதிக்கு ஏற்புடைய ஒரு மாற்றமாகும். அதாவது, கூட்டிக் கழித்துப் பார்க்கும்போது, ஒட்டுமொத்த சமுதாயமும் முன்னேறியதாகக் கொள்ளலாம். இந்த அளவுகோலை வைத்து உலகமயமாக்கத்தை அளந்தால் கிடைக்கும் விடையென்ன என்பதே நாம் ஆராய வேண்டியது.
அடிப்படைகளைத் தெளிவு படுத்திக் கொள்ளும் சாக்கில், இதையும் குறிப்பிட்டு விடுகிறேன். ஒரு வர்த்தக நிறுவனத்தின் அடிப்படை இலட்சியமென்ன என்று ஆராய்ந்தால், நமக்குப் பொதுவாகக் கிடைக்கக் கூடிய விடைகள் -அதன் இலாபம் (அதனால் அதன் பங்காளர்களுக்குக் கிடைக்கும் வருவாய்), அது அளிக்கக்கூடிய வேலைவாய்ப்புகள், அரசுக்குக் கிடைக்கக் கூடிய வரிப்பணம், அதன் சுற்றுப்புறத்திலுள்ள சிறு நிறுவனங்களுக்கு (அவற்றின் பொருட்களை வாங்கக்கூடிய வாய்ப்பிருப்பதால்) வருமானம், இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். மேற்கூறிய காரணங்களால், ஒரு பகுதியில் ஏற்படும் வர்த்தக முதலீடுகள், அப்பகுதியில் வாழும் மக்களாலும், அதன் அரசு நிர்வாகங்களாலும் வரவேற்கப்படுகின்றன. ஆனால், இவையனைத்தும் ஒரு வர்த்தக நிறுவனத்தால் ஏற்படும் பின்விளைவுகளேயன்றி, அதன் இலட்சியமல்ல. அதன் இலட்சியம் என்றுப் பார்த்தால், நிபுணர்களின் தத்துவ ரீதியானக் கூற்றுப்படி, அதன் வாடிக்கையாளர்களின் முன்னேற்றமே அதன் இலட்சியம். அவர்களது குறிப்பிட்ட தேவைகளைச் சிறப்பாகப் பூர்த்தி செய்வதே ஒரு நிறுவனத்தின் இலட்சியமாகும். ஆகவே, முதலீடுகளுக்கு (அந்நிய, உள்நாட்டு.... எதுவாகயிருப்பினும்) சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்குமுன், அவற்றின் இலட்சியங்களும், அவை நிகழும் பகுதிகளிலுள்ள சமுதாயங்களின் இலட்சியங்களும் ஒத்துப் போகின்றனவா என்று ஆராய்வது பலனைத் தரும். இந்நாட்டு மக்களை, வாடிக்கையாளர்கள் என்ற வகையில் முன்னேற்றாத எந்தவொரு நிறுவனமும் செய்யும் முதலீடுகள், இந்நாட்டின் ஒரு சிறிய பகுதியினருக்கே சாதகமாக முடியும் என்பது இதிலிருந்து தெரிய வருகிறது. அந்நிய முதலீட்டை விடுங்கள், நம் நாட்டு நிறுவனங்களான Infosys, TCS, Wipro போன்றவற்றால் இச்சமுதாயத்திற்கு பெரிதாக என்ன நேர்ந்து விட்டது? அவற்றின் மொத்தப் பங்களிப்பில் இந்திய வாடிக்கையாளர்களுக்கு அளித்த பங்களிப்பு / ஏற்படுத்திய முன்னேற்றம் எத்தனை சதவிகிதம்? இவற்றிற்குச் செலவிடப்பட்ட முதலீடுகள், உழைப்பு, வரவேற்பு மரியாதைகள், விதி / வரி விலக்குகள் ஆகியவை, வேறு திசைகளில், நம் நாட்டிற்கு நேரடியாகப் பலனளித்திருக்கக் கூடிய வேறு வகை நிறுவனங்களுக்கு (அவை அந்நிய நாட்டைச் சார்ந்தவையாக இருப்பினும்) கிடைத்திருக்குமானால் நாம் இன்னும் முன்னிலையில் இருந்திருப்போமோ என்னவோ. நம் policy makersஇன் குறைப்பார்வையே வெளிப்படுகிறது இதிலிருந்து.
மேலே உள்ள தத்துவங்களின் படி இன்று நிகழும் பல big ticket முதலீடுகளை ஆராய்ந்தால், அவை இந்நாட்டு மக்களுக்குப் பயன் படாது, பெரும்பாலும் வெளிநாடுகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கே சாதகமாக விளங்குவதைக் காணலாம். சில விதிவிலக்குகள் என்று கூற வேண்டுமென்றால், செல்பேசிகள் தயாரிப்பு, வாகனங்கள் தயாரிப்பு, புது வகையான வங்கி / நிதி / காப்புறுதி சேவைகள், தொலைபேசி / தொடர்பாடல் சேவைகள், மின்/மின்னணுச் சாதனங்கள் தயாரிப்பு, சுகாதாரப் பொருட்கள் தயாரிப்பு, மருந்து-மாத்திரைகள் தயாரிப்பு போன்றவற்றைக் குறிப்பிடலாம். கணினிச் செயலிகள் (microprocessors) தயாரிப்பைத் துவக்கப் போவதாக செய்திகள் வந்தாலும், அவற்றால் நமக்குக் குறைந்த விலைக் கணினிகள் கிடைக்கக் கூடுமென்ற சாத்தியக்கூறு இருக்கும் பட்சத்தில் அதனை வரவேற்கலாம். இல்லாவிட்டால் அவற்றை சீனாவே தயாரித்து விட்டுப் போகட்டும். ஒரு பன்னாட்டு நிறுவனத்தை நம் தயவில் கொழிக்கச் செய்வதற்கான கட்டாயம் நமக்கிருப்பதாக எனக்குத் தெரியவில்லை. எனது புரிதலில் பிழையிருக்கலாம் ;)
முதலீடுகளில் அத்தியாவசியமானவை (ஆகவே ஆதரிக்கப்பட வேண்டியவை) எவை, அவ்வளவாக நமக்கு முக்கியமில்லாதவை (இருந்தும் இன்று பரந்த வரவேற்பைப் பெற்றவை) எவை என்பதைப் பற்றிய எனது பார்வையை தெளிவு படுத்தியிருக்கிறேனென்று நம்புகிறேன். இதைக் கடந்து, அது அந்நிய முதலீடா, நம் நாட்டவரின் முதலீடா என்ற செய்தியெல்லாம் ஒரு தகவலுக்காகத்தான் பயன்படுமென்று நினைக்கிறேன். இதை விட, ஒரு முதலீட்டால் பல வறியவர்கள் காலகாலமாக வாழ்ந்துவந்த இடத்திலிருந்து இடம்பெயர நேர்கிறதா, அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப் படுகிறதா, அவர்களது சூழல் சரிசெய்ய முடியாத அளவிற்கு மாசடைகிறதா, அவர்களது இயற்கை வளங்களான குடிநீர், விளைநிலங்கள், மீன்வளங்கள் ஆகியவற்றை இழக்க நேரிடுகிறதா, என்பது போன்ற கேள்விகள் நேர்மையான முறையில் விடையளிக்கப்பட வேண்டியவை. இது போன்ற ஆபத்துக்கள் எதுவுமில்லை என்று உறுதியான பிறகே, ஒரு முதலீட்டுக்கு (அது நம் நாட்டுக்கு மிகவும் தேவையான ஒன்று என்ற முடிவுக்கு வந்த பிறகும்) அனுமதி வழங்கப்பட வேண்டும்.
அடுத்து ஏற்றுமதி, இறக்குமதி கொள்கைகளைப் பற்றி. உலகெங்கிலுமுள்ள சிறப்பம்சங்களை நாமும் எளிதில் பெற வழி செய்தல் வேண்டும். அது போலவே, நம்மிடமுள்ள சிறப்புகளும் எட்டுத் திக்குகளிலும் பாய்ந்து நமக்கு செல்வச் செழிப்புகளைப் பெற்றுத் தரவேண்டும். இந்த அடிப்படைக் கொள்கையில் நமக்கு எந்த பேதமுமில்லை. நம் தயாரிப்பில் வெளிவரும் பொருட்களுக்குப் போட்டியாக வெளியுலகிலிருந்து அவற்றை விடச் சிறப்பாகவோ, மலிவாவோ பொருட்கள் நம்மை வந்தடைந்தால் அதை இருவிதமாக எதிர்கொள்ளலாம். முதல் வகை - அப்பொருட்களைத் தடை செய்வது, அல்லது அவற்றின் மீது அதிகப்பட்ச வரிகளை விதித்து, அவற்றின் சிறப்பை / கவர்ச்சியை குறைப்பது, அதன் விளைவாக நம் மக்கள் நம் தயாரிப்புகளையே (அவை தரக்குறைவானவையாக இருந்தாலும்) தொடர்ந்து வாங்கச் செய்வது. இப்படிச் செய்வதனால் யாருக்கு ஆதாயம்? நம் தயாரிப்பாளர்களுக்கு, அவர்களைச் சார்ந்திருக்கும் உழைப்பாளர்களுக்கு, விநியோகஸ்தர்களுக்கு. ஆனால், இத்தகைய கொள்கையால் பொதுமக்களுக்கு பேரிழப்பே. இதனால் அவர்களது வாங்கும் சக்திக்கேற்ற தரமான பொருட்களை வாங்க விடாமல், அதிக விலை கொடுத்து தரக்குறைவான உள்நாட்டுச் சரக்கையே வாங்கும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள். இதனால், நம் தயாரிப்பாளர்களும் தரக்குறைவான பொருட்களை விற்பதற்கே ஊக்குவிக்கப்படுவார்கள். அவர்களது இலாபம் பாதுகாக்கப் படுவதொன்றே இதனால் கிடைக்கும் பலன். இப்படியில்லாமல், இறக்குமதி பொருட்களும் தடைகளின்றி நம்மை வந்தடையலாமென்ற நிலையிருந்தால், நம் தயாரிப்பாளர்களும் உலக அளவிலான போட்டியின் காரணமாக அவர்களின் தரத்தை உயர்த்துவது, விலையைக் குறைப்பது போன்றவற்றைச் செய்து, வாடிக்கையாளர்களின் தேவைகளை முதன்மைப்படுத்துவார்கள். .
நான் மேலே குறிபிட்டுள்ளது, அத்தயாரிப்பாளர்கள் கோடிகளில் உழலும் பெருமுதலாளிகளாக இருக்கும் பட்சத்தில். இதுவே, சிறுதொழில் முதலாளிகள், குடிசைத் தொழில் நடத்துவோர் ஆகியோரைப் பொறுத்தவரை, அவர்களால் உலக அளவிலான, பன்னாட்டு நிறுவனங்கள் போன்றவைகளுடன் போட்டியிட முடியுமா என்று ஆராய்ந்து, பிறகே அத்தகைய தொழில்களில் சர்வதேசப் போட்டிகளை அனுமதிக்கலாம். இல்லாவிட்டால் பலரது வயிற்றுப் பிழைப்பில் மண் விழுவது ஒன்றுதான் நிகழும். வறுமையொழிப்பில் ஒரு முக்கியமான உத்தியாக சிறுதொழில்கள் வளர்ச்சியை ஊக்குவிப்பது நடைபெற்று வருகிறது. அதற்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் அவற்றிற்கு வெளியுலகப் போட்டியை அனுமதித்தால், பலர் மீண்டும் வறுமை நிலைக்கே திரும்பி விடும் அவலமே நிகழும்.
விவசாயப் விளைபொருட்களுக்கும் இத்தர்க்கம் பொருந்தும். ஒரு விவசாயி மிகுந்த உளைச்சல்களுக்குப் பிறகு அறுவடை செய்யும் தானியங்களுக்கும், காய் கனிகளுக்கும் நியாய அடிப்படையில் விலைகளும், வாடிக்கையாளர்களும் கிடைக்குமாறு வழி செய்யப்படா விட்டால், நஞ்சுண்டு உயிரிழப்பதைத் தவிர அவருக்கு வேறு வழியில்லாமல் போகும். இங்கும் சிறுவிவசாயி / பெரும்பண்ணையார் என்ற பாகுபாட்டைக் கடைபிடித்து, அதன்படி விதிகளை இயற்ற வேண்டும். முற்றிலும் தேவைப்பட்டவர்களையே அரசின் உதவிகள் / பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆகியன சென்றடைய வேண்டும். (Tea estate முதலாளிகளையல்ல) விவசாயம் பற்றிய விவாதத்தில் வேறு சில அம்சங்களும் முக்கியத்துவம் பெறுகின்றன. 1.மேலை நாடுகளில் கடைபிடிக்கப்பட்டு வரும் அதிநவீன விவசாய முறைகள் 2.மேலை நாட்டு அரசுகள் அவர்களது விவசாயிகளுக்கு அளித்து வரும் அளவுக்கதிகமான மானியத் தொகைகள்.
இங்கு கல்வியறிவு கூட இல்லாத நம் விவசாயிகளால், மேலை நாடுகளில் முற்றிலும் விஞ்ஞான முறையில், இயந்திரமயமாக்கப்பட்ட விவசாய முறைகளைக் கடைபிடிக்கும் அவர்களது விவசாயிகளின் உற்பத்தித் திறனுடன் போட்டியிட முடியுமா என்ற கேள்விக்கு விடை, அதிலேயே பொதிந்துள்ளது. உயர்தர விதைகள், உரங்கள், ரசாயனப் பொருட்கள், பாசன முறைகள், இயந்திரங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி, பெருமளவினால் ஏற்படும் சிக்கனத்தையும் (economy of scale) சாதகமாக்கிக் கொண்டு, மிகக் குறைந்த வேலையாட்களையே வைத்துக் கொண்டு, ஒரு மேலை நாட்டு விவசாயியால் தன் விளைபொருட்களை மிக மலிவான விலைக்கு விற்க முடியும். இது போதாதென்று, அவர்களது அரசுகள் வேறு அவர்களுக்கு மானியத் தொகைகளை அளிக்கின்றனவாம். பல பில்லியன் டாலர்கள் மக்களின் வரிப்பணத்திலிருந்து இதற்கென ஒதுக்கப் படுகிறதாம், ஒவ்வொரு வருடமும். இதனால் ஏற்படும் விளைவு, அளவுக்கு அதிகமாக சாகுபடி செய்து, உபரி விளைச்சல்களை உலக மயம் என்ற பெயரில் வளரும் நாடுகளின் சந்தைகளில் மலிவு விலைக்கு கொட்டி (dumping), அந்நாட்டு விவசாயிகளால் அதை ஈடு செய்ய முடியாமல், அவர்களது வாழ்வாதாரம் சிதைக்கப் படுவதுதான் இன்றைக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல், வளரும் நாடுகளில் இறக்குமதியாகும் உணவுப் பொருட்களை தக்க முறையில் பரிசோதனைக்குட்படுத்தும் வசதிகளும் போதிய அளவில் இல்லாததன் காரணத்தால், வேறு வளர்ந்த நாடுகளில் (அளவுக்கதிகமான பூச்சி கொல்லிகளின் கலப்படம், போன்ற காரணங்களால்) நிராகரிக்கப்படக்கூடிய உணவுப்பொருட்களை, வளரும் நாடுகளின் தலையில் கட்டும் அபாயமும் இருப்பதாகத் தெரிகிறது.
ஆக, இன்று உலக வர்த்தகமானது பல குறைகளைக் கொண்டுள்ளது. சகல வசதிகளையும் பெற்ற, தம்மை நன்கு நிறுவிக்கொண்ட வர்த்தகர்களுக்குச் சாதகமாகத் திகழ்ந்து, அவர்கள் மேன்மேலும் செழிப்புறுவதற்கு வகை செய்யும் விதமாகவே உள்ளன இன்றைய வர்த்தக விதிமுறைகளும், அரசு நடவடிக்கைகளும். நம் நாட்டளவில் எடுத்துக் கொண்டாலும், கோடிக்கணக்கான எளியவர்களின் வாழ்க்கையை அழிக்கக் கூடிய ஒரு மாற்றமாகவே உலகமயமாக்கத்தைக் கருத முடியும். முதலில் கூறிய பேரெட்டோ செயல்திறன் விதிக்குக் கட்டுப்படாமல், மாறாக அதற்கு நேரெதிர் விளைவைத் தருவதே இந்த உலகமயமாக்கம். இன்றைய நிலையில் அதனை எதிர்ப்பதே எந்தவொரு மகத்துவமான நாட்டிற்கும் சரியானதொரு முடிவாக இருக்க முடியும்.
பி.கு: இன்றைய draft தீர்மானத்தைப் பற்றி இனிமேல்தான் தெரிந்து கொள்ள வேண்டும். 2013ஆம் ஆண்டிற்குள் எல்லா விவசாய மானியங்களையும் அகற்றுவதற்கு பரிந்துரை, என்றெல்லாம் செய்தி கண்ணில் பட்டது. ஏதோ, நல்லது நடந்தால் சரிதான்.
தமிழ்ப்பதிவுகள் அரசியல் வர்த்தகம் பொருளாதாரம் உலகமயமாக்கம் WTO